Loading

மௌனம் 13

ரௌத்திரன் வீட்டில் இரண்டு அறைகளே இருப்பதால் ராஜா ரௌத்திரனின் அறையில் தான் தூங்க வந்தான். இருவரும் வெ்வேறு மனநிலையில் தூங்க ஆரம்பித்தனர். மூன்று மணியளவில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த ரௌத்திரனின் நினைவுகளில் கடந்தகால நினைவுகள் எழ தூக்கத்திலேயே,

“என்னை மன்னிச்சுருங்க மா. நான் தெரிஞ்சு பண்ணல. ஏதோ ஒரு கோவத்துல அப்படி பண்ணிட்டேன்.” என கண்ணீருடன் புலம்பியவாறு இருக்க திடீரென “அம்மா” என கத்திவிட்டு தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டான். இவன் கத்திய சத்தம் எதிர் வீட்டில் தன் அறையில் தூங்கி கொண்டிருந்த மலருக்கு கூட கேட்டுவிட்டது. சத்தத்தில் பதறி விழித்த ராஜா,

“டேய் மச்சான் என்னாச்சு?” என தண்ணீர் எடுத்து கொடுக்க ரௌத்திரனோ இன்னும் நினைவுகளில் இருந்து மீளாமல் இருந்தான். ரௌத்திரனின் தோளைக் குலுக்கி அழைத்த பின்னே நினைவு வந்தவன் தலையில் கை வைத்தபடி அமர்ந்தான்.

“மச்சான் என்ன டா ஆச்சு? எதுக்கு கத்துன?” என கேட்டுக கொண்டிருந்த சமயம் பாட்டியும் ஹர்ஷுவும் பதறி மேலே ஓடி வந்தனர்.

“அண்ணா என்னாச்சு?” என ஹர்ஷுவும், “என்ன ராசா ஆச்சு எதுக்கு கத்தின?” என பாட்டியும் பதறி போய் கேட்க,

இரண்டு நிமிடம் கழித்தே நிமிர்ந்து பார்த்தவன், “ஒண்ணுமில்ல ஏதோ கனவு.” என சோர்வாய் கூறிக்கொண்டிருக்க, யாரோ கதவு தட்டும் சத்தம் கேட்டது. ராஜாவோ,

“நான் போய் யாருன்னு பார்க்குறேன்.” என சென்று பார்க்க அங்கே மலர் தான் பதற்றத்துடன் நின்றிருந்தாள். தன்னவனின் குரல் சத்தமாக கேட்கவும் பதறி அடித்து ஓடி வந்திருக்கிறாள்.

“மலர் என்ன மா இந்த நேரத்துல?” என ராஜா மலரிடம் கேட்க,

“அண்ணா அவருக்கு என்னாச்சு? ஏன் அப்படி கத்துனாரு? யாருக்கும் ஏதும் இல்லல?” என மலர் படபடப்பாய் கேட்க,

“அங்க வர கேட்டுருச்சா. இல்ல மா ஏதோ கெட்ட கனவு கண்டு கத்திட்டான். வேற ஒண்ணுமில்ல. நீ இந்த நேரத்துல பதறி போய் வந்துருக்கன்னு தெரிஞ்சுதுனா அவனுக்கு சந்தேகம் வந்துரும். நீ போ மா. அண்ணா பாரத்துக்குறேன்.” என மலரை அனுப்பிவைக்க அவன் கூறுவதும் சரி என்று பட்டதால் அரைமனதுடன் கிளம்பினாள். அறைக்கு வந்த ராஜாவிடம் ரௌத்திரன்,

“யாரு கதவு தட்டுனாங்க?” என கேட்க ராஜாவோ,

“தெரில டா. யாரையும் காணும்” என சமாளிக்க யோசிக்கும் மனநிலையில் ரௌத்திரன் இல்லாததால் சரி என்றுவிட்டான். பிறகு,

“பாட்டி ஹர்ஷு ரெண்டு பெரும் போய் தூங்குங்க. எனக்கு ஒண்ணுமில்ல.” என கூறி அனுப்பி வைக்க இருவரும் கீழே சென்றுவிட்டனர்.

“மச்சான் நிஜமா ஏதும் இல்லல. கனவு தானே.” என ராஜா கேட்க,

“ஆமா டா. வேறென்ன. நீ தூங்கு. எனக்கு தூக்கம் வரல. நான் சும்மா மொட்டைமாடி போய்ட்டு கொஞ்சம் நேரத்துல எக்ஸர்சைஸ் பண்ண ஆரம்பிச்சுடுவேன்.” என கூறிவிட்டு மொட்டைமாடிக்கு வந்துவிட்டான்.

‘அம்மா… அம்மான்னு கூப்பிட கூட எனக்கு தகுதி இல்லன்னு எனக்கு தெரியும். ஆனால் அந்த நேரம் நான் என்ன பண்ணேன்னு கூட எனக்கு தெரியல. கவலைப்படாதீங்க. எனக்கு இருக்குற கடமையை முடிச்சுட்டு நானும் உங்க கூடவே வந்துருவேன். அது தான் நான் செஞ்ச தப்புக்கான பிராயச்சித்தம்.’ என தனக்குள்ளே வானத்தைப் பார்த்து கண்ணீருடன் பேசியவன் அவ்வாறே வெறித்தபடி நின்றுவிட்டான். இந்த நினைவுகள் எப்பொழுதாவது இது போன்று அடிக்கடி வந்து செல்லும். அதனை நினைத்து ரௌத்திரன் கண்ணீர் வடிப்பதும் வாடிக்கையே. என்ன நேர்ந்தது. ஏன் ரௌத்திரன் இவ்வாறு மருகுகிறான். போக போக புரியும்.

அங்கே மலரோ ரௌத்திரன் கத்தியதையே நினைத்துக் கொண்டிருந்தாள்.

‘தீராக்கு என்னாச்சு. இவ்ளோ சத்தமா கத்துற அளவுக்கு அப்படி என்ன கனவு வந்துருக்கும்? அவரைப் பத்தின விஷயம் நமக்கு இன்னும் புதிராவே தான் இருக்கு.’ என சிந்தித்து கொண்டே இருந்தவளுக்கு உறக்கம் வர மறுத்தது. அப்படி இப்படி என விடியலும் விடிந்தது. அவசரமாக தன்னவனைக் காண வேண்டும் என மனதில் தோன்ற அங்கே சென்றாள். ஓரளவு சகஜமாகியிருந்த ரௌத்திரனோ மலரைக கண்டு, ‘இவ என்ன காலங்காத்தாலயே வந்துருக்கா?’ என ரௌத்திரன் முழிக்க, அவளோ,

‘ஆஹா ஒரு வேகத்தில கிளம்பி வந்துட்டோம். இப்போ என்ன சொல்லி சமாளிக்க. சரி சமாளிப்போம்’ என யோசிக்க,

“எதுக்கு அப்படி பார்க்குறீங்க?” என மலர் கேட்க அவனோ, ‘இவ கிட்ட கேட்டா ஏதாவது கடுப்பேத்துற மாதிரி பேசுவா.’ என நினைத்துவிட்டு,

“ஒன்னுமில்ல.” என கூறிக்கொண்டு நழுவ பார்த்தான்

“மிஸ்டர் ஈபிள் டவர். ஒரு நிமிஷம்” என அவள் அழைக்க அவனோ என்ன என்பது போல் பார்க்க,

“நேத்து ஒரு நாள் சரி முக்கியமா ஏதோ பேசறீங்கன்னு விட்டுட்டேன். அதுக்காக எல்லா நேரமும் விட முடியாது. சொல்ல வேண்டியதை சொல்லிட்டு கிளம்பலாம்.” என தெனாவெ ட்டாய் மலர் கேட்க,

“ஹே என்ன நீ? பாரக்கும் போதெல்லாம் சொல்லிட்டே இருக்கணுமா அதுக்காக. என்னால முடியாது.” என அவனும் திமிராக கூற, அப்பொழுது தான் ராஜா அங்கு வர மலரோ,

“அண்ணா இங்க வாங்க.” என ராஜாவை அழைத்தாள்.

“சொல்லு தங்கச்சி” என அவனும் வர,

“நான் ஒரு போட்டோ காமிக்குறேன். எப்படி இருக்குன்னு சொல்லுங்க” என அவனிடம் காண்பிக்க போக ரௌத்திரனோ, ‘இம்சை டா’ என மனதில் நினைத்துவிட்டு,

“சயா சிந்தா அவா” என பல்லைக கடித்துவிட்டு கூறி ராஜாவை இழுத்து கொண்டு ஜாக்கிங் சென்றுவிட்டான்.

செல்லும் அவனையே காதலாக மெய்மறந்து பார்த்துக் கொண்டிருந்தாள் மலர். இவ்வாறு இவளின் சீண்டலும் அவனின் கோபமும் மாறிமாறி அரங்கேறியது.

அவ்வாறே ஒரு வாரம் கடந்திருக்கும் நிலையில் ரௌத்திரன் எதிர்ப்பார்த்த அந்த பெண்கள் கடத்தும் விஷயம் பற்றிய எவிடேன்ஸ் கிடைத்தது. மினிஸ்டரை கையும் களவுமாக பிடிக்க மலரை சாட்சி கூற வைப்பதே ஒரே வழியாக இருக்க வேறு வழியின்றி ரௌத்திரன் ஒப்புக்கொண்டான். மலர் கூறிய யோசனைபபடி ராஜாவும் மதுரை கமிஷனர் ராஜசேகரை சந்தித்து அனைத்தையும் கூறி அர்ரெஸ்ட் வாரண்ட் வாங்கியிருந்தான். ரௌத்திரனும் அசோக்கின் கேஸை சாட்சி கிடைத்ததாக சொல்லி மறுபடியும் ரீஓப்பன் செய்தான். இரண்டு நாட்களில் கோர்ட்டில் கேஸ் பற்றிய விசாரணை நடத்தப்படும் என அறிவிப்பு வர அதனை ரௌத்திரன் மலரிடம் கூறியிருந்தான்.

மலரோ தன் வீட்டில் நடந்தவற்றைக் கூறி தான் சாட்சி சொல்ல போவதாக கூற சுப்புவும் வெங்கடேசனும் பயந்து விட்டனர். அவர்கள் பயப்படுகிறார்கள் என அறிந்த மலரோ ரௌத்திரனிடம்,

“மிஸ்டர் ரௌத்திரன். எங்க வீட்டுல வந்து பேசுங்க.” என மலர் மொட்டையாக கூற அவனோ முழிக்க அப்பொழுது தான் அதில் பெண் கேட்க வர சொல்கின்ற அர்த்தமும் உள்ளது என சிந்தித்தவளோ சிரிப்பை அடக்கி கொண்டு,

“ஹலோ உங்களை ஏதோ பொண்ணு கேட்க வர சொல்ற மாதிரி முழிக்குறீங்க. கோர்ட்க்கு நான் சாட்சி சொல்றத நினைச்சு வீட்டுல பயப்படுறாங்க. நீங்க வந்து பேசுங்க” என மலர் கூற அவனோ, ‘உனக்கு வாய் கொழுப்பு ஜாஸ்தி’ என நினைத்து விட்டு,

“சரி வா. சொல்றேன்.” என இறுக்கமாக முகத்தை வைத்துக்கொண்டு மலர் வீட்டிற்கு செல்கிறான் ஆவலோடு.

மலர் ரௌத்திரனை விரும்புவதாக எப்பொழுது கூறினாளோ அப்பொழுதே அவனை மாப்பிள்ளை என மனதில் நினைத்த வெங்கடேசன் உணர்ச்சிவசப்பட்டு,

“வாங்க மாப்பிளை.” என்று விட ரௌத்திரன் கேள்வியாய் பார்த்தான். மலரோ, ‘ஐயோ அப்பா சொதப்பிட்டிங்களே’ என வெங்கடேசனைப் பார்க்க அப்பொழுது அவருக்கு தான் கூறியது புரிய,

“அட தம்பி நீங்களா. சாரி தம்பி. என்னோட பொண்டாட்டியோட தம்பியும் கிட்ட தட்ட உங்களை மாதிரி தான் இருப்பான். உங்களை பாரத்த அன்னைக்கே சுப்பு சொன்னா அந்த தம்பியைப் பார்க்க என் தம்பி மாதிரியே இருக்குன்னு. அவன் தான் வந்துருக்கானோன்னு நினைச்சு டக்குன்னு அப்படி கூப்பிட்டுட்டேன்.” என வெங்கடேசன் சமாளிக்க, அவனும் கேஸ் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்ததனால் இதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. உள்ளே வந்து அமர்ந்தவனோ,

