Loading

விசை-26

ஆழ்ந்த உறக்கத்திலிருந்து மெல்ல மெல்ல துயில் கலைந்தனர், இறைவி மற்றும் அய்யனார்.

இருவருக்கும் இடையே சக்தீஸ்வரி பாதுகாப்பாய் உறங்கிக் கொண்டிருக்க, இருவரின் கரங்களும் அவளை அரவணைத்திருந்தன.

தன் ஒரு கரத்தை இருவருக்கும் தலையணையாக்கியிருந்த அய்யனார், மற்றைய கரத்தால் இருவரையும் தன்னோடு சேர்த்து அணைந்திருந்தான்.

மெல்ல கண் விழித்த இறைவி, உறங்கும் மகளையே வைத்த விழி எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

குழந்தையின் மூச்சுக்காற்று அவள் மார்போடு மோதி, அவளது இருப்பை உணர்த்துவதில், மனதோடு நிம்மதி உருவாகுவதை அவளால் உணர முடிந்தது. விழியில் மெல்லிய நீர் கோர்த்துக் கொள்ள, அவள் இல்லாத அந்த ஒரு நாளின் சூனியம் தன்னை எத்தனை பாதித்துவிட்டது என்பதை உணர்த்தாள்.

சக்தி அவள் மணிவயிற்றில் உதித்ததால் தான் அவள் வாழ்வே தடம் மாறியது… அவள் பெற்றோரால் வெறுக்கப்பட்டு, அவமானப்பட்டு, சுற்றத்தாரால் தினம் தினம் வதைபட்டுக்கொண்டும் இருக்கின்றாள். ஆனால் அவள் அளவில் சக்தியால் மட்டுமே அவள் வாழ்வு வசந்தம் பூசியதென்பதல்லவா? இல்லையெனில் ஏதேனும் ஒரு பொய்யைக் கூறி முதியவனுக்கோ, குடிகாரனுக்கோ தன்னைக் கல்யாணம் செய்து வைத்திருப்பர் தனது பெற்றோர் என்பது திண்ணம் எனக் கருதுவாள்…

சக்தீஸ்வரி அவள் வாழ்வின் வெளிச்சம், பிடிமானம்… அதை அவள் இல்லாத அந்த ஒரு நாள், அத்தனைக் கொடூரமாய் விளக்கியிருப்பதை உணர்ந்து வலி மின்னக் கண்ணீர் சிந்தினாள்.

கதகதப்பான ஒரு கரம், அவள் கன்னத்தின் ஈரத்தை மென்மையாய் துடைத்துவிட, பார்வையை சட்டென உயர்த்தினாள்.

அவளையே ஆழ்ந்த பார்வையோடு பார்த்துக் கொண்டிருந்தான், கற்குவேல் அய்யனார்.

கண்ணீர் மேலும் கோர்த்துக் கொள்ள, இதழ் துடிக்க,

“ர..ரொம்ப பயந்துட்டேன்” என்று மென்மையானக் குரலில் அவள் கூற,

“நீங்க ரெண்டு பேரும் பாதுகாப்பாதான் இருக்கீங்க” என்று தனது அடர்ந்த குரலில் கூறினான்.

அந்த வார்த்தைகள்…

அதில் அவளுக்கு அழுகையே வந்துவிட்டது.

சட்டென எழுந்து அவனுக்குப் புறம் காட்டி அமர்ந்தவள், தன் அழுகையால் மகள் உறக்கம் கலைந்திடாதிருக்க வாய் பொத்தி, உடல் குலுங்கி அழுதாள்.

அழுகையில் குலுங்கும் அவள் உடலைப் பார்த்துவிட்டு நிமிர்ந்து படுத்தவன், கண்களை மூடி ஆழ்ந்த மூச்சை வெளியேற்றிவிட்டு எழுந்து அமர்ந்தான்.

கால்களைக் கீழே பதித்து, தன் காலடியோசையின் அமைதியின் அழுத்தம்கூட, தன் மகள் உறக்கம் கலைத்திடக் கூடாதென்ற நோக்கத்தோடு அடிவைத்து, மறுபுறம் வந்து அவள் அருகே அமர்ந்தான்.

அவள் தோள் சுற்றிக் கரமிட்டு அவளைத் தன் மார்போடு சேர்த்துக்கொள்ள,

அவன் சட்டைக் காலரைப் பற்றிக் கொண்டு, மௌனமாய் அழுது கரைந்தாள்‌.

அவளுக்குத் தட்டிக் கொடுத்துக்கொண்டே இருந்தான். அவள் மனதின் பாரம் தீரும்வரை காத்திருந்தான்.

