Loading

விசை-27

நேரே தனது வீட்டிற்குத் திரும்பிய அய்யனார், காமாட்சியிடம் நடந்தவற்றை எல்லாம் கூறி பயமுறுத்தாமல், வேலை பளுவால் வர முடியாமல் போனதென்று கூறினான்.

குளித்து வெள்ளைச் சட்டையும் காக்கி நிறக் கால்சட்டையும் போட்டுக் கொண்டு, புறப்படவிருந்தவனை,

“கண்ணெல்லாம் இருண்டு கிடக்குதேப்பா.. செத்த தூங்கி எழுந்து போலாம்ல?” என்க,

“நான் தூங்கி எழுந்துட்டுத்தான் வரேன் ம்மா. எல்லாம் தெளிவா பிறகு சொல்றேன்” என்றவனாய், “நீங்க வெளிய எங்கேயும் போகாதீங்கம்மா. என்னைத்தவிர யார் வந்தாலும் கதவைத் திறக்க வேண்டாம். நான் வெளிய அண்ணாகிட்ட சொல்லிட்டுப் போறேன். எதுவும் வேணும்னா அவர்கிட்ட சொல்லிவிடுங்க” என்றான்.

“என்னாச்சு வேலா? ஏதும் பிரச்சினையா?” என்று பயம் கலந்த குரலில் அவர் கேட்க,

தன் மேலுதட்டைக் கடித்துக் கொண்டவன், சட்டென முகிலுக்கு அழைத்திருந்தான்.

அழைப்பை ஏற்றவன், “அத்தான்” என்று அழைக்க,

“முகில்.. ஒரு உதவிடா.. அம்மாவை வந்து கூட்டிட்டுப் போறியா?” என்றான்.

“தாராளமா வரேன் அத்தான். ஏதும் பிரச்சினையா?” என்று முகில் கேட்க,

அன்னையிடமிருந்து சற்றே நகர்ந்து சென்றவன், “கொஞ்சம்.. பாப்பாவைக் கடத்திட்டுப் போனது நான் பார்க்குற ஒரு கேஸைக் கைவிடச் சொல்லி என்னை மிரட்டத்தான். நான் இங்கேயே இருந்தால் இதை விடமாட்டேன்னுதான் டிரான்ஸ்ஃபர் வாங்கச் சொல்லியிருக்கானுங்க. அல்மோஸ்ட் குற்றவாளியை நெருங்கிட்டேன்.. ஆனா இதை முடிக்கும்வரை உங்க எல்லாரது பாதுகாப்பும் எனக்கு முக்கியம். செந்திலப்பாவையும் ஊரிலிருந்து வந்துட்டா உங்க கூடவே வச்சுக்கோங்க.. நான் ஃபோன் பண்ணும்வரை மட்டும் கொஞ்சம் எங்கேயும் போகாமல் சேஃபா இருந்துக்கோங்க” என்று கூறினான்.

அவன் குரலின் தீவிரமே, பிரச்சினையின் வீரியத்தை உணர்த்தப் போதுமானதாய் இருக்க, “நீங்க எதுக்கும் பயப்படாதீங்க அத்தான்… நாங்க எல்லாரும் இங்க பத்திரமாதான் இருக்கோம்.. நீங்க ஜாக்கிரதையா இருங்க. எல்லாம் சரியாகிடும்” என்று தனக்குத் தெரிந்த வகையில் ஆறுதல் கூறினான்.

“சரிடா.. நீ சீக்கிரம் வா” என்று அய்யனார் கூற, அடுத்த அரை மணி நேரத்தில் அங்கு வந்தவன், காமாட்சியைக் கூட்டிக் கொண்டு புறப்பட்டுவிட்டான்.

ஆழ்ந்த மூச்சை இழுத்துவிட்ட கற்குவேல் அய்யனார், தனது வண்டியை எடுத்துக் கொண்டு புறப்பட்டிருந்தான்.

