Loading

வானம் – 02

“ப்பா, நைட் ஏன் என்னை பாக்கல? நான் உங்ககூட டூ” என இதழை சுளிக்க, நடுகூடத்தில் இருந்த ஷோபாவில் அமர்ந்தவன் தன் மகளை மடியில் அமர்த்திக் கொண்டு “சாரி டா இதழி மா, நைட் அப்பாவுக்கு கொஞ்சம் வேல அதிகம் மா. அதான் வர லேட்டாகிருச்சு. அப்பாவ மன்னிச்சுருங்க” என இரு காதுகளையும் பிடித்து மன்னிப்பு வேண்டினான் சித்தார்த்.

அவளோ முகத்தைத் திருப்பிக் கொள்ள அவளை தன் பக்கம் இழுக்கும் முயற்சியாக அவளது காலை தனது கைகளால் ஏந்தியவன், “என் இதழி மா புது கொலுசுலாம் போட்ருக்காங்க, யார் போட்டுவிட்டாங்க டா?” என்க, அவனை செல்லமாக முறைத்தவள், “உன் வேல தான ப்பா இது. நைட் லேட்டா வந்ததுக்கு லஞ்சமா!” என்றவள், “பாட்டி மா” என சப்தமிட, சமையலறையில் இருந்து வெளியே வந்தார் கற்பகம்மாள்.

“லஞ்சம் வாங்கிறதும் தப்பு, கொடுக்கிறதும் தப்புனு உங்க மகனுக்கு சொல்லி குடுக்கிறது இல்லயா பாட்டி மா” என தன் தந்தையின் மடியில் இருந்து கீழே இறங்கி கைகளை கட்டிக் கொண்டு வினவினாள் இதழிகா.

புன்னகைத்தவாறே அவளை தன் இரு கைகளாலும் அள்ளிக் கொண்டவர், “பாட்டி மா சொல்லிக் குடுக்காம விட்டது தப்பு தான். நீயே உன் அப்பனுக்கு சொல்லி குடு டா மயிலு” என்றார் கற்பகம்மாள்.

“இனி இது மாதிரி லஞ்சம் கொடுத்தா நேரா போலிஸ் அங்கிள்கிட்ட சொல்லி உங்கள உள்ள பிடிச்சு போட்ருவேன்” என விரல் நீட்டி எச்சரித்தவளை கண்டு புன்னகைத்தவன், “சரிங்க இதழி மா” என பவ்யமாக இடைவரை குனிந்து கைகளை கட்டிக் கொண்டு தலையாட்டியவனைக் கண்டு “சமத்து” என்றாள் இதழிகா.

அவளை அள்ளிக் கொஞ்சியவன், “இனி அப்பா நைட் சீக்கிரமே வந்துருவேன் மா, சாரி இதழி மா. ப்ளீஸ்” என்க, அவளது சம்மதமாய் அவனது கன்னத்தில் முத்திட்டாள் இதழிகா.

சித்தார்த்திடம் இருந்து இதழிகாவை தூக்கிக் கொண்ட கற்பகம்மாள், “நீ போய் கிளம்பு டா, பாப்பாவ நான் பாத்துக்கிறேன். கடைக்கு போக நேரமாச்சுல்ல” என்றார்.

தன் பாட்டியின் கரத்தில் பாந்தமாய் ஒட்டிக் கொண்ட இதழிகா, “பாட்டி, பாட்டி புது கொலுசு” என தன் காலை ஆட்டிக் காண்பித்தவளின் முகத்தில் சந்தோசம் மிளிர்ந்தது.

“அட ஆமாண்டி கண்ணு, இத எப்போ போட்டீங்க. பாரேன் பாட்டி கூட இத கவனிக்கல” என தன் பேத்தியை கொஞ்சிக் கொண்டே குக்கரின் விசில் சப்தம் கேட்டு சமையலறைக்குள் புகுந்தார் கற்பகம்மாள்.

ஓரிரு நிமிடம் தன் தாயையும் மகளையும் பார்த்தவன், நீண்ட பெருமூச்சொன்றை இழுத்து விட்டு தலையை கோதியவாறே தன் அறைக்குள் நுழைந்தான் சித்தார்த்.

அறையின் சுவர் முழுவதும் இதழிகாவின் புகைப்படங்களே நிறைந்திருக்க, தன் கண்களை இறுக மூடி தான் தினமும் எதை மறக்க நினைக்கின்றானோ அதையே இன்றும் மறக்க முயற்சித்தான். ஆனால் பாழாய் போன மனம் அதிலேயே நின்றது. நம் ஞாபகத்தில் இருக்க வேண்டிய நினைவுகளை எல்லாம் வெகு விரைவில் அழித்துவிடுகின்ற இந்த மனம் மறக்க நினைப்பவைகளை மட்டும் தினமும் ஞாபகப்படுத்துவது ஏனோ! இதுதான் வாழ்வின் விசித்திரம் போலும்.

மனதை ஓரளவு ஒருநிலைப்படுத்தியவன் குளித்துவிட்டு வந்து கடைக்கு கிளம்ப தாயாரானான்.

ராமமூர்த்தி – கற்பகம்மாள் தம்பதியினரின் ஒரே தவப்புதல்வன். சொந்தமாய் சிறியதொரு மளிகை கடை ஆரம்பித்து தற்போது சூப்பர் மார்கெட் நடத்தும் அளவிற்கு முன்னேறி இருந்தான். நேற்று இரவு கணக்கு வழக்கு பார்த்து விட்டு வீடு திரும்புவதற்கு நேரமானதால் காலையில் சற்று தாமதமாக கண்விழித்திருந்தான்.

தலை வாரியவனுக்கு ஓரிரண்டு முடிகள் வெள்ளையாய் இருப்பதைக் கண்டு தன் வயதை எண்ணி புன்னகை மலர்ந்தது. ஏனோ எல்லாம் கண் இமைக்கும் மைக்ரோ விநாடியில் நடப்பது போல் தோன்றியது அவனுக்கு. அதற்காக அவன் நாற்பதோ ஐம்பதோ என எண்ணிவிட வேண்டாம். தற்போது தான் முப்பத்தி இரண்டில் காலடி எடுத்து வைத்துள்ளான். லேசாக வெளியே தெரிந்த தொப்பையை கண்டு தன் மகளின் நினைவு தான் மலர்ந்தது.

ஆனால் அடுத்த நொடியே அவள் அன்று வினவியதும் ஞாபகத்தில் தோன்ற அவன் மனம் கசப்பான சம்பவங்களை மீண்டும் ஞாபகப்படுத்தின. தலையை உதறியவன் வேகமாக கடைக்கு புறப்பட தயாரானான்.

இதழிகாவின் இல்லத்தையே பார்த்துக் கொண்டிருந்த தன் தோழியை உலுக்கினாள் சம்யுக்தா. அதில் தன்னை மீட்டுக் கொண்டவள், “என்ன சம்யு?” என்க, “ஏன் டி ஒருத்தி எத்தனை தடவை கூப்பிடறது, கண்ண தொறந்து வச்சுட்டே கனவு காணுறியா?” என்றாள்.

“ச்சே ச்சே, அதெல்லாம் ஒன்னுமில்ல டி” என்றவள், “சரி நான் போய் குளிச்சுட்டு வரேன்” என்றவளின் கண்கள் அனிச்சையாய் சித்தார்த்தின் வீட்டின் மேல் பதிந்து மீண்டது.

‘இவளுக்கு என்னாச்சு?’ என நினைத்த சம்யுக்தா கல்லூரிக்கு நேரமானதை உணர்ந்து கிளம்ப தயாரானாள்.

“அப்பா” என்றவாறே கடைக்குள் நுழைந்தவனைக் கண்ட ராமமூர்த்தி, “வா கண்ணா” என புன்னகையோடு வரவேற்றவர், “இது காலைல வாங்குன காய்கறிகளோட பில்லு பா, அப்புறம் துவரம் பருப்பு ஸ்டாக் இல்லனு சொல்லி இருந்தியாமே! குமார் வந்தான். இன்னிக்கு மதியம் லோடு வந்துரும்னு சொன்னான்” என்றவர் வீட்டிற்கு கிளம்ப தயாராக, “சரி ப்பா, நீங்க வீட்டுக்கு போய் முதல்ல சாப்பிடுங்க. இன்னிக்கு வர லேட்டாகிருச்சு, நீங்க மாத்திரை வேற போடணும்ல” என்றவனின் தோளில் ஆதரவாய் தட்டிக் கொடுத்தவர்,

“பரவால்ல பா. நீ நைட் ரொம்ப தாமதமா வந்ததா உன் அம்மா சொன்னா. அதான் உன்னை எழுப்ப வேண்டாம்னு வெள்ளனே எந்திரிச்சு நானே கடைக்கு வந்துட்டேன் கண்ணா” என்றவர், “சரி பா, நான் வீட்டுக்கு கிளம்பறேன். நீ பாத்துக்கோ” என்றவர் வீட்டிற்குப் புறப்பட்டார் ராமமூர்த்தி.

அன்று காலையில் இருந்தே அதிகமான வாடிக்கையாளர்கள் வந்துக் கொண்டிருந்ததால் அவனது கவனம் முழுக்க வியாபாரத்திலேயே லயித்திருந்தது.

மதியம் ஆனதை கூட உணராமல் அவன் வேலை செய்துக் கொண்டிருக்க மதிய உணவோடு வந்திருந்திருந்தார் ராமமூர்த்தி. கூடவே இதழிகாவும் வந்திருக்க அங்கு வேலை பார்ப்பவர்கள் வேகமாக வந்து அவளிடம் கதைக்க ஆரம்பிக்க தன் மகளின் தலையை அன்பாய் கோதியவன், “நேரமானதே தெரியல பா. ஒரு ஃபோன் பண்ணி இருந்தா நானே வீட்டுக்கு வந்துருப்பேன்ல. உங்களுக்கு எதுக்கு சிரமம்?” என்றான் சித்தார்த்.

“உனக்கு வேலை இருக்கும்னு தான் இங்கயே சாப்பாட்ட உன் அம்மா கொடுத்து விட்டா கண்ணா. வேலை வேலைனு அலையாம உன் உடம்பையும் பார்த்துக்க கண்ணா” என்றவர், “இதழிகாவுக்கு நீ மட்டும் தான் இருக்கேங்கிறத மறந்துறாத கண்ணா. அவளுக்காகவாச்சும் நீ உன் உடம்ப கவனிச்சுக்கணும்” என்றார் தன் மகனின் உள்ளம் அறிந்து.

அவனின் இதழ்கள் தற்போது போலியாய் மலர்வது கூட தன் மகளுக்காக மட்டும் தான். அவள் மட்டும் இல்லை என்றால் அவனின் நிலை என்னவாகி இருக்கும் என்றுகூட நினைத்து பார்த்திராத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருந்திருந்தான் இரண்டரை வருடங்களுக்கு முன்பு. அவனுக்கு மீண்டும் உயிரளித்தவள் இதழிகா தான். அதன் பின் அவனது ஓட்டம் வேலையின் பின்னே வேகமெடுத்தது. அதன் விளைவாக உருவானது தான் இந்த சூப்பர் மார்கெட். ஆனால் மனமோ இன்னும் கொதிகலனாய் தான் கொதித்துக் கொண்டிருக்கிறது.

தன் மகளைப் பார்த்து தன் மனதை சமன்படுத்தியவன் அங்கு பணிபுரியும் மூவரையும் சாப்பிட அழைக்க, அவர்களோ மதிய உணவை உட்கொண்டு விட்டதாக கூறவும், தான் சாப்பிட அமர்ந்தான்.

அந்திவானம் சிவக்கத் தொடங்கி இருந்த அந்திமாலைப் பொழுது. கல்லூரி முடிந்ததும் பிராஜெட் வேலைகளை முடித்துவிட்டு சரயுவும் சம்யுக்தாவும் அப்பொழுது தான் விடுதிக்கு வந்துக் கொண்டிருந்தனர்.

இதழிகா தன் வீட்டின் வாசலில் விளையாடிக் கொண்டிருக்க சரயுவின் பார்வை அவள் மேல் படிந்தது. இதழிகாவும் அவளைப் பார்க்க, “ஹாய் கியூட்டி” என்றாள் சரயு. சரயு யாரை கூப்பிடுகிறாள் என அவள் திரும்பி இருந்த திசை நோக்கினாள் சம்யுக்தா.

அதற்குள் இதழிகாவின் அருகே வந்திருந்த சரயு அவள் அளவிற்கு மண்டியிட்டு, “கியூட்டியோட நேம் என்ன?” என அவளது பட்டுக் கன்னங்களை வருடிவிட, வீட்டினுள் ஒரு பார்வை பார்த்துவிட்டு, “இதழிகா” என்கவும், அவளது பார்வை மாற்றத்தைக் கண்டு, “அம்மா திட்டுவாங்களா டா கியூட்டி?” என்றாள் அவளது வீட்டை பார்த்தவாறே.

“எனக்கு தான் அம்மா இல்லயே” என தலைசாய்த்து அவள் கூற, சரயுவோ தான் கேட்க கூடாத கேள்வியை கேட்டுவிட்டோமோ என பதட்டமடைய ஆனால் பதிலளித்தவளோ, “பாட்டி மா தான் திட்டுவாங்க. அதான் அவங்க வர்றாங்களானு பார்த்தேன்” என அவள் ஏன் தன் வீட்டைப் பார்த்தாள் என பதிலுரைக்க, “சாரி டா கியூட்டி” என மன்னிப்பு வேண்டினாள் சரயு.

அவளது கேள்வியில் அதிர்ந்து நின்றது சம்யுக்தா தான். “நீ மொதல்ல வா டி, அப்புறம் அந்த பாப்பாகிட்ட பேசிக்கலாம்” என அவளை இழுக்க, ஏற்கெனவே அவள் மனம் குற்றவுணர்ச்சியில் தவித்துக் கொண்டிருந்ததால் “பாய் டா கியூட்டி” என்றவள் இதழிகாவினை திரும்பி பார்த்துக் கொண்டே தன் தோழியின் இழுவைக்குக் கட்டுப்பட்டு அவளோடு செல்லத் தொடங்கினாள். இதழிகாவோ அழகான புன்னகையோடு அவளை நோக்கி கையசைத்துக் கொண்டிருந்தாள்.

_தொடரும்

 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
16
+1
2
+1
0

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  4 Comments

   1. Author

    Thank u sis 😍😍😍❤❤ aen nu nxt udla therinchurum sis