Loading

விசை-28

ஒரு வார காலம் ஓடியிருந்த நிலையில், நீதிமன்ற வாசலில், அத்தனை திமிரோடும், துணிவோடும் நின்றுகொண்டிருந்தான், கற்குவேல் அய்யனார்.

அவன் கண்களில் அப்படியொரு தீட்சண்யம் குடியிருந்தது. அந்தத் திமிரும் துணிவும், வெற்றிக் கொடுத்த சன்மானம் என்பதில் ஆச்சரியமே இல்லை.

அவனுக்கு முன், அத்தனை ஊடகவியலாளர்களும் சூழ்ந்திருக்க, “ஊடகங்களில் பேசப்படாத, அறியப்படாத ஒரு குற்றத்தை, எப்படி சார் இத்தனை சீக்கிரம் முடிச்சு வச்சீங்க?” என்று ஒரு பத்திரிகையாளர் கேட்க,

கண்கள் மட்டும் சிரிக்க, இறுகப் பூட்டிய இதழோடு அனைவரையும் தனது கூர்மையான பார்வையால், பார்த்துக் கொண்டான்.

சற்றுத் தள்ளி நின்றுகொண்டிருந்த ராஜை முறைத்து, அருகே கண்களால் அவன் அழைக்க, ராஜ் சற்றுத் தடுமாறினான்.

“இந்தக் கேஸை நான் மட்டுமா முடிக்கலை. இதுல மிஸ்டர் ராஜுக்கும் பங்கு இருக்கு. அவர் எனக்கு உதவினார்னு சொன்னால்கூட தகாது. ஏன்னா, உதவின்னு சிறு பங்கோட அவரோட பாங்கை அடக்கிட முடியாது” என்று கூறி, தற்போது ராஜை அழைக்க,

சற்று சங்கோஜத்தோடு அவன் அருகே வந்து நின்றான்.

“இந்தக் கேஸ் பற்றித் தெளிவா கொஞ்சம் எக்ஸ்பிளைன் பண்ண முடியுமா சார்?” என்று ஒரு பெண் கேட்க,

“ஷ்யோர்” என்றவன், “ப்யூர் ஹெராயின் பயன்படுத்தி, போதைப்பொருளைக் காகித வடிவில், இளம் தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்குறதுதான் இவங்க நோக்கமே. இளம் தலைமுறை மாணவர்களை போதைக்கு அடிமையாக்க, மாத்திரைகளாவோ, பொடியாவோ இருந்தா, சீக்கிரம் கண்டுபிடிக்கப்படும்னுதான், புத்தகங்களில், காகித வடிவில் அச்சடிச்சுக் கொடுத்து அடிமையாக்குறாங்க. பள்ளி புத்தகத்தில் இதைப் பார்த்து, அந்தப் பள்ளியில் விசாரணை நடத்தினபோது, அங்க உள்ள ஆங்கில ஆசிரியர் கணேசன், முன்னாள் எம்.எல்.ஏ நாதனுக்கு சொந்தம்ன்னும், நாதன் கொடுத்துத்தான் இந்தப் புத்தகங்கள், கணேசன் மூலமா பள்ளிக்குள்ள வந்ததுன்னும் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்குப் பிறகு, பூமி பதிப்பகத்தின் உரிமையாளரான பூமிதான், நாதன் கேட்டதற்கு இணங்க, இந்தப் போதைக் காகிதங்களைப் புத்தகங்களா அமைச்சுத் தர்றான்னு தெரிய வந்தது. நாதனை மையமா வச்சு நடந்தாலும்கூட, நாதனும் இதில் ஒரு கையூட்டுதான் என்று தோன்றினதால, அவனோட தொழில்முறை சமூகத்தை அலசினப்ப, எங்க சந்தேக வட்டத்தில் சேர்ந்தவர்கள்தான், திரைப்படத் தயாரிப்பாளர் அன்புராஜ், ஆன்மீக சிந்தனையாளர் வேல்முருகன், டாக்டர் ஆல்பர்ட் அன்ட் தொழிலதிபர் மற்றும் நாதனின் சொந்தமான அரசன். இந்த வழக்கை நான் தொடரக்கூடாதுனு சிலபல இடையூறுகள் கொடுக்கப்பட்டது. கொலை முயற்சி, கொலை மிரட்டல் போன்ற நேரடி மற்றும் மறைமுகத் தாக்குதல்கள் வந்தது. அதைச் செய்தவர்களைக் கண்டுபிடிச்சு ஆராயும்போதுதான், நாங்க சந்தேகப்பட்ட நால்வரில் ஒருவர் இல்லை, நால்வருமே கூட்டாளிதான்னு எங்களுக்குத் தெரிய வந்தது. எங்க சைபர் பிரிவினர்கள் மூலமா, அவங்க டிஜிட்டல் சிஸ்டத்தை ஹாக் பண்ணிப் பார்த்தபோது, அவங்க செய்துவரும் வண்டவாளம் ஓரளவுக்கு எடுக்க முடிஞ்சது. அதைக் கொண்டு அவங்க நாலு பேரோட வீடு, எஸ்டேட், அலுவலகம் மாதிரி இடங்களில் சோதனை நடத்தினப்ப, பல நூறு கிலோ போதைக் காகிதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது” என்று நீளமாய் பேசி முடித்தான்.