அமைதியின் சொரூபமாய், ஆட்கள் நடமாட்டம் என்பதையே கண்டிராத அப்பகுதியில், உடைந்த, பழுதான சிறு குடியிருப்பின் முன் தனது வண்டியை நிறுத்தினான். சுற்றி முற்றித் தன் பார்வையைச் சுழல விட்டவன், உள்ளே செல்ல, அங்கு நாற்காலியில் கட்டப்பட்ட நிலையில், கண்ணோரமாய்க் குருதி கசிந்தோட, சோர்வின் மிகுதியோடு, அரை மயக்க நிலையில் கிடந்தார், மூர்த்தி.

அவர் அருகே காவலுக்காக அமர்ந்திருந்தான், ராஜ்!

அய்யனாரைப் பார்த்ததும் விரைந்து எழுந்த ராஜ், விரைப்பாக, சல்யூட் அடித்திட, சிறு தலையசைப்புடன், அவன் மரியாதையை ஏற்ற அய்யனார், மூர்த்தியின் முன் வந்து நின்றான்.

அவன் நினைவுகள் சில மணித் துளிகளுக்கு முன்பு ஓடியது…

தனது வண்டியில் ஏறி அமர்ந்து யோசித்தவனுக்கு, முதலில் சந்தேகம் வந்ததென்னவோ ராஜின் மீதுதான்.

சக்தியை அழைத்துச் செல்லக் காட்டியது அவனும் ராஜும் எடுத்துக் கொண்ட புகைப்படம். அதுவுமில்லாமல் சமீபகாலமாய் ராஜ் தன்னை கண்காணிப்பதைப் போன்ற உணர்வையும் உணரப்பெற்றதால், ராஜாக இருக்கவும் வாய்ப்புகள் உள்ளதே என்று எண்ணியவனாய், முதலில் ராஜ் எங்கெல்லாம் சக்தியை அடைத்து வைத்திருக்கக்கூடும் என்று அனுமானித்துத் தேடிப் பார்த்தான்.

அங்கு எங்கேயும் இல்லை என்றானதும் நேரே அவன் வீட்டிற்குச் சென்றான்.

எதுவும் நடவாததைப் போல், ராஜுக்கு அவன் அழைப்பு விடுக்க, நிசப்தமான இடத்தில் உள்ளே ஒலிக்கும் அவன் அலைபேசியின் சப்தம் நன்கு கேட்டது.

தற்போது அவனது அன்னைகூட வெளியூர் சென்றிருக்க, அவன் மட்டுமே வீட்டில் இருக்கும் நேரத்தைப் பயன்படுத்தித் தன் மகளைக் கடத்தியுள்ளதாக நினைத்துக் கொண்டான்.

முன் பரிசோதனைக்காக ராஜின் அலைபேசி இலக்கங்களை கதிருக்கு அனுப்பிவைத்துக் காத்திருக்க, அழைப்பு ஏற்கப்பட்டதும், “சார்.. என்னாச்சு சார்? ஏதும் பிரச்சினையா?” என்று ராஜ் கேட்டான்.

“ஆமா ராஜ்.. கொஞ்சம் பிரச்சினை. என் பொண்ணைக் காணும்” என்று அய்யனார் கூற,

“சார்? புரியலை சார்? உங்க பொண்ணா?” என்று புரியாது வினவினான்.

“ஆமா ராஜ்.. என் பொண்ணுதான். காணும்” என்று அய்யனார் கூற,

“உங்களுக்கு பொண்ணா?” என்றவன், “சார்.. எப்போருந்து காணும்? நீங்க எங்க இருக்கீங்க?” என்றபடி வீட்டு வாசலுக்கு வந்தான்.

அவன் முகத்தில் உண்மையான பதட்டம், அய்யனார் முகத்தில் அதை நம்பாத பாவனை.

அய்யனாரைக் கண்டதும், “சார்?” என்று ராஜ் தேங்கி நிற்க,

அவனை அளவெடுக்கும் பார்வை பார்த்தபடியே நின்றான்.

“சார்? என்னாச்சு சார்?” என்று அவன் சுத்தமாக ஒன்றும் புரியாது விழிக்க, உள்ளே சென்றவன், அவன் வீட்டின் மின் விளக்குகளை ஒளிரச் செய்தான்.

