Loading

காதல் – 9

விமலன் வரும் அரவம் உணர்ந்து “இப்ப பேசுனதை அவன்கிட்ட சொல்லிட்டு இருக்காத.. எவ்ளோ பவுனு போடுவாங்கனு கேட்டும் வெக்காத.. அப்பறம் அவங்களும் உசாரு ஆகிருவாங்க.. விருப்பமே இல்லாம கல்யாணத்துக்குச் சம்மதிக்கற மாதிரி சம்மதம் சொல்லு.. இதெல்லாம் உன் நல்லதுக்கு தான் சொல்றேன்.. உன் பொண்ணும் நல்லா வாழ்வா..

உன் பையனும் செட்டிலாகிருவான்.. உன் கடமையும் முடிஞ்சுச்சு.. வர்றவ எப்படி இருந்தாலும் விமலன் உனக்கு தேவையானதை எல்லாம் பண்ணுவான்.. அதுல எந்த சந்தேகமும் வேணாம்..” என்றிட,

விமலனும் அவர்களிடம் வந்து சேர்ந்தான்.

உள்ளே சென்று மூவருக்கும் டீ எடுத்து வந்தவனிடம்  “உன் அம்மா என்ன என்னமோ சொல்றா.. என்ன விசயம்.?” என்று தெளிவாக அவர் கேட்டிட, அவனும் எதையும் மறைக்காமல் தேனுவைப் பற்றி உரைத்தான்.

“அவங்க வீடு எங்க இருக்கு.? அவங்க வீட்டுல பேசலாமா.? இல்ல இன்னும் அந்த பொண்ணு வீட்டுல சொல்லாம இருக்கா.?”

“அவங்க வீட்டுல தெரியும் பெரியப்பா..”

“ஓஓஓஓ சம்மதம் சொல்லிட்டாங்களா.?”

“வந்து பேச சொல்லிருக்காங்கனு மட்டும் தான் தேனு சொன்னா..”

“அப்ப கிட்டத்தட்ட சம்மதம் சொன்ன மாதிரி தானே.?”

“……..”

“சரி எப்ப போய் பேசலாம்.?” என்று கேட்டவரிடம் பதிலுரைக்காமல் அவனின் விழிகள் அவனைப் பெற்றவளைக் காண, அவரோ விருப்பமே இல்லாதது போல் “அதான் கேட்கறாங்கல.? பதில் சொல்லு” என்றார் பிடிக்காத பொய் பாவனையுடன்.

“நான் தேனுகிட்ட பேசிட்டு சொல்லட்டுமா.?” என்று கேட்க, அவரும் சரியென்பதைப் போல் தலையசைத்தார்.

ஆனால் தேவகியோ “அவகிட்ட கேட்டுட்டு தான் பதில் சொல்லணுமா.? நாளைக்கே வந்து பேசறோம்னு சொன்னா அவ என்ன சரினு சொல்லாம போய்ருவாளா.? ரொம்ப பண்ணாத விமலன்.. ஒரு பொட்டச்சி சொல்லி அப்பறம் போய் பேசறது எல்லாம் நல்லா இருக்குமா.? நாங்க இன்னைக்கு வர்றோம்னு ஒரு நாளை சொல்லு… அவ்ளோ தான் சொல்லுவேன்” என்று அவர் பிடியில் உறுதியாக நின்றார்.

திருமணத்திற்குப் பிறகு செய்கிறேன் என்ற நகையைச் செய்ய பணம் தான் அவரிடம் இல்லையே.. வந்த வாய்ப்பை எப்படி விட்டுட்டு அமைதியாக இருப்பார்.? எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் மகனுக்குத் திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என்று உறுதியும் பூண்டார்.

அந்த பெரியவரோ மருமகளின் நகையை வாங்கி விட்டு இவரிடம் இருக்கும் பணத்தைத் தந்து விட வேண்டும் என்று தான் கூறினார்.. ஆனால் தேவகியின் நினைப்போ வேறு மாதிரியாக இருக்கிறது. இவரின் எண்ணம் எதுவென்று அவர் உணர்ந்தால் இவர்களின் குடும்ப பிரச்சினைக்கே வந்து விட்டுருக்க மாட்டார்.. நல்லது பண்றேன் என்று இவரிடம் மாட்டியும் கொண்டார்.

இவர் இந்தளவிற்கு இறங்கி வந்ததே பெரியது என்று நினைத்த விமலனும் சம்மதம் என்பதைப் போல் தலையாட்டினான். பின்பு அவரை எதிர்த்து பேசி மீண்டும் வீட்டிற்குள் பூகம்பத்தை உண்டு பண்ண இவன் விரும்பவில்லை. தன் திருமணம் அனைவரின் சம்மதத்துடன் தான் நடைபெற வேண்டும் என்ற முடிவில் மட்டும் உறுதியாக உள்ளான். அதனால் அனைவரிடமும் விட்டுக் குடுத்துச் செல்ல இவன் தயங்கவும் இல்லை.

முதலில் அவனின் அன்னையிடம் விட்டுக் குடுத்தான்.. அடுத்து யாரென்று தெரியவில்லை. எத்தனை பேர் என்ன சொன்னாலும் இவன் அமைதியாக தலையை மட்டும் ஆட்டுவானே தவிர எதிர்த்து பேச போவதில்லை. இவனுக்கும் சேர்த்து இனி தேனு தான் பேச வேண்டும்.. இவனைப் போல் ஏமாளியாக இருந்தால் இவ்வுலகில் வாழ்ந்திட முடியுமா.?

இப்போது கூட விமலனுக்கு சந்தேகம் எழவில்லை. முதலில் மறுத்த தன் அன்னை எப்படி அதற்குள் சம்மதம் கூறினார் என்று.? எப்படியோ சம்மதித்து விட்டார் என்று மட்டும் நினைத்தான்.

வேலைக்கு அவசரமாக கனிமொழி கிளம்பிக் கொண்டிருக்க, அவளின் மாமனார் ஏதோ சைகையில் அவரின் மனைவியிடம் கூறினார். அவரும் புரிந்துக் கொண்டு ‘நான் பார்த்துக்கறேன்’ என்று விட்டு மருமகளிடம் சென்றார்.

எடுத்ததுமே “இன்னைக்கு தானே சம்பள நாளு.?” என்று கேட்க, உணவை டப்பாவில் போட்டுக் கொண்டிருந்தவள் விலுக்கென்று அவரின் புறம் திரும்பினாள்.

மீண்டும் அக்கேள்வியையே அவர் கேட்டிட, “ஆமா..” என்று மட்டும் அவளும் கூறினாள்.

“சம்பளம் வந்ததும் பணத்தை மாமனார் கிட்ட குடுத்துரு.. உன் புருசனும் அவர்கிட்ட தான் தருவான்.. ஏதாவது செலவு இருக்குனா அவங்ககிட்ட கேட்டு வாங்கிக்கோங்க.. அநாவசியமா இங்க செலவு பண்ண கூடாது.. அப்படியுய் செலவு பண்ணுனா எதுக்கு பண்ணுனேனு கணக்கு சொல்லித்தான் ஆகணும்.. என்ன புரியுதா.?”

“என் வீட்டுல இப்படி எல்லாம் எதுவுமில்லை.. நான் சம்பாதிக்கற பணத்தை அவங்ககிட்ட ஏன் தரணும்.? என் அப்பா இப்படியெல்லாம் வாங்க மாட்டாங்க”

“ஏய் உன் பிறந்த வீட்டு பேச்சு எல்லாம் இங்க வேணாம்.. இந்த வீட்டுல இப்படித்தான்.. உன் புருசனே இவங்ககிட்ட தான் தர்றான்.. பொட்டச்சி உனக்கு என்னடி.? பணத்தை வெச்சு ஊர் மேயலாம்னு இருக்கீயா.?” என்று வார்த்தைகளும் தாறுமாறாக வெளி வந்தது.

‘இவரின் புத்தி இவ்வளவு கேவலமானதா.?’ என்ற பார்வையில் அவரைக் கனி பார்க்க, எதற்கும் அசராமல் “பணம் வந்ததும் அப்படியே உன் மாமனாருகிட்ட குடுத்துத் தான் ஆகணும்.. என்ன புரியுதா.?” என்று மீண்டும் மிரட்டல் வேறு.

இத்தனைக்கும் சரவணன் வெளியில் எல்லாம் செல்லவில்லை. அவர்களின் அறையில் தான் அமர்ந்திருந்தான். சத்தம் கேட்டு வெளியில் எட்டிப் பார்த்தவன் மீண்டும் அறைக்குள் அடைந்துக் கொண்டது தான் இவளைப் பலமாக தாக்கியது.

‘தனக்காக தன் கணவன் பேசுவான்..’ என்று நினைத்த இவளின் நினைப்பும் பொய்த்தது. மாமியாரின் குணம் என்னவென்று அவரின் சாயமும் இன்று வெளுத்தது. இனி தனக்காக நான் தான் பேசிக் கொள்ள வேண்டும் என்றும் தோன்றியது.

அப்போது எதிர் வாதிடாமல் கிளம்பியவளுக்குப் பலவித குழப்பங்கள். கிளம்பறேன் என்ற போதும் அவளின் கணவன் எவ்வித பாவனைகளும் தராமல் சரியென்று விட்டான். ‘அவர்கள் அப்படித்தான்.. நீ எதையும் மனதில் வைத்துக் கொள்ளாதே.. உனக்குத் துணையாக நான் இருக்கிறேன்’ என்ற ஆறுதலான வார்த்தைகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்தவளுக்கு ஏமாற்றம் தான். எதையும் எதிர் கொள்ளலாம் என்ற துணிவும் அவளிடம்.

மாலையில் சிறிது தாமதமாக கனி வீட்டிற்கு வர, வாசலிலே இவளுக்காக காத்திருந்தார்கள் அவளின் மாமியாரும் மாமனாரும். அவர்களின் முகத்தில் கோபத்தீ கொளுந்து விட்டிருந்தது.

அதை கனியும் உணர்ந்தாலும் அவர்களின் கோவம் நமக்கு எதற்கு.? என்பதைப் போல் உள்ளே செல்ல முயன்றாள். வீட்டினுள் காலடி எடுத்து வைக்கும் முன்பே “ஏய் நில்லுடி” என்ற மாமியாரின் குரல் அவளைத் தடுத்து நிறுத்தியது.

அவளும் “சொல்லுங்க” என்றிட, “இவ்ளோ நேரம் எவன் கூட சுத்திட்டு வர்ற.? இதுக்கு தான் தலைப்பாடா அடிச்சுக்கிட்டேன் நீ வேலைக்கு போக வேணாம்னு.. ஒரு குடும்ப பொண்ணு இப்படித்தான் பண்றதா.? உங்க வீட்டுல இது தான் சொல்லித் தந்தாங்களா.? வேலைக்குப் போனோமா.? வந்தோமானு இருக்கத் தெரியாதா.? அய்யோ ராமா இது எங்க போய் முடிய போகுதோ.? எனக்கு இருக்கறதும் ஒரே பையன்.. அவன் வாழ்க்கை என்னவாக போகுதோ.?” என்று ஈட்டியாக வந்தது அவரின் வார்த்தைகள்.

இதில் கனிக்கு கோவம் கொப்பளிக்க, “நான் எங்க வீட்டுக்குத் தான் போய்ட்டு வர்றேன்.. இப்படியெல்லாம் தப்பா பேசிட்டு இருக்காதீங்க.. என் அப்பா ஒன்னும் என்னைய அவ்ளோ மோசமா எல்லாம் வளர்க்கல” என்றாள்.

அமைதியாக இருந்த மாமனாரும் “அப்பா வீட்டுக்கா.? அங்க எதுக்கு.?” என்று கேட்க, “அவங்கள பார்க்கணும்னு இருந்துச்சு.. அதான் போய் பார்த்துட்டு வந்தேன்” என்றாள் பயமில்லாமல்.

“போறப்ப சொல்லிட்டு போகணும்னு தெரியாதா.?” என்று இருவரும் எகிற, இவளிடம் அமைதி.

“சரி உள்ள போ” என்ற மாமனாரின் வார்த்தைக்கு மதிப்பளித்து இவளும் உள்ளே சென்றாள்.

அவளிடம் பேச வேண்டும்.. பேசி அவளின் சம்பளத்தை வாங்க வேண்டும் என்று இருவரும் விழி மேல் விழி வைத்து நேரம் அமைய காத்திருந்தனர்.

அந்நேரமும் அவர்களுக்கு அமைந்திட, “சம்பளம் வந்துருச்சா.?” என்று மாமியார் தான் பேச்சை ஆரம்பித்தார்.

நிமிர்ந்துப் பார்த்தவளுக்கு அவரின் நோக்கம் என்னவென்று நன்றாகவே புரிந்தது. தலையை மட்டும் ஆட்டினாள்.

“காலைலயே சொன்னேன்.. பணத்தை மாமா கிட்ட தான் குடுக்கணும்னு..”

“……”

“என்ன அமைதியா நிற்கற.?”

“…..”

“போ போய் பணத்தை எடுத்து வந்து மாமா கிட்ட குடு..”

வாக்குவாதம் வேண்டாமென்று கனியும் பணத்தை அவர்களிடம் தந்திட, வாங்கி எண்ணிப் பார்த்தவர் யோசனையாக அவளை ஏறிட்டார்.

“மொத்த சம்பளம் எவ்ளோ.?”

“……”

“ஏய் சொல்லு”

“இருபத்தி நான்கு”

“என்கிட்ட பதினேழு தான் இருக்கு.. மீதி பணம் எங்க.?”

“என் செலவுக்கு எடுத்துக்கிட்டேன்”

“உன் செலவா.? அதுவும் ஏழாயிரமுக்கு என்ன செலவு இருக்குது.?”

“…….”

“பதில் சொல்லுடி.. இப்படி ஊமைக்கோட்டான் மாதிரி அமைதியா இருந்து சாதிக்கலாம்னு நினைக்காத.. அப்படியென்ன செலவு.?”

“என் அப்பாகிட்ட ஐயாயிரம் குடுத்தேன்.. மீதி என்கிட்ட இருக்கு” என்று தெரியாமல் உண்மையை உரைத்திட, இதைக் கேட்டதும் இருவரும் ஆடாத ஆட்டமில்லை. அவர்களை அந்நிமிடமே வெறுத்து விட்டாள் இவள்.

“ஏன் உன் அப்பனுக்கு சம்பாரிக்க வக்கில்லையா.? கைகால் நல்லா தானே இருக்கு.? பொட்டப்புள்ளையை.. அதுவும் அடுத்து வீட்டுப்புள்ளை வேலைக்கு அனுப்பி அதுல சோறு தின்னுட்டு இருக்கானா.? ச்சைக் ஒரு ஆம்பள இப்படியா இருப்பான்.?” என்று மாமியார்காரி தன் தந்தையை கேவலமாக பேசியதை இவளால் ஜீரணிக்கவே முடியவில்லை.

இவள் பணத்தை தந்த போது கூட “வேணாம் கண்ணு.. உன் செலவுக்கு வெச்சுக்கோ.. உழைக்கற அளவுக்கு அப்பாக்கு கை காலு நல்லா தான் இருக்கு.. எனக்கு முடியாம போனா நீங்க தானே பார்க்கணும்.. அப்ப வாங்கிக்கறேன்.. இப்ப வேணாம்” என்று மறுக்கத் தான் செய்தார்.

ஆனால் கனிமொழி தான் விடவில்லை. மாதம் மாதம் ஒரு தொகையை தந்தையிடம் தர வேண்டும் என்றும் நினைத்தாள். அவ்வாறே தரவும் செய்தாள். பணத்தைத் தந்ததோ இவள்.. ஆனால் கெட்ட பெயர் என்னவோ தந்தைக்கு..

கலங்கிய விழிகளுடன் “அப்பாவை தப்பா பேசாதீங்க.. அவங்க வேணாம்னு தான் சொன்னாங்க.. நான் தான் விடாம குடுத்துட்டு வந்தேன்” என்றிட, அதற்கும் “நீ குடுத்தா உன் அப்பனும் வாங்கிருவானா.? சோறு தான் திங்கறானா.?” என்று மீண்டும் கடுமையான வார்த்தைகள் அவரிடம்.

“நாளைக்கே போய் அந்த பணத்தை வாங்கி வந்துரு.. அதுக்கு முன்னாடி உன்கிட்ட இருக்கிற பணத்தை கொண்டு வந்து குடு.. ஒரு பொம்பள புள்ள ரெண்டாயிரம் செலவு பண்றதா.? என் பையனே இம்புட்டு செலவு பண்ணிருக்க மாட்டான்” என்றதாக இருந்தது மாமனாரின் வார்த்தைகள்.

இவள் கூறும் முன்பே வீட்டில் நடந்த விவாதம் சரவணனுக்குத் தெரிந்திருக்க, “என்னங்க இப்படி.?” என்று ஆற்றாமையுடன் கேட்டவளிடம் “இங்க இப்படித்தான் கனி.. நீயும் பழகிக்கோ.. அநாவசியமா பணத்தை செலவு பண்ணக் கூடாது.. அதுவும் நல்ல விசயம் தானே.?” என்று பெற்றோருக்கே சப்போர்ட் செய்தான்.

“என் அப்பாக்கு குடுக்கறது கூட தப்பா.?”

“அப்படியில்லை”

“வேற எப்படிங்க.? என் அப்பாக்கு உழைக்கற தெம்பில்லாம தான் நீங்க கேட்ட பவுனையும் கல்யாண செலவையும் ஏத்துக்கிட்டாங்களா.? எங்க வீட்டுக்கு நீங்க வர்றப்ப எல்லாம் ஏதாவது குறை தான் வெச்சாங்களா.?”

“……”

“சம்பாரிக்கறது நானுங்க.. என் பணத்தை அவங்ககிட்ட குடுத்துட்டு என் செலவுக்கு அவங்ககிட்ட கை ஏந்தி நிற்கணுமா.?”

“நானும் அவங்ககிட்ட தான் தர்றேன் கனி..”

“நீங்க அவங்க பையன்.. நான் இந்த வீட்டுக்கு வாழ வந்த மருமக”

“……”

“இதே உங்களைய என் அப்பாகிட்ட பணத்தை தர சொன்னா தருவீங்களா.?”

“……”

“ஆம்பளைகளுக்கு மட்டும் தான் தன்மானம் இருக்கா என்ன.? எங்களுக்கும் இருக்குங்க.. இப்படி யாருகிட்டயும் கையேந்தி நிற்க கூடாதுனு தான் எங்களைய அப்பா வேலைக்கு அனுப்புனது.. எங்களைய பணத்துக்காகவா அவரு வேலைக்கு அனுப்புனாருனு நினைச்சீங்க.?” என்று சராசரியாக கணவனிடம் கேள்வியை எழுப்பினாள் பெண்ணவள்.

பின்பு “நீங்க உங்க அப்பாகிட்டயே பணத்தைக் குடுங்க.. நான் வேணாம்னு சொல்ல போறது இல்ல.. ஆனா உங்க தேவைக்கும் கொஞ்சம் பணத்தை கைல வெய்யுங்க.. இப்ப உங்களுக்கு கல்யாணமாகிருச்சு.. எனக்கு ஒரு முழம் மல்லிகைப்பூ வாங்கி தர்றதுனாலும் உங்க அப்பாகிட்ட கேட்டு தான் வாங்கித் தருவீங்களா.?” என்ற கேள்விக்கு சரவணனிடம் பதிலில்லை.

“நம்ம செலவு போக மீதியை வீட்டுக்குப் பெரியவரா அவருகிட்ட குடுக்கறதுல எனக்கு எந்த பிரச்சினையும் இல்லைங்க.. ஆனா நம்ம அடிப்படை தேவைக்கே அவருகிட்ட கையேந்தி நிற்க சொல்றது நல்லாவா இருக்கு.? நாளைக்கே நமக்குனு ஒரு குழந்தை வந்தா அதுக்கும் டயப்பர் வாங்க கூட அவங்ககிட்ட காசு கேட்டுட்டு நிற்கணும்.. இதெல்லாம் தேவையாங்க.?” என்று மனதில் எழுந்த ஒவ்வொரு கேள்வியையும் மறைக்காமல் கேட்டு விட்டாள் இவள்.

மனதில் வைத்து புழுகிக் கொண்டே இருந்தால் வாழ்க்கை மாறி விடுமா.? மற்றவர்களிடம் பேச வேண்டாம்.. இவள் அவளின் கணவனை நம்பித் தானே பிறந்தகத்தை விட்டு புகுந்தகத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறாள். அவனிடமே தன் மனதை மறைத்து வைத்தால் எப்படி.?

எப்போதுமே மனதில் நினைப்பதை பட்டென்று பேசி விடும் ரகம் தான் கனிமொழி.. ஆனால் தேனு அப்படியில்லை..  மற்றவர்களாக இருந்தாலும் சரி அவளைப் பெற்றவர்களாக இருந்தாலும் சரி அவ்வளவு எளிதில் எதையும் வாய் விட்டு பேசி விடவும் மாட்டாள். இருவரும் இரு வேறு ரகம்.

சரவணனையும் தவறென்றிட முடியாது.. என்ன அவன் பெற்றோர் செய்யும் தவறுகளைக் கண்டுக் கொள்ள மாட்டான்.. அதை தட்டிக் கேட்டால் மட்டும் போதும் நல்ல கணவன் என்ற பதவியை அடைந்து விடலாம். நல்ல மனிதனாக இருந்து என்ன பயன்.? தன்னை நம்பி வந்தவளுக்கு நல்ல கணவனாக இருக்க வேண்டுமே.? இருப்பானா என்பது சந்தேகம் தான்.

மனைவியின் நியாயமான எந்த கேள்விகளுக்கும் இவனால் பதிலுரைக்காமல் போனதில் அமைதியாக படுத்தும் கொண்டான். இனி இவன் யோசித்து

ச் செயல்படுவான் என்ற நம்பிக்கையில் பெண்ணவளும் உறக்கத்தைத் தழுவிட, அவளின் நினைப்பை அடுத்த நாளே தவிடுப் பொடியாக்கி இருந்தான் அவளின் அருமைக் கணவன்.

தொடரும்..

Click on a star to rate it!

Rating 4 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
4
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்