அனைத்தையும் அமைதியாய்க் கேட்டுக்கொண்ட ஊடகவியலாளர்கள், “இந்த வழக்கில் காவல் துறையைச் சேர்ந்த முருகேசனும் கைது செய்யப்பட்டிருப்பது ஏன் சார்?” என்று கேட்க,

“எனக்குக் கொலை மிரட்டல் கொடுத்த நபர் முருகேசன்தான். அவரை விசாரிக்கும்போதுதான், டைரக்டர் அன்புராஜுக்கு மறைமுக உதவியாளரா இருப்பதை ஒப்புக்கொண்டார்” என்று கூறினான்.

“காவல்துறையிலேயே இப்படி ஆட்கள் இருப்பது மக்கள் மத்தியில் அதிருப்தியை உண்டாக்குமே சார். இதுக்கு உங்க கருத்தென்ன?” என்று ஒருவர் கேட்க,

“தீயவர்கள் துறை பார்த்து சேர்றதில்லை. எல்லா இடத்திலும் தப்பானவங்க இருக்கத்தான் செய்றாங்க. முடிந்தளவு அவர்களைப் போன்ற ஆட்கள் மக்களை ஆக்கிரமிக்கும் முன்னமே கண்டுபிடிச்சுக் களையெடுக்கும் பணியிலதான் நாங்களும் இருக்கோம்” என்று அதே நிமிர்வோடு கூறினான்.

மேலும் ராஜனிடமும் வழக்கு சார்ந்த கேள்விகள் கேட்கப்பட, ராஜும் அனைவருக்குமான பதிலைக் கூறி முடித்தான்.

காவல் அதிகாரி முருகேசன், பத்திபகத்தாளர் பூமி, திரைப்படத் தயாரிப்பாளர் அன்புராஜ், ஆன்மீக சிந்தனையாளர் வேல்முருகன், டாக்டர் ஆல்பர்ட் மற்றும் தொழிலதிபன் அரசன், ஆங்கில ஆசிரியர் கணேசன், முன்னாள் எம்.எல்.ஏ நாதன் உட்பட அனைவரையும் நீதிமன்றத்தில் நிறுத்தி, அவர்களுக்கு எதிரான ஆதாரங்களை முறையே கொடுத்த, கடந்த ஒரு வாரமாய் வாதங்கள் ஓடியதன் உபயமாய், இன்று தவறு செய்தவர்களுக்கு, அவரவர் செய்த தவறுக்கான தண்டனைகள் சென்று சேர்ந்திருந்தது.

