Loading

மௌனம் 2

சிறிது நேரத்தில் மலரையும் நித்ரன் ஆட்கொள்ள அவளும் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றாள். நேரம் கடக்க ஆதவன் தன் ஒளிக்கதிர்களை நிலமகளின் மேல் பரப்பிவிட்டு தன் பணியை செவ்வனே செய்து கொண்டிருந்தான். சீக்கிரம் எழுந்து குளித்து கிளம்பியவன் தன் பாட்டியிடம்,

“பாட்டி நான் திருநெல்வேலி போயிட்டு வீடு எப்படி இருக்குன்னு பார்த்துட்டு வரேன்.” என அவன் கூற,

“சரி ராசா பார்த்துப் போய்ட்டு வா” என தன் பேரனை வழியனுப்பி வைத்தார் மங்களம் பாட்டி. காலை ஏழு மணியளவில் மதுரையில் இருந்து திருநெல்வேலிக்கு பேருந்து ஏறினான் அவன்.

ஒன்பது மணியளவில் ஜன்னலின் வழியே ஊடுருவிய கதிரவனின் கதிர்கள் மலரின் முகத்தில் விழ கண்ணைக் கசக்கிக் கொண்டு சிறிதாக கண்விழித்தாள் மலர்நிதி. எழுந்து அமர்ந்தவளின் மனதில் ஏனோ இனம் புரியாத ஓர் உணர்வு. அது மகிழ்ச்சியா, கவலையா, கலக்கமா என அவளாலேயே பிரித்தறிய முடியவில்லை. யோசனையோடே பல் துலக்கி விட்டு சமயலறைக்கு சென்று தன் தாயிடம்,

“அம்மா காபி மா” என இவள் எங்கோ பார்த்தவாறு கேட்க,

“மலரு மழை பெய்யுதா வெளிய?” என சுப்பு கேட்க இவளும் யோசனையுடன் வெளியில் சென்று பார்த்துவிட்டு வந்து,

“இல்ல மா வெயில் தான் அடிக்குது.” என்றாள்.

“ஓ அப்படியா அப்போ இனிமே தான் பெய்யும் போல” என சிரிப்பை அடக்கியவாறு கூற,

“என்ன மா பேசுற நீ?” என இவள் புரியாமல் கேட்க,

“என் பொண்ணு அதிசயமா என்னை பேர் சொல்லி கூப்பிடாம அம்மான்னு கூப்பிடுறாளே. அதான் மழை பெய்யுதான்னு கேட்டேன்.” என சிரித்து கொண்டே கூற,

“ம்மா போ மா. நானே கடுப்புல இருக்கேன். நீயும் இப்படி பண்ற.” என மலர் சினுங்க,

“அதான் தெரியுமே. நீ உனக்கு மனசு சரி இல்லனா தான் அம்மான்னு கூப்பிடுவ. சரி சொல்லு. என்னனாச்சு என் மலருக்கு?” என சுப்புலட்சுமி கேட்க,

“தெரில மா. கஷ்டமா இருக்குன்னும் சொல்ல முடியல. சந்தோசமா இருக்குன்னும் சொல்ல முடியல. சம்திங் ஆண்டிஸ்க்ரைப்ட் பீல் மா.” என மலர் தன் மனநிலையை ஆங்கிலத்தில் கூற,

“எது அண்டிபருப்பு பீலிங்கா? அது என்ன டி?” என தன் மகளை சிரிக்க வைக்க வேண்டுமென்றே தவறாக சொல்ல அவளோ,

“மா … அண்டிபருப்பு பீலிங் இல்ல மா. ஆண்டிஸ்க்ரைப்ட் பீல் மா அது. ஐயோ ஐயோ” என வராத சிரிப்பை வரவைத்து சிரித்தாள்.

