Loading

ஆட்சியர் கனவு 39💕

தன் வாகனத்தை சக்தியின் அலுவலகத்தில் நிறுத்திய கோகுல் விரைந்து அவன் அறைக்கு சென்றான்.

சக்தி கோப்புகளை ஆராய்ந்து கொண்டு இருக்க, கோகுல் மூச்சு வாங்க உள்ளே நுழைந்தவன் “நீங்க தான என் அண்ணா.?” என்றிட, அவன் கேட்ட கேள்வியில் சக்தி அதிர்ச்சியாகி விட்டான்.

சக்தி “என்னடா சொல்ற.?”

கோகுல் “எதுவும் தெரியாத மாதிரி  கேட்காதீங்க. எனக்கு எல்லாம் தெரியும். அன்னைக்கு நீங்களும் திவியும் பேசினது கேட்டேன்.. நீங்க தானே என் அண்ணா.” என்று ஒரு வித தவிப்புடன் கேட்டான்.

சக்தி “நீ பர்ஸ்ட் வீட்டுக்கு போ. திவி வரட்டும். பேசிக்கலாம்” என்று அவனை அனுப்ப முயல,

கோகுல் “எப்ப பாரு திவி… திவி… திவி… என்ன யார் எது பண்ணாலும் அவ கிட்ட கேட்கணுமா.? எனக்கு இப்போ உண்மை தெரிஞ்சு ஆகணும்” என்று கத்த,

சக்தி “அவ உனக்கு அண்ணி.. ஒழுங்கா பேசு.” என்று பொறுமையாக கூறினான்.

கோகுல் “ஓ, அண்ணி..! இத்தனை நாள் அவளுக்கு உண்மை தெரியும். தெரிஞ்சும் நாம சேரக்கூடாதுன்னு எதுவுமே சொல்லல? அவளுக்கு நான் மரியாதை தரணுமோ.?” என்றான் அடக்கப்பட்ட கோபத்துடன்.

சக்தி தன் பின்னந்தலையை அழுந்த கோதி கோபத்தை சமன்படுத்த முயல, ஆதி அவ்விடம் வந்து சேர்ந்தான்.

ஆதி “கோகுல், என்ன பேசுற நீ.?” என்று கத்த

கோகுல் “யாரு..? ஹோ.. தி கிரேட் பிசினஸ் மேன் ஆதித்யாவா.? வாங்க வாங்க.. ஏன் சார்க்கு நான் பேசுறது புரியலையா? நான் தமிழ்ல தான பேசுறேன்.?” என்று நக்கலடித்ததில் ஆதிக்கும் சக்திக்கும் கோவம் தலைக்கேறியது.

ஆதி “கோகுல், திவி ஏன் இன்னும் சொல்லலன்னு தெரியுமா.? “என்று கூற முயல,

கோகுல் “யாரும் எதுவும் எனக்கு சொல்ல தேவையில்லை. ராஜரத்தினம் மாமா அன்னைக்கே சொன்னாரு. நான் தான் நம்பல. இனிமே அப்பாவோட டெக்ஸ்டைல்ஸ் அண்ட் கார்மெண்ட்ஸ நானே பாத்துக்குறேன். அதை எப்டி கொண்டு வரணும்னு எனக்கு தெரியும். அண்ட் நான் மத்தவங்க மாதிரி சொத்தை அனுபவிக்க மாட்டேன். அதுல உனக்கும் பங்கு இருக்குண்ணா. உனக்கான சேர்ஸ் உனக்கு வந்திடும்” என்று அவ்விடத்தை விட்டு நகர்ந்தான்.

ஆதி அவனின் கூற்றில் உறைந்து நிற்க, சக்தி “என்ன டா அவனுக்கு ஆச்சு? திவி அன்னைக்கே சொன்னா. பர்ஸ்ட்டே சொல்லலன்னா அவன் ஏதோ பண்ணுவான்னு.”

ஆதி “அதான் போறபோக்குல உன் தம்பி க்ளூ குடுத்துட்டு போய் இருக்கான்னே நீ கவனிக்கல. சார் சுயமா பண்ணல. எல்லாம் அந்த ராஜரத்தினம் வேலை தான்” என்றான் பல்லைக் கடித்துக்கொண்டு.

சக்தி “அப்டி என்னடா பகை உனக்கும் அவனுக்கும்.? இதுல இவன் எப்டி அந்த ஆள் பக்கம் போனான்.?” என்று குழம்பியபடி கேட்டான்.

ஆதி “நான் அவங்க ரெண்டு பொண்னையும் கல்யாணம் பண்ணிக்கல.. சந்தனா, சுப்ரியா ரெண்டு பேரும் அவங்க பொண்ணு தான் டா.. கோகுல் இன்னமும் அந்த ஆள் சொல்றதுதான் கேட்குறான் போலடா.. இதுல எனக்கு என்ன பயம்னா என் மேல இருக்க கோவத்துல யதுவ ஏதாவது பண்ணிட்டா.?”

சக்தி “பயப்படாத டா.. நாம அவ கூட தானே இருக்கோம்” என்று சமாதானம் உரைத்தான்.

திவி கல்லூரியிலும் பிராஜக்ட் பற்றியே யோசித்து கொண்டு இருக்க, ரவீணா “என்ன திவி வர வர உன்னை பாக்கவே முடியல.? காலேஜ் முடிஞ்ச உடனே சீக்கிரம் கிளம்பிடுற.?” என்றாள்.

திவி “ஒர்க் அதிகம் ரவி அதான். எக்ஸாம்ஸ் வேற வர போகுதுல”

ரவி “ஹான் ஆமா திவி.. இந்த செம்ல நமக்கு எக்ஸ்டன்ஷன் இருக்குல்ல.?”

திவி “ஹான்.. எங்க கூட்டி போவாங்கன்னு தெரியல.?”

ரவி “பர்ஸ்ட் கூட்டி போவாங்களா.?” என்று வினவ,

திவி “கூட்டி போவாங்க டி.. நம்பலாம்.! நம்பிக்கை அதானே எல்லாம்” என்று கூறினாள் சிரிப்புடன்.

சிறிது நேரத்தில் கனகா கத்தி கொண்டே வந்தாள். “திவி, ரவி… ” என்று அவள் மூச்சு வாங்க,

திவி “ஏய் ரிலாக்ஸ்.. என்ன என்ன விஷயம்.?”

கனகா “நம்மள நம்ம..” என்று மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கிட..

ரவி “என்ன நம்ம செம் கேன்சல் பண்ணிட்டாங்களா.?”

கனகா “அட சீ அது இல்லை.. நம்மள எக்ஸ்டென்ஷன் கூட்டிட்டு போறாங்க” என்று தான் தாமதம் வகுப்பே கத்த தொடங்கி விட்டது..

ஆனால் திவி தான் யோசனையில் இருந்தான். வேறு என்ன ஆதி விடுவானா.???..

சுப்ரியா இந்த விஷயத்தை வீட்டில் கூற, வஞ்சக மனமோ தன் வேலையை செவ்வனே செய்தது..

சுப்ரியா “ஹலோ, அக்கா.. “

சந்தனா “ஹான்.. சொல்லு பிரியா.”

சுப்ரியா “அக்கா நெக்ஸ்ட் வீக் காலேஜ்ல எக்ஸ்டென்ஷன் கூட்டிட்டு போறாங்க கா”

சந்தனா “ம்ம்.. எங்க.?”

சுப்ரியா “சென்னை..”

சந்தனா “ஓகே.. திவி வராலா.?”

சுப்ரியா “டௌப்ட் தான் கா.!”

சந்தனா “ஓகே.. பிரியா.. அவ வருவா.. கண்டிப்பா.. நீ எப்போவும் அவல வாட்ச் பண்ணிக்கிட்டே இரு.. நான் எப்போ வேணாலும் சென்னை வருவேன்.. அப்போ எனக்கு அவ வேணும் டாட்.. ஓகே..?”

சுப்ரியா “சரி கா.. நான் அப்ரோம் பேசுறேன்.”

சந்தனாவும் இணைப்பை துண்டித்து விட்டு யோசனையில் மூழ்க, அங்கு திமிராக அமர்ந்து இருந்த ராஜரத்தினம் அவளை கேள்வியாக பார்த்தார்.

ரத்தினம் “என்ன சந்தனா யோசிக்குற.?”

சந்தனா “ஆதியையும் திவியையும் பழி வாங்க ஒரு வழி கிடச்சு இருக்குப்பா.. “

ரத்தினம் “என்ன வழி டா மா.?”

சந்தனா “அதை அப்ரோம் சொல்றேன்.. கோகுல் ஏதாவது தகவல் சொன்னானா.?”

ரத்தினம் “ம்ம்.. அவன் சக்தி கிட்ட உண்மைய சொல்லி இருக்கான்.. இப்போ தான நம்ம சரியா காய்ய நகத்துறோம்.. சரியா போய்ட்டு இருக்குமா.. ஆதியே அவள வீட்டை விட்டு துரத்துவான்.. ” என்றார் எக்களிப்புடன்.

சந்தனா “சரி ப்பா.. இன்னைக்கு நான் ஆஃபிஸ் போகல.. கோகுல ஆதி கார்ர ஆக்சிடன்ட் பண்ண சொல்லுங்க. ஆனா உயிருக்கு ஒன்னும் ஆக கூடாது.. ஜாக்கிரதை..”

ரத்தினம் அவள் சொல்வதையே வேத வாக்கு என்று எண்ணி பூம் பூம் ஆட்டி கொண்டு இருந்தார்.

சந்தனா “ஹான்.. அப்ரோம் சக்தியை ஆதி கிட்ட இருந்து பிரிக்கனும்.. நான் சொல்ற மாதிரி செய்ங்க.. ” என்று அவருக்கு சில திட்டங்களை வகுத்தவள், மேலும் தொடர்ந்து “அந்த கவி….?” என்று யோசனையாக புருவம் சுருக்கி, ரத்தினத்தை நோக்கிட,

ரத்தினம் “அவ நாசிக்ல தான் இருக்கா.. நம்ம கஸ்டடில.. ” என்றார்.

அதன் பிறகு தன் அரசியல் விஷயங்களை பற்றியும் தொழில் பற்றியும் பேசிவிட்டு சென்று விட்டார்.

சந்தனா தன் முன் இருந்த ஆதியின் நிழற்படத்தை தான் வெறித்து கொண்டு இருந்தாள்.

“சாரி பேபி.. ரொம்ப கஷ்டப்படுத்துறேன்ல… கொஞ்ச நாள்.. நான் இருக்க வேண்டிய இடத்துல அவ இருக்கா.. அதான் இவ்ளோ பிரச்சனை.. கூடிய சீக்கிரம் அந்த வீட்டுக்கு மருமகளா வருவேன் பேபி.. இனிமே நீ திவி பக்கம் போகவே மாட்ட..” என்றாள் தான் வகுத்த திட்டத்தினை எண்ணி கொண்டு…

கல்லூரி முடிந்து அலுவலகத்திற்கு விரைந்தாள் திவி..

மதி “திவி, எனக்கு ஒரு வாரம் லீவ் வேணும். சார் கிட்ட சொல்லேன்”

திவி “வந்த உடனே கேட்டா திட்டுவார் இசை.. நான் கேட்குறேன்.. ஏன் ஒரு வாரம்.?”

மதி “கவிய கண்டு புடிக்க தான் திவி.. கொஞ்சம் ஒர்க் இருக்கு” என்று மட்டும் கூறிட,

திவி “ஹான்.. ஓகே.. எல்லாம் சரி ஆகிடும் அண்ணா.. தைரியமா இருங்க.. நான் எம்.டி கிட்ட சொல்றேன்” என்று உள்ளே நுழைந்தாள்.

ஆதி ‘எப்ப பாரு என் யது உள்ள வந்தாலே பேசுறான்… அப்டி என்ன தான் பேசுவானோ.. பர்ஸ்ட் அண்ணனையும் தங்கச்சியையும் வேலைய விட்டு தூக்கணும்’ என்று நினைத்து கொண்டு இருந்தான்.

திவி “மே ஐ கம் இன் சார்.?” என்று கதவை திறக்க,

ஆதி “வா வா” என்று கூறினான்.

திவி “என்ன ஒரு சலிப்பு.?”

ஆதி “என்னவாம்.?” இசையை நோக்கி அவன் பார்வையை வீசிட,

அதை உணர்ந்தவள், திவி “லீவ் வேணுமாம்”

ஆதி “எதுக்காம்.?”

திவி  “லவ்வர தேடவாம்”

ஆதி “எடுத்துக்க சொல்லு”

திவி “ஒரு வாரம்”

ஆதி “சரி.. சரி..” என்று நகர, அவனின் பேச்சில் திவிக்கு சிரிப்பு தான் வந்தது..

திவி “ஆதி.. காலேஜ்ல எக்ஸ்டென்ஷன் சொல்லி இருக்காங்க”

ஆதி தன் கையில் வைத்து இருந்த கோப்புகளை கீழே தவற விட்டான்..

ஆதி “எங்க.. ஏன்.. எதுக்கு.?”

திவி “சென்னை.. எக்ஸ்டன்ஸ்.. காலேஜ்ல கூட்டிட்டு போறாங்க.. இன்டெர்னல் இருக்கு..”

ஆதி “அவசியம் போணுமா.?” என்ற போதே அவனின் குரல் தோய்ந்து இருக்க,

திவி “வீட்ல பேசிக்கலாம்..பிராஜக்ட் பிளான் ரெடி” என்று அவனிடம் கொடுத்தாள்.

அதை வாங்கி பார்த்தவனின் கண்கள் அகல விரிய, திவியின் பிளான்னை கண்டு ஆச்சர்யம் அடைந்தான்.

ஆதி அவளை தூக்கி சுற்றிட, “செமையா இருக்கு டி.. பிளான்.. ரெண்டே நாள்ல எப்டி இவ்ளோ பக்காவா பண்ண.. செம திவி.. நீ மட்டும் எம். டி ஆனா அடிச்சிக்க ஆளே இல்ல” என்று சந்தோஷத்தில் பொங்க,

திவி “டேய்.. டேய்.. கீழ இறக்கி விடு டா.. தலை சுத்துது” என்றிட, அப்போது தான் அலுவலகம் என்பதை அறிந்து கீழே இறக்கி விட்டான்.

அப்போதே அந்த பிளானை அவள் மற்ற அனைவருக்கும் விவரிக்க, அனைவருக்கும் அது பிடித்துபோனது. உடனே அதை செயல்படுத்த சைட்டிற்கு விரைந்தனர் இருவரும்..

மதி “சந்தனா மேடம் எங்க .?” என்று அங்கு பியூனிடம் கேட்க,

“மேடம் இன்னைக்கு வரவே இல்லை சார் ” என்று விட்டு நகர்ந்தான்.

மதியோ யோசனையில் ஆழ்ந்த படி இருக்க, அவன் யோசனையை அலைபேசி கலைத்தது.. அலைபேசியில் பேசியவன் சிறிது தெளிந்து இருக்க, தான் அடுத்து செய்ய வேண்டிய காரியங்களில் கவனமானான்.

இருவரும் மகிழுந்தில் பேசிக்கொண்டு செல்ல, அவர்களை நோக்கி, ஒரு லாரி விரைந்து வந்தது..
பிரேக் பிடிக்காத லாரி, சாலையில் அங்கும் இங்கும் தடுமாறிய படி வந்தது.

லாரி நம்மை தான் தாக்க வருவதை அறிந்த ஆதி நொடி சுதாரித்து அதனிடம் இருந்து தப்பிக்க, காரை மரத்தின் மேல் மோதவிட்டான்.

அங்கு சிறு சலசலப்பு ஏற்பட, ஆதிக்கு கையில் சிராய்ப்பும் காலில் அடியும், திவிக்கு தலையில் அடியும் ஏற்பட்டது.

உடனே சக்திக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து அவ்விடம் வந்து சேர்ந்தான். சற்றும் தாமதியாமல் இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றான்.

மருத்துவர் இருவருக்கும் முதலுதவி செய்ய, இருவரும் சக்தியுடன் இல்லம் திரும்பினர். சக்திக்கோ அதீத கோபம். ‘யார் இந்த வேலையை செய்தது.?’ என்று அவனுள் ஆத்திரம் அனலாய் தகித்து கொண்டு இருந்தது.

கையில் சிராய்ப்புடன், தாங்கலாய் வந்த ஆதியையும், தலையில் கட்டுடன் வந்த திவியையும் பார்த்து தெய்வானை பதறியே விட்டார்.

தெய்வானை “அய்யோ, ஆதி.. திவ்யா.. என்னமா ஆச்சு.? ” என்று கத்த, அவர் இட்ட சத்தத்தில் அறையிலிருந்த சிவஞானமும், பெருமாளும் பதறியடித்து கொண்டு வந்தனர்.

சிவஞானம் “என்ன திவி ஆச்சு? டேய் ஆதி என்ன டா?”

சக்தி “ஒன்னும் இல்ல தாத்தா.. சின்ன ஆக்சிடன்ட் தான். லாரிக்காரன் பிரேக் பிடிக்காம வந்துட்டான். ஆதி சுதாரிச்சதனால ஒன்னும் ஆகல ” என்று சமாதானம் உரைக்க, சரியாக அப்போது கோகுல் உள்ளே வந்தான்.

கோகுல் “அச்சோ.. அண்ணி.. அண்ணா.. என்ன ஆச்சு.? எப்டி அடிப்பட்டுச்சு.?” என்று போலியாய் வருத்தப்பட,

ஆதியோ அவனை ஆராய்ச்சி பார்வை பார்த்து விட்டு, “ஆக்சிடன்ட்” என்றான் ஒற்றை வரியில்.

கோகுல் “ஓ.. வேற ஒன்னும் ஆகலயா.?” என்று கேட்டதில், சக்திக்கோ சிறு பொறி தட்ட, ரௌத்திரத்துடன் அவனை ஏறிட்டான்.

திவி “ஹான்..? என்ன சொன்ன.?” என்று அவனை அழுத்த பார்வை பார்த்திட,

கோகுல் “ஹான்.. வேற ஒன்னும் ஆகலதானேன்னு கேட்டேன் அண்ணி” என்றான் மலுப்பலாக.

சக்தி “அதுலாம் ஒன்னும் ஆகல. ரெண்டு பேரும் போய் உட்காருங்க.. அம்மா.. அவங்களுக்கு ஏதாவது சாப்பிட கொடுங்க அம்மா” என்று கூறிட, அப்போது தனக்கு வந்த அழைப்பை ஏற்று வெளியில் சென்றான்.

தெய்வானை திவியின் வீட்டிற்கு தகவல் தெரிவித்து விட, அனைவரும் வந்து விட்டனர்.

அனைவரும் அடித்து பிடித்து ஆதியின் வீட்டிற்கு வந்து விட்டனர். சக்தி செல்விக்கும் செய்தியை சொல்லி விட, செல்வியும் விரைந்து வந்தார். இதற்கிடையில் கோகுலும் பெருமாளும் பேசிக்கொண்டதை திவியை தவிர யாரும் அறியவில்லை.

தேவ் “எப்படி அண்ணா, வெறும் ஆக்சிடன்ட் தானா.?” என்றதில்,

ஆதி திவி இருவருக்கும் ஏற்கனவே சந்தேகம் இருந்ததால் இருவரும் ஒருவரை ஒருவர் அர்த்த பார்வை பார்த்து கொண்டனர்.

திவி “ஆக்சிடன்ட் தான் தேவ்.. நீ ஏன் தேவை இல்லாம கற்பனை பண்ற? ” என்று அவன் சிகையை கோதி விட்டாள்.

தேவ் அவளின் கைகளை பிடித்து கொண்டு “எனக்கு ரெண்டு பேரும் ரொம்ப முக்கியம் அண்ணி.. எப்போவும் நீங்க என் கூடவே இருக்கணும்” என்றான் இறைஞ்சலாக.

ஆதி “டேய்.. ரெண்டு பேரும் எங்க போய்ட போறோம்.? ஹான்..? நீ தேவை இல்லாம எதை எதையோ நினைக்காத டா.. போ.. போய் சாப்பிடு” என்று அவனை அனுப்பி வைத்தான்.

திவியின் பெற்றோர்களும் அவளுக்கு  அறிவுறுத்திட, திவியும் தலையை தலையை ஆட்டினாள்.

ரோஜா “இனிமே நீ ஆஃபிஸ்லாம் போக வேண்டாம். அண்ணி, அவள இனிமே ஆஃபிஸ்லாம் அனுப்பாதீங்க அண்ணி.. ஒழுங்கா மருமகளா வீட்ல இருக்க வேலையை செய்ய சொல்லுங்க.. காலேஜ் போய்ட்டு வீட்டுக்கு வர சொல்லுங்க அண்ணி..” என்று அவர் தெய்வானையிடம் வினவ, திவியோ தன் அன்னையின் கூற்றில் அத்தையை பாவமாக பார்த்து கொண்டு இருந்தாள்.

ஆதி அவளின் பாவனையில் பாவம் பொங்கிய சிரிப்பை அடக்கி கொண்டு இருந்தான்.

தெய்வானை “சரி மா.. இப்போவே என் மாமியார் வேலையை ஆரம்பிக்குறேன் “என்று விட்டு, “திவி.. வா இங்க.. ” என்று அடுக்களைக்குள் சென்று கொண்டே அவளை அழைத்தார்.

திவி அமைதியாக செல்ல, ரோஜா தான் “போ.. ஒழுங்கா அண்ணி என்ன வேலை சொல்றாங்களோ செய்.. ” என்று அனுப்பி விட, அவள் தலையை மட்டும் ஆட்டி விட்டு சென்று விட்டாள்.

தெய்வானை “திவி.. இந்தா இத கழுவு. நைட்க்கு சப்பாத்தி செஞ்சிடு.. கூடவே உருளைக்கிழங்கு குருமா சரியா” என்று அவளுக்கு வேலைகளை அடுக்க,

வெளியில் அனைவரும் “இன்று திவி சமையல்” என்று ஆர்வமாக இருந்தனர்.

தெய்வானை ” எல்லார்க்கும் நைட் இங்க தான் சாப்பாடு.. ” என்று குரல் கொடுக்க,

ரோஜா “சரிங்க அண்ணி” என்று அனைவரிடமும் பேசி கொண்டு இருந்தார். அப்போது அங்கு செல்வியும் வந்து விட, அவரை ரோஜா சமையல் அறைக்குள் விடவே இல்லை. பின்னே சென்றால் திவியை வேலை செய்ய விடாமல் செய்து விடுவார் என்று தான்.

தேவ் “அத்தை, அண்ணி.. சமைப்பாங்களா..?”

ரோஜா “அதுலாம் நல்லாவே சமைப்பா.. இங்க தான் அவளுக்கு நீங்க யாரும் எந்த வேலையும் சொல்றது இல்ல போல.. ஆதி.. இனிமே அவ ஆஃபிஸ் வர வேண்டாம். ஏதோ அடுத்த வாரம் எங்கேயோ போகணும்னு சொன்னா.. காலேஜ்ல கூட்டிட்டு போறாங்களாமா.. அங்கலாம் வேண்டாம் பா ” என்றிட,

ஆதி தான் சிரித்து கொண்டே “அத்தை.. நீங்க ஏன் இவ்ளோ பயப்படுறீங்க.. அவ இப்போ தான் ஒரு பிராஜக்ட் சரியா செஞ்சி இருக்கா.. அதை அவதான் எக்ஸ்பிளேன் பண்ணனும்.. அதுக்காகவாவது அவ என் கூட ஆஃபிஸ் வரணும்.. அப்ரோம் இது அவ காலேஜ் லைஃப்.. இப்போ என்ஜாய் பண்ற வயசு.. அவளுக்கு எந்த பிரச்சனையும் வராம அவ லட்சியத்தை அடைய வைக்கணும்னு தான் நான் அவளை சீக்கிரம் கல்யாணம் செஞ்சிகிட்டேன்.. நானே அவ சந்தோசத்துக்கு தடையா இருந்தா எப்டி அத்தை.. நீங்க எதுக்கும் பயப்படாதீங்க.. நான் எப்போவும் அவ கூட தான் இருப்பேன்” என்று நம்பிக்கை அளித்தான்.

செல்வி தான் இன்னுமா சமையல் செய்றாங்க.? என்று நினைத்து விட்டு, “இருங்க நான் கொஞ்சம் பாத்துட்டு வரேன்..” என்று சமையல் அறைக்குள் சென்றார்.

தெய்வானை “அந்த கேரட்டை பொடி பொடியா நறுக்கு திவி.. உருளைக்கிழங்கு தோலை உரி” என்று கூற,

அங்கு வந்த செல்வியோ நடப்பவற்றை கண்டு வாயில் கை வைத்து கொண்டார்.

திவி அடுப்புதிட்டின் மேல் உட்காந்து கால் ஆட்டி கொண்டே, ஒரு கையில்
கேரட்டும், மறு கையில் முந்திரி பருப்பும் வைத்து சாப்பிட்டு கொண்டு இருக்க, செல்வி தான் “பார்ரா … திவிமா.. நீ இவ்ளோ நல்லா சமைப்பியா.?” என்றதில்,

அவசரமாக திட்டில் இருந்து இறங்கியவள், அவர் முன் அசடு வழிந்து நின்று கொண்டு இருந்தாள். தெய்வானையும் அவர் முன் அசடு வழிய, ரோஜா “நான் தான் சொன்னேன்ல.. அண்ணி திவி நல்லா சமைப்பான்னு” என்று உள்ளே வர,

தெய்வானை தான் செல்வி இருப்பதும் மறந்து “திவி.. இந்தா இதை தோலை உரி.. ” என்று அவள் கையில் பாத்திரத்தை திணித்தார்.

செல்வி தான் நமட்டு சிரிப்புடன் “ஹான்.. ரொம்ப அருமையா தான் சமைக்குறா.. சரி வாங்க.. நாம போலாம்.. ” என்று அவரை அப்படியே அழைத்து சென்று விட்டார்.

தெய்வானை “தப்பிச்சோம்ல”என்று நெஞ்சில் கை வைத்து கூறிட,

திவி அவரின் கழுத்தை கட்டி கொண்டு “யாருக்கும் இந்த மாதிரி மாமியார் அமையவே மாட்டாங்க.. நான் ரொம்ப லக்கி” என்று கன்னத்தில் முத்தமிட்டு சொல்ல,

தெய்வானையோ “அச்சோ.. விடு திவி மா… ” என்று புன்னகைக்க,

திவி “அச்சோ.. என் அத்தைக்கு வெட்கத்தை பாரு…” என்று அவரை கட்டிக்கொண்டாள்.

தெய்வானை “சரி டா மா… நான் சப்பாத்தி சுடுறேன்.. நீ வெளிய போ..” என்று அனுப்பிட,

திவி “நோ.. நோ.. வெளிய போனா அந்த ரோஸ் என்ன திட்டும்.. நான் போக மாட்டேன்..” என்றாள்.

தெய்வானை “சரி.. இந்தா இந்த ஹாட் பாக்ஸ்ல நான் சுட்டு தரத போடு” என்றார்.. இவளும் அந்த பெரிய வேலையை செய்ய ஆயுத்தமானாள்.

வெளியில் சக்தி பேசிக்கொண்டு இருந்தான்.

சக்தி “என்ன டா சொல்ற.?.. இப்போ தான் ஆதியும் திவியும் வீட்டுக்கு வந்து இருக்காங்க.. அதுக்குள்ள எப்டி சொல்ல, மதி?”

மதி “நீ சொல்லித்தான் ஆகணும் டா. அப்ரோம் நான் நாசிக் கிளம்புறேன்.”
என்றான்.

அவன் கூறியதில் அதிர்ச்சியான சக்தி “டேய், நான் சொல்றத கேளு.. இன்னும் ஒரு வாரம்.. ரெண்டு பேரும் ஒண்ணா போலாம் டா.. நீ மட்டும் வேண்டாம்..”

மதி “எனக்கு என் கவி வேணும் டா.. என்னால தான் அவ இவ்ளோ கஷ்டப்பட்டுட்டு இருக்கா. பாத்துட்டு அமைதியா இருக்க சொல்றியா.?”

சக்தி “அங்க போனா உன் உயிருக்கு கூட ஆபத்து இருக்கு டா.. நான் ஆதிக்கிட்ட சொல்றேன்.. அவனும் வரனும் டா..”

மதி “நீ எனக்குன்னு சொன்னா அவன் கண்டிப்பா வர மாட்டான்.. ஏன்னா என்ன பத்தி அவனுக்கும் தெரியும்..”

சக்தி “தெரிஞ்சா என்ன டா.. அவன் புரிஞ்சுக்குவான்..”

மதி “எனக்கு நம்பிக்கை இல்லை.. நான் கிளம்புறேன்.. அவ்ளோ தான்..” என்றான் முடிவாக.

சக்தி. “எப்போ கிளம்புற?”

மதி “இன்னைக்கு நைட்.. “

சக்தி “எதுல.?”

மதி “ட்ரெயின்..”

சக்தி “நானும் வரேன்..”

மதி “நீ மூடிக்கிட்டு அங்க இருக்க வேலைய பாரு.. இந்த நேரத்துல நீ ஆதி திவி கூட இருக்கணும்.. இல்லன்னா அந்த ரெண்டு ஜென்மங்களும் என்ன பண்ணும்னு தெரியாது.. நான் கிளம்புறேன்.. பை..” என்று சக்தியின் பதிலை கேளாமல் இணைப்பை துண்டித்தான்.

இவன் உள்ளே வர, அனைவரும் சிரித்து பேசி கொண்டு இருந்தனர். ஆதி மட்டும் யோசனையில் இருக்க, சக்தி “டேய்.. உன்கிட்ட கொஞ்சம் பேசணும் டா..” என்றான்.

ஆதி “ஹான். சொல்லு டா.. என்ன?”

சக்தி “நம்ம..” என்று பேச ஆரம்பிப்பதற்குள் பெருமாளின் சத்தத்தில் அங்கு பெருத்த அமைதி நிலவியது.

பெருமாள் “சக்திதிதி……” என்று கத்த,

அனைவரும் அவரை தான் பார்த்து கொண்டு இருந்தனர். சத்தம் கேட்டு, தெய்வானையும் திவியும் வெளியில் வர,

ஆதி “என்ன ப்பா.. என்ன ஆச்சு..?”

பெருமாள் “என்ன ஆச்சா? எல்லாத்துக்கும் காரணம் இவன் தான் டா…  இப்போ ஆக்சிடன்ட் ஆனது கூட இவன் தான் காரணம்..” என்று ஆத்திரத்தில் கத்தினார்.

ஆதி புரியாமல் “எங்களுக்கு ஆகிஸ்டன்ட் ஆனத்துக்கு இவன் எப்டி காரணம் ஆவான்.? என்ன பேசறீங்க.? புரியுற மாதிரி சொல்லுங்க..”

பெருமாள் “இன்னைக்கு நீ இவன் ஆஃபிஸ் போனியா?”

ஆதி “ஹான்.. போனேன்..அதுக்கு என்ன இப்போ.?”

பெருமாள் “எதுக்கு போன?”

ஆதி கோகுலை பார்த்து விட்டு, சக்தியை நோக்க, பெருமாள் “உன்னை தான் கேக்குறேன் எதுக்கு போன.?”

தெய்வானை “என்னங்க என்ன ஆச்சு? சக்தி ஆபிசுக்கு தான போனான்.. அதுல இப்போ என்ன பிரச்சனை.. “

திவி “நான் தான் ஆதியை சக்தி அண்ணா ஆபிசுக்கு அனுப்பினேன்..” என்றாள் காட்டமாக.

இந்த பதிலில் கோகுல் நிமிடம் தடுமாற, பெருமாள் “எதுக்கு திவி மா” என்று அவரின் குரல் அவளிடம் மென்மையாய் ஒலித்தது.

திவி ஆதியின் அருகில் சென்று தன்னவனின் கைகளை இறுக்கமாய் பிடித்து கொண்டாள். “ஆபீஸ்ல ஒரு லட்சம் பணம் கணக்குல வராம கையாடல் நடந்து இருக்கு. அதனால நான் தான் கம்பளைன்ட் கொடுக்க போ சொன்னேன்.. இதுல யாருக்கு என்ன பிரச்சனை?” என்றாள் சற்று குரலை உயர்த்தி.

ரோஜா “திவி. பொறுமையா பேசு மா”

திவி “கொஞ்ச நேரம் அமைதியா இருங்க.. இப்போ இவர் ஆபிஸ் போனதுக்கும், எங்களுக்கு ஆக்சிடன்ட் ஆனதுக்கும் சக்தி அண்ணாக்கும் என்ன சம்பந்தம்?” என்றிட,

ஆதியும் “யது கேட்குறதும் சரி தான்.. என்னன்னு கொஞ்சம் தெளிவா சொல்லுங்க”

பெருமாள் “இவனுக்கு இங்க தான வேலை.. எதுக்கு கேரளா போனான்.. அங்க என்னத்த பண்ணான்.. இவன் பண்ண வேலைக்கு நீ அவன் ஆபீஸ்ல இருந்து வந்த உடனே உன்னை கண்காணிச்சு உங்களை ஆக்சிடன்ட் பண்ணி இருக்காங்க.. இவன் அப்டி என்ன பண்ணான்.. இவன் செய்ற வேலை எல்லாத்துக்கும் உன்கிட்ட தான் வருவானா.?” என்று கேட்க,

இறுதி வார்த்தைகளில் சக்திக்கு தன் தலையில் இடியே இறங்கிய படி இருந்தது.

ஆதி “போதும் பா.. அவன் கேஸ் விஷயமா ஆயிரம் இடத்துக்கு போவான்.. அவனுக்கு எதுனாலும் நான் தான் செய்வேன்.. எனக்காக அவன் எதையும் செய்வான்.. இது ஒன்னும் அவனால நடக்கல.. அது மட்டும் என்னால உறுதியா சொல்ல முடியும்..”

பெருமாள் “டேய்.. என் மேல நம்பிக்கை இல்லையா உனக்கு.. அவனால தான் உங்களுக்கு இந்த நிலைமை.. இதுவே தொடர்ந்தா இன்னும் என்ன என்ன நடக்குமோ.. இனிமே அவன் இங்க வர கூடாது.. நீயும் அவனுக்கு எந்த உதவியும் செய்ய கூடாது..” என்றார் திட்டவட்டமாக.

செல்வியோ “அண்ணா.. ஏன் அண்ணா.. அப்டிலாம் பேசறீங்க.? சக்தி எதுவும் செஞ்சி இருக்க மாட்டான் அண்ணா” என்றிட, ஏனோ உதவியை விட, அவன் இங்கு வர கூடாது என்றது தான் அவரின் மனதில் ஈட்டியாய் பாய்ந்து கொன்றது.

பெருமாள் “என்னது… அண்ணாவா.? யாருக்கு யார் அண்ணா.. அப்பன் பேர் தெரியாம புள்ளைய நீ வளப்ப.. உனக்கு நான் அண்ணாவா.?” என்று வார்த்தைகளை கடித்து துப்பினார்.

இந்த வார்த்தைகளில் செல்வி நொறுங்கி போக, சக்தியோ வார்த்தை வராமல் தவித்து கொண்டு இருந்தான்.

சிவஞானம் “டேய்.. என்ன பேச்சு பேசுற… ” என்று அதட்ட,

பெருமாள் “கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் வரல ப்பா.. அவனோட அப்பா பேர் என்னன்னு சொல்ல சொல்லுங்க..”

இதில் திவி கொதித்தெழ “வார்த்தையை அளந்து பேசுங்க.. யாருக்கு அப்பன் பேரு தெரியாது.. இவருக்கு இங்க எல்லா உரிமையும் இருக்கு.. உங்க தம்பி சரவணகுமாரோட மூத்த பையன் தான் சக்தி ” என்று வீடே அதிரும்படி கத்தினாள்.

கோகுல் தான் இதை அனைத்தையும் வெற்றி களிப்புடன் கண்டு கொண்டு இருக்க, இவளின் கூற்றில் அனைவரும் அதிர்ந்தனர்.

சிவஞானம் “எ…என்..என்ன திவி மா சொல்ற.?”

ரோஜா”நீ சொல்றது உண்மையா டி.?”

தெய்வானை. “நிஜமாவா திவி மா.?”

திவி தலையசைப்பை கொடுக்க, பெருமாள் “என்ன உளற திவி மா… மாமா மேல அப்டி என்ன கோவம்.. நீ என்ன புது கதை சொல்ற.?” என்று வினவ,

திவி “இந்த பாசம் பாயாசம்லாம் என்கிட்ட வேண்டாம்.. நான் சொல்றது உண்மை தான் அத்தை.. யாரும் என்கிட்ட அக்கறையா பேசணும்ன்னு அவசியம் இல்லை.. நான் கோகுல கூட்டி வந்தப்போ எப்டி எல்லாரும் என்னை நம்புனிங்களோ இப்போவும் நம்புங்க.. சக்தி தான் சரவணன் மாமாவோட முதல் பையன்.. ராணி அத்தை சாகுறதுக்கு முன்னாடி செல்வி அம்மா கிட்ட சக்தியை குடுத்துட்டாங்க..

ராணி அம்மாக்கு எப்போவும் ஒரு பழக்கம் இருக்கு.. ரொம்ப மனக்கஷ்டமா இருந்தா அவங்க வேலை பாத்த ஆசிரமத்தில இருந்து ஒரு குழந்தைய கூட்டிட்டு வந்து ஒரு நாள் முழுக்க பாத்துப்பாங்க.. அப்போ சக்தி எப்போவும் செல்வி அம்மா கூட தான் இருப்பாங்க.. அவங்களுக்கு ஆக்சிடன்ட் ஆன நேரத்துல அங்க ராணி அம்மா கூட இருந்த பையன் அன்னைக்கு தான் அனாதை ஆசிரமத்துல இருந்து கூட்டிட்டு வந்த பையன்.. இந்த விஷயம் சரவணன் மாமாக்கும் தெரியும்.. ஒரு காரணத்துக்காக தான் செல்வி அம்மா கிட்டயே சக்தி வளந்தாங்க… இந்த விஷயம் சக்தி அண்ணாக்கும் தெரியும்.. ஆதிக்கும் தெரியும்.. இன்னும் வேற ஏதாவது சந்தேகம் இருக்கா..? அப்ரோம் இன்னொரு விஷயம்.. ராணி அத்தை அனாதை கிடையாது.. அவங்களுக்கு ஒரு அண்ணா இருக்காங்க.. ராணி அத்தை அனாதை ஆசிரமத்தில வேலை பாத்தாங்களே தவிர அவங்க அனாதை இல்ல.. இனிமேலும் யாராவது அனாதைன்னு வார்த்தைய சொன்னா கூட நான் இங்கே இருக்க மாட்டேன்.. நான் இங்க இருக்குறது என் ஆதிக்காக மட்டும் தான்.. வேற எந்த காரணத்துக்காகவும் இல்ல.. ” என்று திட்டவட்டமாக கூறியவள் விருவிருவென்று தன் அறைக்குள் தஞ்சம் அடைந்தாள்.

பெருமாளும் எதுவும் கூறாது தன் அறைக்கு சென்று விட்டார்.

அனைவரும் ஒவ்வொரு உணர்வுகளுக்குள் சிக்கி தவிக்க, சக்தி செல்வி அம்மாவுடன் வெளியில் செல்ல போனான்.

சிவஞானம் “எங்க டா போற… இங்க வா டா” என்று அவனை அழைக்க,

இதற்கு தான் காத்திருந்தான் போலும் அவரை அழுகையோடு அணைத்து கொண்டான்.

சிவம் “அழாத டா.. என் பேரனுங்களுக்கு மட்டும் ஏன் இந்த சோதனை.. கடவுளே.. மூத்த வாரிசுங்க ரெண்டு பேரும் படாத அவஸ்தை பட்டுடானுங்களே..” என்று தன் பெயரன்களை நினைத்து புலம்பிட,

ரோஜா “விடுங்க அப்பா.. அதான் நமக்கு எல்லாரும் திரும்ப கிடைச்சிட்டாங்கல.. இனிமே சந்தோஷமா இருப்போம்.. “

தெய்வானை “எல்லாம் என் மருமக வந்த நேரம்.. என் குடும்பம் எல்லாம் ஒன்னு சேந்துடுச்சு…”என்று கண்ணீர் வடிக்க,

ரோஜா “விடுங்க அண்ணி… சின்ன குழந்தை மாதிரி அழுதுகிட்டு.. வாங்க சாப்பாடு எடுத்து வைக்கலாம்” என்று அழைத்தார்.

செல்வி வெளியில் நின்று கொண்டு இருக்க, தெய்வானை அவர் அருகில் சென்று  “நீங்களும் இனிமே இங்க தான் இருக்கணும்.. இவ்ளோ நாள் எங்க சொத்தை நீங்க தான் கண்ணு போல பாத்துகிட்டீங்க.. நீங்களும் இந்த வீட்ல ஒருத்தர் தான்.. ” என்று கையோடு உள்ளே அழைத்து வந்து விட்டார்.

தேவ் “அச்சோ.. நான் என்ன சொல்லுவேன்.. யார்கிட்ட சொல்லுவேன்.. ” என்று கதற,

சிவம் “என்ன டா…? உனக்கு இப்போ.?”

தேவ் “தாத்தா… என் ஒரு அண்ணா பிசினஸ் மேன்.. இன்னொரு அண்ணா போலீஸ்.. இன்னொரு அண்ணா வளர்ந்து வரும் பிசினஸ் மென்.. இதுக்கும் மேல என் பெஸ்ட் பிரண்ட்.. என் அண்ணி திவி.. இவங்க எல்லாரும் எனக்கு கிடைக்க நான் எவ்ளோ லக்கி இல்ல..”

சிவம் “உண்மை தான் டா.. நீ மட்டும் இல்ல.. எல்லாரும் லக்கி தான்..” என்றார்..

ஆனால் கோகுல் ‘சிரிங்க.. சிரிங்க.. எவ்ளோ முடியுமோ அவ்ளோ சிரிச்சிக்கோங்க.. இதுக்கு மேல இந்த வீடு சிரிப்பையே பாக்காது.. எல்லாரும் அந்த திவியை கொண்டாடுறீங்க.. ஆனா அவ வீட்டை விட்டு போற நாள் எல்லாம் வாயாடச்சு நிப்பீங்க.. திவி.. பீ ரெடி..’ என்று வன்மமான எண்ணத்தில் திரிந்தான்.

அனைவரும் மகிழ்ச்சியின் பிடியில் இருக்க, ஆதியோ தன்னவளை தான் நினைத்து கொண்டு இருந்தான். ‘இவங்க எல்லார் விடவும் நான் தான் டி ரொம்ப லக்கி.. என்னை எப்போவும் சரியா புரிஞ்சிக்குற டி.. லவ் யூ டி பொண்டாட்டி’ என்று அவன் மனதில் கொஞ்சி கொண்டு இருக்க,

அவளோ அவனை கறுவி கொண்டு இருந்தாள். “இவனுக்கு தான் எல்லாம் தெரியும்ல.. வாயில என்ன கொழுக்கட்டையா வச்சி இருக்கான்.. இதுல அந்த ஆளு வேற.. ச்சை.. இன்னும் எவ்ளோ பிரச்சனை வந்தாலும் டேய் லூசு புருஷா நீ மட்டும் ஏன் கூட இரு டா.. போதும்.. நான் ரூம்க்கு வந்து அரை மணி நேரம் ஆச்சு.. இன்னும் என்ன பன்ரான்.. பக்கி..”

அனைவருக்கும் தெய்வானை அறையை பிரித்து கொடுக்க, ராஜாவும் ரோஜாவும் அவர் இல்லம் திரும்பினர், மனது முழுக்க மகிழ்ச்சியுடன்…

பவி “அம்மா.. அக்காவும் மாமாவும் எப்டி இருக்காங்க..? பெருசா ஒன்னும் இல்லல்ல.?”

பாரதி “நானும் வரேன்னு சொன்னேன்ல மா.. இப்போ அக்கா எப்டி இருக்காங்க.?”

ரோஜா”ஒன்னும் ஆகல டா மா.. ரெண்டு பேரும் கடவுள் புண்ணியத்துல நல்ல படியா இருக்காங்க.. ஏங்க கல்யாணம் ஆகி ஆறு மாசம் ஆகுது.. இன்னும் நம்ம குலதெய்வம் கோவிலுக்கு போகல.. அதான் இப்டிலாம் நடக்குது.. நாம அண்ணி கிட்ட பேசிட்டு பிள்ளைங்களை கூட்டிட்டு போய்ட்டு பொங்கல் வச்சிட்டு வரலாங்க..”

ராஜா “நானும் அந்த யோசனைல தான் மா இருக்கேன்.. நல்ல நாள் பாத்து எல்லாரும் போய்ட்டு வந்துடலாம்” என்றார்.

பாரதி திவிக்கு அழைக்க “ஹலோ அக்கா.. இப்போ எப்டி அக்கா இருக்கு.. மாமா வேற சக்தி மாமாவை பேசிட்டாராமா.? எதுவும் பிரச்சனை இல்லையே.”

திவி “அதுலாம் ஒன்னும் இல்ல டி.. நான் இந்த விஷயத்தை முன்னாடியே சொல்லி இருக்கணும்.. அதுனால தான் இவ்ளோ பேச்சும்.. இன்னும் அவருக்கு நாக்குல சனி நர்த்தனமாடுறாரு போல டி.. அன்னைக்கு அப்டி பேசுனதுனால தான் யது… என்றவளுக்கு குரல் உள்ளே செல்ல, தன்னை நிலைப்படுத்தியவள், அடுத்து என்ன பிரச்சனை வந்தாலும் பாத்துக்கலாம்.. நீங்க எல்லாரும் ஜாக்கிரதையா இருங்க” என்று விட்டு போனை வைத்தாள்.

அனைவரும் அவர் அவர் அறைக்கு சென்றிட, தெய்வானை இன்னும் தன் அறைக்கு செல்லாத ஆதியை நோக்கி வந்தார்.

தெய்வானை அவனின் சிகையை வருடி “தூங்கலயா ஆதி?”

ஆதி “தூக்கம் வரல மா.. அம்மா உங்க மடில படுத்துக்கவா” என்றிட, அவரும் சோபாவில் அமர்ந்து அவனை மடியில் தாங்கினார்.

ஆதி “ரொம்ப வருசமா இதுக்கு தான் மா தவியா தவிச்சேன்.. யது என்னைக்கு என் வாழ்க்கைல வந்தாலோ அன்னைல இருந்து எனக்கு எல்லாமே அவ தான் மா.. “

தெய்வானை “என்னைக்கும் அவள விட்ராத டா.. நம்ம குடும்பத்தோட பலமே திவி தான்..”

ஆதி “கண்டிப்பா மா.. அம்மா எனக்கு ஒரு சந்தேகம்..”

தெய்வானை “சொல்லு பா..”

ஆதி “ஏன் யது.. அப்பா கூட சரியா பேசுறது இல்ல.. சரியா என்ன அப்பா கூட அவ பேசி நான் பாத்ததே இல்ல.. ரெண்டு பேருக்கும் என்ன பிரச்சனை.?”

தெய்வானை மெலிதாய் சிரித்து “இதுக்கு சரியான பதில் திவிக்கிட்ட தான் இருக்கு… எனக்கு தெரிஞ்சது சொல்றேன்.. நீ வீட்டை விட்டு போன உடனே அப்பா யதுவர்ஷினிய ரொம்ப பேசிட்டாரு டா.. இதுல திவியும் யதுவும் ரொம்ப பாதிக்கப்பட்டாங்க.. அதுவும் உன் அப்பா யதுவ அடிக்கடி அனாதைன்னு சொல்லி ரொம்ப காயப்படுத்திட்டாரு.. அதுனால தான் திவி யதுவ சென்னை அனுப்பினா.. ஆனா யது திரும்பி வரல.. கடைசியா யதுக்கு உன் அப்பா தான் கால் பண்ணி இருக்காருன்னு அவ பிரண்ட் மீனா திவிகிட்ட சொல்லி இருக்கா.. கண்டிப்பா உங்க அப்பா ஏதாவது சொல்லி இருக்கணும்னு திவி கேஸ் போடவே போய்ட்டா.. ரோஜாவும் தாத்தாவும் ரொம்ப அட்வைஸ் பண்ணத்துனால அவ பேசுறது இல்லை.. உங்க அப்பா கிட்ட..” என்றார்.

ஆதி அமைதியாக இருக்க, தெய்வானை “திவியும் யதுவும் எப்டி இருப்பாங்க தெரியுமா ஆதி.. ரொம்ப க்ளோஸ் ரெண்டு பேரும்.. “என்றார் பழைய நினைவுகளினூடே..

ஆதி “அம்மா.. அம்மா.. இப்போ ஒரு வேளை யதுவர்சினியும் இருந்து இருந்தா என்னை யாருக்கு கல்யாணம் செஞ்சி வச்சி இருப்பீங்க.?”

தெய்வானை “இதென்ன கேள்வி.. உனக்கு யாரை பிடிக்குமோ அவங்களுக்கு தான்..”

ஆதி “அம்மா உங்களுக்கு ஒன்னு தெரியுமா? யதுவும் என்னை லவ் பண்ணாலாம்..”

தெய்வானை “தெரியும் டா.. ” என்றார் சிரித்து கொண்டே..

ஆதி “அம்மா.. அப்போ என் நிலைமை எப்டி இருந்து இருக்கும்.. பாவம்ல ரெண்டு பேரும்.. ரெண்டு பேரும் என்னை லவ் பண்ணி இருக்காங்க. ஒருத்தர கல்யாணம் செஞ்சிக்கிட்டா, இன்னொருத்தர் பீல் பண்ணுவாங்கல..”

தெய்வானை “கண்டிப்பா இல்ல.. நீ யாரை கல்யாணம் செஞ்சாலும் கண்டிப்பா ஒருத்தர் விட்டு கொடுப்பாங்க.. என் மருமகங்க அப்டி டா.. ” என்றார் பெருமிதத்துடன்.

ஆதி “நான் யாரையும் விட்டு கொடுக்க மாட்டேன் அம்மா..நான் ரெண்டு பேரையும் கல்யாணம் பண்ணிப்பேன்.. “

அப்போது அங்கு தேவ் வர, “அண்ணா இன்னைக்கு உங்களுக்கு சிவராத்திரி தான்..”

ஆதி “ஏன் டா?”

தேவ் “அங்க பாருங்க.. உங்க மனைவி அங்க ருத்ர காளியாய் நின்னுட்டு இருக்காங்க..”

ஆதி பதறியடித்து கொண்டு எழ, தெய்வானை நமட்டு சிரிப்புடன் “குட் நைட் … தேவ் நீ வா” என்று இருவரும் நழுவி விட்டனர்..

ஆதி ‘அயோ.. இவளை மறந்தே போய்ட்டேனே.. போச்சு..’ என்று மனதில் நினைத்து கொண்டு.. “யதுமா.. என் செல்ல பொண்டாட்டி… இன்னும் தூங்கலயா.?” என்று அவள் அருகில் வர,

திவியோ அவனின் காதை திருகி “சார்க்கு ஒன்ன வச்சிகிட்டே ஒழுங்கா சமாளிக்க தெரியல.. இதுல ரெண்டு கேட்குதோ..?”

ஆதி “ஏய்.. ஆஆஆ.. வலிக்குது டி..  எதுவா இருந்தாலும் ரூம்ல போய் பேசிக்கலாம் டி.. மாமா மானத்தை ஹால்ல வாங்கிடாத.. என் செல்லம்ல…” என்றிட,

அவனின் காதை திருகிக்கொண்டே, அறைக்குள் நுழைய, உள்ளே நுழைந்தவுடன் ஆதி அவளை பின்னிருந்து அணைத்து கொண்டான்.

அவள் திமிர, “டேய் விடு டா.. அதான் சார்க்கு ரெண்டு கேட்குதுல.. நான் எதுக்கு..”

ஆதி “என் கோவக்கார பொண்டாட்டி.. இப்போ கூட மாமனுக்கு பொண்ணுங்க வெயிட்டிங் லிஸ்ட்ல இருக்காங்க டி.. உனக்கே தெரியும்ல.. சந்தனா சுப்ரியா.. ஹான்..” என்று மேலும் அவளை சீண்ட

திவி “எதே.. ஆசை…? டேய்.. உன்னலாம்..”என்று அவள் அவனின் கையை கடிக்க,

அவன் “ஆஆ… விஷம்… விஷம்..” என்று அவளை பிடிக்க போனான்..

இருவரும் அவர் அறைக்குள் ஓடியாட,
கட்டில் கால் தடுக்கி திவி மெத்தையில் விழுந்தாள்.  அவனும் பிடிப்பு இல்லாமல் அவள் மேல் விழுக,

இருவரின் விழிகளும் மோதிக்கொண்டன.. ஆதி அவளின் நெற்றியில் தன் இதழை பதித்து “நான் இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கேன் டி.. எல்லாத்துக்கும் காரணம் நீ தான்.. நம்ம குடும்பம் இப்போ ஒன்னு சேந்துடுச்சுல..”

திவியும் அவன் மடியில் படுத்து கொண்டு “நீ என் கூட இருக்குறது தான் என் பலமே.. அப்ரோம், உன்கிட்ட ஒன்னு சொல்லணும்.. கோகுல் மேல ஒரு கண்ணு இருக்கட்டும்.. சரியா..”

ஆதி புன்னகைத்து கொண்டே “நான் பாத்துக்குறேன்.. இப்போ நாம சீரியஸ் மூட்ல இருந்து கொஞ்சம் ரொமான்ஸ் மூட்க்கு போலாமா..” என்று அவளின் இடை பற்ற,

ஆதியின் சீண்டலுடன் திவிக்கும், யதுவின் சிவப்பில் தியாக்கும் அன்றைய பொழுது இரவின் மடியில் சென்றது…..

கனவு தொடரும்..🌺🌺🌺

கமெண்ட்ஸ் ரொம்ப முக்கியம் பிரண்ட்ஸ்.. அடுத்து அடுத்து எல்லா யூடி யும் கொஞ்சம் ட்விஸ்ட்ஓட தான் வரும்.. சீக்கிரம் ரிவில் பண்ணிடலாம்..

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
8
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்