Loading

மக்கள் கூட்டம் அதிகமாக அலைமோதும் பாரிஸ் கார்னர் ஜார்ஜ் டௌனில் அமைந்துள்ளது பல ஏழைகளின் அதர்மமும், சில பணக்காரர்களின் தர்மமும் காக்கும் சென்னை உயர்நீதி மன்றம். சிறு குற்றத்திற்கு உடனடி தண்டனை பெறும் குற்றவாளிகளும், பெரும் குற்றத்திற்கு ஜாமீன் வாங்கி காரில் செல்லும் குற்ற(மற்ற)வாளிகளும் ஆங்காங்கே தென்பட, அக்கரைச்சலின் இடையில், கண்ணைக் கசக்கியபடி நீதிமன்ற வளாகத்தில் நின்றிருந்தாள் கிரிஜா.

அவளுக்கு எதிரில் தீர்க்கமான பார்வையுடன், கிரிஜாவிடம் விசாரித்துக்கொண்டிருந்தாள் கிரிமினல் லாயர் சம்யுக்தா.

“நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க கிரிஜா. உங்க கணவரைக் கொன்னவங்களுக்கு எதிரா எந்த ஆதாரமும் இல்லாம போனாலும் தகுந்த தண்டனை நான் வாங்கி தருவேன். பணம் இருக்குன்னு அவங்க என்ன வேணா செய்வாங்களா? ரெண்டு நாள்ல, ஃபைனல் ஹியரிங் இருக்கு. அதுக்குள்ள அந்த டீ – ஃபார்மா கம்பெனியோட சேர்மன் சுகுமாரனுக்கு எதிரா இன்னும் ஸ்ட்ராங் எவிடென்ஸ் கலெக்ட் பண்ணிடுவேன்…” என்றாள் கண்ணில் தீயுடன்.

கிரிஜாவோ அழுதபடி, “உங்களை நம்பித்தான் மேடம் நான் இருக்கேன். கால் ஊனமுள்ள என் புருஷனை அநியாயமா கொன்னுட்டாங்க. அவங்க பண்ற மருந்துல விஷத்தைக் கலப்படம் பண்ணி, அதை யார்கிட்டயும் சொல்லக் கூடாதுன்னு என் புருஷனை மிரட்டி, அவரு கேட்கலைன்னதும் கொலையே பண்ணிட்டாங்க. அந்த சுகுமாரன் பண்ண தப்புக்கான ஆதாரம் எல்லாம் என் புருஷன் வைச்சுருந்தாரு. அதையும் எடுத்துட்டு போய்ட்டாங்க. அவன சும்மா விட்டா என் புருஷன் ஆவி கூட என்ன மன்னிக்காது” என வாய் பொத்திக் கதறினாள்.

“டோன்ட் ஒரி கிரிஜா. கண்டிப்பா தண்டனை வாங்கி குடுக்கலாம். நீங்களும் உங்க ஹஸ்பண்ட் சேகரும் ஒண்ணா தான டீ – ஃபார்மா கம்பெனியில ஒர்க் பண்ணுனீங்க. உங்களுக்கு இதைப் பத்தி எதுவும் தெரியலையா? ஐ மீன், உங்க ஹஸ்பண்ட் வச்சுருந்த ஆதாரம் பத்தி…?” என விழி உயர்த்தி வினவியவனாள் சம்யுக்தா.

“இல்ல மேடம். எனக்கு அவரு இறக்க போற கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் இப்படியொரு விஷயம் நடந்துருக்குன்னே தெரியும். அதுவும் ஒரு பெரிய பணக்காரர் நம்மள மிரட்டுறாருன்னு சொன்னா எப்படி இருக்கும்? ரொம்ப பயந்துட்டேன். அதுனால தான் என் புருஷனை தனியா விட்டுட்டு நான் கோவிலுக்குப் போயிட்டு வந்தேன். வந்து பார்த்தா என் புருஷனை அந்த ஆளு கொலை பண்ணிருக்கான். இதைத் தவிர எனக்கு வேற எதுவும் தெரியல மேடம்… என் புருசனுக்கு நீதி வாங்கி குடுங்க!” எனக் கையெடுத்து கும்பிட, சம்யுக்தாவோ அவளை சமன் செய்து அனுப்பி விட்டு, தீவிர சிந்தனையுடன் தன்னுடைய கேபின் நோக்கி வீறு நடையுடன் சென்றாள்.

அப்பொழுது அவளை வழி மறித்த சுகுமாரன் “வணக்கம் லாயர் மேடம். தேவையில்லாம இந்த கேஸ்ல ஆஜர் ஆகி உங்க பேரைக் கெடுத்துக்குறாதீங்க. உங்களுக்கு எவ்ளோ பணம் வேணாலும் தரேன். இந்த கேஸை எனக்கு ஆதரவா நடத்தி குடுங்க!” என்றார் கரகரப்பான குரலில்.

வயது 55 முடிந்தது என அவரின் முன் நெற்றி வழுக்கை தெளிவாய் உரைக்க, சம்யுக்தாவோ அவரை விழி இடுங்க முறைத்து, “சட்டப்படி, தர்மப்படி தப்பு பண்ணவங்க தண்டனை அனுபவிச்சே ஆகணும் சுகுமாரன் சார்…” என ஏளனமாய் உரைத்தவள், அவர் அடுத்து பேசும் முன், அதனைக் கண்டுகொள்ளாது அவளின் இருப்பிடம் வந்தாள் புயலாய்.

வெளிர் சிவப்பு நிறத்தில் அவள் அணிந்திருந்த காட்டன் புடவை அவளின் மென்னிடை மேனிக்கு பாந்தமாய் பொருந்தி இருந்தது. எப்பொழுதும், எதையும் ஆராய்ச்சிப்பார்வையுடன் நோக்கும் அவளின் கருவிழிமணிகளில் லேசாகத் தீட்டப்பட்ட மை, தன்னவளின் கண்ணசைவுக்கு கட்டுப்பட்டு சிறிதும் கலையாமல் அப்படியே நிற்க, ஆசுவாசமாக இருக்கையில் அமர்ந்தாள்.

அப்போது அவளின் ஜுனியர் வக்கீலான நேஹா, “மேம்! உங்களைப் பார்க்க ஒரு க்ளையண்ட் வந்துருக்காங்க…” எனப் பணிவாய் கூறியதில், “ஏன் அந்த க்ளையண்ட்க்கு பேர் எல்லாம் இல்லையா? முதல்ல அவங்களை பத்தி விசாரிச்சுட்டு தென், என்கிட்ட கொண்டு வாங்க… போங்க!” எனத் தன் கணீர் குரலிலேயே அமைதியாக உத்தரவிட, அதில் நேஹா நெளிந்து நின்றாள்.

சம்யுக்தா தான் அவளை, “இன்னும் ஏன் நிக்கிறீங்க?” எனக் கூர்பார்வையுடன் காண, நேஹாவோ, “மேம்… அது வந்து…” என இழுத்தவள், சம்யுக்தாவின் பார்வை அவளை வதம் செய்வதை உணர்ந்ததும், “சார் நேம் ஹரி கிருஷ்ணா… அதைத் தவிர வேற எதுவும் சொல்ல மாட்டேங்குறார் மேம். உங்கள தான் நேரா பாக்கணும்னு சொல்றாரு. விட்டா அவரே உள்ள வந்துடுவாரு போல!” எனக் கூறி முடிக்கும் முன், ‘டக் டக்’ என்று ஷூவின் சத்தம் காது கிழியும் அளவு சத்தத்துடனும் அழுத்தமான நடையுமாக சம்யுக்தாவின் மீது தன் காந்தப்பார்வையை படரவிட்டபடி அனுமதியே இல்லாமல் உள்நுழைந்திருந்தான் ஹரி கிருஷ்ணா.

அதில் சினம் கொண்ட மங்கையவள், “ஹெலோ! கொஞ்சமாவது டீசன்ஸி இருக்கா? இப்படி தான் பெர்மிஷன் இல்லாம, அப்பாயின்மென்ட் வாங்காம உள்ள வருவீங்களா? ஜஸ்ட் கெட் அவுட்!” என அவளின் சிறிய இதழ்களை விரித்துக் கரித்துக் கொட்ட, அவனோ அதனை எல்லாம் கண்டுகொண்டது போன்றே தெரியவில்லை.

“டீசன்ஸி எனக்கு இருக்கா இல்லையான்னு அப்பறம் செக் பண்ணலாம்… முதல்ல ஒருத்தர் உங்களைப் பார்க்க வந்தா என்ன ஏதுன்னு கூப்பிட்டு விசாரிங்க. நீங்க பெரிய பெரிய கேஸ்க்கு ஆயிரத்துல ஃபீஸ் வாங்குற லாயரா இருக்கலாம். அதுக்காக அவசரத்துக்கு வந்தவங்களை இப்படி தான் நிக்க வைப்பீங்களா? ஆற அமர, பொறுமையா பிரச்சனையை முடிக்கிற அளவு நேரம் இருந்தா அதை நாங்களே பார்த்துக்க மாட்டோமா…? அப்பறம் எதுக்கு வக்கீல்னு உங்களை மாதிரி ஆளுங்களை தேடி வரோம்… மிஸ் ஆர் மிஸ்ஸஸ்?” எனப் படபட பட்டாசாய் பொரிந்து தள்ளியவன், டேபிளின் மேல் இருந்த அவளின் பெயர்ப் பலகையை ஒரு முறை கண்டு விட்டு, “மிஸ். சம்யுக்தா” என்று முடித்தான்.

அதில், பெண்ணவள் தான் தன் வெண்மணி பற்களைக் கடித்துக்கொண்டு எரிக்கும் பார்வை பார்த்தாள்.

“லுக் மிஸ்டர்…” என்று அவனை எதிர்த்து ஏதோ பேசும் முன், அவளின் செல்பேசி அழைப்பு விடுத்தது. ஹரி கிருஷ்ணாவோ அவளெதிரில் இருந்த சேரில் தெனாவெட்டாய் அமர்ந்து, “ம்ம்… எடுத்துப் பேசுங்க சம்யுக்தா” என சற்றே திமிராய் கூற, அவளும் போனை எடுத்தாள்.

எதிர்முனையில் அவள் தொழில் கற்றுக்கொண்ட அவளின் ஆஸ்தார குரு மற்றும் சீனியர் வக்கீலான ராமச்சந்திரன் பேசியதில் குரலில் வெகுபணிவுடன் பேசினாள்.

ராமச்சந்திரன், “யுக்தாம்மா… ஹரி கிருஷ்ணான்னு ஒருத்தர் உன்ன பார்க்க வந்தாரா? அவன் எனக்குத் தெரிஞ்ச பையன் தான். ரொம்ப முக்கியமான கேஸ். ஐ நோ உனக்கு ரெகமெண்டேஷன்ன்னு பிடிக்காதுன்னு! அதோட எனக்கும் யாரையும் ரெகமெண்ட் பண்ண பிடிக்காதுன்னு உனக்குத் தெரியும். பட் இது கொஞ்சம் கான்ஃபிடென்ஷியல்… சோ…” எனத் தயங்கி பேச்சை நிறுத்தினார்.

அதற்குள் சம்யுக்தாவோ, “சார்… நீங்க சொல்லி நான் மறுப்பேனா! நான் பாத்துக்குறேன் சார். டோன்ட் வொரி!” என உடனடியாக அவருக்கு உதவி செய்ய விழைந்து விட்டு போனை வைத்தவளுக்கு அதன் பிறகே, அது எதிரில் இருந்த ‘ஹரி கிருஷ்ணா’ என்றே உரைக்கச் சற்றே எரிச்சல் மூண்டது.

‘சே… யோசியாமல் சரி என்று சொல்லி விட்டோமே!” எனக் கடுப்பானவள், பின் தன்னை அடக்கிக்கொண்டு அவனைக் காண, அவனோ டேபிளை தன் விரல்களால் தட்டிக்கொண்டு, ஒரு கையால் சவரம் செய்து ஒரு நாளே ஆன தாடியை தடவிய படி எங்கோ பார்த்து சிந்தித்துக் கொண்டிருந்தான்.

“ஹெலோ!மிஸ்டர்… ஹரி கிருஷ்ணா?” என அவள் இரண்டாம் முறையாய் அழைத்த பிறகே, அவளைக் கண்டு “எஸ்?” என்றான்.

“நியாயமா உங்களை உட்கார வைச்சு பேசிட்டு இருக்க கூடாது தான். ஆனா ராமச்சந்திரன் சார் சொன்ன தாள தான் உங்களுக்கு ஹெல்ப் பண்றேன்…” என்று கண்டிப்பாய் கூறியவள், “என்ன பிரச்சனை?” என்றாள் வினாவாக.

அவனோ அதற்குப் பதில் கூறாமல், “எக்ஸ்கியூஸ் மீ! நீங்க எனக்கு ஒன்னும் ஃப்ரீயா ஹெல்ப் பண்ண வேணாம். உங்க ஃபீஸ் என்னன்னு சொல்லிடுங்க. கேஸ் முடியவும் செட்டில் பண்ணிடுறேன்!” என வார்த்தைகளில் சிறிது ஏளனத்தை தெளித்து பேசியவன், “என் காரை காணோம்!” என்றான் யோசனையாக.

சம்யுக்தாவிற்கு தான் மேலும் கோபம் கொழுந்து விட்டு எரிந்தது.

பின், அதே எரிச்சலுடன் “ப்ச்… காரை காணோம்னா போலீஸ் ஸ்டேஷன்ல போய் கம்பளைண்ட் குடுங்க மிஸ்டர். இங்க ஏன் வந்தீங்க?” என்று பொரிய, அவனோ “அது எங்களுக்குத் தெரியாதா? இது போலீஸ்க்கு…” என்னும் போதோ, அவனுக்கு போன் வர, அதனை எடுத்துக் காதில் வைத்தான்.

எதிர்முனையில் யாரோ பேசியதில், சற்றே குரலைத் தணித்து “புரியாம பேசாதீங்க பா… கார காணோம்னு போலீஸ் இல்ல, யார்கிட்டயும் கம்பளைண்ட் குடுக்க முடியாது. உங்களுக்குத் தெரியாதா அதுல எவ்ளோ முக்கியமான டாகுமெண்ட்ஸ் இருக்குன்னு? இது வெளிய தெரிஞ்சா எல்லாருக்கும் பிரச்சனை. நம்ம அரசுக்கும் கூடத் தான்… வைங்க நான் பாத்துக்குறேன்” என்று புருவ முடிச்சுடன் பேசிவிட்டு போனை வைத்தவன் சம்யுக்தாவை நோக்கினான்.

அவன் என்ன தான் மெதுவாகப் பேசினாலும், அது சம்யுக்தாவிற்கு நன்றகவே கேட்டது. அல்லது, அவள் கேட்க வேண்டும் என்றே சற்று சத்தமாகப் பேசினானா? என்ற எண்ணமும் ஓடாமல் இல்லை தான். அதற்கு மேல், போலீசில் கூட சொல்ல முடியாத அளவு, அரசிற்கே பிரச்சனை வரக்கூடிய ‘டாகுமெண்ட்’ என்ன இவனிடம் இருக்க போகிறது? எனக் குழம்பியவள், “கார் காணாம போனதுக்கு நான் என்ன பண்ண முடியும் மிஸ்டர் ஹரி கிருஷ்ணா?” எனக் கேட்டாள் புரியாமல்.

ஹரி கிருஷ்ணாவோ “நான் போன்ல பேசுனதை எப்படியும் கேட்டுருப்பீங்கள்ல மிஸ் சம்யுக்தா. என்னால போலீஸ்கிட்ட போக முடியாது. ஆனால், என் காரைக் கண்டுபிடிச்சாகணும். அதுக்கு போலீஸ் மூளை உள்ள ஒருத்தர் வேணும்னு ராமச்சந்திரன் அங்கிள் கிட்ட கேட்டிருந்தேன். அவரு உங்களை ரெஃபர் பண்ணாரு. விளக்கம் போதுமா? இப்போ என் கார் எங்கன்னு தேடலாமா?” என அவன் போக்கிற்கு பேசிக்கொண்டே செல்ல, அவள் தான் “ஹெலோ ஹெலோ! ஸ்டாப்!” எனக் கடுப்பானாள்.

“உங்களால போலீசுக்கு போக முடியாதுனா டிடெக்டிவ்கிட்ட போங்க. அதுக்கு ஏன் சம்பந்தம் இல்லாம லாயர்ட்ட வந்துருக்கீங்க. இந்த விஷயத்துல என்னால உங்களுக்கு ஹெல்ப் பண்ண முடியாது. அதோட நீங்க பேசுறதை பார்த்தா ஏதோ பெரிய விஷயமா இருக்கும்ன்னு தோணுது. சோ…” எனப் பேசி முடிக்கும் முன், அவளை தடுத்தான்.

“ஃபைன்… ராமச்சந்திரன் அங்கிள்கிட்ட நான் சொல்லிடுறேன். நீங்க அறிவாளின்னு சொன்ன பொண்ணு, பக்கா லாயர் மாதிரி பேசுறாங்க. ராங் சாய்ஸ்ன்னு!” என்றவன், எழுந்து போனை எடுத்து ராமச்சந்திரனிற்கு போன் செய்தான்.

அதில் சம்யுக்தா தான், ‘சரியான இம்சை!” என முணுமுணுத்து, “சரிய்ய்ய்ய்! உட்காருங்க! நான் ஹெல்ப் பண்றேன்” என ஏகத்துக்கும் எரிச்சலை அடக்கியவளிடம், ஹரி கிருஷ்ணா “இப்போ உட்கார நேரம் இல்ல. நம்ம காரைக் கண்டுபிடிச்சு ஆகணும்” என்றான் மிகவும் பரபரப்பாக.

“ஓகே… உங்க காரை எங்க நிப்பாட்டிருந்தீங்க?” என அவள் விசாரணையைத் தொடங்குவது போல் கேள்வி கேட்க, அவனோ “இதென்ன கேள்வி? தலையிலயா வைக்க முடியும் கார. ரோட்டு மேல தான்” என்றான் சற்றே கிண்டலாக.

அவளோ வெறியாகி, “ஹெலோ! நீங்க ஒழுங்கா பதில் சொன்னா நான் விசாரிக்கிறேன். இல்லைன்னா நீங்களாச்சு உங்க காராச்சு…” எனக் காய்ந்திட, ஹரி தான் “ஓகே ஓகே… கூல்! இவ்ளோ டென்க்ஷனா இருந்தா சரியா யோசிக்க முடியாது. சோ, கொஞ்சம் காம் ஆகிட்டு அப்பறம் யோசிங்க மிஸ் சம்யுக்தா…” எனப் பக்குவமாய் பேசியவன், “என்ன கேட்டீங்க… ஹான்! காரை நான் என் வீடு இருக்குற தெரு முன்னாடி நிறுத்தி இருந்தேன்…” என்று பதிலுரைத்தான்.

அதனைக் கேட்டுக்கொண்டவள், “ஏன், உங்க வீட்ல கார் பார்க்கிங் இல்லையா? எப்போவுமே அங்க தான் நிறுத்துவீங்களா?” என ஆராய்ச்சி பார்வை பார்த்தாள்.

“எப்பவும் வீட்டுல இருக்குற பார்க்கிங்ல தான் நிறுத்துவேன். ஆனால், இன்னைக்கு காலையில என் தெருவுக்குள்ள போக முடியாத மாதிரி தரையை உடைச்சு ஆளுங்க வேலை பார்த்துட்டு இருந்தாங்க. மதியத்துக்குள்ள முடிஞ்சுடும்ன்னு அங்க வேலை பார்த்தவங்க சொன்னதால, நான் காரை அங்கேயே நிறுத்திட்டேன். அப்பறம் போய்ப் பார்த்தா கார் அங்க இல்ல…” என்றவனின் நெற்றி மத்தியில் சிறு சுருக்கம் விழுந்தது.

சம்யுக்தாவும் நெற்றியை தேய்த்து சிந்தித்து விட்டு, “சரி உங்க கார் காணாம போன இடத்தைக் காட்டுங்க” என்று எழும்ப அவனும், அவள் பின்னே வந்தான்.

அவள் காரில் ஓட்டுநர் இருக்கையில் அமரும் முன்பே, அவளுக்கு அருகில் இருந்த இடத்தில் ஹரி கிருஷ்ணா அமர்ந்ததில் திகைத்தவள், “மிஸ்டர்… நீங்க ஏன் என் கூட வரீங்க? உங்க வெஹிகிள்ல வாங்க!” என்று அதட்டலாகக் கேட்டாள்.

அவனோ, “என் வெஹிகிள் தான் தொலைஞ்சுடுச்சே மிஸ் சம்யுக்தா. தனி தனியா போனா எப்படி இன்வெஸ்டிகேட் பண்ண முடியும் சொல்லுங்க. அதான் வந்தேன். என் மேல சந்தேகம் இருந்தா உங்க சீனியர்க்கு போன் பண்ணி விசாரிச்சுக்கோங்க!” என்று அசட்டையாய் கூறி விட்டு, ஏசியை ஆன் செய்து கண்ணாடியைத் திருப்பித் தலை முடியைக் கைகளால் வாரி விட்டு சரி செய்தான்.

அவன் செயலைக் கண் சிமிட்டாமல் முறைத்த சம்யுக்தாவை கண்டவன், “என்ன மிஸ் சம்யுக்தா, ஆம்பளை பையன் தலை சீவி நீங்க இதுவரை பார்த்தது இல்லையா? இட் மேக்ஸ் மீ ஆக்குவார்ட்!” என அவள் மீதே பழி சுமத்த, ‘எனக்கு இது தேவை தான்…’ என நொந்தவள் வேறு வழி இல்லாமல் காரை எடுத்தாள்.

பத்து நிமிடங்களுக்கு செல்ல வேண்டிய இடத்திற்கு பல சந்து பொந்தை சுற்றி 20 நிமிடமாக்கி கூட்டி சென்றவன், ஒரு தெரு முனையைக் காட்டி “இங்க தான் நிறுத்துனேன்” என்றான் வேகமாக.

அவளும் இறங்கி சுற்றி முற்றி பார்த்து விட்டு, பின் ஏதோ தோன்ற “ஆமா இது கோர்ட்ல இருந்து ஒரே ரோடு தான… அதுக்கு ஏன் இவ்ளோ நேரம் சுத்த விட்டீங்க?” எனக் கேட்டாள் குழப்பமாக.

ஹரி கிருஷ்ணா தான், “ஓ! இப்படியும் வரலாமா? எனக்குத் தெரிஞ்ச ரூட்டு அது தான். இப்ப இதுவா முக்கியம் என் கார்…” என அங்கேயே நிற்க, அவளோ ‘சப்பா… முதல்ல இவன் கார கண்டுபிடிச்சா தான் எனக்கு நிம்மதி’ என்றெண்ணி “இங்க சிசிடிவி எதுவும்” எனக் கேட்க ஆரம்பிக்கும் போதே, “இங்க எங்கயும் கேமரா இல்ல” என்றான் உடனடியாக.

“ஓ! பக்கத்துல தெரிஞ்சவங்க…” என அவள் கேட்கையில், “அப்படி யாரையும் தெரியாது” என அவன் தோளைக் குலுக்கினான்.

“ஓகே… இங்க வேலை பாக்க வந்தவங்க யார்கிட்டயாச்சு…” என்று மீண்டும் ஆரம்பித்தவளிடம், “அதுவும் கேட்டாச்சு யாருக்கும் தெரியல” என்றான் உதட்டைப் பிதுக்கி.

அதில் அவள் தான் எரிச்சலாகி, “ப்ச்… எத கேட்டாலும் தெரியல, இல்லன்னு சொன்னா என்ன அர்த்தம்…?” என முறைத்ததில், ஹரி தான் “தெரியல, இல்லைன்னு தான் அர்த்தம்…!” என்றான் சற்று விரிந்த இதழ் நகையுடன்.

அவன் பேச்சில் பாவையவள் மேலும் கோபமாகிட, “ஓகே ஓகே… ரிலாக்ஸ். உங்கள பார்க்க வற்ரதுக்கு முன்னாடி நானே காரைக் கண்டுபிடிக்கலாம்ன்னு நினைச்சு, டீடைல்ஸ் கலெக்ட் பண்ணுனேன். பட் எனக்கு எந்த எவிடென்சும் கிடைக்கல. அதான் இப்போ உங்களைக் கூட்டிட்டு வந்துருக்கேன் மிஸ் சம்யுக்தா. டூ சம்திங்!” என்றான் இயல்பாய் ஆரம்பித்துப் பின் படபடப்பாக.

பின், சம்யுக்தாவும் சற்று சிந்தித்து விட்டு, “உங்க காரை யாராவது திருடிட்டு போனா உங்களுக்கு அலெர்ட் காட்டாதா மிஸ்டர் ஹரி?” என வினவிட, அவனோ மறுப்பாய் தலையசைத்தான்.

“சரி… இங்க பக்கத்துல யார்கிட்டையாவது விசாரிக்கலாம்…” என்றவள் சுற்றும் முற்றும் பார்க்க, அங்கு ஒரு ஒர்க்ஸ்ஷாப் தெரிந்தது.

அவளும் அந்த இடத்தைக் கூர்மையாய் ஆராய்ச்சி செய்தவாறு, அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒரு மெக்கானிக்கிடம் விசாரித்தாள்.

அவனோ முதலில் “நான் எதையும் பார்க்கலம்மா…” என்று அவன் வேலையைக் கவனிக்க, இவளோ விடாமல், “போலீஸ் வந்து கேட்டா இப்படி தான் பொறுப்பு இல்லாம பதில் சொல்லுவீங்களா?” என்று ஒரு கேஸ் விஷயத்திற்காக அவளின் தோழியிடம் வாங்கி இருந்த ‘போலீஸ் பேட்ஜை’ காட்டி விழிகளை உருட்டினாள். ஒரு பாதுகாப்பிற்காக அதனை வாங்கி வைத்தவள், ‘இப்படி கார் தொலைஞ்சதுக்கு எல்லாம் யூஸ் பண்ணவேண்டியதா இருக்கே!’ எனப் புலம்பியும் கொண்டாள்.

அதில், அவன் ஸ்பேனரை கீழே போட்டு விட்டு, “வணக்கோம் மேடம்… மெய்யாலுமே நான் எதையும் பாக்கல மேடம். ஆனா இந்த ஏரியால கார் திருட்டு அதிகமா நடக்குது. திருடி அடுத்த நிமிஷம் ஸ்பேர் பார்ட்ஸ எல்லாம் தனி தனியா உருவிடுவானுங்க மேடம்… அதுவும் சௌகார்பேட்டாண்ட தான் அதிகமா நடக்குது” என சலித்தபடி பேசியவனை விழி உயர்த்தி பார்த்தாள்.

“திருடுனதையும் ஸ்பேர் பார்ட்ஸ் கழட்டினத்தையும் பக்கத்துல இருந்து பார்த்த மாதிரி சொல்றீங்க…? ரொம்ப அனுபவமோ?” என்று நக்கல் தொனியில் சந்தேகப்பார்வையுடன் கேட்டவளை கண்டு அந்த மெக்கானிக் ஒரு நொடி அதிர்ந்தான்.

“அது… அது… போன மாசம் தான் என் கஸ்டமர் ஒருத்தரோட கார் காணாம போச்சு மேடம். அவரு தான் இதெல்லாம் சொன்னாரு. அத தான் நானும் சொன்னேன். இந்த சாரு நெறய தபா இந்தப் பக்கம் வந்து பாத்துருக்கேன்… அதான்…” என்று மென்று விழுங்க ஹரி தான் பரபரத்தான்.

“அப்போ உடனே நம்ம சௌகார்பேட்டைக்கு போகணும். கம் சம்யுக்தா…” என அவசரமாய் பேசியட, “வெய்ட்… ஹரி. எனக்கு என்னமோ இவன் சொல்றதை நம்ப தோணலை” என அந்த மெக்கானிக்கையே ஆழமாகப் பார்த்தாள்.

ஹரியோ, “ப்ச், இப்போ நமக்கு இதுக்குலாம் டைம் இல்ல. நான் உடனடியா காரைக் கண்டுபிடிச்சு ஆகணும்…” என அவளைக் கிட்டத்தட்ட இழுத்துக்கொண்டு காருக்கு அருகில் சென்றதில், அவள் அவன் கையை உதறினாள்.

“இன்வெஸ்டிகேட் பண்ணுன்னு சொல்லிட்டு நீங்களா ஒரு முடிவெடுத்தா என்ன அர்த்தம்? அண்ட் என் கையைப் பிடிக்கிற வேலை எல்லாம் வைச்சுக்காதீங்க புரிஞ்சுதா?” என விரல் நீட்டி அவனை எச்சரித்திட, அவனோ சிறிதாய் கறுத்த முகத்துடன் காரில் ஏறி அமர்ந்து ‘டொம்மென’ கார் கதவைச் சாத்தினான்.

அந்தச் சத்தமே அவனின் கோப அளவை வெளிப்படுத்த, அவளுக்குத் தான் ‘நம்ம கொஞ்சம் ஓவரா போயிட்டோமோ?’ என்ற எண்ணம் தோன்றியது.

பின் அவளே, ‘என்ன தான் டென்ஷன்ல இருந்தாலும் அதெப்படி கையைப் பிடிக்கலாம்’ என சிலிப்பிக்கொண்டு காரை எடுக்க, அவன் தான் பெரும் அமைதியை கடைபிடித்தான்.

இருவரும் சௌகார்பேட்டைக்குள் நுழைந்து விசாரிக்க, வெகுநேர அலைச்சலில் திருடிய கார்களை விற்கும் இடத்தைக் கண்டறிந்து அங்கு வந்து சேர்ந்தனர்.

ஹரி அந்த ஆட்களிடம் “சிவப்பு கலர் கார்…” என சில அடையாளம் சொல்லி விசாரிக்க, அவர்களோ “இங்க அப்படி எதுவும் வரவே இல்லை” என்றனர்.

புருவம் சுருக்கி தீவிரமாய் சிந்தித்தவன், அக்கடையை ஆராய்ந்த படி இரண்டு அடிகள் முன்னே நடந்த சம்யுக்தாவிடம் “கிளம்பலாம்!” என்றான்.

அவளோ, அவன் பேச்சைக் காதில் வாங்காமல் மேலும் இரண்டடி எடுத்து வைக்க, “மிஸ் சம்யுக்தா கிளம்பலாம்ன்னு சொன்னேன்…!” எனச் சற்றே சத்தமாய் கூற, சொல்ல சொல்லக் கேட்காமல் மேலும் முன்னேறியவள் அங்குக் கீழே கொட்டிக்கிடந்த கிரீஸின் மேல் தெரியாமல் காலை வைத்து வழுக்கி விழப் போனாள்.

ஆனால், அங்கிருந்த சுவரைப் பற்றிக்கொண்டு ஒருவாறு நின்று விட்டவளுக்கு அடுத்த அடி எடுத்து வைக்க இயலவில்லை.

அவள் காலில் ஒட்டிய ‘கிரீஸ்’ அவளை நழுவி விழச் செய்ய, அவளோ நெளிந்த படி, கையைக்கட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஹரி கிருஷ்ணாவிடம், “மிஸ்டர் என்ன வேடிக்கை பாக்குறீங்க? விழப் போறேன்னு தெரியுதுல்ல… கையைப் பிடிங்க!” என்றாள் விழுந்துவிடுவோமோ என்ற மிரட்சியுடன்.

அவனோ, தோளைக்குலுக்கி, “எதுக்கு மிஸ் சம்யுக்தா… நான் எதேச்சையா கையைப் பிடிப்பேன். அப்பறம் நீங்க என்னமோ நான் வேணும்னு புடிச்ச மாதிரி கோபப்படுவீங்க. நீங்களே பொறுமையா காலை எடுத்து வைச்சு நடங்க” என அசட்டையாய் கூறி விட்டு ‘பேண்ட்’ பாக்கெட்டில் கையை நுழைத்து நின்றான்.

சம்யுக்தா தான், ‘அடேய்… கொலைகாரா!’ என அவனைப் பார்வையால் எரித்து, “இருக்குற வேலை எல்லாம் விட்டுட்டு ஒண்ணுக்கும் உதவாத உங்க கார் பின்னாடி சுத்துறேன்ல எனக்கு இது தேவை தான்” எனக் கரித்திட, “இப்போ கூட உங்களுக்கு நான் ஹெல்ப் பண்ணனும்னு தான் நினைக்கிறேன் சம்யுக்தா. ஆனால் பாருங்க, நீங்க தான் அதை பெரிய விசயமாக்குவீங்க…” என்றான் முகத்தைத் திருப்பிக்கொண்டு.

அதில் நறநறவென பற்களைக் கடித்தவள், “சரி… நான் ஒன்னும் சொல்லமாட்டேன்” என எரிச்சலாய் கூறிட, அவன் தான் குறும்பு பார்வையுடன் “சியூர்?” எனக் கேட்டான்.

அவளோ மேலும் கடுப்பானதில் “ஓகே ஓகே… கையைப் பிடிங்க!” என்று அவளின் கையைப் பிடித்து, நிற்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தவளை நிற்க வைத்தவனின் மேல் லேசாகச் சரிந்தாள் சம்யுக்தா.

திடீரென அவனின் ஸ்பரிசம் அவளை சட்டென நகர வைக்க, அவனோ அதனைக் கண்டுகொள்ளாதது போன்று அங்கிருந்தவனிடம், “ஒருவேளை காரைத் திருடிட்டு இங்க கொண்டு வரலைன்னா… வேற என்ன பண்ணிருக்க முடியும்?” என்றான் வினாவாக.

அதற்கு அவனோ சற்று சிந்தித்து விட்டு, “அப்படி இங்க வரலைன்னா… ஏதாவது காரை சிதைக்கிற இடத்துக்கு ஓட்டிட்டு போயிருப்பாங்க சாரே. அதுவும் அங்க ஸ்பேர் பார்ட்ஸ் எல்லாம் எடுக்கமாட்டாங்க. காரை அப்படியே நச்சுருவாங்க…” என்றதில் ஹரி அதிர்ந்து விட்டான்.

“ஓ! நோ! அந்தக் காரை எதுவும் பண்ண கூடாது. அதுல கான்ஃபிடென்ஷியல் ஆன எல்லா டீட்டைல்ஸ்ஸும் இருக்கு” எனப் பின்னங்கழுத்தை தேய்த்து, குழம்பி இருந்தவனை ஒரு மாதிரியாகப் பார்த்த சம்யுக்தா, “நீங்க சைன்டிஸ்ட்டா?” எனக் கேட்டாள் மெதுவாக.

அவனோ, புரியாது “இல்ல! ஏன்?” என்றிட, “இல்ல… ஆரம்பத்துல இருந்து கார் போச்சு. இம்பார்ட்டண்ட் டீடைல்ஸ் இருக்குன்னு டென்ஷனா இருக்கீங்களே. அதுவும் அரசுக்கே ஆபத்துன்னு சொல்றீங்க. அதான், தசாவதாரம் கமல் மாதிரி விஷக்கிருமி எதாவது அதுல வைச்சுருப்பீங்களோன்னு கேட்டேன்…” என்றவளுக்கு உண்மையிலேயே அப்படி எதுவும் இருந்து சுனாமி எதுவும் வரவைத்து விடுவானோ என்றிருந்தது.

அவள் கேள்வியில், ஒரு நொடி விழித்தவன், பக்கெனப் புன்னகைத்து, “கவலைப்படாதீங்க மிஸ் சம்யுக்தா. சுனாமி வந்தாலும் நான் உங்களை மூழ்க விடமாட்டேன்…!” என்றான் சற்றே ஆழ்ந்த பார்வையுடன்.

“ஹான்?” என அவள் அவனின் பதிலில் சற்றே திணறிட, ஹரியின் விழிகள் அவளை ரசனையாய் தழுவியதோ என்றே ஒரு பிரம்மை சம்யுக்தாவின் எண்ணத்தைக் களவாட, அவனோ அப்படியொரு வார்த்தை தான் பேசவே இல்லை என்ற ரீதியில், “சென்னையில கார க்ரேஷ் பண்ற இடம் எங்க இருக்குனு எதாவது ஐடியா இருக்கா மிஸ் சம்யுக்தா?” எனக் கேட்டான் தீவிரமாக.

அதன் பிறகே அவளும் நிகழ்வு உணர்ந்து, “எனக்கும் ஐடியா இல்ல…” என்றாள் அவனைப் பாராமல்.

“ஓகே… என் பிரெண்ட் ஒருத்தனுக்கு இதைப் பத்தி தெரியும் நான் விசாரிச்சு சொல்றேன்…” என்று சற்று தள்ளி நின்று யாரிடமோ போனில் பேசியவன், வேகமாக அவளருகில் வந்தான்.

அப்போது அவளும் அவளின் ஜுனியர் நேஹாவிடம், சுகுமாரன் சம்பந்தமான ஆதாரங்களைத் திரட்ட சில அறிவுரையை வழங்கி, “நான் சீக்கிரம் வந்துடுறேன்…” என்றவள், போனை வைத்து விட்டு அவனை என்னவென்று பார்த்தாள்.

ஹரி தான், “ஈசிஆர்க்கு பக்கத்துல இல்லீகலா கார கிராஷ் பண்ற இடம் இருக்குறதா என் பிரெண்ட் சொன்னான். உடனே அங்க போகலாம்…!” என்றவன் அடுத்த நொடி காரினுள் விரைய, அவளும் சுகுமாரன் கேஸை எண்ணிக்கொண்டே அவனுடன் சென்றாள்.

அவளையே சில நிமிடம் பார்த்தவன், “சம்யுக்தா நான் வேணா ட்ரைவ் பண்ணவா?” எனக் கேட்க, அவளோ “ஏன்?” என்றாள் புரியாமல்.

“இல்ல. நீங்க ஏதோ திங்க் பண்ணிட்டு இருக்கீங்க… அதோட, என் பிரெண்ட் சொன்ன வழி நான் ட்ரைவ் பண்ணா தான் தெரியும். சோ!” என இழுத்தவன், கையை நீட்டினான் கார் சாவியை கேட்டு.

அவளும் சில வேலைகள் இருப்பதனால் அவனையே காரை ஓட்ட விட, முன் சீட்டில் அமர்ந்தவள், நேஹாவிற்கு போன் செய்து, “சுகுமாரன் ஓட பேங்க் ஹிஸ்டரி செக் பண்ணுங்க நேஹா. அண்ட் ட்ரை டு ஹேக் ஹிஸ் சிஸ்டம். சுகுமாரனுக்கு எதிரா இருந்த ஆதாரம் என்னன்னு கண்டுபிடிச்சா தான், அவன் பண்ண தப்பை வெளிய கொண்டு வர முடியும். கொலை நடந்த இடத்துல, சுகுமாரன் இருந்துருக்கான்றதை தவிர, இன்னும் மர்டர் வெப்பன் கிடைக்கல. அது அவனுக்கு அட்வான்டேஜ் ஆகிட கூடாது” எனக் கண்டிப்பாய் பேசிக்கொண்டே சென்றவளின் பேச்சு சட்டென நிற்கப்பட, அவளின் கரு விழிகள் ஜன்னல் வழி யாரையோ கண்டு சுருங்கியது.

உடனே “காரை நிறுத்துங்க…” எனக் கத்தியவள், நேஹாவிடம் “நான் அப்பறம் பேசுறேன்…” எனக் கூறி விட்டு, வெளியில் காண, அவள் போன் பேசியதில் காரை மெதுவாக ஓட்டிக்கொண்டு வந்த ஹரியோ சட்டெனக் காரை நிறுத்தி விட்டு, புரியாமல் “என்னாச்சு சம்யுக்தா… எனி ப்ராப்லம்?” என்று வினவினான்.

அவளோ அந்தச் சாலையின் நடைபாதையில் திரும்பித் திரும்பிப் பார்த்தபடி சற்றே பயந்த விழிகளுடன் எங்கோ நடந்து சென்ற கிரிஜாவை யோசனையுடன் பார்த்துக் கொண்டிருக்க, கிரிஜா தான் வேகமாக ஏதோ ஒரு ஆட்டோவில் ஏறிச் சென்றாள்.

‘இவள் வீடு அசோக் நகர் தான? ஈசிஆர்ல என்ன பண்ணுறா? பயந்த முகமா இருக்குறத பார்த்தா சுகுமாரனால இவளுக்கு ஆபத்தோ?’ எனப் பலவாறாக எண்ணியவளை ஹரியின் குரல் தான் கலைத்தது.

“என்ன மிஸ் சம்யுக்தா? இப்படி டைம் வேஸ்ட் பண்ணுனா என்ன அர்த்தம்? யாரோ ஒரு பொண்ணை இப்படி வெறிச்சு பார்த்துட்டு இருக்கீங்க… நீங்கப் பாக்குறத பார்த்தா படத்துல வர்ற மாதிரி அந்த ஆட்டோவை ஃபாலோ பண்ண சொல்லுவீங்க போல?” என முகம் கடுகடுக்க கேலியுடன் பேசியவனை தீயாக முறைத்தாள்.

இதுவரை அந்த எண்ணம் அவளுக்கு இல்லை தான். இப்போது அப்படி என்ன அந்தப் பெண்ணின் உயிரைவிட இவன் கார் பெரியதாகி விட்டது என்ற கோபம் வர, “ஆமா மிஸ்டர் ஹரி கிருஷ்ணா. இப்ப நான் அதைத் தான் சொல்லப் போறேன். சீக்கிரம் அந்த ஆட்டோவை ஃபாலோ பண்ணுங்க! அந்தப் பொண்ணுக்கு ஏதோ பிரச்சனை!” என்றாள் கட்டளையாக.

அவனோ அவளைப் பார்வையால் எரித்தபடி காரை ஸ்டார்ட் செய்து, “என் காரைக் கண்டுபிடிக்கிறேன்னு சொல்லிட்டு, நீங்க என்னமோ சோசியல் சர்வீஸ் பண்ணிட்டு இருக்கீங்க!” என்று காய்ந்திட, “ப்ச்… உங்களுக்கு உங்க கார் முக்கியம்ன்னா எனக்கு என் க்ளையண்ட் முக்கியம்! அப்படி உங்களுக்கு ரொம்ப அவசரம்ன்னா நீங்களே போய்த் தேடுங்க!” என்றாள் சீறலாக.

“புரியாம பேசுற சம்யுக்தா! அதுல எவ்ளோ பெரிய விஷயம் இருக்குன்னு தெரிஞ்சா நீ இப்படி அசால்ட்டா இருக்க மாட்ட! ரொம்ப ரொம்ப கான்ஃபிடென்ஷியல். இது மட்டும் யார் கைக்காவது கிடைச்சா ஆட்சியே மாறினாலும் ஆச்சர்யப்படுறதுக்கு இல்ல” என்று அழுத்தப்பார்வையுடன் எச்சரித்தவனை, அவளும் அழுத்தமாகவே பார்த்து, “அப்படி என்ன இருக்கு அதுல?” என்றாள் சந்தேகமாக.

“என்னால அதை சொல்ல முடியாது…!” என்று தோளைக் குலுக்கி விட்டுச் சாலையில் கவனத்தை பதித்தவனை, “அப்போ என்னாலயும் இதுல இருக்குற சீரியஸ்னெஸ புரிஞ்சுக்க முடியாது! நீ என்னன்னு சொன்னா தான் என்னாலயும் கரெக்ட்டா யோசிக்க முடியும்” என்று வறுத்திட அவனோ பேரமைதி காத்தான்.

அவள் தான் விடாமல், “டாக்டர்கிட்டயும் வக்கீல்கிட்டயும் பொய் சொல்லக் கூடாது ஹரி!” என எரிச்சலுடன் கூறியதில், ஹரியோ அவள் புறம் திரும்பி, “அஃப் கோர்ஸ் சம்யுக்தா! பொய் தான சொல்லக் கூடாது. உண்மைய மறைக்கலாமே!” எனக் கண்சிமிட்டிட, அவள் தான் சட்டெனப் பார்வையை திருப்பிக்கொண்டாள்.

‘இவன் என்ன திடீர்னு கோபமா இருக்கான். திடீர்னு கேலி பண்றான். திடீர்னு பரபரப்பா இருக்கான்… ஒவ்வொரு செகண்ட்க்கும் ஒரு ரியாக்ஷன் குடுக்குறான்…’ எனத் தீவிர சிந்தனையில் ஹரியை பற்றிச் சிந்தித்தவள் இருவரின் அழைப்பும் ஒருமையில் மாறியதை உணரவே இல்லை.

இப்போது ஹரி தான், “நீ ஃபாலோ பண்ண சொன்ன ஆட்டோ அந்தத் தெரு முனையிலே நிக்குது!” என உரைத்திட, அதில் அவளும் அந்தத் திசையைக் கண்டாள்.

அங்கு யாரோ ஒருவன், கிரிஜாவிடம் பேசிக்கொண்டிருக்க, அவனை உற்றுப்பார்த்தவளுக்கு அது டீ – ஃபார்மா கம்பெனியில் கிரிஜா மற்றும் சேகருடன் வேலை பார்க்கும் தினேஷ் என்று அறிய, “காட்! சுகுமாரனோட வேலை தான் இது கன்ஃபார்ம்…!” என்று முணுமுணுத்தவள், இருவரையும் போட்டோ எடுத்தாள்.

ஹரி கிருஷ்ணா தான், போனில் நேரத்தைப் பார்த்தபடி, “முடிஞ்சுதா? கிளம்பலாமா?” என நச்சரிக்க, அவளோ தினேஷின் மேல் பார்வையை வைத்தாள். அவன் ஏதோ மிரட்டுவது போல் உணர்ந்தவள், நிலைமை சரி இல்லையென உணர்ந்து, காரிலிருந்து இறங்க, அதற்குள் தினேஷ் கிரிஜாவை இழுத்துக்கொண்டு எங்கோ சென்றான்.

சம்யுக்தா இறங்கியதும், ஹரியும் இறங்கி “என்ன இப்போ நடந்து ஃபாலோ பண்ண போறியா?” என சலிப்பாய் கேட்க, “எஸ்…” என்றவள் விறுவிறுவென அவர்கள்பின் அவர்களறியாமல் செல்ல, அவனும் அவளுடன் சென்றான்.

சில நிமிட நடையின் முடிவில், தினேஷ் கிரிஜாவை இரும்பு குடோன் ஒன்றிற்குள் அழைத்துச் செல்ல, கிரிஜா தான் திமிறினாள்.

“இப்போ எங்க நீ இழுத்துட்டு போற தினேஷ். நீ கேக்குற பணத்தை என்னால தர முடியாது. ஒழுங்கா விட்டுடு!” என அவள் கத்திட, சம்யுக்தாவிற்கு கடும் கோபம் வந்தது.

கணவனை இழந்த நிலையில் அவளை இப்படி மிரட்டுகிறானேயென. அதில் அவள் அவனைத் தடுக்க செல்ல, ஹரி தான் அவளின் கையைப் பற்றிக்கொண்டு, “எங்க போற…? அங்க பாரு நிறைய பேர் வரானுங்க…!” என்று ஹஸ்கி குரலில் அவளை எச்சரித்திட, அவளும் ‘இவனுங்க யாரு’ என்று பார்த்தாள்.

கையில் சில இரும்பு பொருட்களுடன், நாலைந்து பேர் கிரிஜாவை நோக்கி வர, அவளோ அவர்களை விழி விரித்துப் பார்க்கையிலேயே ஒருவன் இரும்பு கம்பியால் தினேஷின் தலையில் ஓங்கி அடித்தான்.

அதில் தினேஷின் தலையிலிருந்து ரத்தம் பீறிட்டது. பல கொலைக்கான ஆதாரங்களை நேரில் சென்று சேகரித்திருந்தாலும், இப்போது எதிர்பாராத நேரத்தில் கண் முன்னே நடந்த கொலையில் சம்யுக்தா நடுங்கி விட்டாள்.

ஹரியும் அதனை எதிர்பாராதவனாய் திகைத்து, மேலும் அவர்கள் தினேஷை கொடூரமாக அடித்ததில் சம்யுக்தாவை அதனைக் காண விடாமல் அவள் முகத்தை அவன் நெஞ்சில் மறைக்க வைக்க, அவளும் முதலில் அவனுடன் ஒன்றினாள்.

பின் உடனேயே ‘சே… நம்ம இந்த மாதிரியான கேஸ் எத்தனை பார்த்திருப்போம். இப்படி பயந்து இவன் நெஞ்சுல சாஞ்சு நிக்கிறோமே’ என எண்ணியவளுக்கு, ஒரு ஆண்மகனின் அரவணைப்பு, பல மடங்கு தைரியத்தையும் கொடுத்ததை சற்றே வியப்பாக எண்ணியபடி சட்டென நகர்ந்தவள், கிரிஜாவையும் அவர்கள் ஏதாவது செய்வதற்க்கு முன் அவளைக் காக்க வேண்டும் என்றெண்ணி ஒரு அடி எடுத்து வைக்க, இப்போதும் ஹரி அவளைப் பிடித்து இழுத்தான்.

“இடியட்…! எங்க போற?” என அவன் பல்லைக்கடிக்க, அவளோ “அந்தப் பொண்ணையும் அவனுங்க ஏதாவது பண்றதுக்குள்ள காப்பாத்தணும்… விடுங்க!” என்றாள், அவள் கையைப் பிடித்திருந்த அவன் கையை எடுத்தபடி.

“நீ லாயர் தான். போலீஸ் இல்ல. அவனுங்க கையில என்ன இருக்குன்னு பார்த்தீல! இரும்பு கம்பி. அடிச்சா உன் கேஸை பார்க்க வேற லாயர் தான் பாக்கணும்” என்றான் சற்றே கோபம் எழுந்து.

“என்ன மனுஷன் நீ… ஒருத்தன் கண்ணு முன்னால கொலை செய்யப்பட்டுருக்கான். ஒரு பொண்ணு ஆபத்துல இருக்கா. நீ என்னன்னா!” என்று அவள் முகம் சுளிக்க, அதில் அவள் முகம் அருகில் நெருங்கிச் சென்றவன், “இதென்ன படமா? நான் என்ன ஹீரோவா? ஒரே நேரத்துல பத்து பேரை அடிக்க? இந்த நேரத்துல வேகம் முக்கியம் இல்ல விவேகம் தான் முக்கியம். முதல்ல நீ போலீசுக்கு இன்ஃபார்ம் பண்ணு!” என்றான் கோபத்தை அடக்கியபடி.

அவளோ மேலும் முறைத்து, “ஆமா போலீசுக்கு போன் பண்ணி அவங்க வர்றதுக்குள்ள அவங்க அந்தப் பொண்ணை கொலை பண்ணிடுவாங்க. அதையும் வேடிக்கை பார்க்கணும் அப்படி தான…” என்றாள் அவனின் கையிலிருந்து விலகியபடி.

“ப்ச்… சம்யுக்தா…!” என அடிக்குரலில் அவளை மிரட்டியவனை அவளும் எதிர்த்துப் பேசும் முன், கிரிஜாவின் குரல் கேட்டதில் அவள் உறைந்து நின்றாள்.

“இவ்ளோ லேட்டாவா வருவீங்க? சீக்கிரம் பாடியை க்ளியர் பண்ணுங்க…” என்று கிரிஜா அந்த ஆட்களிடம் உத்தரவிட, இத்தனை நேரம் அவள் கண்ணில் இருந்த பயம் தெனாவெட்டாய் உருமாறி இருந்தது.

அவர்களோ தினேஷின் உடலை எங்கோ இழுத்து சென்றிட, கிரிஜா யாருக்கோ போன் செய்தாள்.

“ஐயா… உங்க ஆளுங்க வந்து தினேஷை முடிச்சுட்டானுங்க ஐயா…”

……

“ஆமாங்கய்யா நம்ம விஷயம் தெரிஞ்ச ஒரே ஆளு என் புருஷன்காரனும் இவனும் தான்… இவன் பணம் கேட்டு டார்ச்சர் பண்ணதுல நானே ஒரு வழி ஆகிட்டேன்”

……

“கவலையே படாதீங்கய்யா, லாயரம்மா எப்படியும் சுகுமாரனுக்கு தண்டனை வாங்கி குடுத்துடும். அந்த அளவு அந்த அம்மாவை என்னை நம்ப வைச்சிருக்கேன்”

…..

“இல்லைங்கய்யா… யாருக்கும் சந்தேகம் வரல. சுகுமாரன் கண்டுபிடிச்ச மருந்துல நீங்கக் குடுத்த தப்பான மருந்தைக் கலந்து விட்டுட்டேன். எப்படியும் லாயர் விசாரிக்கையில அது வெளிய வந்து அவன் மேல கேஸ் ஸ்ட்ராங் ஆகிடும்… இடையில என் புருஷன்காரன் வராம இருந்துருந்தா அநியாயமா சுகுமாரனுக்கு கொலை பழியும் விழுந்துருக்காது. சேகரும் உசுரோட இருந்துருப்பான். ஹ்ம்ம்… அவங்க தலையெழுத்து அவ்ளோ தான்…” என்றாள் இதழை லேசாய் விரித்து.

இதனை எல்லாம் கேட்ட சம்யுக்தாவினுள் பெரும் பிரளயமே நடந்தது. ‘அடிப்பாவி… நல்லவ மாதிரி நடிச்சு இப்படி பண்ணிட்டாளே’ எனக் கோபம் தலைக்கு ஏற அடுத்த நொடி கிரிஜாவின் முன் நின்றிருந்தாள்.

போனை வைத்து விட்டுத் திரும்பிய கிரிஜா சம்யுக்தாவை கண்டு அதிர, அடுத்த கணத்தில் சம்யுக்தாவின் கை ரேகை அவளின் கன்னத்தில் பதிந்தது.

“எவ்ளோ தைரியம் இருந்தா என்னையவே ஏமாத்திருப்ப?” எனக் கொந்தளித்தவளின் கை மறுபடியும் அறைய ஓங்க, கிரிஜா அவளின் கையைப் பிடித்தாள்.

அதிர்ந்த முகம் இப்போது ஏளனமாய் விரிய, “என்ன லாயர் மேடம்… சுகுமாரனுக்கு எதிரா ஆதாரம் ரெடி பண்றேன்னு சொல்லிட்டு, எனக்கு எதிரா ஆதாரம் ரெடி பண்ணி இப்படி தனியா வந்து மாட்டிக்கிட்டீங்களே!” எனப் போலியாய் பாவப்பட்டவளை கண்டு, “யூ ஸ்கௌண்ட்ரல்…” எனத் தன் வெள்ளிப்பற்களை நறநறவெனக் கடித்த சம்யுக்தா, “எல்லா தப்பையும் நீ பண்ணிட்டு… சுகுமாரன் மேல பழி போட்ருக்கியா?” என்றாள் விழியில் நெருப்பை உமிழ்ந்து.

கிரிஜாவோ, “ஆமா லாயரு நானும் என் பாஸும் தான் பண்ணோம். என் பாஸ் ஆரம்பிச்ச மெடிக்கல் ஃபார்மாக்கு இவன் ஹெவி காம்பெடிஷனா இருந்தான். ஒருத்தனை அழிச்சா தான நம்ம ஜெயிக்க முடியும். அதான் குள்ளநரியா சுகுமாரன் கம்பெனிக்குள்ள நுழைய முயற்சி பண்ணுனேன்.

ஆனா பாரு… அவன் தெளிவா வேலை குடுக்குறவங்க பேக் ரவுண்டு பத்தி நல்லா விசாரிச்சு, அப்பறம் தான் குடுப்பானாம். அதுவும் அங்க வேலை பார்க்குறவங்க ரெகமெண்ட் பண்ணா தான் ஆள் எடுப்பானாம். அவ்ளோ பாதுகாப்பு அவனோட மருந்துகளுக்கு.

அதான், ஆறு மாசத்துக்கு முன்னாடி நான் சேகரை ஃபாலோ பண்ணி, அவனுக்கு என்ன பிடிக்க வைச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டேன். நினைச்ச மாதிரி சுகுமாரன் கம்பெனிக்குள்ள நுழைஞ்சு, சிசிடிவி எல்லாம் ஹேக் பண்ணி தப்பான மருந்த கலக்கையில சேகர் பார்த்துட்டான்.

அதுக்கு அப்பறமா எனக்கும் அவனுக்கும் பிரச்சனை வந்ததுல, என் பாஸோட ஐடியா படி அவரோட ஆளுங்க வந்து அவனை ஆதாரமே இல்லாம போட்டுத் தள்ளிட்டாங்க அவன் வீட்ல வைச்சே.

அதோட சுகுமாரனை அவனுக்கு எதிரான ஆதாரம் ஒன்னு என்கிட்ட இருக்குன்னு பிராங்க் கால் பண்ணி, வீட்டுக்கு வரவைச்சு போலீசுக்கும் போன் பண்ணி, அவன் தான் கொலை பண்ணான்னு நம்ப வைச்சு, இல்லாத ஆதாரத்தை இருக்குனு சொல்லி உன்னையும் நம்ப வைச்சேன்… இடையில இந்த தினேஷ் தான். சேகர் மூலமா உண்மை தெரிஞ்சு பணம் கேட்டு தொந்தரவு பண்ணுனான். இன்னைக்கு இவன் கதையும் முடிஞ்சுது” எனத் தான் செய்த பிழைகளை வரிசையாய் அடுக்கியவளை வெறி கொண்டு பார்த்தாள் சம்யுக்தா.

“இதுக்குலாம் என்ன தண்டனை தெரியுமா? ராட்சசி…” என அவளை மீண்டும் ஓங்கி அறைந்தாள்.

அதில் கிரிஜா கீழே விழுந்திட, அவளின் போன் சம்யுக்தாவின் கையில் அகப்பட்டது. கடைசியாக அவள் பேசிய எண்ணை மனதில் குறித்து கொண்டவள், மீண்டும் அவளை அடிக்கப் போக, அதற்குள் அவள் பின்னால் அவளின் ஆட்கள் வந்து நின்றனர்.

கிரிஜா தான் கோபத்துடன் வெகுண்டு எழுந்து, “எனக்குத் தண்டனை தர்றதுக்கு நீ உயிரோட இருக்கணுமே லாயரு. இதுவும் நல்லதுக்கு தான். ஏன்னா, அவன் மேல கேஸ் ஸ்ட்ராங் ஆ நிக்க, இன்னும் ஏதாவது குற்றத்தை அவன் மேல திணிக்கலாம் பார்த்தேன். அல்வா மாதிரி நீயே வந்து மாட்டிக்கிட்ட. உன்ன இங்கேயே கொன்னுட்டு, சுகுமாரனுக்கு எதிரா வாதாடுறதுனால அவனே உன்ன போட்டுத் தள்ளிட்டான்னு கேஸை முடிச்சுடுவேன்…” என்றவள் ஆட்களுக்குக் கண்ணைக் காட்ட, சம்யுக்தா தான் திகைத்தாள்.

சரியாக இரும்பு கம்பியால் அவளைத் தாக்க வருகையில், ஹரி அவளைப் பிடித்து இழுத்து அவளை அடிக்க வந்தவனை காலால் எட்டி மிதித்திட அவன் சுருண்டு விழுந்தான்.

மேலும் சில ஆட்கள் அடிக்க வந்ததில், சம்யுக்தாவை கூட்டிக்கொண்டு அவன் அங்கிருந்து ஓட, சம்யுக்தாவும் சில நிமிடத்தில் நடந்த நிகழ்வில் அவனுடன் ஓட ஆரம்பித்தாள்.

இறுதியில் ஒரு புதரின் அடியில் சென்று இருவரும் மறைந்திட, அவளுக்குத் தான் மூச்சு வாங்கியது. ஹரி தான் அவளை ஆசுவாசப்படுத்தி, “ஷூ… இப்போ போலீஸ் வந்துடும். அதுவரை நம்ம எஸ்கேப் ஆனா போதும். ரிலாக்ஸ் யுக்தா!” என்றான் அவளின் முதுகை ஆதரவாய் வருடியபடி.

அவள் தான் அவனின் செயலிலும் பேச்சிலும் அவனையே விழிக்க, அவளைப் பார்த்துச் சிறிதாய் புன்னகைத்தவன், “என்ன? இவன் இப்போயும் அடிக்காம ஓடுறானேன்னு கடுப்பா இருக்கா? நான் தான் சொன்னேனே, நான் ஒன்னும் சினிமா ஹீரோ இல்ல. ஒரே நேரத்துல பத்து பேர அடிக்க…” என்றான் அவளைக் குறுகுறுவெனப் பார்த்து.

அவளோ, “இல்ல… அந்தப் பொண்ணை காப்பாத்தப் போக சொன்னப்போ நீங்க வரல. அப்போ ஏன் நீங்க இங்க இருந்து போகாம என்ன மட்டும்…” என்று இழுக்க, அவளின் மூச்சுக் காற்றை வெகு அருகில் சுவாசித்தவன், “ஏன்னா, உயிரைப் பணயம் வைச்சு காப்பாத்த, நம்ம காப்பாத்துற ஆள் ஒர்த் ஆ இருக்கணும் யுக்தா!” என்றான் விழியால் அவளை இழுத்தபடி.

அதில் அவள் தான், அவன் நெருக்கத்தில் பேச்சற்று வேறு புறம் பார்க்க, அதற்குள் கிரிஜாவும் மற்ற ஆட்களும் அவளைத் தேடி அப்புத்தருக்கு அடியில் வந்திட, அந்நேரம் காவலர்களும் அங்கு முற்றுகை இட்டனர்.

“தேங்க் காட்!” என சம்யுக்தா வெளியில் வர எழுந்து விட்டுத் திரும்பி ஹரியை காண அவனும் “கிரேட் எஸ்கேப் ரெண்டு பேரும்” எனக் கண்ணடித்தபடி வெளியில் வந்தான்.

காவலர்கள் கிரிஜாவை கைது செய்ததில், அவளோ “சார் என்ன எதுக்கு அரெஸ்ட் பண்றீங்க. என்ன ஆதாரம் இருக்கு உங்க கிட்ட?” என்று முரண்டு பிடிக்க, ஹரி தான் “அதான் வீடியோ ஆதாரமே இருக்கே…” என்றான் திமிராக.

சிறிது நேரம் முன்பு சம்யுக்தாவிடம் அவள் பேசிய அனைத்தையும் வீடியோ எடுத்து, அதனை காவலர்களுக்கு அனுப்பி வைத்திருந்தான்.

அதனை கண்டு கிரிஜா அதிர, சம்யுக்தா அவனை விழி உயர்த்தி பாராட்டும் விதமாக பார்க்க, ஹரி அவளை ரசனையுடன் நோட்டமிட்டான்.

இந்த வழக்கில் அவள் கிரிஜாவுக்காக வாதாடியதால் சில சட்ட ரீதியான வேலைகள் இருந்ததில், “நான் போகணும்!” என்று ஹரியிடம் கூறிட, அவனும் “கேரி ஆன்…” என்றான் விழி மொழியில்.

அதன்பிறகு வந்த நாட்களும் அவளுக்கு, அடுத்தடுத்து பெரிய அதிர்ச்சிகளை கொடுத்தது. அதில் முதல் அதிர்ச்சியாக கிரிஜாவை பின்னிருந்து ஆட்டுவித்து அவளின் ஆஸ்தான குருவான ராமச்சந்திரன் என்றறிந்ததே.

வக்கீல் தொழிலில் சில தோல்விகளைச் சந்தித்த ராமச்சந்திரனுக்கு, ஃபார்மா தொழிலில் ஈடுபாடு வரத்தொடங்கியது. அவரின் நண்பர்களுடன் சைலண்ட் பார்ட்னராக சேர்ந்த ராமச்சந்திரனுக்கு இத்தொழிலிலும் தோல்வியைத் தழுவ விரும்பவில்லை. எனவே, அவர் எதிரியாக நினைக்கும் சுகுமாரனை வீழ்த்திட, இத்தகைய திட்டம் தீட்டினார்.

கிரிஜா பேசிய எண்ணை வைத்து, ராமச்சந்திரனை கையும் களவுமாக சம்யுக்தா பிடித்து விட, அவ்வளவு சீக்கிரம் தன்னை கண்டு பிடிக்கமாட்டாளென அசட்டையாக எண்ணி இருந்த ராமச்சந்திரன் அதிர்ந்தார்.

அவரையும் சிறப்பாகக் கைது செய்ய வைத்து விட்டவள், இருவரையும் கோர்ட்டில் நிறுத்தி ஆதாரங்களையும் காட்டி தக்க தண்டனை கொடுத்து விட்டே கோர்ட்டை விட்டு வெளியில் வந்தாள்.

கிட்ட தட்ட ஒரு வாரமாக இதே வேலையில் அமிழ்ந்திருந்தவளுக்கு, கோர்ட் வாசலில் கையைப் பேண்ட் பார்க்கெட்டில் நுழைத்தபடி நின்றிருந்த ஹரியை கண்டதும், லேசாக விழிகள் மின்ன, கூடவே அவனின் காணாமல் போன கார் நினைவு வந்தது.

“என்ன லாயர் மேடம்… எல்லா கேஸையும் சால்வ் பண்ணிட்டு என்னை மட்டும் டீல்ல விடுறீங்க?” என அவன் தலையைச் சாய்த்து கேட்டிட, அவள் தான் “என்ன?” என்றாள் இடுப்பில் கை வைத்து.

“ஐ மீன், என் காரை டீல்ல விடுறன்னு சொன்னேன் யுக்தா!” எனக் குறும்பாய் நகைத்தான்.

“கண்டிப்பா உன்னை… ஐ மீன் உன் காரை டீல்ல விடமாட்டேன் ஹரி. என் ஜுனியர் கிட்ட சொல்லிருக்கேன். ஷீ வில் ஃபைன்ட் இட் சூன்…” என்றவள், அப்போது தான் இருவரின் வார்த்தைகளில் இருந்த மரியாதை காணாமல் போனதை உணர்ந்து அவனைப் பார்வையால் அளவெடுத்தாள்.

அவனின் இயல்பு தன்மையும், தன்னை காப்பாற்றிய விதமும் அவளுக்கு அவன்மேல் ஒரு ‘கிரேஸை’ கொடுத்திருந்தது. அந்நேரம் நேஹா போன் செய்ய, அவள் சொன்ன செய்தி கேட்டுப் புருவம் சுருக்கினாள்.

பின், அவசரமாக “என் கூட வா…!” என அவனை அழைத்துக்கொண்டு எங்கோ செல்ல, ஹரி தான் “எங்க யுக்தா?” என்றான் புரியாமல்.

அவளோ எழுந்த கோபத்தை அடக்கிக்கொண்டு, “ம்ம்… உன் கார் வேணாமா? அது இருக்குற இடத்துக்குத் தான்” என்றாள் முகம் சிவந்து.

அதில் அவன் லேசாகத் திகைத்து, பின் அவளின் பக்கமே மறந்தும் கூடத் திரும்பாமல் வர, அவளின் கார், சரியாக ஹரியின் வீட்டிற்கு பின் புறம் இருந்த தெருவில் நின்றது. அங்கு அவனின் சிவப்பு நிற கார் ஒய்யாரமாக நிற்க,

“என்ன ஹரி… காரைத் திருடிட்டு போனவன், உன் வீட்டு பின்னாடியே நிறுத்தி, வாட்டர் வாஷ்லாம் பண்ணி வைச்சுருக்கான் போல!” என வார்த்தையில் எரிச்சலை கலந்து கேட்டவளை கண்டு அவன் தான் திருதிருவென விழித்தான்.

“இறங்குங்க மிஸ்டர் ஹரி கிருஷ்ணா… உங்க கார்ல அப்படி என்ன அரசுக்கே ஆபத்து வர்ற டாக்குமென்டன்ஸ் இருக்குன்னு பார்த்துடலாம்!” என்றபடி இறங்கியவளின் பின், ‘ஐயோ… போச்சு…’ எனப் புலம்பிக்கொண்டு இறங்கியவன் “யுக்தா…” என இழுத்தான்.

“ஸ்டாப் இட்… என்னைப் பார்த்தா உங்களுக்கு இழிச்சவாய் மாதிரி இருக்கா… கார காணோம்னு பொய் சொல்லி என்னை ரோடு ரோடா அலைய விட்டீங்க. இப்போ கூட என் ஜுனியர் பார்க்கலைன்னா, நான் உங்க காரைத் தேடி அலைஞ்சுக்கிட்டே இருக்கணும் இல்ல…” என்று பொரிந்து தள்ளியவளை அவனும் நிறுத்த முயற்சி செய்ய அவள் எரிமலையாய் இருந்தாள்.

“முதல்ல காரை அன்லாக் பண்ணுங்க. உங்க கார்ல என்ன புதையல் வைச்சுருக்கீங்கனு பார்க்கணும்… ஹ்ம்ம்?” என உத்தரவிட, அவனும் வேறு வழியற்று பாக்கெட்டில் இருந்த சாவியை எடுத்து அன்லாக் செய்ய, அவள் வேகமாகக் கார் கதவைத் திறந்து உள்ளே பார்த்தாள்.

சந்தேகப்படும் படி எதுவும் இல்லாமல் இருக்க, டேஷ்போர்டை ஓபன் செய்தவள் அதில் ஒரே ஒரு கவர் மட்டும் இருந்ததில், ஹரியை இளக்காரமாகப் பார்த்து, “ஓ! இதான் அந்த ஆபத்து வர்ற டாகுமெண்ட்டோ” என நக்கலாய் கேட்டவள், அதனைத் திறந்து பார்க்க, அவள் முகத்தில் சன்னமாக ஒரு அதிர்ச்சி படலம் சூழ்ந்தது.

“இது இது… நான்…” என்று திணறியவள், அதில் கண்டது முழுக்க முழுக்க அவளின் புகைப்படத்தைத் தான். அதுவும் அவள் இயல்பாய் இருக்கும் புகைப்படத்தை, அழகாய் அவனே எடுத்திருக்க, அவள் தான் மேலும் கோபமாகி, “என்னை எனக்கே தெரியாம போட்டோ எடுத்து வைக்கறது கூட க்ரைம் தான் ஹரி” என்றாள் அழுத்தமாக.

அவனோ அமைதியாய் மார்புக்கு குறுக்கே கையைக் கட்டியபடி அவளின் கோப முகத்தை ஏறிட்டு, சட்டென “ஐ லவ் யூ யுக்தா!” என்றான் ஆழ்ந்த குரலில்.

அதில் திகைத்த பெண்ணவள் தான் “வாட்?” எனப் புருவம் சுருக்க, அவனோ, அக்கவரை அவன் கையில் வாங்கி கொண்டு, “எஸ். ஐ லவ் யூ! உன் கிட்ட ப்ரொபோஸ் பண்ணனும்னு தான் இந்த ட்ராமா!” எனப் பொறுமையாய் கூறியவனிடம், மேலும் ஏதோ பேச வந்திட, அவளைத் தடுத்தான் ஹரி கிருஷ்ணா

“வெய்ட்… ஒரு ரெண்டு நிமிஷம் நான் சொல்றதை கேட்டுட்டு அப்பறம் பேசு ப்ளீஸ்…” என்றான்.

அவள் முறைத்தபடி அமைதி காக்க, ஹரியும் கூற ஆரம்பித்தான் அவனின் காதல் கதையை.

ஒரு நொடி கூட அவள்மேல் இருந்து பார்வையை நகர்த்தாமல், “நான் ஹரி கிருஷ்ணா. தேசம் பத்திரிக்கையோட க்ரைம் ரிப்போர்ட்டர். உன்னை எனக்கு ஒரு வருஷமாவே தெரியும். ஒரு கேஸ்க்காக விசாரிக்க நான் கோர்ட்டுக்கு வந்தப்போ தான் உன்ன பார்த்தேன்.

சத்தியமா பார்த்ததும் விழுந்துட்டேன். அதுக்கு அப்பறம் நீ வாதாடுற ஒவ்வொரு தடவையும் உன்னைப் பார்க்க வந்துடுவேன். அதுவும் கடைசி பென்ச்ல தான் உட்காந்துருப்பேன். சோ நீ என்னைப் பார்த்திருக்க வாய்ப்பில்ல.

உங்கிட்ட மொத்தமா என்னைத் தொலைச்சுட்டு, எப்படியும் என் காதலை சொல்லணும்னு உன்ன பார்க்க வரும்போது தான், இந்த கிரிஜா கேஸ்ல நீ தீவிரமா இருந்த. சரி உன்னை டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு நான் காதலை சொல்லாம இங்க இருந்து கிளம்பும்போது தான், அந்த கிரிஜா தினேஷ் கூடப் பேசுறதை நான் பார்த்தேன்…” என்றவன் அவள் முகத்தை ஆராய, இதுவரை விழி விரித்துக் கேட்டுக்கொண்டிருந்தவளின் பார்வை இப்போது திகைப்பதை கண்டு, மெலிதாய் புன்னகைத்தான்.

அவளும் அவனைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறாள். உண்மையை மட்டுமே பத்திரிக்கையில் வெளியிடும் நேர்மையான பத்திரிகையாளன். சொல்லப் போனால் ஹரியின் ‘ஆர்டிகள்’ அத்தனையையும் படித்திருக்கிறாள் தான். ஆனால், அந்த ஹரி தான் இந்த ஹரியென அவளுக்கு இப்போது தான் தெரிகிறது.

அவனோ தொடர்ந்து, “இப்படி தான் நானும் ஷாக் ஆனேன். எனக்கு என்னமோ இது தப்பா பட்டதுல ரெண்டு பேரையும் ஃபாலோ பண்ணி, கிட்டத்தட்ட ஒரு மாசமா அலசி ஆராய்ஞ்சு, கிரிஜா பத்தியும், ராமச்சந்திரன் பத்தியும் எல்லா டீடைலும் கலெக்ட் பண்ணேன்… அதை உனக்குத் தெரியப்படுத்தணும்னு நினைச்சேன். பட்…” எனத் தீவிரமாய் கூறிக்கொண்டிருந்தவனின் விழிகள் இப்போது குறும்பாய் மாறியது.

“பட்… உங்கிட்ட குட்டியா ஒரு கேம் விளையாடி, நீயே இதெல்லாம் நேரடியா தெரிஞ்சக்கணும்னு நினைச்சு தான் என் காரைக் காணோம்னு உன்கிட்ட வந்தேன். அதுவும் ராமச்சந்திரன்கிட்ட பிரெண்ட் ஆகி, அவர் மூலமா உங்கிட்ட பேச வச்சேன்.

உன்ன டைவர்ட் பண்ணணும்ன்றதுக்காக எப்படியும் அவரு உன்ன ஒத்துக்க வைப்பாருன்னு கெஸ் பண்ணேன். என் பிளான் படி, உன்னை ஈசீஆர் கூட்டிட்டு போய், கிரிஜாவை பார்க்க வைச்சு…” என்று கூறிக்கொண்டே சென்றவன் ‘அதற்கு மேல் நீயே கணித்துக்கொள்’ என்பது போல் தோளைக் குலுக்கி அவளைக் கண்டு கண் சிமிட்டினான்.

அவளுக்குத் தான் பெரும் மலைப்பாய் இருந்தது. எத்தனை வேலைகள் பார்த்திருக்கிறான்! என வியப்பாக எண்ணியவளுக்கு அப்போது தான், அவன் வேண்டுமென்றே கிரிஜா இருந்த இடத்தில் காரை மெதுவாக ஓட்டியதும், தன்னை உசுப்பேற்றி அவளைப் பின் தொடர வைத்ததும், கிரிஜாவுக்கு ஆபத்து என்று தான் பதறியபோதும் அவன் அசட்டையாக இருந்ததும் மூளையில் தோன்றி மேலும் வியப்பை கொடுத்தது.

இதில் அவனின் பார்வை வேறு அவளை மொய்க்க, அதில் கன்னம் ஓரம் தோன்றிய சிவப்பு அவளுக்கு மேலும் அவஸ்தையைக் கொடுத்ததில், “எதுக்கு?” என ஆரம்பித்தவளுக்கு வார்த்தை வரவில்லை.

திணறிய வார்த்தைகளைக் கடினப்பட்டு கோர்த்து “எதுக்கு இதெல்லாம் பண்ணனும்? என்னை லவ் பண்ணதுனாலயா?” எனக் கேட்டு அவன் முகம் பார்த்தாள்.

ஹரியோ, அவன் நெற்றி அவள் நெற்றியில் முட்டும் அளவு மெல்ல நெருங்கி, “ஏன்னா, என் யுகி எந்தக் கேஸ்லையும் தோத்தும் போகக் கூடாது. அதே நேரம், தப்பான ஆட்களை ஜெயிக்க வைச்சிடவும் கூடாது. அதான்… என் லவபிள் லாயர்க்காக நானே இன்வெஸ்டிகேட் பண்ணேன்… அப்பறம், நான் காரைத் தொலைச்சுட்டு உன்ன பார்க்க வரல. என்னை உங்கிட்ட தொலைச்சுட்டு தான் உன்னைப் பார்க்கவே வந்தேன்…” என்றவனின் இதழ்களும் இப்போது அவள் மூக்கில் உரச, அவள் தான் மொத்தமாக அவனிடமே தொலைந்து நின்றாள்.

அவன் காதல் அவளுக்கு மகிழ்ச்சியையும், தன்னை காக்க அவன் செய்த திட்டங்கள் அவளுக்குள்ளும் காதல் என்ற உணர்வு பேரலைகளை அடித்துச் செல்ல, புன்னகைக்க துடித்த அதரங்களை அரும்பாடுபட்டு அடக்கி, அவனை நெஞ்சில் கை வைத்துத் தள்ளினாள்.

“அதெப்படி எப்படி? இவரு காரைக் காணோம்ன்னு வந்து எங்களை சுத்தல்ல விடுவாராம், கேஸ்ல ஹெல்ப் பண்ணுவாராம், காப்பாத்துவாராம், கேட்டா லவ் பண்றேன்னு சொல்லுவாராம்… இதுல எவ்ளோ பில்டப்ஸ்…? அரசுக்கே ஆபத்தாம்?” என அவள் கண்ணைச் சுருக்கி முறைக்க முயற்சி செய்ய, ஆனால் அவளின் மலர்ந்த முகமே அவனுக்கு அவளின் மனதை எடுத்துரைத்தது.

ஆனால் அதனை வெளிக்காட்டாமல், “ஆமா யுகி… இதுல உன் போட்டோ தான இருக்கு. இது உன் கையில் கிடைச்சா என்னை உண்டு இல்லைன்னு ஆக்குவ. அப்பறம் உண்மைய மட்டுமே சொல்ற என்னோட ஆர்டிகள் வராம, அரசுக்கே எதிரா வந்து, ஆட்சி மாறலாம்ல? அதைத் தான் சிம்பாலிக்கா சொன்னேன்” என முகத்தைப் பாவமாய் வைத்தவனை கன்னம் கிள்ளி கொஞ்சிட வேண்டுமென்ற பேராவல் எழுந்தது.

அதனை அடக்கிக்கொண்டவள், “ஹோ! அப்போ அந்த மெக்கானிக்?” என்றாள் கேள்வியாய் விழி உயர்த்தி.

அதில் அசடு வழிந்தவன், “ஹி ஹி… மெக்கானிக் என் ஆளு தான். எப்படியும் நீ அவன் கிட்ட விசாரிப்பன்னு கெஸ் பண்ணி நான் தான் அவனைக் கரெக்ட் பண்ணேன். ஆனா எடுத்ததும் அவன் சொதப்பிட்டான்.

நீ கேள்வி கேட்குறதுக்கு முன்னாடியே நான் குடுத்த டயலாக்கை ஒப்பிச்சதுல நீ டவுட் ஆகிட்ட… அதான் உன்ன அங்க இருந்து கூட்டிட்டு வர வேண்டியதா போய்டுச்சு…” என்றான் உதட்டைப் பிதுக்கி.

அவளோ அவன் தோளில் சரமாரியாக அடித்து, “அடப்பாவி… உன்னால நான் என் பிரெண்ட்டோட போலீஸ் பேட்ஜ் எல்லாம் யூஸ் பண்ணி, வெறித்தனமா விசாரிச்சேனேடா…! இப்படியா ஏமாத்துவ?” என்றவளைக் குறுஞ்சிரிப்புடன் அடிக்க விட்டான்.

அவன் சிரிப்பு மேலும் இவளுக்கு ரசனையையே கொடுக்க, “அப்போ அந்த சௌகார்பேட்டைல விசாரிச்சது கூட உன் ஆளு தானா?” எனக் கேட்டதில், அதற்கும் அவன் குறுஞ்சிரிப்பையே பரிசாகக் கொடுத்தான்.

பின் அவள் கடுப்பாவதை உணர்ந்து, “ஐ லவ் யூ யுகி…! இந்த ஒரு வார்த்தைக்காக நான் என்ன வேணா தகிடு தத்தம் பண்ணவேன்” என முழு காதலையும் விழிகளில் தேக்கி பேசியவனை காதலாகப் பார்த்தவள், அவனிடம் உதட்டைச் சுளித்து விட்டு, போனில் எதையோ நோண்டினாள்.

‘என்ன பண்றா? ஒருவேளை நேரா சொல்ல வெட்கப்பட்டுட்டு போன்ல ஐ லவ் யூ சொல்லப் போறாளா?’ என ஹரி புரியாமல் பார்த்திட, அவளோ “இந்தா புடி!” என அவளின் போனை கையில் கொடுத்தாள்.

அவனும் ஆர்வமாய் அதனை வாங்கி பார்த்து விட்டு, பொசுக்கென ஆனதில் சம்யுக்தாவை முறைத்தான்.

“என்ன முறைக்கிற ஹரி? நம்ம லவ் பண்றதுலாம் அப்பறம் இருக்கட்டும். ‘ஹெல்ப் எல்லாம் வேணாம் கேஸ் முடிஞ்சதும் ஃபீஸ் செட்டில் பண்றேன்’னு சொன்னீல. இதான் என் பில். எழுபத்தஞ்சாயிரம். ஒழுங்கா எடுத்து வைச்சுடு…!” எனக் கண் சிமிட்டியவள், அவனின் தோளை லேசாக இடித்து விட்டு அவனைத் தாண்டிச் செல்ல, ஹரி தான் ‘பே’ வெனப் பார்த்தான்.

“ஹே! யுகி… லவர்கிட்ட கிஸ் தான் கேட்கணும்… ஃபீஸ் கேட்கக் கூடாது!” என அவள் சென்ற திசை நோக்கி அவன் கத்தினான்.

அவளோ ஹரி புறம் திரும்பிக் குறும்பாய் “நான் ஒன்னும் சினிமா ஹீரோயின் இல்ல ஹரி. உன்ன பத்தி சொன்னதும் எல்லாத்தையும் மறந்துட்டு ஃபீஸ் வாங்காம லவ் பண்ண… பீஸ் ஃபர்ஸ்ட் கிஸ் நெக்ஸ்ட்… என விரிந்த புன்னகையுடன் பேசியவளை, “அடிங்க…” என ஹரி கிருஷ்ணா துரத்த, சம்யுக்தா அவனின் கைகளில் விரும்பியே மாட்டிக்கொண்டாள்.

ஜீவன் தொலைந்தது…
மேக வாணி

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
17
+1
52
+1
2
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    48 Comments

    1. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதலோடு சேர்த்து குடும்ப உறவுகளின் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    2. பிருந்தா கதிர்

      எவ்ளோ டைம் ஸ்ரீட் பண்ணினாலும் சலிக்காத ஸ்டோரி. இந்த வெப்சைட்ல நான் முதல்ல படிச்ச ஸ்டோரி இதுதான் கா. இன்னும் நிறைய ஸ்டோரீஸ் எழுதி நிறைய achieve பண்றதுக்கு என்னோட best wishes. Always love you ka😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

    3. Vino Malar

      எப்பொழுதும் போல இந்த கதையும் செம😍😍 இந்த வெப்சைட்ல நான் படிச்ச முதல் கதை.. சூப்பர் கா.. வாழ்த்துகள்‌ அக்கா 😍😍

    4. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். சமூக கருத்தை வலியுறுத்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    5. Janu Croos

      சூப்பர் மன்னா🤩🤩🤩🤩…..சஸ்பன்ஸ்🤔🤔🤔…. திரில்லர்😱😱😱😱…. லவ்னு😍😍😍🤩🤩எல்லாம் இருக்கு🤗🤗🤗🤗….எத்தனை வாட்டி படிச்சாலும் முதல் வாட்டி படிக்குற மாதிரியே இருக்கும்☺️☺️☺️☺️….இன்னும் நிறைய நிறைய ஸ்டோரிஸ் எழுதுங்க மன்னா😃😃😃😃வாழ்த்துக்கள்💐💐💐💐💐😙

    6. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். மிகவும் திகிலாகவும் மர்மமாகவும் உணர வைப்பது போன்று அமைந்துள்ள தங்களின் எழுத்து நடையும், வசனமும். மிகவும் அசத்தல். பயமாகவும் அதே நேரம் ஆர்வமாகவும் அமைந்துள்ளது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    7. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். மிகவும் திகிலாகவும் மர்மமாகவும் உணர வைப்பது போன்று அமைந்துள்ள தங்களின் எழுத்து நடையும், வசனமும். மிகவும் அசத்தல். பயமாகவும் அதே நேரம் ஆர்வமாகவும் அமைந்துள்ளது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    8. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். மிகவும் திகிலாகவும் மர்மமாகவும் உணர வைப்பது போன்று அமைந்துள்ள தங்களின் எழுத்து நடையும், வசனமும். மிகவும் அசத்தல். பயமாகவும் அதே நேரம் ஆர்வமாகவும் அமைந்துள்ளது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    9. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். மிகவும் திகிலாகவும் மர்மமாகவும் உணர வைப்பது போன்று அமைந்துள்ள தங்களின் எழுத்து நடையும், வசனமும். மிகவும் அசத்தல். பயமாகவும் அதே நேரம் ஆர்வமாகவும் அமைந்துள்ளது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    10. kathai nila

      செம்ம அக்கா சூப்பர் வேறலெவல் ஹரி யுகி சூப்பர் பேர் அவங்க இன்வஷ்டிகேஷன் லவ் பிரப்போசல்

    11. கதை மாந்தர்கள் மனதை கொள்ளை கொண்டு விட்டனர். மனதிற்கு ஆர்வத்தைத் தூண்டும் திகிலான கதைக்களம். சிறப்பான எழுத்து நடை. மேலும் படைப்புகளை தொடர வாழ்த்துகள்.

    12. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதல் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    13. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதல் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    14. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். மிகவும் திகிலாகவும் மர்மமாகவும் உணர வைப்பது போன்று அமைந்துள்ள தங்களின் எழுத்து நடையும், வசனமும். மிகவும் அசத்தல். பயமாகவும் அதே நேரம் ஆர்வமாகவும் அமைந்துள்ளது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    15. நீங்க எப்போதும் வேற லெவல் தான். இங்கே புடிச்ச முதல் கதையே இதான் ❤❤❤

    16. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். மிகவும் திகிலாகவும் மர்மமாகவும் உணர வைப்பது போன்று அமைந்துள்ள தங்களின் எழுத்து நடையும், வசனமும். மிகவும் அசத்தல். பயமாகவும் அதே நேரம் ஆர்வமாகவும் அமைந்துள்ளது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    17. Prashadi Krishnamoorthy

      Semma story Ka. Hari & Samyuktha pair semma. Enaku romba romba pidichudhu. Love uh sonnavankita fees ketadhu… ultimate! Kenatha kaanom nra maathiri car uh kaanom nu suthal vitu Love uh sonnadhu semma. Loveable story. All the best Ka ❤️🥳🥳🥳

    18. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதல் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    19. Wowwwww.. Wowwwww.. Akka superrr semaaa… 😍😍😍 ovvoru story’m ovvoru vithama semayaaa azhaga yeluthurenga kaaa… Chance yea illaaa… 😍😍 vera level akkoooovvvv… 😘😘😘😘

    20. கதை மாந்தர்கள் மனதை கொள்ளை கொண்டு விட்டனர். மனதிற்கு பிடித்தமான காதல் கதைக்களம். சிறப்பான எழுத்து நடை. மேலும் படைப்புகளை தொடர வாழ்த்துகள்.

    21. குட்டியா இருந்தாலும் cut tana story 👌👌👌👌👌👌💞💞💞💞💞💞💞❤❤❤❤❤❤

    22. Gayu R

      Super story sis.. romba kutty cute story…I love all your stories.. Romba funny a, romantica supera ezhuthureenga..