பெருவெள்ளம், மழையாகி, மழை தூறலாகி தணிந்துபோன பின்பு அவள் தாடையோரம் கரம் கொடுத்து, முகம் பற்றி நிமிர்த்தினான்.

வீங்கி சிவந்திருந்த அவள் முகத்தை ஆழ்ந்து பார்த்தவன், “எல்லாம் சரியாயிடுச்சு.. பாப்பா கிடைச்சுட்டா.. நடந்ததையே நினைச்சு வருந்தாம, ஆக வேண்டியதைப் பார்ப்போம்” என்றான்.

‘ஆக வேண்டியது’ என்றதும் அவள் மனதில் ஒரு பயம் தோன்றியது. தன்னிச்சையாய் அவள் உடல் நடுநடுங்க, அவனைப் பார்த்து, மருண்ட விழிகளில் நீர் தழும்ப,

“பா..பாப்பாக்கு.. ஒ..ஒன்னும் ஆகலைதான?” என்று கேட்டாள்.

அவளையே அமைதியாய் அவன் நோக்க, அவன் அமைதி, அவளை பயம் கொள்ளச் செய்தது.

சட்டென மகளை ஆராய வேண்டி, அவள் திரும்ப முற்பட, அவளைத் திரும்ப விடாது பிடித்துக் கொண்டான்.

தனது பதினைந்தாம் வயதில் தனக்கு நடந்த கொடுமைகள் எல்லாம் மனதில் ஊர்வலம் வந்து, மகளுக்கு அப்படி ஒரு நிலை வந்துவிடவே கூடாதென்று மிரட்டியது… முதன்முறை அத்தனை நடுக்கத்தை அவளில் உணர்ந்தவன் மனம், அவள் தேகத்திற்கு இணையாய் நடுங்கியது…

“எ..ஏங்க” என்று அவள் தடுமாற,

“ஒன்னுமாகலைடி” என்றான்.

‘ஹப்பா..’ என்ற பெருமூச்சோடு தலை சாய்ந்தாள்‌…

அவளிடம் பெருமூச்சும், ஆசுவாசமும் கொடுக்கும் கண்ணீர் அதிகமாய்…

அவள் உடலில் இன்னும் ஓடிக் கொண்டிருந்த நடுக்கம் அவனை வருத்தியது…

“ம்மா.. இறைவி” என்று மென்மையாய் அவன் அழைக்க,

அவனை நிமிர்ந்து பார்த்தவள்,

“பயமாருக்குங்க.. என்ன என்னவோலாம் தோனுது‌‌.. நா.. நான் கோலையாகிட்டேனா?” என்று கேட்டாள்‌‌.

அவள் குரலில் தான் எத்தனை தடுமாற்றம்?

“ஏன்டா? ஏன் இப்படிலாம் யோசிக்குற?” என்று அவன் மென்மையாய் கேட்க,

“எவ்ளோ அழவச்சுட்டா உங்க பொண்ணு” என்று அவன் மார்பில் குத்தியவள், “அவ இல்லைனா வாழ்க்கையே இல்லைங்குற அளவுக்கு மயக்கி வச்சுருக்கா… ரொம்ப அழ வைக்குறா.. பயமா இருக்கு.. எ..எதாவதுனா.. நா.. நான் எப்டி தாங்குவேன்? அ..அவளுக்கு எதும் இல்லை தானே? எ..என்கிட்ட உண்மைதானே சொல்றீங்க? நா.. நான் அ..அந்த வயசுல.. அந்த கொடுமை.. அது.. அது என் மகளுக்கு இல்லைதான?” என்கையில் அவள் உடல் ஏகத்துக்கும் வெடவெடத்தது.

மார்கழி மாதப் பனியில், நனைந்து, குளிரில் நடுநடுங்கும் கோழிக்குஞ்சைப் போல் காணப்பெற்றாள்.

அவளை இறுக அணைத்துப் பிடித்தபடி அவளைப் பார்த்தவன் கண்களில், அவள் நிலைகண்டு வலி பெருகியது.

“உம்மேல சத்தியமா எதுவுமில்லடி” என்று அவன் கூற,

அவன் கழுத்தடியில் முகம் புதைத்து, “கோலையாகிட்டேனோனு பயமாருக்குங்க” என்றாள்‌.

