
காதல் – 5
கபிலனிடம் புலம்பித் தள்ளி சோர்ந்து போய் விமலன் அமர்ந்திருக்க, அவனுக்குமே அவனின் அன்னையின் செயல்பாடுகளில் விருப்பமில்லை. இவனிடம் ஒரு வார்த்தையும் கேளாமல் அவரால் எப்படி சம்மதம் உரைக்க முயன்றது.? அதுவும் இவனுக்குத் தெரியாமல் மாப்பிள்ளையைப் பற்றி விசாரித்தும் இருக்கிறார். இப்போது மகளுக்கு சீர்வரிசை செய்ய மட்டும் இவன் வேண்டுமா என்ன.?
தேனுவின் வார்த்தையும் நியாயம் தான்.. இன்னும் இவன் அக்கா, அம்மா என்று இருந்தால் இவனுக்கான வாழ்வை இவன் எப்போது வாழ்வது.?
டேய் எனக்கும் தேனு சொல்றது தான் நியாயம்.. நீ இன்னும் ஏமாளியா இருக்காத..
என்ன இருந்தாலும் அக்காக்கு ஒரு நல்ல வாழ்க்கை ஏற்படுத்தி தர்றது தான் நியாயம்.. ஆனா அம்மா அவங்கள பத்தி எதையும் யோசிக்காம எப்படி சரினு சொன்னாங்கனு தான் தெரியல..
இதை அவனிடம் எப்படி கூறுவது என்று தெரியாமல் முழித்து பின்பு “உங்க அம்மா உனக்கு தெரியாம மாப்பிள்ளை வீட்டைப் பத்தி விசாரிச்சு தான் சம்மதம் சொல்லிருக்காங்க” என்று தந்தையின் மூலம் இவ்விசயத்தை அறிந்து நண்பனிடமும் கூறினான்.
கபிலனின் தந்தைக்குத் தெரிந்தவர் ஒருவரின் மூலம் தான் மகளுக்கு வந்த வரனைப் பற்றி தேவகி விசாரித்தது. அதை அவர் அறிந்ததும் மகனிடம் “வெறும்பயல உன்ற தோஸ்தோட அம்மா அவனுக்கே தெரியாம புள்ளைக்கு வந்துருக்கற பையனைப் பத்தி விசாரிச்சுட்டு இருக்காக.. அவனை நம்பி இனி கடன் வாங்கித் தர்ற வேலை வெச்சுக்கிட்ட அம்புட்டுத்தான்” என்று மிரட்டி இருந்தார்.
இதை விமலன் எதிர்பார்க்கவில்லை. அவனை சூழ்ந்து நின்ற உணர்வுகளும் எவ்வகையானது என்றும் புரியவில்லை.. தமக்கைக்கு நல்லது நடக்க வேண்டும் என்று நினைக்கவில்லையா.? எனக்கு தெரியாமல் விசாரித்து இருக்கிறார்.? அப்படியென்றால் என் மேல் நம்பிக்கை இல்லையா.?
தலை சுற்றி மயக்கமே வரும் போலானது. தலையைத் தாங்கி அமர்ந்திருந்தவனைப் பார்க்க கபிலனுக்கு பாவமாக இருக்க, “இனி உன் வாழ்க்கையை பார்க்கறது தான் நல்லதுனு சொல்லுவேன்டா.. இன்னும் அம்மா அக்கானு இருந்தா உன்னைய அவங்களுக்கு சேவை செய்யற மிஷனா மாத்திருவாங்க உன் அம்மா.. தேனு சொல்ற மாதிரி அவங்க வீட்டுல உன்னைய எப்படிடா ஏத்துப்பாங்க.?
என்னால இவ்ளோ தான் முடியும்னு ஒரு தொகையை மட்டும் கடன் வாங்கி குடு.. உன் அம்மா ஏதாவது கேட்டா எனக்கு தெரியாம விசாரிச்சு கல்யாணத்தை முடிவு பண்ணுன மாதிரி கல்யாணத்தையும் நடத்தி வெச்சுருங்கனு பட்டுனு சொல்லிரு.. நீ தனியா இருந்தாலும் நல்லதுனு தான் சொல்லுவேன்” என்று மனதில் பட்டதை உரைத்து விட்டான்.
பின்பு வலுக்கட்டாயமாக அவனின் மனநிலையை மாற்ற உணவுபண்டங்களையும் கணக்கின்றி வாங்கி குவிக்க, அவன் இருந்த மனநிலைக்கு விமலனும் மறுக்காமல் உண்டான். உள்ளே செல்ல செல்ல உணவின் சுவை அவனின் மனக்காயத்தையும் இனிப்பாக மாற்றியது என்னவோ உண்மைதான்.
மொத்தமாக மனபாரம் குறைவில்லையென்றாலும் தெளிவாக யோசித்திடும் மனநிலைக்கு அவன் வந்திருக்க, “தேங்க்ஸ்டா” என்று நண்பனை அணைத்துக் கொண்டான்.
“எப்படியும் நீ போனதும் உன் அம்மா ஆரம்பிப்பாங்க.. நீ தெளிவா பேசிருடா.. தேனு மாதிரி ஒரு புள்ளையை வேணாம்னு நீ விட்டுட்டா உன் வாழ்க்கையே கேள்விக்குறியாகிரும்.. உன் வாழ்க்கைக்காக நீதான் பேசணும்.. பேசிரு..” என்று நண்பனைத் தேற்றி அனுப்பினான் கபிலன்.
விமலனின் வருகைக்காக தான் விழி மேல் விழி வைத்துக் காத்திருந்தார் அவனின் அன்னை. மகளுக்கு வந்த இந்த வரனை எப்படியாவது முடித்து விட வேண்டும் என்ற உத்வேகம் அவரை விடாமல் ஆட்டி படைத்தது.
தமயந்தி “அம்மா நீ பண்ணி வெச்சுருக்கற காரியம் தம்பிக்கு தெரிஞ்சா என்ன நினைப்பான்.?” என்று கேட்க, “என்னடி பண்ணி வெச்சுருக்கேன்.? உனக்கு ஒரு நல்லது நடக்கணும்னு நினைக்கறது ஒரு தப்பா.? அதெல்லாம் அவன் ஒன்னும் நினைக்க மாட்டான்.. எப்படியாவது இந்த கல்யாணத்தை நடத்தி வெச்சுருவான்.. சும்மா எதையாவது நினைச்சு மனசை குழப்பிட்டு இருக்காத” என்று மகளைத் தான் சாடினார்.
விமலனின் அழுகை முகம் தான் தமக்கையை மிகவும் வருத்தியது. ஆண்மகனாக பிறந்ததை தவிர அவன் எந்த தவறும் செய்திருக்க மாட்டான். அதுவும் இக்குடும்பத்தில் வந்து அவன் பிறந்தது தான் அவன் செய்த மிகப்பெரிய பாவம்.
தந்தை இறந்ததும் அன்னையாவது வேலைக்கு சென்றிருக்க வேண்டும்.. அதுவும் இவர் செய்யவில்லை.. தாமரையும் வேலைக்கு செல்வதாக கூறியும் இவர் விடவில்லை. பின்பு அவள் திருமணம் செய்துக் கொண்டு சென்று விட்டாள்.
குடும்ப பாரத்தை இளையவன் ஒருவனே சுமக்கிறான் என்று தமயந்தியும் வேலைக்குச் செல்ல முயன்றாள்.. அதற்கும் பலன் கிட்டவில்லை. பெண்கள் என்றால் வீட்டு வேலை மட்டுமே செய்ய வேண்டும் என்ற கொள்கையில் ஊறி போயிருந்த அவரால் அவரின் இயல்பை மாற்றிட முடியுமா.?
மொத்த குடும்ப கணமும் இளையவனின் தலையில் ஏற்றி இருக்க, அவன் ஒருவனால் அக்கணத்தைச் சுமக்க முடியாமல் தத்தளித்து நிற்பதை தமக்கையவளும் உணர்த்திருக்கவே செய்தாள். அன்னையின் அளவுக்கு மீறிய பேராசையால் தான் கணத்தின் அளவும் கூடியிருப்பதை அக்கணம் உணர்ந்து வருந்தவே செய்தாள் அவள்.
விமலனும் வந்தான். அன்னையின் ஆர்வமான முகம் அவனுக்கு பலவற்றை உணர்த்திட, எதைப் பற்றியும் கேளாமல் குளிக்க சென்றவன் குளித்து விட்டும் வந்தான். அவன் சாப்பிட அமர்ந்ததும் ஏதாவது கேட்பான் என்று அவனின் முகத்தையே தேவகி பார்த்திருக்க, தம்பியின் அமைதியான செயல்முறைகள் தமயந்தியைக் கலக்கமுற செய்தது.
சாப்பிட்டு விட்டு கேட்பான் என்று அவர் எழுந்து செல்லாமல் அங்கேயே அமர்ந்திருக்க, வெளியில் உண்டதன் காரணமாக அளவாகவே உண்டு விட்டவன் எழுந்தும் விட்டான்.
இதற்கு மேலும் அமைதியாக இருக்க முடியாமல் “தம்பி இன்னைக்கு என்ன ஆச்சுனு எதுவும் கேட்காம போற.? இவ்வளவு தான் குடும்பத்து மேல நீ வெச்சுருக்கற பாசமா.?” என்று கேட்டு அவனை நகர விடாமல் செய்தார்.
அவன் அப்படியே நிற்க, “வந்து பாத்த மாப்பிள்ளை வீட்டுக்காரங்க நம்ம புள்ளையை புடிச்சுருக்குனு சொல்லிட்டாங்க.. அவங்க எதிர்பார்த்ததை நம்மளும் செய்யறோம்னு சொல்லிட்டோம்.. நல்ல நாளு பார்த்து பூ வெக்க வர சொன்னா அவங்களும் வந்து வெச்சுட்டு போய்ருவாங்க..
அப்பறம் கல்யாண வேலை தான் தலைக்கு மேல கிடக்குது.. எப்படியாவது இவளைக் கல்யாணம் பண்ணி அனுப்பி விட்டா தான் எனக்கு நிம்மதியே” என்று படபடவென்று கூறி முடித்தார்.
விமலனிடம் எவ்வித சலனமும் இல்லை. அன்னையையே பார்த்து நிற்க, அவரோ மீண்டும் “நாளைக்கு போய் ஜோசியரைப் பார்த்து நல்ல நாளை குறிச்சுட்டு வந்தரலாம்.. என்னடா சொல்ற.?” என்று கேட்டார்.
“என்ன சொல்லணும்னு நினைக்கறீங்கம்மா.?”
“இப்படி கேட்டா என்னடா அர்த்தம்.?”
“என்கிட்ட கேட்டா அவங்களுக்கு சம்மதம் சொன்னீங்க.?”
“……”
“இல்லையே.? இப்ப மட்டும் ஏன் என்கிட்ட கேட்கறீங்க.? நீங்களே போய் பார்த்து எல்லாத்தையும் முடிவு பண்ணிட்டு வாங்க.. அக்காக்கு தம்பியா சந்தோஷமா வந்து கல்யாணத்துல நான் கலந்துக்கறேன்” என்றான்.
“கூட பிறந்தவ மேல அக்கறையே இல்லைனு உன் பேச்சுலயே புரியுது.. நாங்க உனக்கு பாரமா இருக்கோமா.?” என்று எப்போதும் கேட்பதைப் போல் இப்போதும் கேட்டிட, ‘அய்யோ இல்லம்மா’ என்று பதறாமல் இந்த முறை அமைதியாகவே “எனக்கு நானே பாரமா இருக்கேன்ம்மா.. என் தலைல இருக்கற கணத்தை யாராவது எனக்கு தோள் குடுத்து கீழே இறக்கி வெக்க உதவி பண்ணுங்கனு யாருகிட்ட போய் சொல்ல முடியும்.?” என்றான் சலனமே இல்லாமல்.
மகனிடம் இருந்து இப்படியொரு வார்த்தை வரும் என்று அவர் நினைக்கவில்லை. மீண்டும் அவனே “என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லாம அவங்களைப் பத்தி விசாரிச்சுருக்கீங்க.? ஏன் எனக்கு தெரிஞ்சா இந்த கல்யாணத்தை நிறுத்திருவனா.?” என்று வினவினான்.
“அப்படி இல்லப்பா..” என்று தடுமாறி “நீ தள்ளி தள்ளிப் போட்டுட்டு இருப்ப.. பொறவு இவங்களும் வேணாம்னு போய்ட்டா..? அதான் நானே சம்மதம் சொல்லி எல்லாத்தையும் முடிவு பண்ணிட்டேன்..”
“சரி முடிவு பண்ணுனீங்க சந்தோசம் தான்.. பணத்துக்கு என்ன பண்ண போறீங்க.?”
“…….”
“சொல்லுங்க பணத்துக்கு என்ன பண்றது.?”
மற்ற நேரமாக இருந்தால் சாமியாடி இருப்பார் நீ எதற்கு இருக்கிறாய் என்று. ஆனால் இப்போது அவனிடம் கோவப்பட முடியவில்லை. அவனின் பேச்சிலும் ஒரு மாற்றம் தெரிகிறது. அந்த மாற்றமே அவரைப் பயம் கொள்ளவும் வைத்தது.
அதன் காரணமாகவே அமைதியாக “நீ தான் எங்கையாவது கடன் வாங்கணும்பா..” என்றிட, “எங்கம்மா போய் கடன் வாங்கறது.? கடன் என்ன போனதும் கிடைச்சுரும்னு நினைச்சீங்களா.? சரி எவ்வளவு கடன் வாங்கணும்.?” என்று அவரிடமே கேட்டார்.
“முப்பது பவுன் நகையும், வண்டியும் வாங்கற அளவுக்கு பணம் வேணும்ப்பா.. கல்யாண செலவுலயும் நம்ம பாதி போடறோம்னு தான் சொல்லிருக்கேன்..”
“முதல்ல பவுன் விலை என்னனு உங்களுக்குத் தெரியுமா.?”
“…..”
“ஒரு பவுன் தங்கமே ஒரு லட்சத்துல இருக்கும்மா.. இதுல முப்பது பவுன் எப்படி போட முடியும்.? இதுல வண்டி வாங்கித் தர்றேனு சொல்லிருக்கீங்க.. எந்த நம்பிக்கைல இப்படி சொல்லிருக்கீங்க.? மொத்தமா அம்பது லட்சத்துக்கு மேல வேணும்.. நம்மகிட்ட இப்ப எவ்ளோ இருக்கும்மா.? இல்ல நான் வாங்கற பதினைஞ்சாயிரம் சம்பளத்தை நம்பி யார் அம்பது லட்சம் எனக்கு கடன் தருவாங்க.?”
“அப்ப கூட பிறந்தவளுக்கு ஒரு நல்லது நடக்க வேண்டாமா.?”
“நடக்கட்டும்.. தாராளமா நடக்கட்டும்.. நம்ம சக்திக்கு மீறி நடக்க வேணாம்னு தான் சொல்றேன்..”
“என்ன நம்ம சக்திக்கு மீறி நடக்குது இப்ப.?”
“நம்ம இருக்கற நிலைமைக்கு நம்மளால ஒரு பவுன் போட முடியுமா.? அப்பா தான் சம்பாரிச்சு சொத்தைக் குவிச்சு வெச்சுட்டு போய்ருக்காரா.? அப்படி குவிச்சு வெச்ச சொத்தைத் தான் நான் தர மாட்டேனு சொல்றனா.? நீங்க செய்யறதும் பண்றதும் அத்தனையும் அளவுக்கு மீறியது தான்..
என்னால மொத்தமா எல்லாம் கலாயாண செலவை ஏத்துக்க முடியாது.. ஒரு அஞ்சு லட்சம் வேணா எப்படியாவது வாங்கி தந்துருவேன்.. நீங்க என்னைன என்ன நினைச்சாலும் பரவால்ல.. இந்த அஞ்சு லட்சத்துக்கே யார்கிட்ட போய் கை நீட்டி நிற்கறதுனு தெரியல.. இருந்தாலும் எப்படியாவது வாங்கி தந்துருவேன்.. இந்த பணமே என் சக்திக்கு மீறியது தான்.. என்னால இவ்ளோ தான் முடியும்” என்று விட்டான் தெள்ளந்தெளிவாக.
அவன் கத்தவில்லை. கோவப்படவில்லை. தன் இயலாமையை பேச்சில் காட்டி விட்டான். அவன் பேச்சில் விரக்தியே மிஞ்சி இருந்தது. இவரிடம் கோவப்பட்டு கத்தி சண்டையை பெரிசாக்குவதை விட அமைதியாக தன் நிலையைக் கூறி விட்டு விலகி இருப்பதே மேல் என்று நினைத்தான்.
அவன் மட்டும் கபிலனைப் பார்க்காமல் நேராக வீட்டிற்கு வந்திருந்தால் கோவத்தில் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பேசி இருப்பான். நல்லவேளை அவனின் மனநிலையும் நண்பனும் உண்ட உணவும் மாற்றி விட்டிருந்தது.
அன்னையின் அமைதி அவனுக்கும் பயத்தைக் குடுத்தது. எதிர்த்து பேசி கத்தி இருந்தால் கூட பரவாயில்லை. எதுவும் நின்ற இடத்திலே நின்றிருப்பது தான் அவனின் பயத்தை அதிகரிக்க செய்தது.
அவனும் நகரவில்லை. அன்னையின் மறுமொழிக்காக அவ்விடத்திலே நின்றிருந்தான். அவரும் அப்படியே இருக்க, நிமிடங்கள் தான் மெதுமெதுவாக கடக்கத் தொடங்கி இருந்தது. கிட்டத்தட்ட முப்பது நிமிடங்களுக்கு மேல் இருவரும் எதிர் எதிராக நின்றிருந்தாலும் இருவருமே ஒருவரின் முகத்தை மற்றொருவர் காணவில்லை. தவித்தது தமயந்தி தான்.
அவளுக்கு அன்னையும் முக்கியம். தம்பியும் முக்கியம்.. இருவரும் மோதிக் கொண்டால் பாதிக்கப்படுவது என்னவோ இவள் தான். அவர்கள் இருவரையும் என்ன சொல்லி சமாதானப்படுத்துவது என்று தெரியாமல் தவித்த விநாடிகள் ஏராளம்.
இவள் பேச வாயெடுத்த சமயம் அ
வளின் அன்னையே அவரின் முடிவை உரைத்திருக்க, விமலனுடன் சேர்ந்து தமயந்தியும் அதிர்ந்து நின்றாள்.
தொடரும்..
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
4
+1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.

Vimalan pavam…. 😞😞😞