“சரி டி ரொம்ப சிரிக்காத. வாய்க்குள்ள நுழைய மாட்டிக்கே நான் என்ன பண்ண. இந்தா காபியை வாங்கிட்டு கிளம்பு” என அவளின் கையில் குளம்பியைக் கொடுத்து அவளை வெளியில் அனுப்ப அவளோ,

“ரொம்ப நடிக்காத சுப்பு. உன்னைப் பத்தி எனக்கு தெரியாதா. நான் சிரிக்கனும்னு தான நீ அப்படி சொன்ன. ஐ க்னோ யூ சுப்பு.” என காபியைக் குடித்தவாறு கூறிக்கொண்டே சமயலறையில் இருந்து வெளியே சென்றாள்.

“என்ன டி சொல்ற நான் ஏன் நடிக்கணும்? எனக்கு வேற வேலை இல்ல பாரு.” என தன் கூற்றை தன் மகள் கண்டுபிடித்ததில் சலித்துக்கொண்டு கூறினார் சுப்புலெட்சுமி.

“எம்மோவ் ரீல் அந்து போயி அரை மணி நேரம் ஆயிட்டு. வேலைய பாரு சுப்பு.” என சிரித்துக்கொண்டே அவள் ஹாலில் இருந்து கத்தி கூற உள்ளே சுப்புலட்சுமியும் சிரித்தார். அம்மாவுக்கும் மகளுக்கும் நடுவில் அவ்வளவு புரிதல் இருக்கிறது. ஹாலில் அமர்ந்து செய்தித்தாள் வாசித்துக்கொண்டிருந்த வெங்கடேசன்,

“என்ன மா இன்னைக்கு அம்மாக்கும் பொண்ணுக்கும் என்ன பஞ்சாயத்து? தினமும் இதான் வேலையா.” என அவர் கேட்க,

“அது அப்படி தான் பா. வம்பிழுக்கலைனா எனக்கும் தூக்கம் வராது. சுப்புக்கும் தூக்கம் வராது.” என சிரித்தபடி கூற,

“அது சரி. இன்னும் விளையாட்டு பொண்ணாவே இருக்க மா. இப்படியே காலம் முழுக்க நீ சிரிச்சிட்டே இருக்கணும். அதான் அப்பாவோட ஆசை.” என பாசமாய் கூற,

“நீங்க இருக்கும் போது எனக்கென்னப்பா கவலை. என் சந்தோசமே நீங்களும் சுப்புவும் தான்.” என மலர் கூற,

“உனக்கு வரப்போறவனும் உன்ன நல்ல பார்த்துக்கணும்ல அது தான் டா அப்பாக்கு பயமா இருக்கு.” என சோகமாக கூற,

“ஐயோ அப்பா இப்போ எதுக்கு அதெல்லாம் நினைக்குறீங்க? அதுக்கெல்லாம் இன்னும் காலம் இருக்கு. என்ன சிரிக்க சொல்லிட்டு நீங்க மட்டும் சோகமா இருக்கீங்க போங்க பா.” என செல்லமாக கோபித்து கொள்ள,

“சரி மா. அப்பா சிரிச்சுட்டேன். இங்க பாரு ஈஈஈ” என சிறிது காண்பிக்க அதனைக் கண்டு மலரும் சிரித்தாள்.

“அப்பா எதை நினைச்சும் கவலைப்படாதீங்க. எது எது எப்போ நடக்குமோ எப்படி நடக்குமோ கரெக்ட்டா நடக்கும்.” என தன் அப்பாக்கு ஆறுதலாக கூறினாள்.

“பார்க்கலாம் மா. உனக்குன்னு பொறந்தவன் எப்போ வருவானோ? எப்படி வருவானோ?” என இவர் கூறி கொண்டிருந்த நேரம் சரியாக வீட்டின் அழைப்பு மணி அழுத்தப்பட்டது.

“இருங்க பா நான் யாருன்னு பார்க்குறேன்.” என கூறிக்கொண்டு மலர் வெளியே சென்று பார்த்தாள்.

