319 views

அத்தியாயம்- 15

 

          ஆதவன் நிலமகளை விட்டுப் பிரியப் போகும் சோகத்தில் தன் பொன் கிரணங்களால் அவளை அணைக்க, அதைக் கண்டு வெட்கம் கொண்ட வான்மகள் சிவந்து நின்ற வேளை, தேன்மலர் தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்தாள். தேன்மலர் முகம் சோகம், கவலை, கோபம், ஏக்கம், தவிப்பு என்று கலவையான உணர்வுகளின் சாயலைப் பூசியிந்தது. “என்ன மலர்… வீடு புடிக்கலயா…. எப்ப பாரு தோட்டத்துலயே இருக்க…” என்றவாறு அமீரா அங்கு வர, தேன்மலர் முகம் நொடியில் மாறி இதழ்களில் சிறு வளைவு. 

 

       தேன்மலர் “இவ்ளோ அழகான வீட புடிக்காம இருக்குமா… சும்மா ஒரு வாக் போனா நல்லார்க்கும்னு தோனுச்சு… அதான் இங்க…. உனக்கு வொர்க்க முடிஞ்சுதா…” என்றாள். 

 

     அமீரா புன்னகைத்து “ம்ம்… அதானே ஆன்ட்டியும் அம்முவும் பாத்து பாத்து கவனிச்சுகிட்ட வீட்ட புடிக்காம போய்டுமா என்ன… காலைலேர்ந்து நாலு டெலிவரி மலர்…. எட்டு மணிக்கு ஒரு ஆப்ரேஷன் இருக்கு…. அதுக்கு போனா போதும்….” என்றாள். 

 

      தேன்மலர் மென்னகைப் புரிந்து “வீட்டுக்குப் போகாம நேரா இங்க வந்துட்டியா… ரொம்ப டயர்டா தெரியுர மீரா….” என்றாள். 

 

     அமீரா முகம் வாடி “ம்ஹ்ம்… ஆமா மலர்… வீட்டுக்கு போனா அத்தா இங்க வர விட மாட்டாரு…” என்றாள். 

 

     தேன்மலருக்கு வாடிய அமீராவை பார்த்து என்னவோ போல் ஆகிவிட, அதற்கு மேல் அவளிடம் எதுவும் கேட்காது “சரி மீரா… நீ உள்ள வா… நா போய் காபி போட்டு எடுத்துட்டு வரேன்…. நைட் நீ டின்னர் சாப்ட்டு தான் போகணும்…” என்றாள். 

 

      அமீரா முகம் மலர, “சரி மலர்… நீ போ… நா கொஞ்சம் நேரம் இங்க இருந்துட்டு வரேன்…” என்றாள். 

 

     தேன்மலர் மென்னகையோடு வீட்டினுள் செல்ல விழைய, அமீரா “ஹான் மலர்… தேவா எங்க…” என்று வினவினாள். 

 

     தேன்மலர் திரும்பி “சார் அவர் ரூம்க்கு போனாரு… மே பீ தூங்கிற்கலாம்…” என்றாள். 

 

     அமீரா “ஓஓ… சரி… ஆனா மலர் நீ ஏன் அவன சார்னு கூப்ட்ற… என்னை பேர் சொல்லி தானே கூப்ட்ற… நம்ம மூனு பேத்துக்குமே ஒரே வயசு தான் இருக்கும்… நீ அவன பேர் சொல்லியே கூப்ட்லாமே…” என்றாள். 

 

     தேன்மலர் புன்னகைத்து “உன்னை இயல்பா பேர் சொல்ற மாறி… அவர கூப்ட வரல மீரா… மே பீ அவர் மேல இருக்ற மரியாதை காரணமாயிருக்கலாம்…” என்றாள். 

 

      அமீரா “அய்யோ மலர்… என்ன பேசுற போ… அவன நீ பேர் சொல்லியே கூப்டு… நாலாம் அவன கண்ட மேனிக்கு வறுத்தெடுப்பேன்… நீ என்னடான்னா…” என்று சலித்துக் கொண்டாள். 

 

     “என்ன வறுத்தெடுப்ப மீரா…” என்றவாறு தேவா அங்கு வந்தமர, 

 

   தேன்மலர் புன்னகையோடு அமீராவிடம் “நீங்க பேசிட்ருங்க… நா போய் காபி எடுத்துட்டு வரேன்…” என்றுவிட்டு வீட்டினுள் சென்றாள்.

 

             அமீரா “ஏன்டா… அவ உன்னை சார் சார்னு கூப்ட்றாளே…. நீயாவது பேர் சொல்லி கூப்ட சொல்லலால…” என்றாள். 

 

     தேவா “நீ வேற ஏன் மீரா…. அந்த பொண்ணு ரொம்ப பார்மலா பேசுது… ஆஊன்னா தேங்க்ஸ், சாரிங்குது… நானே ரெண்டு தடவ திட்டிட்டேன் ரொம்ப பார்மலா பேசாதனு… அவ இன்னும் ஃப்ரீயா ஃபீல் பண்ணல மீரா… புது இடம் புது ஆளுங்க… இயல்பானா அவளே மாத்திப்பா… ஏன் அவ சார்னு என்னை மரியாதையா கூப்ட்றது உனக்கு புடிக்கலயா டி…” என்றான். 

 

     அமீரா சிரித்து “ஆமாண்டா… உன்னலாம் எப்டி சார்னு கூப்டலாம்…” என்றாள். 

 

     தேவா அவளை முறைக்க, அமீரா சிரிப்புடன் “சரி டென்ஷன் ஆகாத… ம்ம்… அவள மாத்திறலாம்…” என்று கூற, தேவா மென்னகைப் புரிந்தான். 

 

      தேவா ஒருவித இறுக்கமான பாவனையில் அவளைப் பார்த்து “மீரா… நிச்சயத்துக்கு டேட் பிக்ஸ் பண்ணியாச்சா…” என்று கேட்க, அமீரா ஏக்கமும் வலியுமாய் அவனை ஏறிட்டவள் சட்டென்று கலங்கிய விழிகளை மறைக்க வேறுபுறம் திரும்பினாள். 

 

      அமீரா விழிகள் விரிய “ஹேய் காபியோட… பஜ்ஜி வேறயா… சூப்பர்… செம பசில இருந்தேன் மலர்…” என்றவாறு ஒரு ட்ரேயில் மூவருக்கும் காபியும் பஜ்ஜியும் எடுத்து வந்த தேன்மலரிடம் சென்றாள். 

 

       அமீரா ஒரு பஜ்ஜியை எடுத்து சாப்பிட்டு கண்கள் மூடி “ம்ம்ம்ம்ம்… மலர் செம போ… ஸ்பைஸியா மொருமொருனு…. ம்ம்ம்… சூப்பர் போ…” என்றாள். தேன்மலரை கண்ட தேவாவும் தன்னை இயல்பாக்கிக் கொண்டான். 

 

      தேன்மலர் புன்னகையோடு “உனக்காக தான் மீரா… ஹாஸ்பிட்டலேர்ந்து நேரா வந்தேன்னு சொன்னல்ல… பசியா இருப்ப அதான்… நல்லார்க்கா… ஏதோ எனக்கு தெரிஞ்சளவு பண்ணீற்கேன்…” என்றாள். 

 

     அமீரா “என்ன இப்டி கேட்டுட்ட… சூப்பரா இருக்கு… தேவா நீயும் சாப்டேன்…” என்று ஒரு பஜ்ஜியை அவனிடம் நீட்டினாள்.

 

     தேவா “நா அப்றம் சாப்ட்றேன் மீரா…” என்க, அமீரா “நீ இப்டிலா சொன்ன கேக்க மாட்ட…” என்றவாறு அவன் வாயில் அதைத் தினித்தாள். 

 

             தேவா அவளை முறைத்துக் கொண்டே சாப்பிட்டவன் அதன் ருசிப் பிடித்து விட திரும்பி “மலர்… ரொம்ப நல்லார்க்கு…” என்று கூறி இன்னொன்றை எடுத்து சாப்பிட்டான். 

 

       தேன்மலர் மலர்ந்தப் புன்னகையோடு இருவருக்கும் காபியைக் கொடுத்துவிட்டு தானும் ஒரு கோப்பையை எடுத்துக் கொண்டு அவர்களோடு அமர்ந்தாள். அமீரா ரசித்து உண்பதைப் தேன்மலர் புன்னகையோடு பார்த்திருக்க, அவளைக் கவனித்த தேவா சிறிதாய் இதழ்கள் விரிந்து “மலர் அவ அப்டிதான்… அவளுக்கு சாப்பாடு புடிச்சுருச்சுனா… அது காலியாகுற வர யாரையும் கண்டுக்க மாட்டா…” என்றான். 

 

       தேன்மலர் சிரித்து “பரவால்ல சார்… இந்த மாறி ரசிச்சு கூச்சப்படாம எல்லாரும் சாப்டமாட்டாங்கல்ல… நல்ல பசில இருக்காங்க சாப்டட்டும்…” என்றாள். தேவாவும் தலையைசைத்துப் புன்னகைத்தான். பின் இருவரும் அமைதியாக அமீராவை பார்த்திருந்தனர். 

 

      ஆசைத்தீர உண்டு முடித்த அமீரா இருவரையும் பார்த்துப் புன்னகைக்க, இருவரும் பதிலுக்குப் புன்னகைத்தனர். பின் மூவரும் பொதுவான விடயங்களைப் பற்றி சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர். நேரமாவதை உணர்ந்த தேன்மலர் “நீங்க ரெண்டு பேரும் பேசிட்ருங்க… நா போய் டின்னர் ரெடி பண்றேன்…” என்று எழ, 

 

     தேவா “இரு மலர்… நானும் உனக்கு ஹெல்ப் பண்றேன்…” என்று கூறி எழுந்தான். 

 

         அமீரா “நீங்க ரெண்டு சமையல் பண்ணுங்க… நா உங்கள வேடிக்க பாக்றேன்… வாங்க உள்ள போலாம்…” என்றவாறு உள்ளேச் செல்ல, தேவா தலையில் அடித்துக் கொள்ள, தேன்மலர் புன்னகையோடு அமீராவை தொடர்ந்தாள்.

 

                        தேன்மலரும் தேவாவும் வேலைச் செய்ய, அமீரா அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தாள். அரைமணி நேரத்தில் சமையல் முடிய, மூவரும் பேசிக் கொண்டே உணவருந்தினர். அமீரா சாப்பிட்டு முடித்துக் கிளம்பும் வேளை தேவா “மீரா…. நா கேட்டதுக்கு பதிலே சொல்லலயே…” என்று கேட்க, அமீரா அவனைப் பார்த்தப் பார்வையில் தேவா அவளைப் பார்க்க முடியாமல் பார்வையைத் திருப்பிக் கொண்டான். 

 

     அமீரா புன்னகையை வரவழைத்துக் கொண்டு “மலர்… எனக்கு நெக்ஸ்ட் சன்டே என்கேஜ்மென்ட்… நீ கண்டிப்பா வரனும்…” என்று கூற, தேவா திரும்பி அவளைப் பார்த்தான். 

 

     தேன்மலர் “ஹோ… அப்டியா மீரா… கங்ராட்ஸ்…” என்று அவளைக் கட்டியணைத்து “ஆனா மீரா… சார் கொஞ்ச நாளைக்கு என்னை வெளில போகக்கூடாதுன்னு சொல்லிற்காரு… கல்யாணம் எப்போ… அப்ப கண்டிப்பா வந்தர்றேன்…” என்றாள்.

 

       அமீரா “ம்ம்… பரவால்ல மலர்… ஆனா என் பியான்ஸிய என்கேஜ்மென்ட் முடிஞ்சு உனக்கு இன்ட்ரோ குடுக்றேன்… பட் கல்யாணத்துக்கு கண்டிப்பா வந்துரனும்…” என்று கூற, தேன்மலர் புன்னகைத்துத் தலையாட்டினாள். 

 

       அமீரா பதிலுக்குப் புன்னகைத்து விட்டு தேவாவை பார்க்க, தேவா அவளைத் தான் பார்த்திருந்தான். ஆனால் இப்பொழுது அவள் கண்களை நேருக்கு நேராக நோக்கி இதழ்களில் புன்னகை சூடியிருந்தான். அவனைக் கண்ட அமீரா கண்களில் என்னவென்றே சொல்ல முடியாத ஒரு ஏக்கம், சோகம், வலி, அதன் விளைவாய் அவள் விழிகள் குளம் கட்ட, “நீயும் வந்துருடா… அம்மா வந்து கூப்டுவாங்க…” என்றாள். 

 

      தேவா புன்னகை மாறாது “நா கல்யாணத்துக்கு கண்டிப்பா வரேன் மீரா…” என்றான். 

 

     தேவா அப்படி கூற காரணம் தன் தந்தையே என்றறிந்த அமீரா தலையசைத்து, விழி விட்டு இறங்கத் துடித்தக் கண்ணீரை அணையிட்டு தடுத்து தேன்மலரை கண்டு செயற்கையாகப் புன்னகைத்து “சரி மலர்… நா கிளம்பறேன்… இனிமே நிச்சயம் முடிஞ்சு தான் இங்க வர முடியும்… அத்தா விட மாட்டாங்க… உடம்ப பாத்துக்கோ…” என்றாள். 

 

      தேன்மலர் புன்னகையோடு தலையசைக்க, அமீரா தேவாவிடம் கண்களால் விடைபெற, தேவாவும் புன்னகையோடு தலையசைக்க, அமீரா விழி நீர் விழும் முன் வேகமாகத் திரும்பியவள் “மலர்… எனக்காக தேவாவயும் பாத்துக்கோ…” என்றுவிட்டு விறுவிறுவென்று வேகமாக வீட்டை விட்டு வெளியேறினாள். 

 

               தேவா, தேன்மலரிடம் எதுவும் காட்டிக் கொள்ள கூடாதென்று வேகமாக தன்னறைக்குச் சென்றான். முதலிலிருந்து இருவரையும் கவனித்து வந்த தேன்மலர் புருவ முடிச்சுகள் விழ, யோசனையோடு தன்னறைக்குச் சென்றாள். தேன்மலர் பெரிய மெனக்கெடலில்லாமல் இரண்டு நிமிட யோசனையிலேயே விடயத்தைப் புரிந்துக் கொண்டவள் பெருமூச்சோடு இதுபற்றி அவர்கள் இருவரிடமும் எதுவும் வினவி விட கூடாதென்று முடிவு செய்தாள். 

 

      பின் மடிக்கணினியை உயிர்ப்பித்து தங்களின் ப்ரத்யேக மின்னஞ்சல் முகவரிக்கு வந்திருந்த மின்னஞ்சலைப் பார்த்தவள் இதழ்களில் பெரிதாய் வளைவு, கண்களில் ஒளி. பின் அதில் குறிப்பிடப் பட்டிருந்த எண்ணிற்கு அழைத்துப் பேசியவள் முகத்தில் கவலைத் தாண்டிய மகிழ்ச்சியும் தெளிவும் தாண்டவமாடியது. பேசி முடித்த தேன்மலர் அடுத்து என்ன என்ற யோசனையில் மூழ்கியவள், வெகு நேரம் உறங்காமல் விழித்திருந்தவள், பின் ஏதோ முடிவெடுத்தவளாக உறங்கிப் போனாள். 

 

       தன்னறைக்குச் சென்ற தேவாவின் மனக்கண் முன் பழைய நினைவுகள் காட்சிகளாய் விரிய முதலில் அவன் முகத்தில் ஒட்டிக் கொண்டிருந்த சிரிப்பு நேரம் செல்ல செல்ல சோகம், கோபம், தவிப்பு, ஏக்கம் என்று பல பரிமாணங்கள் எடுத்து கடைசியாக இறுக்கம் பின் தெளிவாக மாறியது. பழைய நினைவுகளில் உழன்ற தேவா தெளிவான மனநிலையுடன் உறங்கச் செல்ல, சுவற்றில் மாட்டப்பட்டிருந்த தன் குடும்பப் புகைப்படத்திலிருந்த தன் தங்கையைக் கண்டவன் மனம் கோபத்தில் இறுகிட, தான் எடுத்திருக்கும் காரியத்தை முடிக்கும் உறுதியும் திண்மையும் கொண்டான். அச்சமயம் அவன் கைப்பேசி சிணுங்க, அதை உயிர்ப்பித்துப் பேசியவன், அந்தப் பக்கம் கூறிய செய்திக் கேட்டு நன்றியுரைத்து அழைப்பைத் துண்டித்தான். அச்செய்தியைப் பற்றி யோசித்தவன் தெளிவான ஒரு முடிவெடுத்தப் பின் கோபம் கொண்டு உடல் இறுகி வெகு நேரம் எங்கோ வெறித்திருந்தான். பின் அதை உள்ளுக்குள் எரியும் கனலாய் விட்டுவிட்டு புறத்தில் இலகுவானவன், மெத்தையில் வீழ்ந்து கண்மூடிய அரை மணித்தியாலங்களில் துயில் கொண்டான்.

 

                     ரகு லிங்கத்திற்கு அழைத்து தேடுதல் நிலவரம் பற்றிக் கேட்க, லிங்கம் “சாரு… பொண்ணு சென்னைய தாண்டல… நம்ம பசங்க சிட்டி ஃபுல்லா இருக்கானுங்க…. எங்க பாத்தாலும் தூக்கிருவானுங்க… பார்டிய தூக்கினு உனக்கு போன் பண்றேன்…” என்று கூறி அழைப்பைத் துண்டித்தான். 

 

      ரகு அருகிலிருந்த ஆர்யன் “என்னாச்சு டா… கண்டுபுடுச்சானுங்களா இல்லயா…” என்று கேட்டான். 

 

     ரகு “அவ சிட்டிக்குள்ள தான் இருக்காலாம்… பாத்தவொடனே தூக்கிட்டு ஃபோன் பண்றேன்னு சொல்லிற்கான்…” என்றான். 

 

      அதைக் கேட்ட ஆர்யன் கோபத்தில் கைமடக்கி தன் தொடையில் குத்தியவன் பல்லைக் கடித்து “சிட்டிக்குள்ள தானே இருக்கா… அவ மட்டும் சிக்கட்டும்……. ரகு லிங்கம் ஒரு பக்கம் தேடட்டும்… நீ நம்ம ஆளுங்கள ஊர்லேர்ந்து இறக்கு… அவ எவ்ளோ சீக்ரம் கெடைக்கிறாளோ நமக்கு அவ்ளோ நல்லது….” என்றான். 

 

       ரகு “சரி டா…” என்றவன் யாருக்கோ அழைத்து “டேய்… எல்லாரும் பொறப்பட்டு சென்னை வாங்கடா… முக்கியமான வேலயிருக்கு…” என்றான். 

 

      அந்தப் பக்கம் ஏதோ கூற, ரகு “வாட்ஸ் அப்ல ஒரு பட்சியோட ஃபோட்டோ அனுப்பிற்கேன்… பட்சி நம்மட்டேற்ந்து பறந்துருச்சு… அத கண்டு புடிக்கனும்….” என்று கூற, அந்தப்புறம் உடனே வருவதாகக் கூறவும் இவன் அழைப்பைத் துண்டித்தான். 

 

      ஆர்யன் அவனைப் பார்க்க, ரகு “வர சொல்லிட்டேன் டா… வந்துருவானுங்க…” என்று கூற, ஆர்யன் முகம் கோபத்தால் சிவந்தது. 

 

      ரகு “ஆர்யா… அந்த பொண்ணு கொஞ்சம்….” என்னும் போதே, ஆர்யன் “ரகு… இவ்ளோ தலவலியா இருக்றவகிட்டலாம் என்னால பொறுமைய கடப்புடிக்க முடியாது… இன்னொரு தடவ பொறுமையா இருன்னு சொல்லாத… ஆமா நீ என்ன அடிக்கடி அவளுக்கு சப்போர்ட் பண்ற மாறி பேசுற…” என்று சந்தேகமாக அவனைப் பார்த்தான். 

 

         ரகு “டேய் என்னடா இப்டி பாக்ற… நா பொறுமையா இருன்னு சொன்னதுக்கு காரணம் சிதம்பரத்துனால… ஏன்னா அவன் ஒரு என் ஆர் ஐ….. அந்த பொண்ண இன்னும் நீ சாதாரணமா எடைப் போடாத… ஏற்கனவே நம்மள ஏமாத்தி தப்பிச்சவ… அவளுக்கு ஏதாவது தெரிஞ்சா நாம கண்டிப்பா மாட்டிப்போம்… இன்டர்நேஷனல் லெவல்ல ப்ராப்ளம் ஆகும்… சொல்றத சொல்லிட்டேன் அப்றம் உன் இஷ்டம்…” என்றான். ஆர்யன் சிறிது நேரம் ஏதும் பேசவில்லை. 

 

     பின் அவனாக “சாரி டா… ஏதோ கோவத்துல…” என்க, ரகு கண்டிப்புடன் “இந்த கோவம் நாம பண்ற தொழில்க்கு என்னைக்கும் ஆபத்தானது… தயவு செஞ்சு அத குறைக்க ட்ரை பண்ணுடா…” என்றான். 

 

       ஆர்யன் தலையசைத்து “பண்றேன் டா… அப்றம் அந்த ஜே ட்ட என்னாச்சுன்னு விசாரிக்கனும்…” என்றவாறு தன் கைப்பேசியிலிருந்து ஜேக்கு அழைத்தான்.

 

                   ஜே அழைப்பை ஏற்க வழக்கமான நல விசாரிப்புகளுக்குப் பிறகு, ஆர்யன் “ஜே எதாவது தெரிஞ்சுதா… சிதம்பரம் எங்கயிருக்கான்…” என்று வினவினான். 

 

      ஜே “அவன் வாஷிங்டன்ல லேண்ட் ஆகிருக்கான்றது கன்பார்ம்… பட் இங்க தேடி பாத்ததுல அவன் இங்கயில்ல… வேற எங்கயோ போயிருக்கான்…. எங்கன்னு என் ஆளுங்க தேடிட்டு இருக்காங்க…. சரி அந்த பொண்ண தேட்றீங்களே… அது என்னாச்சு…..” என்று வினவினான். 

 

      ஆர்யன் அனைத்தும் கூறி “நீங்களும் சீக்ரம் அவன கண்டுபுடிங்க…. நாங்களும் அதுக்குள்ள அவள புடிச்சர்றோம்…” என்றான். 

 

       ஜே “சரி… ஆனா இந்த மொற எந்த சொதப்பலும் இல்லாம பாத்துக்கோ…” என்றுவிட்டு அழைப்பைத் துண்டிக்க, ஆர்யன் வந்த கோபத்தில் கைப்பேசியை சுவற்றில் விசிறியடித்தவன் நாலு நல்ல வார்த்தைகளால் ஜேவை புகழ்ந்தவன் ரகு “இவன்லாம் பேசறளவு வந்துட்டோம்ல… எல்லாத்துக்கும் அவதான் காரணம்… அவ மட்டும் கெடைக்கட்டும்….” என்று கண்கள் சிவக்க கூறினான்.

 

       ரகு அவனின் கோபம் கண்டு உள்ளுக்குள் “எத்தன தடவ சொன்னாலும் திருந்த மாட்டான்…” என்று நொந்துக் கொண்டு “சரிடா… இப்ப வா… மீட்டிங் இருக்கு…” என்று கூற, ஆர்யன் சில நிமிடங்கள் எடுத்துக் கொண்டு இயல்பானவன், சிறு தலையசைப்போடு ரகுவோடு ஹைத்ராபாத்திலிருந்த தன் அலுவலகத்தின் நான்காம் தளத்திற்கு மின்தூக்கி மூலம் சென்றான். 

 

        எப் டி ஏ அலுவலகம் அமெரிக்காவின் தலைநகரான வாஷிஙாடன் டி சி க்கு அருகிலிருக்கும் மேரிலேண்டில் இருந்தது. சிதம்பரம் வாஷிங்டன்னில் தங்கியிருந்ததால் ஜே அங்குத் தேடிக் கொண்டிருக்க, துபாயிலிருந்து வாஷிங்டன் வந்திறங்கிய சிதம்பரம், வேலாயி, துர்கா, ராஜேஷ் நால்வரையும் ஸாம், தேன்மலர் கூறியதுபோல் தன் இருப்பிடமான நியூயார்க் அழைத்துச் சென்றிருந்தான். 

 

       லிங்கம் தானே களத்தில் இறங்கி தன் முதற்கட்ட விசாரணையை போரூர் குடோனுக்கருகிலிருந்தக் குடியிருப்புப் பகுதியில் ஆரம்பித்தான். அநேகர் தேன்மலரின் புகைப்படம் கண்டு தெரியாது என்று உதடு பிதுக்கி விட்டுச் செல்ல, லிங்கமும் அவன் ஆட்களும் இனி எங்குப் போய் தேடுவதென்று மண்டைக் காய்ந்தனர். மீண்டும் தன் விசாரணையை லிங்கம் தொடர, ஒருவர் மட்டும் தேன்மலரின் புகைப்படத்தைக் கண்டு யோசிக்க ஆரம்பித்தார். அதைக் கண்ட லிங்கம் மற்றும் அவன் ஆட்களின் முகத்தில் நம்பிக்கை ஒளி பிரகாசிக்க, அவர் என்ன கூறப் போகிறாரென்று அவரையேப் பார்த்திருந்தனர்.

தொடரும்….

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *