Loading

மௌனம் 8

ராஜாவின் நண்பன் ஒருவன் அவனுக்கு அழைப்பு விடுத்திருந்தான். அழைப்பை ஏற்ற ராஜா,

“சொல்லு மச்சான். எப்படி இருக்க? பேசி ரொம்ப நாள் ஆச்சு.” என்றான்.

“ஏதோ இருக்கேன் டா. நீ எப்படி இருக்க?” என சோகமாய் அவனின் நண்பன் கேட்டான்.

“என்னாச்சு மச்சான்? ஏதும் பிரச்சனையா? ஏன் டல்லா பேசுற?”

“வீட்டுல ஒரு பிரச்சனை டா.”

“என்னடா பிரச்சனை?”

“எங்க அக்கா வீட்டுக்காரரோட அண்ணா இறந்துட்டாங்க டா ஆக்சிடென்ட்ல. அக்காக்கு கல்யாணம் ஆகி ஒரு மாசம் தானே ஆகுது. எங்க அக்கா கேட்டை நட்சத்திரம். கேட்டை நட்சத்திரம் இருக்குறவங்களை கல்யாணம் பண்ணா அவங்க கல்யாணம் பண்ணவங்களோட அண்ணன் உயிர்க்கு ஆபத்துன்னு ஏதோ ஜோசியர் சொன்னாராம். அதை சொல்லி அக்காவை இப்போ வீட்டுக்கு அனுப்பிட்டாங்க டா. அதான் கஷ்டமா இருக்கு.” என அவன் நண்பன் கூற இவனுக்கோ மனதில் பயம் தொற்றிக் கொண்டது.

‘நமக்கும் கேட்டை நட்சத்திரம் தான. அப்போ நான் ஹனிய கல்யாணம் பண்ணா ரௌத்திரனுக்கு …’ என நினைக்கவே ராஜாவிற்கு கதி கலங்கியது. அந்நேரத்தில் தான் ஒரு காவலதிகாரி என்பதை தாண்டி அவன் மனதில் பயம் தான் அதிகமாக இருந்தது.

“மச்சான் இருக்கியா? என்ன டா ஒன்னும் சொல்லாம இருக்க?” என அவனின் நண்பன் கேட்க அப்பொழுது தான் நினைவிற்கு வந்தவன்,

“இருக்கேன் டா. மச்சான் முதல்லயே ஜாதகம் பார்த்து தான டா கல்யாணம் பண்ணிருப்பாங்க.” என இவன் கேட்க,

“இல்ல டா அக்கா லவ் மேரேஜ் டா. ஜாதகம் எல்லாம் பார்க்கல.” என அவன் கூற இங்கே ராஜாவிற்கோ பயம் அதிகமானது.

“விடு மச்சான் எல்லாம் சரி ஆயிரும். எனக்கு ஒரு கால் வருது நான் உனக்கு அப்புறமா கூப்பிடுறேன்.” என கூறி தன் நண்பனின் அழைப்பைத் துண்டித்தவன் மிகவும் குழம்பி போய் அமர்ந்திருந்தான்.

பொதுவாகவே ராஜாவிற்கு கடவுள் நம்பிக்கை, ஜோதிட நம்பிக்கை எல்லாம் அதிகம் உண்டு. ஏனென்றால் இவன் பிறந்த நேரம் தான் இவன் பெற்றோர்களின் உயிரைக் காவு வாங்கியது என அவனை வளர்த்த அவனின் அத்தை அடிக்கடி கூறுவார். அவனை கடைமைக்கே என வளர்த்து வந்தார். இவ்வார்தைகளை தினமும் கேட்டு கேட்டு அவனால் அங்கு இருக்க முடியவில்லை. விவரம் தெரிந்தது முதல் தாமாக முன்னேறி பகுதி நேரமாக வேலைபார்த்து அதன் மூலம் படித்து உயர்ந்தவன், தன்னை வளர்த்ததுக்கு பலனாக இவன் சம்பாதிப்பதில் பாதியை தன் அத்தையிடம் கொடுத்துவிடுவான். மற்றபடி பெரிதாக அவர் குடும்பத்தோடு இவன் ஓட்டுவதில்லை.

சிறுவயதில் இருந்தே தான் பிறந்த நேரம் தான் தன் பெற்றோர் இறப்பிற்கு காரணம் என்ற கூற்று அவனின் ஆழ் மனதில் பதிந்திருக்க அதுவே அவன் கடவுள் ஜோதிடம் போன்றவற்றை நம்ப காரணமாயிற்று. ஒருகட்டத்தில் அவனின் மனமோ நிஜமாகவே தான் பிறந்த நேரம் தான் பெற்றோரை இழக்க காரணம் என நம்பிவிட்டது. காவலதிகாரியே ஆனாலும் நாட்பட்ட காயங்களின் வடு இன்னும் இருக்கும் தானே.

இப்பொழுது தான் விரும்பிய காதலியைக் கரம்பிடித்தால் தன் நட்சத்திரத்தினால் தன் நண்பனின் உயிருக்கு ஆபத்து என அறிந்தவனுக்கோ எங்கே நண்பனையும் இழந்து விடுவோமோ என்ற அச்சம் ஏற்பட்டது. ஜோதிடத்தை நம்புபவனுக்கோ முழுதாக ஜோதிடத்தை பற்றி தெரியாமல் இருந்ததும் விதியே.

காதலை விட நண்பனின் உயிரே முக்கியம் என நினைத்தவன் தன் காதலை தியாகம் செய்ய முடிவு செய்துவிட்டான். அன்றிலிருந்து தன் காதலை மறக்க முயற்சி செய்தான். ஆனால் பலன் என்னவோ பூஜ்யம் தான். மேலும் காதல் அதிகரித்ததே தவிர மறக்க முடியவில்லை. இருந்தும் தன் முடிவில் நிலையாக இருந்தான்.

ஒருகட்டத்திற்கு மேல் பிரிவின் வலி தாங்க முடியாமல் ஹர்ஷினி ராஜாவிற்கு மீண்டும் ரௌத்திரனிற்கு தெரியாமல் அவன் அலைபேசியில் இருந்து,

‘நாளைக்கு என்னை பார்க்க பார்க்குக்கு நீங்க வரணும். நான் உங்ககிட்ட பேசணும். அப்படி நீங்க வரலைனா பார்க்க்கு போன நான் திரும்பி வீட்டுக்கு வர மாட்டேன்’ என அனுப்பினாள் வேறு வழியின்றி. அப்பொழுது தான் அவன் வருவான் என்று நினைத்து. அதைக் கண்டு பதறியவனோ ‘நான் நாளைக்கு வரேன்’ என்று அனுப்பினான்.

மறுநாள் இருவரும் சந்தித்தனர். பல நாள் கழித்து சந்தித்த இருவரும் ஒருவருக்கொருவரை தத்தம் கண்களில் நிரப்பி கொண்டனர். சிறிது நேரத்திற்கு இருவரிடமும் அமைதி மட்டுமே நிலவியது. முதலில் ஆரம்பித்தது ராஜா தான்.

“சொல்லு ஹர்ஷினி என்ன விஷயம்? எதுக்கு வரலைன்னா வீட்டுக்கு போக மாட்டேன்னு சொன்ன.” என முயன்று சாதாரணமாக கேட்டான்.

“ஏன் ராஜ் இத்தனை நாள் என்னை பார்க்காதது பேசாதது உங்களுக்கு கஷ்டமாவே இல்லையா.” என கண்கலங்க ஹர்ஷு கேட்க,

“நீ என் பிரண்ட். அதனால மனசுக்குள்ள ஒரு சின்ன வருத்தம் இருந்துச்சு உன்கிட்ட பேசலைன்னு மத்தபடி ஒண்ணுமில்ல.” என எங்கோ பார்த்தபடி கூற,

“நான் உங்க பிரண்ட் மட்டும் தானா ராஜ்” என ஏக்கமாய் ஹர்ஷு கேட்டாள். அதில் ராஜாவிற்கு கண்கள் கலங்க அதனை அவளிடம் இருந்து மறைக்க,

“ரொம்ப வெயிலா இருக்குல ஹர்ஷு” என கேட்டபடி கூலிங்க் கிளாஸை எடுத்து மாட்டிக்கொண்டான். அவன் கேட்டதில் கோபம் வந்தாலும் அதனைக் கட்டுப்படுத்தியபடி,

“நான் உங்களுக்கு ஃபிரண்ட் மட்டும் தானான்னு கேட்டேன்” என மீண்டும் அழுத்தமாய் கேட்க,

“ஆமா ஹர்ஷு. அப்போ எனக்கு பிரண்ட். இப்போ என் நண்பனோட தங்கச்சியும் கூட. அவ்ளோதான். வேறென்ன?” என தன உணர்ச்சிகளை கட்டுப்படுத்தியவாறு ராஜா கூற,

“சரி நீங்க எப்படி நெனச்சிங்களோ எனக்கு தெரில. எனக்கு உங்களை பிடிச்சுருக்கு. உங்கள நான் சின்சியரா லவ் பண்றேன். ஐ லவ் யூ ராஜ்.” என உணர்வுபூர்வமாக ஹர்ஷினி தன் காதலை வெளிப்படுத்தினாள்.

“வாட் லவ்வா? என்ன ஹர்ஷினி இது? ஃபிரண்டா கொஞ்சம் கேரிங்கா பேசுனா லவ்னு சொல்லுவியா. உனக்கு என்ன வயசு ஆகுது. இன்னும் நீ படிச்சு கூட முடிக்கல. இதெல்லாம் இந்த வயசுல வர அட்ட்ரக்ஷன் தான். இந்த மாதிரி முட்டாள்தனமா யோசிக்காம படிக்குற வேலைய பாரு. ஒழுங்கா வீட்டுக்கு போ. எனக்கு வேலை இருக்கு நான் வரேன்.” தன் மனதைக் கல்லாக்கி கொண்டு அவன் செல்ல போக அவனைத் தடுத்தவளோ,

“முட்டாள்தனமா? என் காதல் உண்மையானது. அதை நான் உங்களுக்கு கண்டிப்பா புரிய வைப்பேன். நான் வரேன்.” என கூறி ஹர்ஷு முன்னே செல்ல போக ராஜாவோ,

“நேரா வீட்டுக்கு மட்டும் தான் போகணும்” என்றான் கண்டிப்பாக.

“உங்களுக்கு தான் என் மேல காதல் இல்லையே. அப்புறம் எதுக்கு இந்த அக்கறை.” என ஏளனமாய் கேட்க,

“காதல் இருந்தா தான் அக்கறை இருக்கணும்னு அவசியம் இல்ல. ஃபிரண்ட் மேலயும் அக்கறை உண்டு.”

“ஓ சரி. கவலைப்படாதீங்க நான் எங்கேயும் விழுந்து சாக மாட்டேன். உங்களை வர வைக்க தான் அப்படி சொன்னேன். ஏன்னா உங்க கூட சேர்ந்து நான் சந்தோசமா வாழனும். நான் வரேன்” என கூறிவிட்டு விறுவிறுவென திரும்பி பார்க்காமல் சென்றுவிட்டாள் ஹர்ஷினி. ராஜாவோ அவ்வாறே கண்கள் கலங்க அமர்ந்துவிட்டான்.

‘கடவுளே எனக்கு மட்டும் ஏன் இப்படியே நடக்குது. என் ஹனி கூட பேசுன கொஞ்ச நாள் தான் நான் அவ்ளோ சந்தோசமா இருந்தேன். அந்த சந்தோசம் கூட நீடிக்க விடாம பண்ணிட்டியே. என் ஹனிய நானே கஷ்டப்படுத்துறேன். சாரி ஹனி.’ என மனதினுள் நினைத்து காதலை சொல்லவும் முடியாமல் சொல்லாமல் இருக்கவும் முடியாமல் இருதலைக் கொள்ளியாய் தவித்து போனான்.

ஹோ… காதலின் அவஸ்தை
எதிாிக்கும் வேண்டாம்…
நரக சுகம் அல்லவா…
நெருப்பை விழுங்கிவிட்டேன் ஹோ…
அமிலம் அருந்தி விட்டேன்
நோயாய் நெஞ்சில் நீ நுழைந்தாய்…
மருந்தை ஏனடி தர மறந்தாய்…
வாலிபத்தின் சோலையிலே
ரகசியமாய் பூ பறித்தவள் நீ தானே…

இவ்வாறு அவள் காதலை சொல்வதும், வலியை அனுபவித்து வேறு வழியில்லாமல் இவன் நிராகரிப்பதுமாகவே ஒரு வருடம் கடந்தது. நடந்த அனைத்தையும் ராஜா மலரிடம் கூறி முடித்தான். அனைத்தையும் பொறுமையாக கேட்ட மலரோ,

“அண்ணா நான் ஒன்னு சொல்லவா?” என ராஜாவிடம் கேட்க,

“நீ என்ன கேட்க போறன்னு தெரியும் மா. இந்த காலத்துலயும் ஜோதிடம் எல்லாம் நம்புறீங்களான்னு தான கேட்க போற.” என அவளின் கேள்வியை அறிந்த ராஜா கேட்க,

“ஹ்ம்ம் ஆமாண்ணா” என்றாள்.

“இல்ல மா. என் நிலைமை யாருக்கும் புரியாது. ஒருவேளை நான் ஹர்ஷுவை கல்யாணம் பண்ண அப்புறம் எதார்த்தமா ரௌத்திரனுக்கு ஏதாவது ஆனா கூட என் மனசு என்னை குத்தியே கொன்னுரும். குற்ற உணர்ச்சியோட வாழ்நாள் முழுதும் என்னால வாழ முடியாது.” என வேதனையுடன் கூறினான்.

“இல்லண்ணா இருந்தாலும்” என அவள் மீண்டும் அதைக் கூறவர,

“ப்ளீஸ் மா. இந்த விஷயத்துல என்னை கம்பெல் பண்ணாத. சாரி மா.”

“சரி விடுங்க காலம் தான் இதுக்கு பதில் சொல்லணும். ஆனால் ஹர்ஷு உங்களை காதலிக்கிற மாதிரி காமிச்சுக்கவே இல்லையேண்ணா.” என மலர் தன் சந்தேகத்தைக் கேட்க,

“அது என்மேல கோபமா இருக்கா. சொல்லக்கூடாத வார்த்தையை என் ஹனியை பார்த்து நான் சொல்லிட்டேன்.” என அன்று மதுரையில் அவளிடம் அவன் பேசியதையும் ஏன் அவ்வாறு பேசினான் என்ற காரணத்தையும் மலரிடம் கூறுகிறான்.

“அண்ணா உங்களை நினைச்சா பெருமையா இருக்குண்ணா. உங்க நண்பன் மேல இருக்குற பாசத்துக்காக உங்க காதலை மறைச்சு காதலிக்கிட்டயே கெட்ட பெயர் வாங்கி எவ்ளோ பெரிய தியாகம். நீங்க ஃபிரண்டா கிடைக்க அவர் கொடுத்து வச்சிருக்கணும். ஆனாலும் ஹர்ஷுவும் பாவும்.” என கூறிக்கொண்டிருக்கும் பொழுது எதேர்ச்சியாக மலர் திரும்ப அங்கே ஹர்ஷு நின்றிருந்தாள். மலரின் உதடுகள் தானாக “ஹர்ஷு” என அதிர்ச்சியில் கூறின.

“ஹர்ஷு நீ எப்போ வந்த?” என திக்கி திணறியபடி மலர் கேட்க,

“ஏன் டி இவ்ளோ ஷாக் ஆகுற?” என்றாள் ஹர்ஷினி.

“அது திடீர்னு திரும்பும் போது வந்து நின்னியா அதான் பயந்துட்டேன்.”

“அட லூசு. நான் இப்போ தான் வரேன். நீ என்னைப் பார்த்து ஷாக் ஆகுறதைப் பார்த்து நான் பயந்து அங்கேயே நின்னுட்டேன்.” என ஹர்ஷு கூற அப்பொழுது தான் மலர்க்கு மூச்சே வந்தது. ‘நல்லவேளை பேசுனதை எதுவும் கேட்கலை’ என மனதில் நினைத்தபடி

“சரி நான் அப்புறம் கால் பண்றேன்.” என கூறி ராஜாவின் அழைப்பைத் துண்டித்தாள்.

“யாரு டி கால்ல?” என ஹர்ஷு கேட்க,

“அது ஃபிரண்ட் டி.” என பொய் கூற ஹர்ஷுவும் நம்பிவிட்டாள்.

“ஆமா கொஞ்சம் நேரம் முன்னாடி எங்க வீட்டுக்கு வந்துட்டு உடனே கிளம்பிட்ட வீட்டுக்குள்ள வரவே இல்லன்னு பாட்டி சொன்னாங்க. அதான் என்னன்னு கேட்டுட்டு போலாம்னு வந்தேன்.” என ஹர்ஷு கூற மலருக்கோ ரௌத்திரனை வெகு அருகில் பார்த்தது ஞாபகம் வர ஏனோ அவளின் முகம் சிவந்தது. அதனை நினைத்தபடி அவ்வாறே நிற்க,

“அடியே உன்ன தான். என்னாச்சு? நான் பாட்டுக்கு கேட்டுகிட்டே இருக்கேன். நீ பாட்டுக்கு நிக்குற.” என மீண்டும் ஹர்ஷு கேட்கும் போது தான் மலர் நினைவிற்கு வந்தாள் .

“அது ஒன்னுமில்ல டி சும்மா தான். ஃபிரண்ட் கிட்ட கால் பேசணும்னு வந்துட்டேன்.” என மலர் கூற,

“ஓ அப்படியா சரி டி.” என்றாள். பின் மலரோ,

“ஆமா நான் கேக்கணும்னு நினைச்சேன். உங்க அண்ணாக்கு சிரிக்குறதுன்னா என்னன்னு தெரியாதா? எப்போ பார்த்தாலும் முறைச்சுக்கிட்டே இருக்காரு. ஏன் அப்படி?” என மலர் கேட்க,

“அப்படி எல்லாம் இல்ல டி. என்னவோ தெரில. அப்படியே பழகிடுச்சு போல அண்ணனுக்கு. ஆனால் பார்க்க மட்டும் தான் டி அப்படி. பாசம் எல்லா மனசுக்குள்ளேயே வச்சுக்கிடும். பாட்டி கூட இதை சொல்லி திட்டுவாங்க. ஆனால் கேட்காது.” என ஹர்ஷு கூற,

“அதெப்படி டி. காரணம் இல்லாம ஒருத்தர் இப்படி இருக்க வாய்ப்பு இல்ல. கண்டிப்பா இதுக்கு பின்னாடி ஏதோ காரணம் இருக்கும்.” என மலர் கேட்க ஹர்ஷுவோ, ‘காரணம் இருக்கு மலர். ஆனால் அது யாருக்கும் தெரிய கூடாதுன்னு அண்ணா சொல்லிருக்கு.’ என மனதில் நினைத்துவிட்டு வெளியே ஒன்றுமில்லை என கூறிவிட்டாள். இவ்வாறு இங்கே இவர்கள் பேசிக்கொண்டிருக்க, திருநெல்வேலியின் காவல் ஆய்வாளராக காவல் நிலையத்திற்குள் காலடி எடுத்து வைத்தான் ரௌத்திரன்.

தொட்டா தீப்பொறிதாண்டா
சுட்டா எாிமலைதாண்டா
நொடியில் இடி இடிப்பேண்டா
வாடா……
சுத்தும் பூமிய மாத்தி
சட்ட காலர ஏத்தி
வந்தா சாத்துவேன் சாத்தி
போடா…..

எனும் வரிகளுக்கேற்ப சிங்கநடை போட்டு உள்ளே வந்தான் ரௌத்திரன். அவனின் கம்பீரத்தையும் சிரிப்பில்லா முகத்தையும் கண்ட மற்ற அதிகாரிகள் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.

“யோவ் ஏட்டு. என்னையா இவன் இம்புட்டு விறைப்பா வந்து நிக்குறான்.” என சப் இன்ஸ்பெக்டர் ஏட்டய்யாவிடம் கேட்க,

“ஆமா சார். இந்த இன்ஸ்பெக்டர் ரொம்ப ஸ்ட்ரிக்டாம். இனிமே நமக்கு ஹிட்லர் ஆட்சி தான் சார்.” என ஏட்டு கூற,

“என்னாய்யா பயம் காட்டுற. மருந்துக்கு கூட சிரிக்க மாட்டான் போலயே.” என குசுகுசுவென இவர்கள் பேச ரௌத்திரன் பார்த்த ஒரு பார்வையில் கப்சிப் என அடங்கி போயினர் இருவரும். பிறகு ரௌத்திரன் முன் வந்த சப்-இன்ஸ்பெக்டரோ இன்ஸ்பெக்டரான ரௌத்திரனுக்கு சல்யூட் வைத்து விட்டு,

“வெல்கம் சார். ஐ அம் சப் இன்ஸ்பெக்டர் ரஞ்சித்.” என ரௌத்திரனை வரவேற்க அவனோ சிறு தலை அசைப்பை மட்டுமே பதிலாக கொடுத்தான். அதற்கு காரணம் பதவி திமிரல்ல. சப் இன்ஸ்பெக்டரின் குசுகுசு பேச்சினால் அவனின் அலட்சியத்தினை உணர்ந்ததால் மட்டுமே.

“எல்லாரும் கவனிங்க. இந்த வரவேற்பு உபசரிப்பு எல்லாம் கொடுக்கவோ வாங்கிக்கவோ அவசியம் இல்ல. என்னை பொறுத்தவரை அதெல்லாம் வெட்டி பந்தா. நம்ம கடமையைப் பார்க்க நாம வந்துருக்கோம். அதுக்கு எதுக்கு வரவேற்பு. அதே மாதிரி எனக்கு பின்னாடி பேசுற பழக்கம் சுத்தமா பிடிக்காது.” என கூறி ஒரு நிமிடம் ரஞ்சித்தை பார்க்க அவனோ தலை குனிந்து கொள்ள மீண்டும் தன் உரையைத் தொடங்கினான்.

“அதனால எது கேட்கணுனாலும் என்கிட்டே நேரடியா கேளுங்க. ஆமா நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட் தான். எல்லாம் கரெக்ட்டா இருக்கணும்னு நினைப்பேன். எனக்கு கோபம் ரொம்ப வரும். அதனால ஏதாவது விபரீதமா செஞ்சு என் கோபத்துக்கு ஆளாகாதீங்க. இதுவரை நீங்க எப்படி இருந்திங்களோ ஐ டோன்ட் கேர். பட் டியூட்டில ஏதாவது தப்பு நடந்துச்சு…” என இழுத்தபடி கூறி கொண்டு ஒரு ருத்ர பார்வைப் பார்க்க அனைவருக்கும் சப்தமும் அடங்கிப்போயின.

“கண்டிப்பா சார். தப்பு ஏதும் நடக்காது.” என சப் இன்ஸ்பெக்ட்டர் நடுங்கியபடி கூற,

“குட். பெண்டிங் ஃபைல்ஸ் எல்லாம் என் டேபிளுக்கு கொண்டு வாங்க.” என கூறிவிட்டு தன் இருக்கையில் சென்று அமர்ந்தான் ரௌத்திரன். அவனின் ஆணைக்கிணங்க கோப்புகளைக் கொண்டு வந்த கான்ஸ்டபிள் அவனிடம் கொடுத்துவிட்டு,

“சார் உங்களுக்கு காபி சொல்லட்டுமா இல்ல டீ சொல்லட்டுமா. சொன்னிங்கன்னா ஏட்டையா வாங்கிட்டு வந்துருவாரு.” என பவ்யமாய் கேட்க அவனோ அவரை ஒரு பார்வை பார்த்துவிட்டு,

“நமக்கு காபி டீ வாங்கி கொடுக்குறதுக்கு தான் அவருக்கு அரசாங்கத்தில இருந்து சம்பளம் கொடுக்குறாங்களா மிஸ்டர்….” என அவர் பெயர் தெரியாமல் ரௌத்திரன் இழுக்க,

“தங்கப்பன் சார்.” என தன் பெயரைக் கூற,

“எஸ் தங்கப்பன். சொல்லுங்க.”என ரௌத்திரன் கேட்க,

“சாரி சார். பழக்க தோஷத்துல கேட்டுட்டேன்.” என அவர்கூற,

“நான் மறுபடியும் சொல்றேன். இதுக்கு முன்னாடி எப்படியோ. ஆனால் இனிமே இப்படி நடக்கக்கூடாது. பக்கத்துல தான டீ கடை இருக்கு. எனக்கு வேணுங்குற நேரம் நான் போய் குடிச்சுக்குறேன். யூ மே கோ.” என கூறிவிட்டு தன் முன்னிருந்த கோப்புகளைப் படிக்க ஆரம்பித்தான். நடந்தவற்றை அவனின் அறை வாசலில் இருந்து கேட்டுக்கொண்டிருந்த ரஞ்சித்தும் ஏட்டய்யாவும் பேசிக்கொண்டிருந்தனர்.

“யோவ் ஏட்டு என்னய்யா இவன் ஒரு டீக்கே இந்த அளவு பேசுறான். நான் அந்த மினிஸ்டர் ஆளுன்னு தெரிஞ்சா என் சோழிய முடிச்சுருவான் போலயே.” என கடுப்பாகி கேட்க,

“ஆமா சார். அவர்கிட்ட எதுக்கும் நீங்க ஜாக்கிரதையா இருங்க. மினிஸ்டரையே வந்து பாருன்னு நின்னவர். நம்ம மட்டும் எம்மாத்திரம்.” என ஏட்டய்யா கூற,

“ஆமா யா. நீ என்ன அவனை சாரு மோருனு கூப்பிட்டுட்டு இருக்க. முன்ன இருந்தவனை அவன் இவன்னு தான பேசிட்டு இருந்த. அப்புறம் என்ன?” என ரஞ்சித் கேட்க,

“நானா சார் பேசுறேன். பயத்துல மரியாதை தானா வருது.” என நடுங்கியபடி கூற,

“நீ சரியான பயந்தாங்கொலி யா.” என கூறிக்கொண்டிருக்கும் போதே உள்ளிருந்து “ரஞ்சித்” என ரௌத்திரன் கர்ஜிக்கும் குரல் கேட்க, “இதோ வரேன் சார்” என புயல் வேகத்தில் உள்ளே நுழைந்தான் ரஞ்சித்.

‘நீ மட்டும் பயப்படாம என்ன பண்றியாம்?’ என மனதில் நினைத்து சிரித்த ஏட்டையா தன் இருக்கையில் அமர்ந்தார்.

‘என்ன கேட்க போறானோ?’ என்ற பயத்துடன் உள்ளே நுழைந்தான் ரஞ்சித்.

“கூப்பிட்டீங்களா சார்?” என அவன் கேட்க,

“மிஸ்டர் ரஞ்சித். இதெல்லாம் மைனர் கேஸஸ் தான. இன்னும் ஏன் முடிக்காம பெண்டிங்ல இருக்கு.” என அவனை கேள்வி கேட்க,

“சார் அது வந்து… மைனர் கேஸ் தான அதான் சார்.” என இழுத்து இழுத்து ரஞ்சித் கூற,

“ஓ மேஜர் கேஸ் வந்தா மட்டும் தான் சார் டீல் பண்ணுவீங்க. அப்படி தான” என கேள்விக்கணைகளைத் தொடுக்க ரஞ்சித்தோ பதில் தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தான்.

“சாரி சார். இனிமே இப்படி நடக்காது. உடனே உடனே முடிச்சுரலாம்.” என அவன் கூற அவனை முறைத்துவிட்டு,

“இன்னைக்குள்ள இந்த கேஸ் முடிக்கணும். அக்கியூஸ்டே கண்டுபிடிச்சு கூட்டிட்டு வாங்க. அண்ட் கம்பளைண்ட் கொடுத்தவங்களை வர சொல்லுங்க.”

இவ்வாறு வந்த முதல் நாளே தன் பணியை செவ்வனே செய்ய ஆரம்பித்தான் ரௌத்திரன். கேஸ் விஷயமாக வெளியே சென்ற ரஞ்சித்துக்கு மதுரை மினிஸ்டர் மருதநாயகம் அழைத்தார். அழைப்பை ஏற்றவனோ,

“ஐயா சொல்லுங்கய்யா” என்றான்.

“என்னய்யா? அந்த ரௌத்திரன் வந்துட்டான்னா? ரொம்ப தய்யா தக்கான்னு குதிச்சுருப்பானே.” என அவர் கேட்க,

“ஆமா ஐயா. வந்த அன்னைக்கே கேச முடி அதை முடின்னு உயிரை வாங்குறான் யா.” என சலிப்பாய் ரஞ்சித் கூற,

“ஊரு உலகத்துலயே அவன் ஒருத்தன் தான் போலீஸ்ங்குற மாதிரி பண்ணிட்டு திரியுறான். சரி நீ வேலையை பார்க்கேன்ன்னு சொல்லி அவனைக் கோட்டை விட்டுறாத. எங்க போறான் வரான்னு நீ தான் எனக்கு சொல்லணும் சொல்லிட்டேன். கட்டு கட்டா வாங்குனது ஞாபகம் இருக்குல.” என மிரட்டியபடி மினிஸ்டர் கேட்க,

“அதெப்படியா மறப்பேன். வாரி வழங்குன வள்ளலாச்சே. சொன்ன மாதிரி இந்த அடிமை செஞ்சு முடிப்பேன் ஐயா” என ரஞ்சித் கூற,

“நீ பொழச்சுக்குவயா. சரி சரி நான் வைக்குறேன்.” என கூறி மினிஸ்டர் அழைப்பைத் துண்டித்தார். அவ்வாறே அந்த நாள் கடக்க,

அன்றைய பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்ல ஆயத்தமான ரௌத்திரனிடம் ரஞ்சித் வந்து,

“சார் அப்போ நானும் கிளம்பலாமா சார்?” என கேட்க,

“ஓகே ரஞ்சித். பெண்டிங் நாளைக்கு வந்து பாருங்க.” என சொல்லிவிட்டு இரண்டடி முன்னே சென்ற ரௌத்திரன் மீண்டும் பின்னே வந்து,

“ஆமா ரஞ்சித் கேட்கணும்னு நினைச்சேன்.” என அவன் முகம் நோக்க அவனோ,

“சொல்லுங்க சார். என்ன கேட்கணும்” என அவன் கேட்டுவிட்டு கேள்வியாய் பார்க்க,

“மினிஸ்டர் கிட்ட என்னை பத்தின தகவல் எல்லாம் சிறப்பா கொடுத்தாச்சா மிஸ்டர் ரஞ்சித்” என நக்கல் கலந்த தோனியில் அதே சமயம் கெத்தாகவும் கேட்க ரஞ்சித் அதிர்ச்சியிலும் பயத்திலும் உறைந்து போய் நின்றான்.

மௌனம் எரியும்…

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
16
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்