மௌனம் – 4
“சாரி காத்துல பறந்து வந்து ஒட்டிக்கிச்சு. என்னோடது தான் கொடுங்க.” என இவள் மன்னிப்பு கேட்டும் அவன் முறைத்துக் கொண்டே இருக்க அதில் கடுப்பான மலரோ,
“ஹலோ அதான் தெரியாம வந்துட்டுன்னு சொல்றேன்ல. அப்புறம் எதுக்கு முறைச்சுக்கிட்டே இருக்கீங்க. ஏதோ நான் உங்களுக்காக அந்த கவிதை எழுதுன மாதிரியும் அத லவ் லெட்டரா உங்ககிட்ட கொடுத்த மாதிரியும் முறைக்குறீங்க.” என மலர் அவனைத் திட்ட சத்தம் கேட்டு காரில் இருந்து அனைவரும் இறங்கினர்.
“என்ன ராசா ஆச்சு?” என பாட்டி கேட்க,
“ஓ உங்க பேரன் தானா. சொல்லி வைங்க பாட்டி உங்க பேரன் கிட்ட. காத்துக்கு பறந்து வந்து பேப்பர் இவங்க மூஞ்சில ஒட்டிக்கிச்சு. அதுக்கு நான் என்ன பாட்டி பண்ணுவேன். சும்மா சும்மா முறைக்குறாரு.” என பாட்டியிடம் மலர் குறைக்கூற,
“அம்மாடி அவன் எப்போவும் அப்படி தான் நீ ஏதும் நினைச்சுக்காத.” என மலரிடம் கூறிவிட்டு பின்பு ரௌத்திரனிடம்,
“டேய் அந்த புள்ள தான் தெரியாம வந்துட்டுன்னு சொல்லுதுல அப்புறம் எதுக்கு முறைக்குற.” என பாட்டி ரௌத்திரனை திட்ட பிறகு பேப்பரை மலரிடம் கொடுத்தான். மலரோ,
‘இவரை இப்படியே விடக்கூடாது. ஏதாவது வெறுப்பேத்தணுமே’ என மனதில் நினைக்க சட்டென்று யோசனை தோன்றியது. அவனோ செல்ல போக அவனைத் தடுத்து,
“ஹலோ ஒருநிமிஷம்” என இவளும் முறைத்தபடி கூற அவன் என்ன என்று பார்த்தான்.
“இப்போ எதுக்கு எனக்கு லவ் லெட்டர் கொடுத்தீங்க.” என மலர் முறைத்தபடி கேட்க,
“வாட்?” என ரௌத்திரன் கேட்க,
“இப்போ எதுக்கு எனக்கு லவ் லெட்டர் கொடுத்தீங்கன்னு கேட்டேன்” என மீண்டும் நிறுத்தி நிதானமாக கேட்க,
“ஹே என்ன பேசுற நீ? நான் உனக்கு எப்போ லவ் லெட்டர் கொடுத்தேன்?” என அவனும் முறைத்தபடி கேட்க,
“இதுல எழுதிருக்குறது காதல் கவிதை. இப்போதான் உங்க கையால என்கிட்ட கொடுத்தீங்க. அப்போ அது லவ் லெட்டர் தான” என இவள் தெனாவெட்டாய் கேட்க மற்ற மூவரும் பேவென ‘நம்ம ரௌத்திரன் கிட்ட ஒரு பொண்ணு கொஞ்சம் கூட அசராம இவ்ளோ தைரியமா பேசுதே’ என அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். அவளது கூற்றில் அவனுக்கு கட்டுக்கடங்காமல் கோபம் வர,
“வருதா? கோபம் வருதா? அப்போ இப்படி தான எனக்கும் இருந்துருக்கும். எதுனாலும் விசாரிச்ச அப்புறம் தான் ரியாக்ஷன் காட்டணும். எடுத்த எடுப்புலயே முறைக்கக் கூடாது. ஓகேவா மிஸ்டர் ரௌத்திரன். ஈபிள் டவர் மாதிரி வளர்ந்தா மட்டும் பத்தாது. யோசிச்சு முடிவவெடுக்கணும். நான் வரேன்.” என கூலாக கூறிவிட்டு ‘கொய்யால சாவி கேட்க எங்க வீட்டுக்கு தான வந்தாகணும். வா கவனிச்சுக்குறேன்.’ என மனதில் நினைத்தபடி செல்லலானாள்.
‘என்ன இவ. கொஞ்சம் கூட பயப்படாம இவ்ளோ தெனாவெட்டா பேசிட்டு போறா. ஒரு நாள் இவளுக்கு இருக்கு.’ என மனதில் நினைத்துவிட்டு மற்ற மூவரையும் பார்க்க அவர்களோ இவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.
“இப்போ எதுக்கு எல்லாரும் இப்படி பார்க்குறீங்க?” என முறைத்தபடி கேட்க,
“டேய் மச்சான் அந்த பொண்ணுக்கு ரொம்ப கட்ஸ் டா. உன்னை பேஸ் டு பேஸ் பார்த்து அதுவும் முறைச்சுகிட்டே எவ்ளோ தைரியமா பேசிட்டு போகுறா. அவ தைரியத்தை நான் பாராட்டுறேன்.” என மலருக்கு ஆதரவாக ராஜா பேச,
“அது தைரியம் இல்ல. திமிரு. வெட்டியா பேசாம எல்லாரும் வாங்க உள்ள போலாம்.” என ரௌத்திரன் கூற,
“உன்னை அடக்க அந்த திமிரு தான் சரி” என பாட்டி பொடிவைத்து பேச அவன் பாட்டியை முறைக்க,
“சரி சரி வாங்க போலாம். நல்ல நேரத்துல பால் காய்ச்சணும்.” என கூறி பாட்டி தப்பித்துவிட்டார். அவரைத் தொடர்ந்து ஹர்ஷினியோ,
“அண்ணா ஏற்கனவே அந்த பொண்ண உனக்கு தெரியுமா?” என மெதுவாக கேட்க,
“இப்போ இந்த கேள்வி ரொம்ப அவசியமா?” என ரௌத்திரன் கேட்க,
“இல்லண்ணா உன் பேரை சொல்லிட்டு போச்சே அதான் கேட்டேன்.” என்றாள். வாசல் வந்த பின்பு தான் சாவி மலர் வீட்டில் இருப்பது ஞாபகம் வர அவ்வாறே யோசித்தபடி நின்றான்.
“கதவை திற டா. ஏன் மசமசன்னு நிக்குற?” என பாட்டி கேட்க,
“இல்ல.. அது சாவி எதிர்த்த வீட்டுல இருக்கு.” என தயங்கியபடி கூற,
“சரி டா அப்போ போய் வாங்கிட்டு வா சீக்கிரம்.”
“இல்ல பாட்டி. அந்த திமிரு பிடிச்சவ வீட்டுல தான் சாவி இருக்கு. போனா ஏதாவது வம்பிழுக்குற மாதிரியே பேசுவா. டேய் நீ போய் வாங்கிட்டு வா.” என எரிச்சலுடன் கூற ராஜாவோ,
“பரவாயில்ல உன்னையே ஒரு பொண்ணு பயப்பட வச்சுருக்கா.” என வேண்டுமென்றே கூற,
“டேய் யாரை பார்த்து யாருக்கு பயம்? இந்த ரௌத்திரனுக்கு யாரைப் பார்த்தும் பயம் கிடையாது.” என முறைத்துக்கொண்டே கூற,
“அப்போ நீயே போய் கேட்கலாமே மச்சான்” என ராஜா நக்கலாக கூற,
“நானே போய் கேட்குறேன். அவளை பார்த்து நான் ஏன் பயப்படணும்.” என வீராப்பாய் கூறிக்கொண்டு சாவி வாங்க மலரின் வீட்டிற்கு சென்றான்.
“சார்” என வீட்டு வாசலில் நின்று ரௌத்திரன் அழைக்க,
“ஓ நீங்களா சொல்லுங்க யார் வேணும்.” என உள்ளிருந்து வெளியே வந்த மலர் நக்கலாக கேட்க,
“கீ வேணும்.” என எங்கோ பார்த்தபடி ரௌத்திரன் கேட்க,
“சாரி மிஸ்டர் ரௌத்திரன் எங்க வீட்டுல இப்போ நெய் இல்ல” என வேண்டுமென்றே அவனை வெறுப்பேற்ற கூற அதில் கடுப்பானவனோ,
“ஹே நான் சாவியை கேட்டேன்” என முறைத்துக்கொண்டு கூற,
“ஓ சாவியா. நீங்க தெளிவா சொல்லாம என்னை முறைக்குறீங்க.” என மலர் கேட்க,
“இப்போ சாவி கிடைக்குமா? கிடைக்காதா?” என பொறுமையிழந்து அவன் கேட்க,
“இருங்க இருங்க எடுத்துட்டு வரேன்.” என சலித்துக்கொண்டே சாவி எடுக்க சென்றாள்.
‘ரொம்ப தான் சலிச்சுக்குறா. ஏதோ இவ வீட்டு சொத்தை கேட்குறமாதிரி. சரியான குட்டி பிசாசு.’ என மனதில் மலரை அர்ச்சித்து கொண்டிருந்தான் ரௌத்திரன்.
“இந்தாங்க உங்க வீட்டு சாவி.” என அவனிடம் கொடுக்க அவனோ அவளை முறைத்தபடி வாங்கிக்கொண்டு சென்றான்.
‘அது ஏன்னு தெரில உங்கள வம்பிழுக்குறது நல்லா இருக்கு மிஸ்டர் ஈபிள் டவர்.’ என மனதினுள் நினைத்து அவளை அறியாமலே சிரித்துக் கொண்டாள். சாவி வாங்கி வந்த ரௌத்திரனிடம்,
“என்ன மச்சான்? அந்த பொண்ணுக்கூட ரொம்ப நேரமா பேசிட்டு இருந்த” என ராஜா கேட்க அதில் கடுப்பான ரௌத்திரன் தன் கை முஷ்டியை மடக்கி காண்பிக்க,
“ஹே ஹே கூல். அது பாட்டுக்கு இருக்கட்டும். இப்போ எதுக்கு ஆர்ம்ஸை டைட்டா ஆக்குற. பாட்டி நல்ல நேரம் போய்கிட்டே இருக்கு சீக்கிரம் கதவைத் திறந்து பால் காய்ச்சுவோம்.” என கூறி பயந்து பாட்டியின் பக்கம் வந்து நின்றுக் கொண்டான். பிறகு வீட்டை திறந்து கழுவி சுத்தம் செய்து பொருட்களையெல்லாம் ஓரிடத்தில் வைத்து ஒரு மணி நேரத்தில் பால் காய்ச்சு முடித்தனர்.
“ஹர்ஷினி இங்க வா” என பாட்டி அழைக்க,
“என்ன பாட்டி?” என ஹர்ஷினி கேட்க,
“இந்தா டி இந்த பால உன் அண்ணனுக்கும் அந்த ராஜா பையலுக்கும் கொடுத்துட்டு வா” என அவளிடம் கொடுத்து விட,
“நானா” என ஹர்ஷு தயக்கமாய் கேட்க,
“ஆமா டி. இதுக்குன்னு தனியா ஆளா வைக்க முடியும். போ போய் கொடுத்துட்டு வா.” என வலுக்காட்டாயமாக கொடுத்துவிட வேறு வழியின்றி வாங்கிக்கொண்டு போனாள்.
“அண்ணா பால் எடுத்துக்கோ” என ரௌத்திரனிடம் நீட்ட அவன் எடுத்துக் கொண்டான்.
“உன் பிரண்ட் எங்கண்ணா. அவருக்கும் இதை கொடுத்துரு” என அவனிடம் கொடுத்துவிட்டு நழுவ பார்க்க அவனோ,
“வெளிய தான் நின்னு கால் பேசிட்டு இருக்கான். கொண்டு போய் கொடுத்துரு” எனக்கூறி அலைபேசியில் மூழ்கினான். ஐயோவென நினைத்து கொண்டு ராஜாவிடம் பால் கொடுக்க சென்றாள். ராஜாவோ திரும்பி நின்று அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தான்.
அவனின் முகம் பார்க்கக்கூடாது என முடிவெடுத்தவளோ அவனை கூப்பிடும் பொருட்டு தன கையில் இருந்த தட்டை வேண்டுமென்றே கீழ போட சத்தம் கேட்டு ராஜா திரும்ப உடனே அங்குள்ள திண்டின் மேல் பாலை வைத்துவிட்டு உள்ளே சென்றுவிட்டாள். என்ன தான் அவளை நினைத்து கஷ்டமாக இருந்தாலும் அவளின் இந்த செயல் அவனுக்கு சிரிப்பையே வரவழைத்தது. சிறு சிரிப்புடன் அதனைக் குடிக்க ஆரம்பித்தான்.
“ஹர்ஷினி இந்தா இந்த பாலை எதிர்த்த வீட்டுல போய் கொடுத்துட்டு வா.” என அவளிடம் கொடுக்க,
“ஐயோ பாட்டி. எனக்கு யாருன்னு கூட தெரியாது. நான் எப்படி போய் கொடுப்பேன். போங்க பாட்டி.” என ஹர்ஷினி சினுங்க,
“நாம புதுசா குடிவந்துருக்கோம்னு அக்கம் பக்கத்துல தெரிய வேணாமா. அப்போதான் நாளைக்கு எதுனா ஒன்னு அவசரத்துக்கு வருவாங்க.” என பாட்டி கூற,
“அதுக்காக நான் எல்லார் வீட்டுலயும் போய் பால் கொடுத்துட்டா வர முடியும்.”
“ஏம்மா தாயே நீ எதிர்த்த வீட்டுல மட்டும் கொடு போ. உன் வயசு பொண்ணு மாதிரி தான இருக்கா. கொடுத்துட்டு பேசிட்டு வா” என பாட்டி கூற அப்பொழுது அங்கு ரௌத்திரன் வர,
“அண்ணாக்கு தான் அந்த பொண்ணு பழக்கம். அண்ணனைக் கொடுக்க சொல்லுங்க” என வாய்பொத்தி சிரித்துக்கொண்டே ஹர்ஷினி கூற,
“என்ன விளையாடுறியா? சாவி வாங்க போனதுக்கே அவ ஓவரா பேசுறா. என்னால எல்லாம் போக முடியாது. அதுக்காக நான் பயந்துட்டேன்னு யாரும் நினைக்க வேணாம். எனக்கு அவளை பார்த்தாலே கடுப்பாகுது.” என கோபத்தோடு ரௌத்திரன் கூற,
“ஏன் டி மா…. இந்த மோதல்ல ஆரம்பிச்சா எதுலயோ போய் தான் முடியும்னு சொல்லுவாங்களே. அது என்ன..?” என வேண்டுமென்றே அவனைக் கலாய்க்க தெரியாத மாதிரி பாட்டி கேட்க,
“அதுவா பாட்டி … அது… அது… அதே தான்.” என ஹர்ஷினியும் பாட்டியுடன் சேர்ந்து நக்கலாக கூற அவனோ வழக்கம் போல அவனின் அக்மார்க் முத்திரையான முறைப்பைக் கொடுத்துவிட்டு போனான்.
