Loading

மௌனம் 6

சிறிது நேரம் ரௌத்திரன் யோசித்தவாறே இருக்க களைப்பில் அவனை நித்ராதேவி ஆட்கொள்ள ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றான். அப்பொழுது திடீரென்று ஒரு குரல். நன்கு பழக்கப்பட்ட குரல் வேறு. உறக்கத்திலும் அவனின் சிந்தனை செயல்பட,

‘இது அந்த குட்டி பிசாசோட குரலாச்சே’ என்று நினைக்க குரல் வெகு அருகில் கேட்டது.

“யோவ் ஈபிள் டவர். எந்திரி யா” என அவனை உலுக்கி எழுப்ப கண்ணைக் கசக்கிக் கொண்டு அரைத் தூக்கத்தில் எழுந்து அமர்ந்தவனோ மலரை கண்டு,

“ஏய் நீ எப்படி உள்ள வந்த? அதுவும் இந்த நேரத்துல.” என அதிர்ச்சியாகவும் பதற்றத்துடனும் அதே சமயத்தில் கோபத்துடனும் கேட்க,

“என்ன கண்டுபிடிச்சிங்களா இல்லையா? நான் நீங்க நடிச்சீங்கன்னு எப்படி கண்டுபிடிச்சேன்னு யோசிக்காம நீங்க பாட்டுக்கு தூங்குறீங்க.” என்றவள் கேட்க,

“அதெல்லாம் எனக்கு தேவையில்லை. நான் யோசிக்கவும் மாட்டேன். முதல்ல வெளிய போ நீ.” என அவன் கூற,

“ஓ கண்டுபிடிக்க மாட்டிங்களா. அப்போ சரி நீங்க கேட்ட முத்தத்தை இப்போ தரேன்.” என கூறிக்கொண்டு அவன் அருகில் மலர் வர ரௌத்திரனோ, “நோ” என கத்திக்கொண்டு எழுந்து அமர்ந்தான். கண்ணைக்கசக்கி கொண்டு பார்க்க அறையில் யாருமே இல்லை. கனவுக்குள் கனவு போல இருந்தது.

“ச்ச கனவா. நல்ல வேலை கனவு தான். ஒரு நிமிஷம் பதறிட்டேன். இந்த குட்டி பிசாசு நேர்ல தான் உயிரை வாங்குதுன்னா கனவுலயும் உயிரை வாங்குது. எப்படி கண்டுபிடிச்சான்னு வேற தெரில. இதை யோசிச்சுட்டே இருந்தா அப்புறம் டியூட்டில கான்செண்ட்ரேட் பண்ண முடியாது. நமக்கு நம்ம டியூட்டி தான் முக்கியம். அசிங்கப்பட்டாலும் பரவாயில்ல. கோவிலுக்கு போய் கேட்டுற வேண்டி தான்.” என முடிவெடுத்தவனோ மணியைப் பார்க்க அது ஆறரை என காட்டியது.

“ஏழு மணிக்கு தானே அந்த குட்டி பிசாசு கோவில் போறதா சொன்னுச்சி. சிக்கிரம் குளிச்சு கிளம்புவோம்.” என குளிக்க சென்றான். அங்கே மலரோ சீக்கிரம் எழுந்து குளித்து முடித்து புடவை கட்டிக்கொண்டிருந்தாள்.

மலருக்கு புடவை கட்டுவது மிகவும் பிடிக்கும். வெள்ளிக்கிழமை தோறும் கோவிலுக்கு புடவைக் கட்டி செல்வது அவளது வழக்கம். அதற்காக பக்திமான் எல்லாம் கிடையாது. அதே சமயம் பக்தி இல்லாமலும் இல்லை. ஓரளவு உண்டு. கோவில் சென்றால் மன நிம்மதி கிடைக்கும் என செல்வாள். அவ்வாறே வழக்கம் போல் புடவை கட்டிக் கொண்டிருந்தாள். ஆனால் சிந்தனையோடு. வேறென்ன சிந்தனை நம்ம ரௌத்திரன் கோவிலுக்கு வருவானா மாட்டானா என்றுதான்.

சிறிது நேர முயற்சிக்கு பின் கட்டி முடித்தவளோ கண்ணாடியில் சரி பார்க்க அவளுக்கே அவ்வளவு அழகாக தோன்றியது. பின் தன் அன்னையிடம் கூறிக்கொண்டு கோவிலுக்கு புறப்பட்டாள். அங்கே சென்று அம்மனிடம் வேண்ட ஆரம்பித்தாள்.

“எல்லாரும் நல்லா இருக்கனும்.” என தன் பொதுவான வேண்டுதலை முடித்தவளோ அடுத்து அவளின் தனிப்பட்ட வேண்டுதலை கூற ஆரம்பித்தாள்.

“கடவுளே இந்த ஈபிள் டவர் வருமா வராதா. அவரை நம்பி ராஜா அண்ணா கிட்ட வேற பந்தயம் கட்டிட்டேன். நீ தான் அவரை வர வைக்கணும்” என வேண்டிவிட்டு பிரகாரத்தை சுற்றி விட்டு அமர்ந்தாள். ஐந்து நிமிடமாக அவன் வருவானென்று காத்திருந்து பொறுமையிழந்தவளோ,

“இதுக்கு மேல அந்த ஈபிள் டவர் வர வாய்ப்பில்ல. போச்சு நமக்கு தான் பல்ப். சரி கிளம்புவோம்” என தனக்கு தானே கூறிக்கொண்டு எழும்ப போக சரியாக கோவில் வாயிலில் இருந்து உள்ளே வந்தான் அவளின் ஈபிள் டவர்.

வெள்ளை நிற முழுக்கை சட்டையில் அதனைக் கைமுட்டி வரை மடக்கிவிட்டு கருப்பு நிற பேண்ட் அணிந்து தன் கையால் நெற்றியை தேய்த்து மலரை தேடியபடி உள்ளே வந்தான். வாசலில் பூ விற்கும் பெண்ணோ,

“எப்பா தம்பி. செருப்பைக் கழட்டிட்டு உள்ள போங்க. அப்படியேவா உள்ள போவீங்க.” என அவனிடம் கூற அப்பொழுது தான் ரௌத்திரனோ,

‘ச்ச அவளை தேடிட்டே செருப்பைக் கழட்ட மறந்துட்டோமே. இந்த குட்டி பிசாசால எல்லார்கிட்டயும் அசிங்கப்பட வேண்டியதா இருக்கு.’ என மனதுக்குள் நொந்துவிட்டு அந்த பெண்ணிடம்,

“மன்னிச்சுருங்க மா. ஏதோ ஞாபகத்துல மறந்துட்டேன்.” என கூறி செருப்பைக் கழட்டிவிட்டு உள்ளே சென்றான். அவனைக் கண்ட மலரோ,

“பரவாயில்லயே. இந்த ஈபிள் டவர் வந்துடுச்சே. வறாதுன்னு நினைச்சோம்.” என மனதினுள் நினைத்தபடி அவனை சைட் அடித்தவள் பின் அவனை நோக்கி எழுந்து சென்றாள்.

மலரை தேடி அவனது கண்கள் சுழல இளஞ்சிவப்பு நிற பருத்தி புடவையில் கூந்தலை பின்னலிட்டு முன்னே போட்டபடி நெற்றியில் சிறிதான வட்ட போட்டும் அதற்கு மேல் சிறு சந்தனம் மற்றும் திருநீர் கீற்றுடன் அழகு தேவதையாக தன்னை நோக்கி வருபவளை விழி விரித்து பார்த்துக் கொண்டிருந்தான்.

“குட்டி பிசாசா இது. புடவைல பெரிய பொண்ணா தெரியுறா.” என மனதில் நினைத்தவன் அவனை அறியாமலே அவளை பார்த்துக் கொண்டிருக்க அவளோ,

“மிஸ்டர் ரௌத்திரன். இது கோவில் இப்படி எல்லாம் சைட் அடிக்க கூடாது.” என்று கூற அவளின் குரல் கேட்டு தன் பார்வையை விளக்கினான்.

“அது… அது.. சைட் எல்லாம் அடிக்கல.” என அவன் தடுமாற அதைக் கண்டு உதடு மடித்து சிரித்தவள்,

“சரி வாங்க அப்படி உட்காந்து பேசுவோம்.” என மலர் கூற,

“இங்க பாரு உன்கூட பொறுமையா உக்காந்து பேச நான் வரல. எப்படி கண்டுபிடிச்சன்னு மட்டும் சொல்லு. எனக்கு வேலை இருக்கு.” என சிடுசிடுவென கூற,

“ஹலோ அப்படி அவசரமா எல்லாம் சொல்ல முடியாது. உங்களுக்கு அவசரம்னா இன்னொரு நாள் வாங்க. இப்போ கிளம்புங்க.” என தெனாவெட்டாய் கூற,

“ஐயோ. சரி வரேன். ஆனா இங்க வேணாம். வெளியே தெப்பக்குளம் பக்கம் போய் பேசலாம்.” என அவன் கூற,

“ஏன்”

“எனக்கு கோவிலுக்கு வந்து எல்லாம் பழக்கம் இல்ல. அதான். எதுக்கு எடுத்தாலும் கேள்வி கேட்காத.” என கடுப்பாக கூற,

“சரி சரி. ஆனா நான் நீங்க கேட்குறத சொல்லணும்னா ஒரு கண்டிஷன் இருக்கு.” என அவள் கூற,

“ப்ச் என்ன கண்டிஷன்?” என கடுப்பாக கேட்க,

“என்கூட செல்ஃபீ எடுக்கணும்.” என அவள் கூற,

“ஹே நீ என்ன நினைச்சுட்டு இருக்க உன் மனசுல. ரொம்ப ஓவரா போய்ட்டு இருக்க. நானும் ஓரளவு தான் பொறுமையா போவேன். என் கோவத்தைக் கிளறாத சொல்லிட்டேன்.” என முறைத்தபடி கூற,

“ஹலோ உங்க கூட போட்டோ எடுக்கணும்னு எனக்கு ஒன்னும் ஆசை இல்ல. இவர் பெரிய ஹீரோ பாருங்க.. ஆசைப்பட்டுட்டாலும். இந்த போட்டோ எதுக்குன்னா நீங்க என்கிட்ட தோத்துட்டிங்கன்னு ஒத்துகிட்டதா அர்த்தம்.”

“நான் உன்கிட்ட தோத்தேனா?”

“ஆமா நேத்து நீங்க பிளான் பண்ண மாதிரி நடந்துச்சா இல்லல. என்கிட்ட பல்ப் வாங்குனீங்கல்ல. அதுக்கு தான். செல்ஃபீ எடுக்கலைன்னா சொல்ல மாட்டேன். அவ்ளோதான். அப்புறம் உங்க இஷ்டம்.” என கூறியவளைக் கோபத்தோடு பார்த்து விட்டு,

“சரி எடுத்துத் தொலை” என கூற,

“இப்படியெல்லாம் சொன்ன எடுக்க மாட்டேன். சிரிச்சிட்டே சொல்லுங்க.” என மேலும் மலர் கடுப்பேற்ற அவனோ,

“நீ சொல்லவே வேணாம். நான் கிளம்புறேன்.” என செல்லப்போக,

“சரி சரி கூல் கூல். எடுக்குறேன். இங்க பாருங்க.” என கூறி கொண்டு சுயப்படம் எடுக்க அவனோ வேறு வழியின்றி முறைத்தபடி வேண்டாவெறுப்பாக பார்த்தான். ஆனால் அவன் உயரமாக இருப்பதால் அவளுக்கு எடுக்க சற்று சிரமமாக இருக்க,

“ஹெலோ.. ப்ளீஸ். ஹைட் ப்ராப்லம்” என்றபடி அவனை பாவமாக பார்க்க பெருமூச்சொன்றை வெளிவிட்டவன்,

‘குட்டச்சி’ என்று கடுப்புடன் திட்டியவன் வேறு வழியின்றி அலைபேசியை வாங்கி அவனே சுயப்படம் எடுத்தான் முறைத்தபடி.

அவன் எடுத்ததும் அதனை வாங்கி பார்த்தவள்,

“சிரிச்சா தான் என்னவாம். ரொம்ப தான்” என்று சற்று வாய்விட்டே அவள் கூற அதனை எல்லாம் கண்டுக் கொள்பவனா நம் ரௌத்திரன். பின் இருவரும் தெப்பக்குளம் பக்கம் சென்றனர்.

“இப்போயாச்சு சொல்ல போறியா இல்லையா?”

“சொல்றேன் சொல்றேன். ஆக்சுவலி நான் ஒரு சைக்காலஜி ஸ்டுடென்ட். என்னால ஒருத்தரோட கண்ண பாத்தே அவங்க என்ன நினைக்குறாங்கன்னு ஓரளவு கெஸ் பண்ண முடியும். நீங்க கதவை சாத்துன உடனே நானும் பயப்பட தான் செஞ்சேன். அதுக்கு அப்புறம் தான் உங்க கண்ண பார்த்தேன். உங்க கண்ணு என் கண்ண தவிர வேற எங்கேயும் பார்க்கலை. அதுலயே உங்க கண்ணியம் எனக்கு தெரிஞ்சுட்டு. அதே மாதிரி நான் வெளியே போறேன்னு போக போனப்போ என்னை தடுத்தீங்கல்ல. அப்போ உங்க நகம் கூட என் மேல படல. தப்பா நடந்துக்க வரவன் எவனும் இப்படி இருக்க மாட்டான். அது மட்டுமில்ல. ஓப்பனா சொல்லணும்னா என்னை நிறைய பசங்க சைட் அடிச்சுருக்கானுங்க. ஆனா நீங்க என்னை முதல் தடவ பார்க்கும் போது கூட அப்படி பார்க்கலை. சோ எல்லாத்தையும் யோசிச்சு பார்த்தேன். அதை வச்சு தான் கண்டுபிடிச்சேன்.” என பெரிய விளக்கம் கொடுத்தாள் மலர்.

‘ஓஹோ இதுக்குள்ள இவ்ளோ விஷயம் இருக்கா. தப்பு செஞ்சா கண்ணை பார்த்து கண்டுபிக்கலாம்னு தெரியும். நானும் நிறைய அக்யூஷ்ட்ட கண்டுபிடிச்சுருக்கேன். இது புதுசா இருக்கே. இவளை சாதாரணமா நினைச்சுட்டோம். பயபுள்ள ரொம்ப தான் விவரம்.’ என்று மனதினுள் நினைத்தவன்,

“அப்போ பயந்த மாதிரி பேசுன…” என அவன் சந்தேகமாய் கேட்க,

“எல்லாம் நடிப்பு தான். எப்படி மலர்நிதியோட நடிப்பு” என அவள் கேட்க,

“மலர்நிதியா அது யாரு?” என ரௌத்திரன் கேட்க,

“எது யாரா? நல்ல கேட்டீங்க போங்க. நான் தான் அது” என பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு கூற,

“ஓ சரி. நான் கிளம்புறேன்.” என கூறி செல்ல போக மலரோ,

‘எதுக்காவது ரியாக்ஷன் காட்டுறானா பாரு. சிடுமூஞ்சி’ என மனதில் திட்டிவிட்டு,

“மிஸ்டர் ஈபிள் டவர் ஒரு நிமிஷம்.” என செல்லும் அவனை அழைக்க, திரும்பியவன் என்ன என பார்வையாலே கேட்டான்.

“அப்போ அப்போ சிரிங்க ஹெல்த்துக்கு நல்லது. எப்போயாச்சு முறைச்சா தான் பயமா இருக்கும். எப்போவுமே முறைச்சா அதுவே பழகிரும்.” என சிரித்துக்கொண்டே கூற அவள் கூறிய விதத்தில் அவனுக்கு லேசாக சிரிப்பு வர அதனை அவளிடம் காட்டக்கூடாது என நினைத்து ஏதும் சொல்லாமல் திரும்பியவன் பின் மீண்டும் அவள் புறம் திரும்பி,

“எல்லாரும் உன்னை சைட் அடிக்காங்கங்குறதுக்காக நான் அடிக்கணும்னு இல்ல. உனக்கு அவ்ளோ சீனும் இல்ல. இனிமே என்கிட்ட வம்பிழுக்காம இருக்க பாரு. அதான் உனக்கு நல்லது” என்றவன் தன் வண்டியில் ஏறி சென்று விட,

“கொய்யால.. ரொம்ப தான் ஓவரா போறீங்க. கொஞ்சம் நேரம் முன்னாடி பேன்னு பார்த்துட்டு இப்போ அவ்ளோ ஸீன் இல்லயாம்ல. போயா சிடுமூஞ்சி” என செல்லும் அவனையே பார்த்தபடி கூறியவள்,

“ஆனா நீங்க முறைச்சுட்டே இருந்தா கூட அது அழகு தான் தீரா.” என அவளை அறியாமல் நினைத்தது மட்டுமல்லாமல் அவனை தீரா என்று வேறு விளித்திருந்தாள். பாவம் பிறர் மனதை அறியும் உளவியல் பட்டதாரிக்கு தன் மனதில் முளைத்த காதலை உணர முடியவில்லை. இது கண்டவுடன் காதலா? அல்ல அவன் அவளை கண்டுக் கொள்ளாததினால் வந்த காதலா? அவளுக்கே வெளிச்சம். அவனை மனதில் நினைத்து சிரித்தபடி வீட்டிற்கு செல்லலானாள்.

என்னமோ ஏதோ
எண்ணம் திரளுது கனவில்
வண்ணம் பிரளுது நினைவில்
கண்கள் இருளுது நனவில்

என்னமோ ஏதோ
முட்டி முளைக்குது மனதில்
வெட்டி ஏறிந்திடும் நொடியில்
மொட்டு அவிழுது கொடியில்

வீட்டிற்கு சென்ற ரௌத்திரனிடம் பாட்டி,

“என்ன டா காலைலேயே எந்திச்சு எங்க போயிட்டு வர?” என கேட்க,

‘ஐயோ கோவிலுக்கு போனோம்னு சொன்னா நம்ம மானம் போயிரும். வேற ஏதவாது சொல்லு டா ரௌத்திரா’ என மனதில் நினைத்துவிட்டு வெளியே பாட்டியிடம்,

“அதுவா பாட்டி அது வந்து.. ஹான் ஜாக்கிங் போயிட்டு வரேன்.” என பொய் கூற பாட்டியோ அவனை மேலும் கீழும் ஒரு பார்வை பார்த்தார்.

“என்ன பாட்டி? எதுக்கு இப்படி பார்க்குறீங்க?”

“எது இப்படி பேண்ட் ஷர்ட் போட்டு ஜாக்கிங் போன. அப்படி தான?” என அவனை ஒரு மாதிரியாக பார்க்க,

‘ஐயோ அவசரத்துல லாஜிக் மிஸ் பண்ணிட்டோமே. எப்படி இருந்தவன் நான். எனக்கா இப்படி ஒரு நிலைமை வரணும். கருமம்’ என தன்னைத் தானே நொந்து கொண்டவன் தன் ஆயுதமான முறைப்பைக் கையில் எடுத்தபடி,

“ப்ச் பாட்டி நானே கடுப்புல இருக்கேன். நீங்க வேற கேள்வி கேட்டுக் கூட கொஞ்சம் கடுப்பாக்காதீங்க. ஒரு மணி நேரத்துல நான் ட்யூட்டிக்கு கிளம்பணும்.” என கடுப்பில் இருப்பது போன்று கூறிவிட்டு தப்பித்துவிட்டான். பாட்டியோ,

“இப்போ நான் என்ன கேட்டேன்னு இவன் அப்படி பேசிட்டு போறான். புதுசா பண்றானே. சரி இல்ல. இங்க வந்ததுல இருந்து பேய் பிடிச்ச மாதிரியே திரியுறான் இவன்” என புலம்பியவர் தன் வேலையைப் பார்க்க சென்றார். தன் அறைக்கு வந்தவனோ,

‘ஹப்பாடா ஒருவழியா பாட்டிகிட்ட இருந்து தப்பிச்சாச்சு. எல்லாம் அந்த குட்டி பிசாசால வந்தது. என் ரூட்ல ரொம்ப க்ரோஸ் ஆகுறா. நமக்கு தெரிய வேண்டியது அவ எப்படி கண்டுபிடிச்சான்னு தான். அதான் இப்போ தெரிஞ்சுட்டே. இனிமே அவ பக்கம் கூட திரும்பக் கூடாது. அவகிட்ட இருந்து தள்ளி இருக்கிறது தான் நல்லது.’ என தனக்கு தானே கூறிக்கொண்டவன் தன் முதல் காதலியை ஆசையுடனும் கர்வமுடனும் வருடியபடி அணிந்துக் கொண்டான். வேறென்ன அவனுடைய காக்கி சட்டை தான். போலீஸ் அதிகாரியாக வேண்டும் என வெறிக் கொண்டு படித்தவனாயிற்றே. அதனாலேயே ஒவ்வொரு முறையும் அதனை அணிந்து கொள்ளும்போதும் பெருமை பட்டுக் கொள்வான். காக்கிச் சட்டையில் மிடுக்காக கிளம்பியவனோ கண்ணாடியில் தன்னை ஒருமுறை சரி பார்த்துக்கொண்டிருந்தான்.

‘டேய் மினிஸ்டர் என்ன ரெண்டு நாளா யூனிபோர்ம் போட முடியாதபடி பண்ணிட்டல்ல. இதுக்கும் சேர்த்து நீ அனுபவிப்ப.’ என கண்களில் கோபக் கனலுடன் கூறியவன் பின்பு கீழே உணவருந்த சென்றான்.

“பாட்டி. சீக்கிரம் சாப்பாடு கொண்டு வாங்க. எனக்கு நேரமாயிட்டு.” என கூறியபடி வந்து சாப்பிட அமர்ந்தான். பாட்டி இட்லி கொண்டு வர அதனை சாப்பிட ஆரம்பித்தான். அப்பொழுது தான் ஹர்ஷினி தூங்கி எழுந்து வந்தாள். பாட்டியோ வழக்கமாக தரும் அர்ச்சனைகளை ஹர்ஷுக்கு வழங்க ஆரம்பித்தார்.

“ஏன் டி வயசு பொண்ணு எந்திச்சு வர நேரமா டி இது.” என பாட்டி கூற ஆரம்பிக்க அவரைத் தடுத்த ஹர்ஷு,

“ஏன் டி வயசு பொண்ணு எந்திக்குற நேரமா டி இது. உன் வயசு பொண்ணுங்க எல்லாம் சீக்கிரம் எந்திச்சு என்ன எல்லாம் பண்றாங்க. நாளைக்கு மாமியார் வீட்டுக்கு போன அப்புறமும் இப்படியே பண்ண போறியா? உன்ன எல்லாம் எவன் கட்டிக்கிட்டு பாடு பட போறானோ?” என நீளமாக கூறியவளோ சிறிது மூச்சி வாங்கிய பின் “இதைத் தான பாட்டி சொல்லப் போறீங்க. உங்களுக்கு எதுக்கு சிரமம். நானே சொல்லிட்டேன் போதுமா.” என நக்கலாக கூற,

“என்ன டி நான் சொல்றது உனக்கு கிண்டலா இருக்கா? பார்த்தியா டா ரௌத்திரா. உன் தங்கச்சிக்கு சேட்டை அதிகமாயிட்டு. சீக்கிரம் ஒரு மாப்பிளையைப் பார்த்து கட்டிக் கொடுத்துருவோம்.” என பாட்டி கூற,

“பாட்டி அவளுக்கென்ன வயசா ஆகிட்டு. இன்னும் கொஞ்சம் நாள் போகட்டும்” என தன் தங்கைக்கு ஆதரவாக கூற அவளோ,

“அப்படி சொல்லுண்ணா. என் அண்ணன்னா அண்ணன் தான். கேட்டியா மங்கலம் அண்ணன் சொன்னதை.” என பாட்டிக்கு பழிப்பு காட்டிவிட்டு ஓடிவிட்டாள். அங்கே கோவிலிலிருந்து வந்த மலரோ அவனை பற்றியே நினைத்துக்கொண்டு வந்ததால் சிரித்துக்கொண்டே வீட்டிற்குள் நுழைய ஹாலில் இருந்த வெங்கடேசன்,

“என்னம்மா? சிரிச்சுக்கிட்டே வர. என்ன விஷயம்?” என அவளைப் பார்த்து கேட்க,

“சும்மா தான் பா. இன்னைக்கு ஏதோ மனசுக்கு சந்தோசமா இருக்கு.” என அவள் கூற,

“அப்படியா நல்லது. சரி வா வந்து உக்காரு” என கூற மலரும் வந்து அமர்ந்தாள்.

“அடியே என் பொண்ணுக்கு ஒரு காபி கொண்டு வா. புள்ள கோவில் போய்ட்டு களைச்சு போய் வந்துருக்கு.” என சமயலறையில் இருக்கும் தன் மனைவிக்கு குரல் கொடுக்க, மலரும் அவள் பங்கிற்கு,

“சுப்பு நல்ல ஸ்ட்ராங்கா போடு.” என கூற,

“ஆமா ஆமா இவ பெருசா விரதம் இருந்து அங்கபிரதர்சனம் பண்ணிட்டு வந்த மாதிரி ரொம்ப தான் பொண்ணுக்கு வரிஞ்சி கட்டுறிங்க.” என தன் கணவனை வசைபாடிவாறே கையில் காபியுடன் வந்தார் சுப்புலட்சுமி.

“என் பொண்ணுக்கு நான் வரிஞ்சி கட்டிக்கிட்டு தான் வருவேன்.” என வெங்கடேசன் கூற, சுப்பு அவரைத் தன் பார்வையாலே சுட்டெரித்தார்.

“ஆஹா அப்பா. உங்களுக்கு ஆப்பு கன்பார்ம். நான் எஸ்கேப்.” என கூறிக்கொண்டு மேலே செல்ல போக,

“அடியே மலரு ஒரு நிமிஷம். எதிர்த்த வீட்டுல சிலிண்டருக்கு இன்னும் புக் பண்ணிருக்க மாட்டாங்க. இந்த நம்பரலருக்கு கால் பண்ணி கேஸ் சிலிண்டருக்கு புக் பண்ண சொல்லிட்டு வா. பாவும் கஷ்டப்பட போறாங்க. நமக்கு தெரிஞ்சதை நம்ம சொல்லுவோம்.” என சுப்பு கூற,

“சுப்பு உனக்குள்ள இவ்ளோ நல்லெண்ணமா. உன் மனச எண்ணி நான் வியக்க,” என மலர் பெருமையாய் கூற,

“அதெல்லாம் ஒன்னும் நீ வியக்க வேணாம். சொன்னதை முதல்ல செஞ்சுட்டு வா.” என அவளை அனுப்ப அவளும் ரௌத்திரனின் வீட்டிற்கு சென்றாள். இவள் வீட்டிற்குள் செல்லும் நேரம் ரௌத்திரனும் பாட்டியிடம் தான் டியூட்டி கிளப்புவதாக கூறிவிட்டு வெளியே வரவும் சரியாக இருந்தது. கிட்டத்தட்ட இருவரும் மோதிவிடும் நிலை தான். ரௌத்திரனோ சட்டென சுதாரித்து விலகி நின்றான். மலர் தான் அவனை காக்கி சட்டையில் முதல் முறையாக பார்த்ததில் ஸ்தம்பித்து போய் இருந்தாள். அதுவும் மிக அருகில் பார்த்ததில் அவளது இதயமோ தாறுமாறாக துடித்தது. அவனோ எதுவும் கூறாமல் சென்றுவிட்டான்.

‘ஆத்தி யூனிபார்ம்ல எவ்ளோ கம்பீரமா இருக்காரு. எனக்கே ஒரு நிமிஷம் பயம் வந்துட்டு. இப்போ தான தெரியுது. ஏன் அக்கியூஸ்ட் எல்லாம் இவரைக் கண்டா அப்படி நடுங்குறாங்கன்னு.’ என யோசித்தபடி வாசலிலே நிற்க அவளை கண்ட பாட்டியோ,

‘என்ன இந்த பொண்ணு இப்படி பேயறைஞ்ச மாதிரி நிக்குது.’ என நினைத்துவிட்டு அவளை உலுக்க,

“என்ன மா இப்படி நிக்குற?” என பாட்டி கேட்க,

“அது.. அது ஒண்ணுமில்ல பாட்டி. இந்தாங்க இந்த நம்பர் அம்மா உங்க கிட்ட கொடுக்க சொன்னாங்க. சிலிண்டருக்கு புக் பண்ணுவீங்களாம் இந்த நம்பருக்கு கால் பண்ணி.” என கூறி கொடுக்க,

“ஓ அப்படியா ரொம்ப நன்றி மா. உள்ள வா மா.” என பாட்டி அழைக்க, அவளோ இன்னும் அவனை காக்கி சட்டையில் பார்த்த அதிர்ச்சி விலகாமல் இருக்க,

“இல்ல பாட்டி அப்புறம் வரேன்.” என கூறிவிட்டு விறுவிறுவென வீட்டிற்கு வந்துவிட்டாள்.

“என்ன டி அதுக்குள்ள வந்துட்ட? கொடுத்துட்டியா?” என சுப்பு கேட்க அதைக் கூட காதில் வாங்காமல் வந்து சோபாவில் அமர்ந்து தன்னை ஆசுவாச படுத்திக் கொண்டாள். மீண்டும் தன் அன்னையின் குரல் கேட்க அப்பொழுது தான் சுப்புவைக் கவனித்தாள்.

“என்ன டி ஆச்சு உனக்கு? எதுக்கு இப்படி வேர்த்துருக்கு?” என சுப்பு கேட்க,

“அதெல்லாம் ஒன்னுமில்ல மா. டக்குனு பூனை ஒன்னு எதிர்ல வந்துட்டு. பயந்துட்டேன்.” என வாய்க்கு வந்ததை அடித்து விட,

“இவ ஒருத்தி பூனை நாய்க்கு எல்லாம் பயப்படுவா.” என கூறிக்கொண்டு சமயலறைக்கு சென்றுவிட்டார். மலரோ,

“ஆமா ஆமா கொஞ்சம் பெரிய சைஸ் பூனை தான்” என வாய்குள்ளேயே கூறி சிரித்தவள் டிவி பார்க்கலாம் என அதனை இயக்கி பாடல் ஒலிக்கும் சேனலை தேடி வைக்க அதிலோ,

என் இதயம் இதுவரை துடித்ததில்லை
இப்போ துடிக்கிறதே
என் மனசு இதுவரை பறந்ததில்லை
இப்போ பறக்கிறதே
இது எதனால் எதனால் தெரியவில்லை
அதனால் பிடிக்கிறதே ஹே
இது சுகமா வலியா புரியவில்லை
கொஞ்சம் சுகமும் கொஞ்சம் வலியும்
சேர்ந்து துரத்துகிறதே

என பாடல் ஒலிக்க அந்த படத்தின் கதாநாயகன் சூர்யா காவலதிகாரி என்பதாலோ என்னவோ அந்த பாடல் முழுவதையும் ரௌத்திரனின் நினைவுகளோடே கேட்டு முடித்தாள். பின் எழுந்து தன் அறைக்குள் சென்றவளோ சிறிது நேரம் ஏதோ சிந்தித்தபடியே அமர்ந்திருந்தாள். பின்பு ராஜாவின் ஞாபகம் வர அவன் எண்ணிற்கு ஹாய் என குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு அவள் ரௌத்திரனுடன் எடுத்த சுயப்படத்தை அவனுக்கு அனுப்ப, சத்தம் கேட்டு தன் அலைபேசியை எடுத்து பார்த்தவனோ அந்த புகைப்படத்தை விழி விரித்து ஆச்சரியத்துடன் பார்த்தான். உடனே மலருக்கு அழைக்க, அழைப்பை ஏற்றவளோ,

“என்னண்ணா? சொன்ன மாதிரியே செஞ்சுட்டேனா” என கெத்தாக அவனிடம் கேட்க,

“மலர் மா. நீ வேற லெவல். நடக்காத ரெண்டு அதிசயத்தை இன்னைக்கு நீ நடத்தி காமிச்சுருக்க. அவன் கோவிலுக்கு வந்தது முதல் அதிசயம். செல்ஃபி எடுத்தது ரெண்டாவது அதிசயம். அதுலயும் ஒரு பொண்ணு உன்கூட எடுத்தது தான் அதிசயத்துலையும் அதிசயம். எப்படி மா?” என ஆச்சரியமாய் அவளிடம் கேட்க,

“ஹாஹா மலர்நிதின்னா சும்மாவா.”

“ஆமா ஆமா என் தங்கச்சி கிரேட் தான். அப்படியே இந்த அண்ணனை யோசிக்க வைக்காம இது எப்படி நடந்துச்சுன்னு சொல்லிரு பார்ப்போம்” என ராஜா அவளிடம் கேட்க,

“சொல்ல மாட்டேனே” என அவள் நக்கலாக கூற,

“உன் அம்மாஞ்சி அண்ணனைப் பார்த்தா பாவமா இல்லையா உனக்கு.” என பாவமாக அவளிடம் கேட்க,

“பாவமா தான் இருக்கு. ஆனால்….” என இவள் இழுக்க,

“அப்படியெல்லாம் இழுக்காத. ப்ளீஸ் சொல்லு மா” என ராஜா கெஞ்சாத குறையாக அவளிடம் கேட்க,

“சரி சொல்றேன். ஆனால் ஒரு கண்டிஷன்.” என மலர் கூற,

“கண்டிஷனா என்ன கண்டிஷன்?” என ராஜா கேள்வியாக கேட்க,

“நான் கேட்குறதுக்கு நீங்க அப்போ பதில் சொல்லணும். அப்போ தான் நான் சொல்லுவேன்.” என மலர் கூற,

“நீ என்ன கேட்க போற? சரி கேளு” என அவன் கூற,

“நான் கேட்குறதுக்கு மறைக்காம உண்மைய மட்டும் தான் சொல்லணும். அப்படி ஒரு வேலை சொல்லலன்னா என்கிட்ட அதைப் பத்தி சொல்ல உங்களுக்கு விருப்பம் இல்லன்னு நினைச்சுப்பேன். ஓகேவா”

“என்ன மா நீ? உன்கிட்ட சொல்ல எனக்கு எதுக்கு விருப்பம் இல்லாம இருக்க போகுது. பீடிகை எல்லாம் பலமா இருக்கு. அப்படி என்ன தான் கேட்க போற?” என ராஜா ஆவலாக கேட்க அவள் கேட்டதில் ராஜா அதிர்ந்தான்.

மௌனம் எரியும்…

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
16
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்