“சார். ஏற்கனவே மலர் சொல்லியிருப்பான்னு நினைக்கிறேன். இது ஒரு உதவியா கேக்குறேன் உங்க கிட்ட. உங்க பொண்ண நானே கூட்டிட்டு போய் நானே கூட்டிட்டு வந்து விடுறேன். பயப்படமா என்னை நம்பி அனுப்பிவைங்க. அப்படி என் மேல நம்பிக்கை இல்லனா நீங்களும் கூட வாங்க.” என ரௌத்திரன் கூற,

“ஐயோ அப்படி எல்லாம் இல்ல தம்பி. உங்க மேல நம்பிக்கை இல்லாம சொல்லல. ஒரே பொண்ணு எங்களுக்கு மலர். இதனால ஏதாவது பிரச்சனை வந்துருமோன்னு தான் பயந்தேன். நீங்க தான் அவ கூட இருக்கீங்கல. சரிங்க தம்பி. என் பொண்ணால ஒரு நல்லது நடந்தா எனக்கு சந்தோசம் தான்.” என வெங்கடேசனும் சுப்புவும் சம்மதம் தெரிவிக்க ரௌத்திரனும் நன்றி கூறி வெளியே வந்தான். மலரோ,

“மிஸ்டர் ஈபிள் டவர்.” என்றழைக்க அவள் எதற்காக அழைக்கிறாள் என்று அறிந்தவனோ,

“சயா சிந்தா அவா. அது தானே. சொல்லிட்டேன் போதுமா. ஆள விடு” என கடுப்பாக கூறினான். ஆம் இப்பொழுதெல்லாம் ரௌத்திரனுக்கு இது பழகிவிட்டது. அவளின் தைரியமும் நற்குணமும் அவனிற்கு அவளின் மேல் மரியாதை தோற்றுவித்தது. அதனால் அவளின் சேட்டைகளை பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

மலருக்கோ தன்னவனுடன் மதுரை செல்ல போகிறோம் என்ற நினைப்பே புது உற்சாகத்தை ஏற்படுத்தியது. எல்லாம் நல்லபடியாக போய்கொண்டிருக்கிறதே என்று விதி நினைத்தது போலும். அவ்வாறே பிரச்சனை இல்லாமல் எல்லாம் முடிந்ததுவிட்டால் விதிக்கு என்ன வேலை. விதி சதி செய்ய ஆரம்பித்து. இடைப்பட்ட இந்த இரண்டு நாட்களில் நடக்க போகும் விபரீதம் தெரியாமல் தன்னவனின் நினைவுகளில் பறந்து கொண்டிருந்தாள் மலர்.

அசோக்கின் வழக்கு பற்றிய விசாரணை
நீதிமன்றத்தில் நடக்க இன்னும் இரண்டு நாட்கள் இருக்கும் பட்சத்தில் ராஜசேகரை பார்த்து அர்ரெஸ்ட் வாரண்ட் வாங்க சென்றிருந்த ராஜா மீண்டும் திருநெல்வேலி வந்தான்.
ரௌத்திரன், ராஜா, மலர் மூவரும் ரௌத்திரன் அறையில் கேஸ் பற்றி பேசிக்
கொண்டிருந்தனர்.

“மச்சான் சொன்ன மாதிரி எல்லாம் பக்காவா போய்ட்டு இருக்கு டா.” என ராஜா கூற,

“ஆமா டா. எல்லாம் சரியா வரும்னு நினைக்குறேன்.” என ரௌத்திரன் கூற,

“அட என்ன மிஸ்டர் ஈபிள் டவர். நினைக்குறேன் நனையுறேன்னு சொல்லிகிட்டு நம்பிக்கையோட இருங்க. இந்த மலரை நம்பினோர் கைவிடப்படார்.” என மலர் கூற,

‘ஏதோ இந்த கேஸ்க்கு இவ தான் தீர்ப்பு சொல்ற மாதிரி ரொம்ப தான் பண்றா.’ என மனதில் ரௌத்திரன் நினைக்க அதனை யூகித்த மலரோ,

“ஓவரா பண்றேன்னு எனக்கே தெரியுது. என்ன பண்ண மிஸ்டர் ரௌத்திரன். எனக்கும் பெருமையா இருக்குதே. அதான் இப்படி” என அவன் கூறாமலே அவன் மனதில் நினைத்ததை மலர் கூற ரௌத்திரனும் ராஜாவும் ஆச்சர்யமாக பார்த்தனர். அவ்வாறு அவர்கள் பேசிக்கொண்டிருக்க, ரௌத்திரனின் அலைபேசி அலற, ராஜாவோ யாரென கேட்டான்.

“மலேசியால இருந்து என் ஃபிரண்ட் கால் பண்ணிருக்கான். நான் மொட்டைமாடில போய் பேசிட்டு வறேன்.” என கூறிவிட்டு ரௌத்திரன் மாடிக்கு செல்ல, ராஜாவும் மலரும் கீழே வந்து பாட்டியுடன் பேசிக் கொண்டிருந்தனர். மாடி வந்த ரௌத்திரன் அலைபேசியில்,

“ஹாய் டா. எப்படி இருக்க?” என்றான் உற்சாகமாய்.

“நான் நல்லா இருக்கேன் டா. நீ எப்படி இருக்க?” என அவன் நண்பன் கேட்க அவ்வாறே பொதுவாக இருவரும் பேசினர்.

“அப்புறம் டா. மலேசியால ஒர்க் எல்லாம் எப்படி போகுது.” என ரௌத்திரன் கேட்க,

“அதை ஏன் டா கேட்குற. வந்து கொஞ்ச நாளுக்கு மலாய் மொழிய கத்துக்கவே நிறைய பாடு பட்டுட்டேன். இப்போ தான் டா ஓரளவு மலாய்ல பேச ஆரம்பிச்சுருக்கேன்.” என கூறவும் சட்டென ரௌத்திரனுக்கு மலர் கூற சொல்லும் “சயா சிந்தா அவா” ஞாபகம் வர,

“டேய் அப்போ உனக்கு மலாய் தெரியுமா?” என்றான்.

“ஆமா டா. ஏன்?”

“அப்போ நான் ஒன்னு கேட்கேன் அதுக்கு அர்த்தம் சொல்லு” என ரௌத்திரன் கேட்க,

“கேளு மச்சான்”

“சயா சிந்தா அவா னா என்ன டா அர்த்தம்” என ரௌத்திரன் கேட்க அதனைக் கேட்ட நண்பனோ,

“டேய் மச்சான். நீயா டா இதை கேட்குற? காலேஜ்ல பொண்ணுங்க கிட்ட பேச கூட மாட்ட. இப்போ ப்ரபோஸ் பண்றதுக்கு ஐடியா கேட்குற, வாழ்த்துக்கள் டா யார் அந்த லக்கி கேர்ள்” என மகிழ்ச்சியாய் கேட்டான்.

“டேய் என்ன சொல்ற. ப்ரொபோஸா?தெளிவா சொல்லு.”

“அடேய் ரௌத்திரா சயா சிந்தா அவா னா ஐ லவ் யூன்னு அர்த்தம்” என அவன் நண்பன் கூற அதனைக் கேட்டவனுக்கோ மலரின் மேல் கட்டுக்கடங்காமல் கோபம் வர அழைப்பைத் துண்டித்தவன்,

‘அவ மனசுல என்ன நினைச்சுட்டு இருக்கா’ என நேராக ஆவேசத்துடன் மலரைத் தேடி கீழே வந்தான். அவளோ பாட்டியுடன் சிரித்து பேசிக் கொண்டிருக்க அவளை இழுத்து பளாரென அவளின் கன்னத்தில் அறைந்தான். அதிர்ச்சியில் அனைவரும் உறைந்து போய் நின்றனர். வலியில் தன் கன்னத்தை கையில் தாங்கிய படி கண்ணீருடன் மலர் ரௌத்திரனை பார்க்க அவன் கண்களில் கோபக்கனல் சுடர் விட்டு எரிந்தது.

“டேய் ரௌத்திரா. இப்போ எதுக்கு அந்த புள்ளைய அடிச்ச?” என பாட்டி கோபமாய் கேட்க கை நீட்டி தடுத்தவனோ,

“இங்க பாருங்க. யாராவது வாயை திறந்தீங்க. நான் மனுசனாவே இருக்க மாட்டேன்.” என மற்றவர்களிடம் எச்சரித்தவன் மலரிடம் திரும்பி,

“என்ன நினைச்சுட்டு இருக்குற உன் மனசுல. நானும் சரி ஏதோ விளையாட்டு தனமா இருக்கன்னு நீ பண்ற சேட்டையெல்லாம் பொறுத்து போனா. ரொம்ப ஆடுற.” என ரௌத்திரன் பாட்டுக்கு மலரைத் திட்ட அனைவரும் எதற்கு திட்டுகிறான் என புரியாமல் முழித்துக் கொண்டிருந்தனர்.

