Loading

வானம் – 03

விடுதி அறைக்கு வந்ததில் இருந்தே சரயுவின் முகம் சோகமாக இருக்க, அவளருகில் வந்த சம்யுக்தா, “இப்போ ஏன் டி மூஞ்சிய இப்படி உம்முனு வச்சுருக்க? தெரியாம தான கேட்ட, அதுக்கு ஏன் இவ்ளோ ஃபீல் பண்ற?” என்றாள்.

“என்ன இருந்தாலும் நான் டக்குனு அப்படி கேட்ருக்கக் கூடாதுல்ல. அது கொழந்த சம்யு. நான் தெரியாம தான் கேட்டுட்டேன். இருந்தாலும் கில்டியா ஃபீல் ஆகுது” என்றாள் வருத்தத் தொனியில்.

அவள் அருகில் அமர்ந்த சம்யுக்தா, “இங்க பாரு டி, அந்த பாப்பாவே அத பெருசா எடுத்துக்காம பாட்டி மா தான் திட்டுவாங்கனு சொல்லுச்சுல்ல. அப்புறம் ஏன் இப்படி கில்டியா ஃபீல் பண்ற. நீ தெரிஞ்சு எதும் கேட்கலயே, இப்படி ஃபீல் பண்ற அளவுக்கு இதுல ஒன்னுமில்ல” என அவளை சமாதானப்படுத்த,

“அந்த கியூட்டி…” எனக் கூற வந்தவள் பின், “அந்த பாப்பாக்கு அம்மா இல்லயா டி. உனக்கு தெரியுமா அது?” என்றாள் சரயு.

“ம்… கேள்விப்பட்ருக்கேன் டி. ஆனா அந்த பாப்பாகிட்ட பேசுனது இல்ல. தினமும் காலேஜ் முடிஞ்சு வரும்போது அவங்க வீட்டு வாசல்ல தான் விளையாடும். அப்பப்போ பாப்பேன். ஆனா அவங்க பாட்டி கொஞ்சம் கோவக்காரங்கனு சொல்லுவாங்க. அந்த பாப்பாவ யார்கூடவும் பேச விட மாட்டாங்களாம். அதுனால நானும் இதுவரைக்கும் பேச ட்ரை பண்ணது இல்ல. இன்னிக்கு நீ சடனா அந்த பாப்பாகிட்ட பேசவும் எனக்கு தான் பதட்டமாகிருச்சு, எங்க அவங்க பாட்டி பார்த்து திட்டிருவாங்களோனு” என்க, குழப்பமாய் அவளை ஏறிட்டாள் சரயு.

“அம்மா இல்லாத குழந்தை, ஏன் அவங்க பாட்டி இப்படி இருக்காங்க?” என புரியாமல் விழித்தவளைக் கண்டு “அம்மா இருக்காங்க, ஆனா அவங்க கூட தான் இல்லனு கேள்விப்பட்டேன்” என்றாள் சம்யுக்தா.

“என்ன!” என சரயு அதிர, “எனக்கும் இங்க வந்த புதுசுல எதும் தெரியாது டி. கொஞ்ச நாள் முன்னாடி தான் இங்க இருந்த என் ரூம் மேட் சொன்னா. அந்த பாப்பா அஞ்சு மாச குழந்தையா இருக்கும் போது அவங்க அம்மா வேறொருத்தர் கூட ஓடிப் போய்ட்டாங்களாம்” என்கவும் சரயுவின் முகமோ அதை எப்படி எடுத்துக் கொள்வது எனப் புரியாமல் குழம்பிப் போனது.

அவளது மனமோ, ‘இப்ப அந்த கியூட்டிக்கு மூணு வயசு இருக்கும்ல. ச்சே, எப்படி தான் பெத்த புள்ளைய விட்டுட்டு இப்படி பண்ண முடிஞ்சுதோ!’ என பதறியது.

