Loading

உயிர் – 24

அவனின் அதிரடியில் அதிர்ந்து ஆடிப் போய் அவனை பார்த்துக் கொண்டிருந்தாள் அனுராதா.

“என்ன இப்படி முழிக்கிற.. எல்லாத்துக்கும் உனக்காக நான் வந்து பேசிக்கிட்டு இருக்க முடியாது. இந்த வீட்ல எனக்கு என்ன உரிமை இருக்கோ அது உனக்கும் இருக்கு. நீ இந்த வீட்டோட மருமக.. வேலைக்காரி ஒன்னும் கிடையாது.

இப்படியே எல்லாத்துக்கும் வாய மூடிட்டு இருந்தினா, கடைசியில் என் அம்மா சொன்ன மாதிரி உன் அம்மா மாதிரி தான் உன்னையும் ஓரத்தில் உட்கார வச்சிடுவாங்க. ஆனா, நிச்சயம் அதுக்கு நான் விடமாட்டேன்.

அதே போல எல்லா நேரமும் நான் உன் கூடவே இருக்க முடியாது. உனக்காக நான் மட்டும் பேச முடியாது நீயும் பேசணும். உன் அம்மா பேசாம இருந்ததால தான் அவங்களுக்கு இன்னைக்கு இப்படி ஒரு நிலைமை. ஆனா, நீ ஒன்னும் உன் அம்மா மாதிரி கிடையாதே.. அப்புறம் ஏன் பேச யோசிக்கிற..

எல்லாத்துக்கும் நீ ஏன் என்னை எதிர்பார்க்கிற.. உனக்கு வேண்டிய உரிமையை நீ தான் எடுத்துக்கணும். உன்னுடைய இடம் இந்த வீட்டுல எங்கன்னு நீ தான் முடிவு பண்ணனும். உன்ன பத்தின முடிவை எடுக்குற உரிமையை நீ மத்தவங்க கையில கொடுத்தா, உன்னை மூளையில் தான் உட்கார வைப்பாங்க. வாயை திறந்து பதிலுக்கு சண்டை போடு”.

காரசாரமாக ஒவ்வொரு வாக்கியமாக பேசிக்கொண்டே அவன் அவளை நோக்கி ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்கவும்.

அவளோ மிரட்சியோடு அவனைப் பார்த்துக் கொண்டே தன்னையும் மீறி பின் நகர்ந்து சென்றாள்.

அவன் பேசி முடிக்கவும், இவள் கட்டிலில் கால் இடறி பொத்தென்று அமரவும் சரியாக இருந்தது.

இத்தனை நேரம் அவளிடம் மூச்சு விடாமல் பேசியவன். அவள் அருகில் அமர்ந்து சாவகாசமாக மூச்சு வாங்கவும்.

அவனை விழிகள் அலைப்புற கண்டவள், “எனக்கு சட்டுனு அப்படி பேசி வரல” என்றாள் திணறியபடி.

“அப்போ என் அம்மா சொன்ன போல இந்த வீட்ல ஒதுங்கியே இருக்கலாம்னு முடிவு பண்ணிட்டியா?”.

அவள் எதுவும் பதில் கூறாமல் அவனை பார்க்கவும். அவளின் கையை அழுத்தமாக பற்றியவன், “இங்க பாரு நீ ஒன்னும் பயந்தாங்கோலி இல்லைன்னு எனக்கு தெரியும். ரொம்பவே தைரியசாலினும் தெரியும். அந்த வீட்ல உன்ன வாயை திறக்க விடாம உன் அம்மா உன் வாயை அடைச்சு வச்சிருந்தாங்க.

ஆனா, இங்கேயும் அதே போல நீ வாயடைச்சு இருக்கணும்னு எந்த அவசியமும் இல்லை. நீ அங்கேயே உன் வாயை திறந்திருந்தா உனக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் மறுக்கப்பட்டு இருக்காது. ஆனா, இங்கேயும் நீ வாயை திறக்காம இருந்தினா..” என்றுவிட்டு அவன் அவளை ஆழ்ந்து பார்க்கவும்.

அவள் புரிந்தது என்பது போல் தன் தலையை மேலும் கீழுமாக ஆட்டி வைத்தாள்.

அதில் மெலிதாக சிரித்தவன், “அதுக்காக எல்லா நேரமும் வாய் திறக்கனும்னு அவசியம் இல்ல. அடைக்க வேண்டிய நேரத்தில் அடைக்கலாம்” என்று விஷமமாய் கூறியவன்.

“போய் ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு வா சாப்பிட போகலாம்”.

அவனின் கூற்றில் விழிகள் அதிர்ச்சியை வெளிப்படுத்தினாலும், ஏனோ மறுக்க தோன்றாமல் அவனுடன் கிளம்பி சென்றாள்.

தன் மகனுடன் வந்து ஜோடியாக அமர்ந்தவளை எதுவும் பேச முடியாமல் உர்ரென்று முகத்தை வைத்துக்கொண்டு ஹால் சோபாவில் அமர்ந்து விட்டார் உமா.

ஆதவ், அனுராதா, தாரணி என மூவரும் ஒன்றாக அமர்ந்து காலை உணவை உட்கொண்டனர்.

இவர்களை ஓரக்கண்ணால் முறைத்து பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தார் உமா.

உண்டு முடித்தவன், “அம்மா அத்தை கால் பண்ணி இருந்தாங்க. லஞ்சுக்கு இன்வைட் பண்ணி இருக்காங்க. நானும் அனுவும் போயிட்டு வந்துடறோம்”.

“அதை எதுக்குப்பா என்கிட்ட சொல்ற.. நீ செய்யுற எல்லாத்தையும் என்கிட்ட சொல்லிட்டு தான் செய்வியா? எல்லாம் உன் இஷ்டப்படி தானே நடக்குது. இதுக்கு மட்டும் எதுக்கு என்கிட்ட சொல்ற?” என்ற வார்த்தைகள் வெடுக்கென்று வந்து விழ. முகத்தை நொடித்துக் கொண்டு திரும்பினார்.

“எதை எப்போ யார்கிட்ட சொல்லனும்னு எனக்கு தெரியும் மா. இப்போ சொல்லலைனா எனக்கும் சேர்த்து மதியம் சமைச்சிடுவீங்க. சாப்பாடு வேஸ்ட் ஆகிடும். அதுக்காக தான் சொல்றேன்”.

அவருக்கு விட்டேற்றியாக பதில் உரைத்தவன் அனுவுடன் புறப்பட்டு விட்டான்.

“அவ முன்னாடியே எப்படி பேசுறான் பாரு. அப்புறம் எப்படி அவ என்னை மதிப்பா” என்று பொறுமிக் கொண்டு அமர்ந்திருந்தார் உமா.

கீதாவின் அளவிற்கு உமாவிற்கு பேசவும் வராது. கோமதியை அப்போதிலிருந்தே பிடிக்காமல் போய்விட்டது. அதன் விளைவு இன்னுமே ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அவரையே பிடிக்காது என்னும் நிலையில் அனுராதாவை மட்டும் பிடித்து விடுமா என்ன..

ஆனாலும், கீதாவை போல் உமா கிடையாது. சற்று சிந்தித்து செயல்படுவார். எதையும் கீதாவை போல் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பேசிவிடவோ, செய்து விடவோ மாட்டார்.

ஆனால், தற்பொழுது இருக்கும் சூழலில் கோபம் அவரின் கண்ணை மறைத்து விட்டது என்று தான் கூற வேண்டும்.

கோமதியுடன் அவருக்கு நல்ல பழக்கம் இல்லாததால் கூட அவரின் தரப்பு நியாயம் இவருக்கு எட்டாமல் போய்விட்டதோ என்னவோ..

****

காலையில் இருந்த மனநிலைக்கு இப்பொழுது அவளின் மனநிலை சற்று மட்டு பட்டு தான் இருந்தது.

ஆனாலும், அவளுக்குள் சிறு தடுமாற்றமும், குழப்பமும் அலை கழித்துக் கொண்டு தான் இருந்தது.

தம்பதி சகிதமாய் ஆதவ்வும், அனுராதாவும் வீட்டிற்குள் நுழைவதை சற்றும் எதிர்பாராத கற்பகம், “வா ஆதவ்.. வா டா அனு” என்று சிரித்துக் கொண்டே வரவேற்றார்.

அனைவருமே ஹாலில் தான் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அனைவரும் அவர்களை வரவேற்க.

கீதாவும் வேறு வழி இன்றி பெயருக்காக, “வாங்க” என்றார் ஒட்டப்பட்ட புன்னகையோடு.

“என்னண்ணா அத்தை வீட்ல மதியம் விருந்துன்னு சொல்லி கூப்பிட்டு இருந்தாங்க. நீங்க நேரா இங்க வந்துட்டீங்களே.. எங்களோட சேர்ந்து போகலாம்னு வந்தீங்களா” என்றான் அகிலன்.

“விருந்துக்கு முன்னாடி எனக்கு என் மாமனார் கிட்ட சில விஷயங்கள் பேச வேண்டியது இருக்கு அகில். அதுக்கு தான் வந்தேன்” என்றான் புண்ணிய கோடியை பார்த்து.

கடைசியாக அவன் என்று புண்ணியகோடியுடன் பேசினான் என்பதே அவனுக்கு நினைவில் இல்லை. புண்ணியகோடியை அவனுக்கு சுத்தமாக பிடிக்காது.

இன்று நேற்று அல்ல.. அவர் என்று இரண்டாம் திருமணம் செய்து கொண்டு வந்தாரோ அன்று முதலே அவர் மேல் ஒரு கோபம், வெறுப்பு. அத்தோடு அவனுக்கு தெரிந்து இன்று தான் அவருடன் பேசுகிறான்.

“ஓ! மாமனார்ன்ற நினைப்பெல்லாம் கூட இருக்கா?” என்று அவர் இகழ்ச்சியாக கேட்கவும்.

“இல்லாமல் போகுமா என்ன.. அனு உங்க பொண்ணு தானே.. அப்போ அனுவோட புருஷன் எனக்கு நீங்க மாமனார் தானே.. முறை சரி தான பாட்டி?” என்றான் புண்ணிய கோடியிடம் தொடங்கி கற்பகத்தை பார்த்து‌

“அவன் பேசுறதை எல்லாம் நீ எதுவும் பெருசா எடுத்துக்காத ஆதவ் கண்ணா. நீங்க வந்தது எங்களுக்கு ரொம்ப சந்தோஷம். கீதா பிள்ளைங்களுக்கு குடிக்க கொண்டு வா”.

“சரிங்க மா” என்றவர்.

பழக்க தோஷத்தில், “ஏய் அனு, என்ன அப்படியே உக்காந்துட்ட வந்து டீ போடு” என்றார் அதட்டலாக.

அனு பேசவோ, செயல்படவோ சந்தர்ப்பமே அளிக்காத ஆதவ், “சித்தி ஒரு விஷயத்தை நீங்க மறந்துட்டீங்கன்னு நினைக்கிறேன். இப்போ அவ ஒன்னும் உங்க அண்ணனுடைய பொண்ணு அனு கிடையாது. இந்த ஆதவ்வுடைய பொண்டாட்டி அனுராதா.. இந்த அதட்டல், உருட்டல், மிரட்டல் எல்லாம் இங்க வேண்டாம். அவ உங்க வீட்டு பொண்ணா இருந்து ரிட்டயர் ஆகி இப்போ எங்க வீட்டு மருமகளா போஸ்டிங் ஆகி இருக்கா. நீங்க வேணும்னா உங்க வீட்டு மருமகள வேலை சொல்லுங்களேன்” என்று சிரித்துக் கொண்டே திருப்பிக் கொடுத்திருந்தான்.

அவனை ‘ஆ’வென்று வாயை பிளந்து கொண்டு பார்த்தாள் அனுராதா.

ருக்மணியோ இதழ் கடித்து தன் சிரிப்பை கட்டுப்படுத்தியவாறு அகிலனை பார்க்கவும். அவனும் அவளை விளையாட்டாக முறைத்திருந்தான்.

“கீதா என்ன பேசுற நீ.. ஆதவ் சொல்ற போல இப்ப ஒன்னும் அவ இந்த வீட்டு பொண்ணு கிடையாது. அவ இப்போ விருந்தாளியா நம்ம வீட்டுக்கு வந்து இருக்கா. இப்படித்தான் விருந்தாளியா வந்தவங்கள வேலை வாங்குறதா. போ.. போய் டீ போட்டு கொண்டு வா” என்றதும் முகம் இறுக சமையலறைக்குள் நுழைந்தார் கீதா.

“அவ விருந்தாளி.. நான் அவளுக்கு வேலைக்காரியா.. மகாராணி உக்காந்து இருப்பாங்க. நான் அவளுக்கு டீ போட்டு கொண்டு போய் கொடுக்கணுமாம்” என்று அடுப்படியில் சாமான்களை எல்லாம் டமால் டுமீல் என்று கலைத்துக் கொண்டே டீயை போட துவங்கினார்.

அவரின் செயலில் அனைவருக்குமே சிரிப்பு தான் வந்தது.

புண்ணியகோடி மட்டும் கடுகடுத்த முகத்தோடு அமர்ந்திருந்தார்.

சுத்தி வளைத்து எல்லாம் பேச விரும்பாத ஆதவ் நேராக விஷயத்திற்கு வந்து விட்டான், “என்ன மாமா பேசலாமா?”.

“ம்ம்.. சொல்லுங்க”.

“உங்களுக்கு ரெண்டு மனைவி தானே?”.

“ஏன் உனக்கு தெரியாதா?” என்றார் தன் பற்களை கடித்துக் கொண்டு ஏக கடுப்பில்.

“ஒரு கிளாரிட்டிக்காக கேட்டுக்குறேன். ரெண்டு பேரையும் நீங்க ஒரே மாதிரி தானே பாக்குறீங்க?”.

“ஆமா, அதுல என்ன உனக்கு சந்தேகம்?”.

“ரெண்டு பேருக்கும் நீங்க எதையுமே சரி சமமா தான் செய்வீங்களா?”.

“ஆமா”.

“ஆனா, பாத்தா அப்படி தெரியலையே” என்றவனின் கூற்றில், “இப்போ உனக்கு என்ன வேணும்?” என்றார் கடுப்பாக.

“இது.. இது தான் வேணும்” என்றவனோ கணபதியை பார்த்து, “சித்தப்பா பிசினஸ்ல மாமாவுடைய பங்கை மாசம் எத்தன ஷேரிங்கா போடுவீங்க?”.

“மொத்தம் இரண்டு ஷேரிங் ஆதவ். ஒன்னு புண்ணியகோடிக்கு, இன்னொன்னு விசித்ராவுக்கு”.

“அப்போ என் மாமியார் கோமதிக்கு?”.

“அது.. அவங்க செலவு எல்லாம் புண்ணிய கோடியே பாத்துக்குறதால அவங்களுக்கு தனியா ஷேரிங் வேண்டாம்னு சொல்லிட்டாரு”.

“என்ன மாமனாரே இரண்டு பேரையும் ஒரே போல பார்க்கிறதா சொன்னீங்க. ஆனா அப்படி இல்ல போலருக்கே” என்று அவரைப் பார்த்து இகழ்ச்சியாக கேட்டான் ஆதவ்.

“உனக்கு என்ன தெரியும் அதை பத்தி எல்லாம்.. அதெல்லாம் நான் அவள நல்லா தான் பாத்துக்குறேன். வேணும்னா உன் பொண்டாட்டி கிட்டயே கேளு” என்றார் முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு.

“என்ன கண்ணா என்ன பிரச்சனை?” என்று பதட்டம் ஆகினார் கற்பகம்.

“இத்தனை நாள் என் மாமியாருக்கு கிடைக்க வேண்டிய நிறைய விஷயங்கள் கிடைக்காமல் மறுக்கப்பட்டிருக்கு. ஆனா, இனியும் அதை அப்படியே விட முடியாது பாருங்க. அவங்களுக்கு மருமகனா மட்டும் இல்லாம மகனாவும் நான் ஒருத்தன் வந்து இருக்கேன். என் முன்னாடியே தப்பு நடந்தா அதை பாத்துக்கிட்டு கையை கட்டிக்கிட்டு என்னால நிக்க முடியாது. அவங்களுக்கு சேர வேண்டிய எல்லாமே அவங்களுக்கு கிடைக்கணும்” என்று கரார் குரலில் கூறியிருந்தான்.

“என்ன பேசுற நீ.. இப்போ அவங்களுக்கு என்ன கிடைக்கல. நான் அவங்களை சந்தோஷமா பாத்துக்கலைனு சொல்றியா” என்று வெடுக்கென்று கேட்டார் புண்ணியகோடி.

அவன் பேச்சும், தோரணையும் அனுராதாவினால் நொடியும் விழிகளை அவனில் இருந்து அகற்ற முடியவில்லை.

******

கதையை பற்றிய உங்கள் கருத்தையும் என்னுடன் பகிர்ந்துகோங்க டியர்ஸ் 😊

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 11

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
9
+1
1
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

4 Comments

  1. ஆதவ் அதிரடி சூப்பர் 👌👌👌👌

    1. Author

      தேங்க் யூ சோ மச் சிஸ் 🥰

  2. இப்போ பேசுறத ஆதவ் முன்னாடியே கொஞ்சமாவது பேசிருக்கலாம்… மாமியார் ஆன பிறகு தான் பேசுவாராமா??

    1. Author

      முன்னாடி தான் பிடிக்காதே 🤣🤣