சுற்றிலும் தன் பார்வையைச் சுழற்றிய அய்யனார், “எங்கிருந்தீங்க ராஜ் இன்னிக்கு?” என்க,

ராஜ் அய்யனாரை சந்தேகமாய்ப் பார்த்தான்.

“சார்?” என்று அவன் இழுக்க,

“சொல்லுங்க” என்றான்.

“ஸ்டேஷன்லதான்” என்றவன் கரம் பின்னே மேஜைக்குச் செல்ல,

அதை நொடியில் உணர்ந்து, அவனை இழுத்துக் கீழே தள்ளிய அய்யனார், அவன் கரங்களைப் பின்புறமாய் இறுக்கிப் பிடித்துக் கொள்ள,

“ஆ.. நான் சந்தேகப்பட்டது சரிதான் அப்ப. நீங்கதான் அந்த டைரக்டரோட ஆளா?” என்று ராஜ் கேட்டான்.

அவன் கூற்றில் புருவங்கள் சுருக்கிய அய்யனார், “என்ன உளறுற?” என்று கேட்க,

“டைரக்டர் அன்புராஜுக்குக் காவல்துறையில் ஆள் இருக்குனு சந்தேகம் இருந்தது. இப்பதான் உறுதியாகிடுச்சே.. என் உயிரே போனாலும் உன்னைக் காட்டிக் கொடுக்காம விடமாட்டேன்” என்று ராஜ் கத்தினான்.

கதிரிடமிருந்து அய்யனாருக்கு அழைப்பு வர,

ஒரு கையால் ராஜின் கரங்களை அழுந்தப் பிடித்துக் கொண்டு அழைப்பை ஏற்றவன், “கதிர்?” என்க,

“நீ அனுப்பின நம்பர் இன்னிக்கு நாள் பூராவும் உன் ஸ்டேஷன்லதான் இருந்துருக்கு. இப்ப சரியா நீயிருக்கும் லொகேஷன்லதான் இருக்கு. இன்னிக்கு பெருசா எந்த இன்கமிங்கும் இல்லை அவுட்கோயிங்கும் இல்லை. சந்தேகத்தின் அடிப்படையில் எந்த தகவல் பரிமாற்றமும் இல்லை” என்று கதிர் கூறினான்.

புருவங்கள் சுருக்கிய அய்யனார், அழைப்பைத் துண்டித்துவிட்டு ராஜை நிமிர்த்தி, “என்ன பேசுற நீ?” என்று கேட்டான்.

“நடிக்காதடா” என்று ராஜ் கூற,

இவனுக்குத் தலையைப் பிய்த்துக்கொள்வதைப் போல் இருந்தது.

“டேய்.. என்னன்னு சொல்லித் தொலை” என்று ஆத்திரம் பொறுக்காமல் அவன் கூற,

“அந்த டைரக்டர் அன்புராஜ் பற்றி விசாரிச்சப்ப அவனோட அடியாள் ஒருத்தன் குடிபோதைல போலீஸ்ல அன்புராஜுக்கு ஆள் இருக்கு, ஸ்டேஷன்ல என்ன நடந்தாலும் தெரியவந்துடும்னு சொன்னான். மறுநாளே நான் என் கஸ்டடில அரெஸ்ட் பண்ணி வச்சிருந்தவனை வெளிய விட்டது மட்டுமில்லாம அன்புராஜ் மேல வர வர சந்தேகம் தேயுதுனு நீங்க சொன்னீங்க. அதான் உங்களை நோட்டம் விட ஆரம்பிச்சேன்” என்று குழப்பமாய் ராஜ் கூறினான்.

புருவங்கள் முடிச்சிட, தன் பிடியைத் தளர்த்திவிட்டு அமர்ந்தவன், அப்படியே தன் தலையைத் தாங்கிக் கொள்ள, ராஜ் மிகுந்த குழப்பத்தோடு அய்யனாரைப் பார்த்தான்.