பெரும் பாரம் ஒன்று இறங்கிய உணர்வோடு அய்யனாரும் ராஜும் வண்டியில் ஏற,

“எப்பவும் நல்லது செய்ததை சொல்லத் தயங்காதீங்க ராஜ்.. தலைநிமிர்ந்து சொல்லுங்க” என்று அய்யனார் கூறினான்.

“ஓகே சார்..” என்ற ராஜ், “எனக்கு ஒரு சந்தேகம் சார்” என்க,

“என்ன ராஜ்?” என்றான்.

“உங்களைக் கொலை செய்ய வந்தவன், அரசன் சொல்லித்தான் எல்லாமே செய்ததா சொன்னான். ஆனா இப்ப வழக்கு விசாரணையில் அன்புராஜ் சொல்லித்தான் செய்ததா சொன்னான். இதுல எது உண்மை?” என்று ராஜ் கேட்க,

“இதை நீங்க கேட்பீங்கனு எதிர்பார்த்தேன் ராஜ்” என்று புன்னகைத்த அய்யனார், “அவன் அரசன்னு ஒத்துகும்போதே எனக்குக் கொஞ்சம் சந்தேகம் இருந்தது. அத்தனை டார்சரையும் தாங்கிட்டு அமைதியாத்தான் இருந்தான். இன்னும் சொல்லப்போனால் அன்னிக்கு அவனுக்கு சாப்பாட்டைக் கொடுக்குற போல கொடுத்து பட்டினிப்போட்டப்பக்கூட அவன் திடமாதான் என்னை முறைச்சான்.. ஆனா அடுத்த பத்தாவது நிமிஷம் அரசன் பெயரை அவன் சொல்லவும் எனக்குக் கொஞ்சம் சந்தேகம் வந்தது. அவனைப் பற்றித் தனியா போயி விசாரிச்சேன்.. அப்ப அவனோட அப்பா டைரக்டர் அன்புராஜைத் தெய்வம் போல சித்தரிச்சு பேசினாரு.. சந்தேகம் வழுத்தது. இருக்கவே இருக்கான் கதிர்.. அவனோட டிஜிட்டல் ஹிஸ்டரி தேடினேன்.. மாட்டிக்கிட்டான்..” என்று கூறினான்.

“நாலு பேரும் சேர்ந்துதான் இதை செய்றாங்க.. பிறகு ஏன் ஒருத்தரை ஒருத்தர் காட்டிக் கொடுக்கணும்?” என்று ராஜ் கேட்க,

“போட்டி பொறாமைதான் ராஜ்.. நாலு பேருக்கும் நாதன் சிறைவாசம் அனுபவிச்சு தப்பிச்சதுல பயம் வந்துடுச்சு. முருகேசன் மூலமா நாம இந்தக் கேஸை ஹேண்டில் பண்ற விஷயம் அவன் காதுக்குப் போகவும், இவங்கள்ல யாரையாவது மாட்டிவிட்டுட்டு தான் தப்பிக்கணும்னு யோசனை.. அதனாலதான் அவனோட போதைப்பொருள் எதுவும் அவன் வீட்ல கிடைக்கலை. நான் அடுத்து அவன் மச்சான் பெயரில் இருக்கும் ரெகார்ட்ஸ் ரைடு விடுவேன்னு அவன் எதிர்ப்பார்க்காததுதான் அவன் மாட்டினதுக்குக் காரணம்” என்றான்.

“நிறைய கத்துக்கனும் சார் உங்ககிட்ட” என்று ராஜ் கூற,

“நானுமே உங்ககிட்ட நிறைய கத்துக்கனும் ராஜ். எல்லார்கிட்டயும் நிறைகளும் இருக்கும், குறைகளும் இருக்கும். நம்ம பார்க்குற எல்லார்கிட்டயிருந்தும் நல்லதை மட்டும் நாம கத்துக்கிட்டாலே நம்மை செப்பனிட உதவும்..” என்று அய்யனார் கூறினான்.

ராஜ் புன்னகைக்க, “என்னை இங்கேயே இறக்கி விட்டுடுங்க ராஜ்” என்று கூறினான்.

“பரவாயில்லை சார்.. வீட்லயே விடுறேனே” என்று ராஜ் கூற,

“இல்லை ரிலேட்டிவ் வீட்டுக்குப் போறேன் ராஜ்” என்று கூறினான்.

“ஓகே சார்..” என்று வண்டியை ஓரம் நிறுத்தியவன், “தேங்க் யூ சார்” என்று விடைபெற்றுப் புறப்பட,

அவன் முன் முகிலின் வண்டி வந்து நின்றது.

புன்னகையாய் அதில் ஏறி அமர்ந்தவன், “இறைவி எங்க இருக்கா?” என்று கேட்க,

“ம்ம்.. வர வர எப்ப ஃபோன் பண்ணாலும் இறைவி பத்தியேதான் விசாரிக்கிறீங்க.. இருக்கட்டும் இருக்கட்டும்” என்று செல்லக் கோபம் போல் கூறினான்.

அதில் சிரித்துக் கொண்ட அய்யனார், “நீ என் கண்ணு முன்னதானடா இருக்க? அதான் அவளைக் கேட்குறேன்” என்று சமாளிக்க,

“நம்புறோம்..” என்றவன், “ஒரு ஆர்டர்.. காலைலயே கிளம்பிப் போயிட்டா. இன்னும் வரலை” என்றான்.

“பாப்பா?” என்று அவன் கேட்க,

“வீட்லதான் இருக்கா” என்றவன், “பாப்பா ஸ்கூல் மாத்துறது பற்றி ஏதும் பேசினாளா?” என்று கேட்டான்.

“கால் பண்ணினா.. ஆனா எனக்குப் பேச நேரமில்லை. அதனால பிறகு பேசுறேன்னு சொல்லிட்டேன்.. இதைப் பற்றிப் பேசத்தான் கூப்பிட்டிருப்பா போல” என்று அய்யனார் கூற,

“ம்ம்.. இப்ப இந்த இயர் முடியப்போகுதுதானே.. பரீட்சை முடியும்வரை மட்டும் அட்ஜஸ்ட் பண்ணிட்டு அடுத்த வருஷம் ஸ்கூல் மாற்றலாம்னு இருக்கா. ஆனா ஸ்கூல் பட்ஜெட் தான் ரொம்ப இடிக்குது போல.. இங்கே பக்கத்துல இப்ப படிக்கிற ஸ்கூல் ஃபீஸ் ரேஞ்ல இல்லை.. கொஞ்சம் கூடத்தான் இருக்குனு யோசிக்கிறா..” என்று கூறினான்.

“ம்ம்..” என்றானே தவிர அய்யனார் ஏதும் கூறவில்லை…

“நீங்க பேசுங்க அத்தான்..” என்ற முகில், “உங்கட்டப் பேசச் சொன்னேன்.. ரொம்ப யோசிச்சா.. இரா காசு விஷயத்துல அத்தனை சீக்கிரம் கேட்டுட மாட்டா அத்தான்.. தப்பா எடுத்துக்காதீங்க அவளை..” என்க,

லேசாய் இதழ் வளைத்துப் புன்னகைத்தவன், “அவங்க என் பொண்டாட்டி மிஸ்டர் முகில்வண்ணன்.. நாங்க புரிஞ்சுப்போம்” என்றான்.

அதில் தானும் சிரித்துவிட்ட முகில், “புரிஞ்சுக்கோங்க புரிஞ்சுக்கோங்க” என்க,

வாகனம் வீட்டை அடைந்தது.

“சித்தா..”

“அப்பா..” என்று தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் இருவரும் ஓடிவர,

குழந்தைகளோடு விளையாடிக் கொண்டிருந்த மதியும், புன்னகையுடன் அவ்விடம் வந்தாள்.

இரண்டு குழந்தைகளையும், இரு கைகளிலும் தூக்கிக் கொண்ட அய்யனார், அத்தனை புன்னகையுடன் இருவருக்கும் முத்தம் வைத்து, “குட்டீஸ் சாப்டாச்சா?” என்றான்.

குழந்தைகள் இருவரும் புன்னகையாய் தலையசைக்க, “அண்ணா, உங்க கூட வேலைப் பார்க்கும் யாராவது இப்படிச் சிரிச்ச முகமா உங்களைப் பார்த்தா ஷாக் தான் ஆவாங்க போல. நியூஸ்லயோ பேப்பர்லயோ உங்களை எப்பவாவது பார்த்தா கூட, முகத்தை உர்ருனுதானே வச்சிருப்பீங்க?” என்று மதி கேட்டாள்.

“ஆமா.. நான் கூட பேப்பர்ல போட்டோ பார்த்து அம்மாவுக்குத் தந்திருக்கேன். அம்மா சீக்ரெட் சொல்லி வாங்கி வச்சுக்கிட்டாங்க” என்று சக்தி கூற,

சுற்றியிருந்த அனைவருமே வெடிச் சிரிப்புச் சிரித்தனர்.

“கேடி என்ன வேலையெல்லாம் பார்த்திருக்கா பாருங்க அத்தான்” என்று முகில் கூற,

“ம்ம்.. இன்னும் என்னவெல்லாம் இருக்குனு என் பொண்ணுகிட்டத்தான் கேட்டுக் தெரிஞ்சுக்கனும்” என்றபடி உள்ளே நுழைந்தான்.

“வாய்யா..” என்று வள்ளி அழைக்க,

“அத்தை.. பயங்கரப் பசி.. மதியமும் சாப்பிடலை. என்ன இருக்கு?” என்று உரிமையோடு கேட்டான்.

“என்ன அத்தான்? மதியமும் சாப்பிடாம என்ன பண்ணீங்க?” என்று முகில் கடிந்தபடியே, தட்டை எடுத்து வைக்க,

“அண்ணா.. நல்லவேளை நீங்க பையனா பிறந்தீங்க.. இல்லைன்னா என் முகி மாமா எனக்கில்ல” என்று அய்யனார் காதில், மதி கிசுகிசுத்தாள்.

அவள் மெல்லமாய்க் கூறிய போதிலும்கூட, முகிலுக்கு அது கேட்கவே செய்தது.

கீழிதழைக் கடித்துத் தன் சிரிப்பை அடக்கியபடி நிமிர்ந்தவன் அவளை முறைக்க,

“அஹம் அஹம்..” என்று அய்யனார் தன் குரல் செறுமினான்.

“அ..அத்தான்.. வாங்க சாப்பிடுங்க” என்று முகில் அழைக்க,

சிரித்தபடி அவன் தோளில் தட்டியவன், உணவு உண்ண அமர்ந்தான்.

அய்யனார் உணவு உண்ண அமரும்போது வானம் இருண்டு, மழைப் பெய்யத் துவங்கியிருக்க, அவனைச் சுற்றி அமர்ந்த குழந்தைகளும் அவனோடு வாய் ஓயாமல் பேசியபடியே இருந்தனர்.

சரியாக அவன் உண்டு முடிக்கும் நேரம் மின்சாரம் தடைபட்டுப்போக, “நல்லவேளை பிள்ளை சாப்பிட்டு முடிச்சான்” என்று வள்ளி கூறிக் கொண்டார்.

“தான்யாவும் தர்வி அண்ணாவும் எங்க அத்தை?” என்று அய்யனார் கேட்க,

“தர்வியோட சொந்தம் ஒருத்தர் வீட்டுப்பக்க விசேஷம்னு போயிருக்காங்கப்பா. நாளைக்குத்தான் வருவாங்க” என்று கூறினார்.

“சரி சரி.. கரென்ட் தான் இல்லையே? வாங்க வாசல்ல உக்காந்து ஏதாவது பேசலாம்” என்று மதி கூற,

அனைவருமாக வாசல் திண்ணையில் அமர்ந்தனர்.

குழந்தைகள் ஓடி விளையாடுவதும், ஆடுவதும், கதை சொல்வதுமென்று பெரியோரின் கவனத்தை ஈர்த்த வண்ணம் இருக்க, நேரம் போவது தெரியாமல் போனது.