“அடியே உங்க அண்ணன் இதுவரை எந்த பொண்ணையும் இப்படி எல்லாம் சொன்னதில்லையே டி” என பாட்டி கூற,
“ஆமா பாட்டி. அதே தான் நானும் யோசிச்சேன்.” என ஹர்ஷினி கூற,
“அந்த பொண்ணு அழகா இருந்தா. ரொம்ப தைரியமான பொண்ணு போல. உங்க அண்ணனை சமாளிக்க அந்த மாதிரி பொண்ணு தான் கரெக்ட்” என பாட்டி கூற,
“ஆமா பாட்டி. கவலைப்படாதீங்க. அந்த மாதிரி ஒரு பொண்ணு தேடிரலாம்.” என ஹர்ஷினி கூற,
“எனக்கு இந்த பொண்ணையே பிடிச்சுருக்கு.” என பாட்டி கூற,
“என்ன பாட்டி சொல்றீங்க?” என புரியாமல் ஹர்ஷினி முழிக்க,
“எப்படியாவாது இந்த பொண்ணயே உங்க அண்ணனுக்கு செட் பண்ணிரனும்னு சொல்றேன்.” என பாட்டி தன அபிப்ராயத்தைக் கூற,
“என்னது செட் பண்ணணுமா? பாட்டி மாதிரியா பேசுறீங்க.” என ஹர்ஷினி கேட்க,
“அட போடி இவளே. என்னை என்னன்னு நினைச்ச. என் உடம்புக்கு மட்டும் தான் வயசாகிருக்கு. என் மனசு இன்னும் இளமையா தான் இருக்கு.” என இல்லாத காலரைத் தூக்கி விட்டபடி சொல்ல,
“அது சரி. இருந்தாலும் உங்களுக்கு இம்புட்டு ஸ்பீட் ஆகாது. கொஞ்சம் ஸ்லோவா போங்க பாட்டி. லவ்வ பத்தி உங்களுக்கு என்ன தெரியும். அதெல்லாம் தானா வரணும்.” என ஹர்ஷினி கூற,
“லவ்வ பத்தி எனக்கு என்ன தெரியுமாவா. அந்த காலத்துலயே நானும் என் புருசனும் ஒரு வருஷமா காதலிச்சு ஓடி போய் கல்யாணம் பண்ணிக்கிட்டோம் டி தெரியுமா.” என பாட்டி பெருமையாகல் கூற,
“நிஜமாவா பாட்டி?” என நம்பாமல் ஹர்ஷினி கேட்க,
“அட ஆமா டி…” என கூறி கொண்டிருந்த வேளையில் அங்கே ராஜா வர ஹர்ஷினியோ,
“சரி பாட்டி கொடுங்க நான் எதிர்த்த வீட்டுல போய் பால் கொடுத்துட்டு வரேன்.” என கூறிக்கொண்டு அங்கு நிற்க விருப்பமில்லாமல் சென்றுவிட்டாள்.
“என்ன இவ நான் பாட்டுக்கு என் காதல் கதையை சொல்லிக்கிட்டு இருக்கேன். இவ கேட்காம போறா.” என சத்தமாக புலம்ப,
“ஆமா உங்க கதையெல்லாம் ஓல்ட் ஸ்டைல். அதான் போர் அடிச்சுட்டுன்னு போய்ட்டா போல” என பாட்டியை வம்பிழுக்க சிரித்தபடி ராஜா கூற,
“போடா டேய். ஓல்டா இருந்தாலும் கோல்டு டா” என பெருமிதமாக பாட்டி கூற,
“ஆமா ஆமா. மேய்க்கிறது எருமை. இதுல என்ன பெருமை?” என ராஜா சலித்துக் கொண்டு கூற,
“படவா யாரை பார்த்து எருமைன்னு சொன்ன?” என பாட்டி அடிக்க வர அங்கிருந்து ஓடிவிட்டான் ராஜா. மலரின் வீட்டிற்கு சென்று வாசலில் நின்று,
“யாரவது இருக்கீங்களா?” என கேட்க மலர் வெளியே வந்து பார்த்து,
“நீங்க அந்த ஈபிள் டவரோட தங்கச்சி தான” என மறந்து போய் வாய்விட்டு உளற ஹர்ஷினியோ,
“என்ன என்ன சொன்னிங்க?” என கேட்க மலரோ, ‘ஐயோ உளறிட்டோமே’ என தன் நாக்கைக் கடித்துவிட்டு,
“அது மிஸ்டர் ரௌத்திரனோட தங்கச்சி தானேன்னு கேட்டேன்.” என சமாளிக்க நினைத்து கூற,
“இல்லையே என் காதுல வேற மாதிரி கேட்டுச்சே.” என மீண்டும் அவள் அதையே கேட்க,
‘ஐயோ இவ வேற அதையே கேட்குறாளே’ என மனதில் நினைத்துவிட்டு,
“அதெல்லாம் ஒண்ணுமில்ல. வாங்க உள்ள வாங்க.” என அழைத்தாள்.
“இந்தாங்க பால் காய்ச்சுனோம். அதான் பால் கொடுக்க சொல்லி பாட்டி அனுப்புனாங்க.” என பால் டம்ளரை மலரிடம் நீட்ட,
“ஓ அப்படியா.” என்று அதனை வாங்கிவிட்டு தன் அம்மாவை அழைத்தாள்.
“சுப்பு … கொஞ்சம் வாயேன். யார் வந்துருக்கான்னு பாரு” என சத்தமாக அழைக்க,
“யாரு உங்க தங்கச்சியா?” என அவள் பெயர் சொல்லி கூப்பிட்டதும் தங்கை என நினைத்து கேட்க மலரோ சிரித்துவிட்டு,
“வருவாங்க நீங்களே பாருங்க.” என்றாள். சமயலறையில் இருந்து கைகளை துடைத்தவாறே சுப்பு வெளியே வந்தார்.
“ஏன் டி இந்த கத்து கத்துற?” என கேட்டுக்கொண்டே வர,
“சுப்பு இவங்க எதிர்த்த வீட்டுல குடி வந்துருக்காங்க. பால் காய்ச்சுனாங்களாம். அதான் கொடுக்க வந்துருக்காங்க.” என தன் அன்னையிடம் கூற சுப்புவோ,
“ஓ அப்படியா. வா மா. உன் பேரு என்ன மா?” என சுப்பு ஹர்ஷினியிடம் கேட்க,
“அட ஆமால. நானும் அதை கேட்க மறந்துட்டேனே. ஆமா உங்க உங்க பேர் என்ன” என மலரும் கேட்க,
“என் பேரு ஹர்ஷினி.” என கூற,
“சூப்பர். அப்போ நான் ஹர்ஷுன்னு கூப்பிடட்டுமா உங்களை” என மலர் கேட்க,
“தாராளமா கூப்பிடலாம். அப்படி தான் என் அண்ணனும் கூப்பிடுவான்.” என கூறியதும் அவளின் முகம் லேசாக சிரித்து மீண்டும் இயல்பு நிலைக்கு வந்தது. அதையும் ஹர்ஷினி கவனித்துக்கொண்டாள்.
“ஆமா உங்க பேரு என்ன?” என ஹர்ஷினி மலரிடம் கேட்க,
“நான் மலர்நிதி. இந்த வாங்க போங்க எல்லாம் வேண்டாம். நான் இப்போதான் பிஎஸ்சி சைக்காலஜி முடிச்சேன்.” என மலர் கூற,
“ஓ அப்படியா சூப்பர். நானும் இப்போ தான் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் முடிச்சேன்” என ஹர்ஷினி கூற,
“சூப்பர் அப்போ நீயும் நானும் ஒரே செட்டா. வசதியா போச்சு. சுப்பு பார்த்தியா எனக்கு கம்பெனிக்கு ஆள் கிடைச்சுட்டு.” என மலர் கூற,
“இவளும் உங்கள பேர் சொல்லி தான் கூப்பிடுவாளா?” என ஹர்ஷினி சுப்புவிடம் கேட்க,
“ஆமா மா மேடம் ஏதாவது மூடவுட்டா இருந்தா மட்டும் தான் அம்மான்னு கூப்பிடுவா. இல்ல சுப்புன்னு தான் கூப்பிடுவா. ஏன் மா நீயும் உன் அம்மாவை பேர் சொல்லிதான் கூப்பிடுவியா?” என சுப்பு கேட்க,
“இல்ல மா எனக்கு அம்மா கிடையாது.” என ஹர்ஷினி கூற சுப்புவிற்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.
“மன்னிச்சுரு மா. நான் ஏதோ தெரியாம கேட்டுட்டேன்.” என சுப்பு வருந்தி கூற,
“ஐயோ என்ன மா நீங்க? மன்னிப்பு எல்லாம் கேட்டுகிட்டு. அதெல்லாம் ஒண்ணுமில்ல. நானும் என் பாட்டியை சில நேரம் பேர் சொல்லி தான் கூப்பிடுவேன்.” என்றாள் ஹர்ஷினி.
“அட அப்போ நீ நம்ம கட்சி” என மலர் ஹைஃபை கொடுத்துக்கொண்டாள்.
“சரி மா நீ பேசிட்டு இரு. உனக்கு நான் சாப்பிட ஏதாவது கொண்டு வரேன்” என சுப்பு கூற,
“ஐயோ அதெல்லாம் வேணாம். இருக்கட்டும் பரவாயில்ல.” என ஹர்ஷினி தயங்கி கூற,
“ஹர்ஷு இது நம்ம வீடு மாதிரி. இனிமே இந்த கூச்சம் மரியாதை வெட்கம் எல்லாத்தையும் ஓரம் கட்டி வச்சிரு. ஓகே” என மலர் அவளிடம் அன்புக்கட்டளை போட ஹர்ஷினியும் அதனை அன்புடன் ஏற்றுக்கொண்டாள்.
பிறகு சுப்பு கொண்டு வந்த முறுக்கை கொறித்தபடி மலரும் ஹர்ஷினியும் பேசி கொண்டிருக்க அப்பொழுது ஹர்ஷினி,
“சரி ஓகே மலர். வந்து நேரமாச்சு. நான் வீட்டுக்கு போறேன்.”
“சரி ஓகே ஹர்ஷு. அடிக்கடி வா.” என்றாள் மலர்.
“ஹே இரு. நீ மட்டும் உங்க வீட்டுல என்னை இன்ட்றோ கொடுத்தல. நான் உன்னை எங்க வீட்டுல இன்ட்றோ கொடுக்கேன். வா என்கூட.” என ஹர்ஷு மலரைத் தன வீட்டிற்கு அழைக்க,
“ஐயோ நானா. வேணாம் ஹர்ஷு.”என தயங்க,
“அதெல்லாம் கிடையாது. நீ எனக்கு சொன்னது தான் உனக்கும். இனிமே இந்த கூச்சம், மரியாதை, வெக்கம் எல்லாத்தையும் ஓரம் கட்டி வச்சிரு. ஓகே.” என்றவள், “மா மலரை தேடாதீங்க எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்.” என கூறிக்கொண்டு தன் கையோடு மலரை இழுத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றாள்.
“பாட்டி பாட்டி யார் வந்துருக்கான்னு பாருங்க.” என ஹர்ஷு சத்தமாக கூப்பிட ஹாலில் அமர்ந்திருந்த ரௌத்திரனும் ராஜாவும் யாரென்று பார்க்க மலர் வாசலில் நின்று கொண்டிருந்தாள்.
‘இந்த குட்டி பிசாச எதுக்கு ஹர்ஷு கூட்டிட்டு வரா.’ என மனதில் ரௌத்திரன் நினைக்க,
“மருமகளே மருமகளே வா வா” என ராஜா ரௌத்திரனுக்கு மட்டும் கேட்கும்படி வேண்டுமென்றே வெறுப்பேற்ற பாட மேஜை மேல் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து ராஜாவை அபிஷேகம் செய்தான் ரௌத்திரன் முறைத்துக்கொண்டே.
“ஏன் டா ஏன். எப்போதும் போல முறைச்சாலே அடங்கிருப்பேன்ல. ஏன் இப்படி. பாட்டு பிடிக்கலைனா வேற பாட்டு படிச்சுருப்பேன்ல” என ராஜா ரௌத்திரனைப் பாவமாக பார்த்தபடி கூற, ரௌத்திரனோ இன்னொரு தண்ணீர் பாட்டிலையும் ராஜாவையும் மாறிமாறி பார்க்க வாயை மூடிக்கொண்டான். சமயலறையில் இருந்து வெளியே வந்த பாட்டியோ,
“அடடே நீயா மா. வா மா. வா மா. உள்ள வா ஏன் அங்கேயே நிக்குற?” என பாட்டி கூற,
“நான் வந்தது இங்க யாருக்கோ பிடிக்கல போல.” என ரௌத்திரனை பார்த்தபடி கூற அவனோ இவளை கண்டுக் கொள்ளாமல் இருந்தான்.
‘கொய்யால எவ்ளோ சொல்றோம் அசருறான பாரேன். இரு டா உன் வாயாலேயே உள்ள வான்னு சொல்ல வைக்குறேன்.’ என மனதில் சபதம் எடுத்தபடி நிற்க,
“அட அப்படியெல்லாம் இல்லமா. உள்ள வா” என ராஜா கூப்பிட,
“இல்லண்ணா ஒருத்தங்களுக்கு சுத்தமா பிடிக்கல. நான் என் வீட்டுக்கு போறேன்.” என வேண்டுமென்றே முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு கூறி செல்லப்போக,
“ஹே மலர். நில்லு டி ப்ளீஸ்.” என கூறிவிட்டு தன பாட்டியிடம் ரௌத்திரனை பேச சொல்லுமாறு கண்ணைக்காட்ட,
“டேய் ரௌத்திரா. வீட்டுக்கு வந்தவங்கள வாங்கன்னு கேக்கணும் டா. அது தான் நம்ம பண்பாடு.” என பாட்டி அவனிடம் கண்டிப்பாய் கூற,
“அது இல்ல பாட்டி” என ரௌத்திரன் ஏதோ கூற வர அவனை தடுத்து,
“உன்னை வான்னு அந்த பொண்ண உள்ள கூப்பிட சொன்னேன். எவ்ளோ நேரம் அந்த புள்ள வாசலையே நிக்கும் பாவம்” என பாட்டி கூற வேறுவழியின்றி,
“உள்ள வா” என முறைத்துக்கொண்டு கூற மலரோ அவனை பார்த்து வெற்றி புன்னகையுடன் உள்ளே வந்தாள்.
‘சரியான குட்டி சாத்தான். என் வாயாலேயே உன்னை உள்ள கூப்பிட வச்சுட்டேன்னு தான சிரிக்குற. இரு டி உனக்கு இருக்கு. என்ன ரொம்ப சீண்டுற நீ.’ என மனதில் நினைத்துவிட்டு வெளியில் சென்று அமர்ந்தான்.
“ஆமா. உன் பேர் என்ன மா?” என மலரிடம் பாட்டி கேட்க,
“என் பேரு மலர்நிதி பாட்டி” என ரௌத்திரனின் காதில் விழவேண்டுமென சத்தமாக கூறினாள்.
“ஏன் டி மா எனக்கு நல்லா காது கேட்கும். எதுக்கு இம்புட்டு சத்தம்?” என பாட்டி கேட்க,
“ஈஈஈ சும்மா” என அசடு வழிந்தாள்.
இவ்வாறு இவர்கள் பேசிக்கொண்டிருக்க ரௌத்திரனோ, ‘இந்த குட்டி சத்தான ஏதாவது பண்ணனும். நம்மள பார்த்தாலே பயந்து ஓடணும். அந்த மாதிரி ஏதாவது பண்ணனும் என்ன பண்ணலாம்?’ என தீவிரமாக சிந்தனை செய்ய சட்டென ஓர் யோசனை தோன்ற ‘கரெக்ட் அப்படி பண்ண தான் நம்ம பக்கம் தல வச்சு கூட படுக்க மாட்டா. இரு டி உன் கொழுப்பை குறைக்குறேன். ‘ என மனதில் நினைத்து கொண்டு வன்மமாக சிரித்தான்.
மௌனம் எரியும்…