Loading

அத்தியாயம் 12 :

நண்பர்கள் இருவரும் நேரம் ஓடியது தெரியாது பழைய கதைகள் பேசிக்கொண்டிருக்க, பாசில் வந்துவிட்டான்.

“என்னடா?”

விநோதனுடன் சிரித்துக்கொண்டே தன்னறை வாயிலில் நின்றிருந்த பாசிலிடம் வினவினான் யது.

“ஜார்ஜ் வந்திருக்கார் டா…” பாசில் இழுக்க,

“சேத்தன் வந்திருக்காரா?” என்றான் யது.

பாசில் ஆமென்க, “நினைத்தேன்” என்று கடுப்பாக எழுந்தான் யது.

“கொஞ்ச நேரம் கழித்து கூப்பிடுறேன் விநோ” என்று யது சொல்ல…

“பேச வேண்டியதைவிட்டு நிறைய பேசிட்டோம். உன்னை நான் இப்போ பார்க்க முடியுமாடா?” என கேட்டான்.

“நான் பாசிலை அனுப்பி வைக்கிறேன் விநோ. வந்திடு” என்றவன், பாசிலிடம் தான் சொல்லியதை கேட்டதானே எனும் விதமாக கண்ணைக்காட்டிவிட்டு, நிதானமாக தன்னுடைய அலுவலக அறை நோக்கிச் சென்றான்.

யதுவை கண்டதும் இருவரும் எழுந்து நிற்க…

“இந்த பார்மாலிட்டிஸ் எல்லாம் தேவையா அங்கிள்” என்றபடியே அவர்களுக்கு முன்னிருந்த இருக்கையில் அமர்ந்தான்.

“ட்ரிங்க்ஸ்?” இருவரையும் கேள்வியாய் பார்த்தான். அவர்கள் சரியென்க, இண்டர்காம் மூலமாக கிச்சனிற்கு அழைத்தவன், “ராதாம்மா மூணு டீ ஆர் காஃபி” என்றான்.

“சேத்தன் காஃபியா?” என்று பட்டென்று கேட்டிட…

“ஏன் அங்கிள், வேற சொல்லவா?” என்றான் யது. அதில் சேத்தன் திருதிருவென முழித்திட… ஜார்ஜ் அட்டகாசமாக சிரித்தான்.

“என்னாச்சு அங்கிள்?”

“ட்ரிங்க்ஸ் சொன்னதும்… அவன் நினைத்தது வேற, நீ சொன்னது வேற” என்று ஜார்ஜ் சொல்லிட, “சாரி அங்கிள். எனக்கு ஹாட் ட்ரிங்க்ஸ் பழக்கமில்லை”  என்று அமைதியாகவே கூறினான் யது.

“நீங்களும் அதைத்தானே நினைச்சீங்க?”

ஜார்ஜ் சிரித்துக்கொண்டே இருக்க… சேத்தன் கடுப்பில் காய்ந்திட பட்டென்று வாயினை மூடிக்கொண்டார் ஜார்ஜ்.

ராதா கதவினை தட்டிவிட்டு ட்ரேவுடன் அவ்வறைக்குள் வந்தவர், மற்ற இருவருக்கும் காஃபி அடங்கிய குவளையை கொடுத்துவிட்டு, யதுவிடம் பால் அடங்கிய குவளையை அவனுக்கு முன் நின்றபடி நீட்டிட அவனோ அவரை முறைத்துப் பார்த்தான்.

உன் முறைப்பெல்லாம் என்னை ஒன்றும் செய்யாது என்கிற ரீதியில் அவனை பார்த்தவர்,

“டைம் ஆகிட்டே யது. காலையில நீ கேட்ட காஃபி உனக்குத் தரேன்” என்று அவனுக்கு மட்டும் கேட்குமாறு சொல்ல ஒரே மடக்கில் பாலினை வாயில் சரித்தவன்,

“போதுமா… குடிச்சாச்சு. ஆனால் நான் இன்னும் சின்னப்பிள்ளை இல்லை” என்றான்.

அவனின் மேல் உதட்டில் பால் தடம் ஒட்டியிருக்க… தன்னுடைய சேலைத்தலைப்பில் ஒற்றி எடுத்தவர் புன்னகையுடன் சென்றார்.

“வீட்டு வேலைக்காரிக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கணுமா?” ஜார்ஜ் கடுப்பாகக் கேட்டார்.

“அங்கிள்…” யது கத்தியதில் மனிதர் மிரண்டுவிட்டார்.

“உங்ககிட்ட பலமுறை சொல்லிட்டேன். அவங்க என் ராதாம்மா. இனியொருமுறை அப்படி சொன்னீங்க, நீங்க இந்த வீட்டிற்கு வருவது இதுதான் கடைசி” என்று அதிகாரமாக மொழிந்தவன், சேத்தனிடம் திரும்பி…

“என்ன அங்கிள் என்னுடைய அப்பாவோட தொண்டனா வந்திருக்கீங்களா இல்லை முதல்வரா வந்திருக்கீங்களா?” என்று அதே காட்டம் சற்றும் குறையாது வினவினான்.