அவள் தலையை கோதி கொடுத்தபடியே,

“அழுறதால யாரும் கோலையாகிட மாட்டாங்க இறைமா.. நானும் அழுதேன், அழுறேன்.. நான் கொலையாகிட்டேனா? அழுகை வலியை குறைக்க நமக்கு ஆண்டவனா பார்த்துக் குடுத்த மருந்து.. வலிச்சா உலக உயிர்கள் எல்லாம் அழத்தான் செய்யும்.. அழுதாதான் நாம உயிரோட, உயிர்ப்போட இருக்கோம்னு அர்த்தம்… எல்லா நேரமும் தைரியமா இருக்கனும் தான்.. அதுக்காக அழுதா அந்த தைரியம் இல்லாம போயிடும்னு இல்லைடா.. என் இறைவி என்னிக்குமே தைரியசாலிதான்… அத்தனைக்குப் பிறகும் எனக்கு ஆறுதல் சொல்லி அனுப்பினியேடி.. நீ குடுத்த தைரியம் தானே நம்ம புள்ளையைக் கண்டுபிடிக்கவே வச்சுது?” என்று கேட்க,

அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

அவள் முகத்தை ஆழ்ந்து பார்த்து, இடவலமாய்த் தலையசைத்து அவள் கண்ணீர் துடைத்தவன்,

“போதும் போதுங்குற அளவு அழுதுட்டடா. எல்லாமே முடிஞ்சும் போச்சு. நம்ம புள்ளையும் நம்ம கை சேர்ந்துட்டா, பத்திரமா.. எல்லாம் கெட்ட கனவா நினைச்சு கடந்துவா” என்று கூற,

அவனையே இமைக்காமல் பார்த்தாள்.

“அவ்ளோ சீக்கிரம் மறக்க முடியும்னு தோனலை” என்று அவள் கூற,

அவன் பார்வை அவளில் நிலைத்தது.

ஈரம் பூசிய விழிகளும், இளஞ்சிவப்பு இதழ்களும், அழுது கலைத்துப் போன நிலையில் துடித்துக் கொண்டிருந்தன.

அவள் துடிப்பை உணரப்பெற்றவனாய் நோக்கியவன், என்ன நினைத்தானோ? மெல்ல அவள் இதழ் நோக்கிக் குனிந்தான்…

அவள் இமைக் குடைகள் தாமாய் மூடிக் கொள்ள, மென்மையினும் மென்மையாய், அவள் இதழ் பூட்டிக் கொண்டான்.

ஆழ்ந்த, அமைதியான இதழ் சங்கமம்… முதல் சங்கமம்…

மனம் கொண்டவன், மனம் கனிந்து, அவள் மனநிம்மதியை நிலைநாட்ட, ஆழமாய்ப் பூட்டிக் கொண்ட பந்தமது, அவள் மனதில் நிம்மதியோடு, இதமும் சுகமும் சேர்த்துப் பயிரிட்டு, பாசனமிட, அவள் கரங்கள் தாமாய் எழுந்து, அவன் சிகையோடு கோர்த்துக் கொண்டன.

அவளுக்காகத் துவங்கி, தன் உணர்வுகளின் போராட்டத்தில், தனக்காகத் தொடர்ந்தவன், அவளுக்காகவே அவனாய் முடித்து வைத்தான்…

அவன் கொடுத்த உணர்வை முழுதாய் உணரப்பெற்று, உணர்வுகளின் பிடியிலிருந்து வெளிவர வழியறியாமல், அவள் அவன்மீதே சாய, அவளை மெல்லத் தட்டிக் கொடுத்து, தன்னோடு அணைத்துக் கொண்டான்.

மெல்லிய பெருமூச்சுக்களுக்குப் பின் விழி திறந்தவள், பின்பு தான் சுயம் உணர்ந்து திடுக்கிட்டு அவனை நோக்க, அவன் இதழில் குறும்பின் மிச்சங்கள்…

நாணம் அழையா விருந்தாளியாய் அவள் கன்னங்களில் குடிபுகுந்துக்கொள்ள, அவன் அரவணைப்பு, அவளைக் குறுகுறுக்கச் செய்தது.

‘என்ன பண்ணி வச்சுருக்கோம்?’ என்று அவள் மூளை இடித்துறைத்த செய்தியில், உள்ளுக்குள் என்னவோபோல் ஆனது…

வெட்கமா? நாணமா? அச்சமா? அவளால் அறியவும் முடியவில்லை… புது உணர்வுகளின் போராட்டம் அவளுள்.

“ஓய்..” என்று அவன் அழைக்க, அவள் நிமிர்ந்தாள் இல்லை.

“சாரி…” என்று மென்மையாய் அவன் கூற,

அவளுக்கு ‘அச்சோ’ என்றானது.

சிரம் தாழ்த்திக் கொண்டு நகர முற்பட்டவளை விடாது பிடித்துக் கொண்டவன், “ஓய்.. என்னைப் பாரு” என்க,

“ப்ளீஸ்..” என்றாள்.

