Loading

தேடல் 36:

மிளிர் உள்ளே நுழைந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாகவே ஆகிவிட்டது. இன்னும் மாதவனிடமிருந்து தகவல் வரவில்லை. அங்கு நிற்கும் ஒவ்வொரு நொடியும் பதற்றம் கூடிக்கொண்டே போகிறது அவளுக்கு. யாரவது அந்த பக்கம் வந்துவிட்டால் மாட்டிக் கொள்ளப் போவது உறுதி. இந்த ஒரு காரியத்தை மட்டும் நினைத்தபடி செய்துவிட்டாள் போதும்! அடுத்த நொடி அவள் உயிர் போனாலும் அவள் கவலைக் கொள்ளப் போவதில்லை. ஆனால் அத்தனையும் நடக்க வேண்டுமே!

ஆழ்ந்த சிந்தனையில் இருந்தவளை அலைப்பேசியின் குறுஞ்செய்தி கலைத்தது. அனுப்பி இருந்தது மாதவன் தான். அவனின் தகவல் கிடைத்ததுமே மெல்ல தலையை மட்டும் நீட்டி வெளியே எட்டிப் பார்த்தாள். ஒரு ஆடவனின் முதுகுபுறம் மட்டுமே தெரிந்தது. அவனின் கவனமும் முழுவதும் வெளியிலேயே பதிந்திருக்க, இவளை வரும்படி கையை மட்டும் அசைத்து சைகை செய்தான்.

இருவரின் இதய துடிப்பை தவிர அங்கே வேறெந்த சத்தமும் இல்லை. இவள் அருகே வரவும் வாயில் ஒற்றை விரலை வைத்து அமைதியாக இருக்கும் படி சைகை செய்தவன், சுற்றும் முற்றும் கவனித்தபடியே வேகமாக அவளை இழுத்துக் கொண்டு ஒரு அறைக்குள் நுழைந்து கதவை சாற்றி தாழிட்டுக் கொண்டான்.

இப்போது தான் முதன் முறை அந்த மாதவன் என்பவரின் முகத்தையே பார்க்கிறாள். கிட்டத்தட்ட ஒரு ஐம்பதை நெருங்கும் மனிதர். முகம் அத்தனையாய் பயத்தை பூசிக் கொண்டிருந்தது.

“நீங்க மாதவன் தானே…” சந்தேகமாய் அவள் வினவ, ஆம் என்பதாய் ஆடியது அவர் தலை. நிச்சயமாக இதை அவள் எதிர் பார்க்கவில்லை.

“நீங்க… நீங்க தானே எங்ககிட்டத்தட்ட போன்ல பேசுனது… ஆனா…”

“நான்தான் ம்மா பேசுனேன்… இன்னும் பாப்பாவுக்கு என்மேல நம்பிக்கை வரல போல…”

“ஆனா இங்க இருக்க யாருமே தேவ்பிரசாத்துக்கு எதிரா செயல்பட வாய்ப்பே இல்லைனு தானே சொன்னாங்க..! விஸ்வாசத்த விட பயம் அதிகம்!உங்க வயச பாத்தா நிறைய எக்ஸ்பீரியன்ஸ் உள்ள ஆள் மாதிரி தெரியுது! அப்பறம் எப்படி எங்களுக்கு ஹெல்ப் பண்ண ஒத்துக்கிட்டீங்க!” அவள் வந்திருக்கும் பணி அனைவரையும் சந்தேக கண் கொண்டே பார்க்க சொன்னது. ஒரு வேளை இதுவும் கூட தேவ்பிரசாத்தின் சூழ்ச்சியாக இருந்துவிட்டால்!

“ம்ம்ம்… ஆச்சு பாப்பா… ஐம்பத்தஞ்சு வயசாச்சு… திட்டதட்ட பதினைஞ்சு வருஷமா இங்க வேலை பாக்கறேன்! மொதல வேலை பாத்தது மில்ட்ரில தான்! அங்க நடந்த சின்ன சண்டையில வலது கால் முட்டிக்கு கீழ கட் ஆகிட்டு… அதுக்கு அப்பறம் ஊருக்கு வந்தப்பறம் தான் இங்க செக்யூரிட்டி வேலைக்கு ஆள் எடுக்கறாங்கனு தெரிஞ்சு வந்தேன். நல்ல சம்பளம். வெளிய இருந்து உள்ள யாரும் வராம பாத்துக்கனும்! அவ்வளவு தான் எங்க வேலை! மத்தபடி இங்க என்ன பண்ணுறாங்க! ஏது பண்ணறாங்க எதுவும் தெரியாது! ஒரு தடவ கூட இங்க உள்ள எந்த ரூமையும் திறந்துப் பாத்ததில்லை! நான் மட்டும் இல்ல இங்க சாதாரண வேலை பாக்குற நிறைய பேருக்கு என்ன பண்ணறாங்கனே தெரியாதுங்கறது தான் உண்மை!

அன்னைக்கு அந்த டிவிக்கார பாப்பா வந்துச்சுல அத நான் தான் முதல பாத்தேன்! ஒழிஞ்சு ஒழிஞ்சு வந்துட்டு இருந்துச்சு! ஏதோ தப்பா பட்டுச்சு! புடிக்க போறதுக்குள்ள மூஞ்சுல ஸ்ப்ரே அடிச்சுட்டு போய்ட்டு! திரும்ப நான் கண்ணு முழிக்கறதுக்குள்ள என்னனமோ நடந்துப் போச்சுது!

சர்வலைன்ஸ் கேமரா முழுக்க என் டீமோட கண்ட்ரோல் தான்! தேவ் சார் அத எடுத்துட்டு வர சொன்னாரு! எப்படி அந்த பொண்ணு உள்ள வந்துச்சுனு பாக்க! சத்தியமா ஆடிப் போய்ட்டேன் பாப்பா! இப்படி இப்படி ஐம்பது அறுபது பசங்க… எழும்பும் தோலுமா கண்ணுல உயிரே இல்லாம தப்பிச்சு போக முயற்சிப் பண்ணறதையும் இங்க உள்ளவங்க திரும்ப இழுத்துட்டு போய் அடைக்குறதையும் பாத்து என் ஈரகொலையே நடுங்கிப் போச்சு! அப்ப தான் தெரிஞ்சுது இவங்க தப்பு பண்ணறாங்கனு! ஆனா அப்ப கூட என்ன தப்பு பண்ணறாங்கனு தெரியல! கண்டிப்பா அதுக்காக தான் அந்த டிவிக்கார புள்ள உள்ள வந்திருக்குமுனு தோனுச்சு! அது வந்துட்டு போன மொத்த தடத்தையும் அழைச்சுட்டேன்! அந்த புள்ளதான் அதெல்லாம் அழிச்சுட்டு போய்ட்டுனும் சொல்லிட்டேன்! இவங்களும் அந்த புள்ள தேவ் சார பேட்டி எடுக்க வந்ததால அப்படி தான் வந்திருக்கனுமுனு விட்டுட்டாங்க! அப்பறம் இரண்டு நாள் கழிச்சு அந்த புள்ள செத்துப் போச்சுதுனு சொல்லறானுங்க! கண்டிப்பா இவனுங்களோட வேலையா தான் இருக்குமுனு தெரியும்! ஆனா என்னால என்ன பண்ண முடியும் சொல்லு பாப்பா!

இப்படி இப்படி ரெண்டு பொட்ட புள்ளைங்க இருக்கு எனக்கு! குடும்பத்தோட கொன்னு பொதைச்சுடுவேனு சொன்னாக்கூட பரவாயில்ல! அதுங்களையும் இங்க இழுத்துட்டு வந்து இப்படி சித்தரவத பண்ணா! அதான் வாயவே தொறக்கல! ஆனா இரண்டு வருஷமா இங்க நடக்கறத கொஞ்சம் கொஞ்சமா தெரிஞ்சுக்கிட்டேன்!

திடீர் திடீர்னு கண்ணு முன்னாடியே புள்ளைங்க செத்துப் போவும்! என்ன பண்ண சொல்லற! அந்த கறுவ காட்டுல தான் கொண்டு பொதைச்சுட்டு வருவோம்! அப்படி இரண்டு நாளுக்கு முன்ன ஒரு பொம்பள புள்ள செத்துப் போச்சு! அத பொதைக்க வந்தப்ப தான் அங்க ஒரு வேனு மறைவா நிக்கறதையும் அதுல அந்த தேனு இருக்கதையும் பாத்தேன்! ஏதோ ஒன்னு மனசுக்குள்ள உந்துச்சு! தெரிஞ்சவங்க கிட்டையெல்லாம் விசாரிச்சு கடைசில போன் நம்பர வாங்கி போன் பண்ணேன்! ஆனா அந்த புள்ளைக்கும் பயம் போல சட்டுனு எல்லாம் ஒத்துக்கல! நான் உங்கள பாத்தேன்! இங்க தான் வேலைப் பாக்கறேன்! கண்டிப்பா உங்களுக்கு உதவறேனு ரொம்ப நேரம் எடுத்துச் சொன்னத்துக்கு அப்பறம் தான் ஒத்துக்கிச்சு…” அவர் விளக்கமாய் சொல்லிவிட்டு அவள் முகம் பார்க்க, அதில் அவள் தன்னை நம்ப வேண்டுமே என்ற தவிப்பு மட்டும் தான்.