சேத்தன் தான் மாநிலாத்தின் முதலமைச்சர் ஆவார்.

“அது வந்து தம்பி…”

“வளவளன்னு இழுக்காதீங்க…” என்றவன், “குட்டப்பன் விஷயம் தவிர்த்து வேறெதுவா இருந்தாலும் பேசலாம்” என்றான்.

அவர்கள் தனியாக பேச வந்ததே குட்டப்பனைப் பற்றித்தானே, அதற்கே தடைவிதித்தால்… வேறென்ன பேச? இருவரிடமும் அமைதி.

“ஓகே, நான் தூங்கப்போறேன்.” இருக்கையிலிருந்து எழுந்துவிட்டான். அவர்களை போகலாம் என்று மறைமுகமாகக் கூறினான்.

“ஒரு முதல்வரா கட்சியில் முடிவெடுக்கும் அதிகாரம் எனக்கிருக்கே யது.” சேத்தன் அமைதியாகத்தான் கூறியிருந்தார். ஆனால் யதுவிற்கு சுள்ளென்று ஏறிவிட்டது.

“ஹோ… தாராளமா எடுக்கலாமே!” என்றவன், “அதற்கு விடியலில் நீங்க அந்த சீட்டில் இருக்கணுமே” என்றான்.

“யது…”

“எஸ்… இட்ஸ் மீ” என்றவன், “நீங்க ஆக்டிங் சி.எம். சி.எம் மாதிரி. நான் எப்போ விருப்பப்படுறேனோ அப்போ அந்த சீட்டை நான் வாங்கிப்பேன் சொல்லி, ஒப்புக்கொண்டு கையெழுத்திட்டதால் மட்டுமே நீங்க இப்போ சி.எம். புரியுதா? கட்சி இன்னும் என் கட்டுப்பாட்டில், என் கைக்குள் தானிருக்கு” என்றவன் வாயிலை நோக்கி கைக்காட்டிட சேத்தன் தலையை தொங்கப்போட்டுக்கொண்டு  வெளியேறினார்.

பின்னால் சென்ற ஜார்ஜை தடுத்து நிறுத்தியவன்,

“உங்ககிட்ட சொல்லும் விஷயம் மற்றொரு நபருக்கு தெரிவது இதுவே கடைசியா இருக்கட்டும். உங்களுக்குரிய வேலையை மட்டும் பார்த்தால் போதும்” என்றான் அழுத்தமாக.

“டேய் நான் கட்சியின் மூத்த தலைவர் டா!” யதுவின் பேச்சில் ஜார்ஜ் அதிர்ந்துவிட்டார்.

“அதுக்கேற்ற மாதிரி தங்களுக்கு நடந்துக்க தெரியலயே. அரசாங்க வேலையில் இருப்பவர்களுக்கு ஏஜ் லிமிட் இருக்கே அங்கிள். நாமும் அரசாங்க ஊழியர்கள் தானே! உங்களுக்கு எண்பத்தி ரெண்டு இருக்குமா?” என்று யது உட்பொருள் வைத்து கேட்டிட மனிதர் மௌனமாக வெளியேறியிருந்தார்.

********

யது குறிப்பிட்ட இடத்தில் விநோதன் நின்றிருக்க, அவனிற்கு முன் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் வந்து நின்றான் பாசில்.

அணிந்திருந்த தலை கவசத்தை கழட்டியவன்,

“ஹாய்” என்க.

விநோதனிடம் ஆராய்ச்சிப் பார்வை.

“ஈவ்னிங்கே உங்களுடைய லேசர் வீவ் என்னை ஸ்கேன் பண்ணியாச்சு பாஸ். இப்பவுமா? வாங்க போகலாம்?” என்று வண்டியை திருப்பினான் பாசில்.

விநோதனுக்கு ஏனோ யது பாசிலை ஃபிரண்ட் என்று சொல்லியது அவன்மீது சிறு பொறாமையை உண்டாக்கியிருந்தது.

விநோதன் பின்னால் அமர்ந்ததும்,

“யது உங்களைப்பற்றி பேசாத நாளே இல்லை விநோ சார். அவருக்கு உங்களை ரொம்ப பிடிக்கும். சில நேரங்களில் உங்க போட்டோவை கையில வச்சிக்கிட்டு அப்படியே உட்கார்ந்திடுவான். நல்ல நட்பை இழந்துட்டேன்னு சொல்லி புலம்புவான்.

இந்த ஐந்து வருடத்தில் அவன் சிரிச்சு நான் பார்க்கவேயில்லை. வயதுக்கு மீறிய பாரம் அவன் தலையில். ஆனால் இன்னைக்குத்தான் உங்களை பார்த்த பிறகு தான், யது முகத்தில் ஒரு உற்சாகம். அவன் சிரித்து பார்த்தேன்” என்று சாலையில் கவனமாக இருந்தபோதும், விநோதனிடம் யதுவைப்பற்றி பேசிக்கொண்டே வந்தான் பாசில்.