கருப்பு நிற முழுக்கை சட்டையும் ஜீன்ஸ் பேண்ட்டுடன் ஆறடி உயரத்தில் மாநிறத்தில், உடற்பயிற்சியின் உதவியால் கட்டுக்கோப்பான உடலும், நன்கு திருத்தப்பட்ட சிகையும், க்ளீன் சேவ் செய்யப்பட்ட வழுவழுப்பான கன்னமும், அளவான மீசையும், மருந்துக்கும் சிரிப்பில்லாமல் இருக்கும் அவனுடைய உதடும் என அனைத்தும் அவனை ஒரு காவல் அதிகாரி என சொல்லாமல் சொல்லியது. இவ்வாறு கம்பீரமாக அவன் வந்து நிற்க மலரின் கண்கள் அவனை அளவெடுத்துக் கொண்டிருந்தது. ‘யார் இவன். போலீஸ்காரன் மாதிரி விறைப்பா வந்து நிக்குறான்.’ என மனதில் நினைத்துக்கொண்டு,

“யார் நீங்க?” என கேட்டாள் மலர்.

அவனோ ‘என்ன சின்ன பொண்ணு வந்து நிக்குது.’ என மனதில் நினைத்து விட்டு அவளிடம்,

“வீட்டுல பெரியவங்க யாரும் இல்லையா?” என முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு கேட்டான்.

‘கொய்யால என்னை பார்த்தா பெரிய பொண்ணு மாதிரி இவனுக்கு தெரியலயாக்கும். கொஞ்சம் ஷார்ட்டா க்யூட்டா இருந்தா என்னை சின்ன பிள்ளைன்னு நினைச்சுருவானோ? இவன் நல்ல ஈபிள் டவர் மாதிரி இருந்தா அதுக்கு என்னை சின்ன பிள்ளைன்னு நினைப்பானோ.’ என மனதில் சில பல அர்ச்சனைகளை செய்துவிட்டு,

“அப்பா யாரோ வந்துருக்காங்க” என அவனை முறைத்துக் கொண்டே அழைத்தாள்.

அவனோ, ‘இவ எதுக்கு இப்படி முறைக்குறா. அப்படி என்ன நான் கேட்டேன்.’ என சிந்தனையோடு பார்த்தான். நிஜமாகவே அவன் அவளை பள்ளியில் படிக்கும் சின்ன பெண் என்று தான் நினைத்தான். மலரின் அழைப்பில் வெளியில் வந்த வெங்கடேசன் வந்தவனிடம்,

“யார் நீங்க? என்ன விஷயம்?” என கேட்க,

“வணக்கம் சார். எதிர்த்த வீட்டுல நான் தான் குடி வர போறேன். சாவி உங்க கிட்ட இருக்குன்னு ஓனர் சொன்னாங்க. அதான் வாங்கலாமேன்னு வந்தேன்.” என அவன் கூற வெங்கடேசன் அப்படியா என்கிற ரீதியில் தன மகளைப் பார்க்க அவளோ,

“ஆமா பா. நேத்து தான் அந்த தாத்தா வந்து கொடுத்துட்டு போனாங்க. அம்மாகிட்ட இருக்கு வாங்கிட்டு வரேன்” என கூறி உள்ளே செல்ல அதற்குள் சத்தம் கேட்டு சுப்புலெட்சுமி வெளியே வந்தார்.

“மா நேத்து தாத்தா சாவி கொடுத்தாங்கல. அதை எடுத்துட்டு வா. இவங்க தான் குடி வர போறாங்களாம்.” என தன் அம்மாவிடம் மலர் விளக்க,

“ஓ அப்படியா. இதோ எடுத்துட்டு வரேன் தம்பி.” என கூறிக்கொண்டு உள்ளே சென்றார். அந்த நேரத்தில் மலர், ‘ஓஹோ இவங்க தானா? ச்ச சைட் அடிச்சு ஜாலியா இருக்கலாம்னு பார்த்தா இவர் சரியான சிடுமூஞ்சா இருக்காரே. நல்லா தான் இருக்காரு ஆனாலும். பார்த்துக்கலாம். நம்ம என்ன இவரை லவ்வா பண்ண போறோம். சைட் தான’ என மனதில் நினைத்துக் கொண்டிருக்க, சுப்புலட்சுமி வந்து சாவியைக் கொடுத்தார்.

“நீங்க போலீஸா தம்பி?” என அவனின் தோற்றத்தைக் கண்டு வெங்கடேசன் கேட்க,

“ஆமா சார். நான் இன்ஸ்பெக்டர். மதுரைல இருந்து இப்போ இங்க ட்ரான்ஸ்பர் பண்ணிருக்காங்க” என அவன் கூற அவளோ ‘ஆத்தாடி நிஜமாவே போலீசா’ என பார்த்தாள்.

“அப்படியா சரிங்க சார்.” என வெங்கடேசன் மரியாதைக் கொடுத்து கூப்பிட அவனோ,

“ஐயோ சார். நீங்க பெரியவங்க. சார் எல்லாம் கூப்பிடாதிங்க நான் சின்ன பையன் தான். வயசு கம்மி தான்.” என அவன் கூற,

“கம்மினா எப்படி? ஒரு நாற்பது வயசு இருக்குமா” என கிண்டலாக வேண்டுமென்றே அவன் வயதை அறிய மலர் கேட்க அவனோ அவளை ஒரு பார்வை பார்த்தான். அந்த பார்வை எப்படிப்பட்டது என யாராலும் அறிய முடியவில்லை. கோபமும் இல்லாமல் கோபம் இல்லாமலும் இல்லாமல் இருந்தது அப்பார்வை. அதனைக் கண்டவள் உள்ளே லேசாக பயந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளவில்லை. உண்மையான வயதைக் கூறுவான் என நினைத்த மலருக்கு ஏமாற்றமே.

“மலர் சும்மா இருக்க மாட்டியா.” என அவளைக் கண்டித்து பின் அவனிடம்,

“மன்னிச்சுருங்க தம்பி. அவ எப்போதும் இப்படி தான் விளையாட்டுத் தனமா பேசுவா. ஏதும் நினைச்சுக்காதிங்க.” என வெங்கடேசன் மன்னிப்புக் கேட்க,

“பரவாயில்ல சார். நான் வரேன்.” என அவன் கிளம்ப போக,

“தம்பி உங்க பேரு?” என வெங்கடேசன் கேட்க மலரும் அவனின் பெயர் கேட்க ஆர்வமானாள். அவனோ,

“ரௌத்திரன்” என கம்பீரமாக தன் மீசையை நீவிவிட்டபடி கூறி சென்றான்.

ரௌத்திரன். இவன் தான் நம் கதையின் நாயகன். பெயருக்கு ஏற்றது போல மிகவும் கோபக்காரன். ஆனால் நல்லவன். கடினப்பட்டு படித்து காவலதிகாரி ஆகவேண்டும் என்ற குறிக்கோளுடன் கடின முயற்சி செய்து, நேர்மையான வழியில் தேர்வு எழுதி, அதில் தன் முதல் முயற்சியிலே வெற்றியும் பெற்றவன்.

பெண்கள் மீது மரியாதைக் கொண்டவன். ஆனால் எந்த பெண்ணையும் இதுவரை காதலாகவோ நட்பாகவோ கூட பார்த்தது கிடையாது. பாசம், அன்பு எல்லாம் அதிகமாகவே இருந்தாலும் எதையும் யாரிடமும் வெளிப்படையாக காட்டக்கூடாது என்று தனக்குத்தானே வட்டமிட்டு வாழ்பவன். தன் உணர்வுகளைக் கூட யாரிடம் பகிர்நது கொள்ளமாட்டான். இதற்கு காரணம் அவன் வாழ்வில் நடந்த ஓர் சம்பவமே.

அவன் சென்ற பின் வெங்கடேசனும் சுப்புலெட்சுமியும் உள்ளே சென்று விட மலரோ அவன் சென்ற திசையைப் பார்த்துக்கொண்டு,

‘ப்பா என்ன ஒரு கம்பீரம். ரௌத்திரன்… ஹ்ம்ம் சரியா தான் வச்சுருக்காங்க. ஆனாலும் நீ இருக்குற உயரத்துக்கு ஈபிள் டவர்ங்குற பேர் தான் நல்ல இருக்கு. ஒரு அழகான பொண்ணு முன்னாடி நிக்குறேன் என்னை ஏறெடுத்து கூட பார்க்கமாட்டேங்குற. அவ்ளோ நல்லவனா நீயு.’ என தனக்கு தானே பேசிக் கொண்டிருந்தாள் மலர்நிதி. அப்பொழுது அங்கு வந்த சோனு இவள் தனியாக பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்து,