“ம்ஹும்.. பாரு” என்று அவன் கூற, 

வெகு பிரயத்தனப்பட்டு அவன் விழி சந்தித்தாள்.

“என்னடா? மறத்துடுச்சா இப்ப?” என்று சிரித்தேவிட்டான். 

“அ..ஆங்?” என்று தடுமாறியவள், “விடுங்க” என்க,

“கேட்கலை” என்று வம்பு செய்தான்.

“இ..இப்புடி பண்ணாதீங்க.. நான் சின்னப்..” என்று சொல்ல வந்தவள், சற்றுமுன் செய்த காரியத்தில் தன் வாயை மூடிக்கொள்ள, 

அதில் பக்கென்று சிரித்துவிட்டவன்,

“சின்ன? என்னதுமா? என்னமோ சொல்ல வந்தபோல இருக்கு?” என்று கேலி செய்தான்.

“ப்ச்.. விடுங்களேன்..” என்று அவள் கெஞ்சலாய் கேட்க,

“சின்ன பொண்ணுதான்” என்று அவள் நெற்றி முட்டி, அவளை விட்டு எழுந்தான்.

மகளைத் திரும்பிப் பார்த்தவள், அவள் இன்னும் உறக்கத்தில் இருப்பது கண்டு பெருமூச்சு விட்டுக்கொண்டு தூக்கிக் கொண்டாள்.

“தூங்கட்டும்மா” என்று அவன் கூற,

“எம்மடில படுத்துக்கட்டும்” என்றவளாய், மடியில் போட்டுக்கொண்டாள்.

“யாரு கூட்டிடுப் போனாங்க?” என்று அவள் கேட்க,

மகளை அவள் மீது வாகாய்ப் படுக்க வைக்க உதவியபடியே, “நான் ஒரு கேஸ் ஹான்டில் பண்றேன். அது சம்பந்தமானவங்கதான்.. பாப்பாவை வச்சு ப்ளாக் மெயில் பண்ண பார்த்திருக்கானுங்க ராஸ்கல்ஸ்” என்று உஷ்ணமாய் கூறினான்.

“இப்படிலாம் நடக்குமா நிஜத்துலயும்?” என்று பயம் பூசிய அஞ்சன விழிகளோடு அவள் கேட்க,

“நடக்கும்.. ஆனா எனக்கும் இதுதான் முதல் முறை” என்றான்.

சிரம் தாழ்த்தி அவள் மகளை நோக்க, “இதுதான் கடைசியாவும் இருக்கும்… பயப்படாத.. நான் இருக்கேன்” எனக் கூறி, அவள் தலை கோதி, மகள் நெற்றியில் முத்தமிட்டு குளியலறைக்குள் சென்றான்.

ஆழ்ந்து மூச்சை இழுத்துவிட்டவள், அப்படியே சாய்ந்து அமர்ந்தாள்.

நேரம் என்ற ஒன்றே இல்லாததைப் போல், அனைத்தும் மறந்தவளாய் மகளையே பார்த்தாள்.

மகளின் தலை கோதி, முகம் வருடியவள், அவள் கன்னத்தில் முத்தமிட்டு வாசம் பிடித்தாள். மகளின் பிரத்யேக மணம், அவள் நுரையீரலெங்கும் நிறைந்து, இதழில் தன்னிச்சையாய் புன்னகை மலரச் செய்ய, அவளவன் குளியலறை கதவில் சாய்ந்து, கரங்களை மார்பிற்குக் குறுக்கே கட்டிய வண்ணம், அவளைப் புன்னகையும் ரசனையுமாய் பார்த்தான்.

குழந்தையானவள் முகத்தில் தாய்மையின் சொரூபம், அவளைத் தெய்வீகமாய்க் காட்சிப்படுத்தியது.

‘அள்ளித் தின்னும் அழகுராணி’ என்று மனதோடு செல்லம் கொஞ்சியவனாய் வந்தவன், அலமாரியைத் திறந்து, அதிலிருந்த முகிலின் ஒருசில உடைகளில் ஒரு சட்டையை எடுத்து அணிய, அவன் அரவத்தில் திரும்பிப் பார்த்தவள் திடுக்கிட்டுத் திரும்பிக் கொண்டாள்.

அதில் முகத்தில் புன்னகை மலர, அதனை இதழ் மடித்து அடக்கியவனாய், உடை மாற்றி, வேட்டையைக் கட்டிக் கொண்டு அவள் முன் வந்தான்.

