மௌனம் 15
அவர்களின் முழிப்பில் இவளுக்கு சிரிப்பு வர,
“அட சீரியஸா மூஞ்ச வச்சதும் பயந்துட்டீங்களா. ஹாஹா சும்மா… மிஸ்டர் ரௌத்திரன் மாதிரி ட்ரை பண்ணி பாத்தேன். இதுவும் நல்லா தான்யா இருக்கு. சரி சரி மசமசன்னு நிக்காம வாங்க.” என சிரித்தவாறு கூற,
“எங்க மா?” என ராஜா கேட்டான்.
“அட என்ன பொறுப்பே இல்லாம பேசுறீங்க. நாளைக்கழிச்சு கோர்ட்ல எவிடென்ஸ் சப்மிட் பண்ணனும்ல. வாங்க டிஸ்கஸ் பண்ணுவோம்.” என மலர் கூற ரௌத்திரனோ அவளை ஆச்சர்யமாக பார்த்தான். அவனின் பார்வைக்கான அர்த்தம் புரிந்தவளோ,
“என்னடா இவ. நம்ம அவளை அடிச்சுருக்கோம் காதலிக்க மாட்டோம்னு சொல்லிருக்கோம். ஆனாலும் நமக்கு ஹெல்ப் பண்ண வாராளேன்னு தான யோசிக்கிங்க.” என மலர் அவன் நினைத்ததை துல்லியமாக கூற அதில் மேலும் அதிர்ச்சியடைந்தான்.
“அட என்ன தீரா நீங்க? எதுக்கெடுத்தாலும் ஷாக் ஆகுறீங்க. இங்க பாருங்க. நான் உங்கள சும்மா டைம் பாஸ்க்கு காதலிச்சுருந்தா ஒண்ணு நீங்க அடிச்சப்பவோ இல்ல உங்க கதையைக் கேட்டப்போவோ இனிமே இது சரிப்பட்டு வராதுன்னு போயிருப்பேன். ஆனால் நான் உங்களை உண்மையா உயிருக்குயிரா உணர்வுபூர்வமா காதலிக்குறேன். ஏன் காதலிக்குறேன்ன்னு தெரியாமையே காதலிக்குறேன்.” என ரௌத்திரனின் கண்களை பார்த்தவாறு காதலாக கூற ஒருநிமிடம் ரௌத்திரன் அவனையும் அறியாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அதனைக் கண்ட ராஜாவோ,
‘கொய்யால காதல் இல்லன்னு வீர வசனம் பேசிட்டு இப்போ எப்படி பார்க்குறான் பாரு.’ என மனதில் நினைத்துவிட்டு அவர்களுக்கு தனிமை அளித்து மாடிக்கு சென்றுவிட்டான்.
ஆனால் உண்மை என்னவென்றால் தான் அறைந்ததினால் ஏற்பட்ட தன் கை விரல்களின் தடம் அவளின் கன்னத்தில் இன்னும் தெரிந்தது. அதைத் தான் குற்ற உணர்வுடன் பார்த்துக்கொண்டிருந்தான்.
“சாரி நான் கை நீட்டி அடிச்சதுக்கு. இங்க பாரு. தயவு செஞ்சு புரிஞ்சுக்கோ. என்னால உன்னைக் காதலிக்க முடியாது.” என ரௌத்திரன் மென்மையாக கூறினான்.
“ஹலோ ஹலோ. நிப்பாட்டுங்க. உங்களை நான் காதலிக்க சொல்லவே இல்லையே. அது உங்க தனிப்பட்ட விருப்பம். அதே மாதிரி நான் உங்களைக் காதலிக்க தான் செய்வேன். என் காதலை உங்களுக்கு புரியவைக்க முயற்சி பண்ண தான் செய்வேன். அது என்னோட தனிப்பட்ட விருப்பம். இதுக்கு மேலயும் என்னைக் காதலிக்க கூடாதுன்னு சொன்னிங்கன்னு வச்சுக்கோங்க. தனிமனித உரிமையைத் தர மறுக்குறீங்கன்னு உங்க மேலயே ஒரு கேஸ் போட்டுருவேன். ஜாக்கிரதை. சரி வாங்க எப்போ போறோம். எப்படி போறோம். எந்த மாதிரி நான் சாட்சி சொல்லணும். எல்லாம் கலந்து பேச வேணாமா அதுக்கு தான் வந்தேன். கம் லெட்ஸ் கோ மேன்.” என கூறிக்கொண்டு இவள் முன்னே போக அவள் பேசிய விதத்தில் வந்த சிறு சிரிப்புடன் ரௌத்திரனும் அவளின் பின்னே மாடிக்கு சென்றான்.
ஏனோ இந்த முறை அவளைத் திட்ட தோணவில்லை அவனுக்கு. அதற்கு காரணம் ஏற்கனவே அவளை அடிச்சுட்டோம் இன்னும் திட்டி காயப்படுத்த வேணாம் என அவனாகவே ஒரு காரணத்தைப் புரிந்துகொண்டான். ஆனால் உண்மையான காரணம் அவளின் காதலை உணர்ந்ததினால் தான் என அந்த கோபக்காரனுக்கு தெரியவில்லை என்பது தான் விதி.
படிகளில் மலர் முன்னே ஏற ரௌத்திரனோ பின்னே வந்து கொண்டிருந்தான். வேண்டுமென்றே விழுவது போல் நடித்து மலர் விழ போக ரௌத்திரன் தாங்கிப் பிடித்தான்.
“ஏய் பார்த்து போக மாட்டியா. பின்னாடி நான் வரலைன்னா என்ன ஆகியிருக்கும்.” என ரௌத்திரன் சிறு முறைப்புடன் கேட்க,
“பின்னாடி நீங்க வரது தெரிஞ்சு தான விழவே செஞ்சேன்.” என நக்கலாய் சிரித்தபடி மலர்கூற அது நடிப்பு என தெரிந்த கணம் சட்டென அவளைத் தூக்கி நிறுத்தி கண்களில் கோபத்தைக் குத்தகைக்கு எடுத்து அவளை முறைக்க,
“சரி சரி முறைக்காதீங்க. சும்மா ஒரு டெஸ்டிங் தான். பரவாயில்ல ரிசல்ட் நல்லாவே தெரியுது.” என நமட்டு சிரிப்புடன் கூறினாள்.
“நான் ஒன்னும் அக்கரைல பிடிக்கல. நீயா ஒன்னு நினைச்சுக்கிட்டு பேசாத.”
“ஆஹான் அப்படியா. சரி அப்போ அக்கறை இல்லனா வேறே என்ன?” என விழி உயர்த்தி கேட்க,
“கீழ விழுந்து கை கால் உடைஞ்சு தலைல அடிபட்டு பழசெல்லாம் மறந்து போச்சுன்னா எனக்கு சாட்சி சொல்ல யார் வருவா. அதுக்கு தான் பிடிச்சேன்.” என்றான் சாதாரணமாக.
“ஓ அப்போ ஒருவேளை நான் உங்களுக்கு தேவைப்படுற சாட்சியா இல்லாம இருந்திருந்தா பிடிக்காம விழட்டும்னு விட்டுருப்பீங்க அப்படி தான.” என மலர் அவனிடம் கேட்க அவனோ,
“கண்டிப்பா பிடிச்சுருக்க மாட்டேன். தலைல அடிபட்டு பழச எல்லாம் மறந்துட்டன்னு வச்சுக்கோ உனக்கும் நிம்மதி எனக்கும் நிம்மதி.” என கூறிவிட்டு அவளைக் கடந்து மேலே ஏறி சென்றுவிட்டான்.
“உங்களையே நான் மறந்தாலும். என் மனசுல இருக்குற அந்த காதல் கண்டிப்பா உங்ககிட்ட என்னைக் கொண்டு வந்து சேர்க்கும் தீரா.” என அவன் போகும் திசையைப் பார்த்து தனக்குள்ளேயே கூறிக்கொண்டாள் மலர்நிதி. பின் மூவரும் ரௌத்திரன் அறையில் என்னென்ன செய்ய வேண்டும் என திட்டம் போட்டுக் கொண்டிருக்க, அந்த நேரம் ரஞ்சித் ரௌத்திரனின் வீட்டிற்கு வந்திருந்தான்.
கடந்த ஒருவாரமாக ரௌத்திரனின் வீட்டை நோட்டமிட்டவன், ராஜா அடிக்கடி அங்கே வந்து போவதை அறிந்தவனோ அதனை மினிஸ்டரிடம் தெரிவித்திருந்தான். அசோக்கின் கேஸ் மீண்டும் ரீயோப்பன் செய்ததில் மினிஸ்டருக்கும் ஒரு சந்தேகம் இருந்தது. அதனால் ரஞ்சித்தை விட்டு நோட்டமிட சொன்னதில் ராஜா அடிக்கடி வந்து போகும் விஷயம் அறிந்த மினிஸ்டர் அதனைப் பற்றி ஏதாவது தெரிந்து சொல்லும் படி கூறியிருந்தார்.
அதன்படி அதனை அறிய, ‘ஏதாவது கேஸ் விஷயமாக பேசுவது போல் போவோம்’ என நினைத்துவிட்டு இன்று ரஞ்சித் ரௌத்திரனின் வீட்டிற்கே வந்திருந்தான். ஹர்ஷு உள்ளே அவளின் அறையில் இருக்க பாட்டி தான் வந்தவனிடம் பேசினார்.
“யார் நீங்க?” என பாட்டி ரஞ்சித்தை வினவ,
“நான் சப் இன்ஸ்பெக்டர் ரஞ்சித். ரௌத்திரன் சார பார்க்கணும்.” என பாட்டியிடம் கூற,
“ஓ அப்படியா. அவன் மேல இருக்கான். இருங்க நான் கூப்பிடுறேன்.” என பாட்டி கூப்பிட போக அதற்குள் உள்ளேயிருந்த ஹர்ஷினி பாட்டியை அழைக்க ரஞ்சித்தோ,
“நீங்க போங்க. நான் மேல போய் பார்த்துக்குறேன்.” என கூறிக்கொண்டு மேலே சென்றான். இவன் வரும் சமயம்,
“நீ என்ன பார்த்தியோ அதை பயப்படாம தெளிவா கோர்ட்ல சொல்லு. அது போதும்” என ரௌத்திரன் மலரிடம் கூறிக்கொண்டிருந்தான். அதனை ரஞ்சித்தோ வெளியே ஒளிந்து நின்று கேட்டுக்கொண்டிருந்தான்.
“இந்த பொண்ணு தான் சாட்சி சொல்ல போகுதா.” என நினைத்து அவளின் முகம் பார்க்க முயற்சிக்க மலரோ திரும்பி உட்காந்திருந்ததால் அவளின் முகம் ரஞ்சித்திற்கு தெரியவில்லை. மேலும் என்ன பேசுகிறார்கள் என கேட்க,
“மச்சான் இந்த எவிடென்ஸ் எல்லாம் பத்திரமா வச்சுக்கோ டா. அப்புறம் நம்ம பண்ணதுக்கு எல்லாம் அர்த்தமில்லாம போயிரும். கவனமா இரு மச்சான்.” என ராஜா கூற,
‘எவிடென்ஸா என்னவா இருக்கும். முதல்ல ஐயாகிட்ட சொல்லுவோம்’ என நினைத்துவிட்டு உடனே யாருக்கும் தெரியாமல் கீழே வந்து கிளம்பினான். அவன் செல்வதைக் கண்ட பாட்டியோ,
“என்ன தம்பி? அதுக்குள்ள கிளம்புறீங்க.” என கேட்க,
“அது… அது.. ஒரு ஃபைலை மறந்துட்டேன். அதை எடுக்க போறேன்.” என அவசரமாக கூறிக்கொண்டு கிளம்பினான். எதேர்ச்சையாக ஜன்னல் பக்கம் சென்ற ரௌத்திரன் ரஞ்சித் வேகமாக பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்புவதைப் பார்த்து,
“ஓ ஷிட். இவன் எப்போ வந்தான்.” என சத்தமாக கூற,
“என்னாச்சு மச்சான்?” என ராஜா கேட்க,
“டேய் அந்த ரஞ்சித் வந்துருக்கான் டா. உள்ள வந்து நம்ம பேசுறது ஏதும் கேட்டானான்னு தெரியலையே.” என அவசரமாக கூறிக்கொண்டு கீழே சென்று பாட்டியிடம்,
“பாட்டி என்னை பார்க்க யாரும் வந்தாங்களா?” என கேட்க,
“ஆமா ராசா. சப் இன்ஸ்பெக்டர் ரஞ்சித்னு யாரோ வந்தாங்க. உன்னை பார்க்க மேல வந்தாங்க நீ பார்க்கலையா?” என பாட்டி கேட்க,
“அதை விடுங்க. வந்து எவ்ளோ நேரம் இருக்கும். எப்போ திரும்பி போனான்?” என கேட்க,
“பத்து நிமிஷம் தான் ராசா ஆகுது. வந்தவர் கொஞ்ச நேரத்துலயே திரும்பி போனாரு. என்னன்னு கேட்டதுக்கு ஏதோ ஃபைலை மறந்து வச்சுட்டேன்னு சொல்லிட்டு போனாரு.” என பாட்டி கூற,
“பாட்டி இனிமே யார் வந்தாலும் எனக்கு ஒரு குரல் கொடுங்க. சரியா.” என கூறிவிட்டு யோசனையுடன் மேலே வந்தவன்,
“டேய் ராஜா. அந்த ரஞ்சித் வந்து நம்ம பேசுறத ஒட்டு கேட்டுருக்கான். எப்படியும் அந்த மினிஸ்டர்கிட்ட கால் பண்ணி சொல்லுவான். என்ன பேசுறாங்கன்னு பார்ப்போம்.” என கூறிவிட்டு தனது லேப்டாப்பை ஆன் செய்து அவன் செட் பண்ணியிருந்த சிப் மூலம் கால் ட்ராக்கிங் செய்தான். பதினைந்து நிமிடங்கள் கடந்தும் எந்த காலும் வந்த மாதிரி தெரியவில்லை.
“என்ன மச்சான்? எதுமே வரல?” என ராஜா கேட்க,
“அதான் மச்சான் தெரில.” என்றான் ரௌத்திரன்.
“ஒருவேளை அந்த மினிஸ்டரோட வேற ஏதாவது நம்பருக்கு பேசிருப்பானோ.” என மலர் கேட்க,
“இல்ல. நம்பருக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்ல. என்னன்னு தெரியல யோசிப்போம்.” என ரௌத்திரன் யோசனையாக கூறினான்.
“இப்போ என்ன மச்சான் பண்றது? என்ன எல்லாம் கேட்டானோ தெரியலையே.” என ராஜா கேட்க,
“இல்ல டா. பெருசா ஏதும் கேட்ருக்க வாய்ப்பில்லை. வந்து பத்து நிமிஷம் தான் ஆகுது. அவனுக்கு இப்போதைக்கு இவள் சாட்சி சொல்ல போறான்னு தெரிஞ்சுருக்கணும். அப்புறம் நம்ம கிட்ட ஏதோ எவிடன்ஸ் இருக்குன்னு தெரிஞ்சுருக்கணும்.” என கூறிவிட்டு மலரிடம் திரும்பி, “நான் சொல்றத அதிர்ச்சியாகாம கேளு.” என மலரிடம் கேட்க அவளோ கூர்ந்து கவனிக்க,
“ரெண்டு நாளைக்கு ஜாக்கிரதையா இரு. உன்னைக் கடத்த பிளான் போட்டாலும் போடலாம்.” என அவள் பயப்படுவாளோ என ரௌத்திரன் தயங்கி தயங்கி கூற அவளோ கலகலவென சிரித்தாள்.
‘என்ன பயப்படுவான்னு பார்த்தா சிரிக்குறா?’ என மனதில் நினைத்துவிட்டு,
“இப்போ எதுக்கு சிரிக்குற?” என்றான் புரியாமல்.
“வந்தவன் என் முகத்தைப் பாத்துருக்க வாய்ப்பில்ல. நான் திரும்பி தான உட்காந்திருந்தேன். அப்படியே பார்த்துருந்தாலும் எனக்கு கவலை இல்ல.” என சாதாரணமாக கூற,
“இந்த பயம் எல்லாம் கொஞ்சம் கூட கிடையாதா உனக்கு.” என சலிப்பாக கேட்டான் ரௌத்திரன்.
“நான் ஏன் பயப்படணும். சொல்லப் போனா என்னைக் கடத்துனா சூப்பரா இருக்கும்.” என மலர் கூற, ‘ஆஹா தங்கச்சி ஏதோ பிளான் போட்டுட்டா போலயே.’ என ராஜா நினைக்க ரௌத்திரனோ,
“என்ன உளறுற?” என்றான் முறைத்தவாறு.
“ஆமா என்னைக் கடத்துனா என்னை காப்பாத்த நீங்க வருவீங்கல்ல. ஆக்ஷன் சீன் எல்லாம் நடக்கும். ஜாலியா இருக்கும்.” என மலர் உற்சாகமாய் கூற,
“ஏய் உங்க அப்பா கிட்ட உன்னை பத்திரமா கூட்டிட்டு வரதா நான் வாக்கு கொடுத்திருக்கேன். ஒழுங்கா கவனமா இரு சொல்லிட்டேன். விளையாட்டு தனமா ஏதும் பண்ணாத.” என கண்டிப்புடன் கூற அவளோ அவனைப் பார்த்து கண்ணடித்துவிட்டு,
“அர்ஜுனரு வில்லு
ஹரிச்சந்திரன் சொல்லு
இவனோட தில்லு பொய்க்காது” என பாடியவாறே மலர் செல்ல ரௌத்திரனோ,
“நான் என்ன சொல்லிட்டு இருக்கேன். இவ பாட்டு பாடிட்டு போறா” என கோபமாய் ராஜாவிடம் குறைக் கூற ராஜாவோ,
“என்ன மச்சான் புரியலையா? அவளைக் கடத்துனா நீ கில்லி பட விஜய் மாதிரி வந்து காப்பாத்துவியாம். அதை தான் சிம்பாலிக்கா சொல்லிட்டு போறா” என கூறிவிட்டு வாய் பொத்தி சிரிக்க, ‘ஐயோ கடவுளே, மதுரைக்கு கூட்டிட்டு போகும் போது இந்த குட்டி பிசாச எப்படி சமாளிக்க போறேனோ’ என மனதினுள் நொந்துக் கொண்டான்.
அங்கே மினிஸ்டரிடம் சொல்ல கிளம்பின ரஞ்சித்தோ அவருக்கு அழைப்பு விடுக்க அது நாட் ரீச்சபிள் என வர மினிஸ்டர் வீட்டு லேண்ட்லைனுக்கு அழைத்தான். மினிஸ்டரோ எண்ணெய் குளியல் செய்வதற்காக தான் அணிந்திருந்த அணிகலன்களைக் கழட்டி பீரோவில் வைத்திருந்தார். அதில் ரௌத்திரன் சிப் செட் பண்ணியிருந்த செயினும் கழட்டியிருந்ததால் தான் ரௌத்திரனால் இவர்கள் பேசுவதைக் கேட்க முடியவில்லை. அழைப்பை ஏற்ற மினிஸ்டரிடம்,
“ஐயா நான் ரஞ்சித் பேசுறேன்”
“என்னையா ஏதும் கண்டுபிடிச்சியா?”
“ஆமா ஐயா. ஒரு பொண்ணு உங்க பையன் அசோக்குக்கு எதிரா சாட்சி சொல்ல போறா.”
“இது தான் தெரிஞ்ச விஷயமாச்சே. அந்த பொண்ணு யாருன்னு பார்த்தியா.” என அவர் சலிப்புடன் கேட்க,
“இல்லையா. அந்த பொண்ணு முகத்தைப் பார்க்க முயற்சி பண்ணேன். ஆனால் முடியலையா.” என ரஞ்சித் கூற,
“அப்புறம் எதுக்குயா போன் பண்ண. உன்னையெல்லாம் அனுப்புனேன் பாரு என்னை சொல்லணும்.” என அவர் ரஞ்சித்தை கழுவி ஊத்த அவனோ,
“ஐயா ஐயா ஒரு நிமிஷம். இன்னொரு விஷயம் கிடைச்சுருக்கு.” என்றான்.
“என்னையா சொல்ற?”
“ஆமாங்கயா ஏதோ எவிடென்ஸ் கிடைச்சுருக்குன்னு பேசிக்கிட்டாங்க. ஏதோ ரொம்ப முக்கியமானதுன்னு சொல்லிக்கிட்டாங்க. என்ன எவிடேன்ஸ்னு தெரியல.” என ரஞ்சித் கூற,
“எவிடென்ஸா என்ன எவிடென்ஸா இருக்கும். என்ன வச்சிருக்கான்னு தெரியலயே.” என மினிஸ்டர் யோசிக்க,
“ஐயா எனக்கொரு யோசனைத் தோணுது. நாம அந்த சாட்சி சொல்ற புள்ளையைக் கடத்திருவோம். அவளை வச்சு மிரட்டி எவிடென்ஸையும் வாங்கிறலாம்.” என ரஞ்சித் யோசனைக் கூற,
“யோசனை நல்லா தான் இருக்கு. ஆனா சாட்சி சொல்ல போற பொண்ண எப்படியும் கவனமா இருக்க சொல்லிருப்பான் அந்த ரௌத்திரன். அவளைக் கடத்துறது ரிஸ்க் தான். அவங்க வீட்டுல வேற யாரெல்லாம் இருந்தாங்க” என மினிஸ்டர் கேட்க,
“அவன் பாட்டி, அந்த ராஜா, அப்புறம்ம் .. ஹான் உள்ள இருந்து ஒரு பொண்ணு குரல் கேட்டுச்சு. அது ரௌத்திரன் தங்கச்சின்னு நினைக்கிறேன்.” என ரஞ்சித் யோசித்து கூற,
“அப்போ அவன் தங்கச்சியை தூக்கிருவோம். நாளைக்கே அந்த பொண்ணைக் கடத்தணும். என் ஆளுங்களை அனுப்பி வைக்கிறேன். நீ பார்த்து காரியத்தை முடிச்சுரு.” என ஹர்ஷினியைக் கடத்தும் திட்டத்தை மினிஸ்டர் கூற ரஞ்சித்தும் சரி என்றான்.
ரௌத்திரனிடம் பேசிவிட்டு கீழே வந்த ராஜாவோ தன்னவளைத் தேட அவள் எங்கோ செல்ல கிளம்பிக் கொண்டிருந்தாள். ‘எங்க கிளம்புறா இவ?’ என யோசனையுடன் அமர்ந்தான்.
“பாட்டி நான் பக்கத்துல இருக்குற கோவிலுக்கு போயிட்டு வரேன்.” என கூறிக்கொண்டு வெளியே சென்றாள் அவனின் ஹனி. இது தான் சரியான சந்தர்ப்பம் தன்னவளுடன் பேச என நினைத்தவன் அவளின் பின்னே சென்றான்.
தன் பின்னே யாரோ வருவது போல பெண்ணவளுக்கு தோன்ற திரும்பிப் பார்த்தாள். தன்னைக் கண்டவுடன் நிற்பாள் என எண்ணியவனுக்கு ஏமாற்றமே. அவளோ யாரோ ஒருவர் என்பது போல நடந்தாள். ‘பாவி கொஞ்சமாச்சும் கண்டுக்கிறாளா’ என மனதில் ராஜா நினைக்க, ‘இப்போ எதுக்கு நம்ம கூட வராங்க. நேத்துல இருந்து கவனிச்சுட்டு தான் இருக்கேன். நம்மளையே தான் பார்க்குறாங்க. ஒருவேளை திடீர்னு காதல் வந்துருச்சோ.’ என காதலித்த மனது குதூகலிக்க காயப்பட்ட மனதோ ‘வெட்கமே இல்லையா. அவன் பேசுனது எல்லாம் மறந்துருச்சா.’ என காரி துப்ப விறுவிறுவென நடையைக் கட்டினாள்.
‘பீ.டி. உஷாக்கு தங்கச்சியா இருப்பாளோ. இவ்ளோ வேகமா போறா. ஐயோ எல்லாவனும் கரெக்ட் பண்றதுக்கு தான் நாயா பேயா அலைவானுங்க. ஆனா கரெக்ட் பண்ண பொண்ணைக் காயப்படுத்தி மன்னிப்பு கேட்க அலையுறவன் நானா தான் இருப்பேன்.’ என புலம்பியவாறு அவளின் பின்னே வேகமாய் நடந்தான். இல்லை இல்லை ஓடினான்.
கோவில் உள்ளே அவள் செல்ல அவள் சாமி கும்பிட்டு வந்தவுடன் பேசலாம் என அவளுக்காக வெளியே காத்திருந்தான். உள்ளே சென்றவள் ராஜா வருகிறானா என திரும்பி பார்க்க அவன் இல்லை என்றதும் அவளின் மனம் சிறிது ஏமாற்றம் அடைந்தது.
இது தான் அன்பு போல. எவ்வளவு தான் காயப்பட்டாலும் மறுபடியும் அவர்களுக்காக ஏங்க தான் செய்கிறது. அந்த கடவுள் ஒன்று மூளையைக் கொடுத்திருக்க வேண்டும். இல்லை மனதைக் கொடுத்திருக்க வேண்டும். இரண்டையும் மனிதனுக்கு படைத்து எது சொல்வதைக் கேட்பது என திண்டாட வைக்கிறார். இவ்வாறு சிந்தித்து கொண்டே இறைவனிடம் வேண்டிவிட்டு கால் மணி நேரம் கழித்து வெளியே வந்தாள் ஹர்ஷினி.
“ஹர்ஷு ஒரு நிமிஷம்.” என ராஜா அவளை அழைக்க குரலை வைத்தே தன்னவன் தான் என அறிந்தவளோ திரும்பி பார்க்காமல் நடக்க ஆயத்தமானாள்.
“ஹர்ஷு ப்ளீஸ் ஒரு நிமிஷம். உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.” என கெஞ்சும் குரலில் கேட்க எங்கே தன்னையறியாமல் திரும்பிவிடுவோமோ என்ற பயத்தில் ‘திரும்பிராத ஹர்ஷு’ என தனக்குத்தானே கடிவாளம் போட்டுகொண்டு நடந்து சென்றாள். கெஞ்சியும் பயனில்லை என அறிந்தவனோ வம்படியாக அவளின் கை பிடித்து கோவிலின் பின்னே இருக்கும் மரத்திற்கு அருகில் இழுத்து சென்றான்.
“என்ன பண்றீங்க? கைய விடுங்க” என கத்தினால் தன்னவனை யாரும் தவறாக எண்ணிவிடுவார்களோ என்றஞ்சி மெதுவாக கேட்டுக்கொண்டே அவன் இழுப்பிற்கு செல்ல, அவனோ அவள் கையை விடாமல் இழுத்து சென்றான். அங்கு சென்று கொண்டிருந்த பெரியவர் ஒருவர் இதனைக் கண்டு,
“என்னமா ஆச்சு? ஏதும் பிரச்சனையா?” என கேட்க ராஜாவோ,
“ஹலோ இது எங்க பெர்சனல். நீங்க தலையிட வேணாம்.” என கூற அவரோ,
“அதை அந்த பொண்ணு சொல்லட்டும். சொல்லு மா நீ.” என பெரியவர் ஹர்ஷுவைப் பார்க்க, அவளோ ஒரு நிமிடம் தன்னவனை முறைத்தாள். அவனோ, ‘அடியே மாட்டி விட்டுறாத டி’ என கண்களாலேயே கெஞ்சினான். பிறகு,
“தெரிஞ்சவர் தான். பிரச்சனை ஒண்ணுமில்ல.” என அவரிடம் அவள் கூற அப்பொழுது தான் ராஜாவிற்கு மூச்சே வந்தது. அதனைக் கேட்ட அந்த பெரியவரோ,
“பார்க் பீச்ல தான் உங்க அலம்பல் தாங்கலைன்னா கோவிலையும் நீங்க விட்டு வைக்கலயா.” என சத்தமாக கூறிவிட்டு சென்றார். அதனைக் கேட்டு ஆத்திரமடைந்தவளோ,
“கைய விடுங்க முதல்ல.” என கையை அவனிடம் இருந்து உதறியவள்,
“ஏற்கனவே நீங்க என்னை தப்பா பேசுனது பத்தாதா. இந்த ஊரு உலகமும் என்னைத் தப்பா பேசணுமா?” என எங்கோ பார்த்து கொண்டு கோபமாக கூறினாள்.
“ஐயோ ஹர்ஷு ப்ளீஸ். என்னை மன்னிச்சுரு. அதையே சொல்லி சொல்லி என் நெஞ்சை குத்தி கிழிக்காத.” என இயலாமையுடன் ராஜா அவளிடம் கூற,
“நீங்க சொன்னது தான மிஸ்டர் ராஜா. நீங்க சொன்னதை உங்ககிட்ட சொல்லும் போதே உங்களுக்கு இவ்ளோ வலிக்குதுன்னா அப்போ என்னை சொல்லும் போது என் மனச பத்தி கொஞ்சமாச்சும் யோசிச்சு பார்த்திங்களா. நீங்க எப்படி யோசிப்பீங்க. உங்களுக்கு தான் என்மேல காதலே இல்லையே.” என ஆதங்கமாய் ஹர்ஷு பேச,
“எனக்கு புரியுது ஹர்ஷு. அதனால தான் சாரி கேட்குறேன். தயவு செஞ்சு புரிஞ்சுக்கோ.” என்றான் ஏக்கமாய்.
“எப்படி எப்படி நீங்க இஷ்டத்துக்கு வார்த்தையைக் கொட்டுவீங்க. அப்புறம் சாரி சொன்னதும் நாங்களும் பரவாயில்லன்னு மன்னிக்கணும் அதான.” என இளக்காரமாக கேட்க,
“சரி நான் என்ன பண்ணுனா என்னை மன்னிப்பன்னு சொல்லு. நான் செய்றேன்.” என கெஞ்சலாக கேட்டான்.
“நீங்க எதுவும் செய்ய வேணாம். அன்னைக்கு மயக்குறவன்னு சென்னிங்க. இப்போ மன்னிப்பு கேட்பிங்க. அதை நம்பி மறுபடியும் நான் மனசுல ஆசையை வளர்த்து மறுபடியும் நான் காதலா பேச வரும் போது வேறென்ன சொல்லுவீங்களோ? வேசின்னு கூட” என கூறிக்கொண்டிருக்கும் போதே அவளின் கன்னம் சுளீரென வலித்தது. ஆம் அவளின் வார்த்தையின் வீரியம் அவளின் பட்டுக் கன்னத்தில் ராஜாவின் கைத் தடமாய் பதிந்திருந்தது.
“என்ன வார்த்தை டி சொன்ன? யோசிச்சு பேச மாட்டியா?” என கோபமும் வருத்தமும் ஒருசேர கேட்டான்.
“இதுக்கு முன்னாடி பேசும் போது நீங்க யோசிச்சீங்களா?” என கண்ணீருடன் எங்கோ பார்த்தபடி கூற,
“ஆமா டி யோசிச்சு தான் அப்படி பேசுனேன். நான் எல்லாம் சொல்றேன். முதல்ல நீ என்னை பார்த்து பேசு.” என ராஜா கெஞ்சலாய் கேட்க அவளோ பார்க்காமலே நிற்க,
“ஹனி மா.” என பூவை விட மென்மையாக காதலுடன் கூற அவளின் கண்கள் அவளறியாமல் தன்னவனை நோக்கியது. இருவரும் அவ்வாறே சில நிமிடம் பார்வையாலே ஊடுருவ ராஜாவே மீண்டும் பேசினான்.
“சரி நான் தான் அப்படி பேசுனேன். ஆனால் கோபத்துல தான் பேசுனேன்னு தான் இன்னும் நினைக்குறீயா. உனக்கு முன்னாடி உன்னைக் காதலிக்க ஆரம்பிச்சவன்டி நான். என் விதி என் வாயால அந்த காதலை சொல்லவிடாம தடுத்துருச்சு. வேற வலி இல்லாம உன்கிட்ட இருந்து விலக முயற்சி பண்ணேன். ஆனால் நீ என்னை உயிரா காதலிச்ச. அதனால நீ என்னை விலகி போகணும்னு என் மனச கல்லாக்கிட்டு நீ காயப்படுவன்னு தெரிஞ்சே சொன்ன வார்த்தை டி. அதை சொல்லிட்டு நான் ரொம்ப துடிச்சேன் டி உனக்கு மனசு வலிக்குமேன்னு.” என அவன் உணர்ச்சிகளின் பிடியில் சிக்கிக்கொண்டு விழியின் ஓரம் கசிந்த நீர் துளிகளைத் துடைத்தவாறு கூற ஹர்ஷுவோ அதிர்ச்சியாகவும் குழப்பத்துடனும் கேட்டாள்.
“என்ன சொல்றீங்க. எனக்கு முன்னாடி என்னைக் காதலிச்சிங்களா? எதுக்கு விலகனும்னு நினைச்சீங்க. அந்த அளவுக்கு என்ன ஆச்சு?” என மாறி மாறி கேள்விக்கணைகளைத் தொடுக்க ராஜாவோ தான் அவளை விலக்கி வைத்ததன் காரணத்தையும் நடந்த அனைத்தையும் கூறினான். அனைத்தையும் கேட்டவளின் மனதினைக் குற்ற உணர்வு குடைந்தது.
“என்ன மன்னிச்சுருங்க ராஜ். உங்களைப் புரிஞ்சுக்காம எப்படியெல்லாம் காயப்படுத்திட்டேன். என் அண்ணனோட உயிரைக் காப்பாத்த உங்க காதலை தியாகம் செஞ்சிருக்கீங்க.. உங்களைப் போய் கஷ்டப்படுத்திட்டேனே. என்னை மன்னிச்சுருங்க ராஜ்” என சுற்றம் கருதாமல் அவள் விழிகளில் இருந்து தாரைத் தாரையாக நீர் கொட்ட அவளின் அவனோ,
“ஹனி ப்ளீஸ். அழாத. அதான் இப்போ எந்த பிரச்னையும் இல்லல விடு. நீ என்மேல வச்ச காதல் ரொம்ப புனிதமானது ஹனி. அதான் அந்த காதல் நம்மளை சேர்த்துவைக்க உண்மையை தெரிய வச்சிருக்கு. இது நம்ம சந்தோசப்பட வேண்டிய நேரம் ஹனி மா.” என ராஜா மகிழ்வாய் கூற பிறகு கொஞ்சம் நிதானமானவள் அவனிடம்,
“ஆனால் இதை என்கிட்டே மறைக்க என்ன காரணம். சொல்லிருந்தா அன்னைக்கே நான் உண்மையை சொல்லிருப்பேன்ல”
“இல்ல டி. நானும் உன்னை காதலிக்குறேன்னு உனக்கு தெரிஞ்சா உன்னால என்னை மறக்க முடியாது. மறக்கவும் முடியாம நினைக்கவும் முடியாம என் ஹனி கஷ்டப்படுவா. அதான்.” என அவளின் கண்களைப் பார்த்து காதலுடன் கூற அவனின் காதலில் திளைத்து நின்றாள் பெண்ணவள். பின் அவள் முன் மண்டியிட்டவன்,
“லவ் யூ ஹனி. லவ் யூ சோ மச் டி.” என தன் கைகளை விரித்தவாறு கூற அதில் நாணம் கொண்டு பின்,
“லவ் யூ டூ ராஜ்.” என அதற்கு பரிசாக அவன் நெற்றியில் முத்தமிட்டு தன் காதலை இரண்டாவது முறையாக வெளிப்படுத்தினாள் அவனின் ஹனி.
காதல் சொன்ன கணமே
அது கடவுளைக் கண்ட கணமே
காற்றாய்ப் பறக்குது மனமே ஓ …
எனும் வரிகளுக்கேற்ப அவர்கள் காதல் காற்றில் மிதந்து கொண்டிருந்தனர் நாளை நடக்க போகும் விபரீதம் தெரியாமல்.
மௌனம் எரியும்…