Loading

ஆட்சியர் கனவு 50

மீனா ஒரு பெரிய குடும்பத்து பெண், பிறந்தவுடனே தன் தாயை இழந்ததால் தந்தையின் அரவணைப்பும் இல்லாமல் போக, விடுதியிலேயே வளர்ந்தவள். அவள் இருக்கும் விடுதி அருகே ஒரு இல்லம் இருக்க, அதில் தாய் தந்தையற்ற பிஞ்சுகளை எண்ணி அவள் மனதும் வாடியது. அங்கிருந்தே தன் கல்வியைத் தொடர்ந்தவளின் வாழ்வில் மீண்டுமொரு இடி அன்வரின் தாய் ரபியா மூலம் வந்தது.

மீனாவின் தந்தை ஹரிவரதன் தொழிற்முறை பயணத்தில் ரபியா மேல் காதல் உண்டாக, அவரை மணந்து கொண்டார், அதுவும் முதல் மனைவி இறந்த ஒரே மாதத்தில். காரணம், ஹரிவரதன் முதலில் ஈர்ப்பு உண்டானது என்னவோ ரபியா மீது தான். பின் தந்தையின் வற்புறுத்தலால் தான் கவியரசியை மணந்து கொண்டார்.  இதில் குறிப்பிடவேண்டிய விடயம் என்னவென்றால் ஹரிவரதன் தங்கை தான் கீதா அதாவது ராஜரத்தினம் மனைவி, இன்னும் தெளிவாக கூறவேண்டுமெனில் சந்தனாவின் வளர்ப்பு அன்னை, சுப்ரியாவின் அன்னை. ஹரிவரதன் நேர்மையாக இருந்த காரணத்தால் ராஜரத்தினத்தின் செயல்கள் அவரை சினம் கொள்ள செய்ய, தங்கைக்கு சேர வேண்டிய சொத்துக்களை பிரித்து கொடுத்துவிட்டார். இருந்தும் ராஜரத்தினம் ஹரிவரதனின் செல்வ செழிப்பில் பொறாமைக் கொள்ள ரபியா மூலமாய் தன் காயை நகர்த்தினார். ரபியா முதலில் ஹரிவரதனின் சொத்திற்கு ஆசை கொண்டாலும் பின் அவரின் உண்மையான காதலிலும் அன்பிலும் தன் எண்ணத்தை கைவிடும் எண்ணத்தில் தான் இருந்தார்.

அவர்களுக்கு பிறந்த மகவு தான் அன்வர். மீனா பிறந்த இரண்டு மாதங்களிலேயே அன்வரும் பிறந்தான் என்பது நாம் அறிய வேண்டிய ஒன்று. நாட்கள் அதன் போக்கில் செல்ல, ரபியா மீனா மீதும் அன்பாக தான் இருந்தார். ஆனால் மீனா தான் அவருடன் ஒட்டவில்லை. இந்நிலையில் ஹரிவரதன் மீனாவை தன்னோடு வைத்துக் கொள்ள விரும்ப, ரபியாவும் ஒத்துக் கொண்டார். ஆனால் விதி மீண்டும் சதி செய்ய, மீனா சென்னையை விட்டு வரவும் இல்லை. அந்த விதியின் பின்னால் ராஜரத்தினம் மற்றும் சந்தனாவின் பெரிய சதி ஒன்று நிகழ்ந்து இருக்க, அவர்களோடு தன் மகனும் இணைவான் என்று அறியாத ரபியா, இறுதியில் அவளின் உயிரைக் காப்பாற்ற எண்ணி மீனா இறந்துவிட்டதாக ஒரு நிகழ்வை உருவகப்படுத்தி அனைவரையும் நம்பவைத்து மீனாவை தன்னுடன் வெளிநாட்டிற்கு அழைத்து சென்று விட்டார்.

“ரபியா அம்மா கூட பிரான்சு போய் நல்லா தான் இருந்தேன். ரெண்டு வருசம் அங்க தான் இருந்தேன்.  அப்ரோம் தான் நான் பிரக்னன்டா இருக்குறத தெரிஞ்சது. அது எப்படி எதனாலன்னு எனக்கு தெரியல. ரபியா அம்மாக்கு ஏதோ தெரிஞ்சு இருக்கு. ஒரு நாள் அப்பாவும் அம்மாவும் பிசினஸ் விசயமா போனப்போ பிளைட் ஆக்ஸிடண்ட். அப்பா ஸ்பாட் அவுட், அம்மாக்கு தலையில அடிபட்டதனால இன்னும் கோமால தான் இருக்காங்க. அன்வர் தான் பாத்துக்குறான். அவங்க முழிச்சா பல உண்மைகள் தெரியவரும்” என்றாள் கவிமீனா. திவி யோசனையில் இருக்க, இசை, “இவ்ளோ நடந்து இருக்கா? அப்ரோம் ஏன் நீ இங்க வந்த?”

“என்னோட பங்கு சொத்தும் நான் அன்வருக்கு தரதா சொல்லி இருக்கேன். அதான் வந்தேன்” என்றாள் எங்கோ வெறித்தபடி.

“என்ன பைத்தியமா நீ? எதுக்கு அவனுக்கு நீ தரனும்?”

“இல்லையின்னா அவன் ரபியா அம்மாவ கொன்னுடுவான்” என்றாள் திவி.

மீனாவும் அதை ஆமோதிப்பதாக தலையசைக்க, இசை தான் குழம்பிப் போனான். “என்ன வாழ்க்கை இது. இடியாப்ப சிக்கல் மாதிரி நமக்கு மட்டும் ஏன் இவ்ளோ சோதனை?” என்று வாய்விட்டே புலம்பினான் இசை.

“சோதனைலாம் வரதான் செய்யும் ப்ரோ. நாம தான் அத பேஸ் பண்ண கத்துக்கணும்” என்றபடி உள்ளே நுழைந்தான் அன்வர் உடன் ரேஷ்மாவும்.

இசை அவனை கொலைவெறியில் முறைக்க, மீனா ஏதும் பேசாமல் அமைதியாக நின்றாள். திவி அவனை ஆராய்ச்சி பார்வை பார்க்க, அனைத்தையும் கண்டுகொண்டவன் சிரிப்புடனே வந்தான், ஆனால் மனதில் இவர்களுக்கான திட்டத்தை வகுத்தபடியே.

அவன் வாங்கி வந்த பொருட்களை மேஜை மீது வைக்க, ரேஷ்மா அதனை அனைவருக்கும் கொடுத்தாள்.

அதன் பின் இரண்டு நாட்கள் அமைதியில் கழிய, மீனாவை மருத்துவரிடம் காட்ட வேண்டும் என்று திவி அறிவுறுத்த இசை தான் முதல் ஆளாக வந்தான்.

அனைவரும் அவனை கேள்வியாய் நோக்க, இசை “அன்வர், ரேஷ்மா உங்ககிட்ட ஒரு விசயம் மட்டும் மறச்சிட்டேன். நான் லவ் பண்ண கவி இவதான்.” என்றிட ஒரு நிமிடம் தான் அன்வர் முகத்தில் அதிர்ச்சி, பின் தன்னிலை வந்தவன் இசையை கட்டிக் கொண்டான். அவனுள் ஏற்பட்ட அதிர்வை திவி கவனிக்காமல் இல்லை. ரேஷ்மாதான் அதீத சந்தோசத்தில் இருந்தாள். அங்கு அவளைத் தவிர யாரும் மகிழவில்லை என்பதே உண்மை. இனி கவியும் அவளுள் இருக்கும் கருவும் தன் பொறுப்பு என உறுதி கொண்டான் இன்னிசைமதி.

திவியோ அடுத்து அன்வரின் நடவடிக்கை என்னவாக இருக்கும் என தான் சிந்தித்து கொண்டு இருந்தாள். மீனாவோ இசையின் உயிருக்கு ஏதேனும் ஆபத்து நிகழ்ந்து விடுமோ என்ற பயத்தில் தவித்துக் கொண்டு இருந்தாள். இவர்களுக்கு மேல் அன்வரோ இரண்டு உயிர்களை கொலை செய்வதற்கான திட்டங்களை மனதுள் வகுத்துக் கொண்டு இருந்தான்.

அன்வர் “எல்லாம் ஓகே ப்ரோ. இப்போ அக்கா வயித்துல வளர குழந்தை?”

இசை “அது இனிமே என் குழந்தை” என்று ஒற்றை வரியில் அந்த குழந்தையும் தன் பொறுப்பு என முற்றுப்புள்ளி வைத்தான்.

ரேஷ்மா “திவி நீயும் செக்கப்க்கு வரணும் தானே. ரிப்போர்ட்ஸ் எடுத்துக்கோ.” என்றாள்.

திவி வெற்றுப் புன்னகையை சிந்த ரேஷ்மா அவளை புரியாமல் பார்த்தாள். ஏதும் பேசாது திவியும் அவளுடனே சென்றாள் கனத்த மனதுடன் மீனாவும்.

மருத்துவமனை

மருத்துவர் மீனாவை சோதனை செய்துவிட்டு அவளின் குழந்தை நன்றாக இருப்பதாகவும் இதயதுடிப்பை கேட்க வைக்கவும் செய்தார். இசையும் அதனை கேட்டான். சொல்ல முடியாத உணர்வு அவனுள். தன் உயிரணுவில் சிசு உருவாகவில்லை எனினும் தன் உயிரானவளின் கருவில் வளருவதை எண்ணியும் அந்த பிஞ்சு இதயதுடிப்பும் அவனை இன்பமான உலகிற்கு கொண்டு சென்றது.

பின் திவியை சோதனை செய்ய, சிசுவில் எந்த வித அசைவும் இல்லை. ஒரு நிமிடம் திவி பயந்து போனாள். தற்போது அவளவனின் அருகாமையை அதிகம் நாடினாள். “டியர் எங்க ஒழிஞ்சிட்டு இருக்கீங்க. அம்மா பயப்படுறாங்க பாருங்க. வெளிய வாங்க” என்று மருத்துவர் குரல் கொடுக்க, எவ்வித எதிர்வினையும் இல்லை.

மருத்துவர் உடனே ஸ்கேன் செய்யுமாறு கூற, இறுதியில் திவி எது நடக்கக் கூடாது என்று தவித்தாளோ அதுவே நடந்து விட்டது. ஆம், ஆதியின் உயிரணுவில் திவியின் உதரத்தில் உதித்த உயிர் தற்போது உதிரமாய் ஆனது. திவி அழவில்லை. இது அவள் எதிர்பார்த்தது தான். ஒன்று சந்தனா கூறி செய்து இருக்க வேண்டும். இல்லையேல் அன்வரே செய்து இருக்க வேண்டும். ஆனால் அந்த வலி அவளை நீங்காது தானே. தன் உயிரை பிடுங்கி எடுத்து செல்வது போன்றதொரு அப்படி ஒரு வலி. மீனாவும் ரேஷ்மாவும் கதறினர். அவளுக்கான மருத்துவம் நடக்க, மூன்று நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்றனர் மருத்துவர்கள்.

மூன்று நாட்கள் கழித்து அவள் மருத்துவமனை விட்டு வர, எங்கோ குழந்தை பிறந்த அறிகுறியாக குழந்தையின் வீல் என்ற சத்தம் அவளை ஆட்டிப்படைக்க, தன்னிச்சையாக தன் வயிற்றில் கைவைத்து மருத்துவமனை வாயிலில் கதறி அழுதாள் அலரவள்.

“அதுக்கு அடுத்த நாளே திவி சந்தனா சொல்லி அன்வர் பல விசயம் செய்றத கண்டுபிடிச்சிட்டா. தனியா ரேஷ்மாவ கூப்பிட்டு எல்லாம் சொன்னா. ரேஷ்மாவுக்கு ரொம்ப அதிர்ச்சி. திவி, நான், இசை அன்வருக்கு தெரியாம வெளில வந்துட்டோம். அன்வர கண்கானிக்குற பொறுப்ப ரேஷ்மா பாத்துக்குறேன்னு சொல்லிட்டா. இதுவரை நமக்கு மறைமுகமா ஹெல்ப் பண்றதுக்கூட ரேஷ்மா தான். அங்க இருந்து வந்த அப்ரோம் இசை கிடச்ச வேலைக்கு போனான். திவி படிப்பை முடிச்சா. ரொம்ப கஷ்டப்பட்டு கலெக்டர் ஆனா. நேர்மைக்கு இங்க மதிப்பு இல்ல. அவ எக்ஸாம்ல பாஸ் பண்ணியும் காசு தான் அவளுக்கு வேலை வாங்கி கொடுத்தது. ரேஷ்மா தான் உதவி செய்தா. ஒரு வருசம் முன்னாடி ரேஷ்மா கொடுத்த தகவல்படி அன்வர் போதை மருந்து கடத்துற வேலையும் செய்றதா கண்டுபிடிச்சு அவன அரெஸ்ட் பண்ற சமயம், சந்தனா எல்லாத்தையும் கெடுத்துட்டா. சந்தனாக்கு கூட இவ இங்க இருக்குறது தெரியும். அந்த கேஸ்ல பல குழந்தைகள் காப்பாத்தப்பட்டாங்க மறைமுகமா. இதுக்கு ரொம்ப ரேஷ்மா உதவி செய்தா. அங்க ரெஸ்க்யூ பண்ண குழந்தைகள்ல ஒரு பொண்ணு தான் ஆறெழில். ஆறெழில் அன்வரோட குழந்தை தான். அம்மா யாருன்னு திவிக்கு மட்டும்தான் தெரியும். இங்க வந்த அஞ்சு மாசத்துல எனக்கு கவின் பொறந்தான். இசை தான் அவன வளக்குறாங்க. நாங்க ரெண்டு பேரும் ரெஜிஸ்டர் மேரேஜ் செய்துகிட்டோம். இது வரை நடந்த எல்லாம் ஆதிக்கும் தெரியும். நான் இல்லன்னா இசை யாரோ ஒருத்தர் ஆதிக்கிட்ட சொல்லிடுவோம். கடைசியா ஆறெழில் வந்ததும் தெரியும். திவி இனிமே பெரிய கேஸ்ல தலையிடக் கூடாதுன்னு டிபுரோமோசன் பண்ணிட்டாங்க. திவிக்கு எழில் தான் உலகமே. திவி வேலைக்கு போனா, ஆரா அப்பாக்காக ரொம்ப ஏங்க ஆரம்பிச்சிட்டா. எனக்கு வேற வழி தெரியல. அதான் ஆதிய அப்பான்னு சொன்னேன்.” என்று நடந்தவற்றை அனைவரிடமும் விளக்கினாள் கவிமீனா. கேட்ட அனைவரின் கண்களும் கலங்கி தான் இருந்தது. இசையும் அனைத்தும் சொல்லிவிட சக்தி உடைந்தே போனான்.

திவி கலங்கிய கண்களை தன்னவன் நெஞ்சில் மறைத்து கொண்டாள். ஆதரவாக அவளின் தலையை வருடிவிட்டவன் கண்களும் ரௌத்திரமாய்த்தான் இருந்தது. அவ்வளவு கோபம். தன் உயிரானவளின் நிலைக்கு காரணமானவர்கள் மீது அத்துனை சினம்.

திவி “எனக்கு பல நேரம் தோணும் நீ என்கூட தான் இருக்கன்னு. உன்னைக் கட்டிப்புடுச்சி அழணும் போல இருக்கும். என்னை விட்டு எங்கடா இருக்கன்னு. நம்ம பாப்பா போனப்போ அவ்வளவு வலி. அவ எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பால ஆதி. அந்த அன்வர் தான் ரேஷ்மா கொண்டு வந்த ஜீஸ்ல டேப்லட் கலந்து இருக்கான். பாவம் அது ரேஷ்மாவுக்கே தெரியாது. நம்ம வாழ்க்கை ஏன்டா இப்படி ஆச்சு.? சொல்லு டா. ஒரு நிமிசம் நான் சொல்றத நீ கேட்டு இருந்தா கூட நம்ம பாப்பா இப்போ நம்ம கைல 4 வயசு குழந்தையா இருந்து இருப்பா தெரியுமா.? நான் எவ்வளவு கனவு கண்டேன் தெரியுமா. உன்னை மாதிரி குட்டி கண்ணு, என்ன மாதிரி மூக்கு உன்னை மாதிரி எப்போவும் சிரிப்போட என்னை மாதிரி கோபம் வந்து நீ எங்க ரெண்டு பேரையும் சமாளிக்கனும்னு ஆயிரம் ஆயிரம் கனவுகள் டா மாமா. இப்போ அதுலாம் நடக்காம போய்டுச்சுல” என்று மழலையாய் தன் கணவனின் மார்பில் கண்ணீர் உகுத்தாள் திவி.

ஆணவன் அவனுக்கே கண்ணீர் வந்துவிட்டது. தன்னை சமன்படுத்திக்கொண்டவன் “அப்போ எழில்? நமக்கு ஒரு குழந்தை பொறந்தா எழில்ல பாத்துக்க மாட்டியா டி?”

“அடிச்சுடுவேன். எழில்தான் எனக்கு எப்போவும் முதல்ல. அப்ரோம் நீ சொன்னியே நமக்கு ஒரு குழந்தை பிறக்கும்னு. அதுக்கு வாய்ப்பு ரொம்ப கம்மி தான் மாமா. அந்த டேப்லட்டோட சைடு எபெக்ட்னால அடுத்த கரு உருவாகுறது சந்தேகம் தான்னு டாக்டர் சொன்னாங்க தெரியுமா?” என்றவள் வலிய வரவழைத்த புன்னகையோடு, “எனக்கு நீயும் எழிலும் போதும் டா” என்றபடி அவன் மடியில் படுத்தாள்.

கனத்த மனதுடன் அவள் தலையை கோதிவிட, மெல்ல கண்ணயர்ந்தாள் திவி.

எழில்தான் நெடுநேரமாக அன்னையை காணாமல் தவித்தவள், ஆதி மடியில் இருப்பதைக் கண்டு தன் தந்தையுடன் ஒன்றிப் போனாள்.

அடுத்த நாள் அனைவரும் தமிழ்நாட்டிற்கு பயணப்பட தயாராகினர்.

அன்வர் “மேடம், எனக்கு வந்த தகவல்படி எல்லாரும் அங்க தான் வராங்க”

சந்தனா “தெரியும் அன்வர். வரட்டும். என் வாழ்நாள் எதிரிடா அவ. இனிமே யாருக்கும் பாவம் பார்க்கப் போறது இல்ல. என்னை எதிர்க்குறவங்க இனிமே எமன் கூட தான். அப்ரோம் நம்ம ரிசர்ஜ் எப்படி போய்ட்டு இருக்கு?”

“அதுலாம் பிரச்சனை இல்லை மேடம். அவங்கதான் எல்லாம் பாத்துக்குறாங்க. எப்படியும் சீக்கிரம் நம்ம வேலை முடிஞ்சுடும்”

“குட். அவ சொல்ற மாதிரி மட்டும் செய். இங்க நான் பாத்துக்குறேன்” என்றபடி இணைப்பைத் துண்டித்தனர் இருவரும்.

 ◆

சேலம் மாவட்டம்.

ஆதியின் வீடே கோலகலாமாக இருந்தது. அனைவரும் வரும் செய்தியை தேவ் சொல்லி விட, ஆதியின் புதுவீட்டில் தெய்வானை, திவியின் பெற்றோர், சிவஞானம், சுப்ரியா என அனைவரும் குழுமி இருந்தனர்.

ஆதியும் திவியும் ஆறெழிலுடன் வர, மற்ற அனைவரும் பின்னே வந்தனர். தெய்வானை கண்களில் கண்ணீருடன், ஆரத்தி எடுத்தார் ஆதி திவிக்கு மட்டுமல்ல இசை மீனாவிற்கும் தான். குழந்தைகள் இருவரும் தான் பூரித்துப் போயினர். யாருமில்லாமல் இருந்து பல ஏக்கங்களை சுமந்து கொண்டிருக்கையில் புது சொந்தங்களைக் கண்டதும் மனம் துள்ளிக் குதித்தது. மழலைகளுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் தான். திவியின் பெற்றோர் ஏதும் பேசாது கண்ணீரிலேயே தன் மகளை காண, இத்தனை நாள் தவிப்பும் கரைந்தது.

தெய்வானையைக் கண்டவுடன் கட்டியணைத்து அழுதாள் திவி. “போதும்டி அழாத. அதான் வந்துட்டில”

“எப்படி அத்தமா இருக்கீங்க?”

“இவ்வளவு நாள் நல்லாவே இல்லடி. இப்போ தான் நீ வந்துட்டில என்னைப் பாத்துக்க மாட்ட?”

திவி சிரிப்புடனே தலையாட்டினாள். சிவஞானம் தன் குடும்பம் மீண்டும் ஒன்று சேர்ந்ததால் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தார்.

தெய்வானைக்கும் ரோஜாக்கும் தலைகால் புரியவில்லை. மகளுக்காகவும் மருமகளுக்காவும் பார்த்து பார்த்து சமைத்துக் கொண்டு இருந்தனர். குழந்தைகள் மூவரும் தாத்தாவுடன் ஒட்டிக்கொள்ள, அவரவர் தத்தமது அறையில் இருந்தனர். 

திவி “ஏன் அந்த வீட்டுக்கு போகல.?”

ஆதி “அந்த வீடு நமக்கு சொந்தமில்லை யது”

திவி “என்ன மாமா சொல்ற?”

ஆதி “ம்ம். அது அப்பா பேர்ல இருக்கு. கம்பெனியும் கோகுல் பேர்ல இருக்கு. கோகுலும் சந்தனா தான் அத ரன் பண்றாங்க. நம்ம கம்பெனிய பாரதியும் பவியும் பாத்துக்குறாங்க. இவ்ளோ நாளா அம்மாவும் தேவ்வும் அங்கதான் இருந்தாங்க. தாத்தா மட்டும் நம்ம கூட இருந்தாரு. நீ வரன்னு தெரிஞ்சவுடனே அவங்களும் இங்க வந்துட்டாங்க. அந்த வீட்ல இப்போ அப்பா, சந்தனா ஃபேமிலி மட்டும் தான் இருக்காங்க யது”

திவி “அப்போ சக்தி, ரவீணா..?”

ஆதி “அவங்க இங்க இருந்து ரெண்டு தெரு தள்ளி தான் இருக்காங்க.”

திவி “அப்போ..?”

ஆதி “விஷ்ணுவும் சுப்ரியாவும் தனியா வீடு எடுத்து தான் இருக்காங்க போதுமா?”

திவி  “போதும் டா” என்று இருவரும் அந்த தனிமையை ரசித்தனர்.

 ◆

சக்தி, ரவீணா அறை

ரவீ “சக்தி, எப்போ சந்தனாவ அரெஸ்ட் பண்ண போறீங்க?”

சக்தி “இப்போ தான திவி வந்து இருக்கா. அல்மோஸ்ட் எல்லாம் நானும் ஆதியுமே கண்டுபிடிச்சுட்டோம். திவிக்கிட்ட பொறுமையா எடுத்து சொல்லி எல்லாரையும் அரெஸ்ட் பண்றது மட்டும்தான் வேலை”

ரவீ பெருமூச்சொன்றை விட்டவாறு “இனிமே எல்லாம் நல்லாதாவே நடக்கும் தான சக்தி?”

சக்தி “நீ ஏன்டி இவ்ளோ பயப்படுற நாமலாம் இருக்கோம்ல இனிமே அவங்கள பிரிய விட மாட்டோம் சரியா?”

ரவீணாவும் அதை ஆமோதிப்பதாய் தலையாட்டினாள்.

மதிய வேளை அனைவரும் உணவு உண்ண வந்து அமர்ந்தனர். அப்போது சரியாக வீட்டின் முன் சர்ரென்று மகிழுந்து வந்து இறங்கியது. அதிலிருந்து ஒருவன் வந்து கூறிய செய்தி அனைவரையும் பரபரப்பாக்கியது. திவிதான் உட்சபட்ச அதிர்ச்சியில் இருந்தாள்.

 

கனவு தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
6
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்