Loading

தேன்மலர் அழுவதைத் தாங்க முடியாமல் அருளும் ராகவியும் அவளுக்கு சாமாதானம் கூறும் வழியறியாதுத் தவித்துக் கொண்டிருக்க, சுரேஷின் அழுகை அவர்களை பதட்டமடையச் செய்தது. தேன்மலர் மற்றும் சுரேஷை கண்டு ராகவியும் அழ ஆரம்பிக்க, அருளின் நிலைதான் பரிதாபமாகிப் போனது. முதலில் யாருக்குத் தேறுதல் கூறுவது என்று தவித்து நின்ற அருள், கலங்கும் தன் நெஞ்சை ஆறுதல் படுத்தி மெல்ல சுரேஷை நெருங்கி அவன் தோள் தொட்டான்.

கண்கள் மூடி அழுதுக் கொண்டிருந்த சுரேஷ் தன் தோளில் கைப்படவும் விழித்து நிமிர்ந்து அருளை பார்த்தவன், “அருளு…. சித்தப்பா…” என்று அழுக, அருள் பதட்டமாக “அண்ணே… என்ன ண்ணே…அப்பாக்கு என்னாச்சு… அழாம சொல்லுண்ணே…” என்க, சுரேஷின் அழுகை அதிகமாக, அழுதுக் கொண்டிருந்த ராகவியும் சுரேஷ் சித்தப்பா என்று கூறியதுமே படபடத்தத் தன் நெஞ்சோடு சுரேஷை பார்த்தாள்.

அருள் “ஐய்யோ… அண்ணே… உன் அழுகை என்னை பயமுறுத்துது ண்ணே… அழாம சொல்லு ண்ணே…” என்றான்.

சுரேஷ் தன் கண்களைத் துடைத்துக் கொண்டு “சித்தாப்பாவ ஆஸ்பத்திரில வச்சுருக்காங்களாம் அருளு…” என்னும் போதே அதுவரை அழுதுக் கொண்டிருந்த தேன்மலர் கண்களைத் துடைத்துக் கொண்டு இறுக்கமானக் குரலில் “அப்பாவுக்கு ஸ்ட்ரோக்….” என்று கூறி, டெல்லியில் உள்ள பிரபலமான மருத்துவமனை ஒன்றின் பெயரைக் கூறி “அப்பாவ… அங்க அட்மிட் பண்ணீற்காங்களாம்…” என்றாள்.

அதைக் கேட்ட ராகவி “தேனு…” என்று அவளைக் கட்டிக் கொண்டு அழ, அவளோ கற்சிலைப் போல் அசையாமல் அமர்ந்திருந்தாள்.

அருளுக்கு தேன்மலர் சொன்னதை நம்பவே சிறிது நேரம் எடுத்தது. பின்னே அன்று முழுவதும் சிரித்துப் பேசி ஒன்றாக உணவு உண்டு மகிழ்ந்த ஒரு மனிதருக்கு அவர் கிளம்பிய ஆறு மணித்தியாலங்களுக்குள் பக்கவாதம் என்றால் அவனால் எப்படி நம்ப இயலும். அருள் இப்போது கண்ணீரைக் கட்டுப் படுத்த முடியாமல் அழுதவன், தன்னை சமன் செய்து கொண்டு மற்றவர்களைப் பார்க்க, இப்போது சுரேஷ் கொஞ்சம் திடமாக அமர்ந்திருக்க, ராகவி இன்னும் தேனை கட்டிக் கொண்டு அழுதுக் கொண்டிருக்க, தேன்மலர் மட்டும் இறுகிய கல்லாய் எவ்வுணர்வுமின்றி சமைந்திருந்தாள்.

அருளுக்கு தேன்மலர் இப்படி இருப்பது பயத்தைத் தர, தேன்மலரின் நிலை அறியாது ராகவி அழுவது அவனுக்கு கோபத்தைக் கிளறி விட, “ஏய் கவி… மொத அழறத நிறுத்து…” என்று அவளை தேன்மலரிடமிருந்து வெடுக்கென்று இழுக்க, ராகவி ஒன்றும் புரியாமல் விழித்தவாறு அருளை பார்த்தாள்.

அருள் கோபமாக “கொஞ்சமாச்சும் அறிவிருக்காடி… அவளை பாரு… இவ்ளோ நேரம் அழுதுட்ருந்தவ கல்லு மாறி உக்காந்துருக்கா… எனக்கு அப்பாயி, அப்பாவ நினைச்சுக் கூட இவ்ளோ பயமில்ல டி…. ஆனா எந்த உணர்ச்சியுமேயில்லாம சிலை மாறி உக்காந்துருக்குற இவள பாத்தா தான் பயமாயிருக்கு… அவள இப்டியே விட்டா… இன்னொரு பெட் ரெடி பண்ணி படுத்துக்குவா… ஒருத்தி என்ன நிலைமல இருக்கான்னு தெரியாம அவள கட்டி புடிச்சு ஒப்பாரி வச்சுட்ருக்க… ச்சீ முதல்ல அழறத நிறுத்து….” என்று அதட்டினான்.

அருளின் அதட்டலில் அழுவதை நிறுத்திய ராகவி, அதன் பிறகே பார்வை எங்கோ நிலைக்குத்தியிருக்க உடல் விறைக்க இறுக்கமாக அமர்ந்திருக்கும் தேன்மலரை கண்டாள். தேன்மலரின் நிலை அவளுள்ளும் கலக்கத்தைத் தோற்றுவிக்க, இப்போது என்ன செய்வது என்பது போல் அருளை பார்த்தாள்.

அதுவரை அவர்களை அமைதியாகக் கவனித்துக் கொண்டிருந்த சுரேஷ் மெல்ல தேன்மலரிடம் சென்று, அவள் தலை வருடி “தேனு… அழனுனா அழுதுறுடா… இப்டி இருக்காத…” என்று கூற, அப்போதும் அவளிடம் எவ்வித அசைவுமில்லை.

சுரேஷ் அவளிடம் மறுபடியும் பேச, அவள் பதில் கூறாமல் அமர்ந்திருக்கவும், ராகவி அவள் தோள்கள் பற்றி “தேனு… இப்டி இருக்காத டி… எனக்கு பயமாருக்கு… தேனு… என்னை பாரு டி… அப்பாவுக்கு ஒன்னும் ஆகாது டி…” என்று அவளை உலுக்கினாள்.

அப்போதும் அவள் அசையாதிருக்கவும் அருள் கோபமாக “நீ இப்டியே உக்காந்துட்டு இருடி… அப்பாயியையும் அப்பாவையும் பாத்துக்க ஆளில்லாம போகட்டும்…” என்று அவளை உசுப்பி விடும் விதமாக கத்த, அப்போதும் அவளிடம் எந்த மாற்றமுமில்லை.

அவளும் தான் என்ன செய்வாள் ஒருமுறை அடி விழுந்தால் பரவாயில்லை, அடிமேல் அடியாய் விழுந்துக் கொண்டிருந்தால், ஒருக் கட்டத்தில் கண்ணீர் வற்றி உணர்ச்சிகளும் மறத்துப் போகத் தானேச் செய்யும். முதலில் தன் அன்னையை பறிக் கொடுத்தவள், அப்பாயியின் அன்பில் தன் அன்னையை இழந்த சோகம் சிறிது மறந்தவளுக்கு அந்த அப்பாயியும் இப்போது உணர்வில்லாமலிருக்க ஆறுதலாய் இருக்க வேண்டிய தந்தைக்கும் பக்கவாதம் என்றால் பேதை மனது சுக்கு நூறாய் சிதறி விடாதா?.

சுரேஷ், ராகவி இருவரும் அவளிடம் வெகு நேரம் கெஞ்சிக் கொண்டிருக்க, பொறுத்து பொறுத்துப் பார்த்த அருள் அவர்கள் இருவரையும் விலக்கிவிட்டு தேன்மலரை இழுத்து நிற்க வைத்தவன், அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்தான். இதை எதிர்பாராத சுரேஷும் ராகவியும் வாயடைத்து நிற்க, தேன்மலர் ஏதோ வேற்றுலகிற்கு வந்தது போல் விழித்தவள், தன் கன்னம் சுர்ரென்று எரிய, எதிரே கோபமாக நிற்கும் அருளை கண்டவள்

“அருளு… அப்பாவுக்கு ஸ்ட்ரோக்காம் டா… நா உடனே டெல்லி போகனும் நீ, ராகவி, அண்ணே மூனு பேரும் அப்பாயிய பாத்துக்கோங்க…. நா டெல்லி கிளம்பறேன்…” என்றாள்.

ராகவி தழுதழுத்தக் குரலில் “தேனு… அப்பாயி…” என்று ஏதோ கூற வர,

தேன்மலர் அவள் கைப்பிடித்து “கவி நீ ஒன்னும் கவலப் படாத… அப்பாயி என்னை விட்டு அவ்ளோ சீக்ரம் போகாது… நா போகவும் விட மாட்டேன்… அப்பாயி உங்க முன்னாடி தானே சொன்னுச்சு அவ்ளோ சீக்ரம் போக மாட்டேன்னு… அது ரொம்ப வருஷமா உழைச்சுருச்சுல அதான்… கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுத்துட்டு வந்துரும்…” என்று அவளுக்கு ஆறுதல் கூறினாள்.

தாங்கள் அவளுக்கு ஆறுதல் கூற வேண்டிய நிலையில் அவள் ராகவிக்கு ஆறுதல் கூறியது சுரேஷ், ராகவி, அருள் மூவரையும் கலங்கச் செய்தது. ராகவியும் சுரேஷும் கண்களில் நீர் வழிய அவளைப் பார்த்துக் கொண்டிருக்க, அருள் தான் பெரிதும் கலங்கிப் போனான்.

அருள் கண்ணீர் ஊற்றெடுக்க, நா தழுதழுக்க “ஹனி… அப்பா…” என்று அவள் கரங்கள் பற்றி அதில் முகம் புதைத்து அழ,

தேன்மலர் “அருளு… சிதம்பரமும் அவ்ளோ சீக்ரம் என்னைய விட்டு போக மாட்டாரு…. என்னையும் அப்பாயியையும் தவிக்க விட்டு போகுற அளவுக்கு அவுருக்குத் தைரியமில்ல…. ஏன் அப்டி நினைச்சா கூட நானும் அப்பாயியும் அவரை சும்மா விட மாட்டோம்னு தெரியும்… அதனால கவல படாத… சிதம்பரத்துக்கு ஒன்னும் ஆகாது…. ஆத்தாளும் மகனும் இவ நமக்கு ஒன்னுனா என்ன பண்ணுவான்னு பாக்க டெஸ்ட் வைக்கிறாங்க போல… என்னை பத்தி இன்னும் அவங்களுக்கு தெரில டெஸ்ட்னு வந்துட்டா தேனு சென்ச்சுரி தான் அடிப்பா… அவங்களுக்கு தான் தெரிலனா… எக்ஸாம்ல என்கூட போட்டிப் போட்ட அருளு உனக்குமாடா தெரியாது…” என்று கேட்டாள்.

அருள் நிமிர்ந்து கண்ணீர் விழிய சிறிது இதழ் விரித்து “நல்லாவே தெரியும் ஹனிமலர்… உன்னை அடிச்சுக்க யாரால முடியும்…” என்றான். அதைக் கேட்டு தேன்மலர் இதழ்களும் மிகச் சிறிதாய் விரிந்தது.

இவர்கள் இருவரையும் சுரேஷும் ராகவியும் வழியும் கண்ணீர் உறைய விழி விரித்து ஆச்சரியமாகப் பார்த்திருந்தனர். ராகவி அருள் மற்றும் தேன்மலரோடு இத்தனை வருடங்கள் பழகியும் அவளாலேயே சில சமயங்களில் இருவரையும் புரிந்துக் கொள்ள முடியவதில்லை. ஏனெனில் இருவரும் பெரும்பாலும் நண்பர்களாய் வலம் வந்தாலும் சில நேரம் எதிரிகளைப் போல் முறைத்துக் கொண்டும், சில நேரம் சிறுப் பிள்ளைகள் போல் அடித்துக் கொண்டும், சில நேரம் பாச மழைப் பொழிந்தும், சில நேரம் இவ்வாறு அவர்களுக்குள் என்ன உறவு என்பதே புரியாமல் அடுத்தவர்களைக் குழப்பி விடும் அளவிற்கு நடந்துக் கொள்வர். ராகவிக்குத் தான் குழப்பமெல்லாம், ஆனால் சுரேஷிற்கு அவர்களின் உரையாடலைக் கேட்டப்பின் அவர்களுக்குள்ளான உறவு தெளிவாய்ப் புரிய அவன் இதழ்கள் அழகாய்ப் புன்னகைப் பூத்தது.

தேன்மலர் “சரி டா… நா போய் மாமாவ பாத்து பேசிட்டு… டெல்லி கிளம்பறேன்…” என்று செல்ல எத்தனிக்க, அருள் அவள் கையைப் பிடிக்கவும், திரும்பி என்ன என்பது போல் பார்த்தாள்.

