மௌனம் – 3
ஹர்ஷினியின் அழைப்புக்கு திரும்பாமல் அவ்வாறே நின்றபடி என்ன என்று கேட்டான் ராஜா.
“ராஜ் இனிமே நீங்க நிம்மதியா இருப்பீங்கல” என விரக்தியாய் கேட்க,
“இங்க பாரு ஹர்ஷினி நீ நினைக்குறது கண்டிப்பா நடக்காது. வீணா மனசுல ஆசையை வளர்த்துக்காத.” என அவள் முகம் பாராமல் அவன் பதில் கூற,
“ஏன் ராஜ் என் முகத்தைக் கூட உங்களுக்கு பார்க்க பிடிக்கலையா? இல்ல பார்த்தா உங்கள அறியாம உங்க காதல் வெளிய வந்துரும்னு பயப்படுறீங்களா?” என ஹர்ஷினி கேட்க சட்டென அவள் புறம் திரும்பினான் உணர்ச்களைக் கட்டுப்படுத்தியவாறு.
“இங்க பாரு ஹர்ஷினி. எனக்கு உன்மேல அந்த மாதிரி எந்த பீலிங்ஸும் இல்ல அவ்ளோ தான். சும்மா நீயா எதையாவது நினைச்சுட்டு இருக்காத. நான் அடிக்கடி வந்தா நீ இந்த மாதிரி ஏதாவது நினைச்சுட்டு இருப்பன்னு தான் இப்போலாம் நான் இங்க வரது கூட இல்ல.” என தன் மனதைக் கல்லாக்கி கொண்டு கூறினான்.
“நீங்க என் கண்ணுல படமா இருந்தா மட்டும் நான் உங்களை மறந்துருவேன்னு நினைக்குறீங்களா? அப்படி நினைச்சா நீங்க தான் முட்டாள். எவ்ளோ வருஷமானாலும் உங்களை மட்டும் தான் நான் மனசுல நினைச்சுட்டு இருப்பேன். நீங்க என்னைக் காதலிப்பீங்கங்குற நம்பிக்கையை விட என் காதல் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. அப்படியே நீங்க எனக்கு கிடைக்கலைனாலும் பரவாயில்ல. உங்கள சந்திச்சதுல இருந்து இப்போ வரை உங்களோட நினைவுகள் என் மனசுல ஆழமா பதிஞ்சுருக்கு. அந்த நினைவுகளே எனக்கு போதுமானது.” என்று கலங்கி கூறுபவளுக்கு என்ன கூறுவது என தெரியாமல் அங்கிருந்து சென்றுவிட்டான் ராஜா.
‘ஹ(ர்ஷி)னி எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் டி. ஆனால் நான் உன்ன ஏத்துக்க முடியாத நிலைமைல இருக்கேன். அதை உனக்கு எப்படி சொல்லி புரிய வைப்பேன். நான் அந்த காரணத்தை உங்கிட்ட சொன்னா. அப்போ நானும் உன்னை விரும்புறேன்னு உனக்கு தெரிஞ்சுதுன்னா நீ இன்னும் என்னையே நினைச்சுட்டு இருப்பன்னு தான் உன்னைப் பிடிக்காத மாதிரியே நடந்துக்குறேன். சாரி டி ஹனி. சொல்லப்போனா காதலை சொல்லவும் முடியாம சொல்லாம இருக்கவும் முடியாம நான் தான் ரொம்ப கஷ்டப்படுறேன். உன்ன அடிக்கடி பார்த்தா உன்மேல உள்ள காதல் கூடிட்டே தான் போகுது. அதான் நான் அடிக்கடி வராம இருக்கேன். லவ் யூ ஹனி’ என மானசீகமாக தன் காதலிக்கு தன் காதலையும் அதனை ஏற்காமல் அவளை கஷ்டப்படுத்துவதற்கு மன்னிப்பும் கேட்டுக் கொண்டிருந்தான்.
அப்பொழுது அங்கு வந்த ரௌத்திரன் அவன் ஏதோ யோசனையில் வருவதைப் பார்த்து,
“என்ன டா என்ன யோசனை?” என கேட்க அதனைக் கவனிக்காத ராஜா சிந்தனையில் இருந்தான்.