நிமிடங்கள் கடந்தும் அய்யனாரின் நிலையில் மாற்றம் இல்லாமல் போக, சற்றே தயங்கி, தடுமாறிய ராஜ், “சார்?” என்று அவன் தோள் தொட்டான்.

“நிஜமாவே என் பொண்ணைக் காணும் ராஜ்” என்று அவன் கண் பார்த்துக் கூறியவன் கண்கள் சிவந்திருக்க,

ராஜ் தனது சந்தேகம் தவறோ? என்று சிந்திக்கலானான்.

“அ..அப்ப டைரக்டர்..” என்று அவன் யோசனையில் மூழ்க,

இங்கு அய்யனாரின் முகமும் யோசனையைத் தத்தெடுத்தது.

சில நிமிட யோசனைக்குப் பின், இருவருமே ஒன்று போல, “மூர்த்தி சார்” என்று அதிர்வாய்க் கூறி, ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள,

தங்களின் எண்ண ஓட்டம் சரியா என்பதை ஆராய, மூர்த்தியின் அலைபேசி இலக்கங்களை கதிருக்கு அனுப்பி வைத்துக் காத்திருந்தான், அய்யனார்.

“வேலு.. நீ அனுப்பின நம்பரோட கால் ஹிஸ்டரியை செக் பண்ணினேன். நீ சொன்ன போலவே டைரக்டர் அன்புராஜோட பர்ஸனல் நம்பரிலிருந்து அடிக்கடி கால்ஸ் வந்து போனதா இருக்கு. கால் ரெக்கார்ட்ஸ் எடுக்கக் கொஞ்சம் நேரமாகும்..” என்று கதிர் கூற,

“நீ ப்ரொசீட் பண்ணு கதிர். நான் பார்த்துக்கிறேன்” என்றவன், “இப்ப அந்த நம்பருக்கான லொகேஷன் எங்கன்னு பார்த்து அனுப்பு” என்றான்.

மூர்த்தியின் தற்போதைய இருப்பிடம், அவரது வீடல்லாது, வேறேதோ புது இடமாய்த் தெரிய,

வேங்கையாய் வெளியேறினான்.

“சார்.. நானும் வரேன்” என்று ராஜ் தானே முன்வர,

அவனையும் அழைத்துக் கொண்டு, மூர்த்தி இருக்கும் இருப்பிடம் நோக்கிச் சென்றான்.

அந்த ஆள் நடமாட்டத்தையே கண்டிடாத சாலையில், கடைகளுக்கு நடுவே ஒற்றை வீடாய் தனியே இருக்கும் வீட்டின் இருப்பிடத்தை அலைபேசி காட்ட, வண்டியை ஓரம் கட்டியவன், ராஜுடன் சேர்ந்து, அமைதியாய் அவ்வீட்டை நெருங்கினான்.

இருவரும் எவ்வித சப்தமும் எழுப்பாமல், வீட்டைச் சுற்றிப் பார்க்க, எவ்வித ஓசையும் இன்றி, மிகுந்த அமைதியோடு காணப்பட்டது.

வீட்டிற்குள் செல்ல ஏதும் வழியிருக்குமா? என்பதை இருளின் துணையோடு, வெகு சிரமப்பட்டு இருவரும் தேட, அதன் பயனாய், கம்பிகள் கொண்டு தடைபட்ட சாளரத்தின் கதவு திறந்திருப்பது தெரிந்தது.

உள்ளே அறையில் மின் விசிறி இல்லாதிருக்க, காற்றுக்காக ஜன்னல் கதவுகள் திறக்கப்பட்டிருப்பதைப் புரிந்துகொண்டனர்.

அதன் வழியாக ராஜும் அய்யனாரும் எட்டிப் பார்க்க, நாற்காலியில் அமர்ந்த நிலையிலேயே உறங்கிக் கொண்டிருக்கும் சக்தியும், கட்டிலில் படுத்திருக்கும் மூர்த்தியும் இரவு விளக்கின் மங்கிய வெளிச்சத்தில் தெரிந்தனர்.

வேறு யாரும் உள்ளனரா? என்று பார்வையிட்டவர்களுக்கு, மூர்த்தி மட்டும் இருப்பதாகவே பட்டது.

“குழந்தை தூங்குறாளா மயக்கத்தில் இருக்காளா தெரியலையே சார்? எப்படி உள்ள போறது?” என்று ராஜ் மெல்லிய குரலில் கேட்க,

சுற்றி முற்றிப் பார்த்த அய்யனார், ‘மாடிக்குப் போய்ப் பார்க்கலாம்’ என்று சைகை செய்தான்.

அதன்படி, குழாயைப் பிடித்து ஏறி, இருவரும் மாடிக்குச் செல்ல, தகரக் கதவு ஒன்று, வீட்டிற்குள் செல்லும் பாதையை மறைத்திருந்தது.

அலைபேசி வெளிச்சத்தின் மூலம் கதவை ஆராய்ந்தவன், தனது கால்சட்டைப் பையிலிருந்து, ஒரு சின்ன அட்டையை எடுத்து, கதவு இடுக்கில் கொடுத்து, தாழ்ப்பாளை மேலே தூக்கி, லாவகமாய்க் கதவைத் திறந்திருந்தான்.

ராஜ் மற்றும் அய்யனார், ஓசையற்ற அடிகள் வைத்து, உள்ளே செல்ல, மூர்த்தியைத் தவிர வேறு யாரும் அங்கிருக்கவில்லை.

“ராஜ்.. குழந்தையைத் தூக்கிட்டு நீங்க போங்க” என்று அய்யனார் மெல்லமாய்க் கூற,

“சார் நீங்க?” என்றான்.

“பாப்பா முக்கியம் ராஜ்.. நீங்க போங்க” என்றவன், ராஜ் சக்தியைத் தூக்கிக் கொண்டு வெளியே சென்றதும், கைக்கு அகப்பட்ட ஒரு எஃகு போத்தலை எடுத்துக் கொண்டு, “மிஸ்டர் மூர்த்தி” என்று உரக்க அழைத்தான்.

உறக்கத்திலும் கூட, அவனது உறுமும் கர்ஜனைக்கு அஞ்சி, மூர்த்தி பதறி எழ, அவர் காதோரமாய், அந்தப் போத்தலை வைத்து ஓங்கி அடித்து, அவரை மயக்கமடையச் செய்திருந்தான்.

மயக்கமான மூர்த்தியை இழுத்துக் கொண்டு வந்தவன், ராஜை அழைக்க, இருவருமாகச் சேர்ந்து, மூர்த்தியை, தங்கள் இருசக்கர வாகனத்திலேயே, இருவருக்கும் இடையே அமரத்திக்கொண்டு, குழந்தையையும் முன்னே படுக்க வைத்துக் கொண்டு புறப்பட்டனர்.

தங்கள் இருப்பிடத்தில், மூர்த்தியைக் கட்டிப் போட்டுவிட்டு, ராஜை பாதுகாப்பிற்கு அமர்த்தியவன், குழந்தையை முதலில் மருத்துவமனை அழைத்துச் சென்று அவளது நலன்களை உறுதி செய்துக் கொண்டான்‌. அதன் பின் நேராகக் குழந்தையை இறைவியிடம் பத்திரமாய் ஒப்படைத்துவிட்டு, இதோ மீண்டும் வந்திருந்தான்…

“என்ன மிஸ்டர் மூர்த்தி.. எப்படி நம்ம மேல சந்தேகம் வந்ததுனு தானே யோசிக்கிறீங்க?” என்று அய்யனார் வெகு நக்கலாய்க் கேட்க, மூர்த்திக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது.

“எல்லாமே பக்காவா தான் மூர்த்தி செஞ்சீங்க. ஆனா ஒரு விஷயத்துல கோட்டை விட்டுட்டீங்க” என்று அய்யனார் கூற,

“ரெண்டு விஷயத்துல சார்” என்று ராஜ் கூறினான்.

“அட ஆமாம்ல ராஜ்? ரெண்டு விஷயத்துல கோட்டை விட்டுட்டார்” என்று நக்கலாகக் கூறிய அய்யனார், மூர்த்தியை நோக்க,

பயத்தில் வரண்ட தன் தொண்டைக்குள் சிரமப்பட்டு எச்சிலை விழுங்கினான், மூர்த்தி.

“முதல் விஷயம், டைரக்டர் அன்புராஜோட அடியாள்னு நான் கூட்டிட்டு வந்து அடைச்சு வச்சவனை, என் பர்மிஷன் இல்லாம அனுப்பினதோட, நான் அவனைப் பற்றி சார்கிட்ட சொல்லும் முன்னவே, சார் தான் அவனை ரிலீஸ் பண்ணச் சொன்னதா சொல்லி, என் சந்தேகத்தை, வேலு சார் பக்கம் திருப்பினது” என்று ராஜ் கூற,

“ரெண்டாவது ரொம்ப சிம்பிள் தான் மூர்த்தி… இந்த கேஸை நாங்க யாருக்கும் தெரியாமல் ஹேண்டில் பண்றோம்னு தெரிந்த ஒரே காவல் அதிகாரி நீங்க தான்… அப்ப டைரக்டர் அன்புராஜுக்குக் காவலதிகாரி துணையா இருக்கார்னா அது நீங்களாதானே இருக்கணும்?” என்று கற்குவேல் அய்யனார் கூறினான்.

ராஜ் மற்றும் அய்யனாருக்கு ஒருவர் மீது ஒருவர் சந்தேகம் வரும்படி வேலைப் பார்த்தும், இத்தனை நுணுக்கமாக இருவரும் யோசித்துத் தன்னைப் பிடிப்பர் என்று எதிர்பார்த்திடாத மூர்த்தி, பயத்தில் முகம் வெளுத்து விழித்தான்.

“அதுமட்டுமில்ல.. சாரும் நானும் இருப்பதைப் போன்ற அந்த ஃபோட்டோ எடுக்கப்பட்டது கூட உங்க ஃபோன்ல தான்” என்று ராஜ் கூற,

“ரொம்பச் சின்னச் சின்ன விஷயத்துல கோட்டை விட்டுட்டீங்களே மிஸ்டர் மூர்த்தி” என்று அய்யனார் உச்சுக் கொட்டினான்.

“ச.. சார்.. நான்.. நான்” என்று மூர்த்தி தடுமாற,

“தெரியாமல் பண்ணிட்டேன்னு சாக்கு சொல்லப் போறீங்களா மூர்த்தி?” என்று கேட்ட அய்யனார், “வயதுக்கும், உங்க உடம்புல ஒட்டியிருக்கும் காக்கிக்கும் மட்டும்தான் மரியாதை கொடுத்து இப்ப வரப் பேசிட்டு இருக்கேன்.. ஆனா உடுத்தியிருக்கிற காக்கிக்கான மரியாதையையே கெடுத்துட்டு உட்கார்ந்திருக்கீங்க நீங்க.. வெளிய தெரிஞ்சா டிபார்ட்மெண்டுக்கே அசிங்கம்” என்று கர்ஜனையாய்க் கூறினான்.

பயத்தில் மூர்த்திக்கும் கண்ணெல்லாம் கலங்கிவிட,

“மரியாதையா சொல்லுங்க.. இதையெல்லாம் செய்யுறது டைரக்டர் அன்புராஜ் மட்டும்தானா? இதுல யாரெல்லாம் அவருக்கு உடந்தை?” என்று கேட்டான்.

“சார்..” என்று மூர்த்தி தடுமாற,

“சொல்லிடுங்க மூர்த்தி சார்.. போலீஸ் விசாரணை எப்படியானதுன்னு உங்களுக்கே தெரியும்” என்று ராஜ் மிரட்டலில் இறங்கினான்.

பயத்தோடு எச்சில் கூட்டி விழுங்கிய மூர்த்தி, உண்மையை கூறிவிட, காவலர்கள் இருவரும் அதிர்ந்துபோய் அவனைப் பார்த்தனர்.

 

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 27

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
19
+1
1
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்