மௌனம் 14
ரௌத்திரனின் குடும்பம் வசதிகள் வாய்ந்த பணக்கார குடும்பம். ரௌத்திரனின் தந்தை சிவமணி. தாய் ரமணி. சிவமணி ரமணியின் பத்தொன்பதாவது வயதில் அவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி மட்டுமே நிறைந்திருந்தது. அவர்களின் காதலின் பரிசாக ஒரு வருடத்தில் ரௌத்திரன் ஜனித்தான். இயல்பிலேயே அவனது புருவங்கள் இடுங்கியபடி கண்கள் கோபமாய் இருப்பது போன்றே இருக்க சிவமணியோ,
“ரமணி பாரேன். நம்ம பையனுக்கு இப்போவே கோபம் எல்லாம் வருது.” என ரசித்து கூற,
“ஆமாங்க நானும் கவனிச்சேன். இவனுக்கு என்னங்க பேர் வைக்கலாம்.” என ரமணி ஆசையாய் கேட்க,
“ரௌத்திரன்னு வைப்போம். அது தான் அவனுக்கு பொருத்தமா இருக்கும்.” என சிவமணி கூற அவ்வாறே பெயரும் வைத்தனர்.
உட்கார்ந்து சாப்பிட நிறைய சொத்து இருப்பதால் சிவமணி தன் மனைவி மற்றும் குழந்தையே கதி என ஒவ்வொரு நாளும் அவர்களை தாங்கினார். திடீரென ஓர் நாள் வெளியே சென்றிருந்த சிவமணிக்கு விபத்து ஏற்பட சம்பவ இடத்திலேயே சிவமணியின் உயிர் அவரை விட்டு பிரிந்தது. அதனைக் கேட்ட ரமணிக்கு துக்கம் தாளவில்லை. கணந்தோறும் தன் கணவரையே நினைத்து மருகினார். ரமணியின் தந்தை தன் மகள் சிறு வயதிலேயே விதவை ஆனதை நினைத்து மிகவும் வருந்தினார். பின் சுற்றத்தார் சொல் கேட்டு ரமணியிடம் வந்து பேசினார்.
“அம்மாடி இன்னும் எத்தனை நாளுக்கு இப்படி இருக்க போற. உனக்கு இன்னும் வயசு இருக்கு மா.”
“வேற என்ன பா பண்ண சொல்றீங்க? என் விதி இது தான் போல. இனிமே என் மகன் மட்டும் தான் எனக்கு துணை. நான் இப்படியே இருக்குறேன்.” என அழுதவாறு கூற,
“இல்ல மா. உன்னால காலம் முழுக்க தனியா வாழ முடியாது மா. உன் மகனை அப்பா இல்லாம வளக்குறது உனக்கு கஷ்டம் அவனுக்கும் கஷ்டம். அதனால உன் அத்தை பையன் கோவிந்தனை கல்யாணம் பண்ணிக்கோ மா.”
“அப்பா ப்ளீஸ். அவரைத் தவிர யாரையும் என் மனசுல நினைக்க முடியாது என்னால. எவ்ளோ கஷ்டப்பட்டாலும் நான் இப்படியே இருந்துக்குறேன்.”
நாளடைவில் ரமணியின் தந்தைக்கு தன் மகளை நினைத்து உடலநிலை சரியில்லாமல் போக தன்னுடைய கடைசி காலத்தில் பயணித்துக் கொண்டிருந்தார் அவர். வேறு வழியின்றி தன் தந்தையின் கடைசி ஆசைக்கிணங்க ரமணி கோவிந்தனை மறுமணம் செய்து கொண்டார். கோவிந்தனும் ரமணியையும் ரௌத்திரனையும் நன்றாக தான் பார்த்துக் கொண்டார். அவ்வாறே ஓர் எட்டு வருடங்கள் ஓடியது. ரௌத்திரன் வளர வளர ஏனோ அவனின் கோபங்களும் வளர்ந்து கொண்டே இருந்தன. சின்ன விஷயத்திலும் கூட கோபம் கொள்ளும் குணமுடையவன் அவன்.
ஒருநாள் அவன் கோபம் கொண்டு உடன் படிக்கும் மாணவனை அடித்ததாக அவன் பள்ளி ஆசிரியர் ரமணியிடம் குறைக் கூற ரமணியோ அவனை கண்டித்தார்.
“அன்னைக்கு நான் என் கூட படிச்ச பையனை அடிச்சேன்னு அம்மா சூடு வைக்க வந்தாங்க. அப்போ நான் கோபப்பட்டு கத்திட்டு இருந்தேன். திடீர்னு எனக்கு தலை வழிச்சுது. மயங்கி விழுந்துட்டேன். முழிச்சு பார்க்கும் போது ஹாஸ்ப்பிட்டல்ல இருந்தேன். என் பக்கத்துல கோவிந்தன் அப்பா தான் இருந்தாரு. நான் அம்மா எங்கன்னு கேட்டேன். என்கிட்ட கோவமா பேசுனாரு. பாவி பெத்த அம்மாவையே கொன்னுட்டியே டா. நீ எல்லாம் பிள்ளையான்னு கேட்டாரு.
எனக்கு ஒன்னும் புரியல. அம்மாவைக் கொன்னுட்டனான்னு அதிர்ச்சியா இருந்தது. என்னப்பா சொல்றீங்கன்னு கேட்டேன். அன்னைக்கு வீட்டுக்கு வந்த கோவிந்தன் அப்பாவோட போலீஸ் ஃபிரண்ட் துப்பாக்கியை மறந்து வச்சுட்டு போக, சூடு வைக்க வந்த கோபத்துல யோசிக்காமா கைல கிடைச்ச அந்த துப்பாக்கியால நான் எங்க அம்மாவை சுட்டுட்டேன்னு அழுதுட்டே அப்பா சொன்னாரு. எங்க அம்மாவை நான் கொன்னுட்டேன்னு கதறி அழுதாரு. எனக்கும் அழுக வந்தது.” என்றவன் தன் கண்ணீரைத் துடைத்தபடி மேலும் கூறலானான்.
“அம்மாவை பார்க்கணும்னு சொன்னேன். ஆனால் அவர் என்னை பார்க்க விடல. ஏற்கனவே கொன்னது பத்ததா. செத்தாலும் உங்க அம்மாவை நிம்மதியா விட மாட்டியான்னு என்னை திட்டுனாரு. என்னால நம்ப முடியல. கடைசி நிமிஷம் கூட எங்க அம்மாவை பார்க்க முடியல. கெஞ்சுனேன். கதறுனேன்.
டாக்டர் வெளிய போலீஸ் கிட்ட பேசிட்டு இருந்தாங்க. சுடும் போது வந்த சத்தத்துல பயந்து நான் மயங்கி விழுந்துட்டேன்னு. போலீஸ் ரிப்போர்ட் கூட சொன்னுச்சு. நான் தான் கொன்னேன்னு. அந்த துப்பாக்கில என்னோட கை ரேகை இருந்துச்சுன்னு. என்னால நம்பவே முடியல. கோவிந்தன் அப்பா கடைசியா ஒரு வார்த்தை சொன்னாரு. உன்னை பெத்தது தான் ரமணி செஞ்ச பாவம். உன் கோபத்துனால கூட இருக்குறவங்களை நீ கொன்னுருவன்னு என்னை பாத்து சொன்னாரு. இந்த கொலைகாரனை நான் என்கூட வச்சுக்க மாட்டேன்னு சொல்லி என்னை போலீஸ் கிட்ட கொடுத்துட்டாங்க.
சின்ன பையங்குறதுனால என்னை சிறுவர் சீர்திருத்த பள்ளியில சேர்த்தாங்க. அஞ்சு வருஷம் அங்க தான் இருந்தேன். கூட இருந்தவங்க எல்லாம் என்னை பார்த்து பயந்து ஓடுனாங்க. இவன் ரொம்ப கோபக்காரன். அம்மாவையே கொன்னுட்டு ஜெயிலுக்கு வந்தவன்னு என்னை சுத்தி இருக்குற எல்லாரும் சொன்னாங்க. அப்போ கூட கோபம் தான் வந்துச்சு. என் மேல எனக்கே. அப்போ முடிவு பண்ணேன். யாரும் எனக்கு வேணாம்னு.
அஞ்சு வருஷம் கழிச்சு என்னை அனாதை ஆசிரமம்ல சேர்த்தாங்க. கோவிந்தன் அப்பா தான் நான் படிக்குறதுக்கு மட்டும் கொஞ்சம் பணம் கொடுத்துட்டு என்னை ஆசிரமம்ல சேர்க்க சொல்லிட்டாங்கன்னு சொன்னாங்க. அங்க யாருக்கும் என்னை பத்தி தெரியாது. நல்லா தான் என்கிட்ட பேசுனாங்க. ஆனால் நான் யார்கிட்டயும் பேசல. எங்க என்னோட கோபத்துனால இன்னும் யாரையும் கொன்னுறுவேனோன்னு எனக்கு பயம்.
அங்க தான் எனக்கு பாட்டியும் ஹர்ஷுவும் தெரியும். பாட்டி தான் ஆறுதல் சொல்லுவாங்க. ஹர்ஷு அவளாவே வந்து என்கிட்ட பாசமா பேசுனா. நான் விலகி போனாலும் அண்ணா அண்ணான்னு பாசமா வருவா. அப்போ அப்போ பாட்டிகிட்டயும் ஹர்ஷு கிட்டயும் மட்டும் தான் பேசுவேன். அப்புறம் கஷ்டப்பட்டு படிச்சு போலீஸ் ஆனேன். நான் ஆசிரமத்தை விட்டு போகும் போது ஹர்ஷு ரொம்ப அழுதா. ஒரு நாள் அவளுக்கு காய்ச்சல் வந்துட்டு என்னை பார்க்காம. அப்புறம் அவளுக்காக பாட்டியையும் ஹர்ஷுவையும் நானே பார்த்துக்குறேன்னு கூட்டிட்டு வந்துட்டேன்.” என மொத்தமாக கண்ணீருடன் கூறி முடித்தான் ரௌத்திரன்.
மலருக்கோ அவனை நினைத்து மிகவும் வருத்தமாக இருந்தது.
தன் மனதில் இருந்த அனைத்தையும் கூறி முடித்தவனுக்கு இப்பொழுது மனம் லேசாக இருந்தது. ஆம் பாரம் எல்லாம் மலருக்கு வந்துவிட்டதே. அனைத்தையும் கேட்ட ராஜாவிற்கும் தன் நண்பன் நிலையை எண்ணி வருத்தமாக இருந்தது. பின் கண்ணை துடைத்து விட்டு எழுந்த ரௌத்திரனோ மலரிடம்,
“இங்க பாரு. இனிமே காதல்னு சொல்லிட்டு என் பின்னாடி வராத. எனக்கு யாரும் வேணாம் என் வாழ்க்கைல. என் அம்மாவைக் கொன்ன பாவி நானு. நான் ஒரு மிருகம். இப்படியே என்னை விடுங்க. என் தங்கச்சிக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சு கொடுக்குறது மட்டும் தான் என் கடமை. அதுக்கு அப்றம் நானே..” என ஏதோ கூற வந்தவன் அதோடு நிறுத்திவிட்டு சென்று விட்டான் வண்டியை எடுத்து கொண்டு எங்கேயோ.
பின் பாட்டியும் ஹர்ஷினியும் கீழே சென்று விட மலரும் ராஜாவும் அறையில் இருந்தனர்.
“விடு மா. சரி ஆகிருவான். நீ கவலைப்படாத.” என ராஜா மலருக்கு ஆறுதல் கூற அவளோ,
“இல்ல அண்ணா. கண்டிப்பா என் தீரனை நான் மாத்திருவேன். எனக்கு நம்பிக்கை இருக்கு.”
“பாவம் இவ்ளோ நாள் இந்த விஷயத்தை மன்சுலேயே வச்சு புழுங்கியிருக்கான்”
“ஆமாண்ணா. சரி அதை விடுங்க. இனிமே உங்களுக்கு தான் ஆப்பு ரெடி ஆயிட்டு.” என மலர் கூற,
“என்ன மா சொல்ற?” என ராஜா கேட்க,
“ஆமா அண்ணா. ஹர்ஷு தீரனோட கூட பொறந்த தங்கச்சி இல்ல. அப்போ நீங்க சொல்ற அந்த ஜாதகம் சென்டிமென்ட் எல்லாம் இனிமே தேவையில்லைல. நீங்க பயப்படமா லவ் பண்ணலாம்ல.” என மகிழ்வாய் மலர் கூற, அப்பொழுது தான் ராஜா அதனை நினைக்கிறான்.
“அட தங்கச்சி. ஆமா. அப்போ நான் ஹனிய கல்யாணம் பண்ணா என் மச்சானுக்கு எதுவும் ஆகாது. ஐயோ தங்கச்சி தேங்க்ஸ் மா.” என சந்தோஷத்தில் துள்ளி குதித்தவனோ பின் நின்றுவிட்டு, “ஆமா இது நல்ல விஷயம் தான மா. இதுக்கு எதுக்கு ஆப்புன்னு சொன்ன.” என ராஜா புரியாமல் கேட்க,
“என்ன பிரதர். உங்க ஹனி கிட்ட நீங்க இதுவரை பேசுனது எல்லாம் மறந்து போச்சா. அவகிட்ட நீங்க இனிமே அவ்ளோ தான்.” என வாய் பொத்தி சிரிக்க,
“ஐயோ ஆமா. போச்சு. என் ஹனிய நான் ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன். அவ கால்ல விழுந்தாவது மன்னிப்பு கேட்கனும்.” என இவன் கூற மலரோ சிரித்தபடி வெளியே வந்தாள். பாட்டியும் ஹர்ஷுவும் சோகமாய் அமர்ந்திருக்க,
“இப்போ எதுக்கு சோகமா இருக்கிங்க? ரௌத்திரனை எப்படியாவது நான் மனசு மாற வைக்கிறேன். நீங்க கவலைப்படாதீங்க.” என கூறிவிட்டு தன் வீட்டிற்கு சென்றவளோ யோசனையில் மூழ்கினாள்.
“சுட்டது இவருக்கு தெரியாதுன்னு சொல்றாரு. அதெப்படி. எங்கேயோ இடிக்குதே.” என யோசித்து கொண்டிருந்தாள் மலர்.
ஆனால் ஒன்று மட்டும் புரிந்தது. ரௌத்திரன் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறான் என்று. தானே ஒரு சைக்காலஜி படித்த மாணவியாக இருந்தாலும் தன்னவனைப் பற்றி தெளிவாக தெரிந்துகொள்ள தனக்கு தெரிந்த பெண் மனநல மருத்துவரிடம் இதுகுறித்து ஆலோசனை செய்தாள்.
“அதெப்படி டாக்டர்.. அவர் சொல்ற விஷயத்தைக் கேட்ட உடனையே எனக்கு சந்தேகம் வந்துட்டு. ஆனா அவரோ ஒரு போலீஸ். அவருக்கு இதுல ஏதோ ஒன்னு தப்பா இருக்குன்னு தோனாமையா இருக்கும்” என மலர் கேட்க அந்த மருத்துவரோ,
“அப்படி இல்லை மா… என்னதான் பெரிய போலீஸ், வக்கீல், டாக்டர், ஏன் பெரிய சைன்டிஸ்ட்டாவே இருந்தாலும் கூட அவங்க மனசளவுல ஒரு விஷயத்துல பாதிக்கப்பட்டா.. அவங்க மனசு அதை பத்தி மேற்கொண்டு நினைக்கவே பயப்படும்.. அதுவும் அவரோட மனசுல குற்ற உணர்வுமட்டும் தான் ஆழமா இருக்கு.. அது லாஜிக்கலா யோசிக்க வைக்காது.. அந்த விஷயம் பத்தி அவங்க கொஞ்சம் யோசிச்சா கூட அவங்க மனசுல பயம் வர ஆரம்பிச்சுரும்.. இந்த மாதிரி பாதிக்கப்பட்டவங்க மனசளவுல வேற ஒரு ஆளாவும்.. வெளி உலகத்தைப் பொறுத்தவரை வேற ஒரு ஆளாவும் இருப்பாங்க.. ஆதாரத்தோட நிரூபிச்சா மட்டும் தான் அவங்க மனசு அதை நம்பும்..” என்று கூறினார்.
அதனை எல்லாம் கேட்ட மலரோ ஆழ்ந்த சிந்தனையில் இறங்க ஆரம்பித்தாள். அங்கே ராஜாவோ தன்னவளைக் கஷ்டப்படுத்திவிட்டதை நினைத்து வருந்தி கொண்டிருந்தான்.
‘ச்ச உண்மை தெரியாம என்னென்னமோ பேசிட்டோமே. ஹனிகிட்ட இதெல்லாம் சொன்னா முதல்ல நம்புவாளா.’ என இவன் நினைத்து கொண்டிருக்க அவனின் மனசாட்சியோ, ‘கொஞ்ச நஞ்ச பேச்சா டா பேசுன. சொல்லக்கூடாத வார்த்தையெல்லாம் சொன்னியே டா. இப்போ நல்ல அனுபவி.” என இளக்காரமாக சிரிக்க, ‘நான் என்ன பண்ணுவேன். என் நண்பனோட உயிர் தான் எனக்கு முக்கியமா பட்டுச்சு.’ என தனக்கு தானே ஆறுதல் கூறிக்கொண்டிருந்தான். அங்கே சுவற்றில் மாட்டியிருந்த ஹர்ஷினி ரௌத்திரனுடன் எடுத்த புகைப்படம் ராஜாவின் கண்ணில் பட அதனைக் கையில் எடுத்தவன் அதில் சிரித்துக் கொண்டிருந்த தன்னவளின் முகத்தினை வருடியவாறு,
“சாரி ஹனி. கூடிய சீக்கிரம் நானே உன்கிட்ட வந்து என் லவ்வ சொல்றேன். லவ் யூ டி ஹனி.” என சிறிது சத்தமாகவே கூறிக்கொண்டு அதில் முத்தமிட்டான். அப்பொழுது வெளியே சென்றிருந்த ரௌத்திரன் அறைக்குள் நுழைந்தான். ராஜாவோ ரௌத்திரனுக்கு தெரியாமல் படத்தை இருந்த இடத்தில் மாட்டிவிட்டு,
“மச்சான் எங்க டா போன?” என கேட்க,
“ஒண்ணுமில்ல டா. மனசு கஷ்டமா இருந்துச்சா அதான் சும்மா பைக்ல ஒரு ரைட் போனேன். இப்போ ஓகே.” என்றான்.
“சரி டா. விடு மச்சான். பழச எல்லாம் மறந்துரு. இனிமே நடக்க போறத பார்ப்போம்.” என ராஜா கூற ரௌத்திரனோ அவனை ஒருமாதிரியாக பார்த்துவிட்டு,
“கீழ வா.” என கூறிவிட்டு முன்னே செல்ல,
‘இப்போ இவன் பார்த்த பார்வைக்கு என்ன அர்த்தம். ஆஹா என்ன பண்ண போறானோ?’ என மனதில் நினைத்துவிட்டு இவனும் பின்னே சென்றான். கீழே வந்த ரௌத்திரனோ பாட்டியையும் ஹர்ஷுவையும் அதே பார்வை பார்க்க இருவரும் ‘இவன் எதுக்கு இப்போ இப்படி பார்க்கிறான்’ என ஒருவருக்கொருவர் நினைத்துவிட்டு மாறிமாறி பார்க்க பின் பாட்டியோ பின்னே வந்த ராஜாவிடம் கண்ணாலேயே என்னாச்சு என கேட்க அவனோ தெரியலையே என உதட்டைப் பிதுக்கினான். இவ்வாறே ஒரு மூன்று நிமிடங்களுக்கு ரௌத்திரன் மூவரையும் பார்க்க பொறுமையிழந்த பாட்டியோ,
“என்னாச்சு ராசா எதுக்கு அப்படி பாக்குற?” என கேட்க, அவரைத் தொடர்ந்து ஹர்ஷுவும்,
“ஆமா அண்ணா. என்னாச்சு? எனக்கு புரியல” என ஹர்ஷு கேட்க அவளை தொடர்ந்து ராஜாவும்,
“டேய் மச்சான் உன் பார்வைக்கு அர்த்தம் கண்டுபிடிக்கனும்னா நான் மலரை தான் கூட்டிட்டு வரணும். இரு நான் கூட்டிட்டு வரேன்.” என கூற ரௌத்திரன் ராஜாவைத் தீயாக முறைத்தான்.
“பின்ன என்ன டா. சும்மா பார்த்துட்டே இருந்தா எங்களுக்கு என்ன தெரியும். சொன்னா தானே தெரியும்.” என்றிட,
“அப்போ நான் ஏன் இப்படி பார்க்குறேன்னு உங்க மூணு பேருக்கும் புரியல அப்படி தான?” என சிறு முறைப்புடன் கேட்க,
“ஏன் மச்சான்? நாங்க என்ன மலாய்லயா பேசிட்டு இருந்தோம் இவ்ளோ நேரம். புரியலன்னு தமிழ்ல தானே டா சொன்னோம்.” என ராஜா மீண்டும் மீண்டும் மலரையே ஞாபகப்படுத்த அதில் கடுப்பான ரௌத்திரனோ, ‘இரு டா உனக்கு ஆப்பு வைக்குறேன்.’ என மனதில் நினைத்துக்கொண்டு,
“அவ என்னை லவ் பண்றான்னு உங்க மூணு பேருக்கும் ஏற்கனவே தெரியும். அப்படி தானே.” என லேசான கோபத்துடன் கேட்க மூவரும் திருதிருவென முழிக்க, பின், “கால் வருது நான் பேசிட்டு வரேன்” என ராஜாவும், “அடுப்புல ஏதோ வச்சுட்டு வந்துட்டேன். இரு வரேன்” என பாட்டியும், “வெளிய யாரோ கூப்பிடுறாங்க நான் போய் யாருன்னு பார்க்குறேன்” என ஹர்ஷுவும் ஒரே நேரத்தில் கூறிக்கொண்டு நழுவ பார்க்க,
“நிக்குற இடத்தைவிட்டு யாராவது அசைஞ்சீங்க அப்புறம் நடக்குறதே வேற.” என ரௌத்திரன் கூற மூவரும் ஒருவித பயத்துடன் அங்கேயே நின்றனர்.
“சயா சிந்தா அவானா என்னனு நான் அவகிட்ட கேட்கும் போது அவக்கூட அவ்ளோ ஷாக் ஆகல. அவளை விட நீங்க மூணு பெரும் அதிகமா ஷாக் ஆகுறீங்க.” என ரௌத்திரன் கூற மூவரும் ‘போச்சு மாட்டுனோம்’ என ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். ஆனால் ஹர்ஷினி மட்டும் ராஜாவைப் பார்க்கவில்லை.
“அப்போ எல்லாரும் சேர்ந்து தான நாடகம் ஆடிருக்கீங்க. அவ தான் புரியாம பேசுறான்னா உங்களுக்கு கூடவா தெரியல. என்னைப் பத்தி தெரிஞ்சே நீங்க அவளுக்கு சப்போர்ட்டா இருந்துருக்கீங்க.” என பாட்டியையும் ஹர்ஷுவயும் கேட்க,
“என் அண்ணா நல்ல இருக்கனும்னு நான் நினைச்சது தப்பா. காலமுழுக்க இப்படியே தனியா வாழப்போறியா? இல்ல நீ இப்படி தனியா வாழும் போது என்னால மட்டும் என் புகுந்த வீட்டுல சந்தோசமா வாழ முடியுமா? உனக்கு ஏத்த ஜோடி மலர் தான் அண்ணா. அவளை மிஸ் பண்ணிராத.” என ஹர்ஷினி கூற ஆத்திரமடைந்த ரௌத்திரன்,
“என்ன ஹர்ஷு பேசுற நீ? நான் நல்ல வாழனும்னு அவ உயிரை அவ பணயம் வைக்கணுமா?” என கோபமும் வருத்தமும் ஒருசேர கேட்டான்.
“டேய் அவ சொல்றதுல என்ன டா தப்பு? ஏதோ சின்ன வயசுல தெரியாம நடந்ததை வச்சு இனிமேயும் அப்படி நடந்துரும்னு நினைக்குறது முட்டாள்தனம் டா.” என பாட்டி கூற,
“ஆமா மச்சான். தங்கச்சி உன்மேல உயிரையே வச்சுருக்கு. உண்மையான காதலை ஒதுக்கி வைக்காத டா.” என ராஜா கூற அதனைக் கேட்டு ஆத்திரமடைந்த ஹர்ஷுவோ, ‘ஊருக்கு தான் உபதேசம். நம்மளும் அத தானே பண்ணிருக்கோம்னு கொஞ்சம் கூட யோசிக்காம என் அண்ணனுக்கு அட்வைஸ் பண்ற மூஞ்ச பாரு’ என மனதில் நினைத்துவிட்டு அந்த கோபத்தில் தன் கையில் வைத்திருந்த சொம்பை வேண்டுமென்றே கீழே போட அது ராஜாவின் காலைப் பதம் பார்த்தது.
அவன் வழியில் கத்த ஹர்ஷுவோ ‘நல்ல அனுபவி’ என மனதில் நினைத்துவிட்டு, “கை நழுவி விழுந்துருச்சு சாரி.” என அவனைப் பார்க்காமல் கூற, ‘உன்ன பத்தி எனக்கு தெரியாதா ஹனி. நீ வேணும்னு தான் போட்டன்னு.’ என மனதில் நினைத்துவிட்டு ரௌத்திரனைப் பார்க்க அவனோ,
“டேய் ராஜா நீயுமா டா. உண்மை தெரியாம தான் அவளுக்கு சப்போர்ட் பண்ணேன்னு நினைச்சேன். இப்போவும் இப்படி சொல்ற”
“ஆமா டா. சரி இவ்ளோ பேசுறியே உன் மனசுல மலர் இல்லன்னு சொல்லு பாப்போம்.” என ராஜா கேட்க ரௌத்திரன் சற்றும் யோசிக்காமல்,
“என்ன டா முட்டாத்தனமா பேசுற. என் மனசுல ஏன் அவ இருக்கணும். யோசிக்காம பேசாத.”
“சரி அவ ஏன் உன் மனசுல இல்லன்னு காரணம் சொல்லு பார்ப்போம்.” என ராஜா கேட்க,
“இதுல என்னை காரணம் இருக்கு. எனக்கு அவளைப் பிடிக்கல அவ்ளோ தான்.” என ரௌத்திரன் எங்கோ பார்த்தபடி கூறினான்.
“ஓ அப்படியா. பிடிக்காம தான் அவளைப் பத்தி அக்கறை பட்டியா”
“அக்கறையா?” என ரௌத்திரன் புரியாமல் ராஜாவைப் பார்க்க,
“ஆமா டா. கொஞ்சம் நேரம் முன்னாடி ஹர்ஷு உனக்கு ஏத்த ஜோடி மலர் தான்னு சொல்லும் போது அவ உயிரை பணயம் வைக்கணுமான்னு அவளை பத்தி தான அக்கறைப்பட்ட. நிஜமா உனக்கு பிடிக்காம இருந்துருந்தா அந்த நேரம் எனக்கு பிடிக்காத பொண்ண எப்படி நான் ஏத்துக்க முடியும்னு தான நீ கேட்டுருக்கணும்.” ராஜா கூற அவனின் கேள்வியில் ரௌத்திரனுக்கு வார்த்தை வரவில்லை. பாவம் அவனுக்கே அதற்கு பதில் தெரியாத போது என்ன செய்வான் அவன்.
“என்ன டா பதில் சொல்லு?” என ராஜா கேட்க,
“டேய் அது ஒரு மனிதாபிமானம். என்னால ஒரு பொண்ணுக்கு ஆபத்து வர வாய்ப்பு இருக்குன்னு தெரிஞ்ச அப்புறம் எப்படி அதைப் பத்தி நினைக்காம இருக்க முடியும்.” என ரௌத்திரன் கூற,
“சரி அதை விடு. நான் இதை மட்டும் வச்சு சொல்லல. நான் கேட்குற கேள்விக்கு ஆமா இல்லன்னு மட்டும் தான் நீ சொல்லணும் சரியா.” என ராஜா கேட்க, ‘இவன் என்ன கேட்க போறானோ?’ என மனதில் நினைத்துவிட்டு சரி என்றான்.
“உனக்கு கோவில் போக பிடிக்குமா?” என ராஜா கேட்க இதை எதற்கு கேட்கிறான் என அறிந்த ரௌத்திரனோ,
“அது வந்து டா…” என விளக்கம் கொடுக்க வாயெடுக்க அவனைக் கைக்காட்டி தடுத்த ராஜாவோ,
“டேய் உன்கிட்ட விளக்கம் கேட்கல. ஆமா இல்லன்னு மட்டும் சொல்லு.” என ராஜா கூற அவனோ,
“பிடிக்காது.” என கூற,
“சரி செல்பீ எடுக்க பிடிக்குமா.” என ராஜா கேட்க, ‘ஐயோ இந்த குட்டி பிசாசு. எல்லாத்தையும் உளறி வச்சுருக்கு.’ என மனதில் மலரை அர்ச்சித்துவிட்டு,
“பிடிக்காது” என கூற,
“சரி பொண்ணுங்க கூட போட்டோ எடுக்க பிடிக்குமா.” என ராஜா கேட்க,
‘மவளே என்கிட்டே யார்கிட்டயும் காமிக்க மாட்டேன்னு சொல்லிட்டு. இவன் கிட்ட காமிச்சுருக்கா. இன்னும் என்னென்ன அக்கப்போர் பண்ணி வச்சுருக்காளோ’ என மனதில் நொந்தவன்,
‘பிடிக்காது’ என பல்லை கடித்துக்கொண்டு கூற,
“நக்கல் நய்யாண்டி எல்லாம் பேச பிடிக்குமா .. பேச வருமா முதல்ல.” என ராஜா கேட்க,
“பிடிக்காது வாராது.” என கடுப்பாக கூற,
“கோவில் போக பிடிக்காது. ஆனால் மலர் கூட போயிருக்க. போட்டோ எடுக்க பிடிக்காது. ஆனால் மலர்கூட சேர்ந்து செல்ஃபீ எடுத்திருக்க. நக்கல் பேச உனக்கு அறவே வராது. ஆனால் இப்போ பேசுற அதுவும் இங்க வந்த அப்புறம். மலரை சந்திச்ச அப்புறம் மட்டும் தான்.” என ராஜா கூறிக்கொண்டிருக்கும் போதே ரௌத்திரன் அவனைத் தடுத்து,
“டேய் டேய் நிறுத்துறியா. இதெல்லாம் வச்சு காதல்னு சொல்ல போறியா. எனக்கு அவகிட்ட இருந்து ஒரு சில பதில் தேவைப்பட்டுச்சு. அதை கேட்டதுக்கு நீங்க இதை பண்ணுங்க சொல்றேன். அதை பண்ணுனா தான் சொல்லுவேன்னு என்ன பிளாக் மெயில் பண்ணுனா. அதனால தான் பண்ணேன்.” என ரௌத்திரன் விளக்கம் கொடுக்க,
“டேய் டேய். எவ்ளோ பெரிய முக்கியமான விஷயமா இருந்தாலும் கூட அதை தெரிஞ்சுக்க நீ யார்கிட்டயும் போய் நிக்க மாட்ட. ஒன்னு நீயா கண்டுபிடிப்ப இல்ல அப்படி பட்ட விஷயம் தேவை இல்லன்னு உதறி தள்ளிட்டு போய்கிட்டே இருப்ப. இந்த உப்பு சப்பு இல்லாத விஷயத்துக்கு நீ கோவிலுக்கு போனியா.” என ராஜா கேட்க,
“டேய் நான் தான் சொல்றேன்ல ஏன் பண்ணேன்னு. நீயா அதுக்கு ஒரு அர்த்தம் புரிஞ்சுக்கிட்டா. அதுக்கு என்னால ஒன்னும் பண்ண முடியாது.” என கோபமாக கூற,
“சரி அத விடு. நக்கல் பேச காரணம்?”
“அது அன்னைக்கு கேஸ் பத்தி எவிடென்ஸ் கண்டுபிடிச்ச சந்தோஷத்துல இருந்தேன். என்னை அறியாம ஏதாவது வந்துருக்கும். இதுக்கு எப்படி மலர் காரணமாக முடியும்.”
“ஹாஹா டேய். நீ எனக்கு வேணா ஏதாவது சொல்லி என் வாயை அடைக்கலாம். ஆனா நான் கேட்ட கேள்விக்கு எல்லாம் உன்னோட மனசு கண்டிப்பா விடை தேடிட்டு தான் இருக்கும். அது உனக்கும் தெரியும். மச்சான் நான் ஒன்னு சொல்லவா. திடீர்னு நம்ம கிட்ட ஒரு சில விஷயத்துல மாற்றம் தெரிஞ்சுதுனா அந்த மாற்றத்துக்கு கண்டிப்பா யாரோ ஒருத்தங்க தான் காரணமா இருக்க முடியும். ஒன்னு அவங்கள ரொம்ப பிடிச்சதுனால அந்த மாற்றம் வந்துருக்கணும். இல்ல அவங்களால நம்ம ரொம்ப காயப்பட்டுருந்தா வந்துருக்கணும். எனக்கு தெரிஞ்சு மலர் உன்னைக் காயப்படுத்த வாய்ப்பு இல்ல. இதுக்கு மேல நீ தான் டா யோசிக்கணும். யோசி மச்சான்.” என ராஜா கூற ரௌத்திரனின் மனசாட்சியும் இக்கேள்விகள் எல்லாம் அவனிடம் கேட்டுக்கொண்டு தான் இருந்தது. ‘அதனை பிறகு யோசிப்போம்’ என ஒத்திவைத்தவன்,
“நீ எப்படி காதலைப் பத்தி இவ்ளோ விளக்கம் கொடுக்குற. அனுபவம் இருக்குதோ” என சந்தேகமாய் ரௌத்திரன் கேட்க, ‘ஆஹா ஓவரா பேசி மாட்டிகிட்டோமே. சமாளிப்போம்.” என மனதில் நினைத்துவிட்டு,
“எத்தனை படத்துல பாத்துருப்பேன். படத்தை எல்லாம் ரசிச்சு பார்த்தா இந்த மாதிரி விஷயம் எல்லாம் புரியும். உனக்கு எங்க புரிய போது.” என ராஜா சமாளிக்க,
“என்னவோ போ. ஆனால் ஒன்னு மட்டும் புரிஞ்சுக்கோ. எனக்கு காதல் இல்ல இல்ல இல்ல.” என அழுத்தம் திருத்தமாக கூற அப்பொழுது மலர் அங்கே வந்தாள். உள்ளே வந்தவளோ,
“ரெண்டு பெரும் வாங்க போலாம்.” என இறுக்கமான முகத்துடன் ரௌத்திரனையும் ராஜாவையும் அழைக்க இருவரும் ‘எங்க கூப்பிடுறா?’ என புரியாமல் பேந்த பேந்த முழித்தனர்.
மௌனம் தொடரும்…