Loading

மௌனம் – 5

அவனின் மனசாட்சியோ ‘டேய் ரௌத்திரா வேணாம் இது தப்பு. அப்படி பண்ண கூடாது. ஒரு போலீஸா இருந்துட்டு நீயே அப்படி பண்ணலாமா? அவ வெளிய யார்கிட்டயாச்சும் சொன்னா உனக்கு தான் அசிங்கம்’’ என இவனுக்கு எதிராக பேச,

‘ஆமா தப்பு தான். எனக்கே தெரியும். ஆனா நான் தப்பான எண்ணத்துல அதை பண்ணலயே. நான் நிஜமாவா பண்ண போறேன். அந்த மாதிரி நடிக்க தான் போறேன். அவ வெளிய சொல்ற அளவுக்கு தைரியமானவளா என்ன?’ என இவன் மனசாட்சிக்கு பதில் அளிக்க ‘உன்னை திருத்த முடியாது. கடைசில நீ ஃபீல் பண்ணுவ.’ என கூறி அமைதியாகியது.

தன் திட்டத்தை நிறைவேற்ற சரியான நேரத்தை எதிர்பார்த்து காத்திருந்தான். அப்பொழுது மலரோ,

“ஹர்ஷு வாயேன் மாடிக்கு போலாம். வீட்டை சுத்தி காமி டி எனக்கு. இந்த வீட்டுக்கு நான் முன்னாடி வந்திருக்கேன் தான். ஆனா மாடிக்கு போனதில்லை” என ஹர்ஷினியிடம் கேட்க,

“இரு டி வரேன்” என கூறிக் கொண்டு அவளும் வந்தாள். அவர்கள் மாடி ஏறும் சமயத்தில் ஹர்ஷினியின் அலைபேசி அலற,

“ஹே மலர் நீ மாடிக்கு போ நான் யாரு கால் பண்றாங்கன்னு பார்த்துட்டு வரேன்.”

“சரி டி நீ பேசிட்டு வா. நான் மாடில இருக்கேன்.” என கூறிக்கொண்டு தனியாக மாடிக்கு சென்றாள் மலர். அதனைக் கவனித்த ரௌத்திரனோ ஹர்ஷினியிடம்,

“ஹர்ஷு யாரு போன்ல” என கேட்க,

“என் காலேஜ் பிரண்ட்ணா” என கூற,

‘ஹப்பாடா அப்போ இவ பேசி முடிக்க எப்படியும் ரொம்ப நேரம் ஆகும். நம்ம அதுக்குள்ள நம்ம பிளானை நடத்திருவோம்.’ என மனதில் நினைத்துவிட்டு யாருமறியா வண்ணம் ரௌத்திரனும் மாடிக்கு சென்றான். மலரைத் தேடி தன் கண்களை சுழல விட்டவனோ அவள் அங்கே ஒரு அறைக்குள் செல்வதைக் கவனித்தான்.

‘மவளே நீ செத்த டி’ என மனதில் நினைத்துவிட்டு மலரை தொடர்ந்து ரௌத்திரனும் அந்த அறைக்குள் சென்று கதவை சாத்தினான். சத்தம் கேட்டு திரும்பிய மலரோ அவனை அதிர்ச்சியுடன் நோக்க,

“என்ன டா உள்ள வந்து கதவை சாத்திட்டானே. என்ன பண்ண போறான்னு பயப்படுறியா?” என ரௌத்திரன் கேட்க,

“இப்போ எதுக்கு கதவை சாத்துனீங்க? எனக்கு பயமா இருக்கு. நான் வெளிய போகணும்.” என செல்ல போக அவளை போக விடாமல் தடுத்து நின்றான் ரௌத்திரன். ஆனால் அவனின் நகம் கூட அவளின் மேல் படவில்லை.

“இப்போ எதுக்கு இப்படி பண்றீங்க? என்ன வேணும் உங்களுக்கு?” என மலர் பயந்துகொண்டே கேட்க,

“எனக்கு என்ன வேணும்னு கேட்டா கொடுத்துருவியா. அப்போ எனக்கு ஒரு முத்தம் கொடு விட்டுடுறேன்.” என தனக்கு வராத வில்லத்தனத்தை வரவைத்து ரௌத்திரன் கேட்க,

“முத்தமா? என்ன பேசுறீங்க நீங்க? அதெல்லாம் முடியாது. ப்ளீஸ் என்னை விட்ருங்க” என இன்னும் பயந்து மலர் கேட்க,

“அப்போ நான் சொல்றத நீ கேட்கணும். கேட்பியா?” என ரௌத்திரன் அவளை மிரட்டுவதாக நினைத்து கேட்க,

“என்ன பண்ணனும் சொல்லுங்க பண்றேன்? ப்லீஸ் முத்தம் எல்லாம் கொடுத்துறாதீங்க?”

“ம்ம்ம் குட். இனிமே என்னை கிண்டலடிக்குறது வம்பிழுக்குறது இதெல்லாம் பண்ண கூடாது. புரிஞ்சுதா?” என ரௌத்திரன் அவளை மிரட்ட,

“ஐயோ சாரி இனிமே அப்படியெல்லாம் பண்ண மாட்டேன். என்னை விட்டுருங்க ப்ளீஸ். அம்மா தேடுவாங்க.”

“சரி போ. சொன்னது ஞாபகம் இருக்கட்டும். இன்னொரு தடவ இந்த கிண்டல் கேலி எல்லாம் வந்துச்சு அவ்ளோதான்.” என கூறி அவன் வழிவிட அவளும் ஹ்ம்ம் என கூறிக்கொண்டு செல்ல எத்தனித்தாள்.

‘ஹப்பாடா இனிமே நம்மகிட்ட வம்புக்கு வர மாட்ட. பார்த்தாலே பயந்து ஓட போறா.’ என நினைத்தவன் தான் நினைத்ததை முடித்த களிப்பில் சிரிக்க, இரண்டடி முன்னே நடந்த மலர் மீண்டும் இரண்டடி பின்னே வந்து முதலில் நின்ற இடத்தில வந்து நின்றவள்,

“ஒருவேளை நீங்க சொன்னதை கேட்கலைனா என்ன பண்ணுவீங்க மிஸ்டர் ரௌத்திரன்?” என சற்று திமிராகவும் கிண்டல் கலந்தவாரும் கேட்டான். அவனோ,

“என்ன இவ்ளோ நேரம் பயந்து பேசுன? அதுக்குள்ள பயம்விட்டு போச்சா?” என மீண்டும் மிரட்டுவது போல கேட்க,

“அட நான் கேட்டதுக்கு முதல்ல பதில் சொல்லுங்க.” என தெனாவெட்டாய் கேட்க அவளை சந்தேகமாக பார்த்தவன்,

“முத்… முத்தம் கொடுத்துருவேன்.” என்று தடுமாறி கூற,

“அப்படிங்குறீங்க. சரி கொடுங்க பார்ப்போம்.” என இவள் சாதாரணமா கேட்க ரௌத்திரனுக்கு தான் தூக்கிவாரிப் போட்டது.

“வாட்?” என்றவன் அதிர்ந்து முழிக்க மலரோ கலகலவென சிரித்தாள்.

“ஏய் இப்போ எதுக்கு சிரிக்குற?” என ரௌத்திரன் முறைத்தபடி கேட்க,

“வில்லத்தனம் பண்ற மூஞ்சிய பாருங்க. ஐயோ ஐயோ மிஸ்டர் ரௌத்திரன் நல்ல ட்ரை பண்ணீங்க. பட் பாவும். உங்களுக்கு வில்லன் மாதிரி நடிக்க சுத்தமா வரல.” என மலர் வயிற்றைப்பிடித்து கொண்டு சிரிக்க,

‘நம்ம பிளான் இவளுக்கு எப்படி தெரிஞ்சுது.’ என மனதில் நினைத்தவன் அவளிடம்,

“ஹே என்ன சொல்ற நீ? நான் ஏன் நடிக்கணும்?” என முறைத்துக்கொண்டு கேட்டான்.

“அதை நீங்க தான் சொல்லணும் ஈபிள் டவர்.” என சிரித்துக்கொண்டே மலர் கேட்க,

“அதெல்லாம் ஒண்ணுமில்ல. உன் மானம் முக்கியம்னு நினைச்சனா நீ முதல்ல கிளம்பு. அப்புறம் நான் உன்ன ஏதாவது பண்ணிருவேன்.” என ரௌத்திரன் மீண்டும் அதே போல் முயற்சி செய்ய,

“இப்போ நான் கத்தினேன்னு வச்சுக்கோங்க உங்க மானம் தான் போகும். பரவாயில்லையா?” தன் கையைக் கட்டிக்கொண்டு அவனை பார்த்து கேட்க,

“என் மானம் ஏன் போக போகுது?” என அவன் அசால்ட்டாக கேட்க அதில் தன் தலையிலடித்துக் கொண்ட மலரே,

“உங்களை எல்லாம் எப்படி போலீஸுக்கு வேளைக்கு எடுத்தாங்களோ? ரொம்ப தான் அறிவாளின்னு நினைப்பு. இப்போ நான் கத்துனா பாட்டியும் ஹர்ஷுவும் மேல வருவாங்க. நீங்க என்னை ஏதோ பண்ணிட்டீங்கன்னு நினைச்சி உங்கள தான் கேவலமா பார்ப்பாங்க. அதோட நிப்பாட்டுவாங்களா இல்லையே. என் மானம் உங்களால தான் போச்சுன்னு உங்களுக்கே என்னைக் கட்டி வச்சிருவாங்க. எனக்கு ஏதும் பிரச்சனை இல்ல. சரி நான் கத்துறேன்” என கூறி ஹர்ஷு… என கத்தபோக அவளின் வாயை தன் கரங்களால் மூடினான் ரௌத்திரன்.

“ஏய் கத்தி தொலைஞ்சுறாத. தயவு செஞ்சு இடத்தை காலி பண்ணு நீ” என எரிச்சளுடன் ரௌத்திரன் கூற,

“அப்படியெல்லாம் உங்கள சும்மா விடமுடியாது. கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க விடுறேன்.” என மலர் அவனை மிரட்ட,

“என்னையே மிரட்டுறியா? அப்படி எல்லாம் சொல்ல முடியாது. நீ இங்கயே இரு நான் கிளம்புறேன்.” என கூறிக்கொண்டு அவன் செல்ல போக அவன் கண்ணிமைக்கும் நொடிகளில் அவனின் கைகளை தன் துப்பட்டாவால் கட்டிவிட்டாள்.

“ஹே என்ன பண்ற. எதுக்கு என் கையை கட்டுற. நீ ரொம்ப ஓவரா பண்ணிட்டு இருக்க. கைய விடு முதல்ல.” என அவன் கோபமாய் கூறியவன் கட்டை அவிழ்க்க முயல, அவன் சுதாரிக்கும் முன்பே அவனின் இரு கைகளையும் அவள் கட்டிவிட அவனால் எதுவும் செய்ய முடியவில்லை. முடிச்சு வேறு சற்று இறுக்கமாக தான் இருந்தது.

‘குட்டி பிசாசு. பார்க்க இத்துநோண்டு இருந்துட்டு இவ்ளோ ஸ்ட்ராங்கா கட்டிருக்கா.’ என்று திட்டவும் தவறவில்லை.

“யாரு நான் ஓவரா போறேனா. சும்மா வந்த புள்ளய மிரட்டுறேங்குற பேருல ஏதோ காமெடி பண்ணிட்டு இப்போ நான் ஓவரா போறேன்னு சொல்றீங்களா?”

“ஏய் பொண்ணுக்குறதுனால தான் பொறுமையா பேசிட்டு இருக்கேன். இதே ஒரு ஆம்பளையா இருந்தா இந்நேரம் உன் மண்டைய உடைச்சுறுப்பேன்.” என அவன் சீற அதையெல்லாம் அவள் கண்டுகொண்டதாக தெரியவில்லை.

“இங்க பாருங்க மிஸ்டர் ரௌத்திரன். நிஜமா சொல்றேன். இப்போ எதுக்கு அப்படி பண்ணீங்கன்னு மட்டும் நீங்க சொல்லல. நிஜமா நான் கத்திட்டே கதவை திறந்துட்டு ஓடுவேன் கீழ. என் துப்பட்டா வேற உங்க கையில இருக்கு. யோசிச்சுக்கோங்க.” என மலர் மீண்டும் அவனை மிரட்ட,

“ஐயோ சரி விடு. சொல்லி தொலையுறேன். முதல்ல கைய விடு.” என எரிச்சலாக கூற அவளும் கட்டை அவிழ்த்தாள்.

“ஹ்ம்ம் சொல்லுங்க. எதுக்கு வராத வில்லத்தனத்தை வர வச்சு என்னை மிரட்டுனீங்க.” என ஏதோ இன்வெஸ்டிகஷன் செய்யும் அளவுக்கு ரௌத்திரனிடம் கேட்க அவனோ,

‘குட்டி சாத்தான். நான் பண்ண வேண்டியதெல்லாம் நீ பண்ணிட்டு இருக்குற. ஐயோ இந்த பிசாசுகிட்ட அசிங்கப்பட போறேன்.’ என மனதில் புலம்ப அவனின் மனசாட்சியோ , ‘நான் தான் அப்போவே சொன்னேன்ல இதெல்லாம் வேணாம்னு . கேட்டா தான இப்போ அனுபவி’ என அது பங்கிற்கு வெறுப்பேற்ற, ‘ஏற்கனவே செம கடுப்புல இருக்கேன். நீ வேற கடுப்ப கிளப்பாத.’ என மலர் மேல் இருக்கும் கோபத்தை தன் மனசாட்சியிடம் காட்டிக் கொண்டிருந்தான். வெகுநேரமாக இவன் யோசிப்பதைப் பார்த்த மலரோ,

“ஹலோ எனக்கு டைம் இல்ல சீக்கிரம் சொல்ல போறிங்களா நான் கத்தவா.” என மலர் கேட்க,

‘டேய் ரௌத்திரா சீக்கிரம் சொல்லு மானம் போனாலும் பரவாயில்ல. அப்புறம் இந்த குட்டி சாத்தான் தலையில உன்னைக் கட்டிவச்சுருவாங்க.’ என தனக்குத்தானே பேசிகொண்ண்டவன்,

“சொல்றேன். அது நீ என்கிட்ட ஓவரா வம்பு பண்ற. அது எனக்கு கடுப்பாகுது. அதான் நீ என்னை பார்த்தாலே பயப்படணும்னு அப்படி நடிச்சேன்.” என வேறு வழியின்றி வேண்டா வெறுப்பாக உண்மையைக் கூறினான். அவனின் பதிலைக் கேட்டு மீண்டும் மலர் வாய்விட்டு சிரிக்க அதில் கடுப்பானவனோ,

“இப்போ எதுக்கு சிரிக்குற?” என முறைத்துக்கொண்டு கேட்க,

“இல்ல நான் நினைச்ச மாதிரியே தான் உங்க காரணம் இருக்கு. அதை நினைச்சேன் சிரிச்சேன். ஐயோ செம காமெடி. சரி நான் போறேன் மிஸ்டர் ஈபிள் டவர்.” என கூறிக்கொண்டே அவள் வெளியே செல்ல போக,

“ஹே ஒரு நிமிஷம் நில்லு. உனக்கு எப்படி தெரிஞ்சுது நான் நடிக்க தான் செஞ்சேன்னு.” என தன் புருவத்தை சுருக்கி ரௌத்திரன் கேட்க,

“அதுவா மிஸ்டர் ரௌத்திரன். நாளைக்கு வெள்ளி கிழமை. காலைல ஏழு மணிக்கு நான் பக்கத்துல இருக்குற கோவிலுக்கு வருவேன். உங்களுக்கு பதில் வேணும்னா. நாளைக்கு அங்க வாங்க சொல்றேன். இப்போ எனக்கு நேரமில்லை நான் கிளம்புறேன். பாய் ஈபிள் டவர்” என அவனிடம் கூறிவிட்டு கீழே சென்றாள் மலர்.

‘ச்ச போயும் போயும் இவகிட்ட அசிங்கப்பட்டுட்டேனே. எல்லாம் என் நேரம். சும்மா இருந்துருக்கணும் நம்ம. பொண்ண பெக்க சொன்னா குட்டி சத்தான பெத்து வச்சிருக்காங்க. பெரிய பெரிய ரௌடியவே நடுங்க வச்ச எனக்கு இவளை பயப்பட வைக்க முடிலயே. நாளைக்கு நான் வந்தா தான. கண்டிப்பா நான் வர மாட்டேன். நீ எனக்கு சொல்லவும் வேணாம்.’ என அவளை நினைத்து உட்சபட்ச கடுப்பில் இருந்தான். மலரோ,

‘ஹாஹா ஐயோ பாவம். ஓவர் டோசா கொடுத்துட்டு வந்துட்டோமோ. பயபுள்ள நைட் முழுக்க மண்டை காய போகுது. தேவை தான் நல்ல அனுபவிக்கட்டும் யார்கிட்ட மலரா கொக்கா ‘ என மனதில் நினைத்து சிரித்துக் கொண்டாள் மலர்நிதி. அப்பொழுது தான் கால் பேசி முடித்த ஹர்ஷு,

“ஹே மலர் சாரி டி. காலேஜ் பிரண்ட் கால் பண்ணிருந்தா அதான் ரொம்ப நேரம் பேசிட்டேன்.” என கூற,

“பரவாயில்ல டி. நான் மாடிக்கு போயிட்டு வந்துட்டேன். சரி டி நேரமாயிட்டு. நான் வீட்டுக்கு கிளம்புறேன்.” என கூறிக்கொண்டு வீட்டிற்கு செல்ல வெளியே வர அங்கே ராஜா ஏதோ சிந்தித்தபடி நின்றான்.

“ஹாய் அண்ணா. நான் மலர்நிதி. உங்க பேரு” என தன்னை மலர் அறிமுகப்படுத்த,

“ஹாய் மா. நான் ராஜா.” என ராஜாவும் தன்னை அறிமுக படுத்தினான்.

“ரொம்ப தைரியமான பொண்ணு மா நீ.”

“ஏன்ணா அப்படி சொல்றீங்க?”

“ஆமா மா. ரௌத்திரன் என்னோட பெஸ்ட் பிரண்ட். ஆனா நானே அவன்கிட்ட பேச பயப்படுவேன். ஆனால் நீ நல்ல தில்லா அவன்கிட்ட மல்லுக்கு நிக்குற. அதான்.” என ராஜா கூற,

“ஓ அதுவாண்ணா. நான் எப்போதுமே அப்படி தான். ஆனா இந்த அளவுக்கு யாரையும் வம்பிழுத்தது இல்ல. உங்க ஃபிரண்ட வம்பிழுக்க காரணம் அவர்தான்.”

“ஏன் மா என்ன காரணம்?”

“அதை ஏன் கேட்குறீங்க. நேத்து வீடு பார்க்க அவர் மட்டும் வந்தாருல. அப்போ சாவி வாங்க எங்க வீட்டுக்கு வந்தாரு. அப்போ நான் தான் வந்து யார் வேணும்னு கேட்டேன். இந்த மாறி வீடு பார்க்க வந்துருக்கேன். சாவி வேணும்னு கேட்டா உடனே எடுத்துட்டு வந்துருப்பேன். அதை விட்டுட்டு ஏதோ சிதம்பர ரகசியம் சொல்ற மாதிரி வீட்டுல பெரியவங்க யாரும் இல்லையான்னு கேட்டாரு. எனக்கு வந்துச்சு கோவம். ஏன் இதை என்கிட்ட சொல்றதுக்கு என்னவாம். காலேஜ் முடிச்ச என்னை ஸ்கூல் பொண்ணு மாதிரி ட்ரீட் பண்ணுனா கோபம் வரும் தானே. அந்த கடுப்புல அவர் எங்க அப்பா கிட்ட பேசிட்டு இருக்கும் போது சின்னதா ஏதோ கலாய்ச்சேன். அதுக்கு சின்ன பிள்ளை சின்ன பிள்ளை மாதிரி பேசணும்னு என்கிட்டே முறைச்சுட்டே சொல்றாரு. அந்த காண்டு தான்” என பெரியதாய் கூறி முடிக்க ராஜாவோ,

“அது சரி இதுக்கு பின்னாடி இவ்ளோ பெரிய பிளாஷ்பேக் இருக்கா. அப்போ பையன் வசமா மாட்டிகிட்டான்னு சொல்லு.” என ராஜா கேட்க,

“ஹாஹா அப்படியும் சொல்லலாம். இப்போ கூட ஒரு பல்ப் கொடுத்துட்டு தான் வந்துருக்கேன்.” என பெருமையாய் மலர் கூற,

“இது எப்போ. அப்படி என்ன நடந்துச்சு?” என ராஜா ஆர்வமாய் கேட்க,

“அது சீக்ரட். ஆமா உங்க பிரண்ட் கோவிலுக்கு எல்லாம் போவாரா” என மலர் கேட்க,

“நீ வேற. அவனுக்கு கடவுள் பக்தி எல்லாம் கிடையவே கிடையாது. நான் கடவுள், ஜோசியம் இதெல்லாம் நம்புவேன். அவன் அப்படியே எனக்கு ஆப்போசிட். ஆமா ஏன் கேக்குற?”

“சரி அப்போ நாளைக்கு காலைல உங்க ஃபிரண்ட் கோவிலுக்கு போகுற கண்கொள்ளா காட்சியைப் பார்க்க போறீங்க.”

“அவன் கோவிலுக்கா? வாய்ப்பே இல்ல.”

“சரி நாளைக்கு நீங்களே பார்ப்பிங்க”

“அவன் போ மாட்டான். அது வேற விஷயம். ஆனால் போனாலும் என்னால பார்க்க முடியாது. நான் இன்னிக்கு மதுரைக்கு கிளம்பிருவேன்” என ராஜா கூற,

“மதுரைக்கா எதுக்கு அண்ணா?” என மலர் கேட்க,

“அட உனக்கு விஷயமே தெரியாதா. நாங்க எல்லாரும் மதுரைல தான் இருந்தோம். இவனுக்கு ட்ரான்ஸ்பர் ஆனது நால தான் இங்க தான் வந்துருக்கோம். பட் நான் மதுரை தான். அவனுக்கு மட்டும் ட்ரான்ஸ்பர் கொடுத்த்துட்டாங்க.”

“ஓ அப்படியா. ட்ரான்ஸ்பர் னு தெரியும். மதுரை னு தெரியாதே. (வெங்கடேசனுடன் பேசும் போது ரௌத்திரன் தான் மதுரையில் இருந்து ட்ரான்ஸ்பர் ஆகி வந்ததாக தான் கூறினான். மலர் தான் அவனை சைட் அடித்து கொண்டிருந்ததில் கவனிக்க மறந்தாள்.) அப்போ அந்த மினிஸ்டர் பையன் ஒரு பொண்ணை பலவந்தப்படுத்திக் கடத்திட்டு போனான்னு ஒரு கேஸ் வந்துச்சுல அவனை அர்ரெஸ்ட் பண்ணது….” என இவள் இழுத்து கேட்க,

“சாட்ஷாத் நம்ம ரௌத்திரன் தான். அவனுக்கு கோபம் அதிகமாவே வரும். அதுவும் நியாயமான கோபம் ரொம்ப அதிகமா வரும். அதான் சொன்னேன். நீ தைரியாமானவன்னு.” என ராஜா கூற,

“இதெல்லாம் எனக்கு தெரியாதே அண்ணா. இந்த விஷயம் என் பிரண்ட் ஒருத்தி சொல்லி தான் கேள்விப்பட்டேன். ஆனா அந்த மினிஸ்டர் ரொம்ப பெரிய ஆளு மதுரையே அவன் கண்ட்ரோல்ல தான் இருக்குன்னு சொன்னாங்க. அப்புறம் எப்படி இவர் அவன் பையனை அரெஸ்ட் பண்ணாரு.” என மலர் கேட்க,

“ஆமா மா. அது பெரிய பிரச்சனை ஆச்சு. இப்போ இவன் ட்ரான்ஸ்பர் ஆனதுக்கு காரணமே அந்த மினிஸ்டர் தான். அது வேற இவன் செம கடுப்புல இருக்கான். எப்போ அந்த மினிஸ்டருக்கு ஆப்பு வைக்க போறானோ. சரி அதை விடு. இது என் நம்பர்.” என அவனின் விசிட்டிங் கார்டை அவளிடம் கொடுத்து, “ஏதோ அவன் கோவிலுக்கு வருவான் னு சொன்னல. கோவில்ல வச்சு அவனை போட்டோ எடுத்து அனுப்பு நான் நம்புறேன். மேக்ஸிமம் அது நடக்க வாய்ப்பு இல்ல.” என நம்பாமல் ராஜா கூற,

“சரி நான் அவர்கூடையே செல்ஃபீ எடுத்து அனுப்புறேன். பெட்டா.” என மலர் பந்தயம் கட்ட,

“எது செல்ஃபீயா அதுவும் அவன்கூடயா. ஹாஹா அவன் என்கூடையே எடுக்க மாட்டான். போ மா நீ வேற காமெடி பண்ணிக்கிட்டு.” என நக்கலாக சிரிக்க,

“சரி நாளைக்கு நான் அனுப்புற போட்டோவை பார்த்து நீங்களே எனக்கு கால் பண்ணுவீங்க. அப்படி மட்டும் நடக்கல. என் பேரு மலர் இல்ல.” என திடமாக கூற,

“ஹாஹா பார்க்கலாம். எப்படியோ மா எனக்கு ஒரு வாயாடி தங்கச்சி கிடைச்சுட்டா. அது வரைக்கும் சந்தோஷம்.” என பாசமாய் ராஜா கூற,

“கண்டிப்பாண்ணா. எனக்கும் ஒரு அம்மாஞ்சி அண்ணா கிடைச்சுட்டாங்க.” என இவள் சிரித்தபடி கூற,

“உனக்கும் தெரிஞ்சுட்டா. சந்தோஷம்”

“ஹாஹா சரி ணா. நான் வரேன். நேரமாயிட்டு.”

“ஓகே மா. நானும் கொஞ்சம் நேரத்துல கிளம்பிருவேன். பாய் மா.”

“ஓகே அண்ணா. பாஎத்து போயிட்டு வாங்க.” என கூறிவிட்டு மலர் தன் வீட்டிற்கு சென்றாள். ஏனோ ஓர் இனம் புரியாத சகோதர பாசம் மலரின் மேல் தோன்றியது ராஜாவிற்கு. பிறகு வீட்டினுள்ளே வந்த ராஜா ரௌத்திரனைத் தேட அவனோ மடிக்கணினியில் மூழ்கியிருந்தான்.

“என்ன மச்சான் பண்ற? ஏதோ முக்கியமா பார்த்துட்டு இருக்குற மாதிரி இருக்கு.” என ராஜா ரௌத்திரன் அருகில் அமர்ந்து கேட்க,

“ஆமா டா. எல்லாம் அந்த மினிஸ்டர் பத்தி தான் டா. அவனைக் கையும் களவுமா நான் பிடிக்கலை என் பேரு ரௌத்திரன் இல்ல.” என கண்ணில் வெறியுடன் கூற,

“சரி டா என்ன பிளான் வச்சுருக்க?” என ராஜா கேட்க ரௌத்திரனோ அவனை ஒரு பார்வைப் பார்த்தான்.

“புரியுது டா புரியுது. எதையும் செய்யும் போது சொல்ல மாட்ட. செஞ்ச அப்புறம் தான் சொல்லுவ அதானே.” என அவனின் பார்வையில் தெரிந்த பதிலை கூற,

“தெரியுதுல அப்புறம் எதுக்கு கேக்குற?” என மடிக்கணினியைப் பார்த்தபடியே கூற,

“ஆமா ஆமா. உன்கிட்ட கேட்டதுக்கு சும்மாவே இருந்துருக்கலாம். சரி மச்சான் நேரமாச்சு நான் கிளம்புறேன்.” என ராஜா கூற,

“எங்க டா?” என ரௌத்திரன் கேட்க,

“எங்கயா அது சரி. டேய் உன்ன மட்டும் தான் டா ட்ரான்ஸ்பர் பண்ணிருக்காங்க. என்னை இல்ல. மறந்துட்டியா மச்சான்.” என ராஜா கூற அப்பொழுது தான் ரௌத்திரன் யோசித்தான். இனிமேல் ராஜா தன்னுடன் இருக்க மாட்டானே என. அதனை நினைக்கும் போது அவனின் மனது வருத்தம் கொள்ள அதனை தனக்குள்ளே மறைத்துக்கொண்டு,

“ஆமால நான் மறந்துட்டேன். சரி டா. பார்த்து போயிட்டு வா. ஜாக்கிரதையா இரு.” என ரௌத்திரன் கூற,

“மச்சான் நான் இனிமே உன்கூட இருக்க மாட்டேன்னு உனக்கு வருத்தமா தான இருக்கு.” என ராஜா கேட்க,

“வருத்தமா இல்லையே. இனிமே தான் நிம்மதியா இருப்பேன். கூட இருந்தா தொணதொணன்னு கேள்வி கேட்டுட்டே இருப்ப. இனிமே நான் நிம்மதியா இருப்பேன்.” என மனதில் உள்ள வருத்தத்தை மறைத்து கூற,

“என் நண்பனை நான் அறிவேன்.” என ராஜா ரௌத்திரன் தோளில் கை போட்டு கூறினான்.

“ஆமா நீ கிளம்புறேன்னு சொன்ன இன்னும் போகலையா?” என ரௌத்திரன் கேட்க,

“அதானே. கிளம்ப தான் டா போறேன். சரி டா பாய். பாட்டி எங்க, பாட்டி….” என சத்தமாக ராஜா பாட்டியை அழைக்க பாட்டியோ,

“சொல்லு டா.” என ஹாலுக்கு வந்தார். ஹர்ஷினியும் வந்தாள். ஏதோ பொருளை தேடுவது போல நடித்துக் கொண்டிருந்தாள்.

“சரி பாட்டி நான் கிளம்புறேன். என் டார்லிங்க கண்டிப்பா அடிக்கடி வந்து பார்க்குறேன் சரியா.” என ராஜா கூற,

“இப்படி தான் சொல்லுவ. ஆனால் வரவே மாட்ட போடா.” என பாட்டி செல்லமாய் கோபிக்க,

“இல்ல டார்லிங் கண்டிப்பா வரேன்.” என்றான்.

அவன் செல்கிறான் என்பதே அவனின் ஹனியின் மனதை பிசைந்தது. இருந்தும் அவனின் முகத்தைப் பார்க்கவில்லை. அது ராஜாவிற்கும் வசதியாகி போனது. தன்னவளை தன் கண்களில் நிரப்பியவாறு அங்கிருந்து விடைபெற்றுக் கொண்டு கிளம்பினான் ராஜா. அவன் சென்ற உடன் விறுவிறுவென மொட்டைமாடி சென்று அவன் செல்வதையே பார்த்து,

“ஏன் ராஜ் அப்படி சொன்னிங்க? என்னால அதை தாங்கிக்க முடியல. என் காதல் உங்களுக்கு புரியவே புரியாதா?” என கண்ணீர்விட்டு தனக்குள்ளேயே கேட்டுக்கொண்டாள். இரவு அனைவரும் சாப்பிட்டு விட்டு ஹாலில் அமர்ந்திருக்க பாட்டியோ,

“டேய் ரௌத்திரா நீ மேல உள்ள ரூம்ல இருந்துக்கோ நானும் ஹர்ஷினியும் கீழ உள்ள ரூம்ல இருந்துக்குறோம்.” என கூற,

“சரி பாட்டி கதவைப் பூட்டிட்டு படுங்க.” என கூறிக்கொண்டு மேலே உள்ள அறைக்கு உறங்க சென்றான். உள்ளே நுழையும் போதே காலையில் நடந்தது ஞாபகம் வந்தது. கூடவே மலரின் மேல் வெறியும் வந்தது.

‘அந்த குட்டி பிசாசு நான் நடிச்சேன்னு எப்படி கண்டுபிடிச்சா?” என யோசிக்க ஆரம்பித்தான். எவ்வளவு யோசித்தும் விடை கிடைக்கவில்லை.

‘ச்ச இவ்ளோ நேரம் அதை பத்தி நினைக்காம தான இருந்தேன். இப்போ திடிர்னு ஞாபகம் வருதே. ஐயோ நம்ம வேற யோசிக்க ஆரம்பிச்சா தூக்கம் வராதே. பேசாம நாளைக்கு கோவிலுக்கு போய் கேட்டுறலாமா. அது நமக்கு அசிங்கம் ஆச்சே. மழைக்கு கூட நான் இதுவர கோவில் பக்கம் ஒதுங்குனது இல்ல. போகவா வேணாமா. ஐயோ இப்படி புலம்ப வச்சுட்டாளே.’ என நினைத்து கொண்டு ரௌத்திரன் தூங்காமல் இருக்க அவனின் புலம்பலுக்கு காரணமான மலரோ சந்தோசமாக காதொலிப்பானில் பாட்டு கேட்டுக் கொண்டிருந்தாள்.

தன்னிச்சையாக அடுத்த பாடல் மாற “உன் விழிகளில் விழுந்து நான் எழுகிறேன்” எனும் பாடல் ஒலிக்க, அவளின் மனத்திரையில் காலையில் நெருக்கத்தில் பார்த்த ரௌத்திரனின் கண்கள் தோன்றியது.

‘இந்த ஈபிள் டவர நம்ம ரொம்ப தான் ஓட்டுறோமோ. எவ்ளோ பெரிய ரௌடியெல்லாம் நடுங்க வச்சவருக்கு இப்படி பல்பு கொடுத்துட்டோமே. பாவம் பயபுள்ள என்னலாம் பிளான் போட்டுருக்கு. ஒரு நிமிஷம் நானே பயந்துட்டேன். அப்புறம் தான் நடிக்குதுன்னு தெரிஞ்சுது.”

இவ்வாறு அங்கே நடந்ததை மீண்டும் நினைத்து பார்க்க அப்பொழுது,

சாரலாய் ஓர் முறை
நீ என்னை தீண்டினாய்
உனக்கு அது புரிந்ததா அன்பே

எனும் வரிகள் ஒலிக்க அவன் அவனின் கரங்களால் அவளின் இதழை மூடியது ஞாபகம் வர மலரின் முகம் சிவந்து போனது. இதுவரை அவள் உணராத உணர்வுகள் இது. சிலரிடம் தான் சட்டென மனம் ஒட்டிக்கொள்ளும். அவ்வாறு ரௌத்திரன் பால் வெகு விரைவாகவே அவளது மனம் ஒட்டிக்கொண்டது போலும். அவள் அறியாமல் அவளின் மனதில் காதலுக்கான முதல் தடம் பதிந்தது. இவ்வாறு அனைத்தையும் நினைத்து முடிக்க,

‘நாளைக்கு நம்மாளு கோவிலுக்கு வருமா வராதா. அவரை நம்பி ராஜா அண்ணாகிட்ட வேற பெட் கட்டிட்டோம். ஒருவேளை இந்நேரம் எப்படி நான் கண்டுபிடிச்சேன்னு ஈபிள் டவர் யோசிச்சுட்டு இருக்குமோ. சரி வரும்னு நம்புவோம்.’ என கூறியவளோ அவளறியாமல் அவள் கூறிய நம்மாளு என்ற வார்த்தையை கவனிக்கவில்லை. அவனின் நினைவுகளோடே உறங்க சென்றாள்.

மௌனம் எரியும்…

 

 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
9
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்