மௌனம் 16
காதலில் திளைத்து கொண்டிருந்த காதல் ஜோடிகள் பிறகு வீடு வந்து சேர்ந்தனர். மாலை ராஜாவோ ரௌத்திரனிடம்,
“மச்சான் எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு நான் மதுரைக்கு கிளம்புறேன். நாளைக்கழிச்சு நீங்க கோர்ட்டுக்கு வரும் போது நான் எல்லாம் ரெடி பண்ணி வச்சுருப்பேன். இன்னைக்கு நான் கிளம்புறேன்.” என செல்வதாய் கூற ரௌத்திரனும்,
“சரி டா. பார்த்து போ. எதுக்கும் நீயும் கவனமா இரு.” என ராஜாவை பத்திரமாக இருக்கும்படி கூற,
“சரி மச்சான். மலரை நாளைக்கு கவனமா பார்த்துக்கோ. நீயும் கவனமா இரு. எவிடென்ஸ் பத்திரம்.” என ரௌத்திரனிடம் பாட்டியிடமும் “போய்ட்டு வரேன்” என கூறிவிட்டு தன்னவளிடம் கண்களாலேயே கூறிக்கொண்டு விடைபெற்று சென்றான். அந்த நாள் அவ்வாறே கழிய, மறுநாள் விடியல் ரௌத்திரனுக்கு சஞ்சலத்தோடே விடிந்தது. ஏனோ மனதில் தவறு நடக்க போவதாக உணர்த்த அவனின் மனமோ தன்னிச்சையாக மலரையே நினைத்தது.
‘ஒருவேளை குட்டிப்பிசாசுக்கு ஏதாவது ஆகப்போகுதா?’ என மனம் யோசிக்க, ‘அப்படியே நாளும் அவளுக்கு ஆபத்துன்னா எனக்கு ஏன் மனசு ஒருமாதிரி இருக்கு. நம்ம அவளை எப்படியும் காப்பாத்திருவோம் அது வேற விஷயம் ஆனால் அவளை என்ன நான் காதலிக்கவா செய்றேன். எனக்கு எதுக்கு இப்படி இருக்கு.’ என யோசனையோடே இருந்தான். பிறகு இன்று நிறைய வேலை இருப்பதால் சீக்கிரமாக கிளம்பி காவல் நிலையத்துக்கு சென்றுவிட்டான்.
அங்கே மலரோ துயில் கலைந்து பல்துலக்கி காபியுடன் வாசலில் அமர்ந்து குடித்துக் கொண்டிருந்தாள். தன் அலைபேசியை எடுத்தவள் வாட்ஸப்பில் நுழைந்தாள். ஹர்ஷுவிடம் இருந்து ரௌத்திரனின் நம்பரை இரண்டு நாட்களுக்கு முன்பு வாங்கியிருந்தாள். ஏனோ தன்னவனை வம்பிழுக்க வேண்டும் என்று தோன்ற உடனே அதில் தீரா என பதியப்பட்டிருந்த அவனின் கான்டாக்ட் ஓபன் செய்து, “குட் மார்னிங்க் மிஸ்டர் ஈபிள் டவர்.” என குறுஞ்செய்தி அனுப்பினாள். அலைபேசியில் எப்பொழுது நோட்டிபிகேஷன் வந்தாலும் உடனே அதனை என்னவென பார்க்கும் பழக்கமுடையவன் ரௌத்திரன்.
அனுப்பியது யாரென புருவம் சுருக்கி பார்த்தவன் பின் ஈபிள் டவர் என அனுப்பியுள்ளதை வைத்து மலர் தான் என தெரிந்துகொண்டான். அதனை சட்டை செய்தால் அவன் தான் ரௌத்திரன் இல்லையே. கண்டுக்கொள்ளாமல் விட்டுவிட்டான்.
பின் மீண்டும் அவள், “என்ன தீரா பதில் அனுப்ப மாட்டிக்கிங்க?” என அனுப்ப அதற்கும் அவன் பதிலளிக்கவில்லை. ‘பார்த்துட்டு ரிப்லை பண்ண மாட்டிக்காறே. இப்போ பாரு உங்களை அனுப்ப வைக்கிறேன்.’ என மனதில் நினைத்துவிட்டு “லவ் யூ தீரா” என அனுப்ப அதில் கோபம் கொண்டு தன்னைத் திட்டவாது ஏதாவது அனுப்புவான் என எதிர்பார்த்தவளுக்கு ஏமாற்றமே.
அவனோ அதனைப் பார்த்து கடுப்பாகி அவளை பிளாக் செய்துவிட்டான். ‘அடப்பாவி மனுஷா. பிளாக் பண்ணிட்டியே’ என அவனை மனதில் அர்ச்சித்துக் கொண்டிருக்க அப்பொழுது யாரோ இருவர் பேசிக்கொண்டிருக்கும் சத்தம் கேட்டது. அதில் ஒருவன்,
“அது தான் அந்த பொண்ணோட ஸ்கூட்டி அதுல தான் அவ வெளிய போவா. நான் ரெண்டு ஏரியா தள்ளி நிப்பேன். அங்க தான் ஆள் நடமாட்டம் இருக்காது. நீ அந்த பொண்ணு கிளம்புன உடனே எனக்கு சொல்லு.” என கூற மற்றொருவனோ,
“அண்ணே அந்த பொண்ணு கண்டிப்பா வெளிய எங்கேயும் போகுமா. ஒருவேளை போகலைனா என்ன பண்றது.” என சந்தேகமாய் கேட்க,
“டேய் மினிஸ்டர் எல்லாம் பிளான் பண்ணி தான்டா சொல்லிருக்காரு. மதுரைல தான் இந்த பொண்ணு படிச்சுச்சாம். அங்க இவ கூட படிச்ச ஒரு பொண்ண மிரட்டி, “நான் உன் ஊருக்கு வந்துருக்கேன் டி. நாளைக்கு காலைல பத்து மணிக்கு என்னை பஸ் ஸ்டான்ட்ல பிக்கப் பண்ண வா.” அப்படின்னு அந்த பொண்ண இந்த பொண்ணுக்கிட்ட பேச வச்சிருக்காரு. அதனால கண்டிப்பா இந்த பொண்ணு அந்த பொண்ணை பிக்கப் பண்ண போகும். அப்படி போகும் போது கடத்துறது தான் பிளான். அதனால நீ சொன்ன வேலைய மட்டும் செய். பத்து மணிக்கு அந்த பொண்ணு கிளம்புனதும் என்கிட்ட சொல்லு. அப்படி ஒருவேளை ஏதாவது சொதப்பி அந்த பொண்ணு போகலனா இந்தா ஆசிட். இதை வீட்டுக்குள்ள போய் அந்த பொண்ணு மூஞ்சில ஊத்திட்டு நீ தப்பிச்சு போயிரு.” என அவன் திட்டத்தைக் கூற மற்றொருவனோ,
“என்னண்ண சொல்றீங்க ஆசீட் அடிக்கணுமா. வேவு பார்க்க மட்டும் தான சொல்லி கூட்டிட்டு வந்திங்க. இப்போ என்ன இப்படி சொல்றீங்க?” என அவன் பயந்து கேட்க மற்றொருவனோ,
“டேய் அந்த மினிஸ்டர் இந்த ரௌத்திரன் மேல செம காண்டுல இருக்காரு. அவன் தங்கச்சிய கடத்த முடியலனா அசீட் அடி. நான் பார்த்துக்குறேன். எனக்கு தேவை அந்த ரௌத்திரன் துடிக்கணும். அப்படின்னு சொன்னாரு. அதுனால எந்த பிரச்சனைனாலும் அந்த மினிஸ்டர் பார்த்துப்பாரு.” என அவன் தைரியம் கூற,
“அண்ணே எனக்கு இன்னொரு இடத்துல ஒரு முக்கியமான வேலை இருக்கு. அதனால இந்த பொண்ணு கிளம்புனதும் உங்களுக்கு கால் பண்ணி சொல்லிட்டு நான் இந்த பக்கம் கிளம்பி போயிருவேன்.” என கூற,
“சரி டா. ஆனால் அவள் கிளம்புன அப்புறம் தான் நீ போகணும்.” என கூறிவிட்டு அவன் சென்றுவிட்டான்.
இதனை எல்லாம் மறைந்திருந்து மலர் அதிர்ச்சியுடன் கேட்டுக்கொண்டிருந்தாள். ‘அடப்பாவிங்களா கடத்த பிளான் போட்டதைக் கூட ஓரளவு மன்னிச்சுருவேன். ஆனால் கடைசில ஆசிட் அடிக்கணும்னு சொல்றீங்களே. நான் நடக்க விட மாட்டேன் இதை.’ என மனதில் நினைத்துவிட்டு மணியைப் பார்க்க அது ஒன்பது முப்பது என காண்பிக்க பதட்டத்தில் என்ன செய்வது என ஓடவில்லை அவளுக்கு. பின் ரௌத்திரனுக்கு கால் செய்து சொல்லலாம் என அவனுக்கு அழைக்க அவனோ இவள் சும்மா கடுப்பேற்ற கால் செய்கிறாள் என நினைத்துவிட்டு அழைப்பை ஏற்காமல் விட்டுவிட்டான்.
‘ஐயோ கடவுளே நான் சும்மா பண்றேன்னு நினைச்சு ஈபிள் டவர் கட் பண்ணி விடுதே’ என மனதில் நொந்துவிட்டு மறுபடியும் அழைக்க அவனோ, ‘இவளோட தொல்லையா போச்சு’ என எரிச்சலுடன் மீண்டும் துண்டித்துவிட்டான். இவன் எடுக்கவில்லை என்றதும் பின் ராஜாவிற்கு கால் செய்யலாம் என அவனுக்கு அழைக்க, அவனோ குளித்துக் கொண்டிருந்தான். அதனால் அவனும் அழைப்பை ஏற்கவில்லை. நேரம் கடந்து கொண்டே இருந்தது.
‘ஐயோ இப்போ என்ன பண்றது? ஹர்ஷுக்கு கால் பண்ணி வீட்டைப் பூட்டிட்டு உள்ள இருன்னு சொல்லுவோம்.’ என நினைத்துவிட்டு அவளுக்கு அழைக்க அது சுவிட்ச் ஆப் என வந்தது. ‘ஐயோ என்ன பண்ண. எல்லாம் ஒரே நேரம் மக்கர் பண்ணுதே. இப்போ என்ன பண்ணலாம். சரி வேற வழி இல்ல. நம்ம தான் களத்துல இறங்கணும்’ என யோசித்தவள் ஐந்து நிமிடத்தில் உடை மாற்றிவிட்டு வந்து பார்த்தாள். அப்பொழுது தான் ஹர்ஷு தன் ஸ்கூட்டியை வெளியே எடுத்து கொண்டிருந்தாள். அந்த அடியாள் வேறு இன்னும் நின்று ஹர்ஷுவை கண்காணித்து கொண்டிருந்தான்.
‘இவ வேற இந்த பக்கம் பார்க்குறாளா. நம்மளும் வெளிய போய் அவகிட்ட பேச முடியாது. கால் பண்ணலாம்னு பார்த்தா இவ உள்ள போறதுக்குள்ள அவன் ஆசிட் அடிச்சுட்டா என்ன பண்ண. ஏதவாது சொதப்புச்சுனா ஒன்னு எனக்கு இல்ல ஹர்ஷுக்கு யாருக்காவது ஆசிட் கன்பார்ம்.’ என இவள் நினைத்து கொண்டிருக்க அங்கே ஹர்ஷுவோ ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்துவிட்டாள்.
‘ஐயோ இவ வேற கிளம்புறாளே.’ என பார்த்துக்கொண்டிருக்க ஹர்ஷு ஸ்கூட்டியைக் கிளப்பிவிட்டாள். உடனே அந்த அடியாளும் இன்னொருவனிடம் இவள் கிளம்பியதாக கூறிவிட்டு அந்த வழியே சென்றுவிட்டான். அவன் கிளம்பியதும், ‘நமக்கு என்ன ஆனாலும் பரவாயில்ல. ஹர்ஷுக்கு ஏதும் ஆக கூடாது. எப்படியாவாது இந்த ஏரியா தாண்டுறதுக்குள்ள ஹர்ஷுவ பிடிக்கணும்’ என விறுவிறுவென தன் ஸ்கூட்டியை எடுத்தவள் மின்னல் வேகத்தில் பறந்தாள். வேகமாய் ஓவர்டேக் செய்து வந்தவள் ஹர்ஷுவை நிறுத்தினாள்.
“ஏய் என்ன டி இவ்ளோ வேகமா வர. என்னாச்சு?” என ஹர்ஷு கேட்க மலரோ சுற்றி முற்றி அந்த கடத்தல் காரன் எவனாவது வருகிறானா என பார்த்துவிட்டு,
“ஹே ஹர்ஷு. இறங்கு.” என கூறிக்கொண்டே தன் வண்டியை ஸ்டான்ட் போட்டு நிப்பாட்டிவிட்டு ஹர்ஷு ஸ்கூட்டியை எடுத்தவள், “அவசரமா போனும் டி. ஒரு பிரச்சனை. உடனே வீட்டுக்கு போய் உங்க அண்ணனை என் கால் எடுக்க சொல்லு சீக்கிரம்” என கூறிவிட்டு அவள் தடுக்கும் முன் அவள் பதில் எதிர்பாராமல் ஸ்கூட்டியில் பறந்துவிட்டாள். உண்மையை சொன்னால் தன்னைப் போகவிட மாட்டாள் என்றெண்ணி பிரச்சனை என்று மட்டும் கூறிசென்றுவிட்டாள்.
‘என்னாச்சு? என்ன பிரச்சனை? ரொம்ப பதட்டமா போகுறா. ஏதோ சரியில்லை. உடனே அண்ணா கிட்ட சொல்லுவோம் ‘ என நினைத்தவள் உடனே மலரின் ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு வேகமாக வீட்டிற்கு சென்றாள்.
அங்கே அந்த கடத்தல்காரன் ஹர்ஷு முகம் தெரியாததால் இவளின் ஸ்கூட்டயைப் பார்த்து இவள் தான் ரௌத்திரன் தங்கை என நினைத்துவிட்டு மலரை இழுத்து காருக்குள் தள்ளினான்.
“டேய் விடுங்க டா என்னை. எதுக்கு டா என்னை கடத்துறீங்க?” என பயந்தது போல் நடிக்க, அங்கே இருந்த ஒருவன்
“ஏய் கத்துன. கத்திய எடுத்து சொருகிருவேன் பார்த்துக்கோ.” என மிரட்ட அந்த மிரட்டலுக்கெல்லாம் பயப்படும் ஆளா அவள். இருந்தாலும் வேறு வழியில்லாமல் பயப்படுவது போல நடித்தாள்.
அதற்குள் ஹர்ஷு வீட்டிற்கு சென்று ரௌத்திரனிற்கு அழைத்து மலர் கூறியவற்றைக் கூறினாள்.
‘ஐயோ இந்த குட்டி பிசாச யாரு போக சொன்னது. என்ன ஆயிருக்கும். பிரச்சனைன்னு தெரிஞ்சு எதுக்கு போறா. யாரும் கடத்திருப்பாங்களோ?’ என யோசித்துவிட்டு ரஞ்சித்தைப் பார்க்க அவனோ பயத்தில் திருட்டு முழி முழித்தான்.
அதிலே மலரை கடத்திவிட்டார்கள் என அறிந்தவனோ ஹர்ஷு சொன்னது போல் அவளின் அழைப்புக்காக காத்திருந்தான். பிறகு ரஞ்சித்திற்கு சந்தேகம் வராத மாதிரி வெளியே வந்தவன் அலைபேசியில் காதொலிப்பானை சொருகி அதனைக் காதில் வைத்துவிட்டு அவள் அழைத்ததும் பறந்துவிடும் நோக்கில் தயாராக இருந்தான். மலரோ யாரும் அறியாவண்ணம் தன் அலைபேசியை எடுத்து லொகேஷன் ஆன் செய்து பின் ரௌத்திரனுக்கு அழைப்பு விடுத்து அட்டென்ட் செய்தவுடன் தன் ஆடைக்குள் போட்டுவிட்டாள். அட்டென்ட் செய்த ரௌத்திரன்,
“ஹே என்னாச்சு? எங்க இருக்க இப்போ?” என பதறி போய் கேட்க அவனுக்கு கேட்டதோ அவளின் இதயத்துடிப்பின் சத்தம் மட்டுமே. அதனை வைத்து அவள் அலைபேசியை எங்கே வைத்துள்ளாள் என அறிந்தவன் உதட்டில் ஏனோ அவனறியாமல் புன்னகை மலர்ந்தது. அவளோ,
“எங்க டா கடத்திட்டு போறீங்க? அடேய் நெல்லையப்பர் கோவில் வருது டா. வண்டிய நிறுத்துங்க. நான் சாமி கும்பிட்டுட்டு வரேன்.” என அவர்களிடம் கூறும் சாக்கில் தான் போய் கொண்டிருக்கும் இடத்தை ரௌத்திரனுக்கு தெரியப்படுத்தினாள். அதனை அறிந்துகொண்டவன் பைக்கை எடுத்து கொண்டு பறந்தான்.
“உன்னை என்ன சுத்தி காமிக்கவா கூட்டிட்டு வந்துருக்கோம். சாமி கும்பிட நிப்பாட்ட.” என கடத்தல்காரனில் ஒருவன் திட்டினான். நெல்லையப்பர் கோவில் பக்கம் வந்த ரௌத்திரனோ அடுத்து அவள் சொல்வதற்காக காத்திருந்தான்.
“எனக்கு பிடிச்ச ஆர்யாஸ் ஹோட்டல் டா. சாப்பிட வச்சாவது கூட்டிட்டு போங்கடா. காலைல இருந்து இன்னும் நான் சாப்பிடல.” என மலர் அடுத்த இடத்தைக் குறிப்பிட அங்கே விரைந்தான்.
இவ்வாறு ஒரு ஐந்து இடங்கள் மலர் காண்பித்து கொடுக்க இவளின் பேச்சில் கடுப்பான கடத்தல் காரன் அவளின் வாயைத் துணி வைத்து கட்டிவிட்டான். இவளோ பேச முடியாமல் முனங்கினாள். ரொம்ப நேரம் ஆகியும் பதில் வராததால் ராஜாவிற்கு அழைத்து நடந்தவற்றைக் கூறி மலரின் எண்ணை ட்ராக் செய்ய சொன்னான்.
மலரை ஊருக்கு ஒதுக்கு புறமாக இருக்கும் ஒரு குடோனுக்கு அழைத்து சென்று கட்டிப் போட்டனர். ட்ராக் செய்த இடத்திற்கு வந்தவனோ அங்கே மலரைக் கட்டி வைத்திருப்பதைக் கண்டான். உள்ளே ஒரு ஏழு பேர் இருப்பார்கள் போலும். ரௌத்திரன் உபயோகிக்கும் வாசனை திரவியத்தின் வாசனையை திடிரென்று நாசியைத் துளைக்க அதை வைத்தே ரௌத்திரன் வந்துவிட்டான் என மலர் அறிந்துக் கொண்டாள். பின்பு வாயில் உள்ள துணியை எடுக்கும்படி அவள் முனங்க கடத்தல்காரன் ஒருவன் எடுத்துவிட்டு,
“ஏய் இப்போ எதுக்கு கத்துற?” என எரிச்சலாக கேட்க,
“டேய் உங்க எல்லார்க்கும் நல்லது சொல்றேன் கேட்டுக்கோங்க. உயிர் மேல பயம் இருந்தா ஒழுங்கா ஓடிருங்க. இல்ல இன்னும் ரெண்டு நிமிஷத்துல எல்லாவனும் கிழிஞ்சநாரா போயிருவீங்க.” என அவள் எச்சரிக்கை விட,
“ஏய் என்ன டி மிரட்டுரியா? நீ எங்களை அடிச்சு நாங்க நாரா போயிருவோமா. எங்க அடி பார்ப்போம்” என எல்லாரும் சிரித்துவிட்டு அவள் கட்டை அவிழ்த்தான். அவளோ,
“நான் ஏன் அடிக்க போறேன். உங்களை அடிக்க ஆள் வந்து அஞ்சு நிமிஷம் ஆகுது டா என் டொமேட்டோ” என் திமிராக கையைக் கட்டிக்கொண்டு இவள் கூற ரௌத்திரனோ, ‘இவளுக்கு எப்படி நம்ம வந்தது தெரிஞ்சுது.’ என அதிர்ச்சியாய் பார்த்தான்.
“என்ன உங்க அண்ணன் ரௌத்திரன் உன்னை காப்பாத்த வருவான்னு கனவு கண்டுட்டு இருக்கியா.” என அவன் இளக்காரமாக கூற அவன் கூறிய அண்ணண் என்ற வார்த்தையில் காண்டானவளோ,
“அடிங்க… கொய்யால யாரைப் பார்த்து எனக்கு அண்ணங்குற… உன்னை” என அவனின் வயிற்றில் ஓங்கி ஒரு குத்து குத்த அதில் கோபமானவன் அவளின் முடியை கொத்தாக பிடிக்க மலர் “தீரா” என கத்த, அப்பொழுது சரியாக உள்ளே நுழைந்தான் அவளின் தீரன்.
வந்தவன் மலரின் முடியை பிடித்திருந்தவனின் கையை முறுக்கினான். பின் தன்னைத் தாக்க வந்த அனைவரையும் அடித்து துவைத்துவிட்டான். மலரோ ஓரமாக நின்று அவனை சைட் அடித்து கொண்டிருந்தாள். அனைவரையும் ஒருவழியாக ஆக்கியவன் பின் ரஞ்சித்திற்கே அழைப்பு விடுத்து நடந்ததைக் கூறி கைது செய்து போக சொன்னான். ரஞ்சித்தும் வேற வழியில்லாமல் சம்பவ இடத்திற்கு வந்தான். பின் அவனிடம்,
“ரஞ்சித். நான் மதுரை மினிஸ்டர் மருதநாயகத்துக்கிட்ட பேசணும். அவர் நம்பர் மிஸ் ஆயிட்டு உங்க கிட்ட இருக்கா.” என அவனை முறைத்தபடி கேட்க ரஞ்சித்தோ வெலவெலத்து போய்விட்டான்.
“அது சார்… என்கிட்டே அவர் நம்பர் கிடையாது சார்.” என சிறு நடுக்கத்துடன் கூற,
“ஓ அப்படியா சரி. அப்போ நீங்க இவனுங்களை அர்ரெஸ்ட் பண்ணி ஸ்டேஷன் கூட்டிட்டு போங்க. நான் பின்னாடியே வரேன். ஓகே வா ரஞ்சித்” என்றான். அவனோ பயத்தில் சரி என கூறிவிட்டு நகரப் போக அவனை மீண்டும் அழைத்த ரௌத்திரன்,
“ரஞ்சித் ஐம் ப்ரௌட் ஆப் யூ. நான் எந்த இடம்னே சொல்லல. கடத்தல் கேஸ் ஒன்னு மாட்டிற்கு. அர்ரெஸ்ட் பண்ண ஜீப் எடுத்துட்டு வாங்கன்னு தான் சொன்னேன். நீங்களே துல்லியமா கண்டுபிடிச்சு வந்துடீங்களே. உங்க கடமை உணர்ச்சியை எண்ணி நான் வியக்க” என கோபம் கலந்த சிரிப்புடன் வஞ்சப்புகழ்ச்சி அணியைக் கையாண்டு கூற ரஞ்சித்தோ,
‘ஐயோ நம்மளே காட்டிக்கொடுத்துட்டோமே” என பயத்துடன் அவனின் கால்கள் நடுங்க சென்றுவிட்டான். மலரோ அவளது தீரனது கம்பீரத்தில் லயித்து தன்னைக் கொஞ்சம் கொஞ்சமாக தொலைத்துக் கொண்டிருந்தாள். பின் மலரிடம் திரும்பியவனோ அவள் தன்னையே பார்த்து கொண்டிருக்க அவளைப் பளாரென அறைந்தான்.
அவன் அடித்ததில் ஒரு நிமிடம் தடுமாறியவள் பின் தன்னை சுதாரித்து கொஞ்சமும் பயமில்லாமல் மீண்டும் அவனை எதிர்நோக்க அவனோ,
“ஏய் அறிவிருக்கா உனக்கு. அதான் முதல்லயே கடத்த போறாங்கன்னு தெரியுதுல. அப்புறம் எதுக்கு நீயே வான்டெடா போய் மாட்டுன. உனக்கு ஏதாவது ஆயிருந்தா நான்..” என உணர்ச்சிபொங்க கூறிக்கொண்டிருந்தவன் கூறவந்ததைப் பாதிலேயே நிறுத்திவிட்டான். ஆனால் மலரோ,
“சொல்லுங்க சொல்லுங்க ஏதாவது ஆயிருந்தா நீங்க….” என அவனைப் போலவே இழுத்து ஆர்வமாய் அவன் முகம் நோக்க அவனோ,
“ஏதாவது ஆயிருந்தா உங்க அப்பாக்கு யார் பதில் சொல்றது. கொஞ்சம் கூட யோசிக்குறதே கிடையாது. மனசுல பெரிய இவன்னு நினைப்பா. எதுலையாவது சீரியஸ்நெஸ் இருக்கா. இர்ரெஸ்பான்சிபிள் இடியட்.” என கோபம் தீர திட்டி தீர்த்தான் அவளின் தீரா. அதையெல்லாம் காதில் கூட மலர் வாங்கவில்லை. அவன் பேசி முடித்ததும்,
“முடிச்சுட்டீங்களா போலாமா.” என கேட்டுவிட்டு அவனுக்கு முன் சென்று பைக் பக்கம் நின்றாள். ‘நான் பாட்டுக்கு சொல்லிட்டு இருக்கேன் ஏதாவது கேட்குறாளா பாரு. இவளை எல்லாம் பெத்தாங்களா இல்ல செஞ்சாங்களா ‘ என மனதில் அவளை திட்டிக் கொண்டு வர அவளோ,
“அதை எங்க அப்பா அம்மாகிட்ட வந்து கேட்டுக்கோங்க. இப்போ வாங்க போலாம்.” என வண்டி கண்ணாடியில் தன்னை சரிசெய்து கொண்டே கூறினாள். ரௌத்திரனுக்கு அப்பொழுது தான் தோன்றியது தன் வண்டியில் தான் இவளை அழைத்து செல்ல வேண்டும் என்று. இதுவரைப் பாட்டி மற்றும் ஹர்ஷுவை மட்டுமே ஏற்றியிருக்கிறான். அதனால் யோசித்தவனோ அவளிடம்,
“இங்க பாரு நான் ஆட்டோ வர சொல்றேன். நீ முன்னாடி ஆட்டோல போ. நான் பின்னாடி பைக்ல வரேன்.” என அவன் கடுகடுவென கூற அவளோ,
“எதுக்கு. அதான் பைக் இருக்கே. எதுக்கு ஆட்டோ?” என அவள் புரியாமல் கேட்க,
“என் வண்டில இது வரை வேற பொண்ணுங்களை ஏத்துனது இல்ல. ஏத்தவும் மாட்டேன்.” என உறுதியாய் கூறினான்.
“ஓ அப்படியா. அப்போ சரி நீங்க கிளம்புங்க.” என அவள் சொல்ல,
“இல்ல உன்னை தனியா விட்டுட்டு” என அவன் கூறிக்கொண்டிருக்கும் போதே அவனைத் தடுத்தி நிறுத்தியவள்,
“ஹலோ ஒரு நிமிஷம். அக்கறை இருந்தா உங்க பைக்ல கூட்டிட்டு போங்க. இல்லனா நீங்க கிளம்புங்க. உங்க தயவு எனக்கு வேணாம். நானே ஆட்டோ பிடிச்சு போய்க்கிறேன்.” என மலரும் வீம்பாய் கூற, ‘திமிரு பிடிச்சவ உனக்கு எல்லாம் பாவம் பார்க்கவே கூடாது.’ என நினைத்துவிட்டு,
“அப்போ சரி பத்திரமா போயிரு. நான் கிளம்புறேன்.” என கூறிவிட்டு பைக்கை ஸ்டார்ட் செய்துவிட்டான். ‘அடப்பாவி கொஞ்சம் கூட மனசாட்சியே இல்ல. நிஜமாவே கிளம்பிருவானோ’ என மனதில் நினைத்துவிட்டு ஏக்கமாய் பார்க்க அவனோ வண்டியைக் கிளம்பிவிட்டான்.
‘போடா போ. எனக்கென்ன.’ என நினைத்துவிட்டு இவளும் நிற்க அவனோ மனது கேட்காமல் குடோன் வாயிலில் வண்டியை நிறுத்தினான். ‘ஐயோ விட்டு போகவும் மனசு வரல. ஏத்தவும் மனசு வரல. சரியான வீம்புக்காரி.’ என மீண்டும் மனதில் திட்டியவன் யூ டர்ன் போட்டுகொண்டு அவளின் முன் பைக்கை நிப்பாட்டி,
“ஏறு” என கடுப்பாய் கூற அவளோ வெற்றிப் பார்வையுடன் பார்த்து,
“யாரோ மத்த பொண்ணுங்களை ஏத்த மாட்டேன்னு சொன்னாங்க. இப்போ என்னாச்சு.” என நக்கலாய் கேட்க அதில் மேலும் கடுப்பானவன்,
“நான் உன்ன பொண்ணாவே நினைக்கலை போதுமா. பேசாம வண்டில ஏறு. என் கோபத்தைக் கிளறாத” என அவன் எரிச்சலாக கூற மலரோ வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு வண்டியில் ஏறினாள். அவள் ஏறியவுடன் அரை இன்ச் முன்னாடி நகர்ந்து உட்கார்ந்தான் ரௌத்திரன். அதனைக் கண்டவளோ,
“ஐயோ டா. ரொம்ப தான். பார்த்து பெட்ரோல் டேங்க்ல உட்காந்துற போறீங்க.” என எகத்தாளமாக கூற அவனோ அதனைக் கண்டுகொள்ளாமல் வண்டியைக் கிளப்பினான்.
போகும் போது தான் மலருக்கு ஹர்ஷுவின்
ஞாபகம் வர, ‘ஐயோ ஹர்ஷுவை மறந்துட்டோமே. இங்க எல்லாம் சொதப்பிடுச்சுன்னு வீட்டுக்கு யாராவது வந்து கலாட்டா பண்ணிருந்தா என்ன பண்ண. ஓ காட்.’ என யோசித்தவள்,
“தீரா தீரா வண்டிய நிறுத்துங்க. சீக்கிரம்.” என அவனின் தோளில் தட்ட,
“ஏய் என்னாச்சு? எதுக்கு இப்படி கத்துற?” என எரிச்சலுடன் ரௌத்திரன் கேட்க அவளோ அதனைக் கண்டுகொள்ளாமல் தன் அலைபேசியில் ஹர்ஷுவிற்கு அழைத்து,
“ஹே ஹர்ஷு.” என பதட்டமாய் பேச,
“ஹே மலர் என்னாச்சு உனக்கு? எங்க இருக்க நீ?” என அவளும் பதறி போய் கேட்டாள்.
“உங்க அண்ணா கூட தான் டி இருக்கேன். அதை விடு. வீட்டு கதவை மூடிட்டு வீட்டுக்குள்ள பத்திரமா இரு. யாரு வந்தாலும் கதவைத் திறக்காத. நாங்க வந்துட்டு தான் இருக்கோம்.” என இவள் கூற அவளும் சரி என அழைப்பைத் துண்டித்தாள். இதனையெல்லாம் புரியாமல் கேட்டு கொண்டிருந்த ரௌத்திரன்,
“ஹே என்ன தான் நடந்துச்சு முதல்ல. எதுக்கு ஹர்ஷுக்கு பதறி போய் சொல்ற. அவளை தான் யாருக்குமே தெரியாதே. முதல்ல உன்னைக் கடத்துற விஷயம் உனக்கெப்படி தெரியும்.” என அவன் வரிசையாக கேள்விக் கணைகளைத் தொடுக்க,
“இப்போயாச்சு கேட்டிங்களே. அதுவரை சந்தோஷம்.” என்றவள் காலையில் நடந்த அனைத்தையும் ரௌத்திரனிடம் கூறினாள் மலர். கேட்க கேட்க அதிர்ச்சி அடைந்த ரௌத்திரன் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. அவனைத் தட்டியவளோ,
“இதான் நடந்துச்சு.” என பெருமூச்சுவிட்டாள். ஹர்ஷுவைக் கடத்தியிருந்தால் என்ன நடந்திருக்கும் என நினைக்கவே ரௌத்திரனுக்கு குலை நடுங்கியது. ஏதோ மலராக இருந்ததால் அதுவும் மலருக்கு ஏற்கனவே விஷயம் தெரிந்ததனால் தந்திரமாக யோசித்து ரௌத்திரனை வரவழைத்துவிட்டாள்.
ஹர்ஷுவாக இருந்தால் பதறி போயிருப்பாள். ரௌத்திரனின் கண்களுக்கு இப்பொழுது மலர் தெய்வமாக தெரிந்தாள். அவளின் தியாகத்தை எண்ணி அதிசயித்தான். பின்,
“அப்போ முதல்லயே எனக்கு சொல்லிருக்கலாம்ல. நானாவது வந்துருப்பேன்ல. எதுக்கு இப்படி ரிஸ்க் எடுக்குற.” என கவலையுடனும் மென்மையாகவும் கேட்டான். அதனைக் கேட்டவளோ மேல் மூச்சு மூச்சு கீழ் மூச்சி வாங்கி பத்திரகாளியாய் முறைத்தாள் அவனின் தீரனை. அவனோ, ‘நல்லாதானே பேசுனோம். எதுக்கு முறைக்குறா.’ என யோசனையுடன் பார்க்க அவளோ,
“வேணாம் ஏதாவது திட்டிவிட்டுற போறேன். அதுக்கு தான் கால் பண்ணேன். எடுத்தீங்களா நீங்க. அதான் ஹர்ஷுவ என் கால உங்க அண்ணனை எடுக்க சொல்லுன்னு அனுப்பி வச்சேன். அப்புறம் தான் கால் அட்டென்ட் பண்ணீங்க.” என முறைத்துக்கொண்டே கூற அப்பொழுது தான் அவள் அழைப்பை இரண்டு முறை துண்டித்துவிட்டது நினைவு வந்து தன்னையே நொந்து கொண்டான்.
ஏனோ தன்னுடைய அலட்சியத்தினால் தான் இவ்வளவு நடந்துள்ளது என்றெண்ணி வருந்தினான். பிறகு எதுவும் சொல்லாமல் வண்டியை எடுக்க மலரும் ஏறிக்கொண்டாள். வீடு வந்ததும் இறங்கியவள் தன்னவன் முகம் வாடியிருப்பதைக் கண்டு,
“சும்மாவே மூஞ்சி உர்ருனு தான் இருக்கும் இதுல உம்முனு வேற வச்சா எப்படி நான் பார்க்குறது.” என வேண்டுமென்றே அவனை வம்பிழுக்க அவனோ அவளையே அமைதியாக பார்த்தான். மீண்டும் இன்று அறைந்த அறையில் சிவந்திருந்த அவளின் கன்னத்தை. பின் அவளிடம்,
“சாரி ஒரு வேகத்துல அடிச்சுட்டேன். எவ்ளோ ட்ரை பண்ணியும் கோவம் வந்தா கையை நீட்டாம என்னால இருக்க முடியல. அடிக்கும் போதாவது கோபப்பட்டு உண்மையை அப்போவே சொல்லிருக்கலாம்ல. உன்மேல தப்பு இல்லாம உன்ன அடிச்சுட்டேன். கோவமே வரலையா என்மேல.” என மனதார வருந்தி கேட்க அவளோ,
“வரலையே. ஏன்னா என்மேல உள்ள அக்கறைல தான் அடிச்சீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும். அது மட்டுமில்ல. எப்படியும் வாழ்க்கை முழுக்க இந்த மாதிரி அடிய உங்ககிட்ட அடிக்கடி வாங்க போறேன். அதான் இப்போவே பயிற்சி எடுக்குறேன்.” என அவனைப் பார்த்து கண்ணடித்து கூற அவனோ இப்பொழுது லேசாக முறைத்தான்.
“ஹான் இந்த முறைப்பு தான் உங்களுக்கு செட் ஆகுது. இப்படியே முறைச்சுக்கிட்டு இருங்க அப்போ தான் உங்களை என்னால சைட் அடிக்க முடியும். சரி ஹர்ஷுகிட்ட சொல்லிருங்க நான் அப்புறம் வரேன்னு. சுப்புகிட்ட சொல்லாம போய்ட்டேன் தேடும். பாய்” என கூறிக்கொண்டு துள்ளி குதித்து ஓடினாள் வீட்டிற்குள்.
செல்லும் அவளையே பார்த்தவனின் மனதில் ‘நான் தான் உன் மேல கோபமும் படுறேன். அப்புறம் அதை நினைச்சு நான் தான் கஷ்டமும் படுறேன். வெறுப்பா பேசுனா கூட நீ நம்ப மாட்ட. என்ன தான் நான் பண்றது. உன்ன நான் ரொம்ப காயப்படுத்துறேன்னு எனக்கே தெரியுது. ப்ளீஸ் டி வேணாம். என்னை விட்டு போயிரு’ என மானசீகமாக அவளிடம் கூறிவிட்டு வீட்டிற்குள் சென்றான். அவனைக் கண்ட ஹர்ஷுவும் பாட்டியும் பதட்டமாக என்ன நடந்தது என கேட்க ரௌத்திரன் நடந்த அனைத்தையும் கூறினான்.
‘என்னை காப்பாத்த அவ உயிரை பணயம் வச்சாளா’ என அதிர்ந்து போய் ஹர்ஷு கேட்க பின் நேராக மலர் வீட்டுக்கு ஓடினாள். அங்கே மலரோ தன் அறையில் கண்ணாடியில் அவளின் கன்னத்தைப் பார்த்து கொண்டிருந்தாள்.
‘ஆத்தாடி என்ன ஒரு அடி. அடிச்ச அடில காது செவிடா போயிருமோ. நானும் எவ்ளோ நேரம் தான் வலிக்காத மாதிரியே நடிக்குறது. இருந்தாலும் என் தீரனுக்காக அடி என்ன அடி இடியைக் கூட தாங்குவேன்.’ என வீராப்பாய் தன் மனதில் வசனம் பேசியவாளோ வாசல் பக்கம் திரும்ப ஹர்ஷு வேகமாய் வந்து கொண்டிருந்தாள். ‘ஆத்தி அடுத்த இவ வந்து அடி கொடுப்பாளோ’ என பயந்து சட்டென தன் கன்னங்களைத் தன் கைகளால் மூடி,
“அடியே… இரு டி. அடிச்சு கிடிச்சு தொலைஞ்சுறாதா. ஏற்கனவே உங்க அண்ணா கொடுத்ததுக்கே கன்னம் பன்னு மாதிரி ஆயிட்டு. இதுல நீயுமா” என இவள் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்க அவளோ ஓடிவந்து மலரை கட்டிக்கொண்டு அழுதாள்.
“ஏய் ஏன் டி இப்படி பண்ண? உனக்கெதாவது ஆயிருந்தா என்ன ஆகியிருக்கும். லூசா டி நீ. நினைக்கவே நடுங்குது.” என அவள் அழுதுகொண்டே கூற மலரோ அவளை நிமிர்த்தி அவளின் கண்ணீரைத் துடைத்துவிட்டு,
“ஹே லூசு. இங்க பாரு. எனக்கு ஒண்ணும் ஆகல. உங்க அண்ணா எப்படியும் என்னை வந்து காப்பாத்திருவாருன்னு நம்புனேன். அவ்ளோ தான். அழாதே டி.” என கூறிக்கொண்டிருந்தவள் பின் சட்டென நியாபகம் வர,
“ஆமா நான் உன்கூட பேச கூடாதுன்னு நினைச்சுருந்தேன். போடி. என்கிட்டே பேசாத.” என சட்டென மூஞ்சைத் தூக்கிவைத்துக்கொண்டு மலர் இருக்க,
“ஏன் டி செல்லம். நான் என்ன பண்ணேன்?” என ஹர்ஷு கேட்க,
“உன் காதலை என்கிட்டே இருந்து மறைச்சுட்டல. நான் அந்த அளவுக்கு உனக்கு முக்கியம் இல்லாம போய்ட்டேன்ல. போயிரு ஒழுங்கா.” என மலர் கூற ,
“ஹே சாரி டி. இன்னைக்கு நிஜமா சொல்லணும்னு இருந்தேன். நேத்து தான் என் காதல் ஒரு முடிவுக்கே வந்துச்சு.” என ஹர்ஷு கூற,
“வாவ் முடிவுக்கு வந்தாச்சா. ராஜா அண்ணா உன்கிட்ட லவ்வ சொல்லிட்டாரா அப்போ. இது எப்போ?” என அதிர்ச்சியாக மலர் கேட்க,
“ஆமா டி. நேத்து தான் சொன்னாரு.” என வெட்கபட்டுக்கொண்டே கூறியவள் பின், “பாவும் அவரு.. நான் தான் ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன். ஆமா உனக்கு எப்படி இது தெரியும்.” என ஹர்ஷு கேட்க,
“ஹாஹா நீங்க இந்த வீட்டுக்கு வந்த ரெண்டாவது நாள்லயே எனக்கு தெரிஞ்சுட்டு.” என அன்று ராஜா தன்னிடம் கூறியதைக் கூறினாள்.
“அடிப்பாவி தெரிஞ்சே தான் என்கிட்டே சொல்லாம இருந்தியா.” என ஹர்ஷு கோபிக்க,
“அடியே. உங்க அண்ணா பிளாஷ்பேக் சொன்ன அப்புறம் தான ராஜா அண்ணாக்கே குழப்பம் தீர்ந்துருக்கு. அதுக்கு முன்னாடி நான் எப்படி உன்கிட்ட சொல்ல முடியும்.” என மலர் அவளின் தலையில் கொட்டியவாறு கூற,
“அட ஆமா ல. ஈஈஈ” என இளித்தாள் ஹர்ஷு. பின் தோழிகள் அவ்வாறே பேசிக்கொண்டிருக்க அந்த நாள் அவ்வாறே ஓடியது.
அங்கே ரௌத்திரன் ராஜாவிற்கு அழைத்து நடந்தைக் கூறிக்கொண்டிருந்தான். அதனைக் கேட்ட ராஜாவோ,
“டேய் மச்சான். என்ன தைரியம் இருந்தா ஹர்ஷு மூஞ்சில ஆசிட் அடிக்குற அளவுக்கு யோசிச்சுருப்பானுங்க. ஏதோ தங்கச்சி இருந்த போய் எல்லாம் சரி பண்ணிட்டா. அந்த ரஞ்சித்தை ஏன்டா விட்டு வச்சுருக்க. அந்த மினிஸ்டர தான் இப்போதைக்கு நம்மளால ஒன்னும் பண்ண முடியாது. இவன ஏதாவது செய்ய வேண்டி தான. என்ன வேலைப் பார்த்து வச்சிருக்கான்.” என ராஜா ஆதங்கமாய் கேட்க,
“இல்ல மச்சான். அவனைக் காரணமா தான் விட்டு வச்சிருக்கேன். இவன் வெறும் அம்பு தான் டா. இவனை என்ன பண்ணாலும் ஒரு பிரயோஜனம் இல்ல. அதான் நாளைக்கு வில்லையே கோர்ட்ல உடைக்க போறோம்ல. அதுக்கு அப்புறம் இந்த அம்பை ஏதாவது பண்ணுவோம். அது மட்டுமில்ல இப்போ ரஞ்சித் பத்தி நாம தெரிஞ்ச மாதிரி காட்டிகிட்டோம்னா. நம்ம ட்ராக்கிங் மேட்டர் வெளிய தெரிஞ்சுரும். அதனால கொஞ்சம் விட்டு தான் பிடிக்கணும்.” என ரௌத்திரன் கூற ராஜாவிற்கும் அது சரி எனப்பட்டது.
பேசி முடித்தவன் உறங்க மெத்தையில் விழுந்தான். அவனின் நினைவுகள் மலரை சுற்றியே இருந்தது. ‘நாளைக்கு அந்த குட்டி பிசாச எப்படி சமாளிக்க போறேனோ’ என நினைத்துவிட்டு அவ்வாறே உறங்கியும் போனான்.
அங்கே மலரும் தன்னவனைத் தான் நினைத்துக்கொண்டிருந்தாள். ஏதேதோ நினைத்தவள் சட்டென அவளின் டைரியை எடுத்து தோன்றியதை எழுத ஆரம்பித்தாள்.
வழி மேல் விழி வைத்து
காத்திருந்தேன் நீ வருவாயென!
சுற்றம் மறந்து உனை பார்த்த நான்
உன் விழி என் விழியைக் காணாதா?
உன் கடைக்கண் பார்வை என் மேல் விழாதா? என காத்திருக்கிறேன்!
என் காதலை உனக்கு
புரிய வைத்த நான்…
புரிந்து கொள்வாய் என
காத்திருக்கிறேன்!
என் இதயம் துடிக்க மறந்ததே அன்றி
உனை நினைக்க மறந்ததில்லை!
அவ்வளவு ஆழமானது
என் ஒருதலைக் காதல்!
இருதலையாய்
மாற்றுவதும் மாற்றாததும்
உன் விருப்பம்!
நீ மாற்றினாலும் மாற்றாவிட்டாலும்
என் காதல் மாறாது!
காலமுழுக்க காத்திருப்பேன்
மாறாத காதலுடன்!
என எழுதியவள் ‘என்னோட காதலால உங்கள மாத்துவேனே தவிர என்னைக்கும் என் காதல்ல இருந்து நான் மாறமாட்டேன் தீரா.’ என தன்னவனை நினைத்து தனக்குள் கூறிக்கொண்டாள். பின் காலை சீக்கிரம் எழுவதற்காக அலாரம் வைத்தவள் நாளை முழுதும் தன்னவனுடன் தனியே இருக்க போகிறோம் என்று நினைத்து பூரித்துப்போனாள். அவ்வாறே விடியலை நோக்கிய காத்திருப்புடன் உறங்கியும் போனாள்.
மௌனம் எரியும்…