Loading

மௌனம் 9

“எந்த மினிஸ்டர் சார்.” என திக்கி திணறி ரஞ்சித் கேட்க,

“ஓ உங்களுக்கு அப்போ தெரியாதா? சாரி சாரி நான் தான் மாத்தி கேட்டுட்டேன் போல. சரி விடுங்க. முகமெல்லாம் வேர்த்திருக்கு பாருங்க துடைச்சுக்கோங்க. நான் வரேன்.” என கூறிக்கொண்டு ரஞ்சித்தை பார்த்து நக்கலாக சிரித்தபடி வெளியே சென்றான் ரௌத்திரன்.

‘எப்படி கண்டுபிடிச்சான் இவன்? வெளிய வச்சு தான பேசுனேன். ச்ச ஒண்ணுமே புரியலையே. இவன் லேஸ் பட்டவன் இல்ல போல. அவனை ஃபாலொவ் பண்ணிட்டு போவோம்.” என ரௌத்திரனை பின் தொடர்ந்து சென்றான். அவன் தன்னைப் பின்தொடருவான் என்பதும் ரௌத்திரன் அறிந்ததே. வெளியே வந்த ரௌத்திரன் தேநீர் கடையில் நின்று தேநீர் குடித்தபடி ராஜாவிற்கு அழைப்பு விடுக்க அழைப்பை ஏற்ற ராஜா,

“டேய் மச்சான் சொல்லு டா. என்ன முதல்நாள் திருநெல்வேலில டியூட்டி எப்படி இருந்துச்சு?” என்றான்.

“அதை ஏன் டா கேக்குற? மைனர் கேஸைக் கூட முடிக்காம வச்சுருக்காங்க. நான் இங்க நிறைய களை எடுக்க வேண்டியிருக்கு.” என கூறியவனோ திரும்பி பார்க்க ரௌத்திரன் நினைத்தது போல ரஞ்சித் சிறிது தூரம் தள்ளி ஒளிந்திருந்தான். அவனின் ஷூ வெளியே தெரிய அது ரஞ்சித் தான் என அறிந்து கொண்டான் ரௌத்திரன்.

“அதான் நீ அங்க போய்ட்டல. எல்லாம் எடுத்துருவ.”

“டேய் அந்த மினிஸ்டர் ஸ்டேஷன் உள்ளேயே ஆள் வச்சிருக்கான் டா.”

“என்ன டா சொல்ற? ஸ்டேஷன் உள்ளேயா.” என அதிர்ந்து கேட்டான் ராஜா.

“ஆமா டா. சப் இன்ஸ்பெக்டர் ரஞ்சித் தான் அந்த மினிஸ்டருக்கு உளவாளி.” என ரௌத்திரன் கூற,

“அடப்பாவி கூடயே இருந்து குழி பறிக்க ஆள் செட் பண்ணிட்டானா.” என ராஜா அதிர்ச்சியாக கேட்க,

“விடு டா. என் மேல இன்னும் பயம் இருக்குறதுனால தான அந்த மினிஸ்டர் இப்படி பண்றான். அவனுக்கு வைக்க வேண்டிய பொரிய வச்சாச்சு. எப்போ சிக்குதுன்னு பார்க்கலாம்.” என ஏதோ முடிவெடுத்தவனாய் கூற,

“மச்சான் நீ ஏதோ பிளான் பண்ணிட்டன்னு மட்டும் தெரியுது. தயவு செஞ்சு சொல்லு டா.” என ராஜா கேட்க,

“சொல்ல வேண்டிய நேரத்துல சொல்றேன் மச்சான். சரி அப்புறம் பேசலாம்.”

“மச்சான் மச்சான் இரு டா” என அவன் கூறுவதற்குள் ரௌத்திரன் அழைப்பைத் துண்டித்துவிட்டான். “பாவி என்னை யோசிக்க வைக்குறதே இவனுக்கு வேலையா போச்சு.” என புலம்பியவாறு ராஜா தன் பணியைத் தொடர்ந்தான்.

ரௌத்திரனும் வீட்டிற்கு செல்ல அவனின் வீடுவரை வந்து பார்த்துவிட்டு தான் ரஞ்சித் கிளம்பினான். சிறிது தூரம் தள்ளி சென்று அமைச்சருக்கு அழைத்தான் ரஞ்சித்.

“என்னையா சொல்லு?” என மினிஸ்டர் கேட்க,

“சார் அந்த ரௌத்திரன் நான் உங்க ஆளுன்னு கண்டுபிடிச்சுட்டான் சார்.” என ரஞ்சித் கூற,

“யோவ் என்னய்யா சொல்ற? அதுக்குள்ள எப்படி? உன்னயெல்லாம் நம்பி ஒரு வேலைய செய்ய சொன்னா.” என மினிஸ்டர் கோபமாய் பேச,

“இல்ல சார் நான் உங்க கிட்ட பேசும் போது கேஸ் விஷயமா வெளிய தான் இருந்தேன். அவன் ஸ்டேஷன்ல தான் இருந்தான். ஆனால் எப்படின்னு தான் தெரியல.” என குழப்பமாய் கூற,

“எனக்கென்னமோ அவன் சும்மா போட்டு வாங்கியிருக்கான்னு தோணுது. நீயே பயந்து மாட்டி கொடுத்துடாத.” என எச்சரித்துவிட்டு அழைப்பைத் துண்டித்தவர்,

“டேய் ரௌத்திரா உன் ரௌத்திரத்தை எல்லாம் நான் அடக்குறேன் டா.” என கோபத்தில் கத்தினார்.

ரௌத்திரன் வீடு வந்த நேரம் அவன் வீட்டு வாசலில் சிறுவர்களும் அவர்களுடன் மலர், ஹர்ஷினி மற்றும் பாட்டியும் அமர்ந்திருந்தனர். வந்தவனை மலர் ஏறிட்டு பார்க்க, அவளை கண்டுகொண்டால் அவன் தான் ரௌத்திரன் இல்லையே. நேராக பாட்டியிடம் சென்றவனோ,

“என்ன பாட்டி நடக்குது இங்க?” என்று கேட்டான்.

“கரெண்ட் இல்ல டா. அதான் காத்தாட வெளியே உக்காந்து கதைப் பேசிட்டு இருக்கோம்.” என கூற அவனும் சரி என்று கூறிவிட்டு தன் அறைக்கு சென்று முகம் கை கால் கழுவி வேறு உடை மாற்றிவிட்டு கரெண்ட் இல்லாத காரணத்தினால் இவனும் தன் மடிக்கணினியை எடுத்துக்கொண்டு வெளியே ஒரு நாற்காலியை போட்டு அமர்ந்து தன் பணியைத் தொடர்ந்தான்.

அப்பொழுது சிறுமி பிங்கி மலரிடம்,

“மலரக்கா போர் அடிக்குது நீங்க பாட்டு பாடுங்க.” என கோர்த்துவிட,

“ஹே மலர் நீ பாட்டெல்லாம் பாடுவியா?” என ஹர்ஷு கேட்க,

“பாடுவியாவா எங்க மலரக்கா சூப்பரா பாடும். அடிக்கடி எங்களுக்கு பாட்டு பாடி காட்டும்” என சோனுவும் கூற,

“சூப்பர் அப்போ மலர் பாடு டி ப்ளீஸ் டி.” என ஹர்ஷு கேட்க,

“ஹே அதெல்லாம் வேணாம் சும்மா இரு.” ரௌத்திரன் இருப்பதால் அவளுக்கு பாட கூச்சமாக இருந்ததால் மறுத்தாள்.

“பாடு மா நாங்களும் கேட்போம்ல.” என பாட்டியும் கூற வேற வழியின்றி சரி என ஒப்புக்கொண்டாள். அதுவரை தன் கவனம் முழுவதையும் மடிக்கணினியில் செலுத்தியவனோ மலர் பாடுகிறேன் என்றதும் அவன் அறியாமல் அவனின் செவிகள் அதனைக் கவனிக்க தயாராகின. ஆனால் கண்களை மட்டும் கணினியில் வைத்து கொண்டான் தான் கேட்கிறேன் என அவளுக்கு தெரிய கூடாது என்று நினைத்து.

“சரி பாடுறேன்.” என்றவள் குரலை செருமியபடி பாட ஆரம்பித்தாள்.

சின்னக் குயில்கள்
உன்னை உன்னை நலம் கேட்குதா
நெஞ்சில் பரவும்
அலை அலை உன்னை ஈரம் ஆக்குதா

மெல்ல நகரும்
பகல் பகல் யுகம் ஆகுதா
மூச்சு விட்டதால் தலையணை
அது தீயில் வேகுதா

நெஞ்சம் எதிலும் ஒட்டாமல்
கண்ணில் கனவும் வற்றாமல்
தினமும் தினமும் உருகும் மனது
ஏன் இந்த நிலைமை தெரியவில்லை
இந்தப் பரவசம் உனக்குள்ளும் இருக்கிறதா அன்பே…

என பாடிவிட்டு கடைசியில் அந்த ‘அன்பே’ என்பதை ரௌத்திரனை பார்த்தவாறு நிறுத்த ரௌத்திரனும் பாட்டின் இடையில் அவளின் குரலில் ஈர்க்கப்பட்டு அவனறியாமல் அவளை தான் பார்த்துக்கொண்டிருந்தான்.

இதனைப் பாட்டி பார்த்துவிட்டு ஹர்ஷினியைக் கூப்பிட்டு பார்க்கும் படி காண்பிக்க அவளும் பார்க்க இருவரும் அர்த்தமாய் சிரித்துக் கொண்டனர். பின் மீண்டும் அவனைப் பார்த்தவாறே பாட,

உன் மார்பில் விழி மூடி தூங்குகிறேன்
தினமும் கனவில் உன்
ஆசை முகம் தேடி ஏங்குகிறேன்
விடியும் பொழுதில்

என மலர் பாடி முடிக்க அனைவரும் கைத்தட்டினார். கைத்தட்டலின் சத்தத்தில் தான் இருவரும் தத்தம் பார்வையை விளக்கினார். அவள் ஏன் அவனை நினைத்து பாடினாள் என மலருக்கும் தெரியவில்லை. அவளை ஏன் இமைக்க மறந்து பார்த்தான் என ரௌத்திரனுக்கும் தெரியவில்லை.

‘ச்ச என்ன இது. இப்படி பார்த்துட்டோமே அவளை. என்னைப் பத்தி என்ன நினைப்பா. சும்மாவே ஏதாவது கலாய்ப்பா. இப்போ இது வேறயா. ஆனால் சும்மா சொல்ல கூடாது. குட்டி பிசாசு ரொம்ப நல்லா பாடுச்சு. சரி அவ ஏதாவது நம்மகிட்ட கேட்குறதுக்குள்ள நம்ம உள்ள போயிருவோம்.’ என மனதில் நினைத்துவிட்டு உள்ளே செல்ல போக பாட்டியோ,

“டேய் ரௌத்திரா. புள்ள எம்புட்டு அழகா பாடியிருக்கு. ஏதாவது சொல்லிட்டு போடா. எப்படி இருக்குன்னு.” என வேண்டுமென்றே கேட்க அவனோ,

‘ஐயோ அவகிட்ட இருந்து தப்பிக்கலாம்னு பார்த்தா பாட்டி மாட்டி விட்ருவாங்க போலயே. ரௌத்திரா கெத்த விட்டுறாத.’ என நினைத்துவிட்டு,

“பாட்டா யார் பாடுனா?” என கேட்க மலரோ, ‘அடப்பாவி அப்படி பார்த்துட்டு இப்போ இப்படி கேட்குறார் இந்த ஈபிள் டவர்’ என மனதில் நினைத்தபடி முறைத்து பார்த்தாள் அவனை.

“அட என்ன பாட்டி கேட்குறீங்க. அண்ணா தான் மெய்மறந்து பார்த்துட்டு இருந்துச்சே நீங்க கவனிக்கலையா” என ஹர்ஷு கூற அவளை ரௌத்திரன் முறைக்க,

“இல்லண்ணா நீ மெய்மறந்து லெப்டோப்பில உன் வேலைய பார்த்துட்டு இருந்தல அதை சொன்னேன். அதனால மலர் பாடுனத நீ கவனிச்சுருக்க மாட்ட அப்படிதானே.” என சிரிப்பை அடக்கியவாறு கூற அவனோ, ‘உண்மையா சொல்றாளா இல்ல கலாய்க்குறாளா’ என்ற ரீதியில் பார்த்துவிட்டு உள்ளே சென்றான். பிறகு கரெண்ட் வரவும் அனைவரும் அவரவர் வீட்டிற்கு சென்றனர்.

“என்ன டி உங்க அண்ணா இப்படி ஆயிட்டான்?” என பாட்டி கேட்டார்.

“ஆமா பாட்டி. அதான் நானும் யோசிக்குறேன். எந்த பொண்ணையும் நிமிர்ந்து கூட பார்க்காத அண்ணா இப்போ மலர மெய்மறந்து பார்க்குது.”

“அப்போ கூடிய சீக்கிரம் நான் நினைச்சது நடக்க போகுது.”

“நடந்தா எனக்கும் சந்தோஷம் தான் பாட்டி.” என இவ்வாறு பேசிக்கொண்டிருக்க பிறகு சாப்பிட்டுவிட்டு உறங்க சென்றனர். அங்கே மலரும் உறங்க சென்றாள். கண்களை மூடினாலே அவனின் பார்வை தான் கண்முன்னே வந்தது. வெக்கம் வேறு வந்து தொலைத்து.

‘தீரா ஏன் நம்மள அப்படி பார்த்தாரு. நானும் ஏன் அவரை நினைச்சுகிட்டே பாடுனேன்.” என்றவள் அப்பொழுது தான் தீரா என்ற அழைப்பை கவனித்தாள்.

‘ஆமா இதென்ன தீரா? எப்போ இப்படி பேரு வச்சோம்? ஐயோ கடவுளே எனக்கே தெரியாம எனக்குள்ள என்னென்னமோ நடக்குதே. அப்போ நான் அவரை காதலிக்குறேனா.’ என அதிர்ச்சியாகி நினைக்க அவனைப் பார்த்தது முதல் ஒவ்வொரு காட்சிகளும் மனதினுள் ஓட சட்டென அவனுடன் எடுத்த செல்பீ ஞாபகம் வர அதனை எடுத்து பார்த்தாள். ஏனோ மனதில் சொல்லமுடியாத ஓர் உணர்வு. ஆம் அவளின் காதலை உணர்ந்த தருணம்.

‘அடப்பாவி நீங்க இங்க வந்து முழுசா ஓது வாரம் கூட ஆகலையே.. அதுக்குள்ள என்னை இப்படி ஆக்கிட்டீங்க. சரியான சைலண்ட் கில்லர் தீரா நீங்க’ என மனம் போன போக்கில் நினைத்தவள் அந்த புகைப்படத்தில் தன் இதழை ஒற்றி எடுத்து வெட்கப்பட்டு சிரித்துக் கொண்டாள். பின் ஏதோ தோன்ற தன் டைரியை எடுத்து தன் மனதில் தோன்றியதை எழுதலானாள்.

அனல் கக்கும் உன் பார்வையால் என்
மனம் கவர்ந்து சென்றதென்ன அதிசயமோ..?
தினம் தினம் உனைக் காண வேண்டுமென
இனம் புரியாத ஓர் ஏக்கம் என்னுள்ளே… உன்
குணம் கூட தெரியாத நானோ உன்
சினமும் அழகென ரசிக்கிறேன்.
கணநேரம் நீ பிரிந்தாலும்
கனமாய் என் மனம் ஆனதேனோ?
கானமாய் உன் பெயர் இசைக்கிறேன் என் தீரா..

– என்னைக் கிறுக்கி ஆக்கிய என் கிறுக்கனுக்காக நான் கிறுக்கிய கிறுக்கல்கள் ..

என எழுதிவிட்டு,

“ஐயோ எனக்கு என்னமோ ஆயிடுச்சு” என்று சத்தமாக புலம்பியவள் தலையணையில் முகம் புதைத்துக் கொள்ள அவ்வாறே அவனின் நினைவுகளோடே உறங்க ஆரம்பித்தாள்.

அங்கே ரௌத்திரனோ,

“இந்த குட்டி பிசாசு ஏன் நம்மள பார்த்துகிட்டே பாடுச்சு. அவ கண்ணுல ஏதோ ஒன்னு இருந்துச்சு.” என நினைக்க நினைக்க அவள் பாடிய பாடல்கள் காதில் ஒலிக்க கண்களில் அவளின் பார்வை தெரிய யோசனையோடு உறங்கி போனான். பாவம் அவளின் கண்களில் தெரிந்தது காதல் என தெரியவில்லை அவளின் தீரனுக்கு.

காதல் உணர்ந்த தருணத்தின் அழகிய நினைவுகளோடே உறங்கிய மலர்நிதிக்கு காலை பொழுது அழாகாக விடிந்தது. மனம் முழுதும் காதலால் நிரம்பியிருக்க காதலனைக் காணும் ஏக்கம் மனதினுள் எழ எவ்வாறு அவனை பார்ப்பது என தீவிரமாக சிந்தித்தவளுக்கு சட்டென யோசனை வந்தது.

‘ஈபிள் டவர் கண்டிப்பா எக்சர்சைஸ் பண்ண மாடிக்கு வந்துருக்கும். மாடிக்கு போய் பார்க்கலாம்.” என நினைத்துவிட்டு விறுவிறுவென மாடிக்கு செல்ல இவள் வரவும் அவன் செல்லவும் சரியாக இருந்தது. அவளின் தீரனின் முதுகை மட்டுமே காண முடிந்தது.

‘ச்ச கொஞ்சம் முன்னாடியே வந்துருக்கலாமோ.’ என நொந்துவிட்டு கீழே வந்தவள் பல் துலக்கி விட்டு சமையல் அறை சென்று வழக்கம் போல் அவளின் சுப்புவிடம் காபி கேட்டு ஹாலில் அமர்ந்து குடித்துக் கொண்டிருந்தாள். வெங்கடேசன் செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்தார்.

‘பேசாம இப்போவே அப்பா அம்மா கிட்ட சொல்லிறலாமா. நம்ம லவ்வ பத்தி.’ என தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தாள். அவளை யோசனையாய் பார்த்த வெங்கடேசன், “லட்சு இங்க வா” என அழைக்கமா சமயலறையில் இருந்து வெளியே வந்த சுப்புலட்சுமி,

“சொல்லுங்க. ஏதும் வேணுமா?” என கேட்டார்.

“அதெல்லாம் ஒன்னும் வேணாம். அடுப்புல ஏதாவது வச்சிருந்தா அணைச்சிட்டு வந்து உக்காரு. நம்ம பொண்ணு ஏதோ முக்கியமான விஷயம் சொல்ல போறா” என கூற அதனைக் கேட்ட மலரோ,

“அப்பா எப்படி பா?” என ஆச்சர்யமாக கேட்க,

“உன்னைப் பத்தி எனக்கு தெரியாதா மா? எப்போதும் இதை தான பண்ணுற. ஏதாவது முக்கியமா பேசணும்னா காபி குடிச்சுட்டே சொல்லலாமா வேணாமான்னு யோசிப்ப. குடிச்சு முடிச்சதும் உங்க அம்மாவைக் கூப்பிட்டு எங்க ரெண்டு பேர் கிட்டயும் பேசுவ. அதான் இந்த வாட்டி நானே உங்க அம்மாவைக் கூப்பிட்டுட்டேன்.” என அவர் சிரித்தபடி கூற,

“பேசாம என்னை சைக்காலஜி படிக்க வச்சதுக்கு பதிலா நீங்க படிச்சுருக்கலாம் பா.” என இவள் கூறி கொண்டிருக்க சுப்புவும் வந்து அமர்ந்தார்.

“சொல்லு டி சீக்கிரம். வேலை இருக்கு.” என சுப்பு கூற அவளுக்கோ மனதில் தயக்கம் இருந்தது. காதல் விஷயமல்லவா தயக்கம் இருக்க தானே செய்யும். இவளின் தயக்கத்தைக் கண்ட சுப்புவோ,

“என்னங்க நம்ம பொண்ணு ஏதோ பெருசா பிளான் பண்ணி வச்சுருக்கா” என சுப்பு கூற மீண்டும் அதிர்ச்சியாக,

“ஹே என்ன நீங்க? என்னை ஏதாவது பெர்பார்மன்ஸ் பண்ண விடுறீங்களா. நீங்களே எல்லாம் கண்டுபிடிச்சா அப்போ நான் என்ன தான் பண்றது.” என வெளியில் செல்லமாக கோபித்தாலும் மனதினுள், ‘இவ்ளோ நல்ல என்னைப் புரிஞ்சு வச்சுருக்குறவங்க கிட்ட நான் ஏன் சொல்ல தயங்கணும்.’ என நினைத்துவிட்டு,

“சரி சொல்றேன். நீங்க ரெண்டு பேருமே என் மேல ரொம்ப நம்பிக்கை வச்சிருக்கீங்க. அது எனக்கு நல்லாவே தெரியும். அதே மாதிரி நான் எது செஞ்சாலும் அதை ஏத்துப்பீங்களா.” என அவள் தயங்கியவாறு கேட்க,

“சொல்லு மா. எங்களுக்கு உன் மேல நம்பிக்கை இருக்கு. நீ என்ன பண்ணாலும் அது சரியா தான் இருக்கும். தயங்காம சொல்லு.” என வெங்கடேசன் கூற,

“இப்போ கூட நீ எதைப் பத்தி பேச போறன்னு எனக்கு தெரியுது. இருந்தாலும் சரி நீ தான பெர்பாமன்ஸ் பண்ண விட சொன்ன. அதான் சொல்லாம இருக்கேன்.” என சுப்பு கூற,

“தெரியுமா? எங்க சொல்லு பாப்போம்.” என மலர் கூற சுப்புவோ சற்றும் யோசிக்காமல்,

“யார் அந்த பையன்?” என்றிட அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றுவிட்டாள் மலர்.

“இங்க பாரு டி. நாங்க காதலுக்கு எதிரி எல்லாம் கிடையாது. நாங்களே காதலிச்சு தான் கல்யாணம் பண்ணிருக்கோம். உன் மனசை புரிஞ்சுக்காமையா இருப்போம்.” என சுப்பு கூற,

“ஆமா மலர். அம்மா சொல்றது தான் நானும் சொல்றேன். நீ காதலிக்குறது எங்களுக்கு பிரச்சனை இல்ல. ஆனால் நம்ம வாழ்க்கையை துணையை தேடும் போது சரியா தேர்ந்தெடுக்கணும். சரி சொல்லு. யாரு அந்த பையன்?” என வெங்கடேசன் கேட்க,

“அது வந்து பா. எதிர்த்த வீட்டுல இருக்காருல. இன்ஸ்பெக்டர் ரௌத்திரன். அவர் தான் பா.” என தயங்கி கூற,

“அடிப்பாவி. வந்து ஒரு வாரம் தான டி இருக்கும்.” என சுப்பு கேட்க,

“சுப்பு காதல்ங்குறது எப்போ வேணா வரலாம். அது தப்பு இல்ல. ஆனால் என்ன காரணத்துனால வந்துருக்குன்னு தான் நாம தெரிஞ்சுக்கணும்.” என வெங்கடேசன் கூறவும்,

“காதலுக்கு காரணம் தேவையா பா. காரணமில்லாம வரது தானே காதல்.” என மலர் கூற அவளை சிரிப்புடன் பார்த்து,

“இப்போ எனக்கு ஓகே மா. எங்க ஏதாவது காரணம் சொல்லி இதனால தான் காதலிக்குறேன்னு சொல்லிருவியோன்னு பயந்துட்டேன். சரி உன் காதலை சொல்லிட்டியா? அதை அவங்க ஏத்துக்கிட்டாங்களா?” என வெங்கடேசன் கேட்க,

“அது வந்து பா. நானே எனக்குள்ள இருந்தது காதல்னு நேத்து தான் உணர்ந்தேன். சொல்ல போனா அவருக்கு என் மேல காதல் வருமான்னு கூட எனக்கு தெரியல.” என இவள் கூற வெங்கடேசனோ,

“என்னமா சொல்ற?” என புரியாமல் கேட்டார்.

“ஆமா பா. நான் உங்க கிட்ட நான் அவரை காதலிக்குறேன். அவரையே எனக்கு கல்யாணம் பண்ணி வைப்பிங்களான்னு கேட்கல. நான் இனிமே தான் காதலிக்க போறேன். என் காதலை அவருக்கு புரிய வைக்க போறேன். எனக்கு காதலிக்க சம்மதம் கொடுப்பீங்களான்னு தான் கேட்குறேன்.” என மலர் கேட்க வெங்கடேசனும் சுப்புவும் ஒருவரையொருவர் பார்த்து தலை குனிந்துக் கொண்டனர். அதனைக் கண்டவளோ,

“உங்க ரெண்டு பேருக்கும் விருப்பம் இல்லையா?” என ஏக்கமாய் கேட்க,

“இல்ல மலர். நாங்க பார்த்த பார்வைக்கு சம்மதம் இல்லன்னு அர்த்தம் இல்ல. உனக்கு இப்போ இருக்குற இந்த தெளிவான சிந்தனை நாங்க உன் வயசுல இருக்கும் போது எங்களுக்கு இல்லாம போச்சேன்னு தான் நாங்க நினைக்குறோம். அப்படி இருந்திருந்தா இந்நேரம் நம்ம இப்படி தனியா வாழனும்னு அவசியம் இல்ல. எங்க பெத்தவங்களுக்கு நாங்க அவமானத்தை தான தேடி கொடுத்துருக்கோம்.” என வருத்தமாய் கூற,

“இல்ல சுப்பு. நான் இப்படி இருக்குறதுக்கு காரணம் என்னை வளர்த்த நீங்க ரெண்டு பேரும் தான. நீங்க என்கிட்டே ஒரு ஃபிரண்டா தானே நடந்துக்குறீங்க. அதனால தான் என்னால உங்க கிட்ட எல்லாம் சொல்ல முடியுது. உங்களைப் பெத்தவங்க அந்த மாதிரி இருந்திருந்தா கண்டிப்பா நீங்களும் சொல்லிருப்பீங்க தானே. அதனால தப்பு உங்க மேல இல்ல. உங்கள பெத்தவங்க மேல.” என்றவள் அவர்களை ஆதரவாக அணைத்துக் கொள்ள அவள் கூறியதைக் கேட்ட இருவருக்கும் நம்ம வளர்ப்பு தப்பா போகல என்று பெருமிதம் வந்தது.

கடவுளை பார்த்ததில்லை
இவளது கண்கள் காட்டுதே
பாசத்தின் முன் இன்று உலகின் அறிவுகள் தோற்குதே
விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே

எனும் பாடல் வரிகளுக்கு ஏற்ப மலர் ஓர் சிறந்த மகளாக இருப்பதாய் சுப்புவும் வெங்கடேசனும் மகிழ்ச்சியடைந்தனர்.

“சரி சொல்லுங்க சம்மதம் தானே.” என மலர் கேட்க,

“நல்ல பொண்ணு மா நீ. உலகத்துலயே காதலிச்சுக்கலாமான்னு பெத்தவங்க கிட்ட பெர்மிஷன் கேட்குற முதல் பொண்ணு நீயா தான் இருப்ப. சீக்கிரம் மாப்பிளை கிட்ட காதலை சொல்லு மா.” என வெங்கடேசன் கூற சுப்புவும் ஆமோதிப்பதாக தலையசைக்க மலரோ, “ரொம்ப தேங்க்ஸ் பா. தேங்க்ஸ் மா” என இருவரையும் கட்டிக்கொண்டாள்.

இது தான் இப்போதைய பிரச்சனை.
பெற்றவர்கள் பிள்ளைகளை முழுதாக நம்பினாலே போதும். பிள்ளைகள் கண்டிப்பாக எந்த ஒரு விடயத்தையும் தயங்காமல் கூறுவார்கள். எப்போதுமே நாங்கள் உன் பெற்றவர்கள் என்று கண்டிப்பை மட்டுமே கொடுத்து எட்ட நின்று கொள்கிறார்கள். நண்பர்களாக பாவித்து சற்று இறங்கி வந்து மனம்விட்டு பேசினாலே பிள்ளைகள் தடம் மாறி போக மாட்டார்கள். அதே போல் பெற்றவர்களை தலைக் குனியவும் வைக்க மாட்டார்கள்.

மலர் எதேர்ச்சையாக வெளியே வர அப்பொழுது தான் ஸ்டேஷன் கிளம்புவதற்கு தன் வண்டியை வீட்டிற்கு வெளியே எடுத்து நிறுத்திக் கொண்டிருந்தான். அவனைக் கண்டவளுக்கு மனதில் ஆயிரம் பட்டாம்பூச்சி பறக்க அவனையே காதலாக பார்த்தாள். பின் அவனை வம்பிழுக்கும் பொருட்டு அவனருகில் சென்றவள்,

“குட் மார்னிங் மிஸ்டர் ஈபிள் டவர்.” என்க, அவனோ இவளை ஒருமுறை நிமிர்ந்து பார்த்துவிட்டு தன் பணியைத் தொடர்ந்தான்.

‘சார் பதில் சொல்ல மாட்டடீங்களோ. இப்போ பாருங்க’ என்று நினைத்தவள்,

“அச்சச்சோ என்ன கண்ணு இப்படி சிவந்திருக்கு. ராத்திரி முழுக்க என்னைப் பத்தியே நினைச்சு தூங்காம இருந்துருக்கீங்க போல.” என மலர் கேட்க அது அவனிடத்தில் வேலை செய்தது.

“ஹே என்ன உளறுற? நான் ஏன் உன்னை நினைச்சு தூங்காம இருக்கணும்.” என அவன் கோபமாய் கேட்க,

“ஓ அப்படியா. அப்போ நேத்து எதுக்கு நான் பாட்டு பாடும் போது அப்படி பார்த்திங்கலாம்?” என மலர் கேட்க,

‘ஐயோ கரெக்ட்டா அதையே கேட்குறாளே.’ என மனதில் நினைத்துவிட்டு,

“அது உன்னை ரசிச்சு பார்த்ததா நினைப்போ. ஏதோ பாட்டு நல்ல இருந்துச்சு. போயும் போயும் நீயா நல்லா பாடுறன்னு கொஞ்சம் ஆச்சர்யமா பார்த்தேன் அவ்ளோ தான். எனக்கு வேலை இருக்கு. உன்கிட்ட வெட்டியா பேச எல்லாம் எனக்கு நேரம் இல்ல.” என கூறிக்கொண்டு அவன் கிளம்ப போக,

‘ஐயோ கிளம்ப போறானே மலரு ஏதாவது யோசிச்சு அவனை பேச வை’ என மனதில் நினைத்துக் கொண்டிருக்க சட்டென யோசனை தோன்ற,

“அந்த மதுரை மினிஸ்டர் மருதநாயகம் பையனை அர்ரெஸ்ட் பண்ணது நீங்க தானே.” என மலர் கேட்க மினிஸ்டர் பற்றி அவள் கூறியவுடன் தன் பைக்கை மீண்டும் ஸ்டான்ட் போட்டு நிறுத்தியவன்,

“ஆமா உனக்கெப்படி தெரியும். இந்த விஷயம் நியூஸ்ல கூட வரல. அப்புறம் எப்படி இங்க இருக்குற உனக்கு தெரிஞ்சுது?” என அவன் புருவம் இடுங்க கேட்டான்.

மௌனம் எரியும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
11
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்