மின்தடைபட்ட அந்தப் பொழுதினில், பெரும் ஒளியாய் அவர்கள் சந்தோஷம் மிளிர்ந்தது.

வானில் வெளிச்சமின்றி இருள் படரவும், அய்யனார் வாசல் பக்கமாக அலைபேசி ஒளியை அடித்துப் பார்ப்பதும், அலைபேசியைப் பார்ப்பதுமாக இருந்தான். அவ்வப்போது யாருக்கோ அழைப்பு விடுத்து, அழைப்பு எடுக்கப்படாமல் போவதில் மெல்லிய பதட்டம் கொண்டவனாய், அவன் தவிக்க, சின்னச் சிரிப்போடு அவனது தவிப்பை முகில் ரசித்துக் கொண்டிருந்தான்.

“என்ன எங்கண்ணாவ சைட் அடிக்கிறீங்களா?” என்று மதி கேட்க,

“இல்லை லூசு..” என்று திட்டியபடி சிரித்தவன், “அத்தான் இராக்குதான் ஃபோன் போட்டுத் தவிச்சுட்டு இருக்காரு.. இரா இன்னும் வரலையே.. அவருக்கு இருப்புக்கொள்ளலைப் பாரு. உட்காருறதும் எழுந்திரிக்குறதும், அவளுக்குக் கால் பண்றதும் மெசேஜ் பண்றதும்..” என்றான்.

மதியும் அய்யனாரைத் திரும்பிப் பார்க்க, அவன் அத்தனை தவிப்போடு நடந்து கொண்டிருந்தான்.

“நிறைவா இருக்கு மதி.. அத்தான் இராவை நல்லா பார்த்துப்பாங்கல்ல?” என்று முகில் கேட்க,

இருளில் பளபளக்கும் அவன் கண்களைப் பார்த்து, தன்னைப்போல் அவள் இதழ் இன்னும் பூவாய் விரிந்து புன்னகைத்தது.

“எப்படித் தவிக்கிறாரு பாரு மதி.. அவ சந்தோஷமா இருக்கணும் மதி.. அத்தான் அவளை நல்லா வச்சுப்பார்.. அவளும் நல்லா இருப்பா” என்று முகில் கூற,

“கண்டிப்பா மாமா” என்று உளமாரக் கூறினாள்.

அவர்களிடம் வந்த அய்யனார், “டேய்.. உன் கார் சாவி தாடா” என்க,

“வேலா..‌.. மழை பெய்யுது.. வீட்டுக்குப் போவனுமா இப்ப?” என்று வள்ளி கேட்டார்.

“இல்ல அத்தை.. இறைவியைக் கூட்டிட்டு வரப்போறேன்.. மழை ரொம்பப் பெய்யுது.‌. இருட்ட வேற செஞ்சுடுச்சுல்ல? போய்க் கூட்டிட்டு வந்துடுறேன்” என்று அய்யனார் கூற,

அவர் மென்மையாய்ப் புன்னகைத்தார்.

அய்யனாரைப் புன்னகையாய்ப் பார்த்தபடியே முகில் அமர்ந்திருக்க, “டேய்.. சாவியைத் தாடா” என்று பொறுமை இழந்தவனாய் அய்யனார் கத்திக் கேட்டான்.

சிரித்தபடி எழுந்து சென்ற முகில் சாவியை எடுத்து வந்து தர,

“அம்மாவைக் கூட்டிட்டு வரப் போறீங்களா?” என்று சக்தி கேட்டாள்.

“ஆமாடா” என்று அவன் கூற,

“நானும் வரவா?” என்று கேட்டாள்.

“வேணாம் சக்தி.. மழை பெய்யுது. பாப்பாக்கு ஒத்துக்காதுல்ல? நீ இரு அப்பா கூட்டிட்டு வரேன்” என்றுவிட்டு அய்யனார் விரைந்து சென்று வண்டியைக் கிளப்பினான்.

 

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 26

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
18
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்