Loading

வரமொன்று தருவாய்..

 

Disclaimer: இக்கதை வெறும் கற்பனையே.முற்று முழுக்க கற்பனையை மையப்படுத்திய கதை. எங்கும் சரித்திர சம்பவங்களினதோ வரலாற்று நிகழ்வுகளினதோ தாக்கங்கள் இடம் பெறவில்லை.கதையில் வரும் கதைக்களம்,கதாபாத்திரங்கள் அனைத்தும் என் கற்பனையில் அடிப்படையில் உருவானது.எந்த ஒரு மத ரீதியான நம்பிக்கைகள இழிவுபடுத்தும் அல்லது ஆதரிக்கும் நோக்கத்திற்காக எழுதப்படவில்லை.வெறுமனே பொழுதுபோக்குக்கானகதை மட்டுமே.கதையில் முகம் சுளிக்க வைக்கும் எந்த காட்சியும் இடம் பெற மாட்டாது.

 

தவம் 01

 

“வய் எம் இன்டஸ்ட்ரீஸ்..” என வெள்ளி நிறத்தில் மின்னிய எழுத்துக்களை கூர்ந்து பார்த்தவளின் விழிகள் கூசியது.

 

“ச்சே இன்னும் எவ்ளோ நேரம் தான் வெயிட் பண்றது..” இரு விரலால் நெற்றியை அழுந்தத் தேய்த்துக் கொண்டு அங்குமிங்கும் நடந்தவளுக்கு தம்மை உள்ளே நுழைய விடாது காவலாளியின் மீது அத்தனை எரிச்சல்.

 

சுடிதார் துப்பட்டாவை விரல்களால் சுருட்டிக் கொண்டு சற்றே மெலெழுந்து கலைந்த சிகையுடன் அவள் நின்றிருந்த கோலம் அவருக்கு சிரிப்பை வரவழைத்திட கடினப்பட்டு அடக்கிக் கொண்டு நின்றிருந்தார்,மனிதர்.

 

அவளுக்கோ அவர் புன்னகையை இதழ்களுக்குள் ஒளித்துக் கொள்வது கண்டு இன்னும் கோபமாய்த் தான் வந்தது.இருந்தும் அடக்கிக் கொண்டாக வேண்டிய கட்டாயம்.

 

வாயிலுக்கு முன்னே நின்று அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தவளுக்கோ சுட்டெரிக்கும் வெயில் மீதும் அத்தனை எரிச்சல்.

 

“இன்னிக்கி தான் இப்டி வெயிலடிச்சு தொலயனுமா..?”கடுப்புடன் அவள் முணுமுணுப்பது காவலாளியின் காதுகளையும் உரசிட சிரிப்பை அடக்கிட முடியாது பக்கென்று சிரித்து விட்டிருந்தார்,அவர்.

 

“சிரிக்கிறத பாரு..இவரு வயசுக்கு இந்த குசும்புக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல..” அவரின் சிரிப்பு தந்த எரிச்சலில் வைது தீர்த்தவளின் முன்னே வந்து நின்றான்,சத்யா.

 

கொழுத்தும் அந்த வெயிலில் அதிக தூரம் நடந்திருப்பான் போலும்.

நெற்றியோரம் வியர்வை வழிந்து கொண்டிருக்க சட்டை முழுக்க தொப்பலாய் நனைந்து போயிருந்தது.

 

“என்னடா குளிச்சிட்டு வர்ரியா..? இப்டி நனஞ்சி போய் இருக்க..?”

 

“ஆமா இதுவும் கேப்ப..இன்னுமும் கேப்ப..பாவம் ரெண்டு பொண்ணுங்க இருக்காங்கன்னு வெயில்னு பாக்காம அலஞ்சு திரிஞ்சு தண்ணி பாட்டில் வாங்கிட்டு வந்தேன்ல..எனக்கு தேவ தான்..”

 

அவளையும் அவளின் பின்னே சோர்ந்து போய் நின்றிருந்த தன் உடன் பிறப்பையும் பார்த்து சொல்ல இருவரும் அவனின் ஆதங்கத்தை ஒரு பொருட்டாகவே கொள்ளவில்லை.

 

“ஆமா தங்கச்சிங்களுக்கு நீ தான் எல்லாம் பாத்து பாத்து பண்ணனும்..அது கடம..அத செஞ்சேன்னு இப்டி தம்பட்டம் அடிச்சிக்க கூடாது..” 

 

நெற்றியில் இருந்த வியர்வையை புறங்கையால் ஒற்றி எடுத்துக் கொண்டே முன்னே நின்றிருந்தவவனை அவள் வாரிட பல்லைக் கடித்தவனோ சராமாறியாய் திட்டித் தீர்த்தான்,இருவரையும்.

 

பெண்ணவளை விட சாவகாசமாய் அவனின் திட்டுக்களை ஏற்றுக் கொண்டு நின்றது என்னவோ அவனின் உடன் பிறப்பான சைந்தவி தான்.

 

“எவ்ளோ திட்றேன்..மனுஷன்னு கொஞ்சமாச்சும் கணக்கெடுக்குதா ரெண்டு பக்கியும்..மனசாட்சியே இல்ல இவளுங்களுக்கு..” அவன் கத்தியே திட்டிட மூவரையும் பார்த்து தலையில் அடித்துக் கொண்டார்,அந்த காவலாளி.

 

“இப்டி போய் பைத்தியங்க கிட்ட வந்து மாட்டி கிட்டேனே..” அவர் மனதுக்குள் ஆயாசமாய் நினைத்துக் கொண்டது மூவரின் செவியையும் அடைந்திட வாய்ப்பில்லை.

 

நுழைவாயில் கம்பிகளில் இரண்டை பற்றிக் கொண்டு இடைவெளியில் நாடியை வைத்து நுழைவாயிலின் அடித்தளத்தில் பாதம் பதித்து ஏறி நின்றவளை விசித்திரமாய்த் தான் பார்த்தார்,மனிதர்.

 

திட்டித் தீர்த்த சத்யாவோ ஒரு ஓரமாய் ஒதுங்கி நின்று கொள்ள அதன் பின் அவ்விடமே அமைதியானது.

 

சைந்தவி ஒரு ஓரமாய் நின்று அலைபேசியில் மூழ்கிப் போக பெண்ணவள் தான் குரங்கு வித்தைகள் செய்து கொண்டிருந்தாள்.

 

“இந்த பொண்ண பாத்தா நல்லா தான இருக்கு..எதுக்கு இப்டி கொரங்கு சேட்ட பண்ணிட்டு இருக்கோ தெரிலியே..” காவலாளி நினைக்கும் முன்னே வண்டி ஹாரன் சத்தம் கேட்டிட ஏறி நின்றவளுக்கு இறங்கிடச் சொல்லி சைகை காட்டி விட்டு வாயிலை திறக்க கடந்து செல்லப் பார்த்த அந்த உயர் ரக காரின் முன்னே வந்து நின்று வழி மறித்தான்,சத்யா.

 

அவனுடன் நின்றிருந்தனர்,பெண்கள் இருவரும்.காவலாளியோ மூவரை விலத்திட வர உள்ளே இருந்தவனின் கையசைவில் அப்படியே அவ்விடத்தில் தரித்து விட்டிருந்தார்.

 

“சார் ப்ளீஸ் சார் ஒரே ஒரு தடவ உங்க சேர்மன பாக்க பர்மிஷன் தாங்க சார்..” கார்க் கண்ணாடியை இறக்கி விட்டு அமர்த்தலாய் அமர்ந்திருந்தவனிடம் சத்யா கெஞ்சிட அவனுக்கு அவர்களின் செயலில் கடுப்பு வந்தாலும் ஒரு புறம் பாவமாகவும் இருந்தது.

 

அவனின் முதலாளியைப் பற்றி அவனுக்கு நன்கு தெரியும்.அவனைத் தாண்டி தன்னால் எதுவும் செய்திட இயலாது என்று தெளிவாகவே புரிந்திருப்பவனுக்கு அவர்களிடம் என்ன சொல்லி தன்னிலையை புரிய வைத்திடுவது என்பது தான் தெரியவில்லை.

 

“இங்க பாருங்க..திரும்ப திரும்ப வந்து என்கிட்ட கெஞ்ச வேணா..சார மீறி என்னால எதுவும் பண்ண முடியாது..புரியுதா..? இதுக்கப்றம் அவர வந்து பாக்கனும்னு என் கிட்ட வந்து சொல்லிகிட்டு இருக்காதீங்க..இது தான் லாஸ்ட் வார்னிங்..இதுக்கப்றமும் நீங்க தொந்தரவு பண்ணுனீங்கன்னா லீகலா ஆக்ஷன் எடுக்க வேண்டி இருக்கும்..” கறாராய் மொழிந்தவனோ சாரதிக்கு வண்டியைக் கிளப்பிடச் சொல்ல அதியுயர் வேகத்தில் வண்டியும் அவ்விடத்தை விட்டு அகன்று போனது.

 

பெண்ணவளுக்கோ ஏமாற்றம் ஒரு புறம் என்றால் இத்தனை நேரம் காத்துக் கிடந்தது வீணாகிப் போனதன் எரிச்சல் மறுபுறம்.

 

“வா சத்யா..நாம கெளம்பி போலாம்..இவனுங்களோட வெண்ண மொதலாளிய பாக்கவும் தேவல..பேசவும் தேவல..மண்டக்கனம் புடிச்ச மங்கி அவன்..அவன எதுக்கு நாம பாக்கனும்..? ஒன்னும் தேவல வா போலாம்..” கத்திக் கொண்டே கடந்து போக இத்தனை நேரம் அவள் திட்டியதையும் அலைபேதி வாயிலாக உரியவனுக்கு சேர்ப்பித்துக் கொண்டிருந்தான்,காவலாளியின் அருகே நின்றிருந்த ஒருவன்.

 

வீட்டுக்கு வந்த மூவரின் மனதிலும் இருந்த கொதிப்பு மட்டும் அடங்கியபாடில்லை.முகமிறயாதவன் என்றாலும் பெண்ணவளுக்கோ அவனின் மீது அத்தனை கடுப்பு.

 

சில மணித்துளிகள் கடந்தும் மூவருமே இன்னும் இயல்பு நிலைக்கு மீண்டிருக்கவில்லை.தாம் அத்தனை சொல்லியும் துளியும் கண்டு கொள்ளாமல் நடந்து கொண்டவனின் மீதிருக்கும் ஆத்திரம் அடங்கியபாடில்லை.

 

“பேசாம இருந்தா சரி வராது…கொஞ்சம் கோபம் ஆறுற வர பக்கத்துல பார்க் வர பொய்ட்டு வர்லாம்..” என்று இருவரையும் அழைத்திட மறுப்பாய் தலையசைத்தான்,சத்யா.

 

“நீங்க ரெண்டு பேரும் பொய்ட்டு வாங்க..நா கொஞ்ச நேரம் தூங்கி எழும்பறேன்..” மொழிந்தவனோ இருவரின் பதிலுக்கு கூட காத்திராமல் அறைக்குள் நுழைந்து கொள்ள சைந்தவி கிளம்பியிருந்தாள்,பெண்ணவளுடன்.

 

“எப்டி தான் இப்டி லவ் பண்றாங்களோ..? ” தன்னைச் சுற்றி ஜோடியாய் அமர்ந்து இருந்தவர்களை பார்த்து பெரூமுச்சுடன் சொன்னவளுக்கு சத்தியமாய் அது காதல் என்று நம்ப முடியவில்லை.

 

“அது லவ் டி..நீயெல்லாம் அதுக்கு சரிப்பட்டு வர மாட்ட..பையன்னா பத்தடி தள்ளி நிக்கறவ நீ..இதுல எப்டி உனக்கு லவ் வரும்..நோ சான்ஸ்..” வாயில் ஏதோ போட்டு கொறித்த படி சைந்தவியும் பெண்ணவளை பங்கமாய் கலாய்த்திட அவளுக்கும் அதை ஒப்புக் கொள்வதை தவிர வேறு வழியில்லை.

 

“ஆமாடி எனக்கும் அப்டி தான் தோணுது..இந்த வவ்வு..கத்திரிக்கா இதெல்லாம் எனக்கு கொஞ்சமும் செட் ஆகாது..நானெல்லாம் மொரட்டு சிங்கிள்..”

 

“இப்டி மொரட்டு சிங்கிள்னு சொல்லிகிட்டு சுத்தறவங்க தான்..பார்த்ததும் படக்குன்னு லவ்வுல விழுந்துருவாங்ளாம்..நீ வேணுன்னா உனக்கும் கண்டிப்பா லவ் வரத் தான் போகுது..அப்போ இந்த டயலாக் எல்லாம் எங்கயோ ஓடிப் போயிருக்கும்..”

 

“க்கும்..இன்னும் இதெல்லாம் நடக்கும்னு நம்பிகிட்டு இருக்கியா நீ..போடி..” சைந்தவியிடம் எக்காளமாய் கொக்கரித்து விட்டு பெண்ணவள் எழுந்து நடந்திட அவளைப் பின் தொடர்ந்தாள்,உடன் பிறவா சகோதரியவள்.

 

“நாளக்கி நாம ரிஸர்ச்கு பருதியவனம் போகனும்ல..எத்தன மணிக்கு கெளம்ப போறோம்..”

 

“இங்க இருந்து விடியக்கால நாலு நாலர மணிக்கு கெளம்பிட்டோம்னா ஈவ்னிங்குள்ள அங்க இருந்து வந்துர்லாம்..ஒரு நாள்ல நம்ம வேல முடிஞ்சுரும்..நீ என்ன சொல்ற..சத்து மாவு கிட்ட காலைல கெளம்பலாம்னு சொல்லிரலாமா..?”

 

“ம்ம்..எனக்கும் அது தான் சரின்னு தோணுது..இன்னிக்கி மட்டும் அந்த மனுஷன பாக்க போய் காத்து கிட்டு இருக்கலனா இன்னிக்கே கெளம்பி போய்ருக்கலாம்..”

 

“சும்மா அந்த மண்டக்கனம் புடிச்சவன பத்தி பேசி என்ன கடுப்பாக்காத..ஏதோ இன்னிக்கி போக முடில அவ்ளோ தான..நாளக்கி போய் வேலய முடிச்சிட்டு வர்லாம்..” என்றவளுக்கோ நாளை செல்லப் போகும் பயணத்தை எண்ணுகையில் உள்ளுக்குள் அத்தனை ஆர்வம்.

 

                ●●●●●●●

 

மறுநாள் பொழுது விடிந்து காலை எட்டு மணி என கடிகாரம் காட்டிட சலிப்புடனேயே நடந்து வந்து கொண்டிருந்தனர்,மூவரும்.

 

பாதை முழுவதும் பாதங்கள் நீள வலித்தாலும் இருபுறமும் சுற்றி வளைத்திருந்த பசுமையான மரங்களும் அது தந்து நின்ற குளிர்மையும் உள்ளுக்குள் தானாகவே ஒரு இதத்தை பரப்பின.

 

பழைய பாடல் ஒன்று சற்று தூரத்தே இருந்த தேநீர் கடையில் ஓடிக் கொண்டிருக்க வீசிச் சென்ற காற்றின் வீரியத்தால் இன்னும் சீர்த்திருத்தி அமைக்கப்படாத மண்பாதையில் ஆங்காங்கே புழுதியும் கிளம்பிக் கொண்டிருந்தது.

 

“இன்னும் எவ்ளோ தூரம் போனும் டா..?” சலித்துக் கொண்டே நடந்தவளுக்கு சத்தியமாய் அப்படி ஒரு வலி,குதிக்கால்களில்.

 

“பர்ஸ்ட்டு நாம போய் அந்த ஊர்த்தலைவர மீட் பண்ணனும்..மீட் பண்ணி அந்த பூத் பங்களாகு போறதுக்கு பர்மிஷன் வாங்கனும்..அதுக்கப்றம் தான் அங்க போகனும்..புரிதுல..ஸோ அது வர நாம நடந்து தான் ஆகனும்..” தன் கைக்கடிகாரத்தை சரி செய்த படி சத்யா சொல்ல பொதுப் போக்குவரத்து சேவை இல்லா அந்த வீதிய தம்மால் முடிந்தளவு சபித்துக் கொண்டே நடந்தனர்,பெண்கள் இருவரும்.

 

தேநீர் கடையில் ஒரு கோப்பை தேநீர் குடித்து விட்டு செல்லலாம் என முரண்டு பிடித்தவர்களை அதட்டி அழைத்துக் கொண்டு முன்னேறிய சத்யாவுக்கு இரு பெண்களை வைத்து அவ்விடத்தில் தரிப்பது தேநீர் குடிப்பதும் உசிதமாய் படவில்லை.

 

கால் வலிக்க வலிக்க நடந்து ஊர்த்தலைவரான பெரியவரின் வீட்டை அடைந்திட அவர்களின் நல்ல நேரம் போலும்,அவரும் யாரோ ஒருவரின் வருகைக்காக நுழைவாயிலிற்கு அருகிலேயே நின்றிருந்தார்,தன் பெரிய மீசையின் நுனியை அடிக்கடி முறுக்கி விட்ட படி.

 

“ஐயா வணக்கம்..”

 

“வணக்கம் தம்பி..யாரு நீங்க..? இதுக்கு முன்னாடி உங்கள நா இந்த ஊர்ல கண்டதில்லயே..ஊருக்கு புதுசா என்ன..?”

 

“ஆமாங்கய்யா..நாங்க வெளியூர்ல இருந்து வர்ரோம்..எங்க காலேஜ்ல ஒரு ப்ராஜெக்ட் விஷயமா ஒரு சின்ன ஆராய்ச்சிக்காக வந்துருக்கோம்..”

 

“படிப்பு சம்பந்தப்பட்ட விஷயமா தம்பி..ரொம்ப நல்ல விஷயம்..இப்போ கண்டிப்பா எல்லாருக்கும் படிப்பு முக்கியம்..நா என்னால முடிஞ்சளவு ஒதவிய பண்றேன்..என்ன விஷயம் தம்பி..? எதுக்காக என்ன பாக்க வந்து இருக்கீங்க..?”

 

“அது இங்க ஊருக்கு ஒதுக்குப் புறமா இருக்குற அரண்மனைல தான் எங்க வேல இருக்கு..அங்க நாங்க போகனும்..” என்றிடவுமே அவரின் முகம் பாறையென இறுகிப் போக விழிகளில் கோபம் படர்ந்திற்று.

 

“அதுக்காகவா இங்க வந்தீங்க..? அதுக்காக இங்க வந்து இருக்கீங்கன்னா தயவு செஞ்சு இங்க இருந்து கெளம்பிருங்க..அந்த அரண்மனய யாரும் நெருங்க கூட பயப்டுவாங்க..நீங்க என்னன்னா வந்து உள்ள போக பர்மிஷன் கேட்டுகிட்டு இருக்கீங்க..? என்ன தான் ஆச்சுன்னாலும் உங்கள உள்ள போக விட்றதா இல்ல..இப்போ நீங்க கெளம்பி போய்டலாம்..”

 

“இல்லங்கய்யா..”

 

“கோவத்த கெளப்பாம போங்க தம்பி..” கடுமையாய் மொழிந்தவரோ விடுவிடுவென உள்ளே நடந்திட சத்யாவுக்கு ஆற்றாமை பொங்கி வழிந்தது.

 

ஊரில் இப்படி யாரையும் அந்த அரண்மனைக்குள் அனுமதிப்பதில்லை என்று அவனுக்கு ஓரளவு தெரிந்து இருந்தால் பெரிதான அதிர்வேதும் இல்லை.இதை எதிர்ப்பார்த்து தானே வ வந்தான்.

 

“இப்போ என்னட பண்றது..?” இத்தனை நேரம் எதுவும் குறுக்கே பேசாது கேட்டுக் கொண்டிருந்த பெண்ணவள் கேட்க மறுப்பாய் தலையசைத்து இதழ் பிதுக்கினான்,சத்யா.

 

முகத்தில் வாட்டம் நிரம்பியோட தலை தாழ்ந்த படி திரும்பியவர்களோ தம்மை கடந்து சென்ற அந்த உயர் ரக வண்டியை கவனிக்கவில்லை.ஆனால்,உள்ளே இருந்தவனின் ஆழ் துளைக்கும் விழிகள் பெண்ணவளை வெகு கூர்மையாய் அதற்கு நிகரான கோபத்துடன் உரசி மீண்டது.

 

“இது தான் சார் நேத்து பேசுன பொண்ணு..” அருகே அமர்ந்திருந்ந அவனின் பிரத்தியேக காரியதரிசி பெண்ணவளை சுட்டிக் காட்டி கூறிட பதிலின்றி தலையசைத்தவனின் விழிகளில் இருந்த அனல் அகலவேயில்லை.

 

தான் ஒருவனின் கோபத்துக்கு ஆளாகி இருப்பது கூட தெரியாமல் ஏதோ தனக்கு பிடித்த பாடலை இதழ்களுக்குள் முணுமுணுத்துக் கொண்டிருந்தவளை கொலைவெறியோடு பார்த்தான்,அவளின் உடன் பிறவா சகோதரன்.

 

“மனுஷன் இவ்ளோ கடுப்புல இருக்கான்..இப்ப போய் பாட்டு படிச்சிகிட்டு இருக்க..”

 

“இரு டா நானும் தான் என்ன பண்ணலாம்னு யோசிச்சிட்டு தான் இருக்கேன்..இப்போ இவங்களுக்கு நாம பர்மிஷன் கேட்டதனால தான கோவம் வந்துச்சு..இப்போ ஒன்னும் போய் கேக்க தேவல..நாம யாருக்கும் தெரியாம அந்த பூத் பங்களாக்குள்ள போயிரலாம்..”

 

“ஏய் என்னடி சொல்ற..?”

 

“பதறாத சைந்து..சத்து மாவே பேசாம தான இருக்கான்..நாம ஊர்ல இருந்து கெளம்பற மாதிரி போய் அடுத்த வழியால உள்ள வந்து அங்க போய்ரலாம்..சாயந்தரம் ஆகறப்போ போனா யாரும் பெருசா கண்டுக்கவும் மாட்டாங்க..”

 

“வீட்ல என்னடி சொல்றது..?” நெற்றியை நீவிக் கொண்டு யோசனை செய்தவாறு கேட்டான்,அவன்.

 

“வர்ரதுக்கு பஸ்ஸு இல்ல நைட் டைம்ல..நாளக்கி காலைலயே கெளம்பி வர்ரேம்..அது வர இங்க இருக்குற ஹோட்டல் ஒன்னுல தங்கிக்கறோம்னு சொல்லிடலாம்..” அழகாய் பொய்யைக் கோர்த்தவளுக்கு நடந்தேறப்போகும் நிகழ்வது தெரியாதே.

 

மெல்ல மெல்ல இருள் மெல்லிய போர்வையாய் கசியத் துவங்கி இருந்த நேரம் அது.

 

ஊரார் யாரினது கண்ணிலும் சிக்காமல் தப்பித்து அந்த பாழடைந்த அரண்மனையின் வளாகத்தினுள் நுழைந்திருந்தனர்,மூவரும்.

 

பெண்ணவளோ இடுப்பில் கரத்தை குற்றிக் கொண்டு அந்த பாழடைந்து தூசு படிந்த கிடந்த அரண்மனையை விழியெடுக்காது பார்த்திருந்தாள்,தன்னை மீறி.

 

ஏனென்று தெரியவில்லை.மனதுக்குள் முகிழ்த்த வித்தியாசமான உணர்வொன்று உள்ளுக்குள் முழுதாய் பரவி ஏதோ கூற முயன்று தோற்றுப் போவது போன்ற மாயை.

 

“என்னடி எதுக்கு இப்போ வச்ச கண்ணு வாங்காம பாத்துட்டு இருக்க..? காத்து கருப்பு அடிச்சிருச்சா..?”

 

“சீ சீ..அப்டிலாம் எதுவும் இல்ல..ஆனாலும் என்னமோ மாதிரி இருக்கு மனசுக்குள்ள..” இதழ்கள் வார்த்தைகளை உதிர்த்திட அவள் அடியெடுத்து வைத்தாள்,முன்னே.

 

அவளின் ஒவ்வொரு பாதச் சுவட்டின் அதிர்வுக்கும் அந்த அரண்மனைக்குள் தூசு புழுதியும் எழுந்து தரை தொட்டதை உணரும் சக்தியில்லை,பெண்ணவளுக்கு.

 

வரம் கிட்டும்.

 

🖋️அதி..!

2024.09.04

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
3
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்