“செந்தூரன்… என்ன கன நேரமா சைலண்டாவே இருக்கிங்க. அத்தோட… ஐஸ்கிரீமையும் குடிக்கல. சொக்லேட் வ்பிளேவர் உங்களுக்குப் பிடிக்கலையா? எனக்கு…” என்று ஏதோ சொல்ல வந்தவள் அதனை அப்படியே முழுங்கிவிட்டு “ஏதாவது ரென்சனா இருக்கிங்களா?” என்று அவனையே பார்த்தபடி கேட்டாள்.
அவள் கனிந்தா. பார்த்தவுடனேயே வசீகரிக்கும் அழகுடன் வெகு ஸ்டைலாக இருந்தாள். உடலோடு ஒட்டிய சாம்பல் நிற ரெனிம் ஜீன்ஸ், ‘ஐ லவ் மீ” என அச்சடிக்கப்பட்ட சிவப்பு நிற ரீசேட், உச்சியில் தூக்கிப் போடப்பட்ட கொண்டை, தலையில் அமர்ந்திருந்த குளிர் கண்ணாடி, காதுகளில் மிகப்பெரிய சில்வர் வளையங்கள் என ஆர்ப்பாட்டமான அழகில் இருந்தாள். பார்த்து பார்த்துச் சிலமணி நேரங்களைச் செலவு செய்து போடப்பட்டிருந்த மேக்கப் அவள் அழகை பலமடங்கு பெருக்கிக் காட்டியது. அவர்களது மேசையைக் கடந்து சென்ற சகலரும் ஒரு தடவையாவது அவளைத் திரும்பிப் பார்க்காமல் செல்லவில்லை. ஆண்கள் தங்கள் இருக்கையில் அமர்ந்த பின்னும் அவளையே அடிக்கடி பார்த்தனர். ஒரு சிலர் கண்கொட்டாமல் அவளைப் பார்த்து வழிந்தனர். அது அவளுக்கும் பிடித்திருந்தது.
ஆனால் அந்த மேசையில் அவளுக்கு எதிரே அமர்ந்திருந்த செந்தூரனோ அவளைப் பார்க்காது சற்றுத் தள்ளி, தாயின் மடியில் அமர்ந்திருந்த பெண் குழந்தையையே பார்த்திருந்தான். தாய் ஊட்டிவிட்ட ஐஸ்கிரீமை சுவைத்தபடி இருந்த அக்குழந்தையும் இவனைப் பார்த்து இடையிடையே சிரித்தது. அது இவன் முகத்திலும் சிரிப்பை வரவழைத்தது.
அவன் முகத்தில் சிரிப்பைக் கண்டபோதும் தான் கேட்ட கேள்விக்கு அவனிடம் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை என்பது கனிந்தாவிற்கு சற்று சங்கங்கடத்தை உண்டாக்கியது. எனினும் அதனை முகத்தில் காட்டாமல் மேசை மீது இருந்த அவனது இடக்கையில் தன் கையை வைத்து அழுத்தியபடி “செந்தூரன்..” என்று சற்றே அழுத்திக் கூப்பிட்டாள்.
அவள் கையைத் தொட்டதும் திடுக்கிட்டு அவளைப் பார்த்தவன் “ம்ம்… என்ன கேட்டாய் கனிந்தா?” என்றான்.
‘இவன் நான் கதைத்ததைக் கூட கவனிக்காமல் அப்படி என்ன முக்கியமான வேலை செய்யிறானாம்’ என்று எரிச்சலாக மனதுக்குள் எண்ணியதை வெளிக்காட்டாமல்,
“இல்லை. ஐஸ்கிரீமை சாப்பிடாமல் பார்த்துக் கொண்டிருந்திங்க. அதுதான் சொக்லேட் வ்பிளேவர் உங்களுக்கு பிடிக்காதோ என கேட்டேன்” என்றாள்.
“பிடிக்காது எண்டில்ல. ஆனா அவ்வளவா விரும்பி சாப்பிட்டதில்லை. அந்தப் பிள்ளையைப் பார்த்தாயா? எவ்வளவு வடிவாய் சிரிக்குதல்லோ?” என்று சற்று தள்ளியிருந்த அந்தக் குழந்தையைக் கண்களாலேயே காட்டினான் செந்தூரன்.
நெற்றியில் புரண்ட கற்றை முடியைத் தன் ஒற்றை விரலால் ஒதுக்கி விட்ட கனிந்தா,
‘அழகோவியமாய் முன்னால் இருக்கும் என்னை ரசிக்காமல் ஏதோ ஒரு குழந்தையைப் பார்க்கிறானே.. இவனை என்ன செய்யலாம்’ என்று மனதுக்குள் திட்டினாள். “அப்படியா?” என்று வாய் வார்த்தையாய் கேட்டவள் திரும்பி அந்தக் குழந்தையைப் பார்க்கவேயில்லை. அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
அந்த றெஸ்ரோறன்ரின் இரண்டாவது மாடியில் மிகப்பெரிய ஜன்னல்கள் திறந்து விடப்பட்டிருந்தன. அந்திசாயும் நேரத்தில் வீசிய சில்லென்ற காற்று ஜன்னல் அருகிலேயே இருந்த அவனது அலையலையான கேசத்தை மெலிதாகக் கலைத்து விட்டுக் கொண்டிருந்தது.
‘ஆணழகன் தான். ஐந்தரை அடி உயரத்துடனும் அழகான உடல் கட்டுடனும் இருந்தான். சற்று நிறம் குறைவான போதும், எப்போதும் சிரிக்கும் அந்தக் கண்கள் அவளை ஈர்த்தன. இந்தக் கண்களைப் பார்த்ததும் தானே அவனைப் பிடித்தது. அவனது கம்பீரமும் விடாமுயற்சியும், அவனது தொழிலில் அவன் முன்னேறி சம்பாதிப்பதும் அவளுக்குப் பிடிக்கவேதான் கல்யாணத்துக்குச் சம்மதம் என்று கூறினாள். ஆனாலும்..’ அவளது எண்ண ஓட்டம் புரியாதபோதும் அவளது பார்வை அவனை சற்று சங்கடப்படவே வைத்தது. அதனைத் தவிர்க்கும் எண்ணத்துடன், “கனிந்தா.. நீ என்கிட்ட கட்டாயம் ஏதோ பேசணும். அதனால தனியா சந்திப்போமா என்று கேட்டாய். வந்து அரை மணித்தியாலம் ஆச்சு.. சும்மாதான் கதைக்கிறம். அந்த முக்கியமான விஷயம் என்ன சொல்லு” என்று நேரடியாக விஷயத்துக்கு வந்தான் செந்தூரன்.
“ஓம்.. முக்கியமான விஷயம்தான். அதை உங்ககிட்ட சொல்லணும். வீட்டில உங்ககிட்ட இதப் பேச நமக்கு பிறைவசியே கிடைக்கல. அது தான் றெஸ்ரோறன்ற் போவமா என்று கேட்டனான்.”
“ம்ம்..”
“நான் கனடாவில் இருந்து வந்து பைவ் டேய்ஸிலயே நமக்குக் கல்யாணம் பேசிட்டாங்க. பட், எனக்கு உங்களைப் பற்றி எதுவுமே தெரியாது. உங்களுக்கும் என்னைப் பற்றி அவ்வளவாத் தெரியாதுதானே.. கோசலா மாமிதான் உங்களைப் பற்றிச் சொன்னாங்க. உங்க ரலன்ற் எனக்குப் பிடிச்சுது. நேர்லயும் பார்த்து கொஞ்சம் பேசவும் ஓகே. அதோட அப்பாக்கும் அப்பம்மாவுக்கும் உங்களை நல்லாப் பிடிச்சிற்றுது. சோ, எனக்கும் ஓகே என்று சொல்லி சம்மந்தக் கலப்பும் (நிச்சயதார்த்தம்) செய்தாச்சு…”
“ம்ம்”
‘பட், எனக்கு…” தொடர்ந்து பேசத் தடுமாறியவள் தன் முன்னால் இருந்த ஐஸ்கிரீம் கிண்ணத்தில் இருந்து சிறிதளவை எடுத்து உண்டாள். செந்தூரனும் எதுவும் கூறாமல் அவள் சொல்லப் போவதைக் கேட்டுக் கொண்டிருந்தான்
இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்கதும் வளமும் வனப்பும் கொண்டதுமான மாவட்டமே திருகோணமலை. இங்கு திருகோணேஸ்வரர் ஆலயத்தை அண்மித்ததாகக் காணப்படும் வணிக நகரின் மத்தியில் அமைந்துள்ளது முருகன் வாணிபம். மிகவும் பிரபல்யமான இப் பலசரக்கு மொத்த விற்பனை நிலையத்தின் உரிமையாளன்தான் செந்தூரன். இது தவிர முருகன் ஸ்டோர்ஸ் என்னும் பெயரில் நிலாவளி, தம்பலகாமம், மூதூர் ஆகிய பிரதேசங்களிலும் பலசரக்குக் கடைகளை உருவாக்கி தனது மச்சான்களைக் கொண்டு நடத்தியும் வருகின்றான். முருகன் டிராவல்ஸ் என்ற பெயரிலும் கொழும்பிலிருந்து பொருள்களை ஏற்றி இறக்கவென இரண்டு லொறிகள் அவனிடம் உள்ளன. செந்தூரனின் தாயார் தேவநாயகி அவனது இரண்டு வயதிலேயே நோயினால் இறந்துவிட்டார். அவனை சிறுவயது முதல் வளர்த்தது அவனது தந்தையான முருகானந்தத்தின் தங்கை ஜெயராணியே. அவரது கணவர் கார்த்திக்கும் முருகானந்தத்துடன் கடையிலேயே பணிபுரிந்தார். முருகானந்தம் தனது திருமணத்திற்கு முன்பே சிறியதொரு பலசரக்குக் கடையை ஆரம்பித்தார். அவரது அன்றாட செலவுகளுக்கு தேவையான அளவுடன் அவரது தொழிலை நடத்தி வந்தார்.
செந்தூரன் உயர்தரத்தில் வணிகப்பிரிவில் கற்று சிறந்த பெறுபேறுகள் பெற்றிருந்தான். ஆனாலும் பல்கலைக்கழகம் செல்ல விருப்பமற்று தந்தையின் சிறிய கடையைப் பொறுப்பெடுத்து நடத்தத் தொடங்கினான். இவனது அயராத உழைப்பால் இன்று இந்த நிலைக்கு உயர்ந்துள்ளான். இவன் கடையை பொறுப்பெடுத்ததும் முருகானந்தத்தை வீட்டிலேயே ஓய்வெடுக்க சொல்லிவிட்டான். ஆனாலும் அவர் ஓய்ந்து இருக்காது சில நாள்களில் கடைக்கு வந்து அவனுக்கு கூடமாட உதவியாக நிற்பார்.
அவனது அத்தை ஜெயராணிக்கு மூன்று மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இரண்டு மகன்களும் மகளும் செந்தூரனை விட பெரியவர்கள். மூவருக்கும் திருமணமாகிவிட்டது. நான்காவது மகன் ரவிவர்மன். இவன் செந்தூரனுடனேயே தொழிலைக் கவனித்து வருகின்றான். அவரது கணவர் நிலாவெளியிலுள்ள கடையை நடத்துகின்றார். ஜெயராணிக்கு நான்கு பிள்ளைகள் இருந்தபோதும் செந்தூரன் மீது அவருக்கு அளவற்ற பாசம்.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் அவன் வீட்டில் ஓய்வாக இருந்த நேரத்தில் கடைக் கணக்குகளை சரி பார்த்துக் கொண்டிருந்தான்.
அப்போது அருகில் வந்தமர்ந்த ஜெயராணி செந்தூரனின் தலையைத் தடவிவிட்டார். அவனுக்கு இருபத்தேழு வயதானபோதும் அத்தைக்கு அவன் எப்போதும் குழந்தையே. தாய் இறந்ததைக் கூட அறியாத இரண்டு வயதில் இவரின் மடியில் தஞ்சம் புகுந்தவன்தான், இன்றுவரை தாய் இல்லையே என்ற ஏக்கம் சிறிதளவும் தோன்றாமல் வளர்த்து வந்தவர்.
அவரின் அருகாமை எப்போதும் தரும் இதத்தை இன்றும் அவனுக்கு தந்தது.
“ஏனய்யா, உனக்குத் தேத்தண்ணி போட்டுத்தரவா?” என்று கேட்டார் ஜெயராணி.
திரும்பி அவரைப் பார்த்து சிரித்தவன்
“இப்ப கொஞ்சம் முன்ன தானே சோறு சாப்பிட்டன். அதே இன்னும் செமிக்கல (சமிபாடு). பிறகு குடிக்கிறன். ஏன் அத்த கொஞ்சம் படுத்து எழும்பியிருக்கலாமே” என்றான்.
“எனக்கு நித்திர வரேல.. சரியான வேலையா தம்பி உனக்கு?” என்று கேட்டார் .
“இல்லையே அத்த.. ரவி கூட இருக்கிறபடியா எனக்கு கொஞ்சம் ரிலாக்ஸாயிருக்கு. நீங்க அதெல்லாம் யோசிக்காதீங்க. இந்த வயசுல ஓடியாடி உழைக்காம எப்பத்தான் உழைக்க போறன்” என்று உற்சாகமாகக் கேட்டவன்,
“அத்த ஏதோ கேட்க அடிபோடுறா போல இருக்கே.. என்னத்த? என்ன வேணும்? சாறியா? நெக்லஸா? என்னவென்றாலும் உங்களுக்கு வேண்டித் தராம வேறு யாருக்குத்தான் வேண்டித் தரப் போறன். கேளுங்க.. என்னவேணும் உங்களுக்கு?” என்று கேட்டான்.
“எனக்கு என்ன குறை தம்பி.. தேவையானதை எல்லாம் தாராளமாய் வாங்கி தந்திருக்கின்றாய். இதுக்குப் பிறகு நான் என்னத்துக்குத் தான் ஆசைப்படப் போறேன். இது வேற விஷயம்… நம்ம கோசலாட அண்ணன் குடும்பம் கனடாவில் இருந்து வந்திருக்கினம் எல்லோ. அவங்களக் கண்டனியா?” என்று கேட்டார்.
“இல்லயே… நேற்று கோசலாச் சித்தி கடைக்கு வந்தப்ப சொன்னவதான்”
“நேற்று வீட்டையும் கோசலா வந்தவா.. அவ அண்ணனுக்கு ஒரே ஒரு மகளாம். அந்தப் பிள்ளைக்கு மாப்பிள்ளை பார்த்து, கல்யாணம் கட்டி வைக்கத்தான் இலங்கைக்கு வந்தவங்களாம். அவள உனக்குப் பேசுவமா என்று கோசலா கேட்டாள். எனக்கும் பிள்ளை நல்லம் போல தான் இருக்கு. கோசலாவும் அவளைப் பற்றி நிறையச் சொன்னாள். இன்டைக்கு (இன்று) அந்தப் பிள்ளையின்ர போட்டோ குடுத்து விட்டிருக்கா. உன்ர போட்டோவையும் நான் கோசலாட்ட குடுத்தனான். அண்ணாட்டையும் இதப்பற்றிக் கேட்டன். அவரும் பேசச் சொன்னவர். போட்டோவைப் பாரு.. உனக்கு பிடித்தால் பேசுவம்” என்றார்.
“அத்த.. உங்களிட்ட என்ன சொல்லியிருக்கன். நீங்க யாரப் பிடிச்சிருக்கு என்று சொல்றிங்களோ அவள்ட கழுத்தில கண்ண மூடிக்கொண்டு நான் தாலியக் கட்டுவன் என்று சொன்னன்தானே”
“இந்த சினிமா வசனமெல்லாம் என்கிட்ட பேசவேண்டாம் மவனே… முதல்ல போட்டோவப் பார்த்திட்டு சொல்லு. அப்புறம் கண்ணு சரியில்ல, மூக்கு சரியில்ல என்று எங்கிட்ட வந்து புலம்பக் கூடாது” என்றார் ஜெயராணி.
“எனக்கு என் அத்தை மாதிரி இருந்தாலே போதும் கண்ண முடிகொண்டே தாலியக் கட்டுவனே..” என்றவன் ஜெயராணியைக் கட்டியணைத்தான்.
“ஐஸ் வைத்தது போதும்.. முதல்ல போட்டோவை பாரு தம்பி”
“ஓகே, ஓகே இதோ பார்க்கிறன்” என்றுவிட்டு போட்டோவை எடுத்துப் பார்த்தான். மிகவும் அழகாகத் தான் இருந்தாள். கனடாவில் பிறந்து வளர்ந்தவள் என்கின்ற போதும் சாறி கட்டி, தலையில் நிறைய பூ வைத்து போட்டோ எடுத்திருந்தாள். வேண்டாம் என்று மறுத்துச் சொல்ல காரணம் இல்லாத போதும், அவனுக்கு ஏனோ எந்தவித ஈர்ப்பும் ஏற்படவில்லை. அந்த அழகு அவனை ஈர்க்கவில்லை என்பதே உண்மை.
அதனை வெளிக்காட்டாது உதட்டோர புன்முறுவலுடன் அத்தையைப் பார்த்தான்.
“என்ன தம்பி எதுவுமே சொல்லல. உனக்கு இந்தப் பெட்டையைப் பிடிச்சிருக்கா. அழகா இருக்காளல்லோ.”
“ம்ம்.. ஓகே.. எப்பவோ உங்களிட்ட நான் சொல்லிட்டன். எனக்கு பொம்பள பாக்குறது உங்கட பொறுப்பு என்று. உங்களுக்குப் பிடிச்சா நான் செய்வேன் என்று தானே சொன்னனான்”
“தம்பி உனக்குப் பெட்டையப் பிடிச்சிருந்தா மட்டும் தான் அவங்ககிட்ட பேசணும்” என்றார்.
“எல்லாம் சரியத்தை… அவங்க கனடா என்றால் இங்கு எப்படி இருப்பாங்க? என்னால் அங்கெல்லாம் போக முடியாதல்லோ.. நான்.. என்னால வேற ஊருக்குப் போனாலே ஒரு நாள் இருக்க ஏலாது. இதுல வெளிநாடு எல்லாம்.. கட்டாயம் முடியவே முடியாது. நம்ம வீட்டோட இருப்பாங்களா என்று கேட்டுட்டு மேல பேசுங்க” என்றான்.
தன் மருமகனின் மனம் அறிந்த ஜெயராணி அதைக் கேட்காமல் விட்டிருப்பாரா?
“ஓம் தம்பி நான் அதெல்லாம் கேட்டுட்டேன். அவங்களுக்கு குடும்பத்தோடு இங்கேயே செற்றிலாகிற பிளான் தானாம். அதனால்தான் பிள்ளைக்கு இங்கேயே மாப்பிள்ளை பாக்குறினம். இங்கே சொந்தமாக வீடு ஒன்றைக் கட்டிட்டாங்களாம். கோசலாட அண்ணா கொழும்பில ஏதோ பிசினஸ் செய்யப் போறாராம். எல்லாம் கேட்டுட்டு தான் உனக்கு வந்து சொல்றன் தம்பி” என்றார்.
“சரியத்த. நீங்க பேசி முடிச்சிடுங்க. அப்பாவுக்கும் இதில சந்தோசம் என்றால் எனக்கும் சரிதான்” என்றவன் தொடர்ந்து கணக்குகளை சரிபார்க்கத் தொடங்கினான்.
அவனின் சம்மத வார்த்தையே அத்தையின் மனம் குளிரப் போதுமானதாக இருந்தது. உடனே கோசலாவிடம் தகவல் சொல்லி எல்லாப் பேச்சுவார்த்தைகளையும் முடிச்சு இரண்டு தினங்களில் சம்பந்த கலப்பும் செய்துவிட்டார்கள். இன்னும் ஒரு மாதத்தில் கல்யாண நாளும் முடிவாகிவிட்டது. சம்பந்தக் கலப்பு முடிந்த பின்னர் செந்தூரனும் கனிந்தாவும் ஓரிருமுறை சந்தித்துக் கொண்ட போதும் அதிக அளவில் பேசிக்கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
அன்று ஞாயிற்றுக்கிழமை காலையில் அவனது கைத்தொலைபேசிக்கு அழைப்பு எடுத்த கனிந்தா மாலையில் அவனை நகரின் பிரசித்தமான ஹைபிரிட் ரெஸ்ரோரன்ரில் சந்தித்துப் பேசக் கேட்டாள். அவனும் அன்று கடை பூட்டு என்பதால் சந்திக்க சம்மதித்தான். அவள் வீட்டுக்கே சென்று தனது காரில் அழைத்து வந்தான்.
ஐஸ்கிரீமை முடித்தவள், ரிசு பேப்பரால் தன் உதடுகளை மெல்லத் துடைத்துவிட்டாள். அவனை ஏறெடுத்துப் பார்த்தவள் “செந்தூரன், எனக்கு உங்களைக் கல்யாணம் கட்டப் பிடிச்சிருக்கு. ஆனால்.., என்னால இங்கெல்லாம் இருக்க முடியாது. அப்பாவிடம் நானும் சொல்லிப் பார்த்து விட்டேன் ஆனால் அவர் கேட்கிறாரே இல்லை. இந்த சிற்றுவேஷன், இந்த ஊர் எதுவுமே எனக்குப் பிடிக்கல. நாம கல்யாணம் முடிச்சு கொஞ்ச நாளிலேயே கனடாவுக்குப் போயிடுவோமா? நான் அங்கு வேர்க் பண்ணுறன். ரூ மனத்ஸ் லீவு போட்டுட்டு தான் வந்தனான். சோ, நீங்க உடனே வேலைக்குப் போகணும் என்று இல்ல. நீங்கள் இங்கே இருக்கிற பிசினஸ் எல்லாம் வித்துட்டு உங்க அப்பாவுக்கும் கொஞ்சம் பிக்ஸ்டில் போட்டு விடுங்க. உங்க அத்தையோட அவர் இருப்பார்தானே?” என்று அவள் மளமளவென பேசவும் திகைப்பூண்டை மிதித்தாற்போல அதிர்ச்சியுடன் செந்தூரன் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
🏃🏻♀️🏃🏻♀️ஏன்மா கனிந்தா முன்னாடி யாராச்சும் உட்கார்ந்து இருந்தா நீ பாட்டுக்கு பேச கூடாது, அவன் கேக்கிறனா இல்லை வேடிக்கை பார்க்கிறானா சுத்தி முத்தி பாத்துட்டு பேசு. பைத்தியம்னு நினைச்சுக்க போறாங்க..
நல்லா வாழைப்பழம் மாறி பேசுனியே செந்தூரன் குட்டி ஹார்ட்ல பெரிய ஊசியா இறக்கிட்டியே…
கனிந்தாவை கல்யாணம் பண்ணுவான இல்லையா?
நல்ல துவக்கம் சிஸ்டர். வாழ்த்துக்கள் ❤️
Thanksda😍😍😍
என்ன பொசுக்குன்னு சொல்லிட்டா… ஹீரோ சார் நமக்கு ரைட்டர் ஜி வேற பொண்ணு வச்சு இருப்பாங்க போல வெய்ட் பண்ணுங்க 🙈🙈 சூப்பர் writing sis 🥰🥰🥰
😍😍😍🤭🤭Thanks da
ஆத்தி இது வெளிநாட்டு மோகம் டா ராசா… பயபுள்ளைக்கு பிறந்து வளர்ந்த இலங்கை வேணாமாம் டா தங்கமே .. செந்துமா… நம்ம வேற நல்ல புள்ளையா என்ன மாதிரி ஒரு பொண்ண பாத்துக்கலாம் சரியா 😁😁😁
கதை அழகா தொடங்கி இருக்கீங்க க்கா 😍
உங்கள மாதிரியே பார்த்திட்டாப் போச்சு.. 🥰🥰🥰🥰😜😜
அப்பா அத்தை குடும்பம்னு சந்தோசமா இருந்து சொந்த நாட்டுல தொழில் தொடங்கி நல்ல நிலைக்கு வந்திருக்கிறோமே இப்படி எல்லாத்தையும் விட்டுட்டு கனடாவிற்கு அனுப்ப எப்படி வருவான்.
அடேய் செந்தூரா இவ உனக்கு செட்டாக மாட்டா இவள இப்படியே துரத்தி விட்டுடு உனக்கு வேற நல்ல புள்ளையா பார்த்துக்கலாம்.
இவ அதுக்கு சரிப்பட்டுவரமாட்டா…. போ….
😍😍