மௌனம் 7
“என்னண்ணா பதிலே காணும். சொல்லுங்க நீங்க ஹர்ஷுவ லவ் பண்றீங்க தானே” என மலர் மறுபடியும் கேட்க,
‘இவளுக்கு எப்படி தெரிஞ்சுது.. ஒருவேளை ஹனி சொல்லிருப்பாளோ?’ என்று நினைத்தவன்,
“அது.. அது.. இல்ல நான் எப்படி ஹர்ஷுவ லவ் பண்ணுவேன். அதெல்லாம் இல்ல மா. அவ தான் ஏதோ சின்ன பிள்ளை தனமா என்னை லவ் பண்றேன்னு சொல்லிட்டு இருக்கா. நீ அவ சொல்றத எல்லாம் நம்பாத.” என பதட்டத்தில் உளற இப்பொழுது அதிர்ச்சியாவது மலரின் முறையானது.
“ஹர்ஷு உங்கள லவ் பண்றாளா? என்னண்ணா சொல்றீங்க?” என மலர் குழம்பி கேட்க,
“என்ன? உனக்கு அப்போ நீ ஹர்ஷு சொல்லி என்கிட்ட கேட்கலையா?” என ராஜா கேட்க,
“அவ என்கிட்ட எதுவும் சொல்லல.”
‘ச்ச நம்மளே உளறிட்டோமே.’ என தன்னை நொந்தவன் என்ன கூறுவது என முழித்து கொண்டிருந்தான். பின்,
“சரி எதை வச்சு நான் அவளை லவ் பண்றேனான்னு கேட்குற?” என ராஜா கேட்க,
“நேத்து முழுக்க உங்களை கவனிச்சுட்டு தான் இருந்தேன். ஒவ்வொரு தடவையும் ஹர்ஷு உங்களை தாண்டி போகும் போது உங்க கண்ணுல காதலுக்கான ஏக்கம் தெரிஞ்சுது. அதை வச்சு தான் கேட்டேன்.” என மலர் தன சந்தேகத்தைக் கேட்க,
“இல்ல அப்படியெல்லாம் இல்ல மா. அவ என் நண்பனோட தங்கச்சி.” என உண்மையை மறைத்துக் கூற,
“சரி ஓகே என்கிட்ட சொல்ல இஷ்டம் இல்ல போல உங்களுக்கு. சாரி ணா ” என மலர் பாவமாக பேச,
“என்னமா நீ இப்படி சொல்ற? நிஜமாவே” என கூற வந்தவனை தடுத்தவள்,
“இங்க பாருங்க. நான் சைக்காலஜி படிச்சவ. என்னை ஏமாத்த முடியாது.” எனவும் ராஜாவோ,
‘என்ன செய்றது இப்போ? சரி நமக்கும் மன்ஸுக்குள்ளேயே இதை யோசிச்சு புழுங்குறது கஷ்டமா தான இருக்கு. யார்கிட்டயாச்சு சொன்னா கொஞ்சம் பெட்டரா இருக்கும்’ என்று நினைத்தவன்,
“சரி சொல்றேன். ஆனால் நன் சொல்ற விஷயம் உன்னை தவிர வேற யாருக்கும் தெரியக் கூடாது. என்மேல சத்தியம் பண்ணு.” என ராஜா கேட்க,
“சரி ணா. நான் யார்கிட்டயும் சொல்லமாட்டேன்.”
“ஆமா. நான் ஹனிய காதலிக்குறேன். ஆனால் என்னை விட என் ஹனி என்னை உயிருக்குயிரா காதிலிக்குறா. நான் அவளை லவ் பண்றது அவளுக்கு தெரியாது. தெரியவும் வேணாம்.” என ராஜா கவலையாகக் கூற,
“ஏன் ணா அப்படி சொல்றீங்க? ரௌத்திரன் ஒத்துக்க மாட்டாருன்னு பயப்படுறீங்களா?” என மலர் குழப்பமாய் கேட்க,
“இல்ல மா விஷயம் தெரிஞ்சா அவன் கல்யாணமே பண்ணி வச்சுருவான். அது தான் என் பயமே.” என மேலும் அவளை குழப்பும் விதமாக ராஜா கூற மலருக்கு தான் தலையைப் பிய்த்து கொள்ளலாம் போல் இருந்தது.
“கல்யாணம் பண்ணிவச்சா நல்லதுதானே. எதுக்கு பயடுறீங்க? தலையே சுத்தது எனக்கு. ப்ளீஸ் அண்ணா தெளிவா சொல்லுங்க. எனக்கு ஒண்ணுமே புரியல.” என மலர் கேட்க ராஜா நடந்த அனைத்தையும் கூற ஆரம்பித்தான்.
_____________________
ஒரு வருடத்திற்கு முன்பு ஹர்ஷினி கல்லூரி மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்ண்டிருந்த சமயம் மதுரை மாநகரின் பிரபலமான உணவகம் ஒன்றில் ஹர்ஷினி தனது தோழிகளுடன் உணவருந்திக் கொண்டிருந்தாள்.
“ஹே கவி எனக்கு ரோஸ்மில்க் குடிக்கணும் போல இருக்கு.” என ஹர்ஷு தன் தோழி கவியிடம் கூற,
“ஆமா டி எனக்கும் தான். ரெண்டு சொல்லு குடிச்சுருவோம்” என கவி கூற ஹர்ஷினி வெய்ட்டரை அழைத்து இரண்டு ரோஸ்மில்க் சொல்ல அவரோ,
“சாரி மேடம் ரோஸ்மில்க் ஒரு கிளாஸ் தான் இருக்கு. வேற லெமன் ஏதாவது கொண்டு வரட்டுமா?” என கேட்க கவியோ,
“இல்ல ணா வேணாம். ஒரு ரோஸ்மில்க் மட்டும் கொண்டு வாங்க.” என கவி கூறினாள்.
“என் மச்சிக்கு என் மேல எவ்ளோ பாசம். அந்த ஒன்னு எனக்காக சொல்லிருக்கா.” என ஹர்ஷினி கூற,
“ஆமா ஆமா” என கூறி நமட்டு சிரிப்பு சிரித்தாள் கவி. வெய்ட்டர் கொண்டு வந்த ரோஸ்மில்க்கை முதலில் கவி கையில் எடுக்க அவளையே பாவமாக ஹர்ஷினி பார்க்க அவளோ,
“டீச்சர் சொல்லிக்கொடுக்கல ஷேரிங்….” என கூறிவிட்டு தன் பங்கைக் குடிக்க ஆரம்பித்தாள் கவி. பாதியையும் தாண்டி கவி குடிக்க அதில் கடுப்பான ஹர்ஷினியோ அதை வாங்குகிறேன் என்று சண்டைப் போட்டு வாங்குகையில் பக்கத்துக்கு டேபிளில் அமர்ந்திருந்தவனின் மேல் கொட்டிவிட்டாள்.
“ஹே ஹர்ஷு யார் மேலயோ கொட்டிட்ட டி” என கவி பதட்டமாய் கூற, அப்பொழுது தான் திரும்பி பார்த்தாள் ஹர்ஷினி. பார்த்தவளின் மனதிலோ பயம் தொற்றி கொண்டது. காக்கி சட்டையோடு அமர்ந்திருந்தவனின் மேல் தான் கொட்டிவிட்டிருந்தாள்.
“ஆத்தி போலீஸ் கிட்டயா நம்ம சேட்டையைக் காமிச்சுருக்கோம். போச்சு செத்தோம்.” என மனதில் நினைத்துக் கொண்டு மிரண்டு போய் பார்த்தாள். வேறு யாரு நம் ராஜா தான் அது.
“ஹலோ பப்ளிக் பிளேஸ் இப்படி தான் பிஹேவ் பண்ணுவிங்களா?” என அவன் கேட்க,
“சாரி சார். ஏதோ தெரியாம கொட்டிட்டேன்.” என அவள் பாவமாக கூற,
“ஆமா இதே ஒரு பையன் பண்ணிருந்தா அவனை சும்மா விட்ருப்பீங்களா. சாரி கேட்டா எல்லாம் சரி ஆகிருமா. இப்படி யூனிபோர்ம்ல கொட்டி வச்சுருக்க. இப்போ நான் எப்படி ஸ்டேஷன் போகிறது?” என கடுப்பாக பேச,
“ஹலோ ஹலோ என்ன? அதான் தெரியாம பண்ணேன்னு சொன்னேன்ல. ரொம்ப தான் பேசுறீங்க.” என இவளும் பதிலுக்கு பேச,
“ஓ பண்றதும் பண்ணிட்டு இப்போ ஒரு போலீசையும் எதிர்த்து பேசுற” என அவளிடம் மல்லுக்கு நின்னாலும் கண்களோ அவளை ரசிக்கவே செய்தது காரணமின்றி. இவளை இவ்வாறு விட அவனின் மனது கேட்கவில்லை. வம்பிழுக்கவே தோன்றியது.
“போலீஸ்னா அதுக்காக சும்மா இருக்கணுமா. எங்களுக்கும் போலீஸ் எல்லாம் தெரியும்.” என ஹர்ஷு மீண்டும் மல்லுக்கு நிக்க அவனோ அவள் தைரியமாக பேசுவதை இல்லை இல்லை சண்டையிடுவதை மனதினுள் ரசித்தான். பின்பு,
“இதுக்கு செக்ஷன் இருக்கு தெரியுமா. பொது இடங்களில் தகாத முறையில் நடந்து கொண்டால் ஈபிகோ செக்ஷன் 294ன் படி அவர்களுக்கு மூன்று மாதம் சிறை தண்டனையோ அல்லது அபராதமோ வழங்கப்படும். அப்படி தான சார்” என தன் உடன் வந்த மற்ற அதிகாரியிடம் கேட்க அவரும் இவன் விளையாட தான் செய்கிறான் என தெரிந்து “ஆமா சார்” என்றார். இதனைக் கேட்டவளோ சிறிது நடுங்கி தான் போனாள்.
“சார் சார் என்ன கேஸ்னு எல்லாம் சொல்றீங்க. உங்க யூனிபோர்ம் நான் கூட துவைச்சு தரேன். ப்ளீஸ் சார் அந்த மாதிரி ஏதும் பண்ணிடாதீங்க. ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்” என குழந்தையாக கெஞ்சுபவளிடம் தன் மனதைப் பறிகொடுத்தான். பின் அவளிடம்,
“சரி உன்னை பார்த்தா பாவமா இருக்கு. உனக்காக சின்ன பனிஷ்மென்ட் கொடுக்குறேன். நீ என்ன பண்ற வீட்டுக்கு போயிட்டு ஒரு பேப்பர்ல இனிமேல் பொது இடங்களில் அமைதியாக நடந்து கொள்வேன் அப்படின்னு ஒரு நூறு தடவை இம்போசிஷன் எழுதி இந்த நம்பருக்கு போட்டோ எடுத்து அனுப்பிரு. ஓகே.” என கூறிக் கொண்டு தன் விசிட்டிங் கார்டை அவளிடம் கொடுத்தான். அவளோ,
“சார் எனக்கொரு டவுட். நீங்க போலீஸ் தான. அப்புறம் ஏன் டீச்சர் மாதிரி இம்போசிஷன் கொடுக்குறீங்க.” என தன் அதிமுக்கிய சந்தேகத்தைக் கேட்க கவியோ,
“அடியே அவரே இறங்கி வராரு உனக்கு இந்த டவுட் தேவையா?” என கேட்க தன்னை நொந்து கொண்டாள் ஹர்ஷினி.
“ஓ அப்போ வா ஸ்டேஷன்க்கு. போலீஸ் மாதிரி நடந்துக்குறேன்” என அவன் கூற,
“இல்ல இல்ல நான் எழுதி அனுப்புறேன்.” என ஹர்ஷினி பயந்து கூற,
“ஹ்ம்ம் அது. ஆமா உன் பேர் என்ன?” என ராஜா கேட்க,
“ஹர்ஷினி” என பாவமாக கூறுகிறாள். இவனோ தன் மனதில் ஹனி என பதிவு செய்துகொண்டான்.
“சரி கிளம்பு.” என சொல்லவும் ஹர்ஷினியும் அவளது தோழிகளும் இடத்தைக் காலி செய்தனர். அன்றைய நாள் முழுதும் ஹர்ஷினியின் நினைவே ஓடியது ராஜாவிற்கு. மாலை வீடு வந்தவளோ விறுவிறுவென உடை மாற்றிவிட்டு இம்போசிஷன் எழுதி ராஜாவின் நம்பருக்கு அனுப்பினாள். அவளின் குறுஞ்செய்திக்காக காத்திருந்தவனோ உடனே பார்த்தான்.
“பரவாயில்லயே கரெக்ட்டா அனுப்பிட்ட குட் கேர்ள்.” என அவன் அனுப்ப,
“தேங்க் யூ சார்.” என அனுப்பிவிட்டு பின்பு “உங்க பேரு என்ன சார் என கேட்க அவனோ ராஜா என அனுப்பினான். இவளும் ஓகே என்று அனுப்பியிருந்தாள். பின் அவன் எந்த குறுஞ்செய்தியும் அனுப்பவில்லை. அது முறையல்ல என்று நினைத்தான். அவனின் மனசாட்சியோ,
‘ஓ இப்போ தன் இது முறை இல்லன்னு தெரியுதா. இது நம்பர் கொடுக்குறதுக்கு முன்னாடியே தோணிருக்கணும்’ என குறைக் கூற.
‘நான் என்ன பண்ண? நான் ஏன் அப்படி பண்ணேன்னு எனக்கே தெரில. தோணுச்சு டக்குனு கொடுத்துட்டேன்.’ என மனசாட்சிக்கு காரணம் கூறிக்கொண்டிருந்தான்.
ஹர்ஷு அவனின் எண்ணை பதிவு செய்யவில்லை. ஆனால் அவனின் முகப்பு படம் அவளுக்கு காண்பித்தது. சிவப்பு வண்ண காலர் வைத்த டீ ஷர்ட் அணிந்து கண்ணில் கூலிங் க்ளாஸுடன் ஸ்டைலாக காரில் சாய்ந்த வண்ணம் இருந்தது அந்த படம். அதனை பார்த்தவளோ,
‘பரவாயில்ல நல்லா தான் இருக்காரு’ என தனக்குள்ளே கூறி சிறிது கொண்டாள்.
ரௌத்திரனும் ராஜாவும் பழகி அப்பொழுது சில நாட்களே ஆகியிருந்தது. ரௌத்திரனின் நேர்மை அங்கு நிறைய அதிகாரிகளுக்கு பிடிக்காமல் இருந்தது. ராஜா மட்டுமே ரௌத்திரனின் நேர்மைக்கு துணை நின்றான். அதுவே அவர்களுக்குள் நல்ல புரிதலை ஏற்படுத்தி நட்பாக மாறியது. ரௌத்திரனின் தங்கை ஹர்ஷினி என ராஜாக்கும், ராஜா ரௌத்திரன் வீட்டிற்கு வந்ததில்லை ஆதலால் ராஜா தன் அண்ணனின் நண்பர் என ஹர்ஷினிக்கும் தெரியவில்லை.
அவ்வாறே நாட்கள் செல்ல அவ்வப்போது தற்செயலாக ராஜாவும் ஹர்ஷினியும் அடிக்கடி சந்தித்தனர். அப்பொழுது தான் அவனின் நம்பரை தன் மொபைலில் ராஜ் என்று பதிவு செய்தாள். பிறகு அவர்களது உரையாடல்கள் அலைபேசியில் தொடர்ந்து கொண்டிருந்தது. அவனின் கண்ணியமான பேச்சும் அவனது குணமும் ஹர்ஷினிக்கு பிடித்து போனது. ராஜாவிற்கு ஆரம்பத்திலேயே அவளை பிடித்துவிட்டது. இப்பொழுது கூறவா வேண்டும். இவ்வாறு இவர்களின் உரையாடல் நாளடைவில் அலைபேசியில் அழைத்து பேசும் அளவிற்கு வளர்ந்தது. ஒரு நாள் பேசவில்லை என்றாலும் இருவருக்கும் பைத்தியம் பிடிக்கும். ஹர்ஷினியோ ஒருமுறை,
‘பேசாம நம்ம அண்ணனும் போலீஸ் தான்னு சொல்லி அவரை தெரியுமான்னு கேட்போமா?’ என்று அவள் யோசிக்க பின்,
‘நம்ம அண்ணன் வேற ரொம்ப ஸ்ட்ரிக்ட். ஒருவேளை சொன்ன அப்புறம் நிஜமாவே ரெண்டு பேருக்கும் ஒருத்தருக்கொருத்தர் தெரிஞ்சு அண்ணன் மேல உள்ள பயத்துல பேசாம போயிடுவாரோ.. வாய்ப்பு இருக்கு. முதல்ல அவர் மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுப்போம்’ என்று யோசித்தவள் ரௌத்திரனை பற்றி எதுவும் கூறவில்லை. அவளாக கூறாமல் அவளின் வீட்டை பற்றி கேட்பதில் ராஜாகும் உடன்பாடில்லை. அவர்களின் பேச்சு மொத்தமும் அவர்கள் இருவரை மட்டுமே சார்ந்ததாக போய் கொண்டிருந்தது.
ஒன்று மட்டும் நிச்சயம். இருவருக்குமே ஒருவரை ஒருவர் அவ்வளவு பிடித்திருந்தது. ஆனால் தன் காதலை இருவருமே கூறவில்லை. சொல்லப்போனால் இது காதல் தானா என்றே இருவருக்கும் தெரியவில்லை. இவ்வாறு சுமுகமாக போய் கொண்டிருந்த காதலில் முதல் சிக்கல் ஏற்பட்டது.
அன்று ஒரு நாள் முக்கியமான வழக்கு ஒன்றினைப் பற்றி ரௌத்திரன் தீவிரமாக விசாரித்துக் கொண்டிருந்தான். அப்பொழுது ரௌத்திரனின் அலைபேசி அலற அதனை எடுத்து பார்க்க ஹர்ஷு தான் அழைத்திருந்தாள். அழைப்பை ஏற்றவன்,
“சொல்லு ஹர்ஷு. என்ன விஷயம்?” என கேட்க,
“அண்ணா காலைல வீட்டுல இருந்து கிளம்பும் போது பஸ்ஸுக்கு காசு எடுத்துட்டு வர மறந்துட்டேன். எனக்கு இன்னைக்கு ஒரு வேலை இருந்துச்சு. என் பிரண்ட்ஸ் வேற முன்னாடியே கிளம்பிட்டாங்க. நீ வந்து என்னை கூட்டிட்டு போய் வீட்டுல ட்ரோப் பண்றியா அண்ணா.” என ஹர்ஷு கேட்க,
“என்ன ஹர்ஷு இது? வீட்டுல இருந்து கிளம்பும் போது இதெல்லாம் சரி பார்க்க மாட்டியா. நான் ஒரு முக்கியமான கேஸ் பத்தி விசாரிச்சுட்டு இருக்கேன். சரி இரு என் ஃபிரண்ட அனுப்புறேன். அவன் உன்ன வீட்டுல பத்திரமா விடுவான்.” என இவன் கூற,
“சரிண்ணா.” என கூறி அழைப்பைத் துண்டித்தாள். ரௌத்திரனோ ராஜாவை அழைத்து,
“டேய் ராஜா ஒரு ஹெல்ப் டா.” என ரௌத்திரன் கேட்க,
“டேய் என்ன நீ? ஹெல்ப்னு எல்லாம் சொல்லிட்டு இருக்க. என்ன பண்ணனும்னு மட்டும் சொல்லு.” என கேட்க,
“ஒண்ணுமில்ல டா என் தங்கச்சிய காலேஜ்ல போய் கூட்டிட்டு வீட்டுல விடணும்.”
“அவ்ளோதானே நான் பண்றேன். ஆனால் உன் வீடு எனக்கு தெரியாதே டா” என யோசிக்காமல் கேட்க,
“திருமலை நாயக்கர் மஹால் பக்கம் தான். அங்க போன அப்புறம் அவ வழி சொல்லுவா டா.” என கூற,
“சரி டா. எந்த காலேஜ்?” என ராஜா கேட்க, “தியாகராஜா காலேஜ் டா.” என ரௌத்திரன் கூற ராஜாவோ,
‘அட நம்மாளு படிக்குற காலேஜ். முடிஞ்சா அவளையும் பார்க்கலாம்.’ என மனதில் நினைத்துக் கொண்டு,
“சரி விடு நான் பார்த்துக்குறேன்.” என கூறிக்கொண்டு தனது வாகனத்தை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டான்.
‘ச்ச காலேஜ் பேர கேட்ட நம்ம அந்த பொண்ணு பேர கேட்காம வந்துட்டோம். எப்படி கண்டுபிடிக்குறது. சரி அங்க போய் பார்த்துக்கலாம்.’ என நினைத்துக்கொண்டு கல்லூரி நோக்கி பறந்தான். அங்கே அவளோ,
‘அண்ணா ஃப்ரண்ட் யாருன்னு கேட்க மறந்துட்டோமே. சரி இங்க தான வந்து நிப்பாங்க அப்போ பார்த்துக்கலாம்.’ என இவளும் நினைத்துக்கொண்டு காத்திருந்தாள்.
சிறிது நேர பயணத்திற்கு பின் கல்லூரியை அடைந்தவனோ வாசலில் அவனின் ஹனி நிற்பதைப் பார்த்து முகம் மலர்ந்தான்.
‘அட நம்ம நினைச்ச மாதிரியே ஹனிய பார்த்துட்டோம்.’ என மகிழ்ச்சியாய் மனதில் நினைத்தவன் அவளை நோக்கி வர அவளும் அவனை பார்த்து,
‘அட நம்மாளு வந்துருக்காரு.’ என இவளும் நினைத்து சந்தோசம் கொண்டாள். அருகில் வந்தவனோ,
ஹாய் ஹனி என கூறவந்து பிறகு க்கும் என இரும்பிவிட்டு,
“ஹாய் ஹர்ஷு நீ எங்க இங்க?” என்றான்.
“அதை நான் கேக்கணும். இது என் காலேஜ்.” என சிரித்துக்கொண்டே ஹர்ஷினி கூற,
“ஹிஹி ஆமால. சரி வீட்டுக்கு கிளம்பாம இங்க நிக்குற ஏன்?” என ராஜா கேட்க ஹர்ஷு நடந்தவற்றைக் கூறி,
“அதான் அண்ணா ஃப்ரண்ட் என்னை பிக்கப் பண்ண வராங்களாம். அவங்களுக்கு வெய்ட் பண்றேன்.” என கூறி முடிக்க ராஜா அதிர்ச்சியானான். அதனைக் கவனித்த ஹர்ஷு,
“என்னாச்சு பா. ஏன் ஷாக் ஆகுறீங்க?” என ஹர்ஷு கேட்க அவனோ,
“நீ ரௌத்திரனோட தங்கச்சியா?” என ராஜா அதிர்ச்சியாக கேட்க,
“ஆமா. என் அண்ணனை உங்களுக்கு முன்னாடியே தெரியுமா?” என அவள் கேட்க,
“அவன் சொன்ன அந்த ஃப்ரண்ட் நான் தான்.” என ராஜா கூற இப்பொழுது அதிர்ச்சியாவது ஹர்ஷினியின் முறையானது. ரௌத்திரனுக்கு தெரிந்தவனாக ராஜா இருக்கலாம் என்று மட்டுமே நினைத்திருந்தவள் ரௌத்திரனின் நெருங்கிய நண்பனாக ராஜா இருப்பான் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் இருவரின் அதிர்ச்சியிலும் மிக பெரிய வித்தியாசம் இருந்தது. ராஜாவிற்கு கோபம், கவலை கலந்த அதிர்ச்சி. ஹர்ஷுவிற்கோ இன்ப அதிர்ச்சி. அதனைக் கேட்டு மகிழ்ந்தவளோ,
“வாவ் வாட் அ சர்ப்ரைஸ். நீங்க அண்ணா ஃப்ரண்டா. அப்போ என்னை தான் பிக்கப் பண்ண வந்துருக்கீங்களா?” என சிரித்தபடி கேட்க அவனோ முகத்தில் எந்த பாவனையும் காட்டாமல்,
“ஆமா வண்டில ஏறு சீக்கிரம்.” என கூற அவளும் ஏறிக்கொண்டாள். இருவரின் மனதிலும் வெவ்வேறு என்ன ஓட்டங்கள் ஓடிக்கொண்டிருந்தன.
‘ஐய் சூப்பர். ராஜ் நம்ம அண்ணா ஃப்ரண்டா. அப்போ இனிமே தாராளமா லவ் பண்ணலாம் பிரச்சனை இல்ல.’ என நினைத்தபடி ஹர்ஷு வர ராஜாவோ,
‘ஹனி ரௌத்திரன் தங்கச்சியா. இதை ஏன் இவ இத்தனை நாளா சொல்லல. ச்ச இவ்ளோ நாள் நண்பனுக்கே தெரியாம அவன் தங்கச்சி கூட பேசிருக்கோம். இது அவனுக்கு செய்ற துரோகம் இல்லையா. இல்ல இனிமே இப்படி பண்ண கூடாது. இது தப்பு.’ என நினைத்தபடி ராஜா வண்டியை ஒட்டிக்கொண்டிருந்தான். திருமலை நாயக்கர் மண்டபம் வந்த பிறகு வழி கேட்க அவளும் கூறினாள். வீட்டில் இறக்கிவிட்டவனோ அவளிடம்,
“இத்தனை நாளா ரௌத்திரன் தான் உன் அண்ணண்னு ஏன் சொல்லல.” என ராஜா ஹர்ஷுவிடம் கேட்க என்ன கூறுவது என்று முழித்தவள்,
“அதைப் பத்தி சொல்ல சந்தர்ப்பம் கிடைக்கலைன்னு நினைக்குறேன். ஆனால் இப்போ செம ஹாப்பி நீங்க என் அண்ணா ஃப்ரண்ட்னு தெரிஞ்சுது.” என சந்தோசமாய் கூற அவனோ விரக்தியாய் சிரித்துவிட்டு கிளம்பிவிட்டான். ராஜாவோ நேராக ஆள் இல்லாத ஓர் இடத்தில் வண்டியை நிப்பாட்டிவிட்டு தன் கைகளால் தலையை தாங்கியபடி அமர்ந்திருந்தான். மனதிலோ,
‘ச்ச இவ்ளோ நாள் என்ன காரியம் பண்ணிருக்கோம். இவ்ளோ நாள் ஹனிய உருகி உருகி காதலிச்சேனே. இது தெரிஞ்சா என்னைப் பத்தி அவன் என்ன நினைப்பான். இல்ல இது தொடரக்கூடாது. நல்லவேளை என் காதல நான் ஹனி கிட்ட வெளிப்படுத்தல. இனிமே விலகி இருக்கணும். ஆனால் என் ஹனிகிட்ட பேசாம என்னால எப்படி இருக்க முடியும். மிஸ் யூ ஹனி.’ என ஒரு முடிவு எடுத்தவனாக அடுத்த இரண்டு நாட்களில்,
‘ஹர்ஷு மொபைல்ல ஒரு ப்ராப்லம். இனிமே கால் மெசேஜ் பண்ண முடியாது சாரி. டேக் கேர்.’ என மெசேஜ் அனுப்பிவிட்டு அவளை எல்லாவற்றிலும் பிளாக் செய்துவிட்டான். அவனின் செய்தியைப் படித்துவிட்டு வருத்தம் கொண்டாள் அவனின் ஹனி. அவ்வாறே இரண்டு நாட்கள் ஓட இருவருக்குமே தேடல் இருந்தது. அப்பொழுது தான் இருவரும் ஒருத்தர் மேல் ஒருத்தர் எவ்வளவு அன்பு வைத்திருந்தனர் என புரிந்து கொண்டனர்.
அவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாக அவளிடம் விலக்கம் காட்டினான் ராஜா மனதினுள் தவித்தபடி. ஹர்ஷுவும் அவனிடம் பேசாமல் தவித்து போனாள்.
‘மொபைல்ல ப்ராப்லம்னா அதுக்காக இவ்வளவு நாள் பேசாம இருப்பாங்களா. இல்ல இதுல வேற ஏதோ காரணம் இருக்கு. ராஜ் வேணும்னே தான் என்ன அவொய்ட் பண்றாங்க. ஆனால் ஏன் பண்ணனும்.’ என ஹர்ஷினிக்கு தோன்றியது. யோசித்து பார்த்தவளுக்கோ அப்பொழுது தான் ஒன்று புரிந்தது.
‘நான் எப்போ ரௌத்திரன் தங்கச்சின்னு உங்களுக்கு தெரிஞ்சுதோ அப்போல இருந்து தான் இப்படி நடந்துக்குறீங்க. ஏன் ராஜ் இப்படி பண்றீங்க? அண்ணா ஒத்துக்க மாட்டான்னு நினைக்குறீங்களா.’ என தனக்கு தானே கேள்வி கேட்டுக்கொண்டவள் பின் ரௌத்திரனின் அறைக்கு சென்று பார்த்தாள்.
ரௌத்திரன் தூங்கி கொண்டிருந்தான். அவன் அறியாமல் அவனின் அலைபேசியை எடுத்து வந்து பார்க்க அதில் இன்று வரை ராஜா ரௌத்திரனுக்கு அனுப்பிய குறுஞ்செய்தி இருந்தது. அதை கண்டவளுக்கோ தான் நினைத்தது சரி தான் என உறுதியானது. பின் அவனின் அலைபேசியிலேயே ராஜாவிற்கு குறுஞ்செய்தி அனுப்பினாள்.
“ராஜ் ஏன் ராஜ் என்னை அவொய்ட் பண்றீங்க? என்கூட பேசுங்க ராஜ். உங்ககிட்ட பேசாம என்னால இருக்க முடியல. ப்ளீஸ். அண்ணா ஏதும் நினைச்சுப்பான்னு தான நீங்க என்கிட்ட பேச மாட்டேங்குறீங்க. நான் அண்ணா கிட்ட இப்போவே சொல்றேன்.” என அனுப்ப அதனைப் படித்தவனுக்கோ மிகவும் கஷ்டமாக இருந்தது.
“வேணாம் ஹர்ஷு. நீ ஏதும் சொல்லாத ப்ளீஸ். நான் உன்கிட்ட ரெண்டு நாள் கழிச்சு பேசுறேன். ப்ளீஸ்.” என்று மட்டும் அனுப்பிவிட்டு அவனின் ஹனியிடம் மனதிற்குள் மானசீகமாக மன்னிப்பு கேட்டுகொண்டான். ஹர்ஷுவோ தான் அனுப்பிய குறுஞ்செய்தியை டெலிட் செய்துவிட்டு மீண்டும் அலைபேசியை ரௌத்திரன் அறையில் வைத்துவிட்டு வந்துவிட்டாள். இரண்டு நாள் காத்திருப்போம் என்ற முடிவுடன். ஆனால் அவள் அனுப்பிய குறுஞ்செய்தியைப் படித்த பிறகு ராஜாவிற்கே அவளிடம் பேசாமல் இருக்க முடியவில்லை. காதல் கொண்ட மனது துடிதுடித்து போனது.
‘நாளைக்கு ரௌத்திரன் கிட்டயே உண்மைய சொல்லிருவோம். அவன் என்ன முடிவு சொல்றானோ அதை ஏத்துப்போம். அவனுக்கு பிடிக்கலைன்னா விட்டுறலாம். ஒருவேளை அவனுக்கு இதுல சம்மதம்னா நல்லது தானே. சாரி ஹனி. ஒரு ரெண்டு நாள் பொறுத்திரு செல்லம்.’ என முடிவெடுத்தவன் பெருமூச்சிவிட்டுக் கொண்டான். இப்பொழுது மனசு லேசாக இருந்தது போன்ற உணர்வு. ஆனால் விதி அந்த நிம்மதியை நீடிக்க விடவில்லை. தெளிந்த மனதை மீண்டும் குழப்புவதற்காக அவனின் அலைபேசிக்கு ஓர் அழைப்பு வந்தது.
மௌனம் எரியும்…