மௌனம் 19
அவள் மயங்கி சரிவதைக் கண்டவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. மனதினுள் ஏதோ ஒரு வித பயம் சூழ பதறிக்கொண்டு,
“நிதி… ஹே நிதி என்னாச்சு. எந்திரி டி. நிதி மா…” என தன்னை மீறி தன் மனதில் இருந்த வார்த்தைகள் பயத்தின் வெளிப்பாடால் வெளியே வர பதறியவாறே அவளின் கன்னம் தட்டி எழுப்ப அவளிடம் அசைவே இல்லை. பயத்தில் உள்ளம் நடுங்கியது ரௌத்திரனுக்கு. காரில் வைத்திருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து தண்ணீரை அவளின் முகத்தில் தெளித்து,
“நல்ல தான டி இருந்த என்னடி ஆச்சு திடிர்னு? கண்ணு முழிச்சு பாரு நிதி” என தொடர்ந்து அவனின் இரும்பு கைகள் அவளின் பட்டு கன்னத்தில் தட்டியவாறே பதறியது. ஆனால் மயங்கி இருந்தவளோ… இல்லை இல்லை மயக்கியது போன்று நடித்துக் கொண்டிருந்தவளோ, ‘இது போதும் எனக்கு. என் தீரனோட மனசுல நான் இருக்கேன். அவர் என்னை நிதின்னு கூப்பிட்டாரு. ஐயோ எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.’ என நினைத்து குதூகலித்தவளுக்கு அவன் அவளின் கன்னத்தில் தட்டுவது லேசாக வலி எடுக்க ஆரம்பித்தது.
‘போதும் டி மலர். இதோட உன் நடிப்பை நிறுத்திக்கோ அவர் அக்கறைல தட்டுற தட்டே உனக்கு வலிக்குதுன்னா இப்போ நடிப்புன்னு தெரிஞ்ச அப்புறம் அவன் கொடுக்க போகுற அறை எப்படி இருக்கும்னு யோசிச்சுக்கோ. எதுக்கும் ரெடியா இரு’ என மனதினுள் நினைத்துவிட்டு மெதுவாக கண்ணைத் திறந்து அவள் பார்க்க அவனுக்கோ அப்பொழுது தான் மூச்சே வந்தது போல் இருந்தது. இதழ் குவித்து மூச்சை வெளிவிட்டவன்,
“கண்ணு முழிச்சுட்டியா? என்னாச்சு ஏன் மயக்கம் போட்டுட்ட? உடம்புக்கு எதுவும் பண்ணுதா? ஹாஸ்ப்பிட்டல் போவோமா?” என இன்னும் அவளின் மயக்கம் உண்மை என்று நம்பியவாறே அவன் வருத்தமாய் கேட்க, மலருக்கு தான் ஒருமாதிரி ஆகிவிட்டது. அவனின் அக்கறை அவளுக்கு மகிழ்ச்சியைத் தந்தாலும் அவன் வருத்தமாக கேட்பது மலரின் மனதைப் பிசைந்தது.
“தீரா நான் ஒன்னு சொன்னா கோவப்பட மாட்டீங்களே” என தயங்கி தயங்கி மலர் கேட்க, அவனோ புரியாமல் முழிக்க,
“அது வந்து.. நான் மயக்கம் போடலை. சும்மா மயங்குன மாதிரி நடிச்சேன்” என பயந்து பயந்து எச்சில் விழுங்கியபடி இவள் கூறி முடிக்க, மலர் ஏற்கனவே எதிர்பார்த்தது போல் பளாரென இடியாய் அவளின் வலது கன்னத்தில் விழுந்தது அவனின் அடி.
அடித்த அடியில் அவளின் கன்னம் நன்கு சிவந்துவிட்டது. ஆனால் அதனைக் காட்டிலும் ரௌத்திரனின் கண்கள் கோபத்தால் சிவந்திருந்தது. அவள் கன்னத்தில் கைவைத்தபடி கலங்கிய கண்களுடன் அவனைப் பார்க்க, அதனைக் காண பொருக்கதவன் காரை விருட்டென கிளப்பி கடுமையான வேகத்தில் பறந்தான். அவன் செல்லும் வேகமே அவனின் கோபத்தின் அளவைப் பறைசாற்றியது. வேகத்தைக் கண்டு லேசாக மலருக்கு உதறல் எடுக்க மெல்ல வாய் திறந்தவளோ,
“சா.. சாரி தீரா.” என பயந்து கொண்டே அவள் கூற சட்டென பிரேக் போட்டு நிறுத்தியவன்,
“அறிவு இல்ல. படிச்ச பொண்ணு தான. எதுல விளையாடனும் ஒரு விவஸ்தை வேணாமா? உன் மனசுல என்ன தான் நினைச்சுட்டு இருக்க. நீ ஒன்னும் சின்ன குழந்தை இல்ல. விளையாட்டுத்தனமா இருக்கலாம் தான். ஆனால் அதுக்கு ஒரு லிமிட் இருக்கு. உன் லிமிட் எதுவோ அங்க நின்னுக்கோ. அது தான் உனக்கு நல்லது.” என படபடவென பொரிந்து தள்ள அவளோ,
“நான் ஏற்கனவே உங்க மனசுக்குள்ள லிமிட் தாண்டி வந்துட்டேன் தீரா. நீங்க தான் இன்னும் அதை உணரல.” என தேம்பியபடி கண்ணீருடன் கூறினாள் அவள்.
“மண்ணாங்கட்டி. இப்படியெல்லாம் முட்டாள்தனமா பேசிட்டு இருந்த என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது. கோபத்தைக் கிளறாத.” என மிகக் கடுமையாக ரௌத்திரன் கூற,
“நீங்க என்கிட்ட பிடிக்காத மாதிரி நடிச்சாலும் உங்க மனசு எனக்கு உண்மையைக் காட்டிக்கொடுத்துட்டு. நீங்க அடிச்ச அடி வலிக்குது தான். பட் அதை விட நீங்க எனக்கான பதறுனா பதறலும், எந்திரிடி ப்ளீஸ்டின்னு கதறுன கதறலும், வார்த்தைக்கு வார்த்தை நிதி நிதின்னு கூப்பிட்டதும் எனக்கு புரியவச்சுட்டு. உங்க மனசுல நான் வந்துட்டேன்னு. ரொம்ப சந்தோசமா இருக்கு. இது போதும் தீரா. இப்போவே நான் செத்தா கூட சந்தோசமா செத்து போவேன். அவ்ளோ சந்தோசமா இருக்கேன்.” என கண்ணீரை துடைத்தபடி மூக்கை உரிந்து சிரித்துக்கொண்டே கூற அவளின் பேச்சில் ரௌத்திரனுக்கு வார்த்தை வரவில்லை. அவளையே உணர்ச்சியற்று பார்த்தான். மேலும் தொடர்ந்தவள்,
“தீரா…. உங்களுக்கு என்மேல காதல் வராம இருந்திருந்தா கூட கட்டாயப்படுத்தி காதலை வர வைக்க கூடாதுன்னு நினைச்சு உங்க நினைப்போட இருந்துருப்பேன். ஆனால் நீங்க வந்த காதலை உணர முடியாம இருக்கீங்க. இல்ல இல்ல உணர முடியாமன்னு இல்ல உணர கூடாதுன்னும் அத என்கிட்டே காட்ட கூடாதுன்னும் பிடிவாதமா இருக்கீங்க. அதனால வெரி சாரி. இந்த விஷயத்துல உங்க பிடிவாதத்தை விட என் பிடிவாதம் தான் பெருசுன்னு நான் காட்டுறேன். கண்டிப்பா உங்களை காதலை சொல்ல வச்சு என் காதல ஏத்துக்க வைப்பேன்.” என தன் மனதில் இருந்த அனைத்தையும் தெள்ள தெளிவாய் வெளிச்சம் போட்டு காண்பிக்க,
அதனைக் கேட்டவனுக்கு அவளின் காதலின் ஆழத்தை நினைத்து வியப்பதா, போயும் போயும் தனக்காக இவ்வளவு உருகுகிறாளே என வருத்தப்படுவதா, இல்லை ஒவ்வொரு முறையும் அவளைக் கோபத்தில் அறைந்து காயப்படுத்துகிறோமே என பரிதாபப்படுவதா என்று தெரியவில்லை.
கலவையான உணர்ச்சிகளால் பிணைக்கப்பட்டிருந்தவனோ சிறிது நேரத்தில் தன்னை ஆசுவாசப்படுத்திவிட்டு,
“இங்க பாரு நான் பொறுமையா சொல்றேன். உன்னோட இந்த ஆழமான காதலுக்கு தகுதியானவன் நான் இல்ல. அதை புரிஞ்சுக்கோ. மதிப்பே இல்லாத இடத்துல உன்னோட அன்பை காட்டுறது வேஸ்ட். அப்படியே உன் மேல எனக்கு காதலே வந்தாலும் என்னால உன்கிட்ட சகஜமா இருக்க முடியாது. எங்க ஒவ்வொரு தடவையும் கோபப்பட்டு உன்னையும் சாவடிச்சுருவேனோன்னு பயம் தான் இருக்கும். கோபத்தை விடணும்னு நானும் எவ்வளவோ முயற்சி பண்ணி பார்த்துட்டேன். அது என்னால முடியல. என் அம்மாவையே கொன்னவன். நீ எல்லாம் எனக்கு எம்மாத்திரம். உனக்கு உன் உயிர் மேல பயம் இல்லாம இருக்கலாம். ஆனால் உன் அப்பா அம்மாவை நினைச்சு பார்த்தியா. அவங்களுக்கு நீ தான் எல்லாமே. என் அம்மாவைக் கொன்னக் குற்ற உணர்ச்சியே இன்னும் என் மனசுல இருந்து போகலை. அது போகவும் போகாது. எங்க அம்மாவே உயிரோட வந்து நீ என்னைக் கொல்லலடா கண்ணான்னு சொன்னா மட்டும் தான் அது போகும். ம்ஹும் அது நடக்க வாய்ப்பில்லை.” என விரக்தி சிரிப்போடு கூறியவன்,
“மறுபடியும் அந்த மாதிரி ஏதும் நடத்துற கூடாதுன்னு தான் நான் எல்லார்கிட்டயும் இருந்து விலகி இருக்கேன். அதனால ப்ளீஸ் புரிஞ்சுக்கோ என்னை. எனக்கு உன்மேல காதல் இல்ல. வரவும் வராது. வரவும் விடமாட்டேன்.” என ரௌத்திரன் தன் மனதில் இருப்பதைக் கொட்டி தீர்த்தான்.
“காதல் இல்லாம தான் கொஞ்ச நேரம் முன்னாடி அப்படி பதறுனீங்களா?” என மலர் கேள்வியாய் நோக்க,
“அது எப்படி காதலாகும்? என்னை நம்பி நீ வந்துருக்க. உன்னைப் பத்திரமா வீட்டுக்கு கொண்டு போய் விடுறது என்னோட பொறுப்பு. அதனால உங்க அப்பா அம்மா கிட்ட என்ன பதில் சொல்ல போறேனோன்னு தான் பயந்தேன். பதறினேன். அண்ட் நிதிங்குற பேரு எனக்கு பிடிச்சிருந்தது. பேர் மட்டும் தான். எல்லார் கூப்பிடுற மாதிரி கூப்பிடாம வித்தியாசமா கூப்பிட்டா அது காதலா? இதெல்லாம் சின்ன பிள்ளைத்தனமா இருக்கு. உனக்கு நான் புரிய வைக்கணும்னு அவசியம் இல்ல. நீயே சைக்காலஜி ஸ்டூடெண்ட் தான. எல்லாம் தெரிஞ்சும் தான் நீ இப்படி பண்ற. சோ ப்ளீஸ் ட்ரை டூ அண்டர்ஸ்டன்ட். ஐ டோன்ட்(don’t) லவ் யூ. ஐ காண்ட் (can’t) லவ் யூ. ஐ வோண்ட் (won’t) லவ் யூ.” என அழுத்தமாய் சாலையை வெறித்தபடி கூறினான்.
“சரி ஓகே. என்னோட லவ்வ ரிஜெக்ட் பண்ண ஒரு வேலிட் ரீசன் சொல்லுங்க பார்ப்போம்.” என மலர் ஏக்கமாக கேட்க,
“ஏன்னா எனக்கு லவ் வரலை. அதான் ரீசன்.” மனதைக்கல்லாக்கிக் கொண்டு கூறினான்.
“இப்போ வரலை சரி. ஒருவேளை இனிமே வந்தா?” புருவம் உயர்த்தி கேட்டாள்.