“டேய் ராஜா உன்ன தான் கேட்குறேன் ” என ரௌத்திரன் அவன் தோலை தொட்டு உலுக்க அப்பொழுது தான் நினைவிற்கு வந்தான்.
“மச்சான் சொல்லு டா” என ராஜா கூற,
“நான் கூப்பிடுறது கூட தெரியாத அளவு என்ன டா யோசனை?” என ரௌத்திரன் கேட்க,
“அது… அது… வந்து டா.. ஹான் உன்னை பிரிஞ்சு இனிமே இருக்க போறேன்ல. அதான் பீலிங்கு” என வராத கண்ணீரைத் துடைத்துக்கொண்டு கூற ரௌத்திறனோ நம்பாத பார்வை பார்க்க,
“உனக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா டா. உன் நண்பன் அதுவும் உனக்காக பீல் பண்ணி பேசுறானே. கொஞ்சமாச்சும் ரியாக்ஷன் காட்டுறியா. இந்த ரியாக்ஷனே காட்டாத மூஞ்சிய எங்க டா வாங்குன.” என ராஜா கேட்க அதைக் கண்டுகொண்டால் அவன் தான் ரௌத்திரனே இல்லையே. வழக்கம் போல் அதனை சட்டை செய்யாமல்,
“வந்து வேலைய பாருடா” என கூறிவிட்டு சென்றுவிட்டான்.
“இவன்கிட்ட போய் பீலிங்ஸ எதிர் பார்த்தேன்ல என்னை எதையாவது வச்சு தான் அடிக்கணும்” என தனக்கு தானே பேசிக்கொள்ள அங்கே கையில் காபியுடன் வந்த மங்களம் பாட்டி,
“ராஜா இந்த செருப்பு வெளக்கமாறு இந்த மாதிரி ஏதாவது தேவைப்படுதா நான் வேணும்னா எடுத்துட்டு வரவா” என சிரிப்பை அடக்கிக்கொண்டு கேட்க,
“டார்லிங் உனக்கு வாய் கொழுப்பு அதிகமாயிட்டு.” என அவர் கையில் இருந்த காபியை வாங்கி குடித்தபடி கூறினான்.
“இல்ல ராசா ஏதோ என்னால முடிஞ்ச உதவி.” என மீண்டும் பாட்டி அவனை கிண்டல் செய்ய,
“உன் பேரனுக்கும் உன்ன மாதிரி பேச கத்துக்கொடு அது போதும்.” என்றான்.
“அதுக்கு நான் என்ன டா பண்ண முடியும். அவனுக்கு வர போற மகராசி தான் அவனை மாத்தணும்.” என பாட்டி தன் கவலையை இங்கே கூறிக்கொண்டிருந்த வேளையில் அங்கே மலரோ,
“இப்போ என்ன மாத்தணும் அவ்ளோதானே… மாத்திட்டா போச்சு.” என மலர் கூறிக்கொண்டிருந்தாள்.
“போ மலரக்கா நீ எப்போவும் இப்படி தான் பண்ற. எப்போவும் நீ வைக்குற டீபி(DP)ல நான் நல்லா இல்ல. நீ மட்டும் அழகாயிருக்க” என முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டிருந்தாள் பத்து வயது சிறுமி பிங்கி.
“பிங்கி பேபி அப்படி எல்லாம் இல்ல செல்லம். இனிமே நம்ம ரெண்டு பெரும் அழகா இருக்குற போட்டோ வைக்குறேன். இதோ மாத்திட்டேன் பாரு.” என தன் மொபைலை அவளிடம் காட்டிய பின்பு தான் பிங்கியின் முகத்தில் சிரிப்பே வருகிறது.
“மலரக்கா அம்மா கூப்பிடுறாங்க நான் அப்பறமா வரேன்.” என மலரின் கன்னத்தில் முத்தம் கொடுத்துவிட்டு ஓடினாள்.