‘என்ன இந்த அக்கா தனியா நின்னு பேசிகிட்டு இருக்குது. லூசாயிருச்சோ ஒருவேளை.’ என மனதில் நினைத்துவிட்டு வெளியே,

“யக்கா.. மலரக்கா…” என அவன் கூப்பிட அவனின் குரலில் நினைவு வந்தவள் அவனிடம்,

“ஹே சோனு நீ எப்போ டா வந்த ” என அவள் கேட்க அவனோ,

“எது… எப்போ வந்தியா… அது சரி… நீ லூசு மாதிரி தனியா பேசிட்டு இருந்தல அப்போவே வந்துட்டேன்.” என அவளை கேவலமாக பார்த்து கூற அவளோ,

‘ஆஹா… போயும் போயும் இவன்கிட்டயா மாட்டுவேன். இவனுக்கு தெரிஞ்சா இந்த ஏரியாவுக்கே தெரிஞ்ச மாதிரி. எப்படியாவது சமாளி டி மலரு’ என மனதில் நினைத்துக்கொண்டு வெளிய அவனிடம்,

“அட நான் தனியா பேசிட்டு இருந்தேன்னு நீ நினைச்சியா. ஹாஹா விவரம் தெரியாத பையன் டா நீ. அது ஒண்ணுமில்ல டா. எனக்கு ஏலியன்ஸ் பாஷை தெரியும். நான் ஒரு சைக்காலஜி ஸ்டூடன்ட் அதனால என் கண்ணுக்கு ஏலியன்ஸ் தெரிவாங்க. அது கூட தான் பேசிட்டு இருந்தேன்.” என மலர் கேவலமாக சமாளிக்க சோனுவோ,

“அப்படியா… இதை ஏதாவது 90ஸ் கிட்ஸ் கிட்ட போய் சொல்லு. நம்புவாங்க. இப்போ என்கூட ஷட்டில் விளையாட வா” என மலரை அசிங்கப்படுத்திவிட்டு முன்னே சென்றான்.

‘ஐயோ ஒரு சின்ன பையன் கிட்ட என் மானம் போச்சு. எல்லாம் அவனால தான். வந்தன்னைக்கே எனக்கு லூசுன்னு பெயர் வாங்கி கொடுத்துட்டான். டேய் ஈபிள் டவரு என் கைல என்னைக்காச்சு மாட்டுவல அப்போ இருக்கு உனக்கு.’ என மனதினுள் ரௌத்திரனுக்கு அர்ச்சனை செய்ய அவளின் மனசாட்சியோ,

‘அவன் உன்னை என்ன செஞ்சான்? உன்ன பார்க்க கூட இல்ல. நீ தான் அவனை கிண்டல் பண்ண.’ என அவனுக்காக பரிந்து பேச,

‘நீ மூடிட்டு போ. நீ என் மனசாட்சியா அவன் மனசாட்சியா. ஒழுங்கா எனக்கு சப்போர்ட் பண்ணு.’ என அதனை அடக்கினாள்.

“அக்கா வரியா என்ன? மறுபடியும் தனியா பேச ஆரம்பிச்சுட்டியா” என சோனுவின் குரல் கேட்க,

“இதோ வந்துட்டேன் டா” என சோனுவுக்கும், “ம்மா நான் விளையாட போறேன்.” என தன அம்மாவுக்கும் கூறிவிட்டு தெருவில் சோனுவுடன் விளையாட சென்றாள். ரௌத்திரனோ கால் மணி நேரமாக உள்ளே வீட்டை சுற்றி பார்த்துவிட்டு,

‘பரவாயில்ல வீடு நல்லாயிருக்கு. ஹர்ஷுக்கு கண்டிப்பா வீடு பிடிக்கும்.’ என மனதினுள் நினைத்துவிட்டு தனது அலைபேசியில் வீட்டை சுற்றி வீடியோ எடுத்துவிட்டு பின் ஓனருக்கு அழைப்பு விடுத்து தனக்கு வீடு பிடித்திருப்பதாகவும் நாளைக்கே குடி வர போவதாகவும் கூறினான். பின் வீட்டை பூட்டிவிட்டு சாவியைக் கொடுக்க வெளியே வந்தான். அவன் வெளியே வரும் நேரம் இவர்கள் விளையாடி கொண்டிருந்த ஷட்டிலின் இறகு அவனை நோக்கி வரவும் சரியாக இருக்க அதை லாவகமாக பிடித்தான்.

“அங்கிள் சாரி அங்கிள். நான் கவனிக்காம அடிச்சுட்டேன்.” என சோனு கூற,

“நான் உனக்கு அங்கிளா டா. என்னை பார்த்தா அங்கிள் மாதிரியா இருக்கு” என சிறு முறைப்புடன் கேட்க மலரோ வாய்பொத்தி சிரித்தாள். பின் அவளுக்கும் ஒரு முறைப்பை பதிலாக தந்து சாவியைக் கொடுக்க அவளின் வீட்டிற்கு அவன் செல்ல, அவனை தடுத்து,

“சாவிதான கொடுங்க. நான் கொடுத்துக்குறேன்.” என மலர் தானாக சென்று கேட்க, வேறு வழியின்றி அவளிடம் கொடுத்தான். பின் அவளிடம்,

“சின்ன பொண்ணு சின்ன பொண்ணு மாதிரி பேசணும். பெரியவங்களை கிண்டல் எல்லாம் பண்ண கூடாது. புரிஞ்சுதா” என முறைப்பாகவே அவளிடம் கூற அவளோ,

“ஹலோ யார் சின்ன பொண்ணு? நான் சின்ன பொண்ணுன்னு நீங்க பார்த்திங்களா.” என இவள் கோபமாக கேட்க சோனுவோ,

“அங்கிள்… சாரி… அண்ணா … மலரக்கா காலேஜ் முடிச்சுருச்சி. சின்ன பொண்ணு எல்லாம் இல்ல அண்ணா” என சிரித்துக்கொண்டே கூற அவளை ஒருகணம் ஏறயிறங்க பார்த்தவன்,

“ஓ சாரி.” என முகத்தில் எந்தவித பாவனையும் இல்லாமல் கூறி செல்லலானான். அவனைப் பார்த்து,

“சரியான ஈபிள் டவர்” என சற்று சத்தமாகவே முறைத்தபடி மலர் கூற திரும்பி மீண்டும் முறைத்துவிட்டு சென்றான்.

‘மனசுல பெரிய விருமாண்டின்னு நெனப்பு. எதுக்கெடுத்தாலும் முறைக்கிறான்.’ என திட்டிவிட்டு வீட்டிற்குள் சென்றாள் மலர்.

இரண்டுமணிநேர பயணத்திற்கு பிறகு மதுரையை அடைந்த ரௌத்திரன் ஆட்டோ பிடித்து வீட்டிற்கு சென்றான்.

“வா ராசா. வீட்ட பார்த்துட்டியா? எப்படி இருக்கு?” என பாட்டி கேட்க,

“ஆமா பாட்டி. ஒரு நிமிஷம்.” என கூறிவிட்டு ஹர்ஷினியை அழைத்தான். அவளும் வெளியே வர இருவரிடமும்,

“வீடு பார்த்துட்டேன். பாதுகாப்பான ஏரியா தான். எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு. உனக்கும் கண்டிப்பா பிடிக்கும் ஹர்ஷு. வீடியோ எடுத்துட்டு வந்தேன். இந்தா பாரு.” என தன் அலைபேசியில் எடுத்த விடியோவை அவளிடம் காட்ட ஹர்ஷுவோ,

“அண்ணா உனக்கு பிடிச்சுருக்குல அது போதும். எதுக்கு வீடியோ எல்லாம்.” என கூறி வீடியோவை பார்க்காமலே அவனிடம் கொடுத்துவிட்டாள். தன் மேல் தன் தங்கை கொண்ட நம்பிக்கையை எண்ணி அகமகிழ்ந்தவனோ வெளிய லேசாக சிரித்தான். பின்,

“சரி நாளைக்கே கிளம்புறோம். இன்னைக்கு எல்லாத்தையும் பேக் பண்ணிருவோம். நான் உதவிக்கு ராஜாவைக் கூப்பிடுறேன்.” என ராஜாவிற்கு அழைப்பு விடுத்தபடி அவனின் அறைக்கு சென்றான். ராஜா வரப்போகிறான் என்ற களிப்பில் ஹர்ஷினி சிரித்துக்கொண்டே தன் அறைக்கு சென்றவள் அங்கே கண்ணாடியில் ஒருமுறை தன்னை சரி பார்த்துவிட்டு சிரித்துக் கொண்டாள்.

சிறிது நேரத்தில் ராஜாவும் வந்தான். அவனைக் கண்ட மங்களம் பாட்டியோ வேண்டுமென்றே அவனை கண்டுக் கொள்ளாமல் தன் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

“டார்லிங் எப்படி இருக்கீங்க?” என ராஜா பாட்டியிடம் நலம் விசாரிக்க பாட்டியோ,

“ரௌத்திரா உன்ன யாரோ பார்க்க வந்துருக்காங்க. வந்து யாருன்னு பாரு” என சத்தமாக கூறிவிட்டு மீண்டும் தன் வேலையைத் தொடர்ந்தார். அதனைக் கேட்ட ராஜாவோ,

“யாரோவா யாரோவா யாரோவா” என ஒவ்வொரு பக்கமும் திரும்பி எதிரொலிப்பது போன்று பாவனை செய்ய பாட்டியோ,

“வர வர கொசு தொல்லை தாங்கலை. அடிச்சு சாவடிக்கணும்.” என எங்கோ பார்த்தபடி கூற ராஜா அவரை சமாதானம் செய்ய ஆரம்பித்தான்.

“டார்லிங் கோவப்படாதிங்க ப்ளீஸ். கொஞ்சம் வேலை அதிகம் அதான் வர முடியலை. உங்க செல்லத்த மன்னிக்க மாட்டீங்களா மீ பாவும்.” என முகத்தைப் பாவமாக வைத்துக்கொண்டு சொல்ல பாட்டி சிரித்துவிட்டார்.

“படவா. எத்தனை நாள் ஆச்சு டா? இங்க இருந்தே நீ வர மாட்டேங்குற. இதுல நாங்க திருநெல்வேலி போய்ட்டா எப்படி வருவ? எட்டிக்கூட பார்க்க மாட்ட” என பொய்யாய் கோபித்து சொல்ல,

“வரேன் பாட்டி கண்டிப்பா வரேன்.” என ஒருவழியாக பாட்டியை சமாதானம் செய்தான்.

“சரி இரு உனக்கு குடிக்க ஏதாவது கொண்டு வரேன்” என பாட்டி சமையலறை சென்றார். ராஜாவோ,
‘என்ன இந்த ரௌத்திரன் பையன ஆள காணும் போய் பார்ப்போம்” என அவனின் அறைக்கு சென்றான்.

ஹர்ஷினியோ தனது அறையை ஒதுங்க வைத்துவிட்டு தன் அண்ணனின் அறையை ஒதுங்க வைத்துக் கொண்டிருந்தாள். ராஜாவோ ரௌத்திரன் தான் இருக்கிறான் என சட்டென மச்சான் என கத்திகொண்டே உள்ளே வர, இவனின் சத்தம் கேட்டு திடுக்கிட்ட ஹர்ஷினி விழ போக அவளைத் தாங்கி பிடித்தான் ராஜா. அதே நிலையில் சில நிமிடங்கள் கரைய முதலில் சுதாரித்தது ராஜா தான். பின்பு ஹர்ஷினியும் சட்டென விலகினாள்.

“சாரி நான் ரௌத்திரன்னு நினைச்சு வந்துட்டேன். நீ இருக்கன்னு கவனிக்கல. நான் கீழ போறேன்.” என அவள் முகம் பார்க்காமல் கூறி செல்ல போக ஹர்ஷினியோ,

“ஒரு நிமிஷம்” என அவனை தடுத்தாள்.

மௌனம் எரியும்…

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
12
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்