“ஏன் இப்படிலாம் பண்றீங்க? நமக்கு ஒன்னும் கல்யாணம் ஆகிடலை.. இப்படிலாம் பண்ணாதீங்க” என்று தரையைப் பார்த்தபடியே அவள் கூற,

“என்ன பண்ணேனாம்?” என்று கேட்டான்.

“ப்ச்..” என்றவள், “சொல்லிருந்தா நான் வெளிய போயிருப்பேன்ல?” என்க, 

லேசாய்ச் சிரித்தபடி கண்ணாடியில் பார்த்துத் தன் சிகை கோதியவன்,

“எதுக்கு போகனும்?” என்றான்.

“எ..எதுக்குனா..” என்று வேகமாய் வந்தவளுக்குக் காரணம் சொல்ல வரவில்லை.

“போகனும்” என்று அவள் கூறி முகத்தை வெட்டிக் கொள்ள,

அவள் புறம் திரும்பி, மண்டியிட்டு அமர்ந்தவன், தன் நெஞ்சில் கரம் வைத்து,

“இங்க நீ இருக்க. என்னவளா, எனக்கானவளா இருக்க.. அந்த உரிமை போதும் எனக்கு..” என்று ஆழ்ந்து அனுபவித்தக் குரலில் கூற,

அவள் ஆச்சரியமாய் அவனைப் பார்த்தாள்.

“வேணும்னா நீயும்கூட மாத்திக்கோ. நான் எதும் நினைச்சுக்க மாட்டேன்” என்று அடுத்த நொடியே அவன் குறும்புக்குத் தாவி விட,

அரண்டு விழித்தவள் முகம் அஷ்டகோணலாய் மாறியது.

அதில் துயரெல்லாம் மறந்து அவன் வாய்விட்டுச் சிரித்துவிட, சக்தி துயில் கலைந்தாள்.

தாயின் மடியில் பாதுகாப்பாய்ப் படுத்திருந்தவள் உறக்கம் கலைந்து புரண்டு படுக்க, ஆச்சரியத்திலிருந்த இறைவியும், சிரித்துக் கொண்டிருந்த அய்யனாரும் அதைக் கவனிக்கவில்லை.

அவனது தொடர் சிரிப்பலையில் எழுந்து அமர்ந்திட்ட சக்தி,

“போலீஸ் சார்” என்று மெல்லிய குரலில் அழைக்க,

அப்போதுதான் தன் சிரிப்பை நிறுத்தி, ‘அச்சுச்சோ’ என்று மனதோடு சொல்லிக் கொண்டவனாய்,

“பாப்புமா” என்று குழந்தையவளைத் தூக்கிக் கொண்டான்.

“போலீஸ் சார்” என்று அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு சாய்ந்தவள், தன் கண்களைக் கசக்கிக் கொள்ள, அவளைக் குளியலறை தூக்கிச் சென்று, சுத்தம் செய்து, பல் துலக்கச் செய்து கூட்டிவந்தான்.

“போய் ப்ரெஷ் ஆயிட்டு வாமா.. பயங்கரமா பசிக்குது” என்று அய்யனார் கூற, 

இறைவியும் சென்று புத்துணர்ச்சி பெற்று வந்தாள்.

சக்தியை மடியில் அமர்த்திப் பேசிக் கொண்டிருந்தவன் முகத்தில், அத்தனை நேரம் இல்லாத கடுமையைப் பார்த்தபடி வந்த இறைவியும் அவனோடு அமர,

“இப்படித்தான் யார் கூப்பிட்டாலும் போறதா சக்தி? அம்மா அப்பாக்கு பேசிட்டுத்தான் போகனும்னு தெரியாதா? முகி மாமாவோ, தான்யா பெரிமாவோ தானே எப்பவும் உன்னைக் கூப்பிட வருவாங்க? யாராது தெரியாதவங்கக் கூப்டா போலாமா?” என்று தந்தைக்கே உரிய கண்டிப்போடு கேட்டவனும், தன் வாக்கியத்தில் ‘அப்பா’ என்று பயன்படுத்திய சொல்லை உணரவில்லை. 

கண்களில் நீரோடு, பாவம் போல் விளித்த சக்தி,

“அவங்க உங்க போட்டோ காட்டினாங்க” என்று அழுகையான குரலில் கூற, 

“காட்டினா போயிடுறதா?” என்று கேட்டவன், “சாக்கி மட்டுமில்ல சக்தி.. எதை காட்டி கூப்பிட்டாலும் அப்பா அம்மாவைக் கேட்காம வரமாட்டேன்னு போல்டா சொல்லனும்” என்று கூறினான்‌. 