“அடுத்தவங்க வீட்டு சமாச்சாரம் நமக்கு எதுக்கு டி. காலைல இருந்து கிளாஸ் எடுக்கிறேன் பேர்வழினு எல்லா பிரபசர்ஸ்ம் என்னை தூங்க வச்சுட்டாங்க. இப்ப டயர்ட்டா இருக்கு, நான் தூங்கப் போறேன்” என கொட்டாவி விட்டவாறே கட்டிலில் பொத்தென சாய, அவளை கண்டு தலையில் அடித்துக் கொண்டாள் சரயு.

அவளது கண்கள் அனிச்சையாய் சித்தார்த்தின் வீட்டின் மீது படிய இன்னும் வாசலில் தான் இதழிகா விளையாடிக் கொண்டிருந்தாள். சரயுவின் மனமோ இதழிகாவை அள்ளி அணைக்க முற்பட, என்ன நினைத்தாளோ வேகமாக கைகால், முகம் கழுவியவள் நேராக சித்தார்த்தின் வீட்டின் முன் சென்று நின்றாள்.

மீண்டும் அவளைக் கண்ட இதழிகாவின் முகம் பிரகாசமடைய, அதனைக் கண்ட சரயுவின் முகமும் பிரகாசமானது. அவளுக்கு இணையாக குனிந்தவாறே, “உங்க பாட்டி மா எங்க டா கியூட்டி?” என்றாள் சரயு.

“உள்ள” என தன் வீட்டை நோக்கி கை நீட்டினாள் இதழிகா. “ஆன்ட்டி” என சப்தமிட, வெளியே பேச்சு சப்தம் கேட்டு எட்டிப் பார்த்தார் கற்பகம்மாள். சரயுவை பார்த்தவர் யாரென தெரியாததால், “சொல்லு மா, யார் நீ? இந்த ஏரியாவுக்கு புதுசா?” என்றவாறே வாசலுக்கு வந்திருந்தார்.

“ஆமாங்க ஆன்ட்டி, @ காலேஜ்ல தான் எம். எஸ்சி பைனல் இயர் படிக்கிறேன். அந்த ஹாஸ்ட்டல்ல தான் ஸ்டே பண்ணிருக்கேன்” என தன் விடுதியை கை காட்டி கூறியவள், “பாப்பாவ பார்த்தேன், அதான் பாப்பாகூட கொஞ்சம் நேரம் பேசலாமேனு வந்தேன். பாப்பாவ கொஞ்சம் நேரம் தூக்கிக்கவா ஆன்ட்டி!” என்றவளின் கண்கள் இறைஞ்சின.

தன்னிடம் வந்து இப்படி அனுமதி கேட்பவளுக்கு மறுப்பு சொல்ல முடியாமல், “சரி மா. உள்ள வா” என்றவர் அவளை தன் பார்வையாலே எடை போட்டார்.

கல்லூரி முடிந்து வந்த களைப்பு அவள் முகத்தில் காணப்பட்டாலும் அதனை மீறிய ஒரு சந்தோஷம் அவள் முகத்தில் ஜொலிக்க கற்பகம்மாளின் மனதில் ஓரளவு இடம் பிடித்திருந்தாள் சரயு.

பேரழகி என்று சொல்லிவிட முடியாது என்றாலும் அவளின் புன்னகை முகத்தை பார்க்காமலும் இருக்க முடியாது. காட்டன் சல்வார் அவளுக்கு பாந்தமாய் பொருந்தி இருக்க ஒப்பனைகள் ஏதுமின்றி கள்ளங்கபடமற்ற முகத்திற்கு சொந்தக்காரியாய் திகழ்ந்தவளை பார்த்தவருக்கு மறுப்பு கூற முடியாமல் தான் உள்ளே அழைத்திருந்தார் கற்பகம்மாள்.

“கியூட்டி” என தன் இரு கரங்களையும் விரித்து இதழிகாவை அழைக்க, அவளோ தன் பாட்டியின் முகத்தை ஏறிட்டாள். அவரும் சம்மதமாய் தலையசைக்க அடுத்த நொடியே சரயுவின் கைகளில் இருந்தாள் இதழிகா.

