Loading

வரமொன்று தருவாய்..

தவம்  04

என்னடா இது இப்பவும் இப்டி அரசாட்சி எல்லாம் இருக்குதாடா..? அதுவும் சுத்த தமிழ்ல பேசி கிட்டு இருக்காங்க..”

“ஆமா இப்போ இது தான் எலி முக்கியம்..நம்மள போய் நாலு பேர் சேந்து குடிசக்குள்ள அடச்சி வச்சு காவல் காக்கறானுங்க..ஒரு மண்ணும் புரில..இப்போ உனக்கு இந்த கேள்வி தான் முக்கியம்..?”

“ஆமாடா அண்ணா..எனக்கும் ஆரம்பத்துல பயமா தான் இருந்துச்சு..ஆனா இப்போ இன்ட்ரஸ்டிங்கா இருக்கு..நாளக்கி நம்ம புள்ளங்களுக்கு சொல்றதுக்கு நல்ல கத இருக்கும்..”

“கொழந்த பெத்துக்க நாம உசுரோட இருப்போமான்னே தெரில..பேச்ச பாரு..பைத்தியக்காரிங்க” உள்ளுக்குள் கருவியவனுக்கு தாம் இருக்கும் இடமே பெரும் யோசனையாய்.

“ஆமா சைந்து..நா இப்டி யோசிக்கவே இல்ல..நம்ம வாழ்க்க உப்பில்லாத சோறு மாதிரி வெத்தா பொய்ட்டு இருக்குறப்போ இது நல்லா தான் இருக்கு..” நிலைமையின் வீரியம் உணராது இருவரும் குஷியாய் கதைத்திட நொந்து போனான்,சகோதரன்.

கையும் காலும் கட்டப்பட்ட நிலையில் இருந்தும் இப்படி பேசுபவர்களை பார்த்து அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை,அவனுக்கு.

“பைத்திக்காரனுங்க கையயும் காலயும் விட்டுட்டு இதுங்க வாய கட்டி வச்சிருக்கலாம்..” முணகியவனுக்கு வாள் முனையில் தம்மை அழைத்து வந்து தற்பொழுது இருக்கும் குடிலுக்குள் அடைத்து வைத்தது தான் தெரியும்.அதன் பின் வெளியில் நடப்பது எதையும் அறிய முடியவில்லை.

எட்டிப் பார்த்திட முனைந்தாலும் பலனில்லை.கும்மிருட்டு சூழ்ந்திருக்கும் கானகத்தில் விழிகளை மேயவிட்டு அவனும் எதைத் தான் கண்டு பிடிக்க..?

“சத்து மாவு என்ன யோசிக்கற..?”

“இல்லடி நாம இங்க வந்து மாட்டிகிட்டோம் அது ஓகே..ஆனா வெளில இருக்குறவங்க பாக்கும் போது வித்யாசமா இருக்கு..அவங்க ட்ரெஸ்..அவங்க பேச்சு..இதெல்லாம் பாக்கும் போது பழய காலம் மாதிரி தோணுது..ஒரு வேள இப்பவும் இப்டி ஒரு கூட்டம் இருக்குதா எதுவும் புரில..”

“ஆமா டா அதுவும் எதுக்கு நம்மள இப்டி அடச்சி வக்கனும்..? அதுவும் துணிப்பைய எல்லாம் அலசிப் பாத்து துணிய எல்லாம் மொகத்துல விட்டெறிஞ்சு..எனக்கு எதுவும் புரில..” தலையை சொறிந்தாள்,பெண்ணவள்.

“ஆமா எலி எனக்கும் அப்டி தான் இருக்கு..” எனும் போதே திடாகத்திரமான உடற் கட்டுடன் உள் நுழைந்த இருவர் சத்யாவை தூக்கிக் கொண்டு வெளியே செல்ல பேதையர் இருவரும் கத்தியும் பயன் இருக்கவில்லை.

உள்ள வந்தவனின் முதுகில் செருகப்பட்டிருந்த சிறு கூரிய கத்தியை அவனறியாது கவர்ந்திருந்தாள்,பெண்ணவள்.அதற்குண்டான தைரியம் அவளுக்கு எங்கிருந்து உண்டாகிற்று என்பது அவளுக்கே தெரியாது இருக்கும்.

அவர்கள் இருவரும் வெளியேறியதும் முதல் வேலையாக தம்மைச் சுற்றியிருந்த கயிற்றை கழட்டியவளோ சைந்தவியின் கட்டை அவிழ்த்த பின்னே மூச்சு விட முடிந்தது,அவளால்.

“இப்போ என்னடி பண்றது..?”

“சத்துமாவ தேடி கண்டு பிடிச்சா தான் நம்மளால தப்பிச்சு போக முடியும்..இவனுங்கள பாத்தா மனுஷன சாப்பட்ற கூட்டம் மாதிரியும் லைட்டா தோணுது..ஃபர்ஸ்டு நாம தப்பிச்சு போகனும்..போய் யாராயாவது ஹெல்புக்கு கூட்டிட்டு வர்லாம்..” என்றவளுக்கு இச்சமயம் தைரியம் வந்தது உலக அதிசயம் தான்.

விடிந்தும் விடியாத காலைப்பொழுதில் மெல்ல குடில் வேயப்பட்டிருந்த ஓலைகளை மெல்லிய இடைவெளி வருமாறு விலக்கி பார்த்தவளுக்கு சத்யாவின் கரங்களை கட்டப்பட்ட நிலையில் வைத்தே அவன் முட்டியிட்டு அமர வைக்கப்பட்டு இருப்பது புரிய கோபமாய் வந்திற்று.

“சத்துமாவ இவனுங்க டார்ச்சர் பண்றானுங்க டி..” மூக்கு விடைக்க கூறியவளோ வெளியேறப் பார்த்திட சட்டென அவளின் கரத்தைப் பிடித்து தடுத்திருந்தாள்,சைந்தவி.

“இப்போ இந்த பில்டப் எல்லாம் தேவயா..போய் மாட்டி கிட்டு சாவத் தான்..நீ கொஞ்சம் அமைதியா இரு..பெரிய ஹீரோயின்னு நெனப்பு..”

“ஒரு பர்ஃபாமன்ஸ் பண்ண விட மாட்டியே..” 

“பர்ஃபாமன்ஸ் பண்ற எடத்துலயா நாம இருக்கோம்..” சலிப்புடன் முணக அவளுக்கு மேலான அலுப்புடன் கீழே அமர்ந்து கொண்டவளின் ஜீன்ஸ் அருகே இருந்த சிறு கல்லில் மாட்டி கிழிந்து “சர்ர்ர்ர்” என்கின்ற சத்தத்தை கிளப்பிற்று.

கணுக்காலில் இருந்து முழங்கால் வரை உண்டாகியிருந்த கிழிசலை முழங்கால் வரை நீண்டிருந்த சுடிதாரால் மறைக்க முடியாது போய் விட பெண்ணவளின் வதனம் சுருங்கிற்று.

“ஜீன்ஸ் கிழிஞ்சிருச்சு சைந்து..இப்போ என்ன பண்றது..?” கேட்கும் போதே ஒருவன் வரும் அரவம் கேட்டிட வடத்தை கைகளில் சுற்றி முன்பிருந்தது டோல் படக்கென்று காலை குறுக்கிக் கொண்டு அமர்ந்தவளுக்கு வந்து சென்றவன், தன்னை பார்க்கவில்லை என்று தெரிந்தாலும் உள்ளுக்குள் சங்கடத்தின் சத்தம்.

“தோ இந்தா இத எடுத்து கட்டிக்க நம்மளால இப்போ ட்ரெஸ் சேஞ்ச் பண்ண முடியாது..” அருகே வீசப்பட்டிருந்த சத்யாவின் கைலியை எடுத்து நீட்டிட அதுவே பெண்ணவளுக்கும் சரியாகத் தோன்றிற்று.

ஓலைக்கதவில் ஒரு கண்ணை வைத்துக் கொண்டே கைலியை கட்டிக் கொண்டு மீண்டும் தரையில் அமர்ந்தவளுக்கு கட்டை அவிழ்த்ததும் பயனில்லை என்கின்ற எண்ணம்.

திடீரென வீசிய காற்றில் குளிரின் ஆக்கிரமிப்பு தேகத்தை பாடாய்ப்படுத்திட கதவின் அருகே இருந்த சத்யாவின் டீஷர்ட்டுக்களில் ஒன்றை எடுத்து தான் மாட்டிக் கொண்டு மற்றையதை அக்காக்காரியிடம் நீட்டிட உடனடியாய் மறுத்தாள்,சைந்தவி.

“வந்து நம்மள திட்டியே சாகடிச்சிருவான்..ஆனாலும் ஏன்டி நாம இப்டி இருக்கோம்..? நம்மள கடத்தி தான் வச்சிருக்கானுங்கன்னு தெரிஞ்சும் குளிருக்கு போட டீஷர்ட் தேடிட்டு திரியுறோம்..” வியப்புடன் கேட்டவளுக்கு பதில் சொல்லிட தெரியாமல் இதழ் பிதுக்கலுடன் மறுப்பாய் அசைந்தது,பெண்ணவளின் சிரசு.

முதுகு வரை சற்றே நீண்டிருந்த முடியை அள்ளிக் கொண்டை போட்டு தரையில் சம்மணமிட்டு அமர்ந்தவளின் கழுத்தை துப்பட்டாவென்ற ஒன்று சுற்றிக் கொள்ளாது இருப்பின் நிச்சயம் அவள் ஆண்மகன் தான்.

“அப்டியே பையன் மாதிரியே இருக்கடி..” சைந்தவி சிலாகித்துச் சொல்ல உறுத்து விழித்தாள்,பெண்ணவள்.

“எரும மாடுங்க..எதுக்கு தான் இந்த குளிர்ல வந்து கட்டி வச்சாங்களோ..? தரைல வேற உக்காந்து இருக்கோம்..ரொம்ப குளிருதே..”

“அதான்டி எனக்கும் புரில..ஒருவேள நம்மள யாரு கடத்துனாங்கன்னு தெரியாம இருக்குறதுகு தான் இப்டி பழய காலத்துல ஆளுங்க மாதிரி வேஷம் போட்டு ஏமாத்துரானுங்களோ..?”

“ஆமா நா ப்ரைம் மிஸ்டர்..நீ ஹோம் மினிஸ்டர்..அவன் சி எம்..அப்டியே நம்மள கடத்துனா நாட்டுல ப்ராப்ளமா வந்துரும்..நாம தப்பிச்சி போய் அவனுங்க கொன்னுருவோம்..நம்மள கடத்துறது தெரியாம இருக்க இப்டி ஒரு ப்ளான்..த்தூஊஊஊஊஊ..ஆனா எனக்கு பயமா இருக்கு டி..ஃபர்ஸ்டு நாம இங்கிருந்து தப்பிச்சு போகனும்..” யோசித்தவாறு வெளியே பார்த்திட அவர்களின் நேரமோ என்னவோ சத்யாவைச் சுற்றியிருந்தவர்களை காணவில்லை.

மனதுக்குள் பல திட்டங்கள் உதித்திடவே மெல்ல ஓலைக் கதவை அசைத்து வெளியே நோக்கியவளுக்கு விழி வீச்சில் யாரும் அகப்படாது போகவே சட்டென வேலை செய்தது,கு(கி)றுக்குப் புத்தி.

“சைந்து வெளில யாரும் இல்ல வா..” பின் விளைவுகள் பற்றி எதையும் யோசியாது அவளின் கரத்தை இழுத்துக் கொண்டு வெளியே வர சைந்தவி தான் பதறிப் போனாள்.

அவளின் மறுப்பை தூசு போல் தட்டி விட்டு வெளியே வந்தவளோ கையில் இருந்த சிறு கத்தியின் மூலம் சத்யாவின் கரத்தை கட்டியிருந்த தடித்த கயிற்றையும் அறுத்து விட அவனோ விழி பிதுங்கி நின்றான்,அதீத திகைப்பில்.

“பே பேன்னு முழிக்காதடா சத்துமாவு..வா ஓடலாம்..” என்றிட தெளிந்தவனோ இருவரின் கையை பிடித்துக் கொண்டு ஓட அந்த நிலையிலும் பக்கென்று சிரித்து விட்டாள்,அவனின் உடன் பிறப்பு.

“நம்ம ரெண்டு பேரயும் இழுத்து ஓட்றான் டி..” ஏதோ நினைவில் அவள் சிரிக்க அவளுடன் சேர்ந்து கொண்டாள்,பெண்ணவளும்.

“அதான் சைந்து..போயும் போயும் கல்யாண வயசுல

உனக்கா இப்டி ஒரு நெலம வரனும் சத்து மாவு..?” சோகம் போல் அவனை கலாய்த்து சிரிக்க கண்டனமாய் பார்த்தான்,சகோதரன்.

“கெரகத்துக்கு வந்தவளுங்க.. நெலம தெரியாம காமெடி பண்றாளுங்க” கடுகடுத்தவனோ இருவரின் கரத்தையும் பிடித்துக் கொண்டு ஓடிட அவர்கள் இருந்த குடிலுக்கு வந்த வீரர்கள் இருவருக்கு மூவரையும் காணாத போது தப்பித்து போய் இருப்பது புரிந்திட செவ்வரியோடிற்று,இருவரினதும் விழிகளில்.

“ம்ஹம்..அவர்கள் தப்பியோடி விட்டார்கள் போலும்.விரைந்து தேடுங்கள்..” பின்னே வந்த தம் கூட்டத்தினருக்கு கர்ஜனையாய் குரல் கொடுத்திட அவர்களுக்குள் சலசலப்பு உருவாகி தேய்ந்து போய் விட நாலாப்புறமும் பிரிந்து போய் தீவிரமாய் அவர்களை தேடத் துவங்கினர்,வீரர்கள்.

இதை அறியாதவர்களோ கால் போன போக்கில் ஓடிக் கொண்டிருக்க ஒரு கடத்தில் மூச்சு வாங்கியது,பெண்ணவளுக்கு.

“என்னால முடில..” மூச்சு வாங்க நின்றவளுக்கு எல்லாவற்றையும் விட சிரமம் கைலியை தூக்கிப் பிடித்துக் கொண்டு ஓடுவது தான்.

“வாடி எங்கயாச்சும் ஒளிஞ்சிக்கவாச்சும் எடம் தெரியுதான்னு பாக்கலாம்..” அவளை விரட்டியவனின் விழிகளோ நாலாப்புறமும் அலைபாய்ந்தன.

“என்னால முடில..” அவள் முட்டியில் உள்ளங்கைகளை ஊன்றி மூச்சிழுக்கும் போதே குதிரைகளின் குளம்பொலி கேட்டிட சுதாரித்துக் கொண்டான்,சகோதரன்.

“அவனுங்க வந்துட்டானுங்க டி..மூணு பேரும் தனித்தனியா ஓடலாம் டி..அப்போ தான் கொள்மபுவானுங்க..” என்று விரட்டிட,”அவனுங்க என்ன யானயா கொளம்புறதுக்கு..” என்றெழுந்த கேள்வியை தட்டி அடக்கினாள்,பெண்ணவள்.

கைலியை தூக்கி இடுப்பில் சொருகி துப்பட்டாவை மார்புக்கு குறுக்கே கட்டிக் கொண்டு அள்ளி முடிந்த கூந்தலுடன் ஆண் பிள்ளையாய் அவள் ஒடுவதை இயல்பான மனநிலையில் சகோதரங்கள் கண்டிருந்தால் விழுந்து விழுந்து சிரித்திருப்பர்.

பெண்ணவள் மூச்சைப் பிடித்துக் கொண்டு ஓட அவர்கள் மூவரும் முன்பு நின்றிருந்த இடத்தில் கபில வர்ணத்தில் கறுமை நிறக் கோடுகள் சேர்ந்த தோலால் போர்த்தப்பட்ட புரவியில் வந்து நின்றான்,அவன்.

விழிகளோ கூர்மையுடன் சுற்றத்தை ஆழமாய் அலசிட அவர்கள் ஓடிச் சென்ற திசையை கண்டு பிடிக்க முடியாதவன் அல்லவே அவன்..?

“வீரர்களே நா முன்னே செல்கிறேன்..வடக்கிலும் தெற்கிலும் நீங்கள் பிரிந்து செல்லுங்கள்..அங்கே வசமாய் சிக்கிக் கொள்வார்கள் அந்த குள்ள நரியின் ஒற்றர்கள்..” அவ்விடம் அதிரும் படி அவன் கர்ஜித்து விட்டு குதிரையில் பெண்ணவள் சென்றி திசையில் பாய்ந்தோட அவனைத் பின் தொடர்ந்து சென்றனர்,இன்னும் சிலரும்.

தன் செவியில் அலைமோதும் புரவிகளின் குளம்பொளிகளின் ஓசையின் உரப்பு அதிகமாகிட இதயம் படபடத்தது,பெண்ணவளுக்கு.

பயத்தின் மேகங்கள் நிரம்பவே சூழ்ந்து கொண்டிட வேரூன்றி பரந்து விரிந்த மரத்தின் பின்னே ஒளிந்து கொண்டவளோ யாரும் தன்னை கண்டிடக் கூடாது என்பதற்கேற்ப முகத்தைசயும் சிரசையும் சுற்றி துப்பட்டாவை சுற்றிக் கொள்ள விழிகள் மட்டும் வெளியே தெரிந்தது,தவிப்பான பார்வையுடன்.

அதுவும் அவளின் உள்ளங்கையில் பொத்தி வைத்திருந்த சின்னச் சிற்பமோ துளிர்த்திருந்த வியர்வைத் துளிகளின் ஈரத்தை தன்னுள் ஏற்றிருந்தது.

“கடவுளே யாரும் பாத்துடக் கூடாது..” மானசீகமாய் கடவுளிடம் வேண்டிக் கொண்டவளின் பின்னே கேட்ட தொண்டைச் செருமலில் முதுகுத் தண்டு சில்லிட திரும்பிப் பாரத்திடும் முன்னமே அவள் பின்னங்கழுத்தில் வாள் முனை.

“அப்படியே தரித்து நில்..அசைந்து விட்டாயெனில் உன் சங்கை என் வாள் முனை பதம் பார்த்து விடும்..” நிமிர்வாய் வந்த அந்த ஆண் குரலில் நெஞ்சம் படபடக்க தேகம் கிலியில் ஆதிக்கத்தில் கிஞ்சிற்று நடுங்கத் துவங்கிட அரும்பிய வியர்வைத் துளிகளுடன் நின்றிருந்தவளின் முன்னே அதி வேகத்துடன் வந்து தன் ஓட்டத்தை நிறுத்தியது,முன்பு கூறிய அதே புரவி.

முன்னங்கால்களை தூக்கி கனைத்து புரவி பின்னே சரிய கடிவாளத்தில் இருந்து பிடியை விலக்கி லாவகமாய் தாவி கீழிறங்கியவனின் ஒற்றைக்கரம் புரவியை தட்டிக் கொடுத்தது.

போர் வீரன் போல் வஸ்திரம் தழுவியிருந்தவனின் விழிகள் மட்டும் வெளிப்புறம் புலப்படும் விதமாய் வதனத்தில் கருமை நிற பட்டுத் துணி கவசம் அமைத்திருக்க துணியின் மேல் முனைக்கும் கீழ் விளிம்புக்குமான இடையூடு தெரிந்த நீல வர்ண நயனங்களில் அனலும் ஆத்திரமும் மிகுதியாகி வழிந்தாலும் எள்ளல் தேங்கும் புன்னகை விழிகளினோரத்தில்.

இதழ்கடையிலும் தேக்கம் கொண்டிருந்தது தான்,திரையை தாண்டி அது வெளித்தெரிந்திட சந்தர்ப்பமே இல்லையே.

“என்ன வஸ்திரமடா இது..? வெட்கங்கெட்ட மானவனுக்கு சித்தமும் கலங்கி விட்டதா என்ன..?” கேலி இழையோடிய அவனின் வார்த்தைகளிலும் விழிகளிலும் தெறித்த அனல் மிகுந்த சீற்றத்திலும் அவளுக்கு நா பசை போல் மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டிட வார்த்தைகளை உதிர்க்க முடியாமல் இதழ்களும் பின்னிப் பிணைந்து கொண்டன.

“என்ன எங்களை ஏமாற்றப் பார்க்கிறாயா..? வேறு வஸ்திரம் சூடி வதனத்தை திரையிட்டு மறைத்தால் நீ அந்த குள்ள நரியின் வால் என்று எம்மால் கண்டறிய முடியாது போகுமென்று அந்த சித்தம் கலங்கியவன் உன்னிடம் உரைத்தானா என்ன..?” 

போர் வீரன் போல் உடை தரித்தவனின் உடல் மொழியும் உரைகளும் அவனை போர் வீரன் என்று பறைசாற்றிடத் தவறின.

“ஆண் மகன் என்றால் நெஞ்சில் ஏறி மிதிக்கும் தைரியமா வேண்டும்..இப்படி முதுகில் குத்தி விட்டு ஒளிந்து மறையும் பழக்கம் ஆண்மைக்கே இழுக்கு ஒற்றனே..உன்னிடம் மொழிந்து என்ன பயன்..? எய்தவன் கோணலாய் இருந்தால் அம்பும் பிழைத்து தானே போகும்..? என்னடா நான் சொல்வது சரி தானே..?”

“மதுரா..இவனிடம் இந்த வார்த்தையாடல் அவசியம் தானா..? சிரசை கொய்து விட்டு பிண்டத்தை துண்டமாக்கிடாமல் எதற்கு நேரத்தை வீணடிக்கிறாய்..?” பெண்ணவளை வாள் முனையில் வைத்திருந்தவன் சீறிட அவளுக்கு அப்போது தான் புரிந்தது,தன்னை அவர்கள் ஆண் என்று நினைத்திருப்பது.

“ஐயோ நா பொண்ணுங்க..” கரகர குரலில் கத்தியவளுக்கு தக்க சமயத்தில் தொண்டைக் குழி வேறு ஒத்துழைக்க மறுத்தது.

“என்ன பிதற்றுகிறாய்..? தமிழை சரிவரப் பேசத் தெரியாதவனடா நீ..?இல்லையென்றால் எம்மவர் கண்டறிய மாட்டார்கள் என்கின்ற அசாத்திய நம்பிக்கையில் அந்த கோழை வேறு தேசத்தில் இருந்து உன்னை வரவழைத்தானா..?” சினத்தில் உறுமியவனின் செயலில் அவளுக்கு தலை குழம்பிப் போக சுத்தத் தமிழில் பேசினால் மட்டுமே அவர்களிடன் பேச முடியும் என்று உணர்ந்தது,புத்தி.

“நீங்க..நீங்கள் நினைப்பது போல் நா ஆம்பள..நான் ஆண் இல்லை..பொண்ணு..ச்சீ பெண் தான்..” தட்டுத் தடுமாறி அவள் சொல்லிட அவளின் வார்த்தைகளில் ஒரு நொடி திகைத்து மறு க்ஷணமே தெளிந்து நின்றான்,அரிமாவவன்.

நீல வர்ண விழிகளில் எள்ளலை விரியச் செய்து இடக்கரத்தை மடக்கி இடைக்கடத்தில் நிலைக்கச் செய்தவனின் குரலில் ஏகத்துக்கும் எள்ளல் கொப்பளித்தது.

“அவனுக்குத் தான் புத்தி பேதலித்து விட்டதென்றால் நீ ஏன் இன்னும் சித்தம் செயலிழந்தவன் போல் கொக்கரித்துக் கொண்டிருக்கிறாய்..?கேலிக் கூத்தாடி போல் வேடம் தரித்து நீ பெண் என்றால் யாம் நம்பிட வேண்டும்..?ஆங்ங்ங்ங்ங்..நன்றாகத் தான் இருக்கிறது உனது சித்தம்..”

“இவன் ஒருத்தன்..” சைக்கிள் கேப்ல ஜோக்கர்னு சொல்லிட்டான்..”முணகியவளோ,”உண்மயா..த்தூஊ..மெய்யாகவே நான் பெண் தான்..” என்றிட திரையிட்ட துணிக்குள் மேலெழுந்து வில்லென வளைந்தன,அவனின் புருவங்கள்.

“உண்மைக்கு மெய்யென்று உரைப்பார்கள் என்று யான் அறிவேன்..நீ வேடம் போடத் தேவையில்லையடா ஒற்றனே..” எடுத்தியம்பிடும் வார்த்தைகளில் காணக் கிடைத்திடா ஆவேசம் அரிமாவவனின் நீள நயனங்களில்.

“மதுரா இந்த கோழையை எதற்கடா இன்னும் விட்டு வைத்திருக்கிறாய்..? நீ மட்டும் கட்டளையிடு..இவனை கழுவில் ஏற்றி துடி துடிக்க வைக்கிறேன்..”

“தேனவா..சற்றே பொறுமையை இழுத்து சேமித்துக் கொள்..இவனை காண காணக் காண நகைப்புத் தான் உண்டாகிறது..ஐயனின் வார்த்தைகளுக்காகவேனும் அவனை வதனத்தை உற்று நோக்கி பெண்ணாவென்று பரிசீலினையாவது செய்திட வேண்டும் அல்லவா..?” ஒரு விழி சுருக்கி கேலியுடன் பறைசாற்றிய அவன் வார்த்தைகளின் மறைபொருளை உணரும் நிலையில் இல்லை,பேதையவள்.

கர்வம் தொனிக்கும் மிதமான வேக நடையுடன் அவளுக்கு அண்மையில் வந்து பாதங்களை நிலை நிறுத்தியவனோ மின்னல் வேகத்தில் உடைவாளை உருவியெடுக்க பேதையவளின் விழிகள் பேராழியென விரிந்து நின்றன,பயத்தின் படர்தலில்.

அவளின் விழிகளில் பரலவாய் பரவி நின்ற பயத்தில் கடையிதழ் துடிக்க அடக்கியவனோ முன்னறிவிப்பின்றி அவளின் கரத்தை எட்டிப் பற்றிக் கொள்ள அவள் தேகம் வெடவெடத்தது.

கனலுடன் அவனை முறைத்தவளோ கரத்தை அவன் பிடியில் இருந்து விலக்கிக் கொள்ள முனைய அவளுக்கு சிரமம் தந்திடாது கரத்தை விடுவித்திருந்தான்,அரிமாவவன்.

“இவன் கூறிடுவது பொய்யென்று ஒப்புவிக்க இதோ இந்த தொடுகை போதும் தானே மதுரா..இன்னும் ஏன்..?”

“மூச்..பொறுடா..ஐயனுக்கு கொஞ்சம் மரியாதை அளித்து பார்த்திடலாம்..” என்றவாறு வாளின் கூரிய முனையால் வீசிச் சென்ற காற்றில் அலைந்து திரிந்த அவளின் துப்பட்டா நுனியை தழுவி வாளை இருமுறை சுழற்றிட இறுக்கமின்றியிருந்த முதல் முடிச்சு அவிழ்ந்து வீழ கூரிய முனையாலே துப்பட்டாவை இழுத்தெடுக்க முனைந்தவனின் செயலுக்கு தடையிட்டவளோ வதனத்தில் இருந்து துப்பட்டாவை நீக்கியவாறு அவனுக்கு முகம் காட்டிட சுற்றியிருந்த அனைவரினும் விழிகள் தெறித்து விரிந்தன.

அள்ளி முடிந்த கூந்தல் அவிழ்ந்து போக திடுமென உருவெடுத்த வேகக் காற்றின் உபயத்தால் கலைந்த கார்குழல் கற்றைகள் கன்னக் கதுப்பை தொட்டிட விரல் கொண்டு பின்னேற்றியவளின் விழிகளோ விழிகள் மட்டும் புலப்படும் விதமாய் தன் முன்னே நிற்பவனை பதபதைப்புடன் ஏறிட்டன.

அரிமாவவனின் விழிகளில் இதுவரை காணக் கிடைத்திடா திகைப்பு ஆழியென பரவியிருந்து.அவளைப் மங்கையென்று கிஞ்சிற்றும் நம்பிட இடம் தந்திடவில்லை,மனம்.

“மதுரா இவள் மங்கையென்று பொய்யுரைக்கிறாள் என்று எண்ணுகிறேன்..” பின்னிருந்த வந்த வார்த்தைகள் பிசிர் தட்டிற்று.

“ஐயோ நா பொண்ணு தான்…” தொண்டை விடைக்க கத்தியவளை ஆழம் நோக்கிய விழிகளில் எண்ணிலடங்கா சிந்தனை ரேகைகள்.

வரம் கிட்டும்.

🖋️அதி..!

2024.10.08

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்