314 views

அத்தியாயம்- 19

 

         கார் கடற்கரை சாலையைக் கடந்துச் சென்று கொண்டிருக்க, புதிய நபரையே விழிகள் விலக்காது அதிர்ச்சியோடுப் பார்த்துக் கொண்டிருந்த தேன்மலரின் காதருகில் முணுமுணுக்கும் குரலில், கடுமையாக “மலர்… பைத்தியம் புடிச்சுருச்சா உனக்கு… யார்ன்னே தெரில… அவன ஏன் அப்டி பாக்ற…” என்றான். 

 

     தேன்மலர் ஆடாது அசையாது அமர்ந்திருந்தவள், தேவாவின் கேள்விக்குச் சொன்ன ஒரு வார்த்தை “அருள்…” அவள் சத்தமாகவேக் கூறியதால் அருள் திரும்பி அவளை முறைத்து விட்டு மீண்டும் திரும்பிக் கொண்டான். 

 

      தேவா இருவரையும் மாறி மாறி பார்த்துவிட்டு அமைதியானான். பின் தேவா “ப்ரோ… அவங்க நம்மள தொடர்ந்து வருவாங்க… அதனால பக்கத்துல இருக்ற மாலுக்கு முன்னாடி கார விட்டுட்டு நாம ஆட்டோ புடிச்சு போய்ட்லாம்…” என்று கூற, அருளுக்கும் அவன் நண்பனுக்கும் அதுவே சரியென்று பட, வழியிலிருந்த சென்னையின் பிரபலமான பேரங்காடியின் பின் வாசல் வழியாக நுழைந்து காரை நிறுத்திவிட்டு, அனைவரும் முன்வாசல் வழியாக வந்து ஆட்டோ பிடித்தனர். 

 

      தேன்மலரும், தேவாவும் ஒரு ஆட்டோவில் முன் செல்ல, அருளும் அவன் நண்பனும் மற்றொரு ஆட்டோவில் அவர்களைப் பின் தொடர்ந்தனர். தேவா வீடு கிண்டியில் இருந்ததால் அதுவரை ஒரே ஆட்டோவில் போக வேண்டாமென்று கருதி, தேவா தேன்மலரோடு அடையாரில் இறங்க, பின் வந்த அருள் அவனைப் பார்க்க, தேவா “வீடு கிண்டில ப்ரோ… ஸேப்டிக்கு இங்க இறங்கிட்டேன்… வேற ஆட்டோ புடிச்சு வீட்டுக்கு போய்ட்லாம்…” என்று கூற, அருள் தலையசைத்தான். 

 

            தேன்மலருக்கு அருளின் முகமும் அமைதியுமே சொல்லிவிட்டது அவனின் கோபத்தின் அளவை… அருளின் நண்பன் தான் கிளம்புவதாகக் கூற, 

 

      அருள் “சாரி டா செந்தில்… உன் கார் இப்ப மாட்டிகிச்சு…” என்று அவனிடம் மன்னிப்பு வேண்ட, 

 

      அவன் சிரித்து “அதெல்லாம் ஈஸியா சமாளிக்கலாம் டா… எங்க அப்பாட்ட கார யாரோ திருடிட்டாங்கன்னு சொன்னா போதும்… போலீஸே வந்து வீட்ல கார ஸேப்பா விட்ரும்… நம்ம மேல யாருக்கும் டவுட் வராது…” என்றான். 

 

      தேன்மலருக்கு அப்போதுதான் புரிந்தது செந்தில், அருளின் நண்பன், அமைச்சரின் மகன், அவளுக்கு உதவியவனென்று… தேன்மலர் கையெடுத்துக் கும்பிட்டு “தேங்க்ஸ் ண்ணா…” என்று குரல் தழுதழுக்கக் கூற, 

 

     செந்தில் “மா… என்னமா இதல்லாம்… கைய இறக்கு மொத…” என்றான். 

 

       தேன்மலர் “அண்ணா நீங்க செஞ்ச உதவிக்கு நன்றி மட்டும் சொல்ல முடியாது… அண்ணா ப்ளீஸ் நீங்களும் கூட வாங்க… உங்கள நா இப்பதான் பாக்றேன்… உங்ககிட்ட பேசணும்…” என்று கூறவும் செந்தில் அருளை பார்க்க, 

 

    அருள் “வாடா…” என்றழைக்கவும் செந்தில் “சரி மா வரேன்…” என்றான். 

 

பின் நால்வரும் ஆட்டோ பிடிக்காமல், பேருந்திலேறி கிண்டிச் சென்று அங்கிருந்து தேவாவிற்கு தெரிந்த நம்பிக்கையான ஆட்டோ ஓட்டும் நபரின் ஆட்டோவிலேறி தேவாவின் வீட்டைச் சென்றடைந்தனர்.

 

              தேவாவும் தேன்மலரும் காரில் ஏறிச் செல்வதைக் கண்ட லிங்கத்தின் ஆட்கள், வேகமாகத் தங்கள் காரை எடுத்துக் கொண்டு அவர்களைப் பின் தொடர்ந்தனர். இவர்கள் காரெடுக்க சற்று தாமதித்ததால், அவர்கள் எவ்வழியாகச் சென்றார்களென்று கண்டுப்பிடிக்க முடியவில்லை. 

 

      ஒரு ஊகமாக இவர்கள் அவ்விருவரையும் தேடிச் சென்று கொண்டிருக்க, அவர்களில் ஒருவன் “அண்ணாத்த… இந்த ட்ராபிக்குக்கு அவங்க ரொம்ப தூரம் போயிருக்க முடியாத… பக்கத்துல தான் எங்கயாவது பதுங்கியிருக்கனும்… நெறைய ஜனங்க வந்து போற இடமா தேடுவோம்…” என்று கூற, மற்றவர்களுக்கும் அது சரியென்று பட, அவர்கள் மக்கள் அதிகம் கூடுமிடமான கோவில்கள், பேரங்காடிகள் என்று தேட ஆரம்பித்தனர். 

 

     அப்படி தேடுகையில் தேவாவும் தேன்மலரும் தப்பிச் சென்ற கார் ஒரு பேரங்காடியில் நிற்கவும், அந்தப் பேரங்காடி முழுவதும் தேடியவர்கள் அவர்கள் கிடைக்காததால் காரை எடுப்பதற்கு எப்படியும் வந்துதான் ஆகவேண்டுமென்று அந்த காரைக் கண்காணிக்க ஒரு ஆளை வைத்துவிட்டு மற்றவர்கள் அங்கிருந்துக் கிளம்பிச் சென்றனர். 

 

      லிங்கத்திடம் அவர்கள் விடயம் கூற அவன் அவர்களை காதுக் கருகும் வரைத் திட்டித் தீர்த்து “ஏன்டா… அவ நம்ம கண்ல விளக்கென்ன ஊத்தி பாத்துட்ருக்கும்போதே தண்ணி காட்டிட்டு போனவ… அவளுக்குத் தெரியற மாறியே அவள தூக்க போனா அவ ஓட மாட்டாளா… போங்கடாங்க….” என்று நான்கைந்து நல்லச் சொற்களால் அவர்களின் செவிகளைக் குளிர்வித்தான். 

 

      பின் லிங்கம் “சரி… எந்த மால்ல நிக்குது அந்த காரு…” என்று கேட்க, அவர்கள் பெயரைச் சொல்லவும் “சரி நா பாத்துக்றேன்…. இனிமே அவள எங்கயாவது பாத்தா எனக்கு ஃபோன் பண்ணனும்… அதவிட்டுட்டு இப்டி கேனத்தனமா எதாவது சொதப்புனீங்க… அவளுக்கு முன்னாடி உங்கள தூக்கிருவேன்…” என்று எச்சரித்தான். 

 

              லிங்கம் ரகுவிற்கு அழைத்து விடயம் கூற, ரகு “நா மால் ஓனர்கிட்ட பேசறேன்… நீ போய் சிசிடிவி பூட்டேஜ் செக் பண்ணு…” என்றான். 

 

    லிங்கம் தயங்கி “சார்… ஆர்யன் சார்க்கு….” என்றிழுக்க, 

 

     ரகு “ஆர்யாக்கு இந்த சொதப்பல சொல்லி அவன் நல்ல மூட கெடுக்க மாட்டேன்… அவன் மேரேஜ் பங்க்ஷன என்ஜாய் பண்ணட்டும்… நீ மறுபடியும் சொதப்பாம அவள கண்டுபுடிக்ற வழிய பாரு…” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தான். 

 

      லிங்கம் தான் கடுங்கோபத்தில் இருந்தான். அவன் தொழிலுக்கு வந்த இத்தனை வருடத்தில் எதையுமே சொதப்பியதில்லை, ஆனால் தேன்மலர் விடயத்தில் மட்டும் தொடர்ந்து தோற்றுக் கொண்டிருக்க, தேன்மலர் மீதானக் கோபம் அதிகரித்துக் கொண்டே சென்றது. அதேக் கோபத்தின் வேகத்தோடுப் பேரங்காடிக்குச் சென்று சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தவன், தேன்மலருடன் ஒரு ஆடவனிருந்தானென்று கூறியபடியால் தேன்மலரோடு இறங்கிய தேவாவை அடையாளம் கண்டுக் கொண்டான். ஆனால் அருளும் செந்திலும் தலையைக் குனிந்துக் கொண்டே வந்ததால் அவனால் அவர்கள் யாரென்று அறியமுடியவில்லை. நால்வரும் முன்வாசல் வழியாக வந்து ஆட்டோவில் ஏறிச் செல்வதைக் கண்டவன், உடனே அந்த இரு ஆட்டோக்களின் எண்களையும் குறித்துக் கொண்டு தேடுதலில் இறங்கினான். 

 

                இரண்டு மணி நேரத்தில் அந்த ஆட்டோக்களைக் கண்டு பிடித்தவன், இரு ஆட்டோ ஓட்டுநர்களிடமும் “ஒரு முஸ்லிம் பொண்ணும் மூனு பய்யன்களும் உங்க ஆட்டோல தான் வந்தாங்க… எங்க இறக்கி விட்டீங்க…” என்று விசாரிக்க, அவ்விருவரும் அடையாற்றில் அவர்களை இறக்கி விட்டதாகக் கூறினர். 

 

       லிங்கம் அடையாறில் எங்கே என்று கேட்க, அவர்கள் முக்கியச் சாலையிலேயே அவர்கள் இறங்கிவிட்டதாகக் கூறவும் லிங்கம் அவ்விருவரையும் போகச் சொல்லிவிட்டு யோசனையில் ஆழ்ந்தான். லிங்கம் ஒருவேளை அவர்கள் தங்கியிருக்கும் இடமறியக் கூடாதென்று முக்கியச் சாலையில் இறங்கியிருப்பார்களோ? என்று சந்தேகித்தான். சிசிடிவி காட்சிகளிலிருந்து தேவாவின் புகைப்படத்தைப் பெற்றுக் கொண்டு அடையாறிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் தேன்மலர் மற்றும் தேவாவின் புகைப்படத்தைக் காட்டி தன் ஆட்களோடு விசாரிக்க ஆரம்பித்தான். ஆனால் அங்கு யாருமே அவர்களைப் பார்க்கவில்லையென்று கூறவும் லிங்கம் குழம்பி வேறெங்கேனும் சென்றிருப்பார்களோவென்று யோசித்தான். யோசிக்க யோசிக்க லிங்கத்திற்கு கோபமும் தலைவலியும் கூடியதுதான் மிச்சம். தேன்மலரை கண்டுப்பிடிக்காமல் ரகுவிடமோ ஆர்யனிடமோ பேசக்கூடாது என்ற முடிவுடன் வெறிப்பிடத்தவன் போல் தன் ஆட்களை கண்டபடி வைதுவிட்டு தேன்மலரை சென்னையின் மற்ற இடங்கிளிலும் தேடித் திரிந்தான்.

 

                தேவா வீட்டில், தேன்மலர் கண்கலங்க அருளை பார்த்திருக்க, அருள் கோபமாக முகம் திருப்பி நின்றிருக்க, செந்தில் அமைதியாக ஒருபுறம் நின்றிருக்க, தேவா தேன்மலரை வருத்தமாகப் பார்த்திருந்தான். 

 

      தேன்மலர் “அருளு…” என்றழைக்க, அருள் வேகமாகத் திரும்பி அவள் கண்களை கூர்மையாக ஊடுருவ, தேன்மலர் தவிப்பும் இறைஞ்சலுமாய் அவனைப் பார்த்தாள். அருளுக்கு அவளைப் பார்க்க பார்க்க கோபம் அனெலென கொதிக்க, கை வழியாகத் தன் கோபத்தை அவள் கன்னத்தில் இறக்கினான். 

 

         தேன்மலர் அவன் அறைந்ததில் நிலைத் தடுமாற, தேவா “மலர்…” என்று அருகே வர, அவனைக் கைக்காட்டித் தடுத்த தேன்மலர் அருளை கண்ணீர் வழியப் பார்க்க, அருளும் கண்ணீரோடு அவளை இழுத்து அணைத்துக் கொண்டான். 

 

      அருள் அணைத்ததுமே தன் கூட்டைத் தஞ்சமடைந்தப் பறவையாய் அவனுள் ஒன்றியதும் அணை உடைத்து அழுகைப் பெருக, வாய்விட்டு கதறித் தீர்த்து அருளின் சட்டையை ஈரம் செய்துக் கொண்டிருந்தாள் தேன்மலர்.

 

       அருளும் அழுது அவளது முதுகை ஆதுரமாய்த் தடவி “ஏன்டி… இப்டி பண்ண… நாங்கள்லாம் வேணானு நினச்சு யாருக்கும் சொல்லாம தொலைஞ்சு போனியா…” என்று கேட்க, தேன்மலரின் அழுகை இன்னும் அதிகமாகியது.  

 

      அவளின் அமைதியான இறுகிய முகத்தை மட்டுமே கண்ட தேவாவிற்கு அவளின் கதறலான அழுகை அவனுள் வலியையும் தவிப்பையும் ஏற்படுத்த, அவளை அணைத்து ஆறுதல் கூற பரபரத்தக் கைகளைக் கட்டுப்படுத்தித் தவிப்பாக நின்றிருந்தான். 

 

     அருள் “ஏன் டி இப்டி தவிக்க விட்டு போன…. உனக்கு ஒன்னுனா அது எங்களுக்கும் தான்டி… நாம இதுவரைக்கும் சந்தோஷத்துல மட்டுமா ஒன்னா இருந்துருக்கோம்… அப்றம் ஏன்டி இப்ப மட்டும் இப்டி பண்ண…. கவியும் சுரேஷ் அண்ணனும் உன்னை பத்தி கேக்கும்போதெல்லாம் எவ்ளோ தவிச்சேன் தெரியுமா பதில் சொல்ல முடியாம… நீ நல்லார்க்கியா? எங்கயிருக்க? சாப்டியா? இல்ல யாராவது உன்ன எதாவது பண்ணிருப்பாங்களோன்னு டெய்லி எவ்ளோ துடிச்சு போனேன் தெரியுமா? காலேஜ்ல ஹச் ஓ டி, ஸ்டூடென்ட்ஸ்லாம் நீ எப்ப வருவன்னு டெய்லி கேப்பாங்க… எனக்கே நீ எங்கயிருக்கன்னு தெரியாது… நா அவங்களுக்கு என்ன பதில் சொல்ல? வீட்ல அம்மாவும் அப்பாவும் டெய்லி நீ ஃபோன் பண்ணியானு விசாரிப்பாங்க… அம்மா நா தேனுட்ட பேசணும்டா கால் பண்ணி குடேன்னு கேக்கும் போது எனக்கு எப்டியிருக்கும் தெரியுமா? என்னை தனியா விட்டு போக எப்ட்றி தோனுச்சு உனக்கு?” என்று அவளைப் பிடித்து உலுக்கினான். 

 

             தேன்மலர் அழுகையோடு “சாரி டா… என்னை மன்னிச்சுரு அருளு…. கண்ணுக்கு தெரியாத ஆபத்து அப்போ அருளு… எனக்கு எதாவது ஆனா பரவால்ல… உங்களுக்குலாம் எதாவது ஆனா நா என்னடா பண்ணுவேன்… அம்மா, அப்பா, கவி, அவ வீட்ல, சுரேஷ் அண்ணே இப்டி என்னை சுத்தி உள்ள எல்லாரையும் கண்காணிக்றப்போ என்னால எப்டிறா சும்மாயிருக்க முடியும்…. உங்க எல்லாரையும் இதுலேர்ந்து விலக்கி விடனும்னு தான்டா நா யார்கிட்டயும் சொல்லாம தனியா வந்தேன்… நீங்க எல்லாரும் வேணுனு தான்டா சொல்லாம தொலஞ்சு போனேன்… உன்னை ஏமாத்திட்டு வந்தது குற்றயுணர்ச்சியாதான் இருந்துச்சு…. ஆனா அப்பா நிலமைக்கு யார் காரணம் அவனுங்க எப்டி பட்டவனுங்கன்னு தெரிஞ்சப்றம் நா தனியா வந்தது சரிதான்னு தோனுச்சுடா… எனக்கு தெரியும்டா நீங்க எல்லாரும் கஷ்டபடுவீங்கன்னு… ஆனா அதவிட நீங்க எல்லாரும் நல்லாயிருக்றது எனக்கு முக்கியம்டா…. நா உன்னை ரொம்ப தவிக்க விட்டுட்டேன் அருளு…. மன்னிச்சுருடா….” என்றாள். 

 

              அருளுக்கு அவளின் விழி நீர் வடியும் விழிகளில் தெரிந்த வலியும் தவிப்பும் அவன் கோபத்தை காணாமல் போகச் செய்ய, அழுதவாறு அவள் கன்னம் தடவி “வலிக்குதா…” என்று கேட்டான்.

 

      தேன்மலர் அழுதவாறு உதடு துடிக்க, விழிகளும் இதழும் சிரிக்க இல்லை என்று தலையாட்ட, அருள் கண்ணீரோடுப் புன்னகைத்து மீண்டும் அவளை அணைத்து உச்சி முகர்ந்து நெற்றியில் இதழ் பதிக்க, தேன்மலர் புன்னகையோடு அவன் மார்பில் முகம் புதைத்துக் கொண்டாள். 

 

     இருவரின் நெருக்கத்தைப் பார்க்கும் போது மற்றவர்களுக்கு அவர்களுள் வேறு ஏதோ உறவென்று தோன்றும், ஆனால் அவ்விருக்குள்ளும் இருப்பது நட்பையும் தாண்டி அவ்வளவு எளிதில் பிரிக்க முடியாத அப்பா, மகளினிடையே இருக்கும் உன்னதமானப் பாசப் பிணைப்பு. இது புரியாமல் தான் ராகவி அடிக்கடி குழம்பிடுவாள். அவளைக் குழப்பி விடுவது இவர்கள் இருவருக்கும் வேடிக்கையாகவும் வாடிக்கையாகவும் ஆகிப் போனது. 

 

     அதுவரை தவிப்பாய் நின்றிருந்த தேவாவின் கண்கள் கலங்கி, இதழ்களில் இப்போதுப் புன்னகைத் தவழ்ந்தது. செந்திலும் புன்னகையோடு அவ்விருவரையும் பார்த்திருந்தான். பின் அருளும் தேன்மலரும் விலகிக் கைக் கோர்த்தபடி தேவாவையும் செந்திலையும் பார்த்துப் புன்னகைக்க, அவர்களும் புன்னகைத்தார்கள். 

 

       தேன்மலர் தேவாவை விழி அகலாமல் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டே “சார்… இது அருள் என் ப்ரண்ட்… வெறும் ப்ரண்ட் மட்டுமில்ல அப்பப்போ இது மாறி அப்பா ரோலும் ப்ளே பண்ணுவான்…” என்றாள்.  

 

             தேவா புன்னகைத்து “ஹலோ அருள்…” என்க,

 

      தேன்மலர் அருளிடம் திரும்பி “அருளு… இவரு தேவா சார்… என்னை ஒரு ஆபத்துலேர்ந்து காப்பாத்தி, இருக்க இடமும் குடுத்து, எனக்கு ஹெல்ப்பும் பண்றாரு…” என்றாள். 

 

     தேன்மலர் ஆபத்து என்றதுமே அருள் “என்னாச்சு ஹனிமலர்… என்ன ஆபத்து…” என்று பதற, 

 

      தேன்மலர் “ஏய் அருளு… டென்ஷனாகாத…. எனக்கு ஒன்னு ஆகல… அதுக்குள்ள சார் காப்பாத்திட்டாரு…” என்றாள். 

 

      தேவா “ப்ரோ… ரிலாக்ஸ்…” என்று கூறி தேன்மலரை காப்பாற்றிய அன்று நடந்த நிகழ்வுகள் முதல் தாங்கள் பேசிக் கொண்டிருக்கும் நிமிடம் வரை நடந்த அனைத்தும் கூறினான். 

 

      அருள் வலி நிறைந்து தேன்மலரை பார்க்க, தேன்மலர் “ஒன்னுல்ல அருளு…” என்று புன்னகைக்க, 

 

     அருள் “ஆமா உன்னை எப்டி அவங்க கடத்துனாங்க…” என்று கேட்டான். 

 

     தேன்மலர், சிதம்பரம் பெங்களூர் வீட்டு பத்திரமும் சாவியும் கொடுத்து யாருக்கும் தெரியாமல் வைத்துக் கொள்ளச் சொன்னதைச் சொன்னவள், பின் தான் பெங்களூர் சென்றது, லிங்கத்தின் ஆட்கள் கடத்தியது, அவர்களிடமிருந்து தப்பியது, தேவா காப்பாற்றியதென்று அனைத்தும் கூறி முடித்தாள். 

 

      அருள் தேன்மலரை முறைக்க, தேன்மலர் “அருளு… அதான் ஒன்னும் ஆகலல…” என்று கூற, 

 

      அருள் “நீ பேசாத… திமிரெடுத்தவளே… அடங்காபிடாரி….” என்று அவளை இரண்டு நிமிடங்களுக்கு இடைவிடாமல் திட்ட, தேன்மலர் தவறு செய்தக் குழந்தைப் போல் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு தேவாவை பார்த்தாள். தேவா தோள் குலுக்கி விட்டு நமட்டுச் சிரிப்போடுத் திரும்பிக் கொள்ள, 

 

         தேன்மலர் உதடு சுழித்து விட்டு செந்திலை பார்க்க, அவளைக் கண்டு வந்த சிரிப்பை அடக்கியவன், “அருளு… விட்றா பாவம்… எவ்ளோ தான் திட்டுவ…” என்றான். 

 

       அவ்வளவு தான் உடனே அருள் “உனக்கு ஒன்னும் தெரியாதுடா… நீ சும்மாயிரு… இவ சரியான ஊமை குசும்பி… நீ இவளுக்காக இனிமே பேசுன… உன்னை என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது…” என்றான். 

 

       செந்தில் பாவமாக தேன்மலரை பார்க்க, அவளோ அவனை நமட்டு சிரிப்போடுப் பார்த்திருக்க, செந்தில் விழித்து “அடிப்பாவி…” என்று முணகியவன் மனதுக்குள் “நீ ஊமை குசும்பி தான்…” என்றான். 

 

     அருள் திட்டி ஓய்ந்து “போதும் டி… பச்ச புள்ள மாறி மூஞ்சிய வச்சுகிட்டது… உன் நடிப்ப என்கிட்ட காட்டாத…” என்று கூற, தேன்மலர் அவனைப் பார்த்து சிரிக்க, அருள் “ச்சீ இளிக்காத… எனக்கு கொல வெறியாகுது…” என்றான். 

 

     தேன்மலர் முகம் சுருங்கி “அருளு… நாந்தான் சாரி கேட்டேன்ல… அதான் எனக்கு ஒன்னும் ஆகலல… வந்ததுலேர்ந்து திட்டிட்டு மட்டும் தான்டா இருக்க நீ…” என்று முகம் திருப்பினாள்.

 

      அருள் வாய்க்குள் சிரிப்பை அடக்கிக் கொண்டு “சரி சரி திட்டல… உடனே மூஞ்சிய தூக்கி வச்சுக்காத…” என்று கூறவும் தேன்மலர் சிரிக்க, அருளும் சிரித்து விட்டான். தேவாவும் செந்திலும் கூட அவர்களின் சிரிப்பில் கலந்துக் கொண்டனர்.

 

             பின் தேன்மலர் செந்திலிடம் சென்று “தேங்க்ஸ் ண்ணா… நீங்க எனக்கு எவ்ளோ பெரிய ஹெல்ப் பண்ணீற்கீங்கன்னு உங்களுக்கு தெரியாது… நீங்க ஹெல்ப் பண்ணலேனா இன்னிக்கு என் அப்பாவ ஆபத்துலேர்ந்து காப்பாத்திருக்க முடியாது…” என்று கண் கலங்கிக் கூறினாள். 

 

     செந்தில் “மா… என்னமா இது… அருள் என் நண்பன்… என் நண்பன், என் ப்ரண்டுக்கு ஒரு பிரச்சனைனு சொல்லும்போது நா எப்டி ஹெல்ப் பண்ணாமயிருப்பேன்… அண்ணேன்னு சொல்ற அப்றம் தேங்க்ஸ்னு சொல்லி அந்நிய படுத்துற…” என்று கூற, 

 

     தேன்மலர் புன்னகைத்து “தப்பு தான்… இனி சொல்ல மாட்டேன் ண்ணா…” என்றாள். பின் அருள் “ப்ரோ… நீங்க எப்டி அந்த குடோனுக்கு போனிங்க…” என்று கேட்க, அதுவரைப் புன்னகைத்திருந்த தேவாவின் முகம் கோபத்தில் சிவந்தது. 

 

        தேவாவை கண்ட தேன்மலர் “அத நா சொல்றேன் அருளு…” என்றவள், தேவாவை பற்றியும் அவனின் தங்கை இறப்பு பற்றியும் அதன்பின் நடந்த நிகழ்வுகள், நாராயணசாமி பற்றியும் கூறியவள், ஆர்யன், ரகு பற்றியும், அவர்களுக்கும் நாராயணசாமிக்குமிடையே இருக்கும் உறவு, ஆர்யன், ரகு சிதம்பரத்திற்கு போதை மருந்துக் கொடுத்தது அதன்பின் அவருக்கு வந்த பக்கவாதம் பின் அவர் மீது அவர்கள் புது மருந்தொன்றை பரிசோதித்து என்று அனைத்தும் கூறி முடித்தாள். 

 

     அருளுக்கும் செந்திலுக்கும் அதையெல்லாம் கேட்ட அதிர்ச்சி ஒருபுறமிருந்தாலும் கோபம் ஒருபுறம் கொதித்தெழுந்தது. அருள் “இனி நீங்க ரெண்டு பேரும் தனியா எதுவும் சமாளிக்க வேணாம்… நானும் உங்ககூட இருக்கேன்… அவனுங்கள ஒருவழி பண்ணாம விடக்கூடாது…” என்று கூற, 

 

     செந்தில் “நானும் இருக்கேன்… என்னால எவ்ளோ ஹெல்ப் பண்ண முடியுமோ பண்றேன்… எங்க அப்பா பவரும் கூடயிருக்கு… ஸோ இனி அவனுங்கள நாமள்லாம் சேந்து ஒரு கைப் பாக்கலாம்…” என்றான். 

 

       தேன்மலரும் தேவாவும் நெகிழ்ச்சியாக ஒருவரையொருவர் பார்த்து விட்டு அவர்களைப் பார்த்துப் புன்னகைத்தனர். அச்சமயம் தேன்மலருக்கு ராஜேஷிடமிருந்து அழைப்பு வர, அழைப்பை ஏற்று அவன் கூறிய செய்திக் கேட்டு உள்ளம் குளிர்ந்த தேன்மலர் தான் அப்புறம் பேசுவதாகக் கூறி அழைப்பைத் துண்டித்து விட்டு வேகமாக சாமி அறைக்குச் சென்று விளக்கேற்றி நன்றி கூறினாள். தேவாவிற்கு விடயம் விலங்கி விட அவன் புன்னகையோடு அவளது செயல்களைப் பார்த்திருக்க, அருளும் செந்திலும் தான் குழம்பி நின்றிருந்தனர்.

 

                 சிரித்த முகமாய் சாமியறையிலிருந்து வந்த தேன்மலர் தேவாவை பார்த்து “சார்… அப்பாவுக்கு ஆப்ரேஷன் சக்ஸஸ் புல்லா முடிஞ்சுதாம்…” என்றவள், 

 

    அருளை கண்டு “அருளு… அப்பாவுக்கு ஆப்ரேஷன் முடிஞ்சுதுடா…” என்றவள் புன்னகையோடு செந்திலை பார்த்தாள். 

 

        தேவா புன்னகைத்து “இப்பவாவது சாப்டுவியா மலர்…” என்று அவளைப் பார்த்து கேட்க, தேன்மலர் விழிகளில் நீர் திரையிட, இதழ்கள் புன்னகை பூக்க அவனின் விழிகளை ஊடுருவியபடித் தலையாட்டினாள். 

 

      அருள் அவர்கள் இருவரையும் கேள்வியாகப் பார்த்திருக்க, தேவா அவனுக்கு சிதம்பரத்திற்கு அறுவை சிகிச்சை என்று கேள்விப்பட்டது முதல் தேன்மலர் உண்ணாமல் அடம்பிடித்ததைக் கூறினான். 

 

     உடனே அருள் “அப்ப வாங்க உடனே சாப்டலாம்…” என்று கூற, தேவா, தேன்மலர், செந்தில் மூவரும் அவனைப் பார்த்து சிரித்தனர். 