“ஏன் டி உன் வயசு பொண்ணுங்க எல்லாம் அவ அவ அவங்க ஆளுக்கூட சுத்திட்டு கடலைப் போட்டுட்டு இருக்காளுங்க. நீ என்ன டா னா இன்னும் சின்ன பசங்க கூட விளையாடிட்டு இருக்க” என தலையில் அடித்தபடி சுப்புலட்சுமி கூற,
“சுப்பு ஒரு அம்மா மாதிரியா நீ பேசுற. நான் அந்த மாதிரி ஏதும் பண்ண மாட்டேங்குற தைரியத்துல சொல்றியோ” என மலர் கேட்க,
“அதெல்லாம் இல்ல டி. நீ தப்பா எந்த முடிவும் எடுக்க மாட்டன்னு எனக்கு தெரியும். அப்புறம் எதுக்கு டி நான் பயப்படணும். நீ எந்த முடிவு எடுத்தாலும் எனக்கு ஓகே தான்.” என அவளின் தலையை வருடியவாறு கூற,
“அப்படியெல்லாம் நம்பாத சுப்பு. திடிர்னு ஒரு நாள் எவனையாவது இழுத்துட்டு ஓடி வந்துருவேன் பார்த்துக்கோ.” என அவள் விளையாட்டாக கூற,
“யாரு நீயா?” என கேட்டவாறு அவளை மேலும் கீழும் ஒரு பார்வை பார்த்துவிட்டு “நீ அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்ட” என வாய் பொத்தி சிரித்தவாறு கூற,
“சுப்பு நீ இப்படியே நம்பிகிட்டு இரு. ஒரு நாள் நான் சொன்னதை செய்யுறேன்.” என சவாலாக கூற,
“நீ எப்படியும் என்ன செஞ்சாலும் என்கிட்டே சொல்ல போற அப்புறம் என்ன. மூடிட்டு போய் வேலைய பாரு டி” என கூறிவிட்டு சுப்பு சென்றுவிட்டார்.
‘எது மூடிட்டு போகவா. வீட்டுலயும் மரியாதை இல்ல. வெளியவும் மரியாதை இல்ல.’ என தனக்கு தானே புலம்பிக் கொண்டாள்.
____________________
அங்கே,
“கவலைப்படாதீங்க பாட்டி. அதெல்லாம் நடக்கும் போது நடக்கும். சரி பாட்டி நான் அவனுக்கு ஹெல்ப் பண்ண போறேன்.” என கூறி மேலே சென்றான்.
ஹர்ஷினி இருப்பதால் தயங்கியபடி சென்றவன், “மச்சான்” என வெளியே நின்றே அழைக்க,”உள்ள வா டா” என குரல் கொடுத்தான் ரௌத்திரன். அப்பொழுது தான் முதல் முறை பார்ப்பது போல் ஹர்ஷினியிடம்,
“என்ன ஹர்ஷினி எப்படி இருக்க?” என இவன் நலம் விசாரிக்க அவளோ,
‘அடப்பாவி எப்படி நடிக்குறான் பாரு. சரியான பிராடு’ என மனதினுள் அர்ச்சித்து பதில் சொல்லாமல் இருக்க,
“ஹர்ஷு அவன் உன்ன தான் கேட்குறான். நீ என்ன எதையோ யோசிச்சுட்டு நிக்குற” என ரௌத்திரன் கேட்க,
“அது ஒண்ணுமில்லண்ணா. ஏதோ ஒரு யோசனைல இருந்தேன்.” என ரௌத்திரனிடம் கூறிவிட்டு பின் ராஜாவிடம்,
“நான் தான ரொம்ப நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க?” என அழுத்தமாய் கூறி கேட்க,
“நல்லா இருக்கேன்.” என கூறிவிட்டு “சரி மச்சான் வா வேலைய பாப்போம்.” என ரௌத்திரனை அழைக்க,
“டேய் எங்க டா கூப்பிடுற. இங்க தான் வேலை. இங்க இருக்குற திங்ஸ் எல்லாம் பேக் பண்ணனும்.” என ரௌத்திரன் கூற,
“எது இங்கயா?” என அதிர்ச்சியாக கேட்டான்.
“ஆமா டா இங்க தான். இதுக்கு ஏன் டா ஷாக் ஆகுற?”
“அது ஒண்ணுமில்ல மச்சான் சும்மா தான்.” என கூறிவிட்டு மனதில்,
‘ஐயோ இவ வேற சும்மா இருக்க மாட்டாளே. தப்பி தவறி கூட அவளை பார்த்துற கூடாது’ என நினைத்து கொண்டிருக்க அவனின் மேல் தன் கையில் இருந்த துணியை வீசினாள் அவனின் ஹனி. இவன் யாரென்று நிமிர்ந்து பார்க்க அவளோ இவனை பார்த்து கண்ணடித்து விட்டு தன் வேலையைத் தொடர்ந்தாள்.
‘ஆஹா இவ ஆரம்பிச்சுட்டா. திரும்பாத டா ராஜா.’ என தனக்குள் கூறிக்கொண்டு வேலையைப் பார்க்க ஆரம்பித்தான். சிறிது நேரம் கழித்து ஏதோ எடுப்பது போல் ராஜாவின் அருகில் வந்தவள் அவனின் கையை கிள்ளிவிட்டு எதுவும் தெரியாதது போல் போக அவனோ,
“ஆஆ அம்மா ” என கத்திவிட்டான்.
“என்னாச்சு டா?” என ரௌத்திரன் அவனிடம் கேட்க ராஜாவோ என்ன சொல்வது என தெரியாமல்,
“பூச்சி கடிச்சுட்டு டா வேற ஒண்ணுமில்ல.” என சமாளிக்க,
‘நீயெல்லாம் ஒரு போலீசு’ என அவன் சிந்தையில் ஓடும் கேள்வி அவன் பார்வையிலே தெரிய,
‘ஐயோ இவன் வேற கேவலமா பார்க்குறானே.’ என மனதில் நினைத்துவிட்டு,
“மச்சான் நீ என்ன நினைக்குறன்னு உன் பார்வையிலேயே எனக்கு புரியுது. ஆனாலும் அது ஏதோ விஷ பூச்சி மாதிரி இருந்துச்சு அதான் டா கத்திட்டேன்” என ஹர்ஷினியை முறைத்தவாறு கூற,
“சரி சரி நீ வேலைய பாரு நான் இப்போ வந்துடுறேன்.” என கீழே சென்றான் ரௌத்திரன்.
‘இவளை இப்படியே விட்டா கண்டிப்பா என்னை மறக்க மாட்டா. சாரி ஹனி’ என மனதினுள் தான் பேச போகும் வார்த்தைகளுக்கு மன்னிப்பு கேட்டவன்,
“இங்க பாரு ஹர்ஷினி. நான் பொறுமையா உனக்கு சொல்லி புரிய வைக்கலாம்னு பார்த்தா நீ ரொம்ப ஓவரா பண்ணிக்கிட்டு இருக்க. இப்படி எல்லாம் பண்ணி என்னை மயக்க ட்ரை பண்ணாத.” என இவன் வார்த்தைகளை வேண்டுமென்றே கொட்ட அவ்வார்த்தைகள் ஹர்ஷினியின் மனதை முட்களாய் குத்தி கிழித்தன.
“என்ன சொன்னிங்க? மயக்க நினைக்குறேனா? என்னை பார்த்தா சொன்னிங்க? சொல்லுங்க அப்படி சொல்ல எப்படி மனசு வந்துச்சு?” என கண்களில் நீர் வழிய அவனைப் பார்த்து கேட்டாள்.
“அப்புறம் என்ன? நான் தான் வேணாம்னு சொல்றேன்ல. அதுக்கு அப்புறமும் இப்படி பண்ணா நான் வேற என்ன சொல்ல.” என தன் மனதைக் கல்லாக்கி கொண்டு கூற,
“ஒரு பொண்ணு உண்மையா காதலிச்சு அவளா வந்து அவ காதலை சொன்னா அது உங்களுக்கு கேவலமா தெரியுதுல. இனி உங்க முகத்தை ஏறெடுத்து பார்த்தா கூட என்னை செருப்பால அடிங்க” என கூறிவிட்டு அழுதுகொண்டே மாடிக்கு சென்றுவிட்டாள்.
‘என்னை மன்னிச்சுரு ஹனி. எனக்கு என் நண்பன் நல்லா இருக்கனும். அவன் உயிர்க்கு ஆபத்துன்னு தெரிஞ்சும் அத எப்படி ஹனி மா நான் பண்ணுவேன். உங்கிட்ட உண்மையை சொன்னா நீ புரிஞ்சுப்ப தான். ஆனால் என்னை நினைச்சு கடைசி வர நீ இப்படியே இருந்துருவியோன்னு எனக்கு பயம். எனக்கு வேற வழி தெரியல. வேணும்னு தான் உன்னை காயப்படுத்தி பேசுறேன். அப்போதான் நீ என்னை வெறுத்து வேணாம்னு சொல்லுவ. மன்னிச்சுரு ஹனி’ என தனக்குள் பேசியவன் தலையில் வைத்து அங்கேயே மௌனமாய் கண்ணீர் வடித்தான்.
பின்பு ரௌத்திரன் வரும் சத்தம் கேட்டு தன் கண்களைத் துடைத்துக் கொண்டான். இருந்தும் அவனின் கண்களைப் பார்த்து கண்டுபிடித்துவிட்டான் ரௌத்திரன்.
“எதுக்கு கண்ணு கலங்கியிருக்கு? என்னாச்சு?” என்று கேட்க சொல்வதரியாமல் முழித்தான் ராஜா.
“அது வந்து மச்சான்…” என ராஜா இழுக்க,
“பூச்சி கடிச்சது ரொம்ப வலிக்குதா” என அவனாகவே ஒரு காரணத்தைப் புரிந்து கொண்டு கேட்க அவனும் ஆமாம் என தலையசைத்தான்.
“சரி இதை சாப்பிடு” என கையில் வெற்றிலையையும் மிளகையும் மடித்து கொடுத்து விட்டு போனான். ராஜாவின் கண்களோ மேலும் கலங்கின.
‘என்ன தான் நீ வெளிய என்னை திட்டுனாலும் முறைச்சாலும் உன் மனசு இது தான் டா. பூச்சி கடிச்சுச்சுன்னு சொன்னதுக்கு ஏதும் ஆகிறக்கூடாதுன்னு நினைச்சு இதை சாப்பிட சொல்லி கொடுத்துட்டு போறல. என் காதலை விட நீ தான் மச்சான் எனக்கு முக்கியம். உன் உயிரை விட என் காதல் எனக்கு பெருசு இல்ல’ என மனதில் தன் நண்பனை நினைத்து பெருமிதம் கொண்டான்.
ஒருவழியாக சில மணி நேரத்தில் எல்லா பொருட்களையும் மூட்டைக் கட்டி விட்டனர். நால்வரும் ஹாலில் இருந்தனர். ஹர்ஷினி மறந்தும் கூட ராஜாவை பார்க்கவில்லை. என்ன தான் வேண்டாம் என்று சொன்னாலும் காதல் கொண்ட ராஜாவின் மனது அவளின் பார்வைக்கு ஏங்க தான் செய்தது. எப்பொழுதும் துறுதுறுவென பேசும் தன் தங்கை அமைதியாய் இருப்பதைக் கண்ட ரௌத்திரன்,
“ஹர்ஷு உனக்கென்னாச்சு ஏன் ஒரு மாதிரி இருக்க?” என அவளிடம் கேட்க அவளோ,
“இனிமே இந்த வீட்டுல இருக்க மாட்டோம்ல. ஏறிட்டு கூட பார்க்கமாட்டோம் அதான்.” என அழுத்தி கூற ராஜாவின் மனம் வலித்தது.
“சரி மச்சான். அப்போ நான் கிளம்புறேன். காலைல வரேன் உங்களை வழியனுப்ப” என ராஜா கூற,
“வழியனுப்ப வரியா. நாளைக்கு அங்க பால் காய்க்கனும் அதனால நீயும் எங்க கூட திருநெல்வேலி வரணும்” என
ரௌத்திரன் கூற,
“இல்ல மச்சான் நான் இன்னொரு நாள்..” என அவன் சொல்லும் முன்பே பாட்டி அவனைத் தடுத்து,
“நீ இன்னொரு நாள் வந்து கிழிச்சது போதும். ஒழுங்கா நாளைக்கு வா. அதுக்கு அப்புறம் எப்போ வரணுமோ வந்துக்கோ” என பாட்டி கரராக கூற,
“சரி பாட்டி ” என வேறு வழியின்றி ஒப்புக்கொண்டான்.
