
விசை-25
முகில் மூலமாக விவரம் அறிந்து வீட்டுக்கு வந்த அய்யனார், பித்து பிடித்தவள் போல் அமர்ந்திருக்கும் இறைவியைக் கண்டு மனதால் மடிந்து போனான்.
அவளுக்கும் தான் என்ன செய்வதென்றே புரியவில்லை.
கூடத்து இருக்கையில் சாய்ந்து அமர்ந்திருந்தவள் முன் வந்து மண்டியிட்டு அமர்ந்தவன் மற்றவர்களைப் பார்க்க, அவன் பார்வை உணர்ந்து அனைவரும் எழுந்து சென்றனர்.
அனைவரும் தன் கண்ணிலிருந்து மறையும் வரை பொறுமை காத்தவன், அவர்கள் சென்றதும், “இறைவி..” என்று காற்றுக்கும் நோகாத குரலில் அழைக்க,
முட்டுகளுக்கு இடையில் முகம் புதைத்து அமர்ந்திருந்தவள் மிக மெல்லமாய் நிமிர்ந்து பார்த்தாள்.
சோர்வும் வேதனையும் போட்டிப்போட்டு எம்பி குதித்தது அவள் முகத்தில்.
‘என்னால தான?’ என்று அவன் மனம் படும் பாடைச் சொல்ல, எந்த மொழியிலும் வார்த்தைகள் இல்லை…
இனிமையான தமிழில், மனம் கனிந்து அழைக்கும் அவள் பெயர் கூட இன்று கனத்து தொண்டையை அடைத்தது அவனுக்கு.
“ம்மா..” என்று குரல் கமர அவன் அழைக்க,
அவனையே வெறித்து பார்த்தாள்.
“இ..இறைவி..” என்று அவன் தடுமாறித் தடம்மாற,
“நீங்க என்ன பண்ணுவீங்களோ தெரியாது.. எனக்கு என் பொண்ணு வேணும்..” என்று மிக அழுத்தமாய்க் கூறினாள்.
மனதை வேல் கொண்டு தாக்கியதைப் போல் வலி கொண்டான். தன் மகளுக்காகத் தான் பணியிடை மாற்றம் செய்துதான் ஆகவேண்டும் என்றால் நிச்சயம் செய்யத் தயார் என்றுதான் நினைத்தான்… மகள் என்று வெறும் வார்த்தைகளால் அவளைத் தன்னோடு இணைத்துக் கொள்ளவில்லையே! மனதால் அல்லவா அப்பிணைப்பினைக் கொண்டான்… ஆனாலும் மனம் அந்தத் தருணத்தை எண்ணி மருகியது…
ஒருநிமிட ஆழ்ந்த அமைதிக்குப் பின்,
“ஆனா டிரான்ஸ்வர் மட்டும் அப்லை பண்ணிடாதீங்க” என்று அவள் கூற,
அவளை ஆச்சரியமாய் நிமிர்ந்து பார்த்தான்.
“யாரோ உங்களுக்கு வேண்டாதவங்கதான் இதை செய்துருக்காங்க. புரியுது.. பயமா இருக்கு.. எ..என்..” என்றவள் இடவலமாய் தலையசைத்து, “நம்ம பொண்ணுக்கு எதும் ஆயிடுமோனு ரொம்ப பயமாருக்கு.. அ..ஆனா உங்கமேல நம்பிக்கை இருக்கு. ஊரயே பாதுகாக்குறீங்க.. உங்களால நம்ம பிள்ளைய காப்பாத்த முடியாதா? முடியும்.. எனக்கு பாதுகாப்பையும் தைரியத்தையும் குடுத்தது நீங்கதான்.. கண்டிப்பா அதை சக்திக்கும் தருவீங்க.. எனக்கு எந்த ஃபோன் காலும் வரலைனு நினைச்சுக்கோங்க. வந்தா சக்தியோடதான வருவேன்னு சொன்னீங்க? போங்க.. போய் சக்தியோட வாங்க” என்று கமரும் குரலில் இறைவி கூற,
அய்யனார் அவளை ஆச்சரியமாய்ப் பார்த்தான்.
சக்தி என்றால் அவளுக்கு எத்தனை பிடிக்கும் என்று அவன் அறிந்ததே… தற்போது அவள் எத்தனை தூரம் வலி சுமக்கின்றாள் என்பதும் அவன் அறிவான்… அவள் காதல் விசையில் பூத்த காதல் அல்லவா அவனுடையது? எனில் சோகத்தின் எதிரொலியை உணர இயலாதா என்ன?