“காஃபி போடட்டுமா மா?” என்றவரை பார்த்து, “வேண்டாம் ஆன்ட்டி, பாப்பாகூட கொஞ்சம் நேரம் விளையாடிட்டு போறேன்” என்றவள் போர்டிகோவில் இருந்த நாற்காலியில் அமர்ந்துக் கொண்டு இதழிகாவோடு கதைக்க ஆரம்பித்திருந்தாள் சரயு.

சரயுவிற்கு இதழிகாவை பார்த்தவுடனே பிடித்துப் போயிருக்க தற்போதோ கூடுதலாக ஏதோ ஒன்று அவளை இழுத்துக் கொண்டு வந்து அங்கு நிறுத்தி இருந்தது. அது இதழிகாவின் மேல் இருந்த பரிதாபமா அல்லது அவளுள் இருந்த தாய்மையா எனப் புரியாமல் இருந்தது அவளது மனதிற்கு.

எது எப்படியோ இதழிகாவோடு இருந்த அந்த நொடிப்பொழுதை அவள் இழக்க விரும்பவில்லை என அவளது புன்னகை முகமே காட்டிக் கொடுத்தது.

நேற்று இரவு வீட்டிற்கு வர தாமதமாகி இருந்ததால், இன்று கடையை வேலை செய்யும் அவனின் நம்பிக்கைக்குரிய பாண்டியனிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு, “டைம் ஆனோனே கடைய பூட்டிட்டு சாவிய வீட்டுக்கு கொண்டு வந்து கொடுத்துட்டு போ பாண்டியா. வீட்டுக்கு கொஞ்சம் சீக்கிரமா போகணும்” என்றவன் தன் வீட்டை நோக்கிப் பயணமானான் சித்தார்த்.

போர்டிகோ தரைத்தளத்தில் அமர்ந்து இதழிகாவும் சரயுவும் விளையாடிக் கொண்டிருக்க, அதனை வாசற்படியில் அமர்ந்தவாறே பார்த்துக் கொண்டிருந்தார் கற்பகம்மாள். இதழிகாவிற்கு இணையாக சரயுவும் குழந்தையாய் மாறி விளையாடிக் கொண்டிருக்க, இதழிகாவின் முகத்தில் தோன்றி இருந்த சந்தோஷத்தை கண்டவரின் உள்ளம் கூடவே சோகத்தையும் தத்தெடுத்தது.

தனது பேத்தி அவளது வயதிற்கான சந்தோசங்களை கூட அனுபவிக்க முடியாமல் இத்தனை நாள் வீட்டிற்குள்ளே அடைந்து கிடந்தது அவர் மனதிற்கு வருத்தமளித்தாலும் இத்தனைக்கும் காரணமானவள் மேல் ஏற்பட்ட கோவத்தை அடக்க முடியாமல் தவித்தார்.

ஒரு காலத்தில் அவருக்கும் தன் பேத்தி மற்ற குழந்தைகள் போல் சுற்றத்தாரோடும் தன் வயதை ஒத்த குழந்தைகளோடும் கலகலப்பாக இருக்க வேண்டும் என்ற ஆசையும் இருக்கத் தான் செய்தது.

ஆனால் அவள் வீட்டை விட்டு வெளியே எப்பொழுது சென்றாலும் அவளிடம் அவளது தாயை பற்றின கேள்விகள் பின்துரத்த அதன்பின் அவளை வெளியே விட மறுத்தார் கற்பகம்மாள். இதழிகாவும் வற்புறுத்தி வெளியே செல்ல இதுவரை முற்படாததால் அவளது உலகம் தாத்தா, பாட்டி, அப்பா என அவர்கள் மூவரை மட்டுமே சுற்றி இருந்தது.

தன் தந்தையின் வண்டி சப்தத்தைக் கேட்டு, “ஐ, அப்பா வந்துட்டாரு” என்றவள் சரயுவை பார்க்க, “நாளைக்கு நம்ம விளையாடலாம்” என்றவள், “போய்ட்டு வரேன் ஆன்ட்டி” என கிளம்பினாள் சரயு.

