Loading

வானம் – 04

“இப்ப எதுக்கு சம்யு இழுத்துட்டு வந்த? அவள… ச்சே, எப்படி இப்படிலாம் பேசி சிரிக்க முடியுது! கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம” என்றவள் தலையை இரு கைகளாலும் அழுந்த பிடித்துக் கொண்டு அமர்ந்தாள் சரயு.

“கூல் டி, இதெல்லாம் புதுசா என்ன! நம்ம மக்களுக்கு தான் அடுத்தவன் வீட்டு சமாச்சாரம்லாம் அவல் மெல்ற மாதிரி. இவங்கள எல்லாம் திருத்தவும் முடியாது, அவங்களாவும் திருந்தவும் மாட்டாங்க” என்றவள், “சரி இத விடு, நீ எதுக்கு அந்த குட்டி பொண்ணோட வீட்டுக்குப் போன? அத மொதல்ல சொல்லு” என வினவியவாறே அவள் அருகில் அமர்ந்தாள் சம்யுக்தா.

“என்னமோ தெரியல சம்யு. அந்த கியூட்டி என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணிருச்சு. அதான் கொஞ்சம் நேரம் கியூட்டி கூட இருந்தா நல்லா இருக்குமேனு தோணவும் அவங்க வீட்டுக்கு போனேன். அவங்க பாட்டிகிட்ட பெர்மிசன் கேட்டேன். உடனே அவங்களும் சம்மதம் சொல்லவும் கியூட்டி கூட விளையாண்டுட்டு இருந்தேன்” என்றவள் அத்தோடு நிறுத்த,

“சொல்றேனு தப்பா எடுத்துக்காத டி. உன் பிரண்டா சொல்றேன், இனி நீ அங்க போக வேண்டாம்” என்றாள் சம்யுக்தா.

‘ஏன்?’ என விழியின் மொழியால் கேள்வி கேட்டவளை, “ஏன்னு சரியா சொல்ல தெரியல டி. நீ சாதாரணமா தான் அங்க போன, ஆனா வானதி அக்கா எப்படி பேசறாங்க. இது பெரிய விசயம் இல்ல தான். ஆனால் நாளைக்கு இதே பிரச்சினையா வந்தறக் கூடாதுல்ல” என்றவளை எதிர்நோக்கியவள்,

“கியூட்டி அப்பாவோட வொய்ப் ஏதோ…” என அந்த வார்த்தைகளை கூற சற்று தடுமாறியவள் பின், “அவங்கள ஏதோ சொல்லிட்டு போனதுக்காகவா இப்படி சொல்ற சம்யு?” என்றாள் சரயு.

“ச்சே ச்சே” என வேகமாக மறுதலித்தவள், “நான் போய் அப்படி சொல்லுவனா டி. அது அவங்க குடும்ப பிரச்சினை. என்ன நடந்துச்சுனு முழுசா தெரியாம வானதி மாதிரியான ஆட்கள் சொல்றத வச்சு அவங்க மேல அபாண்டமா பழி பேசறதையோ சொல்றதையோ நான் பண்ணுவனா? என் மனசுக்கு இது சரியா படல டி. அதான். அதுவும் இல்லாம…” என அவள் தயங்க,

“அதுவும் இல்லாம…” என அவளைப் போலவே இழுத்தாள் சரயு.

“சொல்றேனு தப்பா எடுத்துக்க வேண்டாம் டி. நாம இங்க படிக்க வந்துருக்கோம். ஏற்கெனவே அந்த பாப்பாவோட அம்மா, அப்பாவ பத்தி கண்டதையும் பேசிக்கிறாங்க. இப்போ நீ அங்க போனா உன்னையும்… த…ப்..பா பேச வாய்ப்பிருக்கு” என திக்கித் திணறி கூறி முடித்தாள் சம்யுக்தா.

தன் தோழியின் கருத்தை புரிந்துக் கொண்டதைப் போல், “என்ன என்னையும் கியூட்டியோட அப்பாவையும் சேர்த்து பேசுவாங்கனு சொல்றியா சம்யு” என கலகலவென சிரிக்க, அந்த சிரிப்பில் கள்ளமில்லா அவளின் குழந்தைத் தனத்தைக் கண்ட சம்யுக்தா,

“நான் அந்த மீனிங்ல சொல்ல வரலனாலும் என்னோட பயத்துக்கு அதுவும் ஒரு காரணம் தான் டி” என்றாள்.

“நம்ம வயசுக்கேத்த பக்குவம் நம்மகிட்ட இருக்குனு நான் நினைக்கிறேன் சம்யு. நான் அந்த வீட்டுக்குப் போனது அந்த கியூட்டியோட கொஞ்சம் நேரம் பேசலாமேனு தானே தவிர வேற எந்த இன்டென்ஷனும் இல்ல. சரி, இப்போ என்ன நான் அங்க போகக்கூடாது அவ்ளோ தான!” என தலைசாய்த்து தன் தோழியை பார்க்க, அவளது தலையோ வேகமாக ஆமாம் என மேலும்கீழுமாக ஆடியது.

“சரி, இனி போகல” என்றவள், “எனக்கு பிராஜெக்ட் வொர்க் இருக்கு சம்யு, அத பாக்கலாம் வா” என்றவள் அத்தோடு அந்த பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு பாடத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டாள் சரயு.

சரயுவின் இல்லத்தில் இரவு உணவிற்காக நடுகூடத்தில் சம்மணங்கால் போட்டு அமர்ந்த முத்துச்சாமி தனக்கு உணவு பரிமாற வந்த தங்கம்மாளிடம், “தம்பிய காணோம், எங்க போய்ட்டான். சாப்ட்டானா?” என தன் மகன் பிரகாஷை பற்றி விசாரித்தார்.

“அவன் இன்னும் வரலங்க. தோட்டத்துல ஏதோ வேல இருக்குனு சொன்னான், உங்ககூட வருவான்னு நினைச்சேன். இன்னும் அவனுக்கு தோட்டத்துல வேல இருக்கா?” என தன் கணவனிடத்தில் எதிர்கேள்வி கேட்டார் தங்கம்மாள்.

“நான் சாயந்திரமே டவுனுக்கு ஒரு சோலியா போய்ட்டேன் தங்கம். வேலைய முடிச்சுட்டு அவன் வந்துருப்பான்னு நினைச்சுட்டு தோட்டத்துக்குப் போகாம நேரா இங்க வந்துட்டேன்” என்றவர், “சரி, சரி. நீ சாப்பாடு எடுத்து வை. வேலைய முடிச்சோனே வந்துருவான்” என்றவர் சாப்பாட்டில் கவனம் செலுத்த, “என்னங்க…” என மெதுவாக ஆரம்பித்தார் தங்கம்மாள்.

இந்த என்னங்க’வில் ஏதோ ஒரு விசயம் ஒழிந்துள்ளது என்பதை உணர்ந்தவர், “என்ன விசயம்?” என நேரடியாக வினவ, “அதுவந்து… இல்ல தம்பிக்கு…” என தடுமாற, தன்னவளின் தடுமாற்றத்தில் புன்னகைத்தவர், “என்ன வந்து, இல்லனுட்டு… சொல்ல வந்த விசயத்த நேரடியா ஒடைச்சு சொல்லு தங்கம்” என்றார்.

“நம்ம மவனுக்கு நாலஞ்சு எடத்துல இருந்து பொண்ணு ஜாகதம் வந்துருக்கு. நம்ம தரகர் அண்ணன் தான் கொண்டு வந்து கொடுத்தாரு. எல்லாம் நமக்கு ஒத்து வர்ற ஜாதக அமைப்பு தான். அதான் ஒத்த வார்த்தை உங்க காதுல போட்டு வைப்போமேனு, அவனுக்கும் காலாகாலத்துல நம்ம கடமைய செஞ்சுப்புடணும்ல” என்றார் தங்கம்மாள்.

“சரி தான் தங்கம், ஒரு வார்த்தை உன் புள்ளய கேட்டுக்கோ” என்றவர் சாப்பிட்டு முடித்து கைகழுவ எழுந்துக் கொள்ள, அவரின் பின்னாலே சென்ற தங்கம்மாள், “இல்ல என் அண்ணன் மவ இருக்க வெளிய பாக்கிறது…” என தயங்கியவர், “அதான் யோசனையா இருக்கு” என்றார் தங்கம்மாள்.

“அவங்ககிட்ட ஏன் பொண்ணு கேட்கலனு அவங்களுக்கே தெரிஞ்ச விசயம் தான தங்கம். இதுல நம்ம என்ன பண்ண முடியும்! நமக்கு இருக்கிறது ஒத்த மவன். அதெல்லாம் அவுக புரிஞ்சுக்குவாங்க. நானும் தரகர்ட்ட பேசறேன். நல்ல இடமா அமைஞ்சா முடிச்சு விட்றலாம்” என்றவாறே கைகழுவ, அத்தோடு அவர்களின் மகனின் வாழ்வையும் கைகழுவுவதை எங்கணம் மறந்தார்களோ அதை இறைவனே அறிவான்.

தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சிவிட்டு நேரத்தைப் பார்த்த பிரஷாந்த், “எட்டு தான் ஆகுதா” என முணுமுணுத்தவன், அங்கிருந்த ஓட்டு வீட்டின் முன் கயிற்றுக் கட்டிலை எடுத்துப் போட்டு காற்றாட படுத்தான்.

குளுகுளுவென காற்று வீச கைகளை முகத்தின் மேலே வைத்தவண்ணம் காற்றின் குளுமையை ரசித்துக் கொண்டிருந்தவனுக்கு ஏதோ வித்தியாசமாகப்பட்டது.

அவனருகே ஏதோ முண்டுவதுபோல் தோன்ற கண்களை திறவாமலே அது என்னவென்று உணர்ந்தவனாய், “மேடமுக்கு இப்பதான் காத்து இந்தப்பக்கம் வீசுதோ!” என்றான்.

“ப்ச், என்ன அத்தான் இது… நானே ஆசயா பேசலாம்னு வந்தா நக்கலடிக்கிற” என சிணுங்கியவாறே கயிற்றுக் கட்டிலில் இடம் போதாததால் மேலும் அவனை நெருங்கினாள்.

அவளின் நெருக்கம் அவனை ஏதோ செய்ய வேகமாக எழுந்துக் கொண்டவன் தன் சிகையை கலைப்பதுபோல் தன் கரங்களில் தென்பட்ட படபடப்பை அடக்க முற்பட்டான் பிரஷாந்த். 

“என்ன அத்தான் வெட்கமா!” என அவன்புறம் ஒருக்களித்துப் படுத்து கைகளை தலைக்கு முட்டுக் கொடுத்தவாறே கண்களை சிமிட்ட, “யாராச்சும் பாத்திற போறாங்க டி, மொதல்ல வீட்டுக்கு கிளம்பு” என்றான் அவன்.

“ஓ… என் அத்தானுக்கு வெட்கம் தான் போலயே” என அவன் இடுப்பில் கை வைக்க செல்ல முற்பட அவளின் செயலறிந்து வேகமாக எழுந்துக் கொண்டவன், “மொதல்ல நீ இங்கிருந்து கிளம்பு” என அவளை அங்கிருந்து அனுப்பும் முயற்சியில் அவன் ஈடுபட அவளோ வாகாக மல்லாந்து படுத்துக் கொண்டு, “நிலா ரொம்ப அழகா இருக்குல்ல” என்றவளின் வார்த்தைகளில் சாமானியத்தில் இங்கிருந்து அவ்வளவு எளிதாக நான் சென்றுவிட மாட்டேன் என்ற அவளின் எண்ணமும் சேர்ந்து ஒலித்தது.

“சொன்னா புரிஞ்சுக்கோ ரேவதி. இந்த நேரத்துல அதுவும் இப்படி நம்ம தனியா இருக்கிறது நல்லது இல்ல” என்றவனின் வார்த்தைகள் முழுதாக வெளிவராமல் காற்று மட்டுமே வெளிவர அதனைக் கண்டு புன்னகைத்தவள், “அய்யோ அத்தான், இதெல்லாம் நான் பண்ண வேண்டியது. இப்படி நீங்க பண்ணுனா நான் என்ன பண்றது!” என சிணுங்க, ‘அய்யோ இவ வேற ரொம்ப படுத்தறாளே!’ என மனதினுள் செல்லமாய் கோபித்துக் கொண்டவன், “யாராச்சும் பாத்தா தப்பா நினைச்சுக்குவாங்க டி. இப்ப கிளம்பு, நான் நைட் ஃபோன் பண்றேன்” என்றவனை முறைத்துக் கொண்டிருந்தாள் ரேவதி.

“இத நான் எந்த கணக்குல சேர்த்துக்கிறது அத்தான்… தினமும் இதத்தான் சொல்றீங்க, ஆனா ஃபோன் பண்றத தான் காணோம். நானே ஃபோன் பண்ணாலும் சாப்பிட்டியா, இன்னிக்கு கிளாஸ்ல என்ன நடந்துச்சு, டெஸ்ட் எப்படி எழுதுன… இப்படி மொக்கையா கேள்வி கேட்டு டார்ச்சர் பண்ற. இதான் லவ் பண்ற பையன் பேசற பேச்சா? அதான் இன்னிக்கும் விட்டா உன்கிட்ட பேச முடியாதுனு முடிவு பண்ணி நீ இங்க இருக்கிறனு தெரிஞ்சு வீட்ல உள்ளவங்கள எல்லாம் ஏமாத்தி இங்க கஷ்டப்பட்டு வந்து சேர்ந்தா… வீட்டுக்கு போ வீட்டுக்கு போனு துரத்துற” என முறைத்தவாறே எழுந்து அமர்ந்தாள்.

“ஆமா எட்டூர் தாண்டி வந்தவ கணக்கா பேசற பேச்சப் பாரு… நம்ம வீட்டு மாடில இருந்து பாத்தா நம்ம தோட்டம் தெரியப் போகுது. இதுல என்னமோ இந்தியால இருந்து பாக்கிஸ்தானுக்கு வந்த மாதிரி பேசறது” என செல்லமாய் அவள் தலையில் கொட்டியவன்,அவளருகில் அமர்ந்து அவளது கரங்களை தன் கரங்களுக்குள் வைத்துக் கொண்டான். “இங்க பாரு ரேவதி, நீ படிக்கிற பொண்ணு. அதுல தான் உன்னோட முழு கவனமும் இருக்கணும். நான் தான் பெருசா எதும் படிக்கல. நீயாச்சும் நல்லா படிச்சா தான நாளைக்கு நம்ம புள்ளைகளுக்கு சொல்லித் தர முடியும். இல்லனா நம்ம புள்ளைகளும் என்னை மாதிரி மக்கா தான் இருக்கும்” என்றவனின் முடியை பிடித்து ஆட்டியவள்,

“அட புருஷா… இதெல்லாம் சொல்ல தெரிஞ்சா மட்டும் பத்தாது, பொண்டாட்டிகிட்ட எப்படி பேசணும்னு தெரிஞ்சும் வச்சுக்கணும். இல்லனா என்கிட்டயாச்சும் கத்துக்கணும். இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகல. நான் கிளாஸ் எடுக்கிறேன்” என்றவளை, “அடியேய் மொதல்ல தலமுடிய விட்டுட்டு பேசு. வலிக்குதுல்ல” என அவளிடமிருந்து விடுபட முயன்றான்.

“எதுக்கு நான் விட்டோனே அப்படியே திரும்பி பாக்காம ஓடறதுக்கா” என முறைத்தவள், “இன்னிக்கு கிளாஸ் எடுக்காம விட மாட்டேன்” என்றவளை கெஞ்சி, கொஞ்சி வீட்டிற்கு அனுப்ப முற்பட்டான் பிரஷாந்த். 

ரேவதியின் பாஷையில் கூற வேண்டுமானால் கெஞ்சினான் எனலாம். “சரி, சரி பொழச்சுப் போங்க” என்றவள் கட்டிலுக்கு அருகில் வைத்திருந்த தூக்குப்போசியை எடுத்து அவனிடம் நீட்டியவள், “ஆசயா பணியாரம் சுட்டு எடுத்துட்டு வந்தேன். மறக்காம சாப்பிட்ரு அத்தான்” என்றவள் கிளம்ப எத்தனிக்க வேகமா அவளது கைப் பற்றினான் பிரஷாந்த். 