“சரி நான் போயிட்டு அப்போ காலைல வரேன்” என ராஜா செல்லப்போக,
“டேய் வீட்டுல தனியா தான இருப்ப. இங்கயே தங்கு.” என ரௌத்திரன் கூற,
“இல்ல மச்சான் அது”
“டேய் உன்ன தங்குறியான்னு கேட்கல. தங்குன்னு சொல்றேன்” என முறைப்புடன் கூற ராஜாவும் சரி என்றான்.
பின் அனைவரும் சாப்பிட்டு விட்டு உறங்க சென்றனர். நித்ராதேவி பாட்டியையும் ரௌத்திரனையும் ஆட்கொள்ள மற்ற இரு ஜீவன்கள் உறக்கமின்றி தவித்தனர். தன்னைக் கீழ்த்தரமாக நினைத்துவிட்டானே என ஹர்ஷினியும் ஹனியை காயப்படுத்திவிட்டோமே என ராஜாவும் மனதினுள் புழுங்கிக் கொண்டிருந்தனர்.
ஒரு மணி நேரமாக புரண்டு புரண்டு படுத்து பார்த்தும் உறக்கம் வராத காரணத்தால் ராஜா மொட்டை மாடிக்கு செல்லலாம் என யோசித்துவிட்டு சென்றான். மாடி கதவு ஏற்கனவே திறந்திருப்பதைக் கண்டவன் யோசனையோடே சென்று பார்க்க அங்கே அவனின் ஹனி நிலவை வெறித்தபடி கண்களில் கண்ணீருடன் நின்றுக் கொண்டிருந்தாள். அவளை அவ்வாறு பார்க்க ராஜாவின் மனது வலித்தது. அரவம் கேட்டு திரும்பிய ஹர்ஷினி அது ராஜா என அறிந்த உடனே அவனை பார்க்காதவாறு தன முகத்தை திருப்பி கொண்டாள். அவன் வரவும் அவள் கீழே செல்ல எத்தனிக்க அவளின் அவனோ,
“ஹர்ஷினி என்னை மன்னிச்சுரு நான் அப்படி பேசியிருக்க கூடாது தான்.” என தன் மன ஆறுதலுக்காக அவளிடம் மன்னிப்பு வேண்ட அவளோ எதுவும் சொல்லாமல் மௌனமாய் சென்றுவிட்டாள். தன்னவளின் ஒதுக்கம் தன்னை காயப்படுத்தினாலும் அது தன் நண்பனின் நன்மைக்கே என நினைத்து மனதை தேற்றிக் கொண்டான். இரவின் தனிமையில் தன் துயருக்காக ஆறுதல் தேடியவனோ அவ்வாறே உறங்கியும் போனான். கீழே சென்ற ஹர்ஷினியும் அவனின் நினைவுகளை நினைத்தபடி உறங்கிபோனாள்.
இரவின் பனி நிலாமகளின் மேனியைத் துளைத்ததோ என்னவோ அதனை சுகமாக்கும் பொருட்டு ஆதவன் தன் கதிர்களை போர்வையாக போர்த்தி கதகதப்பு ஏற்படுத்திக் கொண்டிருந்த நேரம் கண்விழித்த ரௌத்திரனோ அருகில் தன் நண்பன் இல்லாது தேட பின் எங்காவது சென்றிருப்பான் என நினைத்துவிட்டு உடற்பயிற்சி செய்ய மொட்டைமாடி வந்தான்.
அங்கே உட்கார்ந்தபடி உறங்கும் தன் நண்பனை பார்த்து அதிர்ச்சியானவனோ,
“ராஜா டேய் ராஜா” என அவனின் தோல் உலுக்க பதறிப்போய் கண்விழித்தான் ராஜா.
“டேய் ஏன் டா இங்க உக்காந்து தூங்குற?” என ரௌத்திரன் கேட்க,
“இல்ல டா காத்து இல்லையேன்னு விடியற்காலையில தான் வந்து உட்காந்திருந்தேன். அப்படியே தூங்கிட்டேன் போல.” என சமாளித்தான்.