தனது வண்டியை நிறுத்திவிட்டு அவன் உள்நுழையவும் சரயு அங்கிருந்து வெளியேறவும் சரியாக இருந்தது. யாரோ புதிதாக தன் வீட்டில் இருந்து வெளியே செல்வதை கண்டவன், தன்னை நோக்கி ஓடிவந்த இதழிகாவை தூக்கிக் கொண்டே, “யாரு மா அவங்க, தெரிஞ்சவங்களா?” என்றான் தன் அன்னையிடம்.

“பக்கத்து ஹாஸ்டல்ல உள்ள பொண்ணு பா. பாப்பாவ பாத்தோனே அவக்கூட கொஞ்சம் நேரம் விளையாடவானு கேட்டுச்சு. மறுக்க முடியல கண்ணா. இப்ப நீ வரவும் உடனே கிளம்பிருச்சு” என்றார் கற்பகம்மாள்.

“ஓ” என்றவன் அதற்குமேல் அவளைப் பற்றி எதுவும் வினவவில்லை. ஆனால் மனதினுள் தன் அன்னை எப்படி முன்பின் தெரியாத பெண்ணை தன் மகளிடம் பேச அனுமதித்தார் என்று ஆச்சரியப்பட்டான்.

விடுதிக்கு வந்தவளை, “எங்க டி போன? நான் தூங்கி எந்திரிச்சு பார்த்தா ஆளக் காணோம்” என்ற கேள்வியோடு வரவேற்றாள் சம்யுக்தா.

ஆனால் சரயு பதிலளிப்பதற்கு முன்பே அங்கு வந்த பக்கத்து அறை வானதி, “என்ன சரயு, உன்னை அந்த வீட்ல பாத்தேன். ஆச்சரியம் தான் போ! அந்தம்மா யார்கிட்டயும் பேச மாட்டேங்களே. உன்கிட்ட எப்படி பேசுனாங்க?” என்றாள்.

“யாரு, எந்த வீடு?” என சம்யுக்தா குழப்பமாக இருவரையும் பார்க்க, “சரயு போனது உனக்கே தெரியாதா சம்யு! அதான் அந்த ஓடிப் போனவ வீடு” என்றாள் வானதி.

‘ஓடிப் போனவ’ என்ற வார்த்தை சரயுவை கோபப்படுத்த, “இவ்ளோ பெருமையா சொல்ற அளவுக்கு ஓடிப் போனவ வீடுங்கிறது அவங்க வாங்குன பட்டமா வானதி கா?” என்றவளின் வார்த்தைகளில் இருந்த அழுத்தமே அவளது கோப அளவைக் காட்டியது.

ஆனால் அவளது கோபத்தைப் பொருட்படுத்தாத வானதி, “இல்லயா பின்ன… அதுவும் சும்மாவா ஓடிப் போனா… புருஷன ஆம்பளையே இல்லனு சொல்லிட்டுல்ல ஓடிப் போனா” என ஏதோ ஜோக் கூறியதைப் போல் இடைவிடாமல் சிரிக்கத் தொடங்க அவளது வார்த்தைகளில் அதிர்ந்து நின்றது சரயு மட்டுமல்ல சம்யுக்தாவும் தான்.

வானதி கடந்த நான்கு வருடங்களாக அந்த விடுதியில் தங்கி வேலைக்கு செல்பவள். அதனால் அங்கு சுற்றி நடப்பவைகளை அறிந்து வைத்திருக்க கடந்த வருடம் தான் அங்கு வந்திருந்த சம்யுக்தாவும் பெரும்பாலும் மற்றவர்களின் விசயங்களை காது கொடுத்து கேட்க விரும்பமாட்டாள். தற்போது தான் அங்கு வந்திருந்த சரயுவிற்கு இவை எதுவுமே தெரியாதிருக்க வானதி பேசி சிரித்தது வேறு எரிச்சலை உண்டாக்கியது.

தன் தோழியின் முகமாற்றத்தைக் கண்டு, “ஓ… எங்களுக்கு கொஞ்சம் வேல இருக்கு வானதி கா, அப்புறம் பேசலாம்” என்ற சம்யுக்தா சரயுவை இழுத்துக்கொண்டு அறைக்குள் நுழைந்தாள்.

_தொடரும்

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
10
+1
7
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment