Loading

சோவென்று பெய்த மழையில், தரையில் தாளமிட்ட நீரைக், கிழித்துக் கொண்டு ஆளில்லா ரோட்டில் பயணித்துக்கொண்டிருந்தது பேருந்து. பேருந்தின் ஜன்னல்களில் மோதி விலகிய மழையின் இரைச்சலும் தோற்கும்படி, அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்தது அந்தக் குழந்தையின் அழுகுரல். நவநாகரீக உடைக்குள் அடங்கியிருந்த குழந்தையின் தாயிடம் சுரந்த பால் பயனற்றுக்கிடந்தது. கையிலிருந்த பால் புட்டியும் காலியாகியிருந்தது. பசியில் துடித்த குழந்தை ஏங்கி அழுத சத்தம் அனைவரின் மனதையும் பாரமாக்கியிருந்தது. வாய் திறந்து கேட்டவர்கள் சிலர், வந்து பார்த்து விட்டுப் போனவர்கள் சிலர், “புள்ளைய வச்சுட்டு இப்படி உடுத்திட்டு வரலாமா?” என ஏசியவர்கள் சிலர். குழந்தையின் தொண்டை வறண்டு கொண்டிருந்தது. “குழந்தையக் குடுக்குறீங்களா”, என வந்து நின்றாள் கைக்குழந்தையை வைத்திருந்த மற்றொரு பெண். தன் குழந்தை இன்னொருத்தி மார்பில் பசியாறுவதா. “இல்ல வேணாம்” என்றாள் இவள். “ஏம்மா புள்ள இப்படிக் கத்துது குடுமா” எனக் குரலை உயர்த்தினார் ஒருவர். அமைதி காத்தாள் இவள். வசைகள் அங்கங்கு இசையாய் எழுந்து வந்தன. இவள் குழந்தையைத் தன்னோடு அணைத்திருந்தாள். நேரம் கடந்தது, குழந்தையின் குரல், மங்கிப்போக ஆரம்பித்திருந்தது. பேசியவர்கள் பயனில்லை என ஒதுங்கியிருந்தனர். மீண்டும் எழுந்து வந்தாள் அந்த மற்றொரு தாய். எதுவும் பேசாமல் இவள் மடியிலிருந்த புட்டியை எடுத்து வந்து சேலைத்தலைப்பால் தன்னை மறைத்தாள். “உங்க புள்ள அழ அழ, என் மார்ல சுரந்த பால் நிக்கவே இல்ல. பசும்பாலா நினைச்சுக் குடுங்க” எனப் புட்டியை நீட்டினாள். ச்பக் ச்பக் என்ற சத்தம் சங்கீதமாய் அங்கு ஒலிக்க ஆரம்பிக்க, கலங்கிய கண்களோடு நிமிர்ந்து பார்த்த இவளைக் கண்டு, தாயன்போடு புன்னகைத்தாள் அவள்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

17 Comments

    1. சொல்ல வார்த்தை இல்லை ங்க 😐
      மனசையே உருக்கிடுச்சு ‌‌‌‌‌…
      தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் இப்படி இருப்பது தான் கஷ்டமா இருக்கு . அந்த தாய் உண்மையில் விசித்திரமானவர் தான் 🤩🤩

      அருமை அருமை 👏👏👏👏👏

    1. Author

      மிக்க நன்றி சகோதரி.

  1. வாவ்… தாய்மையின் புனிதம் ❤. அழகான கதை. போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துகள் சகி 😍

  2. ஆழமாக மனதை வருடிய கதை. குறுகிய வார்த்தைகளை பயன்படுத்தி நிறைவான கதையை தந்தமைக்கு வாழ்த்துகள்

  3. தாய்ப்பால்
    தாயன்புனு கட்டிப்போட்டுட்டீங்க சிஸ்..அதும் அழுகுரல் கேட்டு வந்த இன்னொரு தாயோட அன்பை என்னனு சொல்ல…அருமை அருமை சிஸ்