“என்னாச்சு உனக்கு? நானும் நேத்துல இருந்து உன்னை கவனிச்சுட்டு தான் இருக்கேன்.” என அவனிடம் கேட்க,
“எனக்கென்ன டா? என் மச்சான் நீ இருக்கும் போது எனக்கென்ன கவலை? அதெல்லாம் ஒண்ணுமில்ல.” என போலியாய் சிரித்துக்கொண்டு கூற,
‘எப்படினாலும் என்கிட்டே சொல்லி தான ஆகணும் நீ’ என்கிற ரீதியில் ரௌத்திரன் அவனை பார்க்க இதற்குமேல் இங்கிருந்தால் கண்டுபிடித்து விடுவான் என அஞ்சி ராஜாவோ,
“நான் பிரெஷ் பண்ணிட்டு வரேன் மச்சான்” என கூறி கீழே சென்றுவிட்டான். பின் அனைவரும் ஒருவழியாக கிளம்பி முடித்து திருநெல்வேலி செல்ல ஆயத்தமானார்கள். லாரியில் எல்லா பொருட்களையும் ஏற்றிவிட்டு அது முன்னே செல்ல, பின்னே நின்ற காரில் முன் இருக்கையில் ஓட்டுநர் அருகில் ராஜாவும் பின் இருக்கையில் பாட்டி, ஹர்ஷினி, ரௌத்திரன் மூவரும் அமர அனைவரும் நெல்லை நகரம் நோக்கி பயணமாயினர்.
நான் வாங்கும் சுவாசங்கள்
எல்லாம் நீ தந்த காற்று
நீ இன்றி வாழ்ந்திட இங்கு
எனக்கேது மூச்சு
ஆகாயம் நீர் நிலம் யாவும்
அழகே உன் காட்சி
அலை பாய்ந்து நான் இங்கு வாட
அவை தானே சாட்சி
நீ இல்லாத நானே
குளிர் நீர் இல்லாத மீனே
நீ ஓடை போல கூட வேண்டுமே
காதலா… இதுதான் காதலா
காதலா… இதுதான் காதலா
என்னும் பாடல் வரிகள் காரில் ஒலிக்க அவ்வரிகள் இருவரின் நெஞ்சில் முள்ளாய் குத்தியது. கண்ணாடி வழியே ராஜா ஹனியின் முகம் நோக்க அவளோ ஜன்னலின் வழியே வேடிக்கை பார்த்தபடி யாரும் அறியா வண்ணம் தன் கண்ணீரைத் துடைத்து கொண்டிருந்தாள்.
மதுரை மாநகரின் ஒதுக்குபுறமாக அமைந்திருந்த பங்களாவில் மினிஸ்டருடன் நாலைந்து காவலர்கள் ஆலோசனை செய்து கொண்டிருந்தனர்.
“யோவ் என்னையா பண்ணிட்டு இருந்திங்க. என்ன தைரியம் இருந்தா என் பையனையே அர்ரெஸ்ட் பண்ணிட்டு போயிருப்பான்.” என மினிஸ்டர் கொதிப்புடன் பேசிக்கொண்டிருக்க,
“சார் நீங்க கவலைப்படாதீங்க . அதான் அவனை ட்ரான்ஸபர் பண்ணிட்டீங்களே உங்க பவர் வச்சு. இனிமே பிரச்சனை இருக்காது.” என காவல் உடையில் இருந்த ஓர் அடிமை கூற,
“ஆமா யா இருந்தாலும் எனக்கு மனசு ஆற மாட்டேங்குது. அவனை இந்த சஸ்பெண்ட் எல்லாம் பண்ண முடியாதா?” என கோபத்துடன் மினிஸ்டர் கேட்க,
“ஐயா அது வந்து. நம்ம தம்பி பண்ணதும் தப்பு தான் ஐயா. காரணம் இல்லாம அர்ரெஸ்ட் பண்ண்ணா தான் சஸ்பெண்ட் பண்ணுவாங்க. நியாயப்படி அவனை ட்ரான்ஸபர் கூட பண்ணிருக்கமாட்டாங்க. ஏதோ நீங்க சொன்னதுனால தான் இதுவே நடந்துருக்கு.” என பவ்யமாய் இன்னொரு காக்கிசட்டை அடிமை கூற,
“சரி சரி. போங்க. பேருக்கு தான் நான் மினிஸ்டர். ஒரு போலீஸ்காரனை சஸ்பெண்ட் பண்ண கூட முடில என்னால. அந்த ரௌத்திரன வேற எதுலையாவது நான் சிக்க வைக்குறேன்.” என அவனின் மேல் உள்ள கொலைவெறியில் கூறினார்.