“நீங்க கேட்டதும் யதுவின் தனிப்பட்ட எண் கொடுத்தது, நீங்க யாருன்னு எனக்குத் தெரிந்ததால் தான்” என்று மேற்கொண்டு விநோதனின் அவனின் மீதான சந்தேகத்தையும் போக்கியிருந்தான்.

யது இதனை கூறியபோதே ஓரளவிற்கு பாசில் மீதிருந்த சந்தேகக்கண் விநோவிற்கு நீங்கிவிட்டது. இப்போது முற்றிலும் விலகியது. அதற்கு பாசிலின் வெளிப்படையானப் பேச்சும் காரணம்.

“யது கேட்டப்போ அவனுக்கு சர்ப்ரைஸ்ஸா இருக்கட்டுன்னு உங்களுக்கு நெம்பர் கொடுத்ததை சொல்லல” என்ற பாசிலின் மீதான நம்பிக்கை விநோதனுக்கு அதிகமாகியது.

“அம் சாரி.” பாசிலை சந்தேகப்பட்டதற்காக தன் தவறறிந்து கேட்டிருந்தான்.

“அந்த ஜார்ஜ், டிஜிபி மாதிரி என்னையும் சந்தேகப்பட்டிங்களா?” விநோவை திரும்பிப் பார்த்து வினவினான் பாஸில்.

விநோ தலையசைத்து… “என் வேலையில் முதல் பார்வையே சந்தேகம் தானே. அதனால் அது பழகிப்போச்சு” என்றான்.

பாசில் அதனை சாதாரணமாக எடுத்துக்கொண்டான்.

இரவு வேலை என்றபோதும் பாசில் யாருக்கும் தெரியாது, விநோதனை வீட்டின் பின்பக்கமாக புதருக்கு நடுவே மறைந்திருந்த நான்கடி கதவினை திறந்து உள்ளே அழைத்து வந்தான்.

“என்னடா இது?”

“யது ஃப்ரியா எங்கேயாவது தனியா போகணும் நினைச்சா இது வழியாத்தான் போவான்.” கேட்ட விநோதனுக்கு பாசில் பதில் வழங்கினான்.

விநோவிற்காகவே யது வீட்டின் பின்பக்க நடை பாதையில் தூணிற்கு மறைவாக நின்றிருந்தான்.

நண்பனை கண்டதும் ஆரத் தழுவிட துடித்த கைகளை கடினப்பட்டு அடக்கிக்கொண்ட யது, அவனை இழுத்துக்கொண்டு வேகமாக தனது அறைக்குள் நுழைந்த அடுத்த நொடி அவனை இறுக்கி அணைத்திருந்தான்.

விநோவும் நெகிழ்வாய் நண்பனிடம் தன்னை ஒப்புவித்து, அவனை கட்டிக்கொண்டு நின்றான்.

சிலபல நிமிடங்களுக்கு பின்னரே யது விநோவை விட்டு அகன்றான்.

“எனக்கு பொறாமையா இருக்கு.” சொல்லிய பாசில் இருவரையும் முறைத்துக்கொண்டே நிற்க, யதுவும், விநோவும் ஒன்றாக கை விரித்திருந்தனர்.

மூவரும் நட்பின் கரங்களாக இணைந்த தருணம் அத்தனை நெகிழ்வாய்.

கல்லூரி நாட்களில், ‘தன்னைத்தவிர யாரையும் நண்பனாக வைத்து பார்க்க முடியவில்லை’ என்று சொல்லிய விநோ, இன்று பாசிலை ஏற்றுக்கொண்டது தனக்காக மட்டுமே என்பது புரிந்த யதுவிற்கு அப்போதும் போல இப்போதும் விநோவின் நட்புணர்வு பிரமிக்க வைத்தது.

“பாசில் ஃபிரண்ட் ஆகிட்டான் போல.”

யதுவின் உரிமையுணர்வான கேள்வியில் விநோ அட்டகாசமாக சிரித்து வைத்தான்.

“இதையேத்தான் நானும் பீல் பண்ணேன்” என்ற விநோ, “உன்னோட நலனில் அவன் அக்கறை காட்டும்போது அவனை எப்படி ஏத்துக்க முடியாமப்போகும்” என்றான்.

“ரெண்டு பேரும் இவ்வளவு நாள் பிரிஞ்சி இருந்த மாதிரியே தெரியல!” பாசில் சொல்லிட, “நாங்க முறுக்கிட்டு திரிய சண்டைப்போட்டாடா பிரிஞ்சோம்?” என்று பதில் வழங்கிய யது “நாங்க ரெண்டு பேரும் ரகசியம் பேசனும். நீ அப்படி ஓரமா பெட்டில் போய் படு” என்றுகூறி விநோவை அழைத்துக்கொண்டு பால்கனி சென்றான் யது.

“அவன் எதாவது தப்பா நினைக்கபோறான்டா!” என்று விநோ யதுவிடம் முடிக்கும் முன், “நான் ஒண்ணும் நினைக்கல, நீங்க பேசுங்கடா” என்று சொல்லியிருந்தான் பாசில். போர்வையை இழுத்து போர்த்தி அடுத்த நிமிடம் உறங்கியும் இருந்தான்.

பால்கனிக்கு வந்ததும், “இப்படி கீழவே உட்காருவோம் விநோ, நிற்க வேண்டாம். நின்னாலும் இருட்டில் உருவம் தெரியும் தானே” என்ற யது சுவற்றில் சாய்ந்து கால்நீட்டி அமர்ந்துவிட்டான்.

அவனை பின்பற்றி அமர்ந்த விநோதன்,

“என்னடா இது, ஒவ்வொரு நொடியும் இப்படி எச்சரிக்கையா இருந்துதான் ஆகணுமா?” எனக் கேட்டான்.

“என் நிழல் அசைவைக்கூட கண்காணிக்க ஆளிருக்காங்க” என்ற யதுவிடம் விரக்திப் புன்னகை.

“அப்புறம் எதுக்குடா தெரிஞ்சே ஆபத்தோட இந்த பதவி?”

“இது என் அப்பாவோட கனவு” என்ற யது, “என்னைப்பற்றி கதை வரும்போது ஆத்தர்(நான் தான்😁) டீட்டெயிலா சொல்லுவாங்க, இதுல நீதான் ஹீரோ. சோ, இப்போ நாம பேச வேண்டியதை பேசுவோம்” என்று விஷயத்திற்கு வந்தான்.

“என்ன பிளான் வச்சிருக்க?” என்று ஆரம்பித்த யது, “குட்டப்பனை இப்போ கைது செய்ய உனக்கு விருப்பமில்லை போலிருக்கே?” என்றான் கேள்வியாக.

“இதை மொத்தமா அழிக்கணும் யது. குட்டப்பனோடு இது முடியப்போறதில்லை.அவனில்லன்னா வேறொருவன். ஏன், அவனுடைய ஆட்களே வேறு யாராவது செய்யலாம்.” நிதர்சனத்தைக் கூறினான் விநோதன்.

“அப்போ என்ன பண்ணலாம்?”

“இதை கொஞ்சம் பொறுமையாகத்தான் டீல் பண்ணனும்” என்று விநோதன் கூறிட, “அதுவரை இது நடக்கட்டும் சொல்றியா?” என்று அதிர்ந்தான் யதுநந்தன்.

“தற்காலிகமா நிறுத்தி வைக்க என்ன பண்ண முடியுமோ பண்ணு. இருக்கும் ஆதாரங்களை வைத்து” என்ற விநோதன் மேற்கொண்டு எப்படி இவர்களை பிடிப்பது, அதற்கு எத்தனை காலங்கள் ஆகுமென தான் கணித்து வைத்திருக்கும் யாவற்றையும் விளக்கிக் கூறினான்.

“ரொம்ப ரிஸ்க் எடுக்குறியோன்னு தோணுதுடா?” யதுவிற்கு நண்பனை நினைத்து பயந்து வந்தது.

“மக்களுக்கு சேவை செய்யும் தொழிலில் இருந்துகொண்டு, ரிஸ்க் எடுக்க யோசிக்கலாமா” எனக்கூறி அளவாக சிரித்த நண்பனின் முகத்தை பார்த்துக்கொண்டே இருக்கணும் போலிருந்தது யதுவிற்கு.

“எதுக்கும் கவனமா இருடா!” யதுவிற்கு மனதில் அனுமானிக்க முடியாத படபடப்பு.

“நான் கவனமாத்தான் இருப்பேன். அப்படியே மிஸ் பண்ணிட்டாலும், என்னை சேவ் பண்ண நீ வரமாட்டியா என்ன?” கேட்ட விநோவை தாவி அணைத்திருந்தான் யதுநந்தன். மனம் ஏனோ யதுவிற்கு வலிப்பதை போலிருந்தது. விநோவை விட்டுவிடாதே என்று கூக்குரல் எங்கிருந்தோ ஒலிப்பது போலிருந்தது.

“நான் கிளம்புறேன் யது.” அவனிடமிருந்து பிரிந்து எழுந்துகொண்டான் விநோதன்.

இத்தனை வருடங்கள் கழித்து பார்த்த தன் நண்பனை காண்பது இன்று தான் கடைசி என்பது யதுவிற்கு தெரிந்திருந்தால் தன்னுடைய விநோதனை வீட்டிற்கு செல்ல அனுமதித்திருக்கமாட்டானோ!

*************************

விநோதன், யது நந்தனிடம் பேசி வந்துவிட்டான்.

ஆனால் அவனுக்கு இது எந்தளவிற்கு சாத்தியம் என்று தெரியவில்லை. ரிஸ்க் இல்லாத வேலையே இல்லை. அதுவும் காவல்துறையில் உயிரை பணயம் வைத்து ரிஸ்க் எடுத்தால் தான் ஒவ்வொரு வழக்கிற்கும் தகுந்த முடிவு கிடைக்கும்.

