Loading

 

ரூபிணிக்கு துள்ளி குதிக்க வேண்டும் போல் இருந்தது. ஆனால் சுற்றிலும் இருக்கும் அத்தனை பேரும் அவளை பற்றி என்ன நினைப்பார்கள்? என்ற ஒரே காரணம் அவளை அமைதியாக நிற்க வைத்தது.

“பை மிஸ் ரூபிணி” என்று அவளை அணைத்து விடை பெற்றுச் சென்றார் ஒரு பெண்.

அவரோடு வந்த மற்றவர்களும் கிளம்பி விட, எல்லோரும் அந்த அறையை விட்டு வெளியேறினர். உதயாவும் மெலினாவும் மட்டுமே அந்த அறையில் இருக்க, ரூபிணி துள்ளி குதித்து மெலினாவை கட்டிக் கொண்டாள்.

“ராஜ் கூட நான்.. நினைச்சே பார்க்க முடியல..” என்று அவள் குதூகலிக்க, மெலினா அவளது சந்தோசத்தை கண்டு நிறைவடைந்தார்.

“இப்படியே குதிச்சுட்டே வீட்டுக்கு போ.. நான் மிச்சத்த பேசிட்டு வர்ரேன்” என்றவர் உதயாவிடம் தலையசைத்து விட்டு வெளியேறினார்.

உதயா எழுந்து வந்து ரூபிணியின் முன்னால் நின்றான்.

“ரொம்ப சந்தோசமா இருக்கியே?”

“ஹலோ.. என்னோட ஃபேவரட் மாடல் கூட நான் வொர்க் பண்ண போறேன். எவ்வளவு பெரிய விசயம் தெரியுமா? சந்தோசப்படாம?”

“இதே சந்தோசத்துல கேமரா முன்னாடி பயப்படாம நின்னா சரி.. இல்லனா எல்லாம் சொதப்பிடும் ஞாபகம் வச்சுக்க”

“ராஜ் இருக்கும் போது எனக்கென்ன கவலை? அவரே என்னை கேட்டுருக்காரே.. அது போதும்.. எந்த பயமும் வராது”

உதயா அவளை சலிப்பாக பார்த்து வைத்தான்.

‘சரியான ராஜ் பைத்தியம்’ என்று நினைத்துக் கொண்டான்.

“சூட்டிங் வெளிநாட்டுல.. நீயும் வருவ தான?”

தலையாட்டி வைத்தான்.

“டிக்கெட்ஸ் புக் ஆனதும் சொல்லி அனுப்பு..”

“நான்?”

“நீயும் இந்த ப்ராஜெக்ட்ல இருக்க மேன்..”

“உன் மேனேஜர்க்கு இன்ஃபார்ம் பண்ணுவாங்க. அவங்க கிட்ட நீ கேளு. நான் சொல்லுவேன்னு எல்லாம் எதிர்பார்க்காத”

“அதான.. உன்னலாம் நம்பி டேட்டிங் எல்லாம் எப்படித்தான் பொண்ணுங்க வருதுங்களோ தெரியல..”

உதயா அவளை முறைத்து விட்டு திரும்பினான். பிறகு உடனை நின்று, “உன் மத்த பிராஜெக்ட் என்னாச்சு?” என்று விசாரித்தான்.

“இது முடிஞ்சு மூணு நாள் கழிச்சு தான் அது. அதுக்குள்ள இங்க வந்துடலாம்..”

“ஃபைன்”

“பார்ட்டி ஒரே நாள் தானே? பிரச்சனை இல்ல”

உதயா புருவம் சுருங்க பார்த்தான்.

“பார்ட்டி பத்தி உனக்கு யாரு சொன்னா?”

“ராஜ் தான்.. சூட் முடிஞ்சா ஒரு ப்ரைவேட் பார்ட்டி இருக்கும்னு சொன்னாரு. அதுக்கு சாப்பிங் பண்ண தான் கிளம்பிட்டு இருக்கேன்.”

“அவன் கூட ரொம்ப க்ளோஸ் ஆகிட்டு இருக்க போல?”

“அப்படி சொல்ல முடியாது.. ஜஸ்ட் டெக்ஸ்ட்ல பேசிப்போம்”

உதயா அவளை நெருங்கி வந்து நின்று முறைத்தான். ரூபிணி புரியாமல் பார்க்க, “ரூம்க்கு வா” என்று அழைத்து விட்டு வேகமாக திரும்பி வெளியேறி விட்டான்.

ரூபிணி தன் பையை எடுத்துக் கொண்டு பின் தொடர்ந்தாள். இருவரும் அவனது அறைக்குள் நுழைந்ததும் உதயா கதவை அடைத்து விட்டு, கோபத்தோடு ரூபிணியிடம் அளவுக்கு அதிகமாக நெருங்கி நின்றான்.

“என்ன?” என்று பதட்டமாக கேட்டு ஒரு அடி பின்னால் சென்றாள்.

“நம்ம டீல் நினைப்பிருக்கா இல்லையா?” என்று உதயா பல்லைக்கடிக்க, “இருக்கே.. டேட்டிங் ரூமர் தான?” என்று புரியாமல் கேட்டாள்.

“அதோட ரூல்ஸ் மறந்துடுச்சா?”

ரூபிணி சில நொடிகள் யோசித்து விட்டு, பிறகு உதயாவை சலிப்பாக பார்த்தாள்.

“ரூல்ஸ் போட்டதே நானு.. எனக்கு மறக்குமா?”

“மறந்த மாதிரி தான பிகேவ் பண்ணுற?”

“உதயா.. பைத்தியம் மாதிரி பேசாத.. ரூல்ஸ் படி நீயோ நானோ ஒரு வருசத்துக்கு வேற யாரையும் லவ் பண்ணக்கூடாதுனு தான் ரூல்ஸ். பேசக்கூட கூடாதுனு நான் சொல்லல”

“நீ சும்மா பேசுற மாதிரி எனக்கு தோணல..”

“வாட்? உனக்கு தோணலயா?”

“ஆமா.. அந்த ராஜ பார்த்தா எந்திரிச்சு நிக்கிற.. அவன் நீ தான் பேர் ஆகனும்னு கேட்குறான். இது பத்தாதுனு சேட்டிங்.. ரூல்ஸ் உருவாக்கிட்டு அத மறந்துட்ட நீ”

“முட்டாள்தனமா பேசாத உதயா”

“நோ.. நீ தான் ரொம்ப அறிவாளியா நடந்துக்கிறதா நினைச்சுட்டு இருக்க”

ரூபிணிக்கு திட்ட வார்த்தைகள் தொண்டை வரை வந்த போதும் வாயை மூடிக் கொண்டு ஆழமாக மூச்செடுத்தாள்.

“இப்ப என்ன சொல்ல வர்ர நீ?”

“நம்ம டேட்டிங்க அஃபிஸியலாக்கிடலாம்”

ரூபிணி அதிர்ந்து போய் பார்க்க, “ரொம்ப சாக் ஆகாத.. ரூமர கன்ஃபார்ம் பண்ண போறோம். அவ்வளவு தான்” என்றான்.

“ஏய் ஆறு மாசம் கழிச்சு தான கன்ஃபார்ம் பண்ணனும்னு சொன்ன? இப்ப முழுசா ரெண்டு மாசம் கூட ஆகல”

“சோ வாட்? இப்ப கன்ஃபார்ம் பண்ணுறோம். அவ்வளவு தான்..”

ரூபிணி அவனை நம்ப முடியாமல் பார்த்து வைத்தாள்.

“இப்ப என்ன அவசரம்?”

“அப்ப தான் நீ ரூல்ஸ் மறக்க மாட்ட.. இப்ப என்ன சாப்பிங் தான போற? நானும் வர்ரேன்.. வா”

“ஏய் இது டூ மச்”

“ஏன்?”

“இப்படி அவசரமா சொன்னா எப்படி?”

“என்ன இப்போ? அந்த ராஜ்க்கு தெரிஞ்சுடுமேனு பயமா?”

“உதயா.. நிஜம்மா ராஜ்க்கு நான் ஃபேன் அவ்வளவு தான். அவர் கூட டேட்டிங் போனா உன் கிட்ட சொல்லாம போக மாட்டேன். இதுக்கு போய்…”

“இந்த எக்ஸ்பளனேஷன நீயே வச்சுக்கோ.. இப்ப சாப்பிங் கிளம்பலாம்..” என்றவன் அவளது தோளை பற்றி இழுத்துக் கொண்டு வெளியேறினான்.

உதயாவை முறைத்தாலும் ரூபிணி அவனோடு நடந்தாள்.

“நீ பண்ணுறது கொஞ்சம் கூட நல்லா இல்ல” என்று பல்லைக்கடித்துக் கொண்டு அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் சொல்லி விட்டு லிஃப்டில் நுழைந்து விட்டாள்.

உதயா கண்டு கொள்ளாமல் அவள் அருகே நின்றான். கீழே சென்றதும் காருக்கு வேகமாக நடக்க, “ரூபிணி..” என்று அதட்டி நிறுத்தினான்.

“உன் கார அப்புறமா எடுத்துக்க” என்றவன் தன் காரை காட்ட, “அப்புறமா நீ கொண்டு வந்து என் வீட்டுல கார விடுறியா?” என்று கேட்டு வைத்தாள்.

“முதல்ல கிளம்பு” என்றவன் சாவியால் திறக்க, உடனே உள்ளே ஏறி அமர்ந்து கொண்டு கையை கட்டிக் கொண்டாள்.

உதயா அமைதியாக காரை எடுத்தான்.

சாலைக்கு வரும் வரை பொறுத்தவள் அதற்கு மேல் பொறுக்க முடியாமல், “உனக்கென்ன பைத்தியமா? ஏன் இப்படி லூசு மாதிரி நடந்துக்கிற? நான் தான் எதுவும் இல்லனு சொல்லுறேன்ல? நம்பாம கன்ஃபார்ம் பண்ணனுங்குற?” என்று கத்தினாள்.

“அதான.. எங்க திருந்திட்டியோனு நினைச்சேன்.. இதோ கத்திட்ட”

“நீ கத்த வைக்கிற.. ஒரு ஃபேக் ரூமர் எப்படி ஒர்க் ஆகும்னு தெரியாம பேசிட்டு இருக்க”

“இதே ஃபீல்ட்ல தான் நானும் இருக்கேன்”

“இருந்தா? நீ பாஸ்.. நாங்க ஆர்டிஸ்ட்.. ரெண்டும் ஒன்னு கிடையாது”

“இப்ப கன்ஃபார்ம் பண்ணுறதுல என்ன பிரச்சனை உனக்கு?”

“உனக்கு தான் பிரச்சனை.. நான் ராஜ் கூட பேசுறதுல உனக்கென்ன பிரச்சனை?”

“நீ என் கேர்ள் ஃப்ரண்ட்”

“வாட்?”

“அதாவது டேட்டிங்ல இருந்தா கேர்ள் ஃப்ரண்ட் தான?”

“என்ன உளறுர நீ?”

“உனக்கு அறிவு இருந்தா புரிஞ்சுக்கோயேன்”

“நீ தான் எனக்கு அறிவில்லனு சொல்லிட்டியே.. நீயே புரிய வையேன்”

“சரி நானே சொல்லுறேன்.. ரூமர் ரூமரா மட்டுமே இருந்தா கொஞ்ச நாள்ல காணாம போயிடும்.. சீக்கிரமே கன்ஃபார்ம் பண்ணிட்டா யாரும் மறக்க மாட்டாங்க”

“யாருமா? இல்ல உன் எக்ஸா?” என்று கேட்டு முறைத்தாள்.

“டார்கெட்டே அவ தான?”

“அவளுக்காக என்னை இம்சை பண்ணுற.. அவள மறக்க முடியலனா அவ கிட்டயே போய் தொலையேன்”

“துரோகிங்கள நான் அவ்வளவு சீக்கிரம் மறந்தது இல்ல..”

“அதுக்கு ஏன் என் உசுர வாங்குற? நான் சண்டை போட்டா நேரா தான் போடுவேன். துரோகம் பண்ணது இல்லையே?”

ரூபிணி பொங்கிக் கொண்டிருக்க, காரை ஓரத்தில் நிறுத்திய உதயா அவள் பக்கம் திரும்பினான்.

“இப்ப என்ன? இதுக்கு ஒத்துக்க மாட்ட.. அப்படித்தான?”

“ஆமா”

“ஓகே.. பதிலுக்கு நான் ஒன்னு கொடுத்தா ஒத்துக்குவியா?”

“என்னது?”

“உன் எக்ஸ் பத்தின டீடைல்”

“அவன் எக்கேடு கெட்டா எனக்கென்ன?”

“அவன நான் அழிக்கனும்னு ப்ளான் பண்ணனே.. அது என்னாச்சுனு தெரிய வேணாமா?”

அதிர்ச்சியோடு அவன் பக்கம் திரும்பி அமர்ந்தாள்.

“என்ன பண்ண?”

“அவன ஒருத்தன் கிட்ட மாட்டி விட்டேன்”

“யாரு அது?”

“எனக்கு தெரிஞ்ச ஒருத்தன் இருக்கான். அவன் பக்கா க்ரிமினல்”

“என்ன பண்ணான் அவன்?”

“உலகத்துக்கு சரியா தெரியாத விசயம் ஒன்னு இருக்கு.. இந்த மாதிரி ஆளுங்க கிட்ட நம்ம எதிரிய கை காமிச்சா அவங்க வாழ்க்கைய அழிச்சுடுவாங்க. பிஸ்னஸ்ல சிலர அழிக்க அந்த மாதிரி ஆளுங்கள யூஸ் பண்ணுவாங்க”

“நீயும் பண்ணுவியா?”

மறுப்பாக தலையசைக்க, “அப்புறம் எப்படி உனக்குத் தெரியும்?” என்று கேட்டு வைத்தாள்.

“இது மாதிரி இருக்குனு தெரியும். நான் பிஸ்னஸ்ல யூஸ் பண்ண வேண்டிய அவசியம் வரல.. இப்ப பர்ஸ்னலுக்கு யூஸ் பண்ணிக்கிட்டேன்”

“என்னனு தெளிவா சொல்லு”

“அவன் எக்ஸ்.. அவன் ஒரிஜினல் பேரு யாருக்குமே தெரியாது. முன்னாடி காண்டாக்ட் இருக்கவங்க கிட்ட தான் அவன் நம்பர் வாங்க முடியும். அவன் கிட்ட ஒருத்தரோட டீடைல் அனுப்பி, அவங்கள என்ன செய்யனும்னு சொன்னா போதும். செஞ்சுடுவாங்க”

“கொலையா?”

“பைத்தியம் மாதிரி பேசாத ரூபிணி”

“நீ பேசுறது அப்படி தான் இருக்கு”

“கொலை பண்ணி தான் ஒருத்தர அழிக்கனும்னு இல்ல. அதை விட பெருசா பண்ணலாம்.. இப்ப விஷாலுக்கு பண்ண சொன்னது, அவன செல்லாக்காசாக்கி ஊர விட்டு ஓட விடனும்”

“அப்படினா?”

“விஷால் டீடைல கொடுத்து… இவன் என்னோட சின்ன வயசு ஃப்ரண்ட் .. இப்ப நல்ல வேலையில இருக்கான்.. பழைய கஷ்டத்த மறந்துட்டு சீன் போடுறான். அவன் கிட்ட இருக்க மொத்த பணம், பதவி எல்லாம் போகனும். அதுக்காக நான் பணம் தர்ரேன். அத வாங்கிட்டு வேலைய முடிச்சுடுங்கனு பணம் கொடுத்தாச்சு”

ரூபிணி அதிர்ச்சியில் வாயில் கைவைத்தாள்.

“அந்த மாதிரி நாம சொல்லுற காரணம் பச்சை பொய்னு தெரிஞ்சாலும், நம்ம கிட்ட இருந்து பணத்த வாங்கிட்டு விஷால அப்ரோச் பண்ணுவாங்க. யாரு? எப்படி ? எங்கனு தெரியாது. ஜஸ்ட் பார்ல.. காஃபி சாப்ல.. இந்த மாதிரி பொது இடத்துல, ஒருத்தன் திடீர்னு வந்து நல்லா பேசுவான். அவன் பேசுறதுல விஷால் அவனோட எதாவது ஒரு ஆசைய உளறுவான். அந்த ஆசை தான் ட்ரம்ப் கார்ட்.

உதராணத்துக்கு சிலருக்கு பயங்கர அழகா மாறனும்னு ஆசை இருக்கும். அவங்க கிட்ட போய்.. இந்த ஹாஸ்பிடல்ல சர்ஜரி பண்ணிக்கிட்டா செம்ம அழகா மாறிடுவனு ஆசை காட்டுறது. அவங்களும் முழுசா நம்பலனாலும், திரும்ப திரும்ப சொல்லும் போது நம்புவாங்க. சொல்லுற ஆள் வெறும் ஒரே மாசத்துல க்ளோஸ் ஃப்ரண்ட் ஆகுற அளவுக்கு பேசுவான். அவன நம்பி அந்த ஹாஸ்பிடல் போனா.. அங்க ஒரு கேடி, டாக்டரா இருப்பான். அவன் கிட்ட ஏற்கனவே பணத்த கொடுத்து செட் பண்ணிடுவாங்க. ஆப்ரேஷன் பண்ணுற வரை நல்லா பேசுவாங்க. ஆப்ரேஷன் முடிஞ்ச கொஞ்ச நாள் முகம் கோரமாகிடும். ஆப்ரேஷன் பண்ண டாக்டர் காணாம போயிடுவான். ஐடியா கொடுத்தவன் மறைஞ்சுடுவான். விக்டிம் கிட்ட எந்த எவிடன்ஸும் இல்லாத மாதிரி அழிச்சுட்டு எஸ்கேப் ஆகிடுவாங்க. புரியுதா?”

ரூபிணிக்கு தொண்டை அடைத்துக் கொள்ள தலையாட்டி வைத்தாள்.

“இது மாதிரி விஷாலுக்கு பணக்காரன் ஆகனும்னு ஆசை. அதுனால அவனுக்கு விரிச்ச வலை வேற. சில ஸ்டாக்ல இன்வஸ்ட் பண்ண சொல்லுறது.. கொஞ்ச வருமானம் வந்ததும் அதை நம்பிட்டு பெரிய பணமா போடுவாங்க. அத அப்படியே சுருட்டிட்டு ஓடிடுவாங்க. இது வந்து நார்மல்.. விஷால் என்ன பண்ணான் தெரியுமா? ஸ்டாக்ஸ் மேல நம்பிக்கையில்லனு கேம்ளிங்ல இறங்கிட்டான். அதுல வந்த பணத்த வச்சு வீடு வாங்க போறானாம்.”

“கேம்ளிங்கா?”

“ஆமா.. அவன் கிட்ட ரெண்டு பேரு பேசிருக்காங்க.. ஒருத்தன் விஷால கேம்ளிங்ல இழுத்து விட்டுட்டான். அதுல இது வரை விஷால் சம்பாதிச்சத விட இழந்தது அதிகம். ஆனா அவனோட அதிர்ஷ்டம் இன்னும் அவன் பக்கம் ஒட்டிட்டு இருக்குனு நினைச்சு, பெரிய அமௌண்ட்ட கொடுத்துட்டான். அந்த அமௌண்ட்ட அப்படியே தூக்கிட்டு பார்ட்டி எஸ்கேப் ஆகியாச்சு. கேம்ளிங்ல போன பணம் போனது தான். விஷால் கிட்ட ஒரு எவிடன்ஸும் இல்ல. இப்ப பைத்தியம் புடிச்ச மாதிரி அவங்கள தேடி அலையுறான்”

“அப்படி எவ்வளவு இழந்தான்?” என்று கேட்டு உதயா சொன்ன பதிலை கேட்டு மேலும் அதிர்ந்தாள்.

“அவன் கிட்ட ஏது அவ்வளவு பணம்?”

“கடன் வாங்கிருக்கான். அவங்க அம்மா கிட்ட இருந்த சொத்த வித்துட்டான். இதெல்லாம் சேர்த்து போட்டா மொத்தமா பெருசா வரும்.அத வச்சு செட்டில் ஆகிடலாம்னு நம்பிருக்கான். இந்த கடன அவன் ஜென்மத்துக்கும் உழைச்சாலும் கட்ட முடியாது. இவனோட கேம்ளிங் விசயம் வேற உன் பழைய ஏஜன்சிக்கு சொல்லியாச்சு. அவன வேலைய விட்டு தூக்கப்போறதா சொல்லிட்டு இருக்காங்க. அனேகமா அடுத்த மாசம் அவன் வேலை போயிடும். கடன் கட்ட பணமும் இல்ல. வட்டி பணத்துக்கு வேலையும் இல்லனு தலைமறைவா சுத்த வாய்ப்பிருக்கு..”

“யூ ஆர் ஜீனியஸ்” என்ற ரூபிணி பாய்ந்து உதயாவை கட்டிக் கொள்ள, உதயா அதிர்ந்து அசையாமல் அமர்ந்து விட்டான்.

தொடரும்.

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 16

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
16
+1
2
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்