Loading

வரமொன்று தருவாய்..

 

தவம் 07

 

பேதையவளின் விழிகளின் கருமணிகள் அலைந்திட மறுத்திட இமைகள் தீண்டிட மறந்திட கரையிலடங்கா வியப்பில் பார்வை அரிமாவவனின் மீது உரசி வேரூன்றி நின்றன,சில க்ஷணங்களுக்கு.

 

விசும்பில் இருந்து வந்த விண் கல்லொன்று பவனியில் பள்ளம் துளைத்து ஊடுருவுவது போல் அவன் விம்பமும் அந்த ஒற்றை தரிசனமும் அவளின் கொள்கைகையும் கோட்பாடுகளை தகர்த்தெறிந்து ஆன்மாவின் ஆரம்பப் புள்ளியை தொட்டுச் சென்றது.

 

விழிகளில் உணர்வுக் கோலங்களின் பிரளயம் நீரூற்றாய் சலசலத்திட அடி நெஞ்சத்தின் கீழ்க்கடையில் உணர்வுப் பிராவகமொன்று உருவெடுத்து ஆன்மாவுக்குள் புகுந்து கொண்டது.சலனத்தின் அர்த்தத்தை தெரிந்தறிந்திடாத இருதயத்தில் அதன் ஆர்ப்பு ஆர்ப்பரிப்பாய் முழங்கி நின்றது.

 

யுகங்களாய் அவனைக் காணத் தவம் கிடந்தது போல விழிகளும் அவன் வதனத்தையே மொய்த்து நிற்க பேதையவளின் இருதயத் துடிப்பின் ஓதை செவிப்பறையை சிதற வைத்தது.ஐம்புலன்களும் ஆறறிவும் காற்றில் கலந்து கரைந்து போயிருக்க சுற்றம் சற்றும் அவள் சிந்தையை தொடவேயில்லை.

 

வெறுமனே உருவம் என்று நினைத்தவன் உயிராகி அவள் முன்னே உறுமிக் கொண்டு நிற்பதை அடக்கிக் கொள்ள விழிகளின் வீச்சு போதாதென்று இரு விழிகளும் உருளையாய் விரிந்தன.

 

ஈர்நாட்களில் ஈவிரக்கமின்றி அவளை இம்சித்தவனோ உயிராய்,ஜீவனின் முழு வடிவமாய் அவள் முன்னிலையில் தரித்திருப்பதை காண்கையில் நாமமிடத் தெரியா உணர்வொன்று அவள் உயிரை ஊடுருவி இதயத்தை துகள் துகளாய் நொறுக்கிப் போட்டது.ஆன்மாவின் ஆழிப் பேரலையொன்று சுழன்றடித்து நிகழை வாரி தனக்குள் இழுத்துக் கொண்டது. 

 

உயிருக்குள் உண்டான இம்சை தேகத்தில் விரவிப் பரவிட மிச்சம் மீதியின்றி தேகமெங்கும் உணர்வின் உந்துதால் குளிர்மையொன்று தெளித்திட முற்றும் தத்தளித்து தவித்தாள்,பேதையவள்.

 

தவிப்பும் தத்தளிப்புமாய் தவிடு பொடியாகி அவள் நின்றிருந்தாலும் நெஞ்சமதின் இரகசியோ பிராந்தியமோ அவனுருவத்தை தனக்குள் நிரப்பி பொக்கிஷமாய் சேமித்து வைத்தது,உணர்வுப் பிளம்பின் விளிம்பில் நின்று கொண்டு.

 

“ஏய் பெண்ணே..? ஏன் இப்படி வெறித்துப் பார்க்கிறாய்..?” புருவ சுழிப்புடன் இதழ் வளைத்து உறுமியவனோ காற்றில் கையசைத்திடவே சுயம் மீண்டவளை சீற்றத்தின் பூச்சுடன் எரித்துக் கொண்டிருந்தன,அரிமாவவனின் நீள நேத்திரங்கள்.

 

இன்னிசை ஸ்வரமொன்று செவியில் சப்திக்க இதழ்கடையில் இதமான இள நகையை இருத்திக் கொண்டு இம்சையை உணர்ந்து கொண்டிருந்தவளுக்கு அவனின் தீப்பார்வையில் சப்த நாடியும் அடங்கிப் போனது.

 

உச்சத்தில் சினம் தான்,அவனுக்கு. சினத்தின் அச்சாரமோ,விபரமறியும் பருவம் முதல் அவன் மனதில் அணையாது எரிந்து கொண்டிருக்கும் அனல்.

 

அந்த பற்றியெறியும் அனல் தான் இதுவரை எந்தவொரு மங்கயரையும் அவனை அண்ட விடாமல் தடுத்திருப்பதன் மூல முதற் காரணம்.அவனும் எந்த பெண்ணையும் நம்பாது இருப்பதும் அதனால் தான்.நம்பிக்கை இருந்தால் அல்லவா,தோழமைக்காகவேனும் மங்கையவர்களிடம் பழக இயலும்..?

 

அதுவும் அவனின் கண்ணோடத்தில் மங்கையரை பற்றி எந்த விதமான நல்லபிப்ராயமும் இருந்தது கிடையாது.ஓரிருவர் அதற்குள் சிக்காது விலக்காகி நின்றாலும் அவனின் பிராயங்களில் முன்னிற்க வேண்டியவர்களின் தவறுகள் மரியாதை நிமித்தமான நல்லெண்ணத்தை கூட விதைக்க மறுத்திருந்தது.

 

நம்பிக்கையில்லை;நல்லபிப்ராயம் இருந்ததில்லை என்பதற்காக பெண்களை இழிவு படுத்தும் வர்க்கமில்லை,அரிமாவவன்.அதற்கென்று குறிப்பானவர்களை தவிர மற்றை மங்கையருக்கு மரியாதையும் அளிப்பதுமில்லை.

 

சுருங்கச் சொல்லப் போனால்,அவன் வாழ்வில் இனிவரும் அத்தியாயங்களில் எந்தவொரு பெண்ணையும் இணைத்துக் கொள்ளும் சித்தம் அவனுக்கு இல்லை.அப்படி தீர்க்கமான தீர்மானத்துடன் இருப்பவனால் எப்படி ஒரு பெண்ணின் பார்வை தன்னில் நிமிடங்கள் கடந்தும் படிவதை ஏற்று இயல்பென கருதிட முடியும்..?

 

வதனம் வாடிப் போய் கலக்கத்தை சேர்ப்பித்துக் கொள்ள மிரண்டு போய் விழி தாழ்த்தியவளை சினத்தால் சிதைப்பதை கனிவு கொண்டு கவர்வது தான் உவப்பாய் தோன்றிற்று,கள்வனவனுக்கு.

 

அவன் சீற்றம் கொண்டு சீறி நிற்க அவள் முறுக்கிக் கொண்டால்..?பின்விளைவு பாதகமாய் மாறிப் போவது,அவனுக்கல்லவா..?

 

ஆழ்ந்த நெடுமூச்சிழுத்து தன்னை நிதானப்படுத்தியவனோ தொண்டையை கனைத்துக் கொண்டே அவள் விழிகளை ஏறிட பேதையவளோ இன்னும் விழி நிமிர்த்திடவில்லை.

 

“யான் உன்னிடம் சற்று உரையாட வேண்டும்..” என்றிட,அவளுக்கு நெஞ்சம் முழுவதும் பயம் வியாபித்து நின்றது.

 

பதில் உரைத்திடாது தலை கவிழ்ந்து இருப்பவளின் செயலில் சினம் சிரத்தை மிஞ்சி எழுந்து நின்றாலும் வித்தகனாய் அதை கட்டுக்குள் வைத்தவனின் மூச்சுக் காற்றில் அதன் வெம்மை கரைந்திருந்தது சத்தியம்.

 

“தலை தாழ்த்தி தரையை மேய்ந்து கொண்டிருப்பதை விடுத்து என்னை கொஞ்சம் பார்..யான் உன்னிடம் தான் உரையாட வந்துள்ளேன் என்று புரிந்து கொள்ள முடியாத அளவு மடச்சி அல்லவே நீ..?” கோபத்தை அடக்கினாலும் வார்த்தைகளில் அது தெறிக்க மிரட்சியை சுமந்த விழிகளுடன் நிமிர்ந்து பார்த்தவளுக்கு அவனைக் காண்கையில் உள்ளுக்குள் அச்சம் பரவாமல் இருந்தால் தான் அதிசயிக்க வேண்டும்.

 

“உனக்கு இந்த திருமணத்தில் பரிபூரண சம்மதமா..?” ஆதியும் இன்றி அந்தமுமின்றி அவன் வினவிட அவள் அறிந்தது எல்லாம் ஒரே விடயம் ஆயிற்றே.

 

“ம்ஹும்..எனக்கு புடிக்கல..”

 

“என்ன பிதற்றுகிறாய்..?”

 

“எனக்கு பிடித்தமில்லை..” தட்டுத் தடுமாறி மொழிந்தவளுக்கு அரிமாவவனிடம் மட்டும் ஏன் இத்தனை இளகலை உணர்கிறோம் என்று புரிந்தபாடில்லை.

 

“மெய்யாகத் தான் மொழிகிறாயா..?” வினவியவளின் நேத்திரங்களில் மின்னல்.

 

“ஆம் எனக்கு புடி..பிடிக்கவில்லை..எப்டியாச்சும் இந்த திருமணத்தை தடுத்து நிறுத்திகிறீர்களா..?” இடையில் குழறுபடி நேர்ந்திடினும் அவளின் வார்த்தைகளை கோர்த்தவனுக்கு அவளின் கூற்று தெளிவாய் விளங்கிற்று.

 

“திருமணம் பிடிக்கவில்லையா..? இல்லை திருமணம் செய்து கொள்ளப் போகும் நபரை பிடிக்கவில்லையா..?”

 

“ரெண்டும்..” என்று கூறிக் கொண்டு இருவிரலை விரித்துக் காட்டிட சைகையின் செய்தி புரிந்தவனின் ஒற்றைப் புருவம் ஏறி நிற்க அதை ஓரவிழிகளால் உரசிக் கொண்டாள்,பேதையவள்.

 

“இவள் பார்த்த பார்வையில் என்னைப் பிடிக்காதது போல தோன்றவில்லையே..”முதலிரு விரல்களாலா நுதலைத் தேய்த்தவாறு சிந்தித்தவனுக்கு அவளுக்கு பிடித்தமில்லை என்பதே நிம்மதியின் சாயலைச் சேர்த்திட்டது.

 

“நீ ஐயம் கொண்டு அச்சப்படாதே..இந்த திருமணம் நடந்தேறாது யான் பார்த்துக் கொள்கிறேன்..” வதனத்தில் எந்த உணர்வையும் பிரதிபலிக்காது அவளிடம் மொழிந்தவனோ மின்னல் வேகத்தில் உப்பரிகையில் இருந்து தாவி பாய்ந்திட அவனின் தவ்வலில் அவளிதயத்தில் அச்சம்.

 

முதல் பார்வையில் அவளை முற்றாய் சலனப்படுத்தி நேசத்தின் அர்ச்சனையைத் தூவி முதல் சந்திப்பிலேயே அவளிதயத்தை தன் வசப்படுத்தி கொண்டு விரைந்திருந்தான்,கள்வனவன்.

 

எட்டிப் பார்த்தவளுக்கு தூரத்தில் புள்ளியாய் அவன் உருவம்.இதழ்கள் அழகாய் முறுவலித்தன.

 

மனம் கொய்தவனும் மணந்து கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டவனும் ஒருவனே என்றறியாமல் அவனிடமே மணந்து கொள்வதில் சம்மதம் இல்லை என்று உரைத்து விட்டிருந்தாள்,பேதையவள்.

 

காலச்சக்கரம் ஏது விதைத்திருக்கிறதோ…?

 

                ●●●●●●●

 

“நீங்கள் இனிவரும் தினங்களில் இங்கேயே தங்கிக் கொள்ளுங்கள்..” உத்தரவாய் மூவரிடமும் உரைத்தவரின் நடையில் இருந்த வேகமே அவருக்குள் துளிர்த்திருக்கும் சினத்தை பறைசாற்றுவதாய்.

 

“எங்கிருக்கிறான் அவன்..?” உறுமிக் கொண்டே அரிமாவவன் வாட் பயிற்சி செய்து கொண்டிருந்த கூடத்துக்குள் பிரவேசித்திட அவரின் குரலில் ஆயாசமாய் மாறிற்று,அவனின் முகம்.

 

“இதே வந்து விட்டேன் ராஜகுரு..” நக்கலும் பணிவும் ஒருமிக்க கலந்தடித்த தொனியில் இயம்பியவனோ அவரின் முன்னே வந்து பணிவாய் வந்தணம் வைத்து பாதம் பணியப் பார்த்திட இடை நிறுத்தி அவனின் கன்னம் தெறிக்கும் அளவு விசையுடன் அவரின் ஐ விரல்களும் அவனின் கன்னத்தில் தடம் பதித்தன.

 

“உத்திரத்தை பெயர்த்துக் கொண்டு குதித்து அந்தப் பெண்ணின் மனதை மாற்ற முயல்கிறாயா..? என் பேச்சை கேட்கவே கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு திரிகிறாயா என்ன..?”

 

அரிமாவவனோ சிரம் தாழ்த்தி நின்றானே ஒழிய ஒற்றை வார்த்தை உதிர்த்திடவில்லை.அவர் அறை வைத்த கன்னத்தை தடவியவாறு தாடையை அங்குமிங்கும் அசைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான்,வலியில் சாயல் துளியும் விழிகளில் இன்றி.

 

“மதுரா ஒரு விடயத்தை நன்றாக நெஞ்சில் ஏற்றிக் கொள்..என்னவாயினும் அந்தப் பெண்ணுக்கும் உனக்கும் திருமணம் நடந்தேறத் தான் போகிறது..ஈன்றவள் விட்டுச் சென்று விட்டாள் என்று அனைத்து மங்கையரையும் நீ பார்த்திடும் கோணம் சரியல்ல..புரிந்து கொள்..” அமைதியாய் எடுத்துரைத்தவருக்கு தெரியாமல் இல்லை,அவனில் மாற்றம் ஒன்றை உருப்பெறச் செய்வது சுலபமான காரியமல்ல என்பது.

 

அரிமாவவனோ விழிகளில் அலட்சியமும் கோபமும் தேக்கம் கொண்டிட அகலுடையாரும் மேற் கொண்டு அவனிடம் வாயாடல் நடத்தவில்லை.அரிமாவவனின் வாய்ச்சவடால் அவர் அறிந்தது ஆயிற்றே.

 

“நீ நினைப்பது நடந்தேறப் போவதில்லை மதுரா..திண்ணத்தை இப்பொழுதே சீர் படுத்திக் கொள்..” அவ்வளவு தான் என்பது போல அவர் அகன்றிட,

அரிமாவவனோ பிடதி கேசம் கோதி மெதுவாய் புன்னகைத்தான்,அர்த்தப் புஷ்டியுடன்.

 

ஏழு நாட்கள் கழிந்தோடிய வேகம் அசுரத்தனமாய்.

 

பஞ்சு மெத்தையில் படுத்து விட்டத்தை வெறித்துக் கொண்டவளின் நினைப்பு முழுக்க களவாடிக் கொண்டிருந்தது,அரிமாவவன் தான்.

 

திருமணத்தை நிறுத்துவதாய் வாக்குத் தந்து விட்டு அவனைக் காண அவன் ஒரு முறை கூட வந்து செல்லாதது அவளுக்கு கனத்தை தந்தது.

 

அவள் எங்கே அறிவாள்,அகலுடையாரின் ஒற்றர்களோ கண்ணிமைக்கால் அவள் தங்கியிருக்கும் அரண்மனையின் ஒரு பகுதியான சிறு மாளிகைக்கு காவல் இருப்பதை.அதுவும் அரிமாவவனை உள் நுழைய விடக் கூடாது என்பது அவரது கண்டிப்பான கட்டளை.மீறினால்,அவர்களின் சிரம் பறித்திடவும் தயங்க மாட்டார்,அவர்.

 

“என்ன எலி யோசிச்சிகிட்டு இருக்க..? இன்னிக்கி அந்த தாத்தா உன் கிட்ட கல்யாணத்துக்கு சம்மதமான்னு கேக்க வர்ராருன்னு சொன்னல..என்ன சொல்லப் போற..?”

 

“என்னால சத்தியமா கல்யாணம் பண்ணிக்க முடியாது டி..அதுவும் இப்டி டைம் ட்ரேவல் பண்ணி..திரும்ப நா வீட்டுக்கு அப்பா செருப்பாலயே அடிப்பாரு..உங்கண்ணன் வெளக்கு மாத்தால வெளாசிருவான் டி..”

 

“ம்ம்..அதுன்னா சரி தான்..இப்போலாம் நம்மள தேடி அலஞ்சி கிட்டு இருப்பாங்க போல..” வருத்தமாய் சொன்னாள்,சைந்தவி.

 

என்ன தான் இயல்பாய் காட்டி கொண்டாலும் வீட்டு நினைவு அவளை வாட்டிக் கொண்டு தான் இருந்தது.

 

“சைந்து..” இழுத்தாள்,தங்கையானவள்.

 

“என்னடி..?”

 

“நா உங்கிட்ட ஒரு விஷயம் சொல்லனும்..” விழிகள் தவிப்புடன் அவளைப் பார்த்திட சைந்தவிக்கும் ஏதோ புரிவது போல்.

 

இந்த ஒரு வாரமாய் அவளும் பெண்ணவளை கவனித்துக் கொண்டு தானே வருகிறாள்.அவளைப் பற்றி அறிந்து வைத்திருப்பவளுக்கு உண்டாகியிருக்கும் மாற்றங்கள் பிடிபடாமல் போகாதே.

 

“நா..”

 

“நீ..”

 

“நா ஒருத்தர லவ் பண்றேன்னு தோணுது..” விழிகளை மூடிக் கொண்டு உரைத்தவளோ ஒரு விழி திறந்து அக்காக்காரியை பார்த்திட அவள் முகத்தில் நமுட்டுச் சிரிப்பு.

 

“ம்ம்ம்ம்ம்..அப்போ நா கெஸ் பண்ணது தப்புல்ல..இந்த ஒரு வாரமா நானும் உன்ன பாத்துகிட்டு தான் இருக்கேன்..தனியா சிரிக்கிற..நைட்டெல்லாம் முழிச்சிகிட்டு இருக்குற..அப்போ சரி தான்..பிரிஞ்சிருந்தா லவ்வ ஃபீல் பண்ணுவாங்கன்னு சொல்லுவாங்க..அப்பாடி ஒரு மாதிரி ரமேஷோட லவ்வ ஃபீல் பண்ணிட்ட..”

 

“எதே ரமேஷா..?”

 

“ஆமாடி காலேஜ்ல உன் பின்னாடியே சுத்திட்டு இருப்பானே..அவன தான லவ் பண்ணுற..”

 

“பெனாயில ஊத்தி வாயக்கழுவுடி பைத்தியமே..ரமேஷும் இல்ல..ஒரு மண்ணும் இல்ல..” 

 

“அப்போ யாரடி லவ் பண்ற..?”

 

“பேர் தெரியாது..” என்றிட திகைப்பில் விரிந்தன,சைந்தவியின் விழிகள்.

 

“ஏய் என்னடி சொல்ற..?”

 

“தோ இவரு மேல தான் லவ்வு..” என்றவாறு கரத்தில் இருந்த சிற்பத்தை காட்டிட தூக்கி வாரிப் போட்டது,அக்காகாரிக்கு.

 

அவள் கூறியதை கிரகித்துக் கொள்ளவே சில நிமிடங்கள் தேவைப்பட அது புரிந்ததும் காளியவதாரம் தான் எடுத்தாள்,அவள்.

 

“அடியேய் பைத்தியமே..என்னடி செலய லவ் பண்றேன்னு சொல்லிட்டு இருக்க..பைத்தியமா உனக்கு..?” கோபத்தின் விளிம்பில் கத்தியவளுக்கு ஒரு வா ரமாய் பெண்ணவளில் தோன்றியிருந்த மாற்றங்கள் கண் முன்னே பூதாகரமாய் விரிந்து பயமுறுத்தியது.அவளால் வெறுமனே உளறுகிறாள் என்று புறக்கணிக்க முடியவில்லை.

 

“இல்லடி நெஜமா நா லவ் பண்றேன்..”

 

“எலி உனக்கென்ன பைத்தியாமடி செலய லவ் பண்றேன்னு சொல்லிட்டு இருக்க..?”

 

“அடி செல இல்லடி நெஜமான மனுஷன்..” துவங்கியவளோ அன்று நடந்த மொத்தத்தையும் கூறி விட்டு அவள் முகம் பார்த்திட தலையில் கை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்,மர இருக்கையில்.

 

“செலய லவ் பண்ணலன்னு சந்தோஷப்ப்டறதா இல்ல இப்டி காலம் தாண்டி வந்து லவ் பண்றாளேன்னு கவல பட்றதா எதுவுமே புரிலியே..” முணுமுணுத்தவளுக்கு இயலாமை வழிந்தோடியது.

 

“எழில்..உனக்கு புரியுது தான..நாமளே மாய மந்திரம் பண்ணுன மாதிரி இங்க வந்து மாட்டி கிட்டு இருக்கோம்..இதுல நீ வேற லவ்வு கிவ்வுன்னு சொல்லிட்டு இருக்க..நீயே யோசிச்சு பாரு செட் ஆகுமான்னு..”

 

“செட் ஆகாது..கண்டிப்பா செட் ஆகாது..” அவளின் குரல் அடைத்துக் கொண்டது.

 

பொருந்தினாலும் பொருந்தாவிடினும் அவளுக்குள் எழுந்திருப்பது காதல் தானே.கால அவகாசம் குறைவாய் இருந்தாலும் அந்த காதலில் அத்தனை ஆழம்.

 

காலத்தால் வரும் ஆயுள் தான் காதலின் ஆழத்தை தீர்மானிக்கும் என்பது முற்றிலும் பிழையான கருத்தல்லவா..?

 

“சரி இப்போ என்ன தான் பண்ணப் போற..?”

 

“எனக்கு எதுவும் புரில சைந்து..இந்த லவ் கருமம் எனக்கு செட் ஆகுமான்னாலும் இப்டி ஒரு லவ் சரியா வரும்னு எனக்குன்னா தோணல..அதுக்குன்னு லவ் இல்ல வெறும் அட்ராக்ஷன்னு பொய் எல்லாம் சொல்ல மாட்டேன்..அன்னிக்கி அந்த செலய பாத்ததுமே எனக்கு ஒரு மாதிரி டிஃபரன்டா ஃபீல் ஆச்சு..இப்போ நேர்ல பாத்ததும்..அதுவும் எனக்காக அவரு சண்ட போட்டதும் மொத்தமா கவுந்துட்டேன்னு நெனக்கிறேன்..இப்டி ஒரு சிட்டுவேஷன்ல லவ்..அது தான் ஒரு மாதிரியா கஷ்டப்படுத்துது..” அவள் கூறிட தமக்கைக்கும் அவள் மனநிலை தெளிவாய் புரிந்தது.

 

யதார்த்தத்திற்கும் உணர்வுக்கும் இடையில் அவள் மனம் சிக்கித் தவிப்பது புரிந்தாலும் அவளாலும் எதுவும் செய்திட இயலாதே.அதுவும் பிடித்துப் போனால் உயிராய் நேசிக்கும் தங்கையின் குணம் அறிந்தவளுக்கு மனம் கனத்தது.

 

“அந்த பேர் தெரியாத ஆளு இல்லன்னா என்னால உசுரோட இருக்க முடியாதுன்னு எல்லாம் கெடயாது..தூரம் போனா நானும் அத மறந்துருவேன்னு தோணுது..” நடவாததை சொன்னாள்,அவள்.அவளுக்கே அவளின் வார்த்தைகளில் உண்மை புலப்படவில்லை.இருந்தாலும் நம்பினாள்.நம்பியாக வேண்டிய கட்டாயம்,அவளுக்கு.

 

“அந்தாளு தான் வேணும்..அவர் கூட தான் வாழ்வேன்னு என்னால அடம் பிடிக்கவெல்லாம் முடியாது..அதுக்கு சான்ஸே இல்ல..எனக்கு புரிது..மனசு உறுத்தது..இப்போ வெலகி போறது தான் ஒரே வழி..அதுக்கு அந்த செவப்பு மாணிக்கத்த எடுக்கனும்..”தீவிரமாய் சொல்ல தோழியின் சிரசும் ஆமோதிக்கும் விதமாய் அசைந்து கொடுத்தது.

 

“அப்போ கல்யாணம்..?”

 

“இதுக்கு முன்னாடி அந்த இளவரசர நா பாத்ததே இல்ல..அதுவும் இல்லாம இப்போ என்னோட மனசுல இருக்குறது இன்னொருத்தர்..அப்போ எப்டிடி கல்யாணம் பண்ணிக்க முடியும்..?கண்டிப்பா என்னால ஒத்துக்க முடியாது” விழிகள் கலங்க மொழிந்தவளுக்கு தன்னை இவ்விடம் கொண்டு வந்து சிறை செய்த விதியின் மீது அத்தனை கோபம்.

 

              ●●●●●●●

 

“தெளிவாக சிந்தனை செய்து பதில் மொழி உரைத்திடுங்கள் மகளே..உங்கள் வார்த்தைகள் தான் எம் தேசத்தின் தலைவிதியாய் உருமாறப் போகிறது..”

 

“இல்..இல்லை..என்னால் ஒத்துக்கொள்ள முடியாது..” கோளாறான வார்த்தைகள் இழுத்துக் கட்டினாள்,அவள்.

 

“உங்கள் மறுப்பை யாம் ஒப்புக்கொள்கிறோம்..இருப்பினும் அதன் பிண்ணனியை நீர் விளக்கிக் கூறினால் தகும்..”

 

“நா..எனக்கு இன்..வேறோரு பையனை..ஆணை பிடித்திருக்கிறது..” விழிகள் தரையை மேய்ந்திட இமைத்தாழ் பனித்து உரைத்தவளின் வார்த்தைகளில் அகலுடையாரின் இதழ்கள் மென்னகை ஏற்றிக் கொண்டன.

 

“மகளே..என்ன உரைக்கிறாய் நீ..?” அகலுடையாருக்கு அண்மையில் நின்றிருந்த செவ்வேலரின் இதழ்கள் அதிர்ச்சியாய் அவளிடம் வினாவெய்தின.

 

அவளோ சிரம் நிமிர்த்தாது நின்றிருக்க அவளை ஆழ்ந்து நோக்கிய அகலுடையாரின் விழிகளில் அர்த்தப் பார்வை படர்ந்தது.

 

“மகளே..நீர் ஒப்புக் கொண்டு தான் ஆக வேண்டும்..மறுப்பீர்களாயின்..” என்றவர் விழி சுழற்றிய திசையில் தன் விழிகளை திருப்பி நோக்கியவளுக்கு நெஞ்சம் விம்மி வெடித்தது.

 

வீர்ரகளின் கைப்பிடியில் சிக்கி வாள் முனையில் அவள் முன்னே கொண்டு வரப்பட்டனர்,அவளின் சகோதரங்கள்.

 

“இவனுங்க எதுக்கு நம்ம கழுத்துல கத்திய வச்சிருக்கானுங்க..?” உள்ளுக்குள் வசை மாரி பொழிந்த சத்யாவின் விழிகளில் அச்சம்.

 

“என்ன செய்றீங்க..?”

 

“மூச் பொறுங்கள் மகளே..நீர் மட்டும் ஒப்புக் கொள்ளவில்லை என்றால் நொடியில் இவர்களின் சிரம் சீவி தேகத்தை கோட்டைக்கு முன்னிருக்கும் அகழியில் தள்ளி விடுவதாய் எம் உத்தேசம்..அகழியில் தீப்பட்டினியில் இருக்கும் முதலைகள் என்புத் துண்டங்களைேனும் மிச்சம் வைக்குமா என்பதும் ஐயம் தான்..” சாந்தமான பாவனையுடன் மொழிந்தார்,அவர்.

 

வரம் கிட்டும்.

 

🖋️அதி..!

2024.10.11

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்