வளரும் முள்ளுச்செடியின் துளிரை வெட்டினால், மீண்டும் மீண்டும் வளர துளிர் விடத்தான் செய்யும். அது வளரவேகூடாதென்றால், அதன் வேரை  பிடுங்க வேண்டும். மொத்தமாக அழிக்க வேண்டும். இதில் விநோதனின் திட்டம் இதுதான்.

விநோதனுக்கு நன்கு தெரியும், இது குட்டப்பனோடு முடிவடைவதில்லை. அவன் விசாரித்த வரையிலும் குட்டப்பனிலிருந்தும் அனுமார் வால் போல் ஈடுபட்டிற்கும் தலைகளின் எண்ணிக்கை நீண்டுகொண்டே சென்றது.

எத்தனை பேர் பாதிக்கப்படுவார்கள்… நினைத்தவன் யதுவிடம் சொல்லிய திட்டத்தை நாளையே செயல்படுத்த வேண்டுமென்ற எண்ணத்துடன் உறங்கிப்போக, இரவு இரண்டு மணிக்கு அவனின் போன் ஒலித்தது.

இந்நேரத்தில் யாரென்று பார்க்க… புது எண்ணாக இருந்தது.

ஏற்ற நொடி பெண்ணின் அலறல் அவனின் காதில் மோதியது.

“ஹலோ சார்… ஏசிபி சார் தானே” என்ற பெண் தன்னை கடத்தி வந்துவிட்டதாகவும், கடற்கரையில் சிறு படகில் கட்டிவைத்திருப்பதாகவும், இன்னும் சிறிது நேரத்தில் நடுகடலுக்கு சென்று அங்கிருக்கும் கப்பலில் யாரிடமோ கைமாற்றாம் செய்யப்போவதாகவும் சொல்லி கதறினாள்.

“சார் காப்பாத்துங்க… காப்பாத்துங்க சார்…”

படுக்கையிலிருந்து வேகமாக விநோதன் எழ,

எதிரில் அப்பெண்ணை அறையும் சத்தமும், அப்பெண் வலியில் அழுகும் சத்தமும் கேட்டதோடு அலைப்பேசி தரையில் சிதறி டப்பென்று அழைப்பு துண்டானது.

துரிதமாக தன்னுடைய அலைப்பேசியின் வாயிலாகவே தற்போது வந்த அழைப்பு எங்கிருந்து வந்ததென்று அறிந்துகொண்டவன் தன்னுடைய வாகனத்தில் விரைந்து சென்றான்.

கடற்கரையை ஒட்டிய பகுதி.

இருள் படர, ஆளரவமின்றி நிசப்தமாக இருந்தது.

எங்கும் காற்றை உரசும் அலைகளின் பெரும் சத்தம்.

வண்டியிலிருந்து இறங்கியவன் பார்வையை சுழலவிட்டான். அங்கு பல படகுகள் கரையின் மணற்பரப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்க, தூரத்தில் ஒரு படகு மட்டும் அலைதட்டி நின்று கொண்டிருந்தது.

அதனை நோக்கி விநோதன் காலடி எடுத்து வைத்திட… அவனை நோக்கி ஒளி பாச்சியடிக்கப்பட்டது. சட்டென்று முகத்தில் மோதிய வெளிச்சத்தில் கண்கள் கூசிட கை வைத்து மறைத்தவன், கையினை இறக்கிட இருபது அடி தொலைவில் ஒரு வண்டி நடுநாயகமாக நின்றிருந்தது.

அவ்வண்டியின் ஹெட் லைட் வெளிச்சம் அது.

பேனெட்டில் ஒருவன் கால் மேல் காலிட்டு அமர்ந்திருக்க, அவனுக்கு முன்னிருந்த ஒளி மறைவால் அவன் யாரென்று சரியாகத் தெரியவில்லை. முகம் இருள் அடைந்து தெரிந்தது.

வண்டிக்கு இரு பக்கமும் பருத்த மற்றும் உயர்ந்த தோற்றத்தில் பத்துக்கும் மேற்பட்ட ஆட்கள் கைகளை பின்னால் கட்டிக்கொண்டு நின்றிருந்தனர்.

இதற்கெல்லாம் அஞ்சுபவன் விநோதன் இல்லையே!

வழக்கமான தன்னுடைய வேக எட்டுக்களை வைத்து முன்னேறினான்.

அருகில் செல்ல செல்லத்தான் வண்டியின் மீது அமர்ந்திருக்கும் உருவம் யாரென்று தெரிந்தது.

‘குட்டப்பன்.’ விநோதன் அலட்டிக்கொள்ளவே இல்லை. அவன் எதிர்பார்த்தது. ஆரம்பித்தது எதிராளியாக இருக்கலாம், அரங்கேற்றம் காக்கியின் கையில்.

“வாங்க ஏசிபி” என்று சத்தமாக வரவேற்ற குட்டப்பன், “இந்நேரத்தில் இங்கெங்கே? மீன் பிடிக்க வந்தீங்களா?” எனக் கேட்டான். அதனை கிண்டல் என நினைத்து அவனே சிரித்தான்.

விநோதன் தோரணையாக நின்றான்.

“கடத்தின பெண் எங்கே?” அப்பட்டமான மிரட்டும் தொனி.

“ஹா… ஹா…” சத்தமிட்டு சிரித்த குட்டப்பன், “ஹேய் இங்கு வாடி” என்று தன்னுடைய ஆட்களுக்கு நடுவில் குரல் கொடுக்க….

முன் வந்து நின்று தலையில் போட்டிருந்த துணியை விலக்கிவிட்டு, ஒப்புக்கு சுற்றியிருந்த புடவையை உருவி விநோதனின் முன் குத்தாட்டம் போட்டான் ஒருவன்.

அடுத்து அவனே அப்பெண்ணின் குரலில் பேசி காட்டிட… விநோதனின் கோப ஊற்று கொப்பளித்தது.

“இன்னும் நான் கை வைக்காத தொழில் அது ஒண்ணு தான்… ஏனோ பொண்ணுங்க அழுதா என் மனசு தாங்காது. எனக்கும் பொம்பளை பிள்ளைங்க இருக்கே. அதனால் அந்த தொழில் செய்திட மனசு வரதில்லை” என்ற குட்டப்பன், “உன்னை ஓடி வரவைக்க பொண்ணு குரல் போதும். உனக்காக எதுக்கு பொண்ணை கடத்தி என் பாலிசியை நானே உடைக்கணும்” என்றிட விநோதனின் கை முஷ்டி இறுகியது.

ஆத்திரம் கண்களை சுழற்றியது.

தொடையில் மூடிய கையினை குத்தி தன்னை சமன்படுத்தினான்.

குட்டப்பனின் பேச்சு விரசாமில்லாமல் இருந்தாலும், அதில் பொதிந்திருக்கும் பொருள் கேட்கும் நன்மக்கள் யாவருக்குமே கோபம் எழும்.

“இப்போ மட்டும் நீ செய்யும் தொழில் ரொம்ப நல்லத்தொழிலோ?” விநோதனின் குரலில் நக்கல் வழிந்தது.

“நான் அப்படி சொல்லலையே ஏசிபி சார்…” என்ற குட்டப்பன், “நான் பண்ற தொழில் எல்லாமே அன்டர்கிரவுண்ட் வேலை தான். இந்த வெள்ளை வேட்டிலாம் அதுக்காக நான் போடும் வேஷம்” என்றார்.

“என்னண்ணா அவனை எதுக்காக வரவச்சோம் என்பதை மறந்துட்டு அவன்கிட்ட பேசிட்டு இருக்கீங்க?” ஒருவன் எகிறினான்.

“இருடா… இங்கு வந்துட்டான்ல. எப்படியும் உயிரோடு திரும்பி போகப்போறதில்லை. கடைசியா பேசிப்போம்” என்ற குட்டப்பன்,

“என்னை அரேஸ்ட பண்ணப்போறியாமே?” என மிதப்பாகக் கேட்டான்.

விநோதன் பதில் சொன்னானில்லை.

“கவர்னர் பங்களாவில் பேசியது எனகெப்படித் தெரியும் ஆச்சரியமா இருக்கா?”

இல்லையென தலையசைத்த விநோதனிடம் மர்மமானப் புன்னகை. அதன் பொருள் அவன் மட்டுமே அறிவான்.

“நீ மாட்டுவ” என்று மட்டும் சொன்னான்.

“அவ்வளவு எளிதில் என்னை மாட்டவைக்க முடியாது” என்ற குட்டப்பன், “நீ மூடின கேக் ஷாப்பில் மட்டும் நாள் ஒன்றிற்கு எவ்வளவு வருமானம் தெரியுமா?” என்று ஆக்ரோஷமாக வினவியபடி குட்டப்பன் வண்டியிலிருந்து குதித்து விநோதன் முன் அரக்கனாய் நின்றிருந்தான்.

விநோதன் அசரவில்லை. ஓரடி பின் நகர்ந்தான் இல்லை.

“உன்னிடம் இருக்கும் மொத்த ஆதாரத்தையும் கொடுத்திடு… உன்னை விட்டுடுறேன்.”

குட்டப்பனின் வார்த்தையில் அலட்சியமாக சிரித்தான் விநோதன்.

விநோதனின் விரிந்த புன்னகை குட்டப்பனை சீண்டி பார்த்தது.

“என்னை கடுப்பேத்தாதே!”

“ச்சூ… நானா?” என்ற விநோதன், “நீதாண்டா நான் வந்ததிலிருந்து பேசியே கடுப்பேத்துற” என்றான்.

“ஆக்ஷன் சீன் எதிர்பார்த்து இங்கு வந்தேன்டா. நீ இப்படி டயலாக் பேசுவன்னு நினைக்கல” எனக்கூறி அட்டகாசமாக சிரித்தான் விநோதன்.

“இதுக்குத்தான் வந்ததும் போடணும் சொன்னேன்” என்று குட்டப்பனின் குறுக்கே நுழைந்து விநோதனை ஒருவன் அடிக்க வர ஒற்றை கால் சுழற்றி அவன் உணரும் முன்னே தரையில் சாய்த்திருந்தான்.

அவனிடம் சிறு நெளிவும் இல்லை.

“உயிர் இருக்கா பாருடா!” குட்டப்பனின் குரலில் ஒருவன் ஓடிவந்து விழுந்தவனின் நாடி தொட்டு பார்க்கும் முதலே…

“இருக்காது” என்றான் விநோதன்.

“ஆமாண்ணா… போயிட்டான்.” சொன்னவன் விநோதனின் ஒரு அடியில் மரணத்தை தழுவியிருந்தவனை கண்டுகொள்ளாது, விநோதன் அடுத்து தன்னை தாக்கிடுவானோ என அஞ்சி பின் நகர்ந்தான்.

குட்டப்பன் அதில் அவனை முறைக்க…

“சிரிப்பு காட்டிட்டே இருக்கீங்கடா!” என்றான் விநோதன்.

“ஒவ்வொருத்தனா வந்தா போட்டுதள்ளத்தான் செய்வான். மொத்தமா போங்கடா!” குட்டப்பன் தன்னுடைய ஆட்களுக்கு உத்தரவிட அனைவரும் ஒன்றாக சேர்ந்து விநோதனை தாக்கினர்.

விநோதன் எதற்கும் அசரவில்லை. காற்றாய் சுழன்றான். அவனது ஒவ்வொரு அடியும் இடியாய் இறங்கிட மாமிச மலையாய் நின்றிருந்தவர்கள் மணலாய் சரிந்தனர்.

விநோதனின் அடிகள் நிதானமாக இருந்தது. எங்கு அடித்தால் எழுந்திரிக்க முடியாது சுருண்டு தரை தொடுவர் என நன்கு அறிந்து அடித்தான்.

ஒவ்வொருத்தனும் ஆக்ரோஷமாக கத்திக்கொண்டு விநோதனின் மீது பாய்ந்திட, அவனோ தன்னுடைய வழக்கமான நடையுடன் வீழ்த்திக் கொண்டிருந்தான்.

குட்டப்பன் முன் ஏற்பாட்டின் படி ஆட்கள் வந்துகொண்டே இருக்க… விநோதன் சளைக்காது சரித்துக் கொண்டிருந்தான்.

சில நிமிடங்களில் அவ்விடம் எங்கும் வலியில் முனகியபடி, எழ முடியாதவாறு வலியில் துடித்துக் கொண்டிருந்தனர் குட்டப்பனின் ஆட்கள்.

இப்போது ஒய்யாரமாக வண்டியின் மீது குதித்து ஏறி தோரணையாக அமர்ந்தான் விநோதன்.

கால் மேல் காலிட்டு, காலினை ஆட்டியபடி அவன் அமர்ந்திருப்பதை பார்க்கவே குட்டப்பனிற்கு பற்றிக்கொண்டு வந்தது.

“என் ஆளுங்களையெல்லாம் அடிச்சிட்டா நீ பெரிய இவனா?” என்ன முயன்றும் அவனிடம் அவருக்கு உண்டான பயம் குரலில் தென்பட்டுவிட்டது.

“அப்போ இல்லையா?” எனக் கேட்ட விநோதன், “இத்தனை பேரை அடிச்சது வீணாப்போச்சே விநோ” என்று போலியாக வருந்தினான்.

குட்டப்பன் தன் ஆட்களையெல்லாம் ஒரு பார்வை பார்த்தார்.

யாரும் எழுந்து அமரும் நிலையில் கூட இல்லை.

“குறைந்தது நாலு மாசமாகும்.” விநோதன் சொல்லியதும் என்ன என்பதைப்போல் அவனை ஏறிட்டார் குட்டப்பன்.

“உன் ஆளுங்க எழுந்திரிக்க!”

விநோதன் தனக்கு பின்னாலிருந்து சட்டைக்குள்ளிருந்து துப்பாக்கியை வெளியில் எடுத்து பக்கத்தில் வைக்க குட்டப்பனின் முகம் வெளிறியது.

குட்டப்பனின் பயத்தை அவதானித்தபடி அவரையே பார்த்திருந்தான் விநோதன். அது இன்னும் அவரின் பயத்தை அதிகரிக்கச் செய்தது.

தன்னுடைய ஆட்களின் ஒரு அடியாவது  விநோதன் மீது விழுந்திருந்தாலும்… இந்த பயம் குட்டப்பனிடம் வந்திருக்காதோ. அத்தனை தாக்குதலையும் அதிகம் சிரமம் கொள்ளாது தன்னுடைய நடையின் நெளிவுக்கு ஏற்ப தகர்த்திருந்தானே! அவனின் லாவகம் எதிராளியை வீழ்த்தும் யுக்தி என அனைத்தையும் கண்முன்னே பார்த்த குட்டப்பனுக்கு, அவனின் ஒரு அடிக்கு தான் தாங்கமாட்டோம் என்கிற பயம் தொண்டையை கவ்வி பிடித்தது.

குட்டப்பனின் அப்பட்டமான பயத்தை கண்டு கொண்ட விநோதனுக்கு, அவனுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்திட நினைத்தான்.

எப்படியும் குட்டப்பன் அதை ஏற்கப் போவதில்லை. இருப்பினும் குற்றவாளிக்கும் இறுதி சந்தர்ப்பம், விருப்பம் என்று கொடுக்க வேண்டுமென்பது சட்டமாகிற்றே. அதனை செயல்படுத்த முனைந்தான்.

“உன்னை நான் விடணும். அவ்வளவுதானே? விட்டுடுறேன். உனக்கு எதிரா சேகரித்து வைத்திருக்க ஆதாரம் எல்லாத்தையும் கொடுக்கிறேன்.” சொல்லியவன் பேச்சை நிறுத்தினான்.

“சொல்லு… நான் என்ன செய்யணும்? நீ சொல்லுறதை செய்யுறேன்!” என்று படபடத்தார்.

“ஒண்ணுமில்லை. உனக்கு பின்னால் யாரெல்லாம் இருக்கா? எங்கெல்லாம் இருக்காங்க? இதுக்கு பெரிய தலை யாரு? சொல்லிட்டா உன்மேல் சின்ன கேஸ் கூட இல்லாம முடிச்சிடுறேன்.”

விநோதன் சொல்லியதில் குட்டப்பனின் முகம் யோசனையை காட்டியது.

“அது வந்து…” என்றபடி குட்டப்பனின் பார்வை விநோதனின் பின்னால் செல்ல… என்னவென்று விநோ சுதாரித்து திரும்புவதற்குள் தடித்த இரும்பினால் அதிவேகத்தில் தலையில் தாக்கப்பட்டு கண்கள் சொருக கீழே விழுந்தவனின் பின்னங்கழுத்தில் குருதி வழிந்தோடியது.

“அறிவிருக்கா உங்களுக்கு? அவன் போட்டுவாங்க ட்ரை பன்றான். அது தெரியாம வாக்குமூலம் கொடுக்க ரெடியாகிட்டிங்களோ?” என்று காய்ந்தான். விநோதனை வீழ்த்தியவன்.

அரை மயக்கத்தில் அவனின் குரலை கேட்டு, விநோதனுக்கு அவன் யாராக இருப்பான் என்கிற யோசனை அந்நிலையிலும் அவனுள் ஓடியது.

அவனை யாரென்று பார்த்திட வேண்டுமென, அவனின் காலை பிடித்து தரையில் இழுக்க முயல, விநோதனின் நெஞ்சிலேயே காலினால் உதைத்து தள்ளியதோடு கையில் வைத்திருந்த இரும்பினால் மீண்டும் முன்பக்க தலையில் அடித்தான் அவன்.

இரும்பின் கனம், அடித்தவனின் அதிக விசையின் அழுத்தம் விநோதனை ஸ்தம்பிக்க செய்திருந்தது.

உணர்வுகள் தப்பிட மயக்க நிலைக்கு ஆட்பட்டான் விநோதன்.

“கொன்னுட்டியாடா?” குட்டப்பன் அதிர்ந்தார்.

“இவன் உயிரோடிருந்தா நம்மை அழிச்சிடுவான்” என்றவன் சுற்றி பார்வையை சுழற்றினான்.

“இவனை இப்படியே விட்டுட்டு போனால் நமக்கு ஆபத்து” என்றவன், விநோதனை ஒரு மூட்டைக்குள் அடைத்து, அதனோடு பெரிய கல்லையும் சேர்த்து கட்டி படகில் ஏற்றியவன் குட்டப்பனுடன் நடுக்கடலை நோக்கிச் சென்றான்.

அலைகளின் ஆர்பரிப்பின்றி ஆழ்ந்த அமைதியை தனக்குள் புதைத்தபடி இருந்த சமுத்திரத்தின் நடுவில் விநோதனை மூட்டையாக தூக்கிப்போட்ட இருவரும், விநோதன் மெல்ல மெல்ல நீருக்குள் அமிழ்ந்து போவதை குரூரமாக ரசித்திருந்தனர்.

அரக்கர்களின் எண்ணங்கள் யாவும் ஈடேறுமெனில், நீதிதேவனின் கரங்கள் கட்டப்பட்டுவிட்டனவா?

காலனின் கைகளுக்குள் அகப்பட்ட விநோதனின் நியாயங்கள் யாவும் தர்மத்தின் பார்வையில் தப்பிவிடுமா?

ஆழ்கடலின் அமைதியில் விநோதனின் மூச்சுக்காற்று அடங்கிட… அவனோடு அவனது லட்சியங்களும் அடங்கிப்போயின.

Click on a star to rate it!

Rating 4.5 / 5. Vote count: 11

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
9
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

4 Comments

  1. யது இதை எப்படி தாங்குவான்?? விநோவின் நேர்மையும் கடமையும் இப்படி ஆகிவிட்டதே..விநோ கடலில் இருந்து மீண்டு வருவானா?