அவனைத்தாக்கும் அவள் சோக ரேகைகள் அமிலமாய் அல்லவா மாறி அவன் நேசப்பயிர் வாட்டுகிறது? இருப்பினும்கூட எப்படி தனக்காகப் பேச முடிகிறது இவளால்? வியக்காமல் இருக்கவே முடியவில்லை அவனால்.
அந்த நொடி… தான் ஒரு காவலன், வளர்ந்த முதிர்வான ஆண்மகன் என்பதையெல்லாம் மறந்தவனாய், சிறு குழந்தையாய் அவளைத் தாவி அணைத்துக் கொண்டு, “இறைவி..” என்று அழுதேவிட்டான்.
அவன் உடைந்துருகும் மனதை உணரப்பெற்றவளாய், அரவணைத்துக் கொண்டாள், அவன் இறைவன் அனுப்பிய இறைவி!
“வ..வலிக்காம இல்ல.. ஆ..ஆனா.. நீங்க பாத்துப்பீங்க” என்றவள், தன் கழுத்தில் முகம் புதைத்து குழந்தையாய் அழுபவன் முகம் பற்றி நிமிர்த்தி, “என்னை பாதுகாப்பா உணர வச்சீங்க தானே? நானும் உங்களுக்கு அந்த அரவணைப்பையும் ஆறுதலையும் குடுக்க வேணாமா? ப்ளீஸ் அழாதீங்க.. நம்ம சக்தி கண்டிப்பா நமக்குக் கிடைப்பா” என்று அழுதபடியே கூற,
“கொல்லுறடி” என்றான்.
பளிங்கு இதயத்தில் அன்பின் பாரங்கள் கனத்துக்கொண்டே சென்றது இருவருக்கும்…
வலி என்றால் அப்படியொரு வலி…
அவன் பரிதவித்து அழ, அவனை அணைத்துக் கொண்டு ஆற்றுப்படுத்த முயன்றாள்.
அவள் முகம் பற்றி கண்ணீரை அழுந்தத் துடைத்தவன், “வரேன்.. நம்ம பிள்ளையோட” எனக் கூறி, எழுந்து சென்றான்.
காவல் நிலையம்..
அங்கு காவல் நிலையத்திற்கு வெறி பிடித்தவனைப் போல் வந்து நின்றான் கற்குவேல் அய்யனார்.
மனம் தீயாய் எரிந்தது.
‘யாரு? யாரு அது?’ என்று யோசித்தான்.
மதியின் மூலம் கிடைத்த அலைபேசி இலக்கங்களைக் கொண்டு முதல் அடியை வைத்தான்.
அந்த அலைபேசிக்குச் சொந்தமானவை கண்டறியும் பணியில் முதலில் இறங்கினான்.
சைபர் பிரிவில் இருக்கும் தனக்குத் தெரிந்த நண்பனை உடனே தொடர்பு கொண்டவன், அந்த இலக்கங்களை அனுப்பிவைத்துத் தகவல்கள் திரட்டும்படி கூறினான்.
“எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் வேணும் கதிர்” என்று அவன் கூற,
அவன் குரலில் இதுநாள் வரையிலும் கண்டுவிடாத ஒரு கலக்கத்தை வெளிப்படையாக உணரப்பெற்றான், அவனால் கதிர் என்று அழைக்கப் பெற்றவன்.
“எனி ப்ராப்ளம்டா?” என்று கதிர் கேட்க,
“வெரி சீரியஸ் ப்ராப்ளம். சீக்கிரம் கண்டுபிடிச்சுக்குடுடா” என்றான்.
முயன்றும் தடுக்க இயலாமல் அவன் குரல் நடுங்கியது. அவனது மிரட்டல் தொணியைக் கேட்டுப் பழகிய காதுகள் முதன் முறை கலக்கத்தைக் கேட்பதில், விவரம் பெரிதென்று புரிந்துகொண்ட கதிர் துரிதமாய்ச் செயல்பட்டான்.
“மச்சி.. ட்ரேஸ் செய்ய முடியலைடா..” என்று கதிர் கூற,
“ப்ச்.. நினைச்சேன்” என்று முனுமுனுத்தான்.
“டார்க் வெப் படுத்துற பாடுடா.. நீ கால் கட் பண்ணு. நான் வேற சாஃப்ட்வேர்ல ட்ரை பண்ணிப் பார்க்குறேன்” என்று கதிர் கூற,
“ஓகேடா” என்றவன், அந்தக் கண்காணிப்புக் காமிராவில் பார்த்தவன் முகத்தை, குற்றவாளிகள் பட்டியலோடு ஒப்பிட்டுப் பார்த்தான்.
இரவு ஒன்றரை மணியளவில் அவனோடு வெகு சில காவலர்கள் மட்டுமே இருந்தனர்.
பெரும்பாலும் யாரையும் உதவிக்கு அழைக்காமல், தானே அமர்ந்து கணினியின் உபயத்தோடு தேடியவனுக்கு அதுவும் பயன்தரவில்லை.
முன்பே சாலை கண்காணிப்புக் கருவிகளின் காணொளிகளைப் பெற்றிருந்தவன், ஒரு காவலரை மட்டும் உதவிக்கு அழைத்து, அவரோடு சேர்ந்து தேடினான்.
சோர்வின் மிகுதி அவன் முகத்தில் அப்பட்டமாய்த் தெரிந்தும், அவனுக்குப் நொடிப் பொழுதும் தூக்கம் வரவில்லை. அத்தனை இருக்கமாய்க் காணப்பட்டான்.
மனதில் இது யாராக இருக்கும் என்ற பல அனுமானங்கள் அவனுள் ஓடி மறைய, சட்டென அவனுள் ஓர் எண்ணம் தோன்றியது. முகில் காட்டியக் காணொளியில் தெரிந்த தன் புகைப்படம் அவன் கண்முன் வந்து வந்து போனது… அந்தப் புகைப்படம்… அது அவன் மட்டுமாக இருப்பதல்ல… அதில் யார்? யார் தன்னுடன்? தன்னோடு யாரோ நிற்கின்றனர்.. என்று யோசித்தவன், அலைபேசியை எடுத்து அந்தக் காணொளியை மீண்டும் பார்த்தான்.
அவன் கண்கள் விரிந்தது…
ராஜ்!
இருக்குமோ? வாய்ப்புள்ளதே! என்று யோசிக்கையில் மனம் அதிவேகமாய்த் தடதடத்தது.
சட்டென எழுந்தவன், “மிஸ்டர் குமார். நீங்க பார்த்துட்டு இருங்க. நான் வந்துடுறேன்” என்று கூறி நீண்ட எட்டுக்கள் வைத்து, விரைந்து சென்றான்.
காற்றின் ஓசை மட்டுமே அவனைத் தீண்டிச்செல்ல, அதன் இசையையும் மிரள வைக்கும் உஷ்ணத்துடன் விழிகளைத் திறந்தான்.
ரத்தமெனச் சிவந்த விழிகளில் ரௌத்திரம் கொப்புளித்தது. தன் வண்டியைச் சீறிக் கிளப்பி இருளையும் அந்தகாரத்தையும் கிழித்துக் கொண்டு சென்றான்.
சில மணி நேரங்களுக்குப் பிறகு…
அதிகாலைப் பொழுது. மெல்லிய வெளிச்சம் படரத் துவங்கிய நேரத்தில், கூடத்திலேயே சாய்ந்து அமர்ந்திருந்தாள் இறைவி.
அவளுக்குத் துணையாய் முகில் மற்றும் மதி…
இரவு வெகுநேரம் ஆன பின்பும் கூட உறக்கமின்றி அனைவரும் விழித்தே இருந்தனர். முகில்தான் பெரியோரையெல்லாம் சத்தம் போட்டு உள்ளே உறங்க அனுப்பினான்.
“சக்கி வந்துடுவால்ல மாமா?” என்று இதழ்கள் பிதுக்கிக் கண்ணீரோடு கேட்ட தர்ஷனுக்கு முத்தம் ஒன்றை ஆறுதலாய்க் கொடுத்து, தான்யா மற்றும் தர்வினோடு அனுப்பிவைத்தான்.
“தர்விப்பா தர்விப்பானு காலை சுத்தி சுத்தி வருவாடா.. கண்ணுக் குள்ளயே நிக்குது” என்று தர்வினும் மிகுந்த வருத்தத்தோடு வெகுநேரம் தான்யாவிடம் புலம்பிக்கொண்டேதான் இருந்தான்.
மகள்போலத்தானே அவளைத் தாங்கினான்? மனம் வலிக்கச் செய்தது அவள் காணாமல் போன செய்தி… அவள் கிடைத்திட வேண்டும் என்று நொடிக்கு நூறு பிரார்த்தனை வைத்துக் கொண்டே இருந்தான்.
கூடத்தில் வாசலையே வெறித்தபடி இறைவி அமர்ந்திருக்க, அவளுக்கு அருகே முகில் மற்றும் மதி.
மூவருமே இரவெல்லாம் தூங்கவில்லை… சற்று நேரம் முன்புதான் தன்னையும் மறந்து மதி முகிலின் மடியில் சாய்ந்திருந்தாள். அவள் தலையைக் கோதியபடியே, இறைவியையும் வாசலையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தான்.
வாசலில் அய்யனாரின் வண்டிச் சத்தம் கேட்க,
முகிலும் இறைவியும் நிமிர்ந்து அமர்ந்தனர்.
வண்டியின் ஓசையிலும், முகிலின் அசைவிலும் மதியும் திடுக்கிட்டு எழ, அவள் தோள் தட்டி ஆசுவாசப்படுத்தியவனாய் எழுந்தான்.
இறைவி வேகமாய் வாசலுக்குச் செல்ல, தன் நெஞ்சில் அமிழ்த்தி, ஆழப் புதைத்துக் கொண்டபடியே சக்தியைத் தாங்கிக் கொண்டு வந்துகொண்டிருந்தான், கற்குவேல் அய்யனார்.
அவன் சட்டைப் பட்டாக்களுக்கு நடுவே தன் கரங்கள் நுழைத்து அத்தனை இறுக்கமாய்ப் பற்றியபடி ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள், சக்தீஸ்வரி.
குழந்தையைப் பார்த்ததும் அப்படியே நின்றுவிட்ட இறைவிக்கு அப்போதுதான் மூச்சு வந்தது. தன்னவன் தங்கள் மகளை ஏந்தியிருக்கும் விதமே அத்தனை அத்தனை பாந்தமாய், பாதுகாப்பாய் இருந்தது.
அவள் உடல் வெளிப்படையாய் நடுங்க,
“அத்தான்.. பாப்பா எங்கருந்தா? அவளுக்கு ஒன்னுமில்லதான?” என்று கேட்டான் முகில்.
“ஷ்ஷ்..” என்றவன், குழந்தையை இன்னும் பாந்தமாய் தன் கதகதப்பில் அரவணைத்துக் கொண்டு கீழே உள்ள விருந்தினர் அறை நோக்கிச் சென்றான்.
மதி வேகமாய் சென்று கதவினைத் திறந்துவிட்டு விளக்கினை ஒளிரச் செய்திட,
உள்ளே சென்று கட்டிலில் சாய்ந்து அமர்ந்தவன், குழந்தையைத் தன்மீது வசதியாய்ப் படுக்கவைத்துக் கொண்டான்.
இறைவி முகில் மற்றும் மதி அப்படியே அறை வாசலில் நின்றனர்.
“உங்க யாருக்கும் தூக்கம் வரலையா?” என்று கண்கள் மூடியபடியே அவன் கேட்க,
மூவரும் புரியாது நின்றனர்.
“எல்லாரும் கொஞ்ச நேரம் தூங்கிட்டு பிறகு பேசலாம்.. பாப்பா நல்லா தூங்குறா.. பேசி முழிச்சுடப்போறா” என்று மெல்லிய குரலில் அய்யனார் கூற,
முகில் மற்ற இருவரையும் பார்த்தான்.
“போய் படு முகில்” என்றவன், விழி மலர்ந்து இறைவியைப் பார்த்து, “சொன்னது கேட்கலையா?” என்றான்.
அவள் திணறலோடு இல்லையெனத் தலையசைக்க,
“வந்து படு” என்றான்.
அவள் திடுக்கிட்டு விழிக்க,
முகில் மதியைப் பார்த்துத் தலையசைத்தான்.
அவளும் சிறு தலையசைப்போடு கதவைப் பூட்டிக் கொண்டு செல்ல, இறைவி அப்படியே அசைவற்று நின்றாள்.
“கெஞ்சினாதான் வருவியா? தெம்பில்லடி எனக்கு” என்று அவன் கரகரக்கும் குரலில் கூற,
நொடியும் தாமதியாமல் அவன் அருகே சென்று சரிந்து அமர்ந்தாள்.
தன் சிப்பி வாய் திறந்து, எச்சில் வடிய, அவன் மார்பில் முகம் பதித்து உறங்கும் சக்தியைப் பார்த்த இறைவி, கலக்கம் மிகுந்த கண்களோடு அவளை மென்மையாய் வருடினாள்.
அவள் கரத்தைப் பற்றிக் கொண்ட அய்யனார், “தூங்கு” என்க,
“இ..இல்ல நான்..” என்று ஏதோ சொல்ல வந்தாள்.
“எங்கூடதானடா?” என்று அவன் கேட்க,
சிறு தயக்கத்துடன் படுத்தாள்.
ஒரு கையால் குழந்தைக்குத் தட்டிக் கொடுத்தவன், மற்றைய கரத்தால் அவளை அரவணைத்துக் கொள்ள, அதில் தான் உணரப்பெறும் பாதுகாப்பிலும் நிறைவிலும் தன்னைப்போல் அவள் கண்கள் மூடியது.
மூவருமாய் ஆழ்ந்த, அமைதியான, நிம்மதியான உறக்கத்திற்குச் சென்றனர்.