நம்புகிறேன் என்னும் விதமாய் தலையசைத்தவள், சட்டென்று நினைவு வந்தவளாய், “சார்! இங்க மகேஸ்வரினு ஒரு பொண்ணு இருந்துச்சே! மகிக்கூட அந்த பொண்ணுக்கிட்ட தான் பேசனா!” என்றவளுக்கு இன்னும் அவள் உயிருடன் தான் இருக்கிறாளா என்று கேட்க அத்தனை தயக்கம் இருந்தது.

“அந்த பொண்ணு அதுக்கு அப்பறம் ஒரு வாரத்துலையே செத்துப் போச்சுதும்மா! நான் முதன் முதல பொதைச்சதே அந்த பொண்ணு உடம்ப தான்!” அவர் குரல் உடைந்து கண்ணீர் பெருக, அவளுக்கும் அதே நிலை தான்.

“செத்தவங்கள நினைச்சு என்னம்மா ஆகப் போகுது! இன்னும் இங்க நூத்துக்கணக்கான பேரு தவிச்சுட்டு இருக்காங்க! அவங்கள காப்பாத்துவோமே!” என்றவர், “சரியா ஐஞ்சரை மணிக்கு, எமர்ஜென்சி அலரத்த ஆன் பண்ணிடுவேன்ம்மா… அப்போ ஒரு பதற்றமான சூழ்நிலை உருவாகும்! அதை பயன்படுத்தி இங்க இருக்க ஐஞ்சு லேபுல ஒன்ன கொழுத்திடுவேன்! அப்போ எல்லாரோட கவனமும் அத அணைக்கறதுல தான் இருக்கும்! அந்த நேரத்த தான் பாப்பா நீ உனக்கு சாதகமா பயன்படுத்திக்கனும்… புரியுதா?” என்றவர், மணியைப் பார்க்க ஐந்தே கால் ஆகியிருந்தது.

“இங்கேயிருந்து நேரா போய் இரண்டாவது ரைட் திரும்புனா ஒரு லேப் வரும்! அதுல தான் எல்லா டேட்டாவும் இருக்கும் கலெக்ட் பண்ணிக்கோ பாப்பா… நான் சொன்னப்புறம் கிளம்பு…” என்றவர் சரியாய் ஐந்தரை மணிக்கு, அங்கிருந்த ஆபத்துகால அலாரத்தை இயக்கிவிட்டு, இவளை இன்னும் ஒரு ஐந்து நிமிடம் கழித்து வெளியே செல்ல சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்.

நேரமாக ஆக கால்கள் மெல்ல நடுக்கம் கண்டது. உடலின் செல்களில் எல்லாம் பயம் பரவ, ஆனால் இது பயந்து பதுங்கி இருப்பதற்கான நேரம் இல்லையே! மெல்ல தலையை எட்டி வெளியேப் பார்த்தாள்! ஆட்கள் பரபரப்பாய் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தனர்.

தன்னிடமிருந்த சிறிய கேமாரவையும் மைக்கையும் ஆன் செய்துக் கொண்டாள்! ஒரே ஒரு நொடா கண்களை மூடி தைரியத்தை திரட்ட முயல, அன்றலர்ந்த மலராய் புன்னகை முகமாய் கல்யாணக் கோலத்தில் மகிழினியின் முகம் மின்னி மலர, தைரியம் வரப் பெற்றவளாய் வெளியே வந்தாள்.

ஆட்கள் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தனர். மெல்ல மாதவன் சொன்ன இடத்திற்கு வந்தவள் அங்கிருந்த கணினியை இயக்கி அதன் அதில் உள்ள தகவல்களே இணையத்தின் வழியாக மதனுக்கு அனுப்பி வைத்தாள்! சரியாக ஐந்து நாற்பத்தியெட்டுக்கு இண்டாகிராமிலும் பேஸ்புக்கிலும் தேன்மொழியின் ஐடியில் இருந்து லைவில் வர, அவளின் ரசிகர்களோடு இன்னும் பலர் அதில் இணைந்துக் கொண்டனர். அடுத்த பத்து நிமிடத்தில் அது லட்சம் நபர்களை தான்டி இருந்தது.

“நான் மிளிர். இங்கிருக்க நிறைய பேருக்கு என்ன தெரியாது. ஏன் இரண்டு மாசத்துக்கு முன்ன வர எனக்கே என்ன யாருனு தெரியாது! ஒரு விபத்துல பழச மறந்துட்டேன்! அத விபத்துனு சொல்லறது தப்போ! திட்டமிட்ட கொலை முயற்சினு சொல்லலாம்! ஆமான் திட்டமிட்ட கொலைமுயற்சியே தான்! அந்த கொலைமுயற்சிய பண்ணது இந்தியாவே பாத்துப் பெருமைப்பட கூடிய மிகப்பெரிய சைன்டிஸ்ட் டாக்டர் தேவ்பிராசாத், இந்த கொலை முயற்சில கொல்லப்பட்டது என்னோட ப்ரண்ட் மகிழினி! எதுக்காக கொல்லப்பட்டாங்கனு நான் சொல்லறத விட அவங்கலே சொன்னா நல்லா இருக்கும்! செத்தவங்க எப்படி சொல்லுங்கனு பாக்கறீங்களா! கொன்னுட்டா செத்தவங்களோட சேந்து அவங்களுக்கு தெரிஞ்ச உண்மையும் மறைஞ்சுடும்னு தானே நினைக்கறீங்க… கண்டிப்பா இல்ல… இது மகி சாக முன்ன கொடுத்த இறுதி வாக்கு மூலம்… இதுல பாக்கும் போதே உங்களுக்கு என்ன நடக்குதுனு புரிஞ்சிருக்கும்! ஆனா அதை ஃபேக்குனு சொல்ல நிறைய வாய்ப்பு இருக்கு… அதனால மட்டும் தான்! இவ்வளவு ரிஸ்க் எடுத்து மிஸ்டர் தேவ்பிரசாத்தோட ஆய்வுக்கூடத்துக்குள்ள வந்திருக்கோம்! இங்க ஆய்வுக்கு உட்படுத்துறவங்களை நீங்களே இன்னும் கொஞ்ச நேரத்துல பாக்க போறீங்க!” அவள் பேசிக் கொண்டிருந்த நேரம் தேனுவும் மகியினுடைய விடியோவை அத்தனை சமூகவலை தளங்களிலும் பதிவேற்றிவிட்டாள்.

அதே நேரம், தவசீலனையும் அழைத்துக் கொண்டு சென்னை கமிஷ்னரின் இல்லத்தில் அவரின் முன்பு நின்றிருந்தான் அக்னி.

“யூ இடியட்… உனக்கு கொஞ்சமாச்சும் பொறுப்பிருக்கா… ஒரு வார்த்தை என்கிட்ட சொல்லி இருக்கலாம் இல்ல… இப்படி அந்த பொண்ண இவ்வளவு பிரச்சனையில சிக்க வைச்சிருக்க…” சிங்கத்தின் கர்ஜனை தோற்றுப் போகும் அந்த குரலில்.

“சாரி சார்… பிரச்சனை பெருசாகிட்டு… இனி என்ன பண்ணலாம்னு பாப்போமே! நாம லேட் பண்ணற ஒவ்வொரு நிமிஷமும் அந்த பொண்ணோட உயிருக்கு தான் ஆபத்து… ப்ளீஸ் சார்…” என்றார் அருகில் பவ்யமாக நின்றிருந்த அசிஸ்டன்ட் கமிஸ்னர்.

“யூ சட்அப் ராஸ்கல்… இப்ப அந்தாளுக்கு போன் பண்ணி கேட்டா அரஸ்ட்வாரண்ட் கொடுப்பானாயா? பெரிய இவனாட்டம் வந்து கடைசி நேரத்துல சொல்லிட்டு!”

“பச்…. அத்து… இப்ப இந்த வெட்டி நியாயம் ரொம்ப முக்கியமா? மொதல அந்த பொண்ண காப்பாத்துங்க… அந்த பொண்ணே தன்னோட உயிர மதிக்காம இத்தன பேர் உயிர பெருசுனு நினைச்சு போய் இருக்கு… அந்த ஒரு பொண்ணு உயிர காப்பாத்த முடியாதா உங்களால?”

“இவ ஒருத்தி… எத்தன தடவ சொல்லி இருக்கேன் என் வேலை விசயத்துல மூக்க நுழைக்காதனு… நேரங்காலம் தெரியாம உயிர வாங்கிட்டு… பேசாம உள்ள போ அபி…”

“ஏன்… நான் ஏன் உள்ள போகனும்… இது ஏன் வீடு… நடுக்கூடத்துல உக்காந்து இவரு நாட்டாம்ம பண்ணுவாறாம்… நான் ஏனு ஒரு வார்த்த கேக்க கூடாதாமே!”

“அதானே டெடி சொல்லறதுல என்ன தப்பிருக்கு ப்பா… சீக்கிரம் அந்த அக்காவ காப்பாத்துங்க…”

“ஆதி… நீயாவது கொஞ்ச நேரம் சும்மா இரேன்டா…” (விச் பேமிலி திஸ் கமிஸ்னர் பேமிலினினு உங்களுக்கு இந்நேரம் தெரிஞ்சு இருக்கனுமே)

“பச்… டெடி அப்பா அதுக்கு சரிப்பட்டு வர மாட்டாரு… நீங்க சட்ஜ் சாரோட ஓய்ப்க்கு வீடியோ கால் பண்ணுங்க” என்றவன் அவள் அழைக்க, அதற்குள் அவளிடமிருந்து வாங்கிக் கொண்டவன், அவர் ஹலோ என்பதற்குள் “ஆன்ட்டி சீக்கரம் அங்கிள்கிட்ட போன் குடுங்க… அப்பா முக்கியமான கேஸ் விசயமா பேசனுமான்…” என்றிட, அடுத்த சில நொடிகளில் கைப்பேசி இரு இடங்களிலும் கைமாற்றப்பட்டது.

அதே நேரம் மிளிரும் அங்கிருந்த ஒவ்வொரு அறையாக திறந்து, கட்டிலில் சுயநினைவின்றி கிடந்தவர்களை படம்பிடித்துக் கொண்டே அவர்களுக்கு அருகில் மாட்டி இருந்த விபரங்களை படிக்க தொடங்கி இருந்தாள்.

அடுத்து எல்லாம் துரிதகதியில் நடைபெற, அடுத்த அரைமணியில் மொத்த போலீஸ் படையுமே அந்த ஆய்வகத்தின் முன்புதான் நின்றிருந்தனர். வெளிக்கேட் பூட்டப்பட்டிருந்தது. தேவ்பிரசாத்தின் விலையுயர்ந்த ஆடிக்கார் அங்கே தான் நிறுத்தப்பட்டிருந்தது. அதுவே அவன் உள்ளே தான் இருக்கிறான் என கட்டியம் கூற, அந்த கதவை திறந்துக் கொண்டு உள்ளே செல்லவது தான் அத்தனை எளிதாய் இல்லை.

மிளிர் நேரலையில் வர தொடங்கிய இருபதாவது நிமிடம், தேவ் அங்கே வந்துவிட்டான். அவன் முன்பே தகவல் சொல்லி இருக்க, மிளிரை சுற்றி வளைத்து பிடித்துவிட்டனர் அவர்கள். கேமரா, மைக் என அத்தனையும் உடைத்து நொறுக்கப்பட்டிருக்க, சிறிதும் சலனமின்றி நின்றிருந்தாள் அவள். அவள் என்ன நினைந்தாளோ அதைத்தான் நிறைவேற்றிவிட்டாளே!

“சார்… இந்த பொண்ணு தான் சார்…” அவன் முன்னால் இழுத்துப் பிடித்து நிறுத்தியிருந்தனர் அவளை. இதோ இப்போது தான் முதன் முறை அவனைப் பாக்கிறாள்.

பால் தோற்கும் வெண்மை நிறம். குழந்தை முகம். ஆழ்ந்த ஊடுறுவும் கண்கள். கூர் நாசி. மிசையற்ற மழுக்கென்ற முகம். சிவந்த உதடுகள். கொஞ்சமாய் ஒடுங்கிய கண்ணங்கள். எங்கோ எப்போதோ பரிச்சியமான உணர்வு.

“லீவ் கெர் இடியட்ஸ்…” என இரைந்தவன், அவள் அருகினில் வந்திட, அந்த மரகத விழிகளை தான் பார்த்துக் கொண்டிருக்கிறாள் அவள்.

இப்போது அதில் தெரிவது என்ன? அத்தனை ஏமாற்றம்! அத்தனை ஏக்கம்! தெரியாமல் தவறு செய்துவிட்டு மன்னிப்பை வேண்டி நிற்கும் குழந்தையின் குற்றவுணர்வு! குறுகுறுப்பு!

“இப்ப உனக்கு சந்தோஷம் தானே மிம்மா…” அத்தனையாய் உடைந்திருந்தது அவனின் குரல். விழிகள் இமைக்காமல் அவளிடம் தான் இறைஞ்சிக் கொண்டிருந்தன! என்னை மன்னித்துவிடேன் என்று! ஆனால் ஏன்! அந்த வினாவிற்கு விடை தேட அவள் தாயாராக இல்லை.

“கண்டிப்பா இல்லை… நீ என் கண்ணு முன்னாடி அணுஅணுவா துடிதுடிச்சு சாகனும்! அத பாத்து நான் ரசிக்கனும்! அதான் எனக்கு சந்தோஷம்…!” கண்களில் கண்ணீரோடு அவள்! நினைவு மொத்தமும் மகியையே சுமந்திருந்தது.

இதோ இந்த நிமிடம் அவன் நினைத்தால் அவளைக் கொன்றுவிடலாம் தான்! ஆனால் அவனோ அவனுக்கான ஒரு பார்வையை மன்னிப்பை அவளின் விழிகளில் யாசித்து நிற்கிறான்.

“சார்… நிலைமை ரொம்ப மோசமாகிட்டு சார்… வெளிய நிறைய போலீஸ் உங்கள அரஸ்ட் பண்ண வெயிட் பண்ணிட்டு இருக்காங்க… ப்ளீஸ் சார்… பேஸ்மண்ட் வழியா தப்பிச்சுப் போய்டுங்க… வெளிநாட்டுக்கு போக டிக்கெட் ரெடியா இருக்கு… மேடத்துக்கு எதுவுமே ஆகாம நான் பாத்துக்கறேன்… ப்ளீஸ்…”

“மெயின் டோர் ஓப்பன் பண்ணு மானோ…”

“சார்…”

“சொன்னது புரியலையா… ஒப்பன் பண்ண சொல்லு மனோ…”

“ப்ளீஸ் சார்… இப்ப உங்கள அரஸ்ட் பண்ணா வெளிய கொண்டு வரது ரொம்ப கஷ்டம் சார்…”

“நான் கதவ திறக்க மட்டும் தான் சொன்னேன் மனோ!” இம்முறை கட்டளையாய் அவன் குரல் ஒலிக்க, மறுத்து பேச முடியவில்லை அவனால்.

மிளிரை நெருங்கி வந்தவன், “என்னைக்குமே உனக்கு பிடிச்ச குட்டாவாவே இருந்து இருக்கலாம் மீம்மா… இந்த தேவ்பிரசாத்த எனக்கு கூட பிடிக்கவேயில்லை…” என்றவன் சரசரவென வாயிலை நோக்கி நடக்க, அவன் சொல்லிச் சென்றதை உள்வாங்கவே நீண்ட நேரம் பிடித்தது அவளுக்கு. கடுகளவுக்கூட அவனைப்பற்றி நினைவு அவளுக்கு இல்லையென்றாலும் அந்த குரல் சுமந்திருந்த வலி, விழி சிந்திய நீர், அவனின் உயிர் உருக்கும் அழைப்பு என எல்லாம் சேர்ந்து அவளை தடுமாற செய்ததென்னவோ உண்மை. செல்லும் அவனையே விழிகளகற்றாமல் அவள் பார்த்திருக்க, ஒரே ஒரு நொடி அவனும் நின்று அவளை திரும்பிப் பார்த்தான். இம்முறையும் அதே ஏக்கம்! ஏமாற்றம்! மன்னிப்பை இறைஞ்சும் மரகத விழிகள்! மன்னிக்க தான் மனம் வரவில்லை அவளுக்கும்! சட்டென்று அவள்வேறு பக்கம் முகத்தை திருப்பிக் கொள்ள, இதழில் தோன்றிய கசந்த முறுவலோடு அவனும் வெளியேறிவிட்டான்.

 

– தேடல் தொடரும்…

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
4
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்