Loading

வாசல் வரை சென்றவன் அங்கே நின்றிருந்தவர்களைப் பார்த்து சமைந்து நின்றான். 

 

நரேஷ்வர், ஹுசைன் ஒரு பைக்கிலும் 

ஜஸ்டின், திரவ்யா இன்னொரு பைக்கிலும் ரிசப்ஷனிற்கு தயாரான உடையில் வந்திருந்தனர்.

 

மகிழ்,”இவனுங்கலாம் எதுக்கு?”

 

மொழி, “ என்னடா இப்பிடி கேட்டுட்ட. காலேஜ் குரூப்ல அவதானே இன்விடேஷன் போட்டு எல்லாரும் மறக்காம வந்துடுங்க னு போட்டா”

 

“அதுக்கு திரவ்யாகும் ஜஸ்டின் கும் சம்பந்தமே இல்லையே டி”

 

“அதுங்க ஓசில சாப்பிட வருதுங்க. நீ வா” என்று அவன் தோளில் தட்டி விட்டு சாவகாசமாக முன்னே நடக்க

மகிழ் வானத்தைப் பார்த்து “என்னை பெத்த தாயே ! இந்த பைத்தியங்க கிட்ட இருந்து காப்பாத்துமா !” என்று மானசீகமாக கோரிக்கை விட்டான்.

அவரோ ‘உன்னை எந்த கொம்பனாலும் காப்பாத்த முடியாது ராசா’ என்பது போல் படத்தில் சிரித்துக் கொண்டிருந்தார்.

 

ஜஸ்டின் திரவ்யாவை பார்த்து’ இந்த அசிங்கம் நமக்கு தேவையா’ என்பது போல திரும்பிப்பார்க்க.

அவளோ சமாதானமாக தோளில் தட்டிக் கொடுத்தாள். “விடு மச்சான். அசிங்கப்படுறது எல்லாம் நமக்கு புதுசா என்ன?”

 

“அதுவும் சரிதான்” என்று சமாதானம் ஆகினான்.

 

மகிழ் காரை எடுக்க மொழியும் ஏறிக் கொண்டாள். இவர்களின் கலாட்டா பயணமும் ஆரம்பமானது.

 

மகிழ், நரேஷ், ஹுசைன், மொழி நால்வரும் ஒரே காலேஜ் என்றாலும் வேறு வேறு துறைகளை தேர்ந்தெடுத்தவர்கள். அவர்கள் படித்த காலேஜ் எல்லா மொழியினருக்கும் சமம். அத்தோடு அங்கு  தமிழர்களின் எண்ணிக்கையும் குறைவு. இவர்களுக்காக  தமிழர் சங்கம் என்று தனியாக உருவாக்கப் பட்டதில் பழகி(மகிழ், மொழியை தவிர)

உருவான நட்பு வட்டம் தான் இது. 

 

மகிழிற்கு நல்ல நட்பு வட்டம் இருந்தாலும் தனக்கென்ற ஒரு நெருங்கிய உறவை தேடி ஏங்கிய போது வரமாக(அவனைப் பொறுத்தவரை) வந்தாள் இனியா.

 

அன்னை ஒரு இராணுவ அதிகாரியாக கடமை ஆற்றும் போது அவரோடு செலவிடும் நேரங்கள் குறைவானாலும் அவருடைய பாசம் எல்லையற்றதாக கிடைத்தது.

 

அவனின் தந்தை மகிழ் கேட்பது எதுவாயினும் அவன் கையில் கிடைக்க வேண்டும் என்றும் தன்னை ஒரு உறவாக கூட நினைக்காது பணம் என்ற எல்லைக்கோட்டில் தள்ளி நடத்திய உறவுகளிடம் ஜெயித்து காட்ட வேண்டும் என்றும் வியாபாரமே வாழ்க்கையாகக் கொண்டார். அதனால் அவனோடு செலவிடும் நேரங்களும் அரிதாகி போனது. அன்னை இறந்தபின் அத்தைமடி ஆறுதலாக கிடைத்தது.

 

மகிழ் பதின் வயதை அடைந்த போது அவன் அத்தை தனியாக தொழில் ஒன்றை ஆரம்பித்து அதில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கினார். அதனால் அவரின் பாசமான வருடலுக்கும் பேச்சுக்கும் மனம்  ஏங்கியது. 

 

இன்னொரு பக்கம் மொழியோ பாசமான வார்த்தைகள் என்றால் என்ன விலை என்று கேட்பாள். 

 

ஆனால் இவன் வெறுமையும் மொழியின் சண்டைகளில் காணாமல் போவதை உணரவில்லை, அவன் மேல் அவள் கொண்ட இயல்பான பாசத்தையும் உணரவில்லை. 

ஏனெனில்  மொழியிடம் மட்டும் அனைவரும் இயல்பாக இருப்பதை நினைத்து பொறாமை கொண்டான். 

 

(மொழியின் குணத்திற்கு யாரும் அவளிடம் இயல்பாக பேசாமல் போனால்தான் அதிசயம்)

 

அதோடு தன்னோடு யாரும் நெருங்கி அன்பான வார்த்தைகளை உதிர்த்தால் அவர்களை உடனே நம்பி விடுவான்.

 

அவனின் இந்த இயல்பை தன்னுடைய சுய லாபத்திற்கு பயன்படுத்திய இனியா அவனை காதல் வலையில் வீழ்த்தினாள்.

மொழி அவனிடம் எவ்வளவோ எடுத்துக் கூறியும் கேட்காமல்  இனியாவிடம் ஏமாந்தும் போனான்.  

 

உடைந்து இறுகி போன அவனைத் தேற்ற சிவநேசன் அவரது தொழிலை பார்க்கச் சொன்னார். விரும்பாத தொழிலில் இறங்கியவன் ஒரு சலிப்பை உணர்ந்து அதிலிருந்து விலகினான்.

 

அவன் சிறு வயது கனவை அறிந்த மொழி, தம் நட்பு வட்டத்தை கூட்டு சேர்த்து

அதற்கு மகிழை தலைவனாக்கி

சிறிய சிறிய விழாக்களுக்கு போட்டோ வீடியோ செய்து கொடுத்தனர். சில விழாக்களை ஒழுங்கமைத்தும் கொடுத்தனர். 

 

இவர்களின் திறமை மூலம் கிடைத்த அவர்களின்(வாடிக்கையாளர்களின்) சந்தோஷம் மகிழையும் பழையபடி மாற்றியது. இன்னும் நிறைய செய்வதற்கும் தூண்டியது.

 

சிவனேசன் அவனுக்கொரு ஸ்டூடியோ அமைத்துக் கொடுப்பதற்கு கேட்டதை மறுத்து தன் சொந்த சம்பாத்தியத்தில் ஆரம்பித்தான். சிவனேசனின் தொழில் வட்டாரத்திலும் வேறு ஆட்களிடமும் கிடைத்த கட்டளைகளுக்கு இவர்கள் திறம்பட செய்தவை இவர்களின் வளர்ச்சியையும் பெருக்கியது.

 

Master Mindz( PVT) LTD ஆகவும் மாறியது. 

 

அத்தோடு இவர்கள் சுயமாகவும் குறும்படங்கள் தயாரித்து வெளியிட்டனர். அதுவும் மக்களின் பெரும் வரவேற்பை பெற்றது. குறும்பட தயாரிப்பிற்கு ஜஸ்டினின் இசையும் எடிட்டிங் காக   திரவ்யாவும் தேவைப்பட , அவர்களும் இந்த நட்பு வட்டத்தில் இணைந்து கொண்டனர்.

 

ரிசப்ஷன் மண்டபம் பிரம்மாண்டமாக அலங்கரிக்கப் பட்டிருந்தது. 

வாயிலில் “கெளதம் வெட்ஸ் இனியா” என்ற பலகையை ஏளனமாகப் பார்த்தவாறு இறங்கினர் குரங்குகள் ஐவரும். மகிழோ இதை இயல்பாக கடந்து சென்றான். இப்போது அவனைப் பொறுத்தவரை கல்லூரி தோழியின் நிகழ்வு அவ்வளவு தான். 

 

உள்ளே சென்றவர்கள் ஒரு மேசையை முழுதாக கைப்பற்றி அமர்ந்தனர். மகிழைத்தவிர மற்ற ஐவரும் எதுவோ தீவிரமாக பேசிக் கொண்டிருந்தனர். 

மகிழ் , அருகில் இருந்த ஹிந்தி கார நண்பனிடம் வளவளத்துக்கொண்டிருந்தான். அவ்வப்போது இவர்களையும் கவனிக்க தவறவில்லை. 

 

இவர்கள் பிளான் பண்ணுகிறோம்

என்று கூறியதை கூட ஏதோ விளையாடுகிறார்கள்

என்று டீலில் விட்டு விட்டான்.

 

சிறிது நேரத்தில் அரங்கில் இருந்தவர்களின் ஆரவாரத்தில் மணமக்கள் கைகோர்த்து மேடையருகே நடந்து வந்தனர். மகிழ் இயல்பான ஒரு புன்னகையுடன் அதைப் பார்த்திருந்தான்.

மணமக்கள் சரியாக இவர்கள் மேசையை நெருங்கும் போது மொழி நரேஷிற்கு சைகை காட்ட நரேஷ் வேண்டுமென்றே அருகில் இருந்தவனை முதுகில் தட்டி “ஹேய் துருவ்! எப்போ ஃபாரின் ல இருந்து வந்த?” என்று சத்தமாக கேட்க. இனியாவின் நடை ஒரு நிமிடம் நின்று முகமோ பேயறைந்ததை போல மாறியது. 

 

இதைப் பார்த்த குரங்குகளின் முகத்தில் வெற்றிப் புன்னகை தவழ்ந்தைப் பார்த்து மகிழ் குழம்பிப் போனான். 

 

கௌதம் இனியாவைப் பார்த்து “ஆர் யூ ஓகே பேபி?” என்று கேட்க அவளோ “யா ஐம் ஓகே” என்று சமாளிப்பாக புன்னகைத்தாள். 

 

மீண்டும் நடையை தொடரும் போது மண்டபத்தை ஒரு முறை அலசிப் பார்க்கவும் தவறவில்லை. அவள் இவர்கள் பக்கம் திரும்பும் போது தம்மை இயல்பாக காட்டிக் கொண்டனர். 

 

மேடையை அடைந்ததும் எல்லாரையும் ஜோடியாக ஒரு முறை வரவேற்று அவர்களின் அலங்கார இருக்கையில் அமரவும் நிகழ்வு தொடங்கியது. 

 

சிறிது நேரத்தில் ஒவ்வொருவராக அவர்களை வாழ்த்தி ஃபோட்டோவிற்கு போஸ் கொடுத்து நின்றார்கள்.

 

மொழி பிளான் B  என்று முணுமுணுக்க ஜஸ்டின் தன் அலைப்பேசியை எடுத்துக் கொண்டு வெளியேறினான். 

 

கல்லூரியில் இருந்த இன்னொரு நட்பு வட்டம் மேடை ஏறி ஃபோட்டோவிற்கு போஸ் கொடுத்த பின் அந்த கூட்டத்தில் இருந்தவன், ஒரு நண்பர் இனியாவிற்கு வாழ்த்த வேண்டும் என்றதை கௌதமிடம் சொல்லி அவன் சம்மதித்தவுடன் மொபைலை அவளிடம் நீட்டினான்.

 

இனியா “ஹெலோ” என்றவுடன் 

எதிரிலிருந்தவன் “ ஹெலோ ஹனி. யூ ஆர் லுக்கிங் கோட்ஜியஸ்! உம்மா…” என்றதும் அவள் முகம் வெளிறிப் போய் பதட்டமாக மண்டபத்தை அலசினாள்.

 

“துருவ்!” என்று அவள் மெதுவாக கேட்க

அவன்,” யெஸ் ஹனி. உன் துருவ் தான். உன்னை ரொம்ப மிஸ் பண்றேன். இப்போ உன்னை தூக்கிட்டுப் போய் கல்யாணம் பண்ணிக்கனும் போல இருக்கு வரட்டா. நீ என்னை வேணாம் னு சொன்னதை நான் ஏத்துக்கிட்டாலும் இப்போ அதை ஏத்துட்டு இருந்துருக்க கூடாதோ னு தோணுது. அன்ட் ஆல்சோ ஐயம் ஒன் தி வே ஹனி” என்று அவன் ஹஸ்கி வாய்சில் பேசியதைக் கேட்டு பயந்து நடுங்கி அழைப்பை துண்டித்தாள். ஆனாலும் உணர்வை வெளிக்காட்டாமல் மொபைலை திருப்பிக் கொடுக்க அவனைத்தேட அவனைக் காணவில்லை. மொபைலை திரும்ப எடுத்து பார்க்க அதுவோ உயிரை விட்டிருந்தது. ஒரு பெருமூச்சை வெளியே எடுத்து விட்டு கௌதமை திரும்பிப் பார்த்தாள். அவனோ மேடையில் நின்ற அவன் நண்பர்களோடு ஒன்றிப்போனான். பின் அவளும் ஒருவித பயத்தோடு மண்டபத்தை அலசுவதும் மேடையில் நின்றவர்களை கவனிப்பதுமாக இருந்தாள்.

 

ஜஸ்டினும் உள்ளே வந்து இவர்களோடு இணைந்து கொண்டான். மகிழ் அவர்களிடம் திரும்பி மெதுவாக “என்னங்கடா பண்றீங்க?”என்றான்.

நரேஷ்,” நீ இனியாவோட லிஸ்ட் ல எட்டாவது மச்சான்….இப்போ ஃபோன் ல பேசுனானே அவன் ஒன்பதாவது”

 

“பு…புரியல…”

 

ஹுசைன்,” அவ உன்னை கழட்டி விட்டதும்

புடிச்ச புது ஆளு. ஆனா காமெடி என்னனா அது ஒரு ஃபேக் ஆன ஆளு. அது கூட தெரியாம அவனோட டைம் பாஸ் பண்ணா. அதான் அவன வச்சு ஒரு சின்ன பிளான் பண்ணோம்” என்றவுடன் மகிழ் திகைத்து போனான்.

 

“என்ன சொல்றிங்க? “

 

திரவ்யா “ஆமா மச்சான். அந்த ஃபேக் ஐடியே நம்ம மொழி தான். கிட்டத்தட்ட ஒரு வருஷமா. ஃபோட்டோ ஒரு மலையாள ஹீரோவோடது,மெஸேஜ் இவளோடது ,வாய்ஸ் ஜஸ்டின்னோடது, டைரக்க்ஷன் ஹுசைனோடது”என

 

மகிழ்” அடப் பாவிங்களா?” என்று வாயில் கையும் வைத்துவிட்டான்.

 

மொழி,” எல்லாம் பண்ணிட்டு இப்போ சிரிச்சிக்கிட்டு ஸ்டேஜ்ல நிக்கிறால. அதான் இந்த விளையாட்டு. ஆனா கௌதம் இவள எவ்ளோ லவ் பண்றான்னு அவன் கண்ணுலயே தெரியுது. அதான் கொஞ்சம் பாவம் பாத்து பயமுறுத்திறதோட விட்டுட்டோம். இன்னைக்கு பூரா பயந்து பயந்து  அவளால நிம்மதியாவே இருக்க முடியாது.”

 

நரேஷ்,’ ஆனா கௌதம் பாவம் ல?”

 

மொழி,” பாவம் தான். ஆனா இனி இவளா மாறுவாளோ இல்லையோ. கண்டிப்பா கௌதம்மோட லவ் மாத்தும் னு நம்புவோம்”

 

“இப்போ என்னோட ஃபைனல் டச் ச மட்டும் பாருங்க” என்று விட்டு முன்னே நடக்க மற்ற எல்லோரும் இவளை பின் தொடர்ந்தனர். 

 

மேடைக்குச் சென்றவள் இனியாவை வாழ்த்தி விட்டு கௌதமை நோக்கி,”ஹேபி மெரிட் லைஃப் துருவ்” என்று கை கொடுக்க 

இனியா பயத்தில் நிமிர்ந்து பார்க்க

நரேஷோ ‘சபாஷ்’ என்று பார்த்தான்.

 

கௌதம்,”சாரி…நீங்க என்‌ பெயரை தப்பா சொல்லிட்டிங்க‌. என்னோட பேரு கௌதம்”

 

“ஊப்ஸ் சாரி. மாறி வந்துடுச்சு. ஹேபி மெரிட் லைஃப் கௌதம்” என்று புன்னகையுடன்  மீண்டும் வாழ்த்தினாள். அவனும் ஒரு புன்னகையுடன் ஏற்றுக் கொண்டான்.

 

மகிழ் கௌதமிற்கு வாழ்த்தி விட்டு இனியாவின் பக்கம் திரும்ப இன்னும் பயந்தாள். எங்கே இவனை காதலித்தை சொல்லிவிடுவானோ என்று

ஆனால் மகிழ் கிஃப்ட்டை அவளிடம் ஒரு புன்னகையுடன் கொடுத்து “ நீ என் லைஃப் ல இருந்து போனதுக்கு தேங்க்ஸ்” என்று விடைப் பெற்றான்‌.

 

நிகழ்வு முடிந்தது சாப்பாட்டையும் நன்கு மொக்கி விட்டு  மண்டபத்திலிருந்து வெளியேறி பார்க்கிங் அருகே பேசி சிரித்து இன்று நடந்தவற்றை சொல்லிக் கலாய்த்துக் கொண்டு நடந்தனர். 

 

இவர்களின் சேட்டைகளெல்லாம் தனக்காகவே என்பதை புரிந்து கொண்டவன் அவர்கள் தமது வண்டிகளில் ஏறியதும் ‘தேங்கஸ்’ என்றான்.

 

ஹுசைன் அவனைப் பார்த்து “ஃப்ரெண்ட்ஷிப் குள்ள நோ தேங்க்ஸ்! நோ சாரி!” என்க சம்மதமாக தலையசைத்தான்.

 

பின் மகிழும் மொழியும் காரில் ஏறிக் கொள்ள அவரவர் வீட்டை நோக்கி பயணித்தனர், மறையாத புன்னகையுடன்.

 

என்றுமில்லாத அமைதியாய் காரில் வந்தவளைப் பார்த்து” என்ன ? ஏதாவது தொண்டைல  அடைச்சுக்குசா ?”

 

“ம்ஹும் இல்ல. ஒரு விஷயத்தை பத்தி யோசிச்சிட்டு இருந்தேன்.”

 

“அப்பிடி என்ன விஷயம் அது?”

 

“எப்பிடி உன்கிட்ட லவ் வ சொல்றதுன்னு தான்” என்று பட்டென்று உடைக்க

 

அவனோ,”வாட்???” என்று அலறி காரை பிரேக்கிட்டு நிறுத்தினான்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
7
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்