அருள் “நானும் வருவேன் உன்கூட…” என்று கூற, தேன்மலர் அவனையே யோசனையொடு விழி அகலாமல் பார்க்க, அவனும் அவளை தீர்க்கமாகப் பார்க்க, தேன்மலர் “சரி வா…” என்று கூறவும் அருளின் அதரங்கள் புன்னகையைச் சிந்தியது.

பின் தேன்மலர் மோகனை பார்க்கச் செல்லும் முன் அருளை திரும்பி பார்த்து “டேய் என்னை என் அப்பா மட்டும் தான் ஹனினு கூப்டனும்… இன்னொரு தடவ அப்டி கூப்ட்ட நீ எனக்கு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிக் குடுத்தது உனக்குத் திருப்பி கெடைக்கும்… நீ ஹனிமலர்னு கூப்ட்டா உன் ஹெல்த்துக்கு நல்லது…” என்றுவிட்டு அவள் மோகன் அறைக்குச் செல்ல, அருள் கண்களில் சிறிதுக் குறும்பு மின்னியது.

தேன்மலர் மோகனிடம் விஷயத்தைக் கூறி வேலாயியை தான் வரும் வரை நன்றாகப் பார்த்துக் கொள்ள கூறினாள். மோகன் சிதம்பரத்திற்காக வருத்தப்பட, தேன்மலர் அவரிடமும் நம்பிக்கையான வார்த்தைகள் உதிர்த்துவிட்டு மூவர் முன்பும் வந்து நின்றாள்.

தேன்மலர் “கவி… நீ வீட்டுக்குப் போ… அண்ணே… நா வர்ர வர அப்பாயிய பாத்துக்கோ… ஹெல்ப்புக்கு வேணா சுமதி அக்காவையோ இல்ல சேகர் அண்ணனையோ கூப்ட்டுக்கோ… நா அப்பாவுக்கு எப்டி இருக்குனு பாத்துட்டு அவரையும் இங்க கூட்டிட்டு வந்தர்ரேன்…” என்றாள்.

சுரேஷ் “சரிடாயி… பத்ரமா போய்ட்டு வா… போய்ட்டு ஃபோன் பண்ணு… சித்தப்பா குரல கேட்டா தான் எனக்கு நிம்மதியாயிருக்கும்…” என்று கூற, தேன்மலர் சரி என்று தலையசைத்தாள்.

ராகவி முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு நிற்க, தேனு அவளது நாடி பிடித்து முகத்தைத் தன்புறம் திருப்பி “கவி… புரிஞ்சுக்கோடா… அவ்ளோ தூரம் உன்னை கூட்டிட்டு போக முடியாது… இப்ப பாத்துருக்ற ஒரு அலையன்ஸ் முடியுற மாறி இருக்குனு சாய்ந்தரம் தானே அம்மா சொன்னாங்க… அப்டியிருக்றப்ப நீ அவ்ளோ தூரம் வேணாம்… இப்டி அன்டைம்ல ஹாஸ்பிட்டல்ல இருக்றதும் நல்லதில்ல… நீ டெய்லி காலேஜ் போகும் முன்னாடியும் வந்தப்றமும் அப்பாயியை வந்து பாத்துட்டுப் போ… நா இங்க இல்லாதப்ப அப்பாயிய நீ தானே பாத்துக்கணும்….” என்றாள்.

ராகவி மீண்டும் அவளை முறைக்க, தேன்மலர் “கவி… நாம மூனு பேருமே லீவ் போட்டா ஸ்டென்ட்ஸுக்கும் கஷ்டம் ஸ்டாப்ஸுக்கும் கஷ்டம்… புரிஞ்சுக்கோ மா…” என்று கெஞ்சும் குரலில் கேட்க,

ராகவி “சரி… அப்பாயிய பாத்துக்க நா இங்க இருக்கணுன்றதால ஓகே சொல்றேன்… போய்ட்டு டெய்லி எனக்கு கால் பண்ணணும்… வீடியோ கால் பண்ணு நா அப்பாவ பாக்கணும்… மிஸ் பண்ணணு வச்சுக்கோ உனக்கொரு பெட் போட நானே காரணமா இருப்பேன்…” என்று விரல் நீட்டி எச்சரிக்க, தேன்மலர் சிறிது இதழ் விரித்து “சரிங்க மகாராணி… நாம இப்ப கிளம்பலாமா…” என்று கேட்க, ராகவி அப்போதும் உர்ரென்று முகத்தை வைத்துக் கொண்டு சரி என்றாள்.

பின் தேன்மலர், அருள், ராகவி மூவரும் சுரேஷிடம் தாங்கள் கிளம்புவதாகக் கூற,

சுரேஷ் அருள் கையைப் பிடித்துக் கொண்டு “அருளு… ஆயிய பத்ரமா கூட்டிட்டு போடா… எதுனாலும் எனக்கு ஃபோன் பண்ணு…” என்று கவலைத் தோய்ந்தக் குரலில் அக்கறையாகக் கூற,

அருள் “அண்ணே… நா பாத்துக்றேன் ண்ணே…” என்று தன் மற்றொருவர் கையை அவன் கைமீது வைத்து அழுத்தம் கொடுத்தான்.

பின் மூவரும் ஒருமுறைச் சென்று வேலாயியை பார்த்துவிட்டு வர, தேன்மலர் அழக்கூடாது என்று தன் மனதைத் திடப்படுத்திக் கொண்டு சுரேஷிடம் மீண்டும் ஒருமுறை வேலாயியை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டு அருள் மற்றும் ராகவியோடு மருத்துவமனையிலிருந்து வெளியேறினாள்.

ராகவியின் வீடு சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஆண்டாள் வீதியிலேயே இருந்ததால் அவள் தன் ஸ்கூட்டியில் வீட்டிற்குப் புறப்பட்டாள். தேன்மலரும் அருளும் சுரேஷின் பயன்பாட்டிற்கு அருளின் வண்டியை விட்டு விட்டு தேன்மலரின் காரை எடுத்துக் கொண்டு சிலப் பொருட்கள் எடுப்பதற்காக தேன்மலர் வீட்டிற்குச் சென்றனர். போகும் வழியில் உத்தமர் கோவிலில் தான் அருளின் வீடு என்பதால், அருள் வீட்டிற்குச் சென்று விஷயத்தைக் கூறிவிட்டு அருளுக்கான உடைமைகளையும் சில பொருட்களையும் எடுத்துக் கொண்டு தேன்மலர் வீட்டிற்குச் சென்றனர். அருள் வீட்டில் அருளின் அம்மா தேன்மலருக்கு எதுவும் ஆகாது என்று ஆறுதல் கூற தேன்மலர் புன்னகையோடுத் தலையாட்டிவிட்டு புறப்பட்டாள்.

தேன்மலர் வீட்டிற்கு வந்தவர்களை, அக்கம் பக்கம் உள்ளவர்கள் சூழ்ந்துக் கொள்ள தேன்மலர் அவர்களையெல்லாம் பேசி சமாளித்து விட்டு வீட்டிற்குள் சென்று தனக்கு வேண்டிய உடைகள் மற்றும் சில பொருட்களை எடுத்தவள் கொஞ்சம் பணம் எடுத்துக் கொண்டு எதற்கும் இருக்கட்டுமென்று தன் பாஸ்போர்ட்டையும் எடுத்துக் கொண்டாள்.

பின் இருவரும் அங்கிருந்துப் புறப்பட்டு மருத்துவமனை வந்து சுரேஷின் கையில் சிறிது பணம் கொடுக்க, சுரேஷ் மறுத்தபோதும் தேன்மலர் “அண்ணே… ஹாஸ்பிட்டல்ல மருந்து எதும் எழுதிக் குடுப்பாங்க… அதுக்காகவாது இத வச்சுக்கோ… அப்றம் இன்னிக்கான ஹாஸ்பிட்டல் பில் கட்டிட்டேன்… மேற்கொண்டு பணம் கேட்டாங்கன்னா உன் அக்கௌன்ட்ல பணம் போட்ருக்கேன் அத எடுத்து யூஸ் பண்ணிக்கோ…” என்று கூறிவிட்டு அருளை அழைத்துக் கொண்டு அங்கிருந்துப் புறப்பட்டாள்.

திருச்சியிலிருந்து டெல்லிக்கு இரவு நேரத்தில் விமானம் இல்லாததாலும், அப்படியே இருந்தாலும் அது நான்ஸ்டாபாக இல்லாமல் பெங்களூர் இல்லை ஹைதராபாதிலோ நின்று பதினோரு மணி நேரத்தில் டெல்லியைச் சென்றடையும் விமானமாகவே இருக்கும். அதனால் சிதம்பரமும் எப்போது ஊருக்கு வந்தாலும் சென்னை வந்து திருச்சி வருவதை வழக்கமாக்கியிருந்தார். மணி பதினொன்று ஆகியிருந்ததால் சென்னைக்குக் கடைசியாக பத்தே முக்கால் மணியளவில் செல்லும் விமானமும் புறப்பட்டுச் சென்றிருந்ததாலும், தேன்மலரும் அருளும் காரில் சென்னைக்குச் சென்று காலை ஏழு மணிக்குப் டெல்லிக்குப் புறப்படும் விமானத்தில் அங்குச் சென்று விடலாம் என்று திட்டமிட்டுக் காரில் சென்னை நோக்கியத் தங்கள் பயணத்தை மேற்கொண்டனர்.

தேன்மலர் தானே கார் ஓட்டுவதாகக் கூறவும் அருள் அமைதியாக அருகில் அமர்ந்து அவள் முகத்தையேப் பார்த்துக் கொண்டு வந்தான். சற்று முன்பு இருந்ததை விட இப்போது அவள் முகம் தெளிந்திருப்பதைக் கண்டு நிம்மதிக் கொண்டான். காலை ஐந்தரை மணிக்கெல்லாம் சென்னை விமான நிலையம் வந்தடைந்த தேன்மலரும் அருளும் தங்கள் காலை வேலைகளை விமான நிலையத்திலேயே முடித்துக் கொண்டு தங்கள் விமானத்திற்கான போர்டிங் பாஸ் எடுத்துக் கொண்டு உள்ளேச் சென்று அமர்ந்தனர். சரியாக ஆறேமுக்கால் மணியளவில் பயணிகளுக்கான அழைப்பு வர, தேன்மலரும் அருளும் விமானத்தில் ஏறி அமர்ந்தனர். ஏழு மணிக்குப் புறப்பட்ட விமானம் பத்து மணியளவில் டெல்லிச் சென்று தரையிறங்க, தேன்மலரும் அருளும் டாக்ஸி பிடித்து சிதம்பரத்தை அனுமதித்திருந்த மருத்துவமனைக்குச் சென்றடைந்தனர்.

வரவேற்பில் விவரம் கூறி விசாரித்து, சிதம்பரம் இருந்த ஐசியூ அறையினுள் நுழைந்தனர். அங்கு சிதம்பரம், உடலின் இடதுப் பக்கம் முழுதும் முடங்கி செயலிழந்து இடப்பக்க வாயும் சிறிதாகக் கோணியிருக்க, தலையில் ஏதேதோ வயர்கள் மாட்டியிருக்க, மூக்கில் ஆக்ஸிஜன் மாஸ்க் பொருத்திப் படுத்திருந்தார். அவரை அந்நிலையில் கண்ட தேன்மலர் ஒரு கணம் உறைந்து பின் உடலெல்லாம் நடுங்க மெல்ல தன் தந்தையை நெருங்கியவள், கண்களில் நீர்த் திரையிட அவரை மேலிருந்துக் கீழ் வரைப் பார்த்து நடுங்கும் தன் கரம் கொண்டு முடங்கிக் கிடக்கும் தன் தந்தையின் கரத்தையும் காலையும் வருடினாள். அருளும் சிதம்பரத்தின் நிலைக் கண்டு உள்ளுக்குள் கலங்கினாலும் விழியிலிருந்து நீர் விழாமல் உள்ளிழுத்துக் கொண்டவன் வேதனையோடு தேன்மலரையே பார்த்துக் கொண்டிருந்தான். தன் மகளின் அருகண்மையையும் தீண்டலையும் உணர்ந்ததாலோ என்னவோ சிதம்பரத்தின் விழிப் பாவை மூடிய இமைகளுக்குள் அசைந்தாட, அதைக் கண்ட தேன்மலரும் அருளும் தங்களை நிலைப்படுத்திக் கொண்டு அவரை ஆவலாகப் பார்த்திருந்தனர்.

மெல்லக் கண் விழித்த சிதம்பரம், கண்களை சுழற்றி அறையை நோட்டமிட்டவர், தன் முன் நிற்கும் தன் மகளைப் பார்த்து புன்னகைக்க முடியாமல் புன்னகைத்தார்.

அதைக் கண்டு தேன்மலர் பதிலுக்குப் புன்னகைத்து “அப்பா… என்ன நீ பாட்டுக்கு இங்க வந்து படுத்துருக்க… வேல தான் முக்கியம்ப… எழுந்து வேலைக்குப் போ…” என்றாள்.

அதைக் கேட்டு சிதம்பரம் கண்கள் கலங்கி வலது கையையும் நகர்த்த முடியாமல் நகர்த்தி அவள் கையைப் பற்றி அவளிடம் ஏதோ கூற விழைந்து நா குழற ஏதோ உளறினார். அதைக் கண்டு திடமாக நின்ற தேன்மலர் விழிகள் கண்ணீர் சிந்த, அருள் அவள் தோளைத் தொடவும் தன்னைக் கட்டுப் படுத்திக் கொண்டாள்.

அருள் “அப்பா… ஸ்ட்ரெயின் பண்ணாம ரெஸ்ட் எடுங்க…” என்று கூறவும், சிதம்பரம் சிறிதாகப் புன்னகைத்து கண்கள் மூடி தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டார்.

பின் மெல்ல இமைத் திறந்து தன் மகளிடம் தெளிவில்லாமல் சற்று குழறி ஏதோ கூற, தேன்மலர், அருள் இருவரும் அவர் கூறுவது புரியாமல் விழிக்கவும், சிதம்பரம் பேப்பர் என்று தட்டுத் தடுமாறி கூற, தேன்மலர் அவசர அவசரமாக அந்த அறையைக் கண்களால் துழாவியவள் அங்கு ஒரு பேப்பர் கீழேக் கிடக்கவும் அதை எடுத்து வர, அருள் அவனிடமிருந்த பேனாவைக் கொடுக்க, இரண்டையும் தேன்மலர் சிதம்பரத்திடம் கொடுத்தாள். அவர் வலது கையையும் சரியாக உபயோகப் படுத்த முடியாமல் திணற, தேன்மலர் அவர் கையைப் பிடித்துக் கொள்ளவும் ஐந்து நிமிடம் போராடி அ என்று கிறுக்கலாக எழுதினார்.

அருளுக்கு அவர் எழுதியது புரியாவிட்டாலும் தேன்மலர் உடனே புரிந்துக் கொண்டு “அப்பாயிக்கு தெரியாது ப்பா… நாங்க காலஜ்லேர்ந்து போக சொன்னாங்கனு சொல்லி தான் வந்தோம்…” என்று வேலாயி பற்றி அறிந்தால் அவரின் உடல்நிலை இன்னும் மோசமாகுமென்று பொய்க் கூறினாள்.

அதன் பிறகே சிதம்பரம் சற்று ஆசுவாமடைந்து, சிரமப்பட்டு தேன்மலரின் கைகளைப் பற்றியவர், உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்க, தேன்மலர் அவர் கைமீது தன் கை வைத்து “அப்பா… என்னை பத்தி கவல பட்றத விட்டுட்டு நீ நல்லா ரெஸ்ட் எடு… அப்ப தான் உடம்பு சீக்ரம் குணமாகும்…” என்றாள்.

அச்சமயம் அங்கு மருத்துவர் வர, தேன்மலரும் அருளும் வெளியே செல்ல எத்தனிக்க, சிதம்பரம் தன் மகள் கையை விடாமல் தவிப்பாக கண்கள் கலங்க அவளிடம் போகாதே என்று கண்களால் கூற, தேன்மலர் “நா எங்கயும் போகல ப்பா… நா இங்க தான் இருக்கேன்….” என்று கூறிவிட்டு அவர் கைகளை எடுத்துவிட்டு வேகமாக அவ்வறை விட்டு சென்றாள்.

அருளும் அவள் பின் வேகமாகச் செல்ல, வெளியே போடப்பட்டிருந்த இருக்கையில் தேன்மலர் கைகளால் முகத்தை மூடிக் கொண்டு அழுதுக் கொண்டிருக்க, மெல்ல அவளை நெருங்கியவன் அவள் தலையில் கை வைக்கவும் தேன்மலர் அவனை வயிற்றோடுக் கட்டிக் கொண்டு “அருளு அப்பா…” என்று அழ ஆரம்பித்தாள். அவள் அழட்டுமென்ளறு அமைதியாக அவள் தலை வருடிய அருள் அவளின் அழுகைக் குறைந்து தேம்பலாக மாறவும் “அப்பா சீக்ரமே சரியாகி வருவாரு மா… அழாத மா…” என்று மென்மையாக வாஞ்சையாகக் கூறினான். அவனை நிமிர்ந்துப் பார்த்த தேன்மலர் “ம்ம்ம்…” என்று தலையாட்டி கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

அச்சமயம் மருத்துவர் சிதம்பரமிருந்த அறையிலிருந்து வெளி வரவும் தேன்மலரும் அருளும் அவரை நோக்கிச் சென்றனர். அம்மருத்துவர் “ஆர் யூ ரிலேட்டிவ்ஸ் ஆஃப் சிதம்பரம்…” என்று வினவ,

தேன்மலர் “எஸ் டாக்டர்… ஐ அம் ஹிஸ் டாட்டர் தேன்மலர் அண்ட் ஹி இஸ் மை ப்ரண்ட் அருள்…” என்று தன்னையும் அருளையும் அறிமுகப் படுத்திக் கொண்டாள்.

அம்மருத்துவர் “ஓகே… ஐ கேவ் டு டெல் யூ சம்திங் அபௌட் சிதம்பரம்… ப்ளீஸ் கம்…” என்று கூறி செல்ல, அருளும் தேன்மலரும் அவரைப் பின் தொடர்ந்தனர்.

மருத்துவர் அறையில், தேன்மலர் “வாட் ஹேப்ண்ட் டாக்டர்… இஸ் எனிதிங் சீரியஸ்…” என்று கேட்க,

மருத்துவர் “எஸ் மிஸ். தேன்மலர்…. மிஸ்டர். சிதம்பரம் ஹேவ் எ ஹெமரஜிக் ஸ்ட்ரோக் (ரத்தக்கசிவு பக்கவாதம்)…” என்றார். அருளும் தேன்மலரும் அதிர்ந்தனர்.

அருள் “பட் ஹௌ டாக்டர்… ஹி டஸ்ன்ட் ஹேவ் ட்ரிக்கிங் ஆர் ஸ்மோக்கிங் ஹேபிட்ஸ்… ஈவன்தோ தேர் இஸ் நோ ஹெட் இன்ஞ்சூரி தென் ஹௌ இஸ் இட் ஹேப்பன்ட்…” (ரத்தக்கசிவு பக்கவாதம் தலையில அடிபட்ருந்தாளோ இல்ல முன்னாடி பட்ட அடினாலயோ இல்ல இதயக் கோளாறினாளோ இல்ல மது, புகை மாறி பழக்கத்தால தானே வரும்… ஆனா அப்டி எதுவுமே சிதம்பரத்துக்கு இல்லயே பின்ன எப்டி) என்று கேட்டான்.

மருத்துவர் “இட்ஸ் டூயூ டு ஹை ப்லட் ப்ரஷர்…” என்று கூற, அருள் “பட் டாக்டர்…” என்று ஏதோ கூற வர, அதுவரை அம்மருத்துவரையே கண்களால் அளந்த தேன்மலர் அருள் கையைப் பிடித்து அழுத்த, அருள் அவளைத் திரும்பிப் பார்க்க,

மருத்துவர் “ஸோ… ஹி ஷுட் பி இன் 24 ஹார் மெடிக்கல் அப்ஸர்வேஷன் ஃபார் ஒன் வீக்… அன்டில் ஹிஸ் ப்லட் ப்ரஷர் லெவல் பீகேம் நார்மல்… ஆஃப்டர் ஒன் வீக் யூ மே டேக் ஹிம் டு ஹோம்…” (அவரை 24 மணி நேரமும் கண்காணிப்புல வச்சுருக்கனும் ஒரு வாரத்துக்கு… அவரோட ரத்தக் கொதிப்பின் அளவு குறையணும்…. அதுக்கப்பறம் நீங்க அவர வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம்) என்றார்.

தேன்மலர் “ஓகே டாக்டர்…” என்று கூறிவிட்டு அருளை அழைத்துக் கொண்டு சிதம்பரம் இருந்த அறைக்கு வர, அங்கு சிதம்பரம் உறங்கிக் கொண்டிருக்கவும், அருள் கீழ் குரலில் கோபமாக “ஏன்டி என்ன பேச வேணானு சொன்ன…” என்று கேட்டான். தேன்மலர் அவனுக்கு பதில் கூற வரும் முன் அந்த அறைக் கதவை யாரோ திறப்பதை உணர்ந்து இருவரும் அமைதியாக அமர்ந்திருந்தனர்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
3
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்