இறைவிக்குமே இந்த விஷயத்தில் இந்த கண்டிப்பு மகளுக்கு அவசியம் என்று பட்டது. அவளும் அவன் கூறிய உறவு முறையை கவனிக்கவில்லை.. என்பதைவிட, அது இயல்பாய்ப் பொருந்தியதில் வேறுபாட்டை உணரவில்லை.

“அம்மா எத்தனை முறை சொல்லிருக்கேன் உனக்கு? யார் வந்து கூப்டாலும் அப்படியே கூட போகக்கூடாதுனு? முகி மாமா உன்னைக் கூப்பிட வந்தாகூட, நான் ஃபோன் பண்ணி டீச்சருக்கு சொல்வேன் தானே? யாரோ கூப்டா போவியா பாப்பா நீ? அம்மா அப்பா எவ்ளோ பயந்தோம் தெரியுமா? நைட்டெல்லாம் ஒருத்தரும் தூங்கலை. அவ்ளோ பயமாபோச்சு” என்று இறைவியும் சப்தம் போட,

“சாரிம்மா” என்று அழுதாள்.

“சக்திமா.. இனிமே யார் வந்து கூப்பிட்டாலும், அம்மா அப்பா பர்மிஷன் இல்லாம போகவே கூடாது சரியா? தெரியாத யார் கூப்பிட்டாலும் எங்கட்ட கேட்டுக்கனும். புரிஞ்சுதா” என்று கண்டிப்பாய் அய்யனார் கேட்க,

“சாரி ப்பா” என்று அழுதபடி அவனை கட்டிக் கொண்டாள். 

தன் உடல் சிலிர்த்து, பூரிப்பை உணரப்பெறும் நொடியே, தன்னவளின் மணிவயிற்றில் உதித்த மொட்டு, தன்னை ‘அப்பா’ என்று அழைப்பதை உணர்ந்தான்.

“அப்பா சாரி.. அம்மா சாரி.. சக்தி இனிமே இப்பி பண்ணவே மாத்தேன்..” என்று சக்தி அழ,

அய்யனார் இறைவியைப் பார்த்தான்.

அவன் கண்களில் இன்பத்தின் பெரும் ஒளி… ‘என் பொண்ணு என்னை அப்பானு கூப்டுறா’ என்று அவன் அகம் கொடுத்த செய்தியை அவன் முகம் காட்ட,

அவளும் மனம் நிறைந்த புன்னகையோடு கண்கள் மூடித் திறந்து தலையசைத்தாள்.

தன்னைக் கட்டிக் கொண்டு, “அப்பா சக்தி மன்னிச்சுப்பா.. ப்ளீஸ்” என்று கெஞ்ச,

பிரசவ அறை வாசலில், தன்னவள் தங்களுக்கான உறவாய் ஈன்றெடுத்துக் கொடுக்கும் நல்முத்தை முதன்முறை ஏந்திடும் நடுக்கத்தை அவன் விரல்கள் தத்தெடுத்துக் கொண்டதாய் உணர்ந்தான், அவளை அரவணைக்க எழுந்த கரம் ஆடிய ஆட்டத்தில்.

அவன் தோளில் தன் கைவைத்து அழுத்தம் கொடுத்த இறைவி, அவனுக்குத் தட்டிக் கொடுக்க,

“என் பொண்ணுடா” என்று காற்றான குரலில் முனுமுனுத்தான்.. 

அவளுக்கும் அத்தனை நெகிழ்வாய் இருந்தது.

ஆமென்று தலையசைத்தவள், அழும் சக்தியின் தலைகோத,

“அப்பா…. பேசுங்கப்பா” என்று அழுதாள்.

“கண்ணம்மா..” என்று அவளை வாரி அணைத்துக் கொண்டவன், “அப்பா பேசுவேன்டா.. உன் நல்லதுக்குத்தானே சொல்றோம்..” என்க,

“சாரிப்பா” என்றாள். 

எத்தனை நாட்கள் அவள் ‘தர்விப்பா’ என்று தர்வின் மடியில் அமர்ந்து கதையளக்கும் அழகை ரசித்து, கொஞ்சம் போல் அந்த ‘அப்பா’ என்ற அழைப்புக்காக ஏக்கமும் பட்டிருப்பான்? இன்று ஈடேறிவிட்டதே! அவனுக்குத் தான் சந்தோஷம் தாளவில்லை.

சக்தியின் முகம் பற்றி நிமிர்த்தி, கன்னம் துடைத்தவன்,

“ஓகே ஓகே.. அழக்கூடாது” என்க,

“சாரி ப்பா.. இனிமே சக்தி குட் கேர்ளா இருப்பேன். ஆர் கூப்டாலும் போகமாத்தேன்” என்று கையசைத்து சைகை காட்டியபடி கூறினாள்.

இறைவி மெல்லிய புன்னகை சிந்த,

“அம்மா..” என்று சக்தி அழைத்து, இதழ் பிதுக்கினாள். 

மகளை அள்ளிக் கொண்டு, கன்னத்தில் முத்தம் பதித்தவள்,

“அம்மாக்கு நீதான் எல்லாமே கண்ணா.. பயமாகுமா இல்லையா? அதுக்குத்தான் திட்டுறது. இனி ஒழுங்காருக்கனும்” எனக் கூறி, சமாதானம் செய்தாள். 

மகளுக்கு அறிவுரைகள் கூறி, சமாதானம் செய்து, இருவரும் வெளியே வர,

மொத்த குடும்பமும் அவர்களுக்காக காத்திருந்தது.

வீராயி பாட்டி கொள்ளுப் பேத்தியைக் கண்டதுமே, “ஆத்தா கண்ணு” என்று வாரி அணைத்துக் கொண்டார்.

தர்வின் கண்ணெல்லாம் கலங்கி சிவந்து போனது.

“பாத்தீ” என்று சக்தி அழைக்க,

“நெஞ்சே நின்னு போச்சுதே.. புள்ளைய கண்ணுல காங்குற வார” என்று அழுகையோடு கூறினார். 

அவர் குழந்தையை விட்ட அடுத்த நொடி, தர்வின் தூக்கியிருந்தான்.

“யார் கூப்பிட்டாலும் இப்படித்தான் போறதா பாப்பா?” என்று அதட்டலாய், அழுகையாய் தர்வின் கேட்க,

“ஏங்க.. அவளே இப்பத்தான் பயந்து முடிஞ்சு வந்துருக்கா..” என்று தான்யா மெல்லொலியில் கூறினாள்.

“நைட்டெல்லாம் தூக்கமே வரல.. தர்விப்பா தர்விப்பானு காலை சுத்திவந்தவ எங்க போனாளோ என்ன ஆனாளோனு மனசு கிடந்து தவிச்சுடுச்சு” என்று பொறுக்க மாட்டாது கத்தியவன், மருண்டு விழிக்கும் குழந்தையைப் பார்த்துத் தன்னை நிதானித்தவனாய், “இப்படிலாம் யார் கூப்டாலும் போகக்கூடாதுடாமா” என்க,

“சாரி தர்விப்பா” என்றாள். 

வரிசையாய் ஒவ்வொருத்தராய் தங்கள் உணர்வுப் போராட்டத்திலிருந்து மீள வெகுநேரம் பிடித்தது.

தர்ஷன், சக்தியின் கரத்தை விட்டான் இல்லை.

“இனிமே யாரு வந்தாலும் நான் கிளம்பும்போதே நீயும் போ. அப்பத்தான் முகி மாமா ஆர் மம்மி உன்ன யார் கூத்தித்து போறாங்கனு பாத்துப்பாங்க” என்று கட்டளை பிறப்பிக்க, உடன் பிறவா அண்ணனைப் பார்த்து முத்துப் பற்கள் மின்ன புன்னகைத்தாள். 

“அத்தை.. பசிக்குது.. பாப்பாவும் நைட்டுலருந்து சாப்பிடலை” என்று அய்யனார் கூற,

“இதோ ப்பா.. எல்லாம் ரெடி” என்று வள்ளி கூறினார். 

அனைவரும் ஒன்றாக அமர்ந்து உண்டனர்.

இறைவி தன்னவனையும், தன் குழந்தையையும் ரசனையோடு பார்த்திருக்க,

“சாப்பிடலாம்” என்று அவள் காதோரம் முகில் கிசுகிசுத்தான்.

“நிறைஞ்சுருக்குடா” என்று அவன் விழி பார்த்து அவள் கூற, 

மெல்லிய புன்னகை அவன் பதிலாய்…

“எனக்கும் என் புள்ளைக்கும் இத்தனை உறவுகள் இருக்கு.. அவளுக்கு ஒன்னுனா தவிக்க இத்தனை சொந்தங்கள் இருக்கு… சந்தோஷமா இருக்குடா முகி.. இதைவிட வேறென்ன வேணும் எனக்கு?” என்று கூற,

“எல்லாரும் இருக்கோம்.. இருப்போம்” என்ற மதி,

“அண்ணாவும் எக்ஸ்ட்ரா எக்ஸ்ட்ரா பக்கத்தில் இருப்பாங்க” என்று குறும்போடு கூறினாள். 

அதில் மதியை நோக்கியிருந்த இறைவி, சட்டென அவனை நோக்க, தானும் நிமிர்ந்த அய்யனார், யாரும் பார்க்கா வண்ணம் பட்டெனக் கண்ணடித்துவிட்டு குனிந்து கொண்டான்.

முகில் மற்றும் மதியின் பார்வையில் மட்டுமே பட்டன..

நொடியில் அணிவகுத்த நினைவுகளில் அவள் முகம் சிவந்து போக, மதி மற்றும் முகில் ஒன்றுபோல் குரலைச் செருமியதில், சட்டென சிரம் தாழ்த்திக் கொண்டாள்.

உணவு வேளை கடந்து, குழந்தைகளை மதி அறைக்கு அழைத்துச் செல்ல, அனைவர் பார்வையும் அருகருகே அமர்ந்திருக்கும் இறைவி மற்றும் அய்யனார் மேல் நிலைத்தது. இந்த பிரச்சினையில் அவர்கள் நெருக்கமும், காதலும் அம்பலப்படுத்தப் பட்டதல்லவா?

அவர்கள் பார்வை உணர்ந்து விளக்கம் கொடுக்க வேண்டியதைப் புரிந்துகொண்ட இறைவி, அவர்கள் பார்வையால் எழுந்த கூச்சத்தில், சற்று நகர்ந்து அமர எத்தனிக்க, அவள் தோளில் கரம்போட்டுக்கொண்ட அய்யனார்,

“அத்தை.. உங்க மகபோலனு அடிக்கடி சொல்வீங்களே இறைவியை.. எனக்குக் கட்டித்தரீங்களா உங்க மகள?” என்று பளிச்செனக் கேட்டான். 

அங்குள்ள அத்தனை பேருக்கும் அந்த அதிர்ச்சி, ஆனந்தமாய் இருந்தது. இறைவிக்கு ஒரு நல்லது நடந்துவிட அவ்வீட்டின் துரும்பும் கூட அல்லவா ஆசை கொண்டிருந்தது? அதுவும் அந்த நல்லது தங்கள் வீட்டுப் பையனாலேயே நிகழ்வதெனில் இரட்டிப்பு மகிழ்ச்சி அல்லவா?

“என் பொண்ணுக்கு சம்மதம்னு அவ கண்ணே சொல்லிடுச்சு.. இருந்தாலும் சொல்றேன்.. அவளுக்கு சம்மதம்னா தாராளமா கட்டிக்கோ” என்று வள்ளி கூறினார்.

“என்ன ஆத்தா? வார்த்தையவே காணும்?” என்று முகில் கேட்க,

இறைவி தன் அப்பத்தாவைப் பார்த்தாள்.

“அ..அது அப்பத்தா.. நானே சொல்லத்தான் இருந்தேன்.. ஆனா” என்று இறைவி தடுமாற, அய்யனார் அவள் தோளில் அழுத்தம் கொடுத்தான்.

“எம்பேத்தி வாழ்க்கைல ஒரு நல்லது நடந்துபுடாதானு தவங்கெடந்தவத்தா நானு. நானா வேணாங்கப்போறேன்? நீ சந்தோசமாருக்குறத பாத்துப்புட்டா போதுமே தாயி எனக்கு.. வேறென்ன கேட்டுபுடும் இந்த மனசு?” என்று அத்தனை சந்தோஷமாகவும் நெகிழ்வாகவும் அவர் கூற,

“அப்பத்தா..” என்று அவரை அணைத்துக் கொண்டாள்.

“ச்சி கழுதை.. இதுக்கா அஞ்சின நீயு?” என்று அவர் கேட்க,

“இ..இல்ல அப்பத்தா.. நான் சொன்னா நீங்க மறுக்கமாட்டீங்கனு எனக்குத் தெரியும்.. ஆனா எ..என்னால ஏனோ சொல்ல முடியல” என்றாள்.

“வுடுதாயி.. என்னவா வேணா இருக்கட்டும்.. முடிஞ்சது முடிஞ்சதாவே இருக்கட்டும்.. நீயு நல்லாருக்குறத கண்ணு நெறைக்க பாத்துட்டா போதும் எனக்கு” என்று அவர் கூற,

நெகிழ்வாய் அவரைப் பார்த்தவள்,

“நல்லா இருப்பேன்.. ரொம்ப சந்தோஷமா..” என்று அய்யனாரைப் பார்த்தபடி கூறினாள்.

அவளைப் பார்த்தபடியே அமர்ந்திருந்த அய்யனார், மென்மையான புன்னகையுடன் எழுந்து, “வேலையிருக்கு.. போயிட்டு வரேன்” எனப் பொதுவாகக் கூறிவிட்டுச் சென்றான்.

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 26

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
24
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்