“நான் தான் சொல்றேன்ல. வரவும் வராது கண்டிப்பா. உனக்கும் எனக்கும் செட் ஆகாது. நம்ம ரெண்டு பேருக்கும் எந்த விஷயமும் ஒத்து போகாது.” என அவன் யதார்த்தமாய் கூற,
“ஒத்துப்போகாதா? என்ன சொல்றீங்க? புரியல.” புருவம் இடுங்க கேட்டாள்.
“ஆமா. ஒத்துப்போகாது. நான் ரொம்ப அமைதி, கோபக்காரன். நீ கலகலப்பா இருக்கனும்னு நினைக்குறவ. எனக்கு இட்லி பிடிக்கும். உனக்கு இட்லி பிடிக்காது தோசை தான் பிடிக்கும். எனக்கு டீ பிடிக்கும். உனக்கு காபி தான் பிடிக்கும். எனக்கு மழையில நனையுறது அறவே பிடிக்காது. உனக்கு அது தான் பிடிக்கும். இப்படி சின்ன சின்ன விசயத்துல கூட நம்ம முரண்பாடா தான் இருக்கோம். சோ சரியா வராது விட்டுரு.” என படபடவென பேசி முடிக்க அவன் பேசுவதைக் கேட்டவளோ கலகலவென சிரிக்க ஆரம்பித்தாள்.
“ப்ச்… இப்போ எதுக்கு சிரிக்குற?” என்றான் அடக்கப்பட்ட கோபத்துடன்.
“பின்ன என்ன தீரா. இதெல்லாம் ஒரு காரணம்னு சொல்லி காமெடி பண்ணா சிரிக்காம என்ன பண்றது.”
“இது நான் ஒரு எடுத்துக்காட்டுக்கு சொன்னேன். இதுவும் காரணம் தான்.” என அவன் புரியவைக்கும் நோக்கத்தோடு கூற,
“தீரா. நான் ஒரு விஷயம் சொல்லவா? சைன்ஸ் எல்லாம் படிச்சது இல்லையா? சேம் சைட்ஸ் ரிப்பெல் ஈச் அதர். ஆப்போசிட் சைட்ஸ் அட்ராக்ட் ஈச் அதர்னு. அதாவது ஒத்த துருவம் என்னைக்குமே ஒத்து போகாது. எதிர் எதிர் துருவம் தான் ஒத்து போகுமாம். அதனால நம்ம பெர்பெக்ட் மேட்ச்.” என மலர் கூலாக சொல்ல,
“அதெல்லாம் சொல்ல நல்லா இருக்கும். வாழ்க்கைல சரி பட்டு வராது. இங்க பாரு. இதெல்லாம் கொஞ்ச நாளுக்கு உனக்கு தோணும். நான் இப்படியே உன்னைக் கண்டுக்காமலே இருந்தா ரெண்டு மூணு மாசத்துல உனக்கே வெறுத்து போயிரும்.” என அவன் சலிப்பாக கூறினாள்.
“என் காதலை பத்தி நீங்க என்ன நினைச்சு வச்சிருக்கீங்க.” என ஆதங்கமாய் அவள் கேட்க அவனோ,
“நிஜமா தான் சொல்றேன். நான் சொல்றது தான் எதார்த்தம். சரி முடிஞ்சா ஒரு சேலஞ்ச் பண்ணுவோம். நான் இந்த வீட்டுக்கு மே 6 வந்தேன். அப்போ மே 5 தான நீ என்னை முதல் தடவை பார்த்த. அடுத்த வர்ஷம் மே 5 வர இதே லவ்வோட நீ இருந்தனா பார்க்கலாம். அப்போ கூட எனக்கு அந்த நேரம் என்ன தோணுதோ அத தான் சொல்லுவேன். அக்செப்ட் பண்ணுவேன்னு நிச்சயமா சொல்ல முடியாது.” என அப்பொழுதாவது உன் காதலும் வேணாம் ஒன்னும் வேணாம் என கூறுவாள் என நினைத்துவிட்டு ரௌத்திரன் வேறு வழியின்றி கூற அவனைத் தீர்க்கமாய் பார்த்தவள் சிரித்தாள்.
“என்ன தீரா? என்னோட காதலை சோதிச்சு பார்க்குறீங்களா? பரவாயில்ல. நான் இந்த சேலஞ்ச ஏத்துக்குறேன். நான் உண்மையா காதலிக்குறேன். என்னால காத்திருக்க முடியும். பட் நீங்க சொன்ன மாதிரி அதே காதலோட கண்டிப்பா இருக்க முடியாது.” என மலர் கூற அவனோ,
“நிச்சயமா யாராலையும் அதே காதலோட இருக்க முடியாதுன்னு தான் நானும் சொல்றேன். ஒன்னு காதல் குறையும். இல்லனா காதலே இல்லாம போயிரும்.” என்றான் தோலைக் குலுக்கியபடி.
“ஹலோ ஹலோ ஒரு நிமிஷம் மிஸ்டர் ரௌத்திரன். நான் சொல்ல வந்ததே வேற. கண்டிப்பா இதே காதலோட இருக்க மாட்டேன். இதோட அதிகமா தான் என் காதல் ஆகும்னு சொல்ல வந்தேன்.” என மலர் தெனாவெட்டாய் கூற அவனோ நம்பாத பார்வைப் பார்த்தான்.
“நான் சொல்றது டயலாக் பேசுற மாதிரி உங்களுக்கு தெரியும். ஆனால் நான் நிரூபிச்சு காமிப்பேன். என் காதல் நம்மள சேர்த்துவைக்கும். விளையாட்டுத்தனமா நான் இருக்குறதுனால என்னோட காதலையும் விளையாட்டா எடுத்துடீங்க. அப்படி தான தீரா? பரவாயில்ல.” என மலர் கூறிவிட்டு திரும்பிக்கொண்டாள். ரௌத்திரனும் காரைக் கிளப்பினான். ஏனோ மலரின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.
‘என் காதலை எப்படி அப்படி சீப்பா நினைக்கலாம். என்னைப் பார்த்தா டைம் பாஸ்க்கு லவ் பண்ற மாதிரியா தெரியுது.’ என அவளின் மனது ஆதங்கப்பட்டது.
ஜன்னல் வழியே காற்றடிக்க காற்றின் வேகத்தில் அவளின் கண்ணீர் ரௌத்திரனின் முகத்தில் தெறித்து அவள் அழுகிறாள் என ரௌத்திரனுக்கு தெரியப்படுத்தியது. ஆனால் அவன் ஏதும் கேட்கவில்லை அவளிடம். ஜன்னல் வழியே வெறித்துக்கொண்டிருந்தவள் காற்றின் இதத்தில் அவ்வாறே உறங்கியும் போனாள் கார் கதவில் சாய்ந்தவாறு.
ஒன்றரை மணி நேர பயணத்திற்கு பிறகு அமைதியான இடம் ஒன்றின் ஓரத்தில் காரை மெதுவாக நிறுத்தினான். அவளின் தூக்கம் கலையாதவாறு நிறுத்தியவன் அவளையே பார்த்தான். ஜன்னலில் சாய்ந்து படுத்திருந்தவள் மெதுவாக உறக்கத்திலேயே அவன் தோளில் சாய்ந்துக் கொண்டாள். தாயடித்து அழுத பிள்ளை தாயிடமே ஆறுதல் தேடி சரணடைவது போன்று. அவன் உதட்டிலோ மெல்லிய சிரிப்பு.
அவளின் கண்களின் கீழ் கண்ணீர் வடிந்த தடம் அவ்வாறே காய்ந்து போயிருந்தது. அடித்த அடியில் கன்னமும் சிவந்து கன்றி போய் இருந்தது. அவளை அந்நிலையில் பார்க்க மனது வலித்தது. மெதுவாக அவளின் கன்னத்தை வருடியவன் அவளைப் பார்த்தவாறே தனக்குள் பேசி கொண்டான்.
‘ஏன் டி இவ்ளோ லவ் பண்ற என்னை? உன்ன நான் கஷ்டப்படுத்துறேன்ல. உன் காதல் உண்மைன்னு எனக்கு தெரியுது. ஆனால் வேணாம் டி. நான் உனக்கு வேணாம் நிதி. எப்போ வேணாலும் என்ன வேணாலும் ஆகலாம் எனக்கு. நீ சந்தோசமா இருக்கனும். ஒரு வருஷம் கழிச்சு என்ன எத்தனை வருஷம் கழிச்சுன்னாலும் நீ இதே காதலோட இருப்பன்னு எனக்கு நீ பேசுறதுலயே நல்ல தெரியுது. ஆனால் அது நடக்கூடாது. நீ என்னை மறக்கனும். மறந்துரு டி என்னை ப்ளீஸ்.
நிஜமா நீ மயங்கும் போது எப்படி துடிச்சேன்னு எனக்கும் தெரியும். என்னை அறியாம உள்ள இருந்து வந்துச்சு. ஆமா டி நீ சொல்ற மாதிரி நீ எனக்குள்ள வந்துட்ட தான். என் மனசும் உன்னை தேடுது தான். ஆனால் வேணாம். உன்னை அடிச்சே கொன்றுவேனோன்னு பயமா இருக்கு டி. கண்டிப்பா என் வாழ்க்கைல உன்னை நான் கொண்டு வரமாட்டேன். அது மட்டும் உறுதி. என் வாழ்க்கைல வந்த முதல் காதலும் நீ தான். கடைசி காதலும் நீ தான். நான் கடைசி வர என் காதலை உன்கிட்ட சொல்லாம மௌனமா எனக்குள்ளயே எரிஞ்சுகுறேன் டி.” எனக் கண்ணீர் கசிய மனதில் நினைத்தவன் மெதுவாக அவளின் கன்னம் வருடி அவள் விழிக்காதவாறு அவள் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டு,
“லவ் யூ நிதி.” என காற்றுக்கு கூட கேட்காதவாறு மெதுவாக கூறினான். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவளுக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை. அவளும் உறக்கத்தில்,
“லவ் யூ தீரா” என புலம்ப மெலிதாக புன்னகைத்தான் அவளின் தீரன்.
சிரிக்கிறேன் இதழ்களில்
மலருகிறாய்!
அழுகிறேன் துளிகளாய்
நழுவுகிறாய்!
விழிகள் முழுதும்…
நிழலா? இருளா?
வாழ்க்கைப் பயணம்..
முதலா? முடிவா?
சருகென உதிர்கிறேன்
தனிமையிலே!
மௌனமாய் எரிகிறேன்
காதலிலே!
பின்பு ஏதோ சிந்தித்தவன் அவளைப் பார்த்து,
‘நீ என் வாழ்க்கைல வர கூடாதுன்னா நான் அந்த முடிவு மட்டும் தான் எடுக்கணும். அது உன்ன கஷ்டப்படுத்தும்னு எனக்கு தெரியும். ஆனால் எனக்கு அதை விட்டா வேற வழியில்லை. மன்னிச்சுரு நிதி’ என அவளின் முகம் நோக்கி மானசீகமாய் மன்னிப்பு வேண்டிவிட்டு காரைக் கிளப்பினான். மனதில் உள்ள அனைத்தையும் கொட்டிய நிம்மதியிலும், தன்னவன் மனதிலும் தான் இருக்கிறோம் என தெரிந்துகொண்ட மகிழ்ச்சியிலும் நிம்மதியாக உறங்கினாள். அவன் எடுத்த முடிவு தெரிந்த பின் அந்த நிம்மதி இருக்குமா?
இது தான் காதல். நமக்குள் காதல் இருக்கிறதென்று தெரிந்த அந்த நொடி அப்படியே வானத்தில் பறப்பது போன்று தோன்றும். உண்மையான காதல் என்றால் தினமும் பார்த்து, சிரித்து, கொஞ்சி பேசுவது மட்டும் அல்ல. மனதில் சுமந்து நினைவுகளிலேயே வாழவேண்டும்.
தன்னாலும் தன் கட்டுக்கடங்காத கோபத்தினாலும் தன்னவளுக்கு தான் பிரச்சனை என தன்னுடைய காதலை அவளிடம் இருந்து மறைத்து அவளின் நினைவுகளுடனே வாழ்ந்துவிடலாம் என்று நினைக்கும் ரௌத்திரனின் காதல்.
ஏன் வந்தது? எப்படி வந்தது? எப்பொழுது வந்தது? என்று தெரியாமல் காதல் வந்து, குறுகிய காலத்தில் அக்காதல் அவளின் உயிர் வரை தாக்கி அவனால் தான் காயப்பட்டாலும் பரவாயில்லை என்று நினைத்து அவனின் காதலுக்காக மட்டுமே ஏங்கும் அவனின் நிதியின் காதல்.
இருவரின் காதலும் சேருமா? விதியின் விடை தான் என்னவோ?
மௌனம் எரியும்…