அவளோ ‘என்ன!’ என பார்வையாலே வினவ முற்படுவதற்குள் அவளது புறங்கையில் தன் இதழை பட்டும் படாமலும் ஒற்றி எடுக்க, அவனது முதல் இதழ் ஒற்றலை மனதிற்குள் ரசித்தாலும் வெளியே, “பனியாரத்துக்கு லஞ்சமா அத்தான்” என கண்ணடிக்க, “மொதல்ல வீட்டுக்கு கிளம்பு” என்றான் பிரஷாந்த். 

“நாங்க போறோம்” என முகத்தை சிலுப்பிக் கொண்டவள் அவன் முத்தமிட்ட கரங்களில் தன் இதழை ஒற்றி எடுத்து, “இதுவே ஒரு வருஷத்துக்கு தாங்கும்” என கண்ணடித்தவாறே அங்கிருந்து ஓடினாள் ரேவதி.

அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனின் கண்களில் அத்தனை பிரகாசம். ஆனால் இதே பிரகாசம் அவன் வாழ்நாள் முழுவதும் நீடிக்குமா?

பள்ளிப் படிப்பை தாண்டியிராதவன். தன் தந்தையோடு விவசாயத்தை பார்த்துக் கொள்ள ஆரம்பித்தவனுக்கு தற்போது விவசாயம் தான் அவனது அடையாளமாக மாறிப் போனது.

சிறுவயதிலிருந்தே தன் மாமன் மகளான ரேவதியின் மேல் இருந்த ஈர்ப்பு அது காதலாக உருமாறத் தொடங்கியிருந்தது. வினைக்கு எதிர்வினையும் செயல்பட்டால் தானே அது ஒன்றுசேரும். அதேப் போல் அங்கும் எதிர்வினை செயல்படத் துவங்க அவர்களுள் அழகாய் மலரத் தொடங்கியது காதல்.

என்னதான் இருவரும் காதலிக்கிறார்கள் என்றாலும் இதுவரை அவளிடம் அவன் தனக்கென ஒரு எல்லையை வகுத்துக் கொண்டே பேசுவான். அவ்வப்போது அவளே அந்த எல்லையை தாண்ட முற்பட்டாலும் அதற்கும் வேலி போட்டுவிடுவான் பிரஷாந்த். அதற்கு காரணமாக அவளது படிப்பை சுட்டிக்காட்ட, அவளும் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அவனோடு இப்படி வம்பிழுப்பாள்.

ரேவதியும் சரயுவும் ஒத்த வயதுடையவர்கள். தங்கம்மாளின் சொந்த அண்ணனின் மகள் தான் ரேவதி. தன் தங்கையை வெளியூருக்கு அனுப்ப மனமில்லாமல் தன் அருகிலே வைத்துக் கொள்ள விரும்பிய நல்லசுந்தரம் சொந்தத்திலே முத்துச்சாமிக்கு கட்டி வைத்தார். இருவரது வீடும் அருகருகே இருப்பதால் உறவும் நீடிக்கத் தொடங்கியது.

நல்லசுந்தரம் – வாணியின் ஒரே மகள் ரேவதி. சரயுவோடு தான் அவளையும் படிக்க கோவை அனுப்ப முற்பட அவளோ அதனை மறுத்து உள்ளூரிலே படிப்பதாக கூறிவிடவும் அவளது பெற்றோரும் அதிகம் வற்புறுத்தவில்லை. ஒரே பிள்ளையை பிரிந்திருக்க மனமில்லாததால் அவர்களும் அவளை வற்புறுத்தவில்லை. ஆனால் அவள் பிரஷாந்தை விட்டு செல்ல மனமில்லாமல், தான் அங்கேயே படிப்பதாக கூறி இருக்க அதனை சம்பந்தப்பட்டவனும் உணர்ந்துதான் இருந்தான்.

புன்னகை முகத்தோடே தன்னவள் சுட்டு கொண்டு வந்திருந்த பனியாரத்தை ருசிப் பார்க்கத் தொடங்கி இருந்தான் பிரஷாந்த். அதனை தன் வீட்டு மாடியில் இருந்து பார்த்தவள், இதழில் புன்னகை உறைய தன் அறைக்குள் சென்று படுத்துக் கொண்டாள்.

ஆனால் விதி இவர்கள் இருவரின் வாழ்விலும் விளையாட காத்திருக்கத் துவங்கியது.

_தொடரும்

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
13
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments