Loading

மிழிகளின் மோ(கா)தல்

வணக்கம்.

மிழிகளின் மோ(கா)தல் – இரண்டு பெரும் ராஜ்ஜியங்களில் ஏற்படும் மர்ம நிகழ்வுகளும், அதன் பின்னணியில் இருக்கும் ஒரு ராஜ்ஜியத்தின் மீளா துயரமும், ஒரு பெண்ணின் கண்ணீரும், அவள் இட்ட சாபத்தால் ஏற்பட்ட மர்ம முடிச்சினையும், அதனை அவிழ்க்க நாயகர்களும் நாயகிகளும் எடுக்கும் முயற்சிகளைப் பற்றியே இந்த கதைக்களம். வரலாற்றுப் புனைவு கதை.

பொறுப்புத் துறப்பு

இந்த கதை முற்றிலும் கற்பனை வாய்ந்ததே. இதில் வரும் சம்பவங்கள், பெயர்கள், கதாபாத்திரங்கள், அனைத்தும் கற்பனையே. கதைக்களத்திற்கு சற்று ருசி சேர்க்க சிற்சில வரலாற்று நிகழ்வுகள் இதனோடு இணைக்கப்பட்டு உள்ளது. யார் மனதையும் புண்படுத்தவோ, குறிப்பதோ அல்ல. மீறியும் உங்கள் மனதில் சந்தேகம் எழுமானால் அதற்கு நான் பொறுப்பு அல்ல.
©தமிழினியா
 

மிழிகளின் மோ(கா)தல்

அத்தியாயம் -1

கி.பி. பத்தாம் நூற்றாண்டு.

ஓங்கி வளர்ந்த அடர்ந்த மரங்கள் அனைத்தும் காற்றின் ஜதிக்கு ஏற்ப தாளம் இட்டுக் கொண்டு இருக்கும் அந்த சப்தத்தில் அந்த அமைதியைக் கிழித்துக் கொண்டு எம்பெருமானின் துதிப் பாடும் இசை செவிதனில் எட்டுகிறது.

அந்த மாபெரும் காட்டினில் ஈசனைப் பாடிப் புகழும் அந்த இடம் எங்கே? பாடுவது தான் யாரோ? சற்று நாமும் அந்த வனத்தில் நம் பயணத்தைத் தொடரலாம் வாருங்கள்.

தாங்கள் தத்தமது அடிகளை சரியாக எடுத்து வைத்தால் நலம். ஆங்காங்கே பூச்சிகளும், சிறு சிறு விலங்குகளும் குறுக்கே புகுந்து செல்லும். தப்பித் தவறி மிதித்துவிட்டால் ஆகும் சேதாரத்திற்கு நான் பொறுப்பல்ல.

“நமச்சிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க!

இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!

கோகழி ஆண்ட குரு மனிதன் தாள் வாழ்க!

ஆகமமாகி நின்றண்ணிப்பான் தாள் வாழ்க!

ஏகன் அநேகன் இறைவனடி வாழ்க!”

உலகுடையான் வீற்றிருந்த அந்த குகை முழுதும் ஈசனின் மந்திர உச்சாடனங்கள் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. வனம் சூழ்ந்த இவ்விடத்தில், எழில் பொங்கும் பொதியை மலையின் உருவாகும் பரணி ஊற்றோரத்தில் வீற்றிருக்கிறது இக்குகை. ஊற்றில் இருந்து வரும் நீரானது முதலில் எம்பெருமானின் பாத கமலங்களை தொட்டு புண்ணியம் பெற்றவளாய் அப்படியே காடு, மேடு அனைத்தையும் கடந்து நீண்ட நெடிய நீர்வீழ்ச்சியாக மாற்றம் கொண்டு அந்த வனாந்திரத்தையே செழிக்க வைத்துக் கொண்டு இருக்கிறாள் பொதியிலின் மகள். காலம் பல கடந்து பல்வேறு இடர்களுக்கு மத்தியில் வனத்தாயால் பொத்திப் பாதுகாக்கப்பட்டிருக்கின்ற இவ்விடம், இன்றும் பல்வேறு வேட்டை மிருகங்களின் வசிப்பிடம் பொதியில். தற்போது பொதிகை மலை என்று அழைக்கப்படும் இம்மலை அன்று நீண்ட பெரும் ராஜ்ஜியத்தின் ஓர் அங்கமாக திகழ்ந்தது என்று சொன்னால் அது மிகையாகாது.

 “மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம்

தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனையுள்

ஊற்றான உண்ணார் அமுதே உடையானே

வேற்று விகார விடக்குடம்பின் உட்கிடப்ப

ஆற்றேன்எம் ஐயா அரனே ஓ என்றென்னு

போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்

மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே

கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே

நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே

தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே

அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று

சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்

சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்

செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக் கீழ்ப்

பல்லோரும் ஏத்தப் பணிந்து

திருச்சிற்றம்பலம்

தன் கைகளால் கொய்து வந்த மகிழம் பூ, வில்வ இலை, தும்பை பூ, ஊமத்தம் பூ, எருக்கம் பூ, நாகலிங்கபூ, காந்தள் பூ ஆகியவற்றை தூவி துதிபாடி முடித்தான் மிழலை நாட்டின் அடுத்த படைத்தளபதியாக தலைமையேற்கவிருக்கும் மாவீரன், பகைவருக்கு எல்லாம் எமனாக எதிர்காலத்தில் விளங்குபவன் சத்ருஞ்ஜய திரவியன்.

அடடா, நம் நாயகனை காண்கையில் பாயும் புலி கூட பசுப் போன்று அமைதியாகி விடும். தற்போது அவன் வதனத்தில் அத்துணை பக்திக் குடிக் கொண்டு இருக்கிறது. காளைப் போல் சீறுபவனாக இருக்கும் இவன் தற்போது தான் பால்ய வயதைக் கடந்து உள்ளான். தனது குருகுலப் படிப்பையும் முடிக்கவுள்ளான். இத்தகைய வீரனுக்கு ஏற்ற வீராங்கனை எங்கிருக்கிறாளோ. அதனை விடுங்கள், தற்போது தூரத்தில் ஒரு வெண்புரவி வருவது போல் தெரிகிறதே. யாராய் இருக்கும்?

கண்கள் மூடி நமசிவாய நாமத்தில் திளைத்திருந்த திரவியன் புரவியின் குளம்படிகளின் சப்தம் கேட்க, குகைக்கு வெளியே வந்தான்.

தன் அயத்தில் இருந்து இறங்கிய வருங்கால மிழலை நாட்டின் மன்னன் இளவல் இளந்திருமாறன் கடும் சினத்தோடு வந்து திரவியனை ஆரத்தழுவிக் கொண்டான். பின்னே தன் சிநேகிதனைக் காணமால் இத்தனை நேரம் தேடிக் கொண்டல்லவா இருந்தான்.

மாறன் “நான் நீராடிவிட்டு வருவதற்குள் எங்கேயடா சென்றாய்?”

திரவியன் “இருமணித்தியாளங்கள் நீ நீராடுகிறாய். அதுவரை காத்திராத என் கால்கள் என்னப்பன் ஈசனை காண ஓடோடி வந்துவிட்டது”

“என்னைப் பரிகாசம் செய்வதே உன் பிழைப்பாயிற்றா திரவியா?” என்று சிறுபிள்ளைப் போல் முகத்தைத் திருப்பிக் கொண்டான் இளவல் இளந்திருமாறன்.

“வருங்கால மன்னனை நான் பரிகாசம் செய்வதா? என்ன ஒரு அபத்தம்? நீ மூச்சைப் பிடித்து நீருக்குள் இருந்தாய். உன் வித்தை எனக்கு வராதப்பா. ஆகவே, இங்கு வந்துவிட்டேன்.”

“சரி, அதிருக்கட்டும் திரவியா, எங்கே உன் அரிமா? இரண்டு தினங்களாக அவனை நான் காணவில்லையே?”

“ஒரு காரணகாரியமாக நின் வயமாவுடன் அரிமாவையும் தண்டராணியத்திற்கு அனுப்பிருக்கிறேன்”

“தண்டராணியத்திற்கா? எதற்கு?”

“சற்றுப் பொறுங்கள் இளவலே. இன்று சூரியன் மறைவதற்குள் இருவரும் வந்து விடுவார்கள். வந்த பின் நானே காரணத்தைக் கூறுகிறேன்” என்றான் திரவியன். இருவரும் தாங்கள் கொண்டு வந்த புரவியில் காற்றைக் கிழித்துக் கொண்டு குருகுலத்திற்கு சென்றார்கள்.

மிழலை நாடு

எழில் கொஞ்சும் வளம் பொருந்திய நாடு தான் மிழலை நாடு. மிழலை நாட்டின் சிறப்பம்சமே பஞ்சமில்லாத இயற்கை எழிலும், சிறந்து விளங்கும் சிற்பக் கலையும் தான்.

தென்னாட்டின் புகழ் விரிந்து இருப்பதற்கு இந்நாடும் ஓர் முக்கிய காரணம். இந்நாடு கிட்டத்தட்ட தமிழகத்தின் தென்கோடி வரை விரிந்து பரவி கிடக்கிறது. இதனை சுற்றியுள்ள பல ராஜ்ஜியங்கள் யாவும் இடைக்காழி நாட்டின் கீழ் வருகிறது. ஆனால் மிழலை என்றும் தனி நாடே. மிழலை நாட்டின் ஓர் அங்கமாக திகழும் பொதியில் கூட அன்றொரு காலத்தில் மிழலை நாட்டு மன்னரால் தனி ஆட்சி செய்ய அனுமதி வழங்கப்பட்டது. அதனைப் பற்றி பின்னொரு பதிவில் தெளிவாக காணலாம்.

தற்போது இந்த மிழலை நாட்டினை திறம்பட ஆட்சி செய்து வருகிறார் உக்கிர நன்மாறன். அவர்தம் காதல் மனைவி மிகலவள் நுவலி. மிழலை நாட்டின் அண்டை நாடு மற்றும் நட்பு நாடே இடைக்காழி நாடு. ஒரு வகையில் உறவுக்கார நாடும் கூட. அரசி மிகலவள் நுவலியின் சகோதரர் தேவதத்தன் முற்றிய செழியன் தன் தர்மபத்தினி நனிமுகை மெய்யோளுடன் ஆட்சி செய்யும் நாடு தான் இந்த இடைக்காழி நாடு.

காலந்தொட்டு மிழலைநாடும் இடைக்காழி நாடும் பெண் கொடுத்து, பெண் எடுக்கும் வழக்கத்தை உடையவர்கள். உக்கிர நன்மாறனின் தங்கை தான் நனிமுகை மெய்யோள். தேவதத்தன் முற்றிய செழியனின் தங்காள் தான் மிகலவள் நுவலி. உக்கிர நன்மாறனுக்கும் மிகலவள் நுவலிக்கும் பிறந்த செல்வமே இளவல் இளந்திருமாறன். இளவலிற்கு அடுத்து பத்து வருடங்கள் கழித்து பிறந்த தவப்புதல்வி தான் மிளிர் விண்ணகை.

தேவதத்தன் முற்றிய செழியனிற்கு மூன்று செல்வங்கள். அவர்களின் மூத்த மகன், குலபதி செழியன், அவன் பின் மீயாழ் சினமிகா, அடுத்து, யதுநந்த செழியன். குலபதி செழியனிற்கு இரு திங்கள் முன்னம் தான் பூழி நாட்டு இளவரசி மேகவிண்கா அவிரோளுடன் மணம் முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மீயாழ் சினமிகா தற்போது தான் பதின்மவயதை எட்டியுள்ளாள். யதுநந்தனோ பாலகன்.

மிளிர் விண்ணகை பிறக்கும் வரை நுவலி பெரும் கவலையில்தான் இருந்தார். இளவல் பிறந்த பின் அவருக்கு பிள்ளைப்பாக்கியமே வராது என்று கட்டியம் கூறப்பட, தன் தோழியின் தொடர் முயற்சியால்தான் இவர் கருத்தரித்து மிளிரை ஈன்றெடுத்தார். வழக்கப்படி, மீயாழ் சினமிகாவை இளந்திருமாறனிற்கு மணம் முடிக்கையில், தன் பெண் மகவிற்குத்தானே யதுநந்தன். இல்லையேல், தன்பந்தம் இதோடு முற்றுப்பெற்று விடும் என்கிற ஐயம்தான் நுவலியை அப்பொழுது சூழ்ந்து கொண்டது.

மிழலை நாட்டின் ஆஸ்தான சேனாதிபதி சிவநேயன் நல்லிறையன். அவர்தம் மனைவி சித்திரஎழிலி. சிவநேயன் மிகுந்த சிவபக்தர். அதே அளவு வீராதி வீரர். அவருக்கு இணையான வீரம் உடையவர்தான் சித்திரஎழிலி. சிற்பக்கலையில் சிறந்து விளங்கியவர். இவர்களின் தவப்புதல்வன்தான் நம் நாயகன் ஷத்ருஞ்ஜய திரவியன். சித்திரெழிலி விதியின் வசத்தால் தன் இரண்டாம் மகவை இழந்து, திரவியனின் தசம வயதில் உயிர் நீத்துவிட்டார். இதில் குறிப்பிட வேண்டிய விசயம் என்னவென்றால், இளவலுக்கும் திரவியனிற்கும் ஒரே வயது தான்.

சித்திர எழிலியும், மகாராணி மிகலவள் நுவலியும் இணைபிரியா உயிர்த்தோழிகளாக விளங்கினர். யாரும் செய்ய துணியாத செயலையும் நுவலிக்காக செய்தார் சித்திர எழிலி. அத்தகைய போற்றத்தக்க நட்பு அவர்களுடையது. செங்கோல் ஆட்சி சிறப்புற விளங்கினும், இதன் பின்னணி பலரின் உயிர் மூச்சால்தான் இன்று உயிர்ப்பெற்று வருகிறது. பல சூழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற வேளையில் அவையெதுவும் மன்னர் செவியினையும் சிந்தனையும் சென்றடையாமல் இருப்பது தான் விதியின் செயலோ?

பொதியில் மலையில் தன் குருகுல வாசத்தை முடிக்கும் தருவாயில் இருக்கின்றனர் இளவலும், திரவியனும்.

மலைகள் சூழ்ந்து இயற்கை வளத்திலும் வீரத்திலும் மர்மத்திலும் இன்றும் புதிராகவே விளங்கும் பொதியலைப் பற்றி சிறு குறிப்பினை நாம் அறிந்துக் கொள்ள வேண்டியது உத்தமம்.

பொதியில் என்னும் மலைநாடும்  (தற்போது இருக்கும் பொதிகை மலை) மிழலையின் ஆட்சியின் கீழ்தான் செயல்பட்டு வந்தது. அம்மக்களின் வீரத்தையும் அவர்களின் சிறந்த தியாகத்தையும் போற்றும் வகையில் பல வருடங்களுக்கு முன் மிழலை நாட்டின் மன்னர் இரண்டாம் நன்மாற தேவாதி தேவச் சோழர் தற்போதைய உக்கிர நன்மாறனின் ஓட்டன், பொதியிலின் அன்றைய தலைவர் மலைவேந்தன் இடும்பசேகரனாருக்கு இனி பொதியில் தனி பிராந்தியமாக செயல்படும் என்ற பட்டயத்தை வழங்கினார்.

இந்த இடும்பசேகரனார் தற்போதுள்ள மலைவேந்தன் மெய்கண்டான் அவர்களின் ஓட்டன் என்பது குறிப்பிடத்தக்கது.  இப்பொதியில் தன் நம் கதையின் பல முக்கியத் திருப்பங்கள் ஏற்படப்போகிறது.

இந்த பொதியில் மலைநாட்டின் தற்போதைய வேந்தன் மலைவேந்தன் மெய்கண்டான், அவர்தம் மனையாள் மாரிகா நகுநா. குழந்தைப் பேறு தாமதமானக் காரணத்தினால், ராஜ்ஜியத்தின் தெற்கே வீற்றிருக்கும் இந்துமா சமுத்திரத்தேவியினை வேண்டி, அவளின் அருளால் முத்துப் போன்ற பொக்கிஷமாய் நகுநாவின் உதரத்தில் பூத்தாள் முத்தழகி.

பொதியில் மலை, பல்வேறு வளங்களையும், அரிய உயிரினங்களையும், எழில் கொஞ்சும் அழகையும் கொண்டிலங்குகிறது.

வாருங்கள்! நாம் கதையின் போக்கில் செல்வோம்.

பொழுது மெல்லப் புலர்ந்தது, வெய்யோன் தன் செங்கதிர்களை விரிக்கும் முன்பு, வனத்திலிருந்த குருகுலத்திற்கு நுழைந்தனர் இளவலும் திரவியனும். அவர்களை காணாமல் அந்துவன் எழினியாதன் குரு ருத்ரமகாபுருஷரிடம் மாட்டிக்கொள்ள இருந்த சமயம், குருகுலத்தின் ஆலயத்தில் ‘ஓம் நமசிவாய’ நாமம் ஒலித்துக் கொண்டிருந்தது. வேறுயார், நம் திரவியன் தான், கூட்டு இளவலும். அவர்களைக் கண்டதும்தான் அந்துவன் நிம்மதி பெருமூச்சு விடுகிறான்.

அந்துவன் எழினியாதன் பூழி நாட்டின் இளவரசன். பல இன்னல்களுக்கு மத்தியில் புரட்சி செய்யக் காத்திருக்கும் அசகாய சூரன். இழந்த ராஜ்ஜியத்தை மீட்டெடுக்க கழுகு போல் கருத்தாக இருப்பவன். இந்த பூழி நாடு தற்போது இடைக்காழி நாட்டின் கீழ் தான் இயங்கி வருகிறது.

ருத்ரமகாபுருஷர் மிகுந்த சிவபக்தி கொண்டவர். அட்டமாசித்திகளான அணிமா, மகிமா, லகிமா, கரிமா, பிராத்தி, பிரகாமியம், ஈசத்துவம் ஆகிய அனைத்திலும் வல்லவர். திருமூலரின் திருமந்திரம் அனைத்தையும் தாரகமந்திரமாய் தன்னகத்தே கொண்டவர். முக்காலமும் அறிந்தவர். குரு சிவமந்திரத்தில் திளைக்க சென்றுவிட்டார்.

அந்துவன் “இருவரும் எங்கேயடா சென்றீர்கள்? சிறிது நேரம் நீங்கள் வர தாமதம் ஏற்பட்டிருந்தால் குருவிடம் என் நிலையை சற்று நினைத்துப் பாருங்கள். அந்தோ! அவர் அறிந்து, யான் அறியாத மூலவர் மந்திரங்களை கேட்டே என் மதியை சிதறடித்துவிட்டிருப்பார்.”

திரவியன் “பதின்ம வயதை எட்டிய பின்பும், கற்ற பாடங்களில் நிலையில்லாமல் இருக்கின்றாயேடா? இதில் நீ மிழலை நாட்டின் வருங்கால மதி மந்திரியாய் திகழ்வாயென தன்பட்டம் வேறு?”

இளவல் “மதி மந்திரியல்லடா நீ, மதிகெட்ட மந்தி மந்திரி”

அந்துவன் “திரவியா! அதை மற்றொரு மந்தி கூற வேண்டாம் என்று கூறடா!”

இளவல் “யாரையடா மந்தி என்று கூறுகிறாய்?” என்று தன் வாளை உறுவினான்.

திரவியன் “ஆரம்பித்துவிட்டீர்களா? நிறுத்துங்களடா! சற்றும் பொறுப்பில்லாமல் இன்னும் சிறுபிள்ளைகளைப் போலவே சண்டையிட்டுக் கொள்கிறீர்கள். இதில் இவன் வருங்கால அரசனாம், அவன் மந்திரியாம். ஐயனே, எம்பெருமானே! இவர்களிடமிருந்து என்னையும் மக்களையும் காப்பாற்றுங்கள்.” என்று பொய்யாய் சலித்துக் கொண்டான். இதில் இருவரும் கொலைவெறியுடன் திரவியனை தாக்க முனைந்தனர்.

சற்று நேரம் கழித்து, மூவரும் மூச்சு வாங்கியபடியே அமர்ந்தனர். ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைக்க, திரவியன் “அந்துவா! இன்று வாட்பயிற்சி முடிந்த பிறகு நானும் மாறனும் வனத்திற்குள் செல்லவிருக்கின்றோம். நீ தான்…”

அந்துவன் “நான்தான் குருவிடம் எதையாவது கூறி சமாளிக்க வேண்டும். அதானே திரவியா?”

இளவல் “அதேதான் மந்தியே! இல்லை, இல்லை மந்திரியே!”

திரவியன் “போதும் உங்கள் சிறுபிள்ளைத்தனம்.” இவர்கள் பேசிக்கொண்டிருக்கையில் யதுநந்தன் குரு அழைப்பதாக அனைவரையும் ஒன்றுதிரட்டிக் கொண்டிருந்தான்.

குரு ருத்ரமகாபுருஷர் என்றும் சூடியிருக்கும் புன்னகையோடும், கண்களில் அப்படி ஒரு பிரகாசத்தோடும் தன் காவி உடையில் கைகளில் உருத்திராட்சத்தை உருட்டிக்கொண்டே, சிவபோற்றி எனும் நாமம் உச்சரித்தப்படியே வருகிறார். ஆஹா! என்ன ஒரு மிளிர்வு. தேஜஸ் மாறா வதனம். தன் முன் நிற்பவரின் முக்காலத்தையும் அறியும் ஆற்றல் அவரிடம் உண்டு. எல்லாம் அவன் சித்தம்.

அனைவரும் குருவிற்கு தத்தமது பணிவான வணக்கங்களை தெரிவிக்க, ஆலத்தின் கீழ் அமர்ந்தார் இன்றைய கற்றலைத் தொடங்க.

குரு “இதுவரை யான் எம் ஆசான் கற்பித்த திருமூலரின் உபதேசங்களை தங்களுக்கும் கற்பித்துள்ளேன். அத்தோடு ஒரு வீரனிற்கு என்னென்ன பயிற்சி வேண்டுமோ அவற்றையும் கற்பித்து விட்டேன். இப்போது தன் குருகுலவாசம் முடிந்து தத்தமது ராஜ்ஜியத்திற்கு செல்லுபவர்களுக்கு ஒரு சிறு தேர்வு வைக்க என் மனம் அவாக் கொள்கிறது.” அனைத்து மாணவர்களை விடவும் திரவியன் மீது அதிகப்படியான கவனத்தை குரு செலுத்தியுள்ளார் என்பது நம்மைத் தவிர யாரும் அறியாத விடயம்.

இளவல் “தங்கள் சித்தம் எம் பாக்கியம் குருவே” என்று பணிந்தான்.

குரு மாறா மகிழ்ச்சியுடன் இளவல், திரவியன் மற்றும் அந்துவனை அழைத்து அவர்களுக்கு முதலில் வாட்போரில் தேர்வு வைத்தார். அவர் எதிர்ப்பார்த்தது போல், மூவரும் சிறந்து விளங்கினர். ஒருவர்க்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்பதை அவர்கள் கொண்டுள்ள வாளின் சப்தங்களே சான்று.

பேருவகை கொண்ட குரு, “அடுத்து நான் கேட்கும் வினாக்களுக்கு நீங்கள் அறிந்த மந்திரங்கள் மூலம் மட்டுமே பதிலளிக்க வேண்டும்.” என்று கட்டளையிட்டார்.

மூவரும் பணிவுடன் பதிலளிக்க தயாராகினர்.

குரு “ஒருவன் தன் வாழ்நாளில் தவிர்க்கப்படுவனவும், செய்யவேண்டுவதும்?”

மூவரும் ஒரே குரலில்,

“அவ்வியம் பேசி அறங்கெட நில்லன்மின்

வெவ்வியன் ஆகிப் பிறர்பொருள் வவ்வன்மின்

செவ்வியன் ஆகிச் சிறந்துண்ணும் போதொரு

தவ்விக்கொ டுண்மின் தலைப்பட்ட போதே”

என்று கூறி முடித்துவிட்டு ஒருவரை ஒருவர்ப் பார்த்து புன்னகைத்துக் கொண்டனர். குருவின் முகத்திலும் பெருமிதம் பொங்கி வழிந்தது.

குரு “அரசன் பெறவேண்டிய ஆறில் ஒன்று என்ன?”

மூவரும் கூற வருகையில், குரு “மாறா, நீ கூறு பொருளுடன்”

மாறன் “திறம்தரு முத்தியும் செல்வமும் வேண்டின்

மறந்தும் அறநெறி யேஆற்றல் வேண்டும்

சிறந்தநீர் ஞாலம் செய்தொழில் யாவையும்

அறைந்திடில் வேந்தனுக் காறில் ஒன்றாமே.

குருவே! அரசன் என்பான், பதமுத்தி மற்றும் பரமுத்தி ஆகிய இரண்டு முத்திகளையும் பெற்றிருக்க வேண்டும். சுந்தரர் தம்மை மறந்த நிலையிலும், நாவினால் நமசிவாய என்று கூறுவது போல், அரசனும் மறந்த நிலையிலும் அறநெறியைத்தான் கடைபிடித்தல் வேண்டும். சிறந்த நீரால் சூழப்பட்ட உலகில் செய்யும் தொழில்கள் அனைத்தையும் சொல்லுமிடத்து, அத்தொழிலால் பெறும் ஊதியத்தில் ஆறில் ஒரு பங்கே பெறும் உரிமையுடையவன் அரசன் ஆவான் குருவே!”

குரு “பதமுத்தி, பரமுத்தி என்றால்? எளியோனும் விளங்கும்படி கூறு”

மாறன் “சைவசித்தாந்தம் பதமுத்தி, பரமுத்தி என இருவகை முத்திகளைக் குறித்துப் பேசும். பதமுத்தி என்பது சுவர்க்கம் முதலிய மேலுலகங்களை அடைந்து அங்குள்ள சுகபோகங்களை அனுபவிக்கும் முத்தி. அரி, அயன் முதலியவர்களின் பாதம் பணிவதும் பதமுத்தியே. இம்முத்தி நல்வினையாகிய புண்ணியத்தின் பயனாக அடைவது. போகத்தை அனுபவித்து முடித்தவுடன் நாம் பெற்ற புண்ணியமும் முடிவுக்கு வந்துவிடும். பின், அப்பதமுத்தியை அனுபவித்த உயிர் மீண்டும் இவ்வுலகில் தோன்றி, சிவனே அனைத்துமானவன், அவனின்றி ஏதும் இல்லை என்ற சிவபோக நுகர்வை உணர்ந்து அடையும் தருணம் அவன் பரமுத்தியை அடைவான். பரமுத்தியே மேலான முத்தி. இம்முத்தி அடைந்தோர் மீண்டும் பிறவி எய்துவது இல்லை. ‘பதமுத்தி, பசித்து உண்டு மீண்டும் பசிப்பானை ஒக்கும்’ எனச் சாத்திரமும் பேசுகிறது குருவே.” என்று விளக்கினான்.

குரு “புலகாங்கிதம் கொண்டேன் மகனே! அடுத்து, திரவியா! மாதரின் அழகைப் பற்றி உன் கருத்து?”

திரவியன் “இலைநல ஆயினும் எட்டிப் பழுத்தால்

குலைநல ஆம்கனி கொண்டுணல் ஆகா

முலைநலம் கொண்டு முறுவல்செய் வார்மேல்

விலகுறு நெஞ்சினை வெய்து கொள் வீரே”

 

“இதன் பொருள், எட்டி மரத்தின் இலை பார்வைக்கு நல்லதாக இருந்தாலும், அம்மரத்தின் பழமும் பார்ப்பதற்கு நல்லதாகக் காணப்பட்டாலும், தோற்றத்தால் இனிதாகக் காணப்படும் அப்பழத்தை உண்ணுதல் கூடாது. அதேபோலத்தான், முலையாகிய நலத்தைக் காட்டிப் புன்னகை செய்பவர்மீது, மக்கள் நாட்டம் கொண்டு மனதைக் கொடுமைக்குத் தம்மை ஆளாக்கிக் கொள்ளாதிருக்க வேண்டும். குருவே!”

திரவியன் கூறிய திருமந்திரப் பாடலைக் கேட்டு குரு ஒரு நொடி திடுக்கிட்டுத் தான் போனார். பின், இறைவனை எண்ணி பெருமூச்சை விட்டார். இவனின் இந்த எண்ணம் இறுதி வரை நிலைக்குமா என்பதே இங்கு கேள்விக் குறிதானே!

குரு “திரவியா! இம்மந்திரத்தின் பொருளை நீ நன்கு அறிந்திருந்து வைத்திருக்கிறாய் என்று அறிகிறேன். இம்மந்திரங்கள் யாவும் ஒருவரின் ஐம்புலன்களையும் கட்டுக்குள் வைக்கும் சித்தி பெற்றவை. ஆனால், விதியின் விளையாட்டில் யாரும் எதையும் அடக்க இயலாது மகனே!” என்று சற்று பூடகமாக பேசியவர், தொடர்ந்தார் “இம்மந்திரத்தை நீ, நின் மனதில் ஆழப்பதித்துக் கொள்! எல்லாம் அவன் திருவிளையாடல். இந்நொடியிலிருந்து நீயும் அவனின் விளையாட்டில் ஒரு பங்காளனாய் மாறிப் போனாய். எச்சூழ்நிலையிலும் மதி சொல்வதை ஆராய்ந்து அறிய கற்றுக்கொள்.” என்றார்.

இவ்வாறு குரு சூசகமாய் ஏதோ கூற, மூவருக்கும் ஏதும் புரியவில்லை. ஆனால், மாறன் ஒன்றை மட்டும் அறிந்துக் கொண்டான், பிற்காலத்தில் திரவியனிற்கு ஏதோ இடர் நேரவிருக்கிறது, அதுவும் பெண்ணால் என்பதை. குரு ருத்ரமகாபுருஷர் வேறெதுவும் கூறாது, தியானத்தில் அமர்ந்துக் கொண்டார்.

அந்துவன் “எப்படியோ, குரு என்னிடம் எக்கேள்வியும் கேட்கவில்லை! என் தலை தப்பித்தது.”

திரவியன் “இப்படியே, எத்தனை நாட்கள் இருக்கப் போகிறாய் அந்துவா? விரைந்து கற்றால்தானே ராஜ்ஜியத்தை திறம்பட நடத்த மதி வேலை செய்யும் நண்பா!”

அந்துவன் “நான் என்னடா செய்வது? எத்தனை முறை கற்றாலும் இம்மதிகெட்ட மதியில் நிற்கவே மாட்டேன் என்கிறதே”

திரவியன் “பார்த்தாயா மாறா! அவனே அவன் மதியை மதிகெட்ட மதி என்று கூறிவிட்டான்” என்று திரும்புகையில் இளவல் பலத்த யோசனையுடன் வந்துகொண்டிருந்தான்.

திரவியன் “மாறா, என்ன பலத்த யோசனை உன்னுள்? இத்தீவிர யோசனையின் முகாந்திரம் யாதோ?”

மாறன் அவனிடம் கூறலாம் என்றிருக்கையில் தூரத்தில் வயமா உறுமும் சத்தம் கேட்டது. திரவியனும் அந்துவனும் கூட அதைக் கேட்டனர்.

தனக்குள் ஏற்பட்ட திடுக்கிடலை முகத்தில் காட்டாது, அந்துவன் “பொழுது சாய்ந்து விடும் நேரமாகிவிட்டதா? வாருங்கள், அந்திமக்கால வழிபாட்டை முடித்துவிட்டு குடிலுக்குள் செல்லலாம்.” என்றான்.

திரவியனும், மாறனும் அந்துவனை முன்னே விட்டு, வேக எட்டுகளில் வனத்திற்குள் ஓடினர் அந்துவன் அறியாது. பாவம், பூழி நாட்டு இளவரசன் தனியே பேசிக்கொண்டு செல்கிறான், ம்ம்ம!

அவர்கள் செல்லட்டும், நாம் இந்த அரிமா மற்றும் வயமா யாரென பார்த்துவிட்டு வரலாம்…

பொதியில் மலையில் வாழும் அரிதான இரண்டு விலங்குகள்தான் அரிமா எனும் வெள்ளை சிங்கமும், வயமா எனும் வெள்ளைப் புலியும். வடப் பிரதேசங்களில் அதிகளவு காணப்படும் இவை, மூன்று வருடம் முன்புதான் இங்கு இடம்பெயர்ந்து வந்தது.

வயமா எனும் இவ்வெள்ளைப் புலியினம் கடும் மூர்க்கத்தனமும், கனமாகவும் இருக்கக்கூடியவை. இப்போது வயமாவிற்கு வயது மூன்று. அதாவது ஒரு முழு வளர்ந்த ஆண் மகனிவன்.

அரிமா எனும் வெள்ளை சிங்கம் காட்டுவாசி ஒருவனால் திரவியனிற்கு ஆறு வயது சிங்கக்குருளையாக கிடைத்தது.

பொதுவாகவே, புலியும் சிங்கமும் குணத்தில் வேறுபட்டவை. புலியை விட சிங்கம் மனிதர்களிடையே எளிதில் பழகிவிடும். சிங்கம் என்றுமே தன் கூட்டத்துடன் காணப்படும். புலி தனித்தே வேட்டையாடும். இன்னும் கூறப்போனால் அரிமாவிற்கும் வயமாவிற்கும் சண்டை வந்தால் புலியே வெற்றிப் பெறும். இதற்கு எடையும் ஒரு காரணம். ஒரு வளர்ந்த புலியானது தனது மூன்று வயதிலேயே முழு வளர்ச்சியை எட்டி இருநூறு முதல் இருநூற்று ஐம்பது கிலோ வரை எடைக் கொண்டிருக்கும். ஆனால் சிங்கமானது தனது பத்தாம் அகவையில்தான் முழு வளர்ச்சி அடைந்து நூறு முதல் நூற்றைம்பது கிலோ வரை மட்டுமே எடை கொண்டிருக்கும். மேலும், புலியும் சிங்கமும் ஒரே காட்டில் வசிக்காது. ஆனால் தற்போது இவையிரண்டும் இணைப்பிரியா தோழர்கள் என்பதில் எனக்கும் ஆச்சர்யமே.

இதையெல்லாம் அறிந்தே மாறனும் திறவியனும், அரிமாவையும் வயமாவையும் சிறுவயது முதல் நண்பர்களாக பழகவிட்டனர். ஆனால், அவை சகோதரர்களாகவே பழகி வருகின்றன. அரிமாவிற்கு வயது ஒன்பது. வயமாவிற்கு வயது மூன்று. ஆனால் வயமாவே தன் பதின் வயதை அடைந்துள்ளான். அரிமா தன் பதின் வயதை எட்ட இன்னும் ஒரு பிராயம் உள்ளது.

இவர்களை தண்டராணியத்திற்கு அனுப்பியதன் முகாந்திரம்தான் யாதோ?

சந்திப்போம் அடுத்த மோ(கா)தலில்!

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
4
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்