 

         பின் தேவாவும் தேன்மலரும் இணைந்து சமைக்க, அருளும் செந்திலும் அவர்களுக்குச் சிறுசிறு உதவிகள் புரிந்தனர். தேவா சமைத்துக் கொண்டே, வந்ததிலிருந்து இவ்வளவு முகம் மலர சிரித்திராத தேன்மலரின் மகிழச்சிப் பொங்கும் முகத்தைக் கண்டவன் அகமும் முகமும் மலர்ந்திட, அவளின் முகத்தை விழிகளில் நிறைத்தான். 

 

       தேன்மலரும் கடைக்கண் வழியே அவன் தன்னைக் காணாத போது அவனின் மலர்ந்த வதனம் தனை உள்ளமதில் சேமித்துக் கொண்டிருந்தாள். அவளது கடைக்கண் பார்வையைக் கண்டும் காணாமல் உள்ளுக்குள் ரசித்து, அவளது செயலை எண்ணி சிரித்திருந்தான் கள்வன் அவன். விழியால் ஒருவரையொருவர் திருடிக் கொண்டு ஒருவழியாக சமைத்து முடித்தனர். 

 

      பின் நால்வரும் அமர்ந்து உணவு உண்டு முடிக்க, செந்தில் கிளம்புவதாகக் கூறி அருளை பார்க்க, அருள் “நா வரலடா… நா இங்கயே இருக்கேன்… நீ காலைல என் திங்க்ஸ் கொண்டு வந்து குடுத்துரு…” என்றான். செந்திலும் சரியென்று கூறி, தேவா மற்றும் தேன்மலருக்கு தன் கைப்பேசி எண்ணை கொடுத்து விட்டு அவர்களிடமிருந்து விடைப்பெற்று கிளம்பினான். 

 

              மூவரும் செந்திலை வழியனுப்பி வைத்துவிட்டு வீட்டினுள் வர, அருள் “ஹனிமலர்…. அப்பாவையும் அப்பாயியையும் எங்க அனுப்பி வச்சுருக்க… ஹர்ஷாவுக்கும் கிறிஸ்டிக்கும் ஃபோன் பண்ணா அவங்க அங்க வரவேயில்லங்றாங்க…” என்று கேட்டான். 

 

       தேன்மலர் புன்னகைத்து “ஒரு ஒரு வாரம் வெயிட் பண்ணு அருளு… நாம ஒரு இடத்துக்கு போறோம்… என் வாழ்க்கைல உனக்கு தெரியாத முக்கியமான மூனு பேர இன்ட்ரோ தரேன்…” என்று கண்சிமிட்டவிட்டு “சரி நீங்க ரெண்டு பேரும் பேசிட்ருங்க… சந்தோஷத்துல ராஜேஷ் கிட்ட நா சரியாவே பேசல… நா பேசிட்டு வரேன்…” என்றுவிட்டு அவள் கைப்பேசியை எடுத்துக் கொண்டுத் தோட்டத்திற்கு விரைந்தாள். 

 

        அருள் தேவாவை பார்க்க, தேவா புன்னகைக்க, அருள் அவனை அணைத்துக் கொண்டு “ரொம்ப தேங்க்ஸ் ப்ரோ… நீங்க மட்டுமில்லனா… ஹனிமலருக்கு என்ன ஆயிருக்குமோ… நினக்கவே படபடங்குது…” என்றான். 

 

      தேவா “என்ன ப்ரோ… இதுக்கெல்லாம் ஃபீல் பண்ணிட்டு… அந்த நாள் எனக்கு ரொம்ப முக்கியமான நாள்… மலர் இப்ப என் வாழ்க்கைலேர்ந்து பிரிக்கமுடியாத நபராயிட்டா…” என்று சிலாகித்துக் கூறினான்.

 

        அருள் அவனின் முக மலர்ச்சியும் கண்களின் ஒளியையும் கண்டு புன்னகைத்து அப்படியா என்று தலையசைத்துக் கேட்க, தேவா விழிகள் மின்ன, மந்தகாசப் புன்னகைச் சிந்தி ஆம் என்றான். 

 

       அருள் முகம் மலர, அவனைப் பார்த்து கேலியாக சிரிக்க, தேவா புன்னகையோடு “அப்பாடா… மினி மாமாவோட சம்மதம் கெடச்சுருச்சு… இன்னும் மெகா மாமாவோட சம்மதமும் அம்மாச்சியோட சம்மதமும் தான் பாக்கி…” என்றான். 

 

      அருள் விழித்து “என்னது மினி மாமாவா…” என்று கேட்க, 

 

       தேவா சிரித்து “ஆமா… மலர் கொஞ்ச நேரம் முன்னாடி தானே சொன்னா நீங்க அவளுக்கு அப்பா மாறினு… அப்ப நா மினி மாமான்னு சொன்னது சரி தானே மினி மாமா…” என்று கேட்டான். 

 

      அருள் சிரித்து “கொஞ்ச நேரம் முன்னாடி தான் ஒரு அப்பாவி அவகிட்ட மாட்டிகிட்டானேன்னு நினச்சேன்…. ஹனிமலருக்கேத்த ஆளு தான்… அவ பேசுற பேச்சுக்கு அவள உங்களால கொஞ்சம் சமாளிக்க முடியும்… மாப்ள நா சம்மதிக்றது இருக்கட்டும்… மெகா மாமாவோட சம்மதம் கூட வாங்கிறலாம்… ஆனா உங்க அம்மாச்சி சம்மதம் தான் கொஞ்சம் கஷ்டம்….” என்றான். 

 

         தேவா சிரித்து “என்ன மாமா இப்டி சொல்லிட்டீங்க… அம்மாச்சிகிட்ட சம்மதம் வாங்க போறதே நீங்க தானே…” என்றான். 

 

      அருள் விழித்து “என்னது… சரிதான்… ஒரு ப்ளானோட தான் திரியுற போல நீ… ஆக என்னை கெழவிட்ட கோத்து விட்டு வெளக்கமாத்தடி வாங்க ஸ்கெட்ச் போட்டுட்ட…” என்று கேட்க, 

 

       தேவா சிரித்து “அதெப்டி மாமா… உன்னை மட்டும் தனியா விடுவேன்…” என்றான். 

 

     அருள் ஒரு நொடி முகம் மலர, தேவா “நானும் உன்கூட வருவேன்… நீ அடி வாங்கறத பாக்க…” என்கவும்,

 

      அருள் “நல்லா வருவடா நீ… பொழக்க தெரிஞ்ச புள்ளதான்…” என்று அவனை முறைக்க, 

 

     தேவா சிரித்து அவன் கன்னம் கிள்ளி “உடனே கோவத்த பாரு… சரி போனா போகுது அம்மாச்சி காது கருக திட்ட போற கிழிய வேணா நா வாங்கிக்றேன்…” என்றான். அதைக் கேட்ட அருள் முகத்தில் அப்படி ஒரு புன்னகை, தேவாவும் மலரப் புன்னகைப் புரிந்தான்.

 

             பின் தேவா “ஆமா மாமா… நாந்தான் நாங்க பீச்சுக்கு வர்றத சொல்லவேயில்லயே… அப்றம் எப்டி கரக்ட்டா அங்க வந்த ஹீரோ மாறி…” என்று கேட்க,

 

        அருள் “நானும் செந்திலும் எதார்த்தமான தான் அங்க வந்தோம்… அப்ப தான் ஹனிமலர் கைல இருந்த ப்ரேஸ்லெட்ட பாத்தேன்… அது அப்பா அவளுக்கு கிஃப்ட் பண்ணது… ஏன்னா அதுல ப்ளாக் டைமண்ட் இருக்கும் ரொம்ப ரேர்… நெறய பேர் அது மாறி போட மாட்டாங்க… இருந்தாலும் எனக்கு முதல்ல டவுட் தான்… ஆனா உங்கள ஃபாலோ பண்ணிட்டே வந்தேன்… அப்ப அந்த குட்டி பாப்பா ஹனிமலர் முகத்துல இருந்த துணிய விலக்கவும் தான் அது ஹனிமலர்னு கன்பார்ம் ஆச்சு… நா உன்னை பாத்ததில்லல… இல்லனா அது நீயும் ஹனிமலரும் தான்னு கண்டுபுடுச்சுருப்பேன்…” என்றான். 

 

      தேவா புன்னகைத்து “பரவால்ல மாமா… உனக்கும் மூளயிருக்கு…” என்று கூற, 

 

        அருள் “மாப்ள நீ என்ன வாரிக்கிட்டேயிருக்க… அப்றம் பொண்ணு தர முடியாது பாத்துக்கோ…” என்கவும் தேவா அவன் கன்னம் பிடித்துக் கொஞ்சி “அப்டிலா சொல்லக்கூடாது…” என்றான். 

 

         அருள் சிரித்து “சரி மாப்ள தாஜா பண்ணது போதும்… நீ எப்டி என்னை காண்டாக்ட் பண்ண… அதுவும் எனக்கும் ஹனிமலருக்கு மட்டும் தெரிஞ்ச நம்பருக்கு… ஹனிமலர் கண்டிப்பா குடுத்துருக்க மாட்டா… அப்றம் எப்டி…” என்று கேட்க,

 

      தேவா புன்னகைத்து “அது சொல்ல மாட்டேன் சீக்ரெட்…” என்றான். 

 

       அருள் “டேய் எப்டினு தெரிஞ்சுக்கலனா… என் மண்ட வெடிச்சுரும்…” என்று கூற, 

 

      தேவா “சொன்னா என் மண்ட ஒடையுமே…” என்று கூற, 

 

      அருள் விழித்து “இப்ப ரெண்டு பேரு மண்டையுமே ஒடைய போவுது…” என்றான். 

 

       தேவா “என்னடா லூசு மாறி பேசுற…” என்றவாறு அவன் பார்வை சென்ற திசையில் திரும்ப, தேன்மலர் காதில் புகை வர, மூக்கு விடைக்க இவர்களை முறைத்துக் கொண்டு நின்றிருந்தாள்.

 

          தேவா சிரித்து “சும்மா பேசிட்ருந்தோம்… நீ எப்ப மா வந்த…” என்று கேட்க, 

 

       “தேன்மலர் ம்ம்… அந்த அரலூசுட்ட நீ எப்டி பீச்சுக்கு வந்தன்னு கேட்டியே… அப்பவே வந்துட்டேன்…” என்றாள். அதைக் கேட்டு தேவாவும் அருளும் ஒருவரையொருவர் பார்த்து விழித்து முகம் வெளுக்க, இருவரும் எச்சிலைக் கூட்டி விழுங்கி திருதிருவென்று முழித்தனர். 

 

       தேன்மலர் “ப்ராடு பசங்களா…” என்றவாறு கையை முறுக்கிக் கொண்டு அடிக்க வர, 

 

      அருள் “மாப்ள சிக்காம ஓடு மாப்ள… சிக்குன சிக்கன் சிக்ஸ்ட்டி பைவ் தான் நீ… பத்ரகாளி கொல வெறில இருக்கா…” என்றாவாறு கூடத்தைச் சுற்றி ஓட, 

 

          தேவா “அடப்பாவி மாமா… இத முன்னாடியே சொல்ல மாட்டியா… நீ பாட்டுக்கு ஓட்ற…” என்று அவனும் ஓட ஆரம்பிக்க, தேன்மலர் அவர்களைத் துரத்தினாள். 

 

      அருளும் தேவாவும் கூடத்தையேச் சுற்றி சுற்றி வந்து போக்குக் காட்ட, தேன்மலர் அவர்களைத் துரத்தி அயர்ந்துப் போய் ஓரிடத்தில் நின்றவள் “ஏன்டா அருளு தடிமாடு, பன்னி, எரும… என்னமோ நீயே என்னை கண்டுபுடிச்ச மாறி கொஞ்ச நேரம் முன்னாடி அந்த சீன் போட்ட… இதுல அடிக்க வேற செய்ற நீ… எப்ன்னு சான்ஸ்க்கு காத்திருந்துருக்க இல்ல…” என்று கேட்க, அருள் மேலும் கீழுமாய்த் தலையாட்டி பின் இடம் வலமாய்த் தலையாட்டினான். 

 

       தேன்மலர் இன்னுமாய் அவனை முறைத்து “பரதேசி… வந்தவொடனே சொல்ல வேண்டியதுதானே இந்த தடிமாடு தான் உனக்கு சொன்னுச்சுன்னு…” என்று தேவாவை பார்த்து கூறினாள். 

 

      தேவா அதிர்ந்து அவளை நோக்கி “என்னது தடிமாடா…” என்று முணுமுணுக்க, 

 

         தேன்மலர் “என்ன லுக்கு… முழிய நோண்டிருவேன்… பாக்க சாம்பார் மாறியிருந்துட்டு சிஐடி வேலயா பாக்ற… மவனே நீ எப்டி எங்க சீக்ரெட் நம்பர கண்டுபுடிச்சன்னு தெரியட்டும் அப்றம் இருக்குடி மாப்ள உனக்கு…” என்றாள். 

 

        தேன்மலர் இப்படியெல்லாம் பேசுவாளா என்று அதிர்ச்சியின் உச்சத்திலிருந்த தேவா அருளை பார்க்க, 

 

         அருள் வாய்க்குள் சிரித்து “எப்டி சிக்கிருக்க பாத்தியா… இது கொஞ்சம் தான்டி மாப்ள… போக போக இன்னும் பாப்ப…” என்று கிசுகிசுத்தான்‌. 

 

       தேவா முதலில் அவனை முறைத்து பின் “நாய் வேஷம் போட்டாச்சு கொறச்சு தானே ஆவனும்…” என்றவன் “ஆனாலும் மாமா… இடையில அவளே என்னை மாப்ளனு ஒத்துகிட்டா பாத்தியா…” என்று வெட்கப் படுகிறேன் பேர்வழி என்று அருளின் சட்டை பட்டனைத் திருகி விளையாடினான்.

 

           அருள் அவனை மேலும் கீழும் ஒரு தினுசாகப் பார்த்துவிட்டு “ரைட்டு முத்திருச்சு… ச்சீ கைய எடு…” என்று அவன் கையைத் தட்டி விட, 

 

     தேவா “உனக்கு பொறாம மாமா…” என்றான். 

 

        அருள் “அந்த ஆமயெல்லாம் இங்கயில்ல… தயவு செஞ்சு இனி வெட்கம் மட்டும் படாத மாப்ள… ஸ்ஸ்ஸ்… பாக்க சகிக்கல…” என்று கூற, தேவா அவனை முறைத்து பின் முகத்தைத் திருப்பிக் கொண்டான். 

 

       இவர்கள் இருவரும் தான் கத்திக் கொண்டிருப்பதைக் கூட கவனியாமல் ஏதோ கிசுகிசுத்துக் கொண்டிருக்கவும் தேன்மலர் “இங்க ஒருத்தி காட்டுக் கத்தா கத்திட்ருக்கேன்… அங்க என்னடா குசுகுசுன்னு உங்களுக்கு பேச்சு…” என்கவும் இருவரும் அவளைப் பாவமாகப் பார்த்தனர். 

 

         தேன்மலர் “ஆஹா… என்னா நடிப்புடா சாமி… அப்டியே பச்ச புள்ளி மாறி மூஞ்சிய வச்சுக்கிட்டா நாங்க நம்பிருவோமா… ப்ராடு பசங்களா… தடிமாடுங்களா… மலமாடு மாறி வளந்துட்டு ரெண்டும் பண்ற வேலுய பாரு… அப்டியே திருட்டு முழி… நல்லா செட்டு சேந்தீங்கடா… கூட்டு களவானிங்களா…” என்று இருவரையும் கிழித்துத் தொங்கவிட்டுக் கொண்டிருக்க, அப்போது அவளின் கைப்பேசி அலறவும் மூச்சு வாங்க இருவரையும் முறைத்து “தப்பிச்சுட்டதா நினக்காதீங்க…. வந்து இருக்கு உங்களுக்கு… ப்ராடுங்களா…” என்றுவிட்டு அவள் கைப்பேசியில் வந்த அழைப்பை ஏற்று ஓரமாகச் சென்றாள். 

 

        அருளும் தேவாவும் நன்றாக மூச்சு விட்டு “அப்பாடா…” என்றவர்கள் மழைப் பெய்ந்து ஓய்ந்தது போல் உணர்ந்தார்கள். அருளுக்கு நெடு நாட்கள் கழித்து தேன்மலரின் இயல்பான பேச்சும் திட்டும் அவன் இதழ்களில் சிறு முறுவலைத் தோற்றுவிக்கத் தவறவில்லை. 

 

      தேவா வெளியே அவளிடம் பயந்தது போல் நடித்தாலும் உள்ளுக்குள் “என்னழகா திட்றா…. திட்டும்போதுக்கூட அழகாயிருக்கா ராட்சஸி… அய்யோ அவ என்னை ப்ராடுன்னு சொல்லிட்டாளே… என் செல்லக்குட்டி…” என்று உள்ளுக்குள் அவளை ரசித்துக் கொஞ்சிக் கொண்டிருந்தான். 

 

       தேன்மலர் கைப்பேசியில் கூறிய செய்திக் கேட்டு அதை நழுவவிட்டு கீழே மடங்கி அமர்ந்து அழ, தேவாவும் அருளும் பதறிப் போய் அவளருகில் சென்றனர். அருள் “என்னாச்சு மா…” என்று பதட்டமாகக் கேட்க, தேவா சற்றுமுன் தான் சிரித்தாள் இப்போது அழுகிறாளே என்று கண்கள் கலங்கி அவள் தலைத் தொட, நிமிர்ந்து அவர்கள் இருவரையும் கண்ட தேன்மலர் இருவரையும் இடையோடுக் கட்டிக் கொண்டு அழ ஆரம்பிக்க, இருவரும் அவளின் அழுகை எதற்கென்றுத் தெரியாமல் தவித்தப்படி நின்றிருந்தனர்.

தொடரும்….

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *