Loading

வரமொன்று தருவாய்..

 

தவம் 05

 

“என்னடி சொல்லித் தொலச்ச அவனுங்க கிட்ட..ஃபர்ஸ்டுன்னாலும் குடிசைல தான் அடச்சி வச்சுருந்தானுங்க..இப்போ என்னன்னா கோழி அமுக்குற மாதிரி மூணு பேரயும் அமுக்கி பாதாளத்துல இருக்குற ஜெயில்ல கொண்டு வந்து போட்டுட்டானுங்க..பைத்தியமே என்னடி சொன்ன..?”

 

“நா பொண்ணுன்னு தான் டா சொன்னேன்..வேற எதுவும் சொல்லல..” கைகளை சூழ இறுக்கியிருந்த இரும்புச் சங்கிலியை அங்குமிங்கும் அசைத்தவாறு சொன்னாள்,பெண்ணவள்.

 

“ஒரு வேள பொய் சொன்னதுக்காக கொண்டு வந்து போட்டுட்டானுங்களே..”

 

“வாயக் கெளறாத சைந்து..” பெண்ணவளின் கோபத்தில் அக்காகாரிக்கு ஏக குஷி.

 

மூவரும் தமக்குள் சிந்தனையில் மூழ்கியவாறு இருக்க அவர்களை கலைத்தது,அந்த பாதச்சத்தங்கள்.

 

மன்னன் என்பதற்குரிய எந்த ஆராவாரமுமின்றி சாந்தம் முகத்தில் தவழ நிதானம் நிரம்பிய மிதமான நடையுடன் உள்ளே வந்து கொண்டிருந்தார்,மன்னர் செவ்வேல் வளவன்.

 

இரத்தினம் பதிக்கப்பட்ட மணிமகுடம் வெளிச்சத் துகள்களின் மோதலில் பிரகாசித்திட அந்த வெளிச்சம் ஏனோ ஒளி வட்டம் போல் தான் தென்பட்டது.

 

பதக்கம் சூடியிருந்த மாரை நீண்டு செழித்து வளந்திருந்த நரை தாடி தொட்டுக் கொண்டிருக்க அடிக்கடி அதை நீவி விட்டுக் கொண்டிருந்தன,சுருங்கிய தோல் போர்த்திய அவரின் விரல்கள்.

 

மன்னருக்கு பின்னே முகத்தில் சினம் தெறிக்க வேக நடையுடன் எட்டு வைத்திட்ட அவரின் மெய்க்காப்பாளனின் விழிகளில் செவ்வரியோடியிருக்க இறுகிப் போயிருந்த அதரங்கள் சினத்தால் துடிக்கின்றன.பார்வையாலே அனலை அள்ளி வீசிக் கொண்டிருந்தார்,அவர்.

 

“நீ மெய்யாலுமே மங்கை தானா..?” கைலியும் மேற்சட்டையுமாய் இருப்பவளிடம் அவர் கேட்டிட அவளின் விழிகள் பிதுங்கிற்று.

 

“ஏன்டா இதே கேள்விய கேட்டு சாகடிக்கிறீங்க..நா பொண்ணு தான் டா..” அகத்தினுள் கதறியவளுக்கு நெஞ்சு விடைக்க கத்த வேண்டும் போல் இருந்தது.

 

“சத்தியமா..ப்ச்..சத்தியமாக நான்..பொ..பெண் தான்..” திக்கித் திணறி அவள் மொழிந்திட அவரின் அதரங்கள் விரிந்து ஆசுவாசப் புன்னகையொன்றை தமக்குள் இழுத்துக் கொள்ள பேதையவளின் விழிகளில் புரியாத பாவம்.

 

“சக்கரவர்த்தி பெருமானே..இடையிட்டு உரைப்பதற்கு மன்னிப்பை யாசித்து கொள்கிறேன்..முன்னிலையில் நிற்கும் மூவரும் அந்த நயவஞ்சக மானவன் எய்து விட்டவர்கள் என்று என் உள் நெஞ்சம் குறுகுறுக்கிறது..எதையும் ஐயம் திரிபற கண்டறிந்த பின்னர் நாம் இவர்களை அரண்மனைக்கு அழைத்துச் செல்வது சாலச் சிறந்தது என்பது அடியேனின் பணிவான கருத்து..”

 

“ம்ஹம்..இந்த பாலகப் பெண்ணை காண்கையில் எனக்கு அப்படி எந்த எண்ணமும் துளிர்க்கவில்லை..” வதனத்தின் சாந்தமும் விழிகளில் நம்பிக்கைக் கோடுகளும் பரவ மறுத்தார்,செவ்வேலன்.

 

“இல்லை மன்னா என்னவாயினும்..?”

 

“விதுரா..உன் எண்ணம் எனக்கு புலப்படுகிறது..உந்தன் ஐயத்துக்கு காரணமும் இளவலின் மீதான கரிசனம் என்பதை நீ கூற வேண்டிய அவசியம் இல்லை..உன் எண்ணப்படியே நடக்கட்டும்..ராஜகுரு அகலுடையருபன் இன்னும் சொற்ப நேரத்தில் இவ்விடம் வருகை தந்து விடுவார்..அதன் பின்னர் மிகுதியை பற்றி சிந்தனை செய்யலாம்..” மறுபடியும் மறுப்புரைத்திட முயன்ற விதுரவேலரின் இதழ்கள் அழுந்த மூடச் செய்திருந்தது,மன்னரின் வார்த்தைகள்.

 

“என்னடா சொல்றானுங்க ஒன்னும் புரில..” சைந்தவி அண்ணனின் காதில் கிசுகிசுக்க அவர்களின் பேச்சை கிரகித்துக் கொள்ளவே சில நொடிகள் அதிகமாய் தேவைப்படுபவர்களுக்கு அவர்களின் காரியங்களுக்கான காரணம் அத்தனை எளிதாய் தெரிந்திடுமா என்ன..?

 

“என்னடி இவனுங்க பாட்டுக்கு பேசிட்டு இருக்கானுங்க..ஒன்னும் புரியல..” சைந்தவியிடம் முணகியவளின் முகத்தில் பசிக்களைப்பு தெள்ளத் தெளிவாய் தெரிந்தது.

 

“விதுரா..இவர்களுக்கு போஜனம் ஏதேனும் அளித்தாயா என்ன..? மூவரின் முகத்திலும் சோர்வு அப்பிக் கிடக்கிறது..” மன்னரின் ஆராய்ச்சி வினாவம்புக்கு பதில் மொழிய வழியின்றி விதுரர் சிரம் தாழ்த்திட சாந்தம் தவழ்ந்த விழிகளில் சினமேறிற்று.

 

“நா உன்னிடம் மறுமுறை உரைத்துத் தானே அனுப்பினேன்..? உண்மை எதுவென்று அறியாத பட்சத்தில் அவர்களுக்கு அன்னமிடாமல் பசியில் வாடச் செய்திருக்கிறாய்..உன் சினத்தை கட்டுக்குள் வை என்று மீண்டுமொரு முறை எச்சரிக்க வைத்து விடாதே..கிளம்பு..கிளம்பிப் போய் புசிப்பதற்கு போஜனங்கள் ஏதேனும் கொண்டு வா..” சினத்தின் சீற்றத்தில் அவர் இடியாய் முழங்கிட செவிமடுத்தவர்களுக்கும் அவரின் கோபவதாரத்தில் நெஞ்சாங்கூட்டில் கிலி உருவெடுத்தது.

 

“ஏதோ ஆத்திரத்தில் சித்தம் பேதலித்து போஜனம் அளிக்க வேண்டாம் என கட்டளையிட்டு விட்டேன் மன்னர் பெருமானே..அடியேனை மன்னித்துக் கொள்ளுங்கள்..” இடக்கரத்தை நெஞ்சில் பதித்து விழிகள் தழைந்திட தலை கவிழ்ந்து மன்னிப்பை யாசித்தவர் விரைந்திருந்தார்,வெளியே.

 

“என்னடா இது ஜெயில்ல போட்டு இருந்தா இப்டி நல்ல சாப்பாடா தர்ரானுங்க..” பல விதமான உணவு வகைகளை கண்டு பெருத்த நிம்மதியுடம் மூவரும் தரையில் அமர்ந்து வயிற்றை நிரப்பிக் கொண்டிருந்தனர்,அனைத்தும் மறந்து.

 

விதுரரின் பார்வை அவர்களில் கண்டனமாய் படிந்தாலும்,”தன்னைக் கவனி”என்று சத்தமிட் வயிற்றின் கூவலை அடக்குவது தான் அந்த சமயம் முக்கியமாக பட்டது.

 

இடையில் வாயிற் காவலாளி வந்து செவ்வேலரசனின் செவிகளில் இரகசியமாய் ஏதோ உரைத்து விட்டுச் சென்றதை கவனித்தாலும் எதுவும் கேட்கும் நிலையில் இல்லை,பெண்ணவள்.

அவளுக்கு செவ்வேலரசனின் பேச்சில் இருந்த பயம் கொஞ்சம் நீங்கப் பெற்றது போல்.

 

“என்ன காரியம் செய்து கொண்டிருக்கிறீர்கள்..?”அவ்விடம் அதிரும் படி கேட்டவாறு நடையில் வேகத்தை அதிகப்பட்டுத்தி உள்ளே நுழைந்தார்,அகலுடையருபன்.

 

“சாப்டுகிட்டு இருக்கேனுங்க மாமா..” என அதே மாடுயூலஷனில் மானசீகமாய் நினைத்துக் கொண்ட பெண்ணவளுக்கு நிம்மதியாய் சாப்பிடக் கூட விட மாட்டேன் என்கிறார்களே என்கின்ற எரிச்சல்.

 

“வணங்குகிறேன் ராஜகுருவே..” செவ்வலரசன் தன்னிடம் கை கூப்பி வணக்கம் கூறியதற்கு எதிர்வினை அவர் ஆற்றவே இல்லை.ழ

 

“செவ்வேலா..என்னவாயிற்று உனக்கு..? விருந்தோம்பலில் நீ தான் சிறந்தவன் என்று அயல் இராச்சியங்கள் புகழ்ந்து போற்றுகையில் உன் இராச்சியத்துக்கு வந்தவர்களை இப்படியா உபசரிப்பது..? அதுவும் உன் புத்திரனின் சாபம் தீர்க்க காலங்கள் கடந்து நம் யுகத்துக்குள் பிரவேசித்திருக்கும் குலவதுவை தரையில் இருந்திடச் செய்து போஜனம் பரிமாறுகிறாய்..?அரியணையில் சரி சமமாக அமர வேண்டியவருக்கு செம்மண் தரையை ஆசனமாய் கொடுத்திருப்பது அடுக்குமா என்ன..?” முகம் இறுக வெறித்தவரின் விழிகள் முன்னிருந்த இருவரையும் எரித்துக் கொண்டிருந்தன.

 

அவரின் உரைக்கெ தலை கவிழ்த்து செவி சாய்த்திருந்த செவ்வலரின் விழிகளில் வியப்பும் உவகையும் ஒரு சேர விரிந்து பரவிற்று.

 

“மன்னிக்க வேண்டும் ராஜகுருவே..” மனதை அழுத்திக் கிடந்த கனம் ஒரு நொடியில் அகன்று கழன்றதால் பிரசவம் ஆகியிருந்த மென்னகையுடன் பாதி விழுங்கிய உணவுக் கவளத்துடன் தம்மைப் புதிர்ப் பார்வை பார்த்திருந்த பேதையவளை தழுவிய அவர் விழிகளில் கரையில்லா கனிவு.

 

“மன்னித்து விடுங்கள் மகளே..மூடர்கள் உம்மைப் பற்றி எதுவும் ஆராய்ந்தறியாமல் தான்தோன்றித் தனமாய் நடந்து கொண்டதால் இப்படி நடந்நேறி விட்டது..” விழிகளில் இறைஞ்சலுடன் மன்னிப்பு இறைஞ்சினார்,அகலுடையார்.

 

“என்னடா நடக்குது இங்க..?” மொத்த பூமியும் தலை கீழாய் சுழல்வது போல் தலை கிறுகிறுத்தது,பேதையவளுக்கு.

 

                  ●●●●●●●●

 

“என்னடா பிதற்றித் திரிகிறாய்..?” கோபாவேசத்தில் கர்ஜித்தவனோ மின்னல் வேகத்தில் வாளை உருவி முன்னே வடம் கொண்டு கட்டி வைக்கப்படிருந்தவனின் சிரசை துண்டாக்க பின்னிருந்த அகழியில் சென்று விழுந்தது அது,உதிரம் கொப்பளிக்க.

 

அரிமாவவனின் விழிகளோ செக்கச் செவேலன சிவந்து போய் அனல் கங்குகளாய் ஜொலித்துக் கொண்டிருக்க அவை, உள்ளுக்குள் உண்டாகியிருக்கும் உஷ்ணத் தகிப்பின் சாட்சியமாய்.

 

“மதுரா சினத்தை கொஞ்சம் தணித்துக் கொள்..நீ வெகுண்டெழுவதை விட அகலுடையாரிடம் கலந்துரையாடுவதே உசிதம்..”தனக்கு முதுகு காட்டி நிலத்தில் பாதங்களை ஊன்றியிருந்த சகாவின் தோற் புஜத்தில் மென் அழுத்தம் பிரயோகித்தவனாய் மித்திரன் உரைத்திட,ஆழமாய் மூச்செறிந்து தன்னை கட்டுக்குள் கொண்டு வர பிரயத்தனப்பட்டான்,அரிமாவவன்.

 

“என்னால்..என்னால் அவரின் வார்த்தைகளை ஜீரணித்திட இயலாமல் உள்ளது தேனவா..? முன்னறிவிப்பின்றி ஒரு மங்கையை முன்னிறுத்தி மணந்து கொள் என்கிறார்..எப்படி தகிக்காமல் இருக்க முடியும்..நீயே கூறு..”

 

“அனைத்துமே உனது நன்மைக்காக தானே மதுரா..”

 

“என்ன நன்மை..?” சினம் கொப்பளிக்க தொண்டை விடைக்க உறுமிக் கொண்டே திரும்பி நின்றான்,அரிமாவவன்!

 

அஸ்தமன நேரத்தில் மேற்கு விசும்பில் வெய்யோன் பரப்பியிருந்த வெண் கதிர்கள் அவனின் தேகத்தில் பட்டுத் தெறித்திட மின்னுகிறது சினத்தில் கர்ஜிப்பவனின் கட்டுடல்.தோற்பட்டையை உரசிக் கொண்டிருந்த பிடரி மயிர்கள் அவனைப் போலேவ அடங்காமல் சிலிர்த்துக் கொண்டு நிற்க மாரை போர்த்தியிருந்த துகிலின் விளிம்பது காற்றின் லயத்துக்கேற்ப அசைந்தாட இரு முறை கரம் சுழற்றி அதை தேய்ந்து போகச் செய்தான்,கடுஞ்சினத்தில்.

 

வதனத்தின் வளர்ந்திருந்த தாடி மீசையின் அடர்த்திக்கு நிகராய் இமை முடிகளும் அடர்ந்திருக்க அவற்றை தாங்கும் நீல நயனங்களுக்கு அவற்றின் அடர்த்தியான கரு நிறம் பேரழகு சேர்ப்பித்தது.விழிகளில் எகத்தாளமும் திமிரும் நிறைவாய் நின்றிருந்தாலும் அவை சுமந்து நின்ற தீட்சண்யம் பகைவரை பதற வைப்பதாய்.

 

அடர்ந்து படரந்திருந்த தாடியும் தடித்த கனத்துடன் வளர்ந்திருந்த மீசையும் அவன் வீரத்திற்கும் விவேகத்திற்கும் சான்றாகி நிற்பது போன்ற மாயை.

 

ராஜ உடையின் அரையணியை அணிந்திருந்தவனின் மார்புக்கு குறுக்கே சரிவாய் நீண்ட பட்டுத்துகில் படர்ந்திருக்க அதை முறுக்கிக் திரித்துக் கொண்டிருந்தன,அரிமாவவனின் நீண்ட விரல்கள்.

 

விவேகம் நிறைந்த வீரம் நிறைந்த கூடுதலாய் அழகும் வழியும் ஆண்மகன் தான்,அவனும்.

 

சினத்தின் சாயத்தால் முகமும் செந்நிறத்தை ஏற்றிக் கொண்டிருக்க அவன் வார்த்தைகளின் அரவத்தில் அந்த இடமும் அதிர்ந்து அடங்கிட கையாலாகத நிலையில் கரங்களை பிசைந்து கொண்டு தரித்திருந்தான்,மித்திரன்.

 

“என்ன நன்மை..? உன்னிடம் தான் கேட்கிறேன் என்ன நன்மை..? அந்த கிழட்டுக் கிழவன் அந்தப் புரத்தில் ஆயிரம் பெண்ணவரை கொண்டு நிரப்பி கூத்தாடியதற்கு யானா காரணம்..? அந்த புத்தி பேதலித்தவன் மதுவில் குளித்திருந்து மங்கையருடன் களித்திருந்து செய்த தவறுகளுக்கு உண்டான தண்டனையை யான் அனுபவிப்பது நியாயமாகுமா..? நீயே உரை..”

 

“மதுரா என்னவென்றாலும் அவர் உன் தந்தையின் பாட்டனார்..அதற்குண்டான மரியாதையை நீ வார்த்தைகளில் புகுத்த வேண்டியது அத்தியவசியம்…அதுவும் இறைவனடி சேர்ந்தவரை இப்படி வைது தீர்ப்பது சரியும் அல்ல..”

 

“மூச்..மரியாதையென்பது வயதுக்கு தகுந்து யாம் கொடுப்பதல்ல..அரவரவனின் சுபாவமும் செய்கைகளுமே அவருக்கு அளிக்க வேண்டிய மரியாதையை நிர்ணயிக்கும்..இந்த கிழட்டுப் பயலின் கேடுகெட்ட செயல்களை கேட்டறிந்த பின் என்னால் அவனுக்கு மரியாதையெல்லாம் தந்திட இயலாது..அப்படி அளித்தாலும் அது கடவுளுக்கே அடுக்காது..”

 

“அதுவும் அவன் இறந்த பின்..? இயற்கையெய்தினாலும் அவன் விதைத்த வினையை அறுத்துக் கொண்டு இன்னலுக்குள் மாட்டிக் கொண்டு இடறுபவன் நானே..என் மனதின் வெம்மையை தணித்துக் கொள்ள அவனைத் தவிர யாரை வசை பாடுவது..?அவனையா..? இல்லை,ஆத்திரத்தின் உச்சத்தில் வம்சத்துக்கு சாபம் தந்த அந்த முனிவரையா..? யாரைத் தான் சாடிட நானும்..?” ஆற்றாமையில் பொங்கியவனின் வார்த்தைகளில் கிஞ்சிற்றும் பொய் கலந்திராதிருக்க மௌனத்தை கடைபிடித்தான்,மித்திரனும்.

 

அரிமாவவனோ இலக்கற்ற பார்வையுடன் வான் முழுக்க விழிகளை சுழற்றிக் கொண்டிருக்க அவனின் செவிகளில் நுழைந்த கொலுசொலியில் விரைந்து நகர்ந்து மூலையில் கிடந்த மேலங்கிக்குள் தன்னை நுழைத்துக் கொண்டான்,அரிமாவவன்!

 

மேலங்கியும் அரையணியுமாய் வலம் வருபவனோ யுத்தப் பயிற்சியும் பகைவரை வதம் செய்யும் போதும் மேலங்கிக்கு பிரதியாய் நீண்ட துகிலை மாரைச் சுற்றி குறுக்காக படிய விடுவது வாடிக்கை.

 

“என்னடா உன் முறைப்பெண் முனைந்து தேடியலைந்து இவ்விடம் வந்திருக்கிறாள்..” இதழில் தொக்கிய கேலி நகையுடன் உரைத்தான்,மித்திரன்.

அவன் தேனவவர்மேந்திர செழியன்!

 

தோழனின் நக்கல் தொக்கிய நகைப்புக்கு பதில் தரும் விதமாய் முறைப்புடன் முட்டின,அவன் விழிகள்.

 

“மாமா நீங்கள் இவ்விடம் தான் இருக்கிறீர்களா..?” கொலுசொலி சலசலக்க மார்பை மறைத்திருந்த வஸ்திரத்தை கரத்தால் தாங்கியவாறு அழகாய் நடந்து வந்தான்,சுபத்திரை தேவி.

 

கெண்டை மீனுக்கு நிகராய் நர்த்தனமாடும் விழிகளும் இடைக்கடம் தொடும் நீண்ட கருங்கூந்தலுமென சந்தன நிறத்தில் குழைந்தெடுத்த சிற்பம் போல் காண்பவரின் கருத்தை கவரும் பேரழகி.காண்பவரின் கருத்தை தான்,கடுஞ்சினம் காட்டும் அரிமாவவனின் கவனத்தை அல்ல.

 

அவளின் குயிலோசை மொழியில் அரிமாவனின் வதனம் ஆயாச பாவத்தை தத்தெடுத்துக் கொள்ள தேனவனின் இதழ்கள் தாராளமாய் விரிந்தன.

 

“மாமா..” மறுபடியும் கூவியவளின் செயலால் எரிச்சல் மேலிட நுதலை விரலால் அழுந்தத் தடவியவாறு திரை மறைவில் இருந்து அவளின் முன்னே வந்து நின்றவனைக் கண்டதும் அவள் கண்களில் மின்னின.

 

“எப்படித் தான் இத்தனை அழகாய் இருக்கிறாரோ..?” அவனை மேலிருந்து கீழ் வரை இரசித்தவளின் பார்வையில் அவனுக்கோ க(கொ)டுங்கோபம்.

 

“என்ன சுபத்திரை..? எதற்கு என்னைத் தேடி இவ்விடம் வந்தாய்..? ஏதேனும் தவிர்க்க முடியாத அலுவலா என்ன..?” அவளை அங்கிருந்து அகற்றி விடும் முனைப்பில் அரிமாவவன் வினவிட முகத்தை சுருங்கி விழிகளை உருட்டினாள்,அவள்.

 

“ஏன் மாமா இப்படி கேட்கிறீர்கள்..? யான் உங்களை காண வர முக்கிய அலுவல் ஏதேனும் நிச்சயமாய் இருந்தாக வேண்டுமா என்ன..? எனக்கு உங்களை காண வர உரிமையில்லயா..?பிரயாணம் முடிந்த களைப்பை களைந்தவளாய் ஆவலுடன் உங்களைக் காண வந்தால் நீங்கள் என்னவென்றால் வந்து பிடிக்காதது போல் கேள்விக் கணை தொடுக்கிறீர்கள்..?நீங்கள் மட்டும் மற்றையவர்கள் போல் இருந்திருந்தால் இந்நேரம் யான் உங்கள் மகாராணியாகி இருப்பேன்..” அவள் அழுகுரலில் முணக அரிமாவவனின் முகம் இறுகிற்று.

 

“சுபத்திரா என்ன நடந்தாலும் சரி..எனக்கு சாபமே இல்லையென்றாலும் கூட யான் உன்னை மணந்திருக்க மாட்டேன் புரிந்து கொள்..” முகம் இறுக சீறியவனோ விடுவிடுவென அவ்விடத்தை விட்டு அகன்றிட அவனின் வார்த்தைகளில் அவள் முகத்தில் செந்தணல்.

 

ஏனென்றில்லாமல் அரிமாவவனின் வீரத்தின் மீதும் விவேகத்தின் மீதும் அவளுக்கு இனம் புரியா ஈர்ப்பு.அழகும் அறிவும் நிரம்பி வழிவதால் உண்டான கர்வம் அவளின் கண்ணை மறைத்திட மணந்தால் அவனை மட்டுந்தான் மணப்பேன் என்கின்ற தீர்மானத்துடன் காத்திருப்பவளின் முதற் குறிக்கோளே இந்த இராச்சியத்தின் மகாராணி ஆவது தான்.

 

அதைத் தவிர்த்து மற்றொரு காரணம் என்றால் தன்னிடம் பாராமுகம் காட்டும் அரிமாவவனை தன் காலடியில் வீழ்த்த வேண்டும்,அது தான்.

 

அந்த எண்ணம் தான்,அவன் பலதரப்பட்ட தடவைகள் தன்னிடம் எகிறி வெடித்தும் அவளின் தன்மானத்தை கை விட்டு விட்டு அவனை தன்னில் வீழச் செய்ய பின்னே சுற்றிடுவதன் பின்புலம்.

 

 அதே சமயம்,

 

“ஏய் என்னடி..? இந்த நர முடி தாத்தா கிட்ட பேசிட்டு வந்ததுல இருந்து ஒரு மாதிரியா இருக்க..? என்ன தான் நடந்துச்சு..?” மஞ்சத்தின் மெத்தையில் உருண்டவாறு கேட்டாள்,சைந்தவி.

 

அகலுடையருபனின் சினத்தில் விளைவால் விதுரவேலன் விக்கித்துப் போய் நின்று மறு க்ஷணமே மூவரையும் சமஸ்தானத்தின் அரண்மனையை ஒட்டியிருந்த சிறு மாளிகைக்குள் அழைத்து வந்த தங்க வைத்திருந்தார்,அந்தரங்கமாக.

 

மூவரின் இருப்பிடமும் வேறு நபர்களுக்கு தெரிய வந்திடக் கூடாது என்பது அகலுடையாரின் கண்டிப்பான கட்டளை வேறு.

 

விதுரருக்கோ அகலுடையாரின் வார்த்தைகளின் பின்னர் பேதையவள் மீது கிளர்ந்திருந்த ஐயங்கள் பறந்தோடியிருந்தன.அவரின் உபசாரத்திலும் கனிவிலும் பேதையவளும் வியந்து தான் போய் விட்டாள்.

 

“எலி உன்னத் தான் டி கேக்கறேன்..என்னாச்சு உனக்கு..? அந்த நர முடி தாத்தா என்ன தான் சொன்னாரு..? யாருடி இவனுங்க..? எதுக்கு நம்மள கடத்தி வச்சிருக்கானுங்க..?”

 

“அவங்க யாரும் கடத்தி வக்கல..”

 

“அப்போ..”

 

“நாம தான் பைத்தியக்காரத்தனமா டைம் ட்ராவல் பண்ணி இங்க வந்து மாட்டிட்டு இருக்கோம்..” பேயறைந்தது போல் சொல்லிட நீர் பருகிக் கொண்டிருந்த சத்யாவுக்கு புரையேறிட நெஞ்சை பிடித்துக் கொண்டு இருமினான்,அவன்.

 

வரம் கிட்டும்.

 

🖋️அதி..!

2024.10.09

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்