Loading

அத்தியாயம் 25

கருமை வண்ண விதைகளை சூழ்ந்த மஞ்சள் வண்ண இதழ்களைக் கொண்ட சூரியக்காந்தி பூவைப் போல் மாலையும் இருளும் கைக்கோர்க்கும் நேரம்..

வெற்றியும் சளைக்காமல் புது மோட்டாருக்கு கரண்ட் வாங்குவதற்காக அலைந்தான். ஆனால் எல்லா இடத்திலும் ஏதாவது காரணம் சொல்லி தாமதப்படுத்தினர்.

“வெற்றி நான் வேணா அப்பாக்கிட்ட உதவி கேட்கட்டா?” என்றாள் மதி.

“ரெக்கமண்டேஷனா?. அது தப்பு மதி. நம்ம உழைப்புல வர்ற மாதிரி இருக்காதுடி” என்றான் வெற்றி.

“நீ ஏன் ரெக்கமண்டேஷனா நினைக்குற. நீ ஒன்னும் யாரோட திறமையையும் தட்டிப் பறிச்சு கவர்ன்மென்ட் வேலையா வாங்கப் போற?.  பணத்தைக் காட்டி எல்லா இடத்துலயும் உன்னை முடக்கனும்னு நினைக்குறவங்க முன்னாடி உன் உழைப்பால உயரப் போற. இதெல்லாம் கூட இல்லாம இந்த மாதிரி அநியாயம் பண்றவங்க இருக்குற வரைக்கும் நாம ஒன்னும் பண்ண முடியாது வெற்றி புரிஞ்சுக்கோ” என்றாள்.

‘அவள் சொல்வதும் சரிதானே. யாரோட உழைப்பையும் திருடலயே நாம’ என்று நினைத்து விட்டு “சரி மதி நீ கேட்டுப்பாரு” என்றான்.

அதன் பிறகு ரவியிடம் பேசிய மதி விவரத்தைச் சொல்லவும் “எல்லா இடத்துலயும் இது சகஜமாப் போச்சு மதி. சாமானியன் மேல வர்றத எவனுமே விரும்புறது இல்லை. பணம் தான் எல்லா இடத்திலையும் பேசுது” என்று விட்டு அவர் அதிகாரிகளிடம் பேசவும், தானாக எல்லா இடத்திலும் கையைழுத்துக் கிடைத்தது. அதன் பிறகு வெற்றிக்கு புது கரெண்ட் இணைப்புக் கிடைத்தது. அதைத் தொடர்ந்து உடனடியாக FIMO வில் மெம்பராக இணைந்தான். அவன் காட்டில் விளைந்தது போக பழ வகைகள் மற்றும் காய்கறிகள் என்று பல விதமான பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு முதலிலே Multi-Products Group என்ற வகையின் கீழ் உறுப்பினராகிக் கொண்டான்.

இப்போது கொஞ்சம் தொல்லை இல்லாமல் தன் விவசாயப் பணிகளை செய்ய முடிந்தது வெற்றியால். அடுத்து காய்கள் அறுவடைக்கு வரும் முன் எல்லா ஏற்பாடுகளையும் செய்திருக்க வேண்டும் என்று அவன் பத்து ஏக்கர் நிலத்தில் ஒரு ஏக்கரை ஏற்றுமதி தொழிலுக்கான அலுவலகமாக உருவாக்கினான். அதில் மதியின் பங்கு அதிகமாக இருந்தது. கிராமத்தில் பொழுது போகாது வீட்டிலே அடைந்து கிடக்க வேண்டும், படித்த படிப்பும் வீண் என்று சொன்னவள் அதைப் பொய்யாக்கி படிப்பு என்பது அறிவை வளர்த்துக் கொள்ளவே, எங்கிருந்தாலும் படித்த படிப்பின் மூலம் கிடைத்த அறிவு வீண் போகாது என்று நிரூபித்து முழு ஈடுபாடோடு வேலையைச் செய்தாள்.

குழலி மூன்றாவது வருடம் படித்துக் கொண்டிருப்பதால் அவளுக்கு ப்ராஜெக்ட் சம்மந்தமாக நிறைய வேலைகள் இருந்தது. அதனால் தோழிகளோடு சேர்ந்து காலேஜ் முடிந்து டவுனில் உள்ள இன்டர்நெட் சென்டரிலே தேவையான வேலைகளை முடித்து விட்டு வந்து விடுவாள்.

அன்று ஒருநாள் சென்டரில் வேலையை முடித்து விட்டு வருவதற்குள் அவள் செல்லும் பேருந்து சென்று விட்டது. தோழிகளும் கிளம்பி விட்டனர். கிராமமாதலால் ஒரு மணி நேரத்திற்கு ஒரு பேருந்து மட்டுமே வரும். ‘அய்யோ போச்சு போச்சு பஸ்ஸ மிஸ் பண்ணிட்டோமே. இன்னும் ஒருமணி நேரம் இந்த பஸ்ஸ்டாப்க்கு காவல் இருக்க வேண்டியது தான்’ என்று மனதுக்குள் தன்னைத் தானே திட்டிக் கொண்டு பேருந்திற்காகக் காத்திருந்தாள். அவள் மனதை ஆக்கிரமித்திருந்த தமிழின் நினைவும் வந்து போனது. மற்றவர்களோடு இருக்கும் போது புதைந்து கிடக்கும் அவன் நினைவு தனிமையில் அவனை நினைத்து உருகும் மனதை எப்படி அடக்குவது என்று புரியவில்லை அவளுக்கு. ஆனால் தினமும் கண்களில் பட்டுவிட மாட்டானா? என்று மட்டும் மனம் கூப்பாடு போடுகிறது.

“கத்தரி பூத்திருக்கு
கலர் கலராய் ஊதாப்பு
ஊதாப்பு பூத்தாலும்
உள்ளுக்குள்ள உன் நினைப்பு
ஏலேலங்கடி ஏலேலங்கடியே
என் மாமன் எப்ப வரான்
சொல்லடி கிளியே”

இரவு வெகுநேரமாகி விட்டது. பஸ் ஸ்டாப்பில் அவளைத் தவிர யாருமில்லை. அருகில் இளைஞர் பட்டாளங்கள் ஐந்தாறு பேர் நின்று கும்மாளம் போட்டுக் கொண்டிருந்தனர். அவளுக்கு நேரம் ஆக ஆக பயம் தொற்றிக் கொண்டது.

வியர்க்க விறுவிறுக்க நின்றவளின் முன்பு அவன் மனதில் நினைத்தவனே வண்டியில் வந்து நின்றான். அவனைக் கண்டவுடன் உள்ளுக்குள் எழுந்த மகிழ்ச்சியை வெளிக்காட்டாமல் ‘இவன் இந்த நேரத்துல இங்க எப்படி வந்தான்?’ என்று மனதில் எழுந்த கேள்வியை அடக்கிக் கொண்டு அமைதியாக நின்றாள்.

‘மகாராணி கூப்டா தான் வருவா’ என்று உள்ளுக்குள் பொருமிவிட்டு “வர்றியா இல்லை கிளம்பவா?” என்று சிடுசிடுத்தான்.

அவன் சிடுசிடுப்பில் அமைதியாக வண்டியில் ஏறி அமர்ந்தாள். அதற்கு மேல் ஏன் லேட் என்ன ஏது என்று ஒரு வார்த்தை அவன் பேசவில்லை. இதற்கு முன் என்றால் ஆயிரத்தெட்டு கேள்விகள் கேட்டு துளைத்தெடுத்து விடுவான். கூடவே பொம்பளைப் பிள்ளை பொறுப்பு பருப்பு என்று ஆரம்பித்து விடுவான். ஆனால் இன்றோ ‘யார் எப்படிப் போனா எனக்கு என்ன?’ என்பது போல் இருந்தான். ‘ஏதாவது கேட்குறானா?. அமைதியா வர்றான்’ என்று மனதுக்குள் நினைத்தாலும் ‘இன்னும் இந்தப் பயணம் நீளாதா?’ என்றிருந்தது. இறங்க வேண்டிய இடம் வந்ததும் வண்டியை நிறுத்தினான். அவள் இறங்கி விட்டு “தேங்க்ஸ்” என்று நிமிர்வதற்குள் அவன் எப்போவோ வண்டியில் பறந்திருந்தான். இதற்கு மேல் அங்கு நின்றாள் அவன் மனதே அவன் சொல்பேச்சைக் கேட்காது என்று உடனே கிளம்பி விட்டான்.

காதல் வந்தும் சொல்லாமல்
நெஞ்சுக்குள்ளே ஏங்கும்
என்னை கொல்லாதே
சொல்லாமல் செல்லாதே

காதல் வந்தும் சொல்லாமல்
நெஞ்சுக்குள்ளே ஏங்கும்
என்னை கொல்வாயோ
உன் காதல் சொல்வாயோ

இதயத்திலே ஒரு வலி
இமைகளிலே பலதுளி
நீ சென்றால்கூட காதல் சுகமாகும்
நீ பிரிந்தால் உலகம்
உருகும் மெழுகாகும்

வார்த்தை ஒன்றிலே
வாழ்க்கை தந்திடு
பூமிப் பந்தயே
ஒரு சொல்லில் சுத்திடு

விதியின் கைகளோ
வானம் போன்றது
புரியும் முன்னமே
மனம் சாம்பலாகுது

நினைவு இடறி மண்ணில் விழுகிறதே
நிழலில் கரைந்து அது சாகாதா
காதல் கதறி இங்கு அழுகிறதே
இரண்டு கண்ணும் அதில் கருகாதா

ஏன்தான் காதல் வளர்த்தேன்
அதை ஏனோ என்னுள் புதைத்தேன்
சுடரில்லாத தீயில் எரிகின்றேன்
சுடும் கண்ணீரில் கடிதம் வரைகின்றேன்

பெண்ணே உன் பாதையில்
நகரும் மரமாகுவேன்
ஓஹோ இரவை தின்று வாழ்ந்தாய் நீயடி
ஓ ஓ இதயம் கொண்டு போனால் என்னடி..🎶

‘முகத்தைக் கூட பார்க்க மாட்டானா?. போடா சிடுமூஞ்சி’ என்று கலங்கிய கண்களை துடைத்துக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தாள். தூங்கவும் முடியவில்லை இமைகளை கூட மூடவும் முடியவில்லை. மூடிய இமைகளுக்குள் வந்து நிற்கிறது அவன் நினைவு. நெஞ்சில் ஏறிய காதலின் பாரத்தால் உணவுக் கூட தொண்டையில் சிக்கிக் கொண்டு இறங்க மறுத்தது. ‘அவனை நினைத்துப் பயமில்லை. ஏனென்றால் பயப்படும் படி அவன் எந்தவொரு பெரிய குற்றமும் செய்ததில்லை. ஆனால் வீட்டில் சம்மதம் கிடைக்குமா?. வீட்டை எதிர்த்து திருமணம் செய்து விட்டு பின் அவனைப் போல் தானும் யாருமற்றவராகி விடுவோமோ?. அதை விட யாராவது ஏதாவது சொல்லப் போய் வீம்புக்கென்றே யாரிடமும் சேரவிடாமல் தன்னை அடக்கி வைத்து விடுவானோ? ‘ என்று அவன் வீம்பை நினைத்து தான் மங்கையவள் பயந்து கொண்டு தன் மனதில் துளிர்த்த காதல் உணர்வுகளை முளையிலே வெட்டி எறிய நினைக்கிறாள். ஆனால் அது எப்பவோ வளர்ந்து விருட்சமாகி விட்டது என்பது தெரியாமலே. மனதில் வலிகளோடு இருவரும் இரவைக் கடக்க முடியாமல் இவள் கண்ணீரால் தலையணையை நனைத்துக் கொண்டிருக்க அவனோ வானத்தில் பூத்த வெண்ணிலவைத் துணைக்கு அழைத்துக் கொண்டான்.

காதல் பித்துப் பிடித்து அலைந்தவன் ஊரில் அங்கங்கே அவனுக்கும் வெற்றிக்கும் நடத்த சண்டையைப் பற்றியே பேசவும் தான் ‘நம்ம அப்படி என்ன பாவச்செயலை பண்ணிட்டோம் இப்படி பேசுறாங்க எல்லாரும். இப்போது தான் ஞாபகம் வருகிறது தான் என்ன செய்தோமென்று அன்று அவன் சண்டைக்கு வந்தான்?’ என்று முதல் முறையாக சரியாக யோசிக்க ஆரம்பித்தான்.

வெற்றி சந்தையில் காய்கறிகளைப் போடாமலே தன் சொந்தப் பாதையில் முன்னேறிக் கொண்டிருப்தைப் பார்த்த ரத்தினசாமிக்கு ‘இவனெல்லாம் தன்னை மிஞ்சுவதா?’ என்று உள்ளுக்குள் வன்மம் வளர்ந்தது. அதுவும் அவன் ஆரம்பித்த ஏற்றுமதி தொழிலைப் பற்றிக் கேள்வி பட்ட பிறகு “அவன் தன்னை விட நல்ல விலை கொடுத்து காய்களை வாங்கினால் எப்படி நம்மிடம் வருவார்கள் விவசாயிகள்?. எப்பவும் நாம தான் விலையைச் சொல்ற மாதிரி இருக்கனும். அவங்க சொன்ன விலைக்கு விளைச்சத போட்டுட்டு போனும். அவங்க உழைப்பு தான் நமக்கு லாபம். அவன் விலையை ஏத்திட்டா அதை வச்சே மத்த விவசாயிகள் நம்ம கிட்ட அவங்களே விலை சொல்ற மாதிரி ஆகிடும். அதனால் நம் தொழில் படுத்துவிடுமே!” என்ற பயமும் சூழ்ந்து கொண்டது.

நாட்கள் அதன் போக்கில் யாருக்கும் காத்திராமல் நகர்ந்தது.. வெற்றி ஏற்றுமதி தொழிலுக்கான எல்லா ஏற்பாடுகளையும் கிட்டத்தட்ட முடித்து விட்டான். அவனுக்குத் தெரிந்த சொந்தக்காரர்கள் மற்றும் அக்கம் பக்கத்து காட்டின் விவசாயிகளிடமும் அவனுடைய தொழிலைப் பற்றிக் கூறி அவனிடம் காய்கறிகளை போடுமாறும் சந்தையை விட அவர்களுக்கு கட்டுபடியாகும் படி நல்ல விலைக்கே வாங்கிக் கொள்வதாக சொல்லி விவசாயிகளைச் சேர்த்துக் கொண்டான்.

கருமை நிறைந்த மேகம் வெண்ணிலவையும் நட்சத்திரங்களையும் தின்று வானம் முழுவதும் இருளை பூசிக் கொண்ட அமாவாசை இரவு..

வெற்றி டவுனிற்குச் சென்று பயிரிடத் தேவையான விதைகளை வாங்கிக் கொண்டு ஊருக்குள் வந்து கொண்டிருந்தான். சுற்றி நாலா புறங்களிலும் இருமை சூழ்ந்திருக்க இருசக்கர வண்டியின் வெளிச்சத்தையும் புல்லட் வண்டியின் சத்தத்தையும் மட்டுமே துணையாகக் கொண்டு தன் கிராமத்திற்குச் செல்லும் கரடுமுரடான காட்டு வழியில் சென்று கொண்டிருந்தான்.

திடீரென தூரத்தில் இவன் வரும் பாதையில் வண்டியின் வெளிச்சம் கண்ணைக் கூசியது. ‘யாருடா இது இந்த நேரத்துக்கு கார்ல லைட்டைப் போட்டு இங்க நிற்குறது?’ என்று லைட்டின் ஒளியால் கூசியக் கண்ணை மூடி மூடி முழித்துக் கொண்டே அந்தக் காரை நெருங்கினான். அவன் அருகில் நெருங்கவும் ‘டமால்’ என்ற பெரிய சத்தத்துடன் வண்டிக் கவிழ்ந்தது.

சில மணி நேரத்திற்கு பிறகு, வெற்றி விபத்தாகி மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்ட செய்தி கேட்டு கண்ணீரும் கம்பலையுமாக குடும்பத்தினர் மருத்துவமனைக்கு விரைந்தனர்.

என்ன நடந்தது என்று அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்…

 

தொடரும்..

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
7
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment