
தழல் 38:
என்னவோ நேற்றைய இரவுக்கு பின் புதிதாய் ஜெனித்ததைப் போல, இந்த உலகம் புதிதாய் பரிணாமித்தைப் போல ஒவ்வொன்றும் புதிதாய், அத்தனை அழகாய் தெரிந்தது வேந்தனுக்கு. தூரத்தில் அழும் குழந்தை, ஒயாமல் கிரீச்சிடும் பெயர் தெரியாத பறவை, அவனை கடந்துப் போகும் குளிர் காற்று, சுள்ளென்று முகத்தில் விழும் ஆதவனின் உஷ்ணம் தாங்கிய கதிர், உதிர்ந்து விழும் இலை, நேற்றைய மழையில் சிறு பள்ளமாய் தேங்கி நிற்கும் நீர், அதை வேகமாய் வீசி இறைக்கும் அவனின் மகிழுந்து என அத்தனையும் புதுக்கவிதையாய் தெரிந்தது அவனுக்கு.
நிதானமாய் எல்லாவற்றையும் ரசித்தபடியே மெதுவாக அறக்கட்டளைக்குள் நுழைந்து காரை அதற்குரிய இடத்தில் நிறுத்தியவனிடம் புதிதாய் ஒரு துள்ளல் புகுந்துக் கொண்டது. இன்னும் சில நிடத்தில் அவளின் பார்க்க போகிறோம் என்ற எண்ணம், நீண்ட வரிசையில் நின்று தெய்வத்தை தரிசிக்கும் பக்தனைப் போல பரவசத்தை தந்திருந்தது. எல்லா பாடல்களின் முதல் இரண்டு வரிகளையும் ஒன்றாய் சேர்த்து முணுமுணுத்தபடி வேக நடையுடன் அமுதனைக் காண விரைந்தான் அவன். நடந்தானா பறந்தானா என உற்றுப் பார்த்து தான் தெரிந்துக் கொள்ளவேண்டும். நொடிக்குள் இருபதடி தூரத்தை கடந்திருந்தது அவனின் கால்கள்.
அழுதனின் அறைக்கு முன் நின்று அணிந்திருந்த உடையையும் தலைமுடியையும் ஒரு தரம் சரிப் பார்த்துக் கொண்டான் அவன். தலைக் கோதியபடியே உள்ளே நுழைந்தவனின் கண்கள் அவசர கதியில் அவளைத் தேடி அழைந்தது.
அவனை முதலில் கண்டுக் கொண்டது அறிவு தான்.
“வாங்க… வாங்க…” என்றபடியே வேகமாய் எழுந்து வந்து அவனை தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டான். அவனைத் தாண்டி அலைப் பாய்ந்தது வேந்தனின் கண்கள்.
“சார்… யார தேடறீங்க..?” என்றபடியே அவனின் கண்கள் அலை பாய்ந்த திசையில் தனது பார்வையும் ஓட்டினான் அறிவு.
அவனின் கேள்வியிலும் வேந்தனின் கவனம் களையவில்லை. மீண்டும் ஒருமுறை அவனின் முகத்தை தன் பக்கமாக பிடித்து திருப்பி அதே கேள்வியை அறிவுக் கேட்கவும் அசடு வழிய சமாளிப்பாய் சிரித்து வைத்தான் அவன்.
“அ…து… அழுதன்…” என்றவனை இடைமறித்து, “அழுதன் இங்க இருக்கான் சாரே… உங்க கண்ணு ஏன் கண்ட இடத்தையும் சுத்துது…” என்றபடியே கட்டிலின் பக்கத்தில் அவனின் முகத்தை திருப்பி காட்டியவனின் இதழ்களில் குறும்பின் புன்னகை தொக்கி நின்றது. அதிலெல்லாம் வேந்தனின் கவனம் எங்கே பதிந்தது. மனமும் விழிகளும் இன்னும் அவளைத் தேடி தான் அலைப்பாய்ந்தது.
“ஹான்… ஹான்… இப்ப எப்படி இருக்கான்… திரும்ப கண்ணு முழிச்சானா… இனிமே எதுவும் பிரச்சனை இல்ல தானே…” என்றான் வேந்தன் அக்கறையாய்.
“ம்ம்ம்… நல்லா இருக்கான்… இன்னைக்கு ஐ.சி.யூல இருந்து சிப்ட் பண்ணிடலானு சொல்லி இருக்காங்க…”
“ம்ம்ம்… செக்கியூரிட்டி எல்லாம் ஓ.கே தானே… வேற எந்த பிரச்சனையும் இல்லையே…”
“டபுள் ட்ரிபிள் ஓ.கே… உங்களுக்கு எதுவும் பிரச்சனையா..?”
“ஏன்..? ஏன்..? எனக்கென்ன பிரச்சனை…” என்றான் அவன்.
“இல்ல வந்துல இருந்து கண்ணுல குச்சுப்புடி கதகளி எல்லாம் ஆடி காட்டிட்டு இருக்கீங்களே அதான் என்னனு கேட்டேன்…” என்றபடியே அவனை இருக்கையில் அமர வைத்திருந்தான் அறிவு.
“அது நீங்க மட்டும் தானே இருக்கீங்க… அதான் வேற யாரும் இல்லையானு பாக்கறேன்…” என்றான் வேந்தான்.
“அத்தை இப்ப தான் வந்து சாப்பாடு குடுத்துட்டு மதியத்துக்கு செஞ்சு எடுத்துட்டு வரேனு போயிருக்காங்க… கனி ரூம் எப்போ சிப்ட் பண்ணறதுனு கேட்டுட்டு வரேனு போயிருக்கா…”
“ஓஓஓ… வேற யாரும் வரலையா…”
“வந்தாங்களே… இப்பதான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி டியூட்டி டாக்டர் வந்து செக் பண்ணிட்டு போனாங்க…”
மூச்சை ஆழமாய் இழுத்துவிட்டு, அவனின் பக்கம் திரும்பி அமர்ந்தவன், “உங்க வீட்டு பர்ஸ்னல் டாக்டர் வந்துப் பாக்கலையா..?” என்றான் கேள்வியாய்.
சில நொடிகள் பதிலெதுவும் சொல்லாமல் அவனின் முகத்தையே அவதானித்தபடி அமர்ந்திருந்தவன், “அவங்க வரமலையா..? வந்து பாத்துட்டு கிளம்பிட்டாங்க…” என்றான் கேலி வழிந்தோடும் குரலில்.
“அப்போ ஓ.கே… நான் கிளம்பறேன்…” என்றவனின் கைப்பற்றி இழுத்து மீண்டும் இருக்கையில் அமர வைத்திருந்தான் அறிவு.
“ஏன் ஆரா இருந்தா தான் இங்க இருப்பீங்களா..?” என்றவனின் கேள்விக்கு அவன் பதில் சொல்லும் முன்னே, “ஹே… மாமா… எப்போ வந்தீங்க நீங்க..?” என்ற உற்சாக கூவலுடன் உள்ளே நுழைந்திருந்தாள் கனி.
அவளின் தீடிர் மாமாவென்ற அழைப்பு அவனுக்கு புதிதான கூச்சத்தை உண்டாக்கி இருந்தது. அவன் பதில் சொல்லும் முன்னமே, அவனை நெருங்கி கைகளை பிடித்துக் கொண்டவள், “அம்மா சொன்னாங்க… ரொம்ப ரொம்ப சந்தோஷம் மாமா… நாங்க கொஞ்சம் கூட எக்ஸ்பெக்ட் பண்ணவே இல்லை இதை… அம்மா சொன்னதும் அவ்வளவு சந்தோஷம்…” என்றவளின் குரலில் வழிந்தோடும் குதூகலமும் சந்தோஷ ஆரவராமும் அவள் வார்த்தைகளில் பொய்யில்லை என்றது.
சட்டென்று தோன்றிவிட்ட வெட்கத்தை மறைக்க சிறு புன்னகையுடன் தலைகுனிந்துக் கொண்டான் அவன். இன்னும் என்னன்னவோ பேசினாள் அவள். எல்லாவற்றிற்கும் மையமான ஒரு தலையசைப்பு தான் அவனிடம்.
“கனி… போதும்மா… மாப்பிள்ளை ஒரே நாள்ல பயந்துட போறாரு… கொழுந்தியாளா பார்த்தா குதூகலம் வரனுமே தவிர… பயந்து பயந்து வர கூடாது…” என்றான் புன்னகையுடன் அறிவு.
அவனின் சொல்லிய விதத்தில் வேந்தனின் புன்னகை ஆழகாய் விரிந்து விகாசிக்க, சிறு சிணுங்களுடன் அறிவின் முதுகில் ஒன்று வைத்தாள் கனி. அதில் ஆண்கள் இருவரின் சிரிப்பும் இணைந்து ஒலித்தது.
“ஓ.கேம்மா… நீ பாத்துக்க… நான் சகலையோட போய் ஒரு டீ சாப்பிட்டு வந்திடறேன்…” என்றவன் வேந்தனையும் கையோடு இழுத்துக் கொண்டு எழுந்துவிட்டான். ஒரே ஒரு நொடி கூர்மையாக அவனைப் பார்த்தவன் மறுப்பின்றி அவன் உடன் நடந்தான்.
தேனீர் வந்த பின்னும் கூட ஏதோ பேச ஒத்திகைப் பார்ப்பவன் போல தன்னுள் உழன்றுக் கொண்டிருந்தவனை, “டீ ஆறிடப் போகுது அறிவு… சாப்பிடுங்க…” என்ற வேந்தனின் குரல் களைத்தது.
அவன் எடுத்து பருக தொடங்கிய நொடி, “என்ன சொல்லணும்னு நினைக்கறீங்க அறிவு… இல்ல எதுவும் கேக்கணுமா..?” என்றான் வேந்தன் அவனையேப் பார்த்தபடி.
அவனே தொடங்கி வைத்துவிட்டதில் அறிவுக்கு ஒரு ஆசுவாசம். ஆனால் அவனுள் இன்னுமே சிறு தயக்கம் இருந்தது. “எனக்கு எப்படி ஆரம்பிக்கறது… இல்ல கேக்கறதுனு தெரியல… ஆரா… அவங்க நல்லா இருக்கணும்… உங்களுக்கு… உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை தானே…” மென்று முழுங்கி உளறிக் கொட்டியவனை வாஞ்சையுடன் பார்த்தான் அவன்.
“ஒரு போலீஸ்காரனைப் பார்த்து என்ன கேள்வி கேட்டீங்க… நல்லா பாருங்க… என்ன பாத்தா உடம்புல பிரச்சனை இருக்கறவன் மாதிரியா இருக்கு… அப்படியும் உங்களுக்கு சந்தேகம்னா உங்க பர்னஸ்னல் டாக்டர வச்சே புல் பாடி செக்கப் பண்ணிடுவோம் என்ன சொல்லறீங்க…” என்ற வேந்தனின் குரலில் இப்பொழுது ஏகத்துக்கும் கேலி வழிந்தது. ஆனால் அதைக் கண்டுக் கொள்ளும் நிலையில் அறிவு இல்லை.
“நான்… நான் அதை கேட்கலை…” என்றவனுக்கு மேலே விளக்க முடியாத பரிதவிப்பு.
அவனின் கரங்களை ஆதரவாய் பற்றி தட்டிக் கொடுத்தவன், “ஆராவ நான் காதலிக்கறேன் அறிவு… அது நிச்சயமா கொஞ்ச நேர ஈர்ப்பு கிடையாது… அவளோட ஏதோ ஒன்னுத்த பார்த்து வந்த ஈர்ப்பு இல்ல அது… சந்தோஷம், துக்கம், அழுத்தம், அடம், கோபம், அன்பு, கடந்தகாலம் இது எல்லாமும் சேர்ந்த ஆராவ தான் நான் காதலிக்கறேன்… என் வாழ்க்கையோட கடைசி நிமிஷம் வரைக்கும் காதலிச்சுட்டே இருக்கணும்னு ஆசைப்படறேன்…” என்றவனின் கையை இப்பொழுது அழுத்தமாய் பற்றிக் கொண்டவனின் கண்களில் பரவிய நிம்மதிக்கு அளவேயில்லை.
“நீங்க எனக்கு எப்படியான நிம்மதிய குடுத்திருக்கீங்கனு உங்களுக்கு தெரியுமானு தெரியல…” என்றவன் குரல் நெகிழ்ந்திருந்தது. இதமான புன்னகையுடன் அவனைப் பார்த்திருந்தான் வேந்தன்.
“கனிக்கு அவங்க அக்கானா அவ்வளவு இஷ்டம்… நான் லவ் சொன்னப்ப கூட எங்க அக்காவுக்கு இதெல்லாம் பிடிக்காதுனு தான் வேணாம் சொன்னா… அதுக்கு அப்பறம் இரண்டு வருஷம் நாயா பேயா அழைஞ்சு ஓ.கே சொல்ல வச்சா கொஞ்ச நாள்ல வீட்டுல தெரிஞ்சுட்டு… எங்க வீட்டுலையும் ஒத்துக்கல… அவங்க ஒத்துலை… அதுவும் ஆரா… முடியவே முடியாதுனு சொல்லிட்டாங்க… இரண்டு வருஷம் நாங்க எங்க முடிவுல ஸ்டாராங்க இருக்கவும் அதுக்கு பிறகு தான் ஆரா ஒத்துக்கிட்டாங்க…
அவங்க ஒத்துக்கிட்டாங்களேனு சந்தோஷப் படறதுக்குள்ள எங்கம்மா அவங்க ஊர்ல போய் விசாரிச்சுட்டு வந்து கனி வேண்டானு ஒரே சண்டை… அப்படியே ஒரு வருஷம் ஓடிப்போச்சு… நான் வேற யாரையும் கல்யாணம் பண்ண மாட்டேனு உறுதியா தெரிஞ்ச அப்பறம் தான் கனிய கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சாங்க… கல்யாணத்துக்கு முதல் நாள் வரைக்கும் எல்லாமே ஆராதான் எடுத்து பண்ணாங்க… ஆனா தீடிருனு சொல்லாம கிளம்பி வள்ளியம்மாகிட்ட போய்டாங்க… எவ்வளவு கூப்பிட்டும் வரலை… நாளைக்கு கல்யாடங்கும் போது நிறுத்தவும் முடியல… அதுக்கு பிறகு கனிய பாக்கறத பேசறத சுத்தமா நிறுத்திட்டாங்க… ஏன் அமுதன் பிறந்தப்ப அவனை பாக்க கூட வரலை… அதுவும் இதே ஹாஸ்பிட்டல வேலை செஞ்சுட்டு…
கனி ரொம்பவே உடைஞ்சுப் போய்ட்டா… ஆராவ இப்படி இருக்கும் போது நம்ப மட்டும் சந்தோஷமா இருக்கோமேங்கற கில்ட் எனக்கே இருக்கும் போது அவங்கள உயிரா நினைக்கற அவளுக்கு எப்படி இருக்கும்… அவ சொல்லவே இல்லைனாலும் எனக்கு அது புரிஞ்சு தான் இருந்துச்சு… ஆனா இது எல்லாத்துக்கும் எங்க அம்மா காரணமா இருப்பாங்கனு நினைக்கவே இல்லை நான்… இந்த ரெண்டு நாளா அந்த குற்றவுணர்வும் சேர்ந்துடுச்சு எனக்கு… ஆனா இப்போ அதெல்லாம் ஒன்னுமேயில்லனு ஆக்கிடுச்சு உங்க வார்த்தை…” குரல் உடைய சொன்னவனை எழுந்து தோளோடு அணைத்துக் கொண்டான் வேந்தன்.
“நீங்க ரெண்டு பேரும் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கணும் வேந்தன்…” என்றவனை இன்னுமே இறுக்கிக் கொண்டான் முதுகில் ஆதுரமாய் தட்டிக் கொடுத்தான்.
“ஆரா யுவாவ பாக்க போயிருக்காங்க… சீக்கரம் போனீங்கனா புடிச்சுடலாம்…” என்றான் அறிவு மெல்லிய முறுவலுடன்.
“தேங்க்ஸ் ஃபார் யுவர் இன்பர்மேஷர் சகல…” என்று கத்தி சொல்லிபடியே எப்பொழுதோ அவளை தேடி விரைந்திருந்தான் வேந்தன். செல்லும் அவனையே நிம்மதியும் சந்தோஷமும் பொங்கப் பார்த்திருந்தான் அறிவு.
அடுத்த ஐந்து நிமிடத்திற்கெல்லாம் யுவாவின் அறைக்குள் நின்றிருந்தான் அவன். உடைந்திருந்த கதவு ஒன்றே அத்தனையும் விளக்கப் போதுமானதாக இருந்தது. பொங்கி வழிந்த அத்தனை சந்தோஷம்மும் நீர்த்துப் போயிருந்தது. அவனின் புதிதாய் பூத்த உலகம் ஒரே நொடியில் கருகிப் போன உணர்வு. நெஞ்சை அடைத்துக் கொண்டு மேலெழுந்த துக்கத்தை விரல் கொண்டு நீவி அடக்கப் பார்த்தான் அவன். அதுவோ எம்பி நின்று தொண்டைக் குழியை அடைத்துக் கொண்டு சண்டித்தனம் செய்தது. தலையை இறுக பற்றியபடியே அருகில் இருந்த படுக்கையில் சரிந்து அமர்ந்தவனுக்கு எல்லாமே சம்பித்து போன உணர்வுதான்.
– பற்றி எரியும்…

