மௌனம் 17
அவ்வாறே விடியலை நோக்கிய காத்திருப்புடன் உறங்கியவளுக்கு தன்னவனுடன் செல்லும் ஆர்வத்தில் அதிகாலை நான்கு மணிக்கே முழிப்பு தட்டிவிட்டது போலும். மீண்டும் உறக்கம் வராததால் இன்று விசாரணை நல்லபடியாக முடியவேண்டும் என கோவில் சென்று வேண்டிவிட்டு வரலாம் என்று எண்ணி குளிக்க சென்றாள் மலர்.
எப்பொழுதும் கோவில் செல்லும் போது புடவை அணிந்து செல்லும் வழக்கமுடையவள் என்பதால் இன்றும் புடவை அணிந்தாள். வந்து சுடிதார் மாற்றிக்கொண்டு மதுரைக் கிளம்பலாம் என நினைத்துவிட்டு.
குளித்து முடித்து வந்தவள் கண்களை உறுத்தாதவாறு மிக எளிமையான நீல நிறத்தில் காட்டன் புடவை ஒன்றை நேர்த்தியாக கட்டி முடித்து எழிலோவியமாய் வெளியே வந்தாள். உறங்கி கொண்டிருந்த சுப்புவை மெதுவாக தட்டி எழுப்பியவள்,
“சுப்பு .. ஏந்திரி சுப்பு எந்திரி” என மலர் ஹஸ்கி குரலில் அவரைத் தட்டி எழுப்ப பதறியடித்து எழுந்த சுப்புவோ மணியைப் பார்க்க அது ஐந்து எனக் காட்டியது.
“ஹே என்னடி ஆச்சு உனக்கு? இம்புட்டு வேகமா எழுந்து குளிச்சு கிளம்பிருக்க இதுல புடவை வேற. என் பொண்ணுக்கு காத்து கருப்பு ஏதும் பிடிச்சுருச்சான்னு தெரிலயே. ஆத்தா மகமாயி” என பயந்து கடவுளை வேண்ட ஆரம்பித்துவிட்டார்.
“ஐயோ சுப்பு… ஏன் என்னோட மானத்தை வாங்குற. முதல்ல வெளிய வா நீயு.” என சுப்புவை ஹாலுக்கு அழைத்து சென்றாள் மலர்.
“என்ன தான் டி ஆச்சு உனக்கு?” என சுப்புவோ புரியாமல் கேட்க,
“எனக்கு ஒன்னும் ஆகல. தூக்கம் வரல. இன்னைக்கு சாட்சி சொல்ல மதுரைக்கு போறேன்ல. அதான் நல்லபடியா எல்லாம் முடியனும்னு வேண்ட கோவில் போக போறேன்.” என மலர் கூற சுப்புவின் முகம் வாடிவிட்டது.
“சரி இரு காபி போடுறேன். குடிச்சுட்டு போ.” என கூறிக்கொண்டு சமையலறை சென்றுவிட்டார் சுப்பு. தன் அன்னையின் முகம் மாற்றத்தைக் கண்டவளோ சமையலறை திண்டில் அமர்ந்து,
“சுப்பு நீ நினைக்குறது எனக்கு புரியுது. கவலைப்படாத. எனக்கு எந்த பிரச்னையும் வராது. கூட தான் உன் மாப்பிள்ளை இருக்காரே. அப்புறம் ஏன் பயப்படுற.” என மலர் அவரின் முகவாயைக் கையில் ஏந்தியபடி கேட்க,
“இல்ல டி. அந்த தம்பி உன்கூட இருந்தாலும் மினிஸ்டர் லெவெலுக்கு இருக்கு இந்த பிரச்சனை. அதான் டி பயமா இருக்கு. உங்க ரெண்டு பேர நினைச்சுமே தான்.” என சுப்பு வருந்தி கூற,
“அதெல்லாம் ஒன்னும் ஆகாது. நீ பயப்படாத. அப்புறம் அப்பாவும் கவலைப்படுவாரு.” என மலர் அவருக்கு ஆறுதல் கூறி பின் காபியைக் குடித்துவிட்டு கோவில் கிளம்பி சென்றாள். மனதார தன் வேண்டுதலை எல்லாம் கடவுளிடம் இறக்கிவிட்டு வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தாள். அங்கே ரௌத்திரனோ வீட்டிற்கு முன் நின்று காரினைத் துடைத்துக்கொண்டிருந்தான்.
‘இந்த குட்டி பிசாசு கிளம்பிருச்சா இல்ல இன்னும் இழுத்து போத்திட்டு தூங்குறாளான்னு தெரியலையே. சரி கால் பண்ணி கேட்போம்.’ என நினைத்துவிட்டு மலருக்கு அழைக்க, தூரத்தில் வரும் போதே தன்னவனை ரசித்து பார்த்தபடி தான் வந்துக் கொண்டிருந்தாள் மலர். அழைப்பை ஏற்றவள்,
“ஹலோ…” என இழுக்க,
“ஹே என்னாச்சு? கிளம்பிட்டியா? மணி ஆறு ஆகுது. மதுரைப் போக கிட்டத்தட்ட மூணு மணி நேரம் ஆகும்.” என அவன் பொரிய ஆரம்பிக்க,
“அட இருங்க இருங்க. ஏன் இம்புட்டு வேகமா பேசுறீங்க. கொஞ்சம் உங்களுக்கு ரைட் சைட் பாருங்க தீரா.” என அவள் கூற இவனும் தன் வலப்பக்கம் திரும்ப வானுலக தேவதையே நடந்து வருவது போல அழகு பதுமையாக நடந்து வந்தாள். அதிலும் அந்த நீல நிற புடவை அவளுக்கு பாந்தமாக பொருந்தி அவளின் அழகுக்கு மேலும் அழகு சேர்க்கும் விதமாய் இருக்க ரௌத்திரன் இமைக்க மறந்து பார்த்துக் கொண்டிருந்தான் தன்னையறியாமல். அவன் முன் வந்து நின்று சொடக்கிட்டவள்,
“என்ன தீரா சைட் அடிக்குறீங்களா?” என சிரித்துக்கொண்டே கேட்க அப்பொழுது தான் தன் பார்வையை விலக்கினான். ‘ச்ச இப்படியா பார்ப்போம்’ எனத் தன்னைத்தானே திட்டிக்கொண்டான். அதனையும் யூகித்தவள்,
“கவலைப்படாதீங்க. நான் ஏதும் நினைக்க மாட்டேன்.” என சிரிப்பை அடக்கியவாறு மலர் கூற அவனோ தன்னை முயன்று இறுக்கமாக வைத்துக்கொண்டு,
“மணி ஆயிட்டு கிளம்பலாமா. இப்போ கிளம்புனா தான் ஒன்பது மணிக்குள்ள போய் சேர முடியும்.” என அவன் கேட்க,
‘ஐயயோ சுடிதார் மாத்திட்டு வரலாம்னு நினைச்சோமே. நேரம் ஆகுதுன்னு சொல்றாங்க. சரி இப்படியே கிளம்புவோம்’ என மனதில் நினைத்துக்கொண்டு,
“நான் கிளம்பி தான் இருக்கேன். இப்போவே கிளம்பலாம். இருங்க அப்பா அம்மா கிட்ட சொல்லிட்டு வந்துருறேன்.” என அவள் செல்ல போக அவனோ,
“இரு நானும் அவங்ககிட்ட பேசணும்.” என கூறிக்கொண்டு அவளுக்கு முன் சென்றான். சோபாவில் அமர்ந்து செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருந்த வெங்கடேசன் ரௌத்திரனைப் பார்த்து எழுந்து நின்றார்.
“வாங்க தம்பி.” என கூறிக்கொண்டு அவனை அழைக்க, அவர் கூறிய தம்பி என்ற அழைப்பில் அது மரியாதைக்காக சொன்ன சொல் என அறிந்தாலும் அதனை ஏற்காத மனமோ ‘ஐயோ அப்பா. தம்பின்னு கூப்பிட்டா எனக்கு சித்தப்பா முறை’ என தலையில் அடித்து வெங்கடேசனைத் தீயாய் முறைத்தாள் மலர். அதனை அறியாத ரௌத்திரனோ இயல்பாக,
“சார் இந்த மரியாதை எல்லாம் வேணாம். சும்மா பேர் சொல்லியே கூப்புடுங்க.” என பெருந்தன்மையாய் ரௌத்திரன் கூற, வெங்கடேசனோ,
“அப்படியா. அப்போ சரி நீங்களும் சார்னு எல்லாம் கூப்பிடாதீங்க பா. சும்மா அங்கிள்னு கூப்பிடுங்க.” என வெங்கடேசன் கூற மலரின் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்ப் எரிந்தது. அவனும் மரியாதையின் நிமித்தமாக,
“சரிங்க அங்கிள்.” என்றான். வெங்கடேசனோ “என்ன ஓகேவா” என்ற ரீதியில் மலரைப் பார்க்க அவளோ சூப்பர் என கண்களாலேயே கூறினாள். அப்பொழுது சுப்புவும் அங்கு வர,
“சரி அப்போ நேரம் ஆயிருச்சு. நானும் மலரும் கிளம்புறோம். கவலைப்படாதிங்க. அவளைப் பத்திரமா கூட்டிட்டு போயிட்டு பத்திரமா கூட்டிட்டு வரது என்னோட பொறுப்பு.” என ரௌத்திரன் அவர்களுக்கு நம்பிக்கைக் கொடுக்க அவர்களும் சரியென நிம்மதியாக அனுப்பிவைத்தனர்.
ரௌத்திரனும் மலரும் சேர்ந்து வெளியே வர அப்பொழுது தான் பாட்டியும் ஹர்ஷுவும் அவர்கள் வீட்டில் இருந்து வெளியே வந்தனர். இருவருக்கும் அவர்கள் ஜோடியாக நடந்து வருவது பார்த்து மகிழ்ச்சி தாளவில்லை. அதனைக் கண்ட ரௌத்திரனோ அவர்கள் எதற்காக அவ்வாறு பார்க்கிறார்கள் என அறிந்து விறுவிறுவென காரில் சென்று அமர்ந்து கொண்டான்.
பின்பு மலர் அனைவரிடமும் கையசைத்து போய்ட்டு வரேன் என்று விடைபெற்று முன் இருக்கையில் அமர காரைக் கிளப்பினான் ரௌத்திரன். அவள் டாடா காட்டுவதைப் பார்த்தவன் மனதினுள், ‘பெருசா ஏதோ லண்டன் போகுற மாதிரி டாடா காட்டுறா’ என சலித்த பார்வை அவளைப் பார்க்க அவன் பார்வையில் எப்பொழுதும் போல் அறிந்து கொண்டவளோ,
“என்ன டா இவ ஏதோ கல்யாணம் முடிஞ்சு ஹனிமூன் போகுற மாதிரி எல்லார்க்கும் டாட்டா காட்டிட்டு வரான்னு நீங்க நினைக்குறது எனக்கு புரியுது தீரா” என வேண்டுமென்றே மாற்றிக்கூற அதில் கடுப்பானவனோ,
“ஏய் நான் ஒன்னும் அப்படியெல்லாம் நினைக்கலை. உன் இஷ்டத்துக்கு பேசாத. இங்க பாரு மதுரை போகுற வர வாயை திறக்காம வா சொல்லிட்டேன்.” என முறைத்தவாறு கூற,
“ஹலோ நான் என்ன உங்கள மாதிரி ரோபோவா. அப்படியெல்லாம் என்னால வர முடியாது. எனக்கு போர் அடிக்கும். ஆமா இது யாரோட காரு?” என அவள் காரைப் பார்த்துக்கொண்டு கேட்க,
“தெரிஞ்சவங்களோடது.” என ரௌத்திரன் சாலையில் கவனம் செலுத்தியபடி கூறினான்.
“ஓ அப்படியா. சூப்பர். சரி பாட்டு போடுங்க.” என மலர் கூற,
“நீ என்ன பிக்னிக்கா வந்துருக்க? பாட்டு கேட்டு என்ஜாய் பண்ணிட்டு வர” என சிடுசிடுவென கேட்க,
“இதென்ன டா கொடுமையா போச்சு. பாட்டு கேட்குறது ஒரு குத்தமா. சரி அப்போ நான் பேசுறதை கேட்கணும்னு உங்களுக்கு தலை எழுத்து நான் என்ன பண்ண.” என மலர் கூற, ‘ஆஹா இவ பேசுறதை கேட்குறதுக்கு பாட்டு எவ்வளவோ பெட்டெர். அவளும் நமக்காக தான வந்துருக்கா. சரி பாட்ட போடுவோம்’ என நினைத்துவிட்டு,
“சரி பாட்டே போடுறேன்.” என சொல்லிவிட்டு காரில் இருந்த மியூசிக் பிளேயரை ஆன் செய்தான்.
“மலரே மௌனமா…. மௌனமே வேதமா…” என பாடல் ஒலிக்க அதனைக் கேட்டவுடன்,
“பாட்டு தான் போட சொன்னேன். ஆனால் நீங்க ஒரு படி மேல போய் என்னோட பேருலயே பாட்டு போட்டீங்களே. உங்கள நினைச்சா பெருமையா இருக்கு தீரா.” என மலர் அவனைப் பார்த்து நக்கலாக கூற அதில் கடுப்பானவனோ பாட்டை மாற்றினான்.
“மலர்களே… மலர்களே… இது என்ன கனவா…” என அடுத்த பாடல் ஒலிக்க மலர் வாய்பொத்தி சிரித்தாள். மேலும் கடுப்பாகி அடுத்த பாடல் மாற்ற,
“மலரே ஒரு வார்த்தை பேசு இப்படி பூங்காற்று…” என மீண்டும் மலர் என்ற தொடக்கத்திலே பாடல் ஒலிக்க இப்பொழுது மலர் சத்தமாகவே சிரித்துவிட்டு,
“விதியை பார்த்திங்களா… எதை வேணாம்னு நினைக்குறீங்களோ அத தான் கொடுக்கும்” என பாடலை சொல்வது போல என்னையும் நீ வேண்டாம் என்கிறாய் ஆனால் நான் தான் உன் வாழ்க்கையில் வருவேன் என இரண்டு அர்த்தங்களில் கூற அவனோ,
“விதி கொடுத்தாலும் அதை நான் ஏத்துக்கிட்டா தான் எதுனாலும் நடக்கும். நான் ஏத்துக்க மாட்டேன்.” எனக் கூறிவிட்டு பாடலை அணைத்துவிட்டான்.
“இப்போ எதுக்கு பாட்ட ஆஃப் பண்ணீங்க.”
“எனக்கு பிடிக்கல. அதான்” என தோளைக் குலுக்கிவிட்டு சொல்ல அதில் கடுப்பான மலரோ,
“சரி என்னோட குரல்ல பாட்டு கேட்கணும்னு உங்க விதில எழுதியிருந்தா அதுக்கு நான் என்ன பண்ண முடியும். நானே பாடுறேன்” என கூறிவிட்டு,
“காக்கி சட்ட போட்ட மச்சான்
களவு செய்ய கன்னம் வெச்சான்
பக்கம் வந்து பக்கம் வந்து
பாவி மனசே பத்த வெச்சான்
எங்க வீட்டு திண்ணையில…
இதுக்கு தான குத்தவெச்சான்
காக்கி சட்ட போட்ட மச்சான்…”
என அவனைப் பார்த்துக்கொண்டே பாட சட்டென காரை பிரேக் போட்டு நிறுத்தினான்.
“ஏய் ஏன் என்னை இப்படி பாடா படுத்துற? என்னால டிரைவ் பண்ண முடில. தயவு செஞ்சி உன் திருவாயை மூடிட்டு வா.” என கை எடுத்து கும்பிடாத குறையாக சொல்ல அவளோ,
“நானா பாடா படுத்துறேன். நீங்க தான் பாட்டு கேட்க விட மாட்டிக்கிங்க.” என முகத்தை பாவமாக வைத்து கொண்டு சொல்ல,
“எம்மா தாயே பாட்டு தான வேணும். நான் போட்டு தொலையுறேன்.” என எரிச்சலாக கூறிவிட்டு மீண்டும் ம்யூசிக் பிளேயரை ஆன் செய்தான். வரிசையாக மலரை வைத்து “எம்” வரிசையில் பாட்டு வந்ததால் அதே வரிசையில்,
“மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே…” என பாடல் ஒலிக்க மலரோ, ‘கரெக்டான டைமிங்ல ராங்கான பாட்டு வருதே’ என பேந்த பேந்த முழித்தாள். அவளின் முழியில் ரௌத்திரனுக்கே சிரிப்பு வந்து விட்டது. சத்தமாக சிரித்துவிட்டான் தன்னையறியாமல்.
அவனின் சிரிப்பு சத்தத்தில் பாட்டை அணைத்துவிட்டு அவனையே ஆச்சர்யமாக பார்த்தாள். பின்பு தான் சத்தமாக சிரித்துவிட்டோமே என நினைத்துவிட்டு குரலை செருமி தன்னை சுதாரித்து மீண்டும் பழையபடி முகத்தை வைத்துக்கொண்டு சாலையில் கவனத்தை செலுத்தினான்.
“நீங்க சிரிச்சா ரொம்ப நல்லா இருக்கு தீரா. முதல் தடவை நீங்க இப்படி சிரிச்சு நான் பார்க்குறேன்.” என மலர் அவனை ரசித்தவாறு கூற அவனோ அதற்கு ஏதும் பதில் கூறாமல்,
“நீ பாட்டு கேக்கணும்னு தான சொன்ன. அத மட்டும் கேளு.” என இறுக்கமான முகத்துடன் கூறினான்.
‘சரியான உம்முனா மூஞ்சி. இங்க என்ன மாத்தியோசி ரௌண்டா நடந்துட்டு இருக்கு. நான் என்ன கேட்குறேன். இந்த ஈபிள் டவர் என்ன சொல்லுது. இதையெல்லாம் காதலிக்க வச்சு கல்யாணம் பண்ணி புள்ள பெத்து… ஷப்பா ரொம்ப கஷ்டமான டாஸ்க் தான் டி மலர். உன் பாடு திண்டாட்டம் தான்’ என தனக்குத்தானே கூறிக்கொண்டு ஜன்னல் வெளியே காலை நேர காட்சிகளை ரசித்துக்கொண்டே வந்தாள். அவள் அமைதியாக வருவதைக் கண்டவனோ,
‘என்ன இவ அமைதியா வரா. நம்ம பேசுனதுல ஏதும் ஃபீல் பண்றாளோ? இல்லையே அடிச்சாலே கவலைப்படாத கேசு இது.’ என நினைக்க அவனின் மனசாட்சியோ, ‘டேய் ரௌத்திரா உனக்கே இது ஓவரா தெரில. அந்த புள்ள பேசுனாலும் குத்தம் பேசலைன்னாலும் குத்தமா.’ என மலருக்கு சாதகமாக பேச, அப்பொழுது தான் அவனின் மூளைக்கு அது உரைக்கிறது. பிறகு அவ்வாறே இருவருக்குள்ளும் மௌனமே சிலநேரம் பயணித்தது. சிறுது நேரத்தில் ஓர் உணவகத்தில் வண்டியை நிறுத்தினான் ரௌத்திரன். மலரோ கேள்வியாய் ரௌத்திரனை நோக்க அவனோ,
“என்ன பார்க்குற? காலைல சாப்பிடாம தான வந்துருப்ப.” என கேட்க, அப்பொழுது தான் பசி என்ற விஷயமே மலருக்கு தோன்றுகிறது. மலருக்கு சரியான சமயத்தில் சாப்பிட்டு விட வேண்டும். இல்லையென்றால் தலை வலி வந்துவிடும். ஆனால் இன்று தன்னவன் அருகில் இருப்பதாலோ என்னவோ பசியே தோன்றவில்லை.
‘பரவாயில்ல. நம்ம மேல அக்கறை எல்லாம் படுது இந்த ஈபிள் டவர்.’ என நினைத்து சிறு சிரிப்புடன் அவனைப் பார்க்க இவ்வாறு தான் நினைப்பாள் என அறிந்த ரௌத்திரனோ,
“இங்க பாரு உன்மேல அக்கறைப் பட்டு சாப்பிட கூப்பிட்டேன்னு நினைக்காத. எனக்கு பசி எடுக்கு. அட் தி சேம் டைம் என் கேஸுக்கு சாட்சி சொல்ல நீ வர. சாப்பிடாம மயங்கி விழுந்துட்டனா எல்லாம் வேஸ்ட்டா போயிரும். அதுக்காக தான்.” என படபடவென பொரிந்து தள்ள அவளோ,
“ஆமா நான் தான் எதுமே சொல்லலையே. இப்போ எதுக்கு இந்த விளக்கம். பரவாயில்ல என்னை நல்ல புரிஞ்சு வச்சிருக்கீங்க.” என சிரித்தபடி கூறிவிட்டு அவனுக்கு முன் உணவகத்திற்குள் நுழைந்தாள்.
‘என்ன சொன்னாலும் ஏதாவது செக் வச்சுட்டு போயிருறா குட்டி பிசாசு’ என மனதினுள் நொந்துவிட்டு இவனும் உணவகத்திற்குள் நுழைந்தான். கை கழுவிவிட்டு இருவரும் எதிர் எதிரே அமர ரௌத்திரன் வெயிட்டரிடம்,
“எனக்கு மூணு இட்லி… அப்புறம் உனக்கு…” என மலரை கேட்க, அவளோ, “எனக்கு இட்லி பிடிக்காது ஒரு தோசை” என அவள் கூற, அதையும் வெயிட்டரிடம் சொல்ல வந்ததும் இருவரும் சாப்பிட ஆரம்பித்தனர். சாப்பிட்டுவிட்டு வெளியே வந்து காரைக் கிளப்பினான். அப்பொழுது ராஜா ரௌத்திரனுக்கு அழைத்தான். பேசுவதற்காக ஓரமாக வண்டியை நிறுத்திவிட்டு பேசிக்கொண்டிருந்தான்.
“சொல்லு டா. நம்ம கேசு எத்தனை மணிக்கு விசாரணை?” என ரௌத்திரன் கேட்க,
“இப்போதான் மச்சான் கேட்டேன். மதியம் ரெண்டு மணிக்காம் டா. அதான் ஒன்னும் அவசரம் இல்ல பொறுமையா வாங்கன்னு சொல்ல கூப்பிட்டேன்.” என ராஜா கூற,
“ஓ அப்படியா. சரி டா. நாங்க கிளம்பிட்டோம். இன்னும் ரெண்டு மணிநேரத்துல வந்துருவோம்.” என கூறிவிட்டு மேலும் சில விஷயங்கள் பேசிக்கொண்டிருந்தான்.
அப்பொழுது எதேர்சையாக மலர் கண்ணாடி வழியாக பின்னாடி பார்க்க லாரி ஒன்று இவர்கள் காரினை நோக்கி வேகமாக வந்துக் கொண்டிருந்தது.
அதனைப் பார்த்து பதற்றத்தில் மலர் செய்வதறியாது விழிவிரித்து அதிர்ச்சியாய் பார்க்க, அவளின் முகமாற்றத்தை எதேர்ச்சியாக பார்த்தவன் கண்ணாடியில் பார்க்க சட்டென சுதாரித்து காரைப் புயலென கிளப்பினான்.
இரண்டு நொடி தாமதித்திருந்தாலும் லாரி இவர்களின் காரை இடித்திருக்கும். காரைக் கிளப்பினாலும் விடாது லாரி பின்தொடர்ந்து வர செல்லும் சாலை கிராமப்புறங்களை ஒட்டியிருந்தது ஆதலால் அங்கிருந்த குறுகலான வழி ஒன்றில் காரை நுழையவிட்டான். லாரியால் அதில் நுழைய முடியாது என அறிந்தே அப்பாதையில் சென்றான்.
ஏற்கனவே அதிர்ச்சியில் இருந்தவள் இவன் சட்டென காரை புயல் வேகத்தில் கிளப்பவும் மேலும் அதிர்ந்து காரின் வேகம் குறைந்த போதே சற்று அதிலிருந்து மீண்டாள். ரௌத்திரனை நோக்க அவன் யார் இதை பண்ணிருப்பாங்க எதுக்கு பண்ணனும் என ஏதேதோ பலமாக சிந்தித்துக்கொண்டே காரை ஓட்டிக் கொண்டிருந்தான்.
“தீரா என்ன நடக்குது? எதுக்கு அந்த லாரி நம்மள இடிக்க வந்தது? இதெல்லாம் அந்த மினிஸ்டர் வேலையா?” என மலர் புரியாமல் அவனிடம் கேட்க, அவனோ இன்னும் சிந்தனையில் தான் இருந்தான்.
சட்டென எவிடென்ஸின் யோசனை வர, காரை நிறுத்தியவன் காருக்குள் தனக்கருகில் வைத்திருந்த பையில் எவிடென்சின் நகலை பார்க்க இவன் நினைத்தது போலவே அது யாரோவால் பார்க்கப்பட்டிருந்தது போல கசங்கியிருந்தது. அவன் செய்வதை எல்லாம் புரியாமல் பார்த்துக்கொண்டிருந்தாள்.
‘அப்போ யாரோ கார அன்லாக் பண்ணி எவிடென்ஸ் எடுக்க முயற்சி பண்ணிருக்காங்க.’ என யூகித்தவன் மேலும் சிந்திக்கலானான். அப்பொழுது அவர்களின் காரை சுற்றி வளைத்தது ஐந்தாறு கார்கள். அதிலிருந்து அடியாட்கள் இறங்கினர். ஆனால் அவர்கள் சாதாரண அடியாட்களைப் போல் இல்லாமல் ஹை க்ளாஸாக கோட் சூட் அணிந்து கையில் துப்பாக்கியுடன் இறங்கினர். அவர்களைக் கண்டவனுக்கு புரிந்துவிட்டது இது யாருடைய வேலை என்று. மலரைக் காருக்குள்ளே வைத்து பூட்டிவிட்டு தில்லாக அவர்கள் முன் நின்றான் ரௌத்திரன்.
“தீரா என்ன பண்றீங்க? எதுக்கு என்னை உள்ள வச்சு பூட்டுறீங்க?” என மலர் கத்திக்கொண்டிருக்க அதனைக் கண்டுகொள்ளாமல் பூட்டிவிட்டான். அனைத்து அடியாட்களும் தங்கள் துப்பாக்கியை ரௌத்திரன் முன் நீட்ட, மலருக்கு ஒரு நிமிடம் குலை நடுங்கிவிட்டது. ஆனால் ரௌத்திரனோ அசராமல் நின்றான்.
“என்ன டா? கொஞ்சம் கூட பயமே இல்லாம தில்லா நிக்குற. ஒரு அழுத்து அழுத்தினா உன் நிலைமை என்ன ஆகும்னு யோசிச்சியா?” என நின்றிருந்தவர்களுள் ஒருவன் கேட்க,
“அதை நினைச்சு பயப்பட வேண்டியது நானு. நானே அசராம நிக்குறேன். உனக்கு என்ன வந்துச்சு? நீங்க என்னை சுட்டாலும் நீங்க நினைச்சது நடக்காது. ஏன் டா? எவிடென்ஸை இவ்ளோ கேர்லெஸ்ஸா கொண்டுவர நான் என்ன உங்க ஹைக்ளாஸ் பாஸ் மாதிரி லூசா?” என திமிராக அவன் கேட்க, அதிர்ந்தது அடியாட்கள் மட்டுமல்ல அடியாட்கள் ஒருவனின் சட்டைப்பையிலிருந்த ஐபோன் மூலம் வீடியோ காலில் நடப்பதை லேப்டாப்பில் பார்த்துக்கொண்டிருந்த அவனும் தான்.
அந்த அலைபேசி வைத்திருந்த அடியாளை ரௌத்திரன் நெருங்க அவனோ சுட ஆயத்தமாக தன் காதில் மாட்டியிருந்த ரிஸீவர் மூலம் வந்த ஆணைக்கிணங்க சுடாமல் நின்றான்.
“என்ன டா உன் பாஸ் சுட வேணாம்னு சொல்லிட்டானா?” என கேட்டுக்கொண்டே அவன் சட்டைப்பையில் இருந்து அலைபேசியை எடுத்த ரௌத்திரன் அதிலிருக்கும் அவனைப் பார்த்து நக்கலாக சிரித்தான். பின்,
“ஆம்பளையா இருந்தா நேருல வா டா. நேருக்கு நேரா என்னை சந்திக்க அவ்ளோ பயமா உனக்கு?” என வேண்டுமென்றே அவன் கோபத்தைக் கிளற அவனது பேச்சில் ஆத்திரமடைந்தவன், “கெட் ரெடி தி ஹெலிகாப்டர் ” என சிங்கத்தைவிட சத்தமாக கர்ஜித்தான்.
ரௌத்திரனோ அவனின் வருகைக்காக தனது காரில் ஸ்டைலாக சாய்ந்தபடி காத்திருக்க, அடியாட்களும் ஒருவரையொருவர் பார்த்தபடி தங்கள் பாஸின் வருகைக்கு காத்திருந்தனர். மலரோ நடப்பது எதுவும் புரியாமல் காரினுள் இருந்தே அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்தனர். எவ்வளவு முறை காரின் கதவைத் தட்டியும் ரௌத்திரன் திறக்கவில்லை. வேறு வழியின்றி உள்ளிருந்தே அவனை ரசித்து பார்த்துக்கொண்டிருந்தாள்.
‘இந்த ஈபிள் டவர் என்ன தான் பண்ணுது? இவனுங்க துப்பாக்கியை வச்சுட்டு நிக்குறானுங்க. கொஞ்சம் கூட பயப்படாம அவன் மொபைலை எடுத்து எவன்கிட்டயோ வீடியோ கால் பேசுது. பேசுறது கூட காதுல விழ மாட்டிக்கு. என்ன தான் நடக்குது இங்க?’ என யோசித்தவாறே பார்த்துக் கொண்டிருந்தாள்.
பதினைந்து நிமிடத்திற்கு பிறகு ரெக்கைககளை சுழலவிட்டபடி சற்று தூரம் தள்ளியிருந்த வெற்று இடத்தில் ஓர் நவீன ஹெலிகாப்டர் தரையிறங்கி கொண்டிருந்தது. அதனைக் கண்டதும் அடியாட்களுள் ஒருவன் வேகமாக காரை எடுத்து கொண்டு அவ்விடத்திற்கு விரைந்தான். ஹெலிகாப்டரில் இருந்து இறங்கியவன் அந்த காரினுள் ஏற இரண்டு நிமிடத்தில் ரௌத்திரன் எதிரே வந்து நின்றது அந்த கார்.
‘யார்ரா இவன்? அவ்ளோ பெரிய அப்பாடக்கரா? ஹெலிகாப்டர்ல வரான். எவனா இருக்கும்?’ என யோசனையோடே காரினுள் இருந்து நடப்பதை கவனித்துக் கொண்டிருந்தாள்.
தீமை தான் வெல்லும்
என்ன நினைத்தாலும்
தீமை தான் வெல்லும்
எவன் தடுத்தாலும்
என பின்னணி பாடல் போடும் அளவிற்கு ஆறடி உயரத்தில், சிவந்த நிறத்தில், கோட் சூட்டுடன் கண்களில் இருந்த கூலிங் கிளாஸைக் கழட்டியவாறு மங்கையரை மயக்கும் மாயக்கண்ணாய் இருபத்தி ஏழு வயதில் ஓர் வாலிபன் இறங்கினான்.
இறங்கியவன் ரௌத்திரனைப் போலவே அவனின் காரில் தன் கைகளை மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டு ரௌத்திரனை எதிர்கொண்டு பார்த்தான்.
“வெல்கம் மிஸ்டர் ஆயுஷ், ஒன் ஆஃப் தி கிரேட் பிஸ்னஸ்மென் ஆப் மும்பை. ” என உனக்கு நான் சளைத்தவனல்ல என்ற பார்வையில் ரௌத்திரன் கெத்தாக கூறினான்.
“தேங்க யூ மிஸ்டர் ரௌத்திரன். ஐ ஒண்டர்ட் அபௌட் யுவர் இன்டெலிஜென்ஸ்.” என வஞ்ச புகழ்ச்சியணியினைப் பின்பற்றி கைத்தட்டி கூற,
“உங்கள மாதிரி ஆட்களுக்கு தான் நான் தேங்க்ஸ் சொல்லணும். நீங்க தான இப்படியெல்லாம் என்னை யோசிக்க வைக்குறீங்க மிஸ்டர் ஆயுஷ்” என அவன் தொடுத்த அம்பை அவனிடமே ரௌத்திரன் திருப்ப,
“உங்க தன்னடக்கத்தை எண்ணி நான் வியக்குறேன். சுத்தி வளச்சு பேச விரும்பல. நேரா விஷயத்துக்கு வரேன். நல்ல வேலை நான் அனுப்புன லாரி கிட்ட இருந்து நீ தப்பிச்சுட்ட. எனக்கு இப்போ உன்னைக் கொல்ல மனசு வரல. உன்னோட புத்தி கூர்மையை இன்னும் சோதிச்சு பார்க்க விரும்புறேன். என்னை கையும் களவுமா பிடிக்க நானே உனக்கு பெர்மிஷன் கொடுக்கேன். இப்போதைக்கு நீ என்னை பத்தி தெரிஞ்சு வச்சது ஒரு டென் பெர்ஸன்ட் தான். அதை நீ தாராளமா கோர்ட்ல சப்மிட் பண்ணலாம். முடிஞ்சா உன் இன்டெலிஜென்ஸ் யூஸ் பண்ணி என்னை முழுசா பிடி. அப்போ ஒத்துக்குறேன் மிஸ்டர் ரௌத்திரன் கிரேட் போலீஸ் ஆபீசர்னு.” என அவன் சவால் விட,
“எக்ஸலெண்ட். இப்போ நான் ஒன்னு சொல்றேன் கேட்டுக்கோ.” என ஏதோ கூற வந்தவன் பின் ஏதோ யோசித்து கூறுவதை நிறுத்திவிட்டு, “இல்ல நான் சவால் விட இது கரெக்ட்டான டைம் இல்ல. நேரம் வரும் போது சொல்றேன் இன்னும் கெத்தா. அண்ட் ஒன் மோர் திங்க் உன்னைக் கையும் களவுமா பிடிக்க உன்னோட பெர்மிசன் எனக்கு தேவையில்லை.” என கூறிவிட்டு அவனைத் திமிராக பார்த்தான். ஆயுஷோ,
“ஐம் வெயிட்டிங் போர் யுவர் சேலஞ்ச். என்னைப் பத்தி தெரிஞ்சு வச்சுருக்குற நீ என்னோட சவால் பத்தியும் தெரிஞ்சு வச்சிருப்பன்னு நினைக்குறேன்.” என தன் தோளைக் குலுக்கிவிட்டபடி கூறினான்.
“ரொம்ப நல்லாவே தெரியும். மீட் யூ சூன்” என ஆயுஷிடம் கூறிவிட்டு காரை எடுத்துக்கொண்டு கிளம்பினான் ரௌத்திரன்.
நடந்த அனைத்தையும் ஊமைப் படம் பார்ப்பது போல் பார்த்த மலருக்கோ ஏகப்பட்ட கேள்விகள் மூளைக்குள் ஓடி அவளை இம்சித்தது.
“தீரா ப்ளீஸ். என்ன தான் நடக்குது இங்க? தயவு செஞ்சு சொல்லுங்க. யோசிச்சு யோசிச்சு குழம்பி போய் சாட்சியை வேற மாதிரி சொல்லிற போறேன். ” என மலர் புலம்ப,
“வந்தவன் பேர் ஆயுஷ். மும்பைல கிரேட் பிசினஸ்மேன். அந்த மினிஸ்டர் பார்க்குற கேடி வேலைக்கு இவன் தான் மூலக்காரணம்.” என சாலையில் கவனம் செலுத்தியபடி ரௌத்திரன் கூறினான்.
“இவன் காரணமா? எப்படி? நீங்க எப்போ இதைக் கண்டுபிடிச்சுங்க சொல்லவே இல்ல இதை?” என தலையும் புரியாமல் வாழும் புரியாமல் புரியாமல் கேட்க,
“எனக்கே இப்போ தான் தெரியும்?” என சாதாரணமாய் கூறினான்.
“ஐயோ தீரா ப்ளீஸ். ஏற்கனவே குழம்பி போய் இருக்கேன். இன்னும் என்னைக் குழப்பாதீங்க.” என மலர் கெஞ்சாத குறையாகக் கேட்க,
“லாரி மோத வரும் போது ஒருவேளை அந்த மினிஸ்டர் தான் இப்படி பண்ணிருக்கானோன்னு எனக்கும் சந்தேகம் வந்துச்சு. அப்புறம் அந்த அடியாட்கள் எல்லாரும் நம்மள ரௌண்டப் பண்ண அப்புறம் தான் இது அந்த மினிஸ்டர் வேலை இல்லனு தோணுச்சு. இந்த ஆயுஷைப் பத்தி ஏற்கனவே விசாரிச்சு பார்த்துருக்கேன். ஏதோ இல்லீகல் பிஸ்னஸ் பண்றான்னு தெரியும். ஆனால் என்ன பன்றான்னு தெரிஞ்சுக்க எனக்கு வாய்ப்பு கிடைக்கல.
அவன் ரொம்ப ஹைக்ளாஸ். பார்த்த தானே. ரௌடிங்கள கூட ஹைக்ளாஸா வச்சிருக்கான்னு. அதை வச்சு தான் அவன்னு கெஸ் பண்ணேன். எல்லாவனும் மொபைலை பேண்ட் பாக்கெட்ல வச்சிருக்கான். ஒருத்தன் மட்டும் கேமரா தெரியுற மாதிரி சட்டை பாக்கெட்ல வச்சுருந்தான். அதை வச்சு தான் அவன் பார்த்துட்டு இருக்கான்னு தெரிஞ்சுது.
அவனைப் பொறுத்தவரை ஒரு விஷயம் அவனுக்கெதிரா நடந்தா போட்டு தள்ளிட்டு போயிட்டே இருப்பான். அதே யாராவது அவனை எதிர்த்து சவால் விட்டா அதை ரசிப்பான். அது மட்டுமில்ல அந்த சவால்ல மேக்சிமம் ஜெயிச்சுருவான். ஒருவேளை தோத்துட்டா அவங்க என்ன சொன்னாலும் செய்வான்.” என கூறி முடிக்க மலரோ ஏதோ யோசிக்க அதனைக் கண்டவனோ,
“நீ என்ன யோசிக்கன்னு தெரியுது.” என ஏதோ கூறுவர,
“தீரா ஒரு நிமிஷம். நிஜமா ஒருவேளை சவால்ல நம்ம தோத்துட்டான்னு நான் யோசிக்கவே இல்ல.” என அவனுக்கு முன் முந்திக்கொண்டு அவள் கூற அவனோ ஆச்சர்யமாக பார்த்தான்.
“ஆமா தீரா. அப்படி நான் யோசிச்சா என்னோட தீரன நான் நம்பாத மாதிரி. உங்க மேல எனக்கு நம்பிக்கை இருக்கு.” என மலர் அவனைப் பார்த்துக்கூற அவளின் நம்பிக்கையில் மலைத்து போனான் ரௌத்திரன். பிறகு இரண்டு மணி நேர பயணத்தில் மதுரை நீதி மன்றத்தை அடைந்தது கார். அங்கே தான் ராஜாவும் நின்று கொண்டிருந்தான்.
“மச்சான் என்ன டா ஆச்சு? ஏன் இவ்ளோ நேரம். நீங்க கிளம்பி அஞ்சு மணி நேரம் ஆச்சு டா.” என ராஜா கேட்க,
“எல்லாம் சொல்றேன் டா. நான் கொரியர்ல அனுப்பிவிட்ட எவிடேன்ஸ் எங்க?” என ரௌத்திரன் கேட்க ராஜாவும் அதனைக் கொடுத்தான். அதனை வாங்கிய ரௌத்திரனோ,
“இப்போதைக்கு இது நமக்கு தேவைப்படாது. ” எனக் கூறிக்கொண்டு மலரிடம், “இங்க பாரு நீ அந்த அசோக் சம்மந்தமான சாட்சி மட்டும் சொல்லி முடிச்சுட்டா நம்ம கிளம்பிறலாம்.” என மிகவும் சாதாரணமாக கூறினான். அதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ராஜாவோ,
“என்ன டா மச்சான் சொல்ற? கஷ்டப்பட்டு கண்டுபிடிச்சது தானே. அந்த மினிஸ்டரை இதை விட்டா பிடிக்க நல்ல சான்ஸ் கிடைக்காது டா ” என ராஜா கூற ரௌத்திரனோ,
“நமக்கு பெரிய திமிங்கலம் மாட்டிருக்கு. அதோட சேர்த்து இந்த மீனையும் புடிச்சிறலாம். இப்போ விட்டு தள்ளு. ஆனால் இதுவும் நமக்கு தேவைப்படும்.” என கூறிவிட்டு மற்றதை முடிக்க உள்ளே சென்றான்.
“என்னமா இவன்? இப்படி சொல்லிட்டு போறான். என்ன நடந்துச்சு?” என ராஜா கேட்க மலரோ,
“இந்த கேஸ் முடியட்டும் அண்ணா. எல்லாம் பொறுமையா சொல்றேன். அவர் எது பண்ணாலும் ஏதாவது காரணம் இருக்கும்.” என மலர் கூறிவிட்டு, ‘இந்த ஈபிள் டவர்க்கு மட்டும் எப்படி தான் இப்படி யோசிக்க முடியுதோ’ என தன்னவனை நினைத்து வியந்துக் கொண்டிருந்தாள்.
மௌனம் எரியும்…