ரௌத்திரனோ தன் குடும்பத்துடன் இன்னும் அரைமணி நேரத்தில் நெல்லையை அடையும் தூரத்தில் பயணித்துக் கொண்டிருந்தான். அங்கே நம் மலரோ எப்பொழுதும் போல் தன் சுப்புவிடம் வம்பு வார்த்து கொண்டிருக்க அப்பொழுது அவளின் தோழி விதுஷா அவளுக்கு அழைப்பு விடுத்தாள்.
“ஹே விது சொல்லு டி” என மலர் கூற,
“அடியே அன்னைக்கு ஆசையா என் காதலை பத்தி உன்கிட்ட சொல்ல வந்தா நீ பாட்டுக்கு என்னை கலாய்ச்சுவிட்டுட்டு தூங்க போய்ட்ட. செம காண்டுல இருக்கேன்” என விது குறைக் கூற,
“சரி சரி இப்போ கேட்குறேன். சொல்லு” என்றாள் மலர்.
“அதுக்கு உனக்கு பனிஷ்மென்ட். நீ தான் நல்ல கவிதை எழுதுவேல. என் ஆளுக்கு நான் கொடுக்க ஒரு கவிதை எழுதி கொடு”,
“அட பக்கி இதுக்கு தான் இந்த வரத்து வந்தியா. சரி எழுதி தொலைக்குறேன்.”
“ஈஈஈ உம்மா. எழுதி எனக்கு அனுப்பிரு.” என கூறி விது அழைப்பை துண்டிக்க இவளோ ஒரு பேப்பர் பேனா எடுத்து கொண்டு வாசலில் வந்து அமர்ந்து கவிதை யோசிக்கலானாள். சில நிமிட யோசனைக்கு பிறகு,
உன் இதயக்கூண்டிலே
கூண்டுக்கிளியாய் அடைந்திட
ஆசை கொள்கிறேன்…!
கதவினை திறப்பாயா என
எதிர்ப்பார்த்து வாசலிலேயே
காத்திருக்கிறேன்..
சிறைப்பட துடிக்கும் இதயமாய்…!
திறந்துவிட்டாய் எனில் சாகும்
வரை வெளிவர மாட்டேன்…!
நீயே உன் காதலினால் என்னை
கொன்றுவிடு கண்ணாளனே…!
என ஒரு காதல் கவிதையினை எழுதியவள் அதனை அவளே படித்து பார்த்து “பரவாயில்ல நல்லா தான் எழுதுறோம்” என தனக்குத்தானே கூறிக்கொண்டிருக்க அப்பொழுது எதிர் வீட்டு வாசலில் கார் ஒன்று வந்து நின்றது.
‘யாருடா இது காருல வந்து இறங்குறாங்க’ என்ற யோசனையுடன் பார்த்து கொண்டிருக்க முதலில் இறங்கியது ரௌத்திரனே.
‘அட நம்ம ஈபிள் டவரு.’ என நினைத்தபடி பார்க்க அந்நேரம் காற்று பலமாக அடிக்க இவள் மடியில் இருந்த கவிதை எழுதிய காகிதம் காற்றில் பறந்து ரௌத்திரனின் முகத்தில் ஒட்டிக்கொண்டது. அவனோ பேப்பரை தன் முகத்தில் இருந்து எடுத்து பார்த்து அதிலுள்ள கவிதையை வாசித்து எங்க இருந்து வந்துச்சு என்ற யோசனையில் சுற்றி முற்றி பார்க்க அவனின் கண்களில் சிக்கியது நம் மலர்நிதியே. அவனோ இவளை தீயாய் முறைக்க,
‘ஆத்தி போயும் போயும் இவர் மூஞ்சிலயா பேப்பர் போய் ஒட்டணும். ஐயோ முறைக்குறாரே’ என மனதில் நினைத்தபடி அதனை வாங்க அவனை நோக்கி மெல்ல அடிமேல் அடிவைத்து சென்றாள்.
மௌனம் எரியும்…