“எதுக்கு என்னை அடிச்சிங்க?” என தன் கன்னத்தில் இருந்து கையை எடுத்து கண்களில் வழியும் கண்ணீரை துடைத்துவிட்டு அவனை திமிராக எதிர் கொண்டு மலர் கேட்க அவனோ கடுமையான கோபத்துடன்,

“சயா சிந்தா அவா னா என்ன அர்த்தம்?” என புருவம் இடுங்க கேட்க அவன் கேட்ட கேள்வியில் அனைவரும் அதிர்ச்சியாக மலருக்கே பயத்தில் வார்த்தை வரவில்லை.

“சொல்லுன்னு சொன்னேன்” என அவளின் கையைப் பிடித்து இறுக்கினான். அவன் பிடித்த பிடியிலே அவன் கோபம் தெரிந்தது.

“அது… அது.. ஐ.. லவ்.. யூன்னு அர்த்” என மலர் கூற மீண்டும் அவளை அறைய கை ஓங்கியவன் அவள் மிரண்டதில் ஓங்கிய கையைத் தளர்த்தினான். விரல்களை மடக்கி தன் தாடையில் குத்தியபடி தன் கோபத்தை கடினப்பட்டு கட்டுப்படுத்தியவன்,

“இங்க பாரு ஏதோ விளையாட்டுக்கு பண்ணதுனால ஒரு அறையோட விட்டேன். இனிமே இந்த மாதிரி ஏதாவது பண்ணிட்டு இருந்த அப்புறம் இந்த ரௌத்திரனை வேற மாதிரி தான் நீ பார்க்கணும் சொல்லிட்டேன். கெட் அவுட் ஆஃப் மை ஹௌஸ்” என கர்ஜிக்கும் சிங்கம் கூட தோற்றுவிடும் அளவிற்கு கத்திவிட்டு அவன் அறைக்கு செல்ல போக, உள்ளே பயம் இருந்தாலும் அதனை மறைத்த மலரோ,

“ஒரு நிமிஷம் நில்லுங்க.” என்றாள். அவனோ அதே கோப கண்களால் அவளின் முகம் நோக்க,

“மன்னிச்சுறுங்க. நீங்க தப்பா புரிஞ்சுருக்கிங்க.” என்றிட எதுவும் கூறாமல் படிகளில் ஏற எத்தனித்தவன்,

“நான் விளையாட்டுக்கு சொன்னேன்னு யார் சொன்னா. நான் நிஜமாவே உங்களைக் காதலிக்குறேன். உயிருக்குரியிரா காதலிக்குறேன்.” என்றதில் அவனின் கோபம் மேலும் பெருகியது. மீண்டும் கோபத்தில் அறைய வந்தவனின் கைகளைத் தடுத்து மலர் பிடிக்க,

“நான் சொல்ல வரத சொல்லி முடிச்சுக்குறேன். அதுக்கு அப்புறம் எவ்ளோனாலும் அடிச்சுக்கோங்க. இங்க பாருங்க எப்போதும் விளையாட்டா இருக்குறவ இந்த விஷயத்துலயும் விளையாட்டா இருந்துருவான்னு மட்டும் நினைச்சுறாதிங்க. நான் ரொம்ப தெளிவா சொல்றேன். நான் உங்களை காதலிக்குறேன்.” என அவள் கூற அவனோ கட்டுக்கடங்காமல் வரும் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தன் தலையை அழுந்த கோதிவிட்டு தன்னை நிதானப்படுத்தியவன்,

“இங்க பாரு. நான் பொறுமையா சொல்றேன். இன்னொரு தடவை இந்த காதல் கத்திரிக்காய்னு சொல்லிட்டு என் பின்னாடி வந்துராத. நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது. ஒழுங்கா போயிரு.” என காட்டமாய் கூற,

“நீங்க அடிச்சே கொன்னாலும் கூட அதைப் பத்தி எனக்கு கவலை இல்லை. நான் உங்க காதலிக்குறேன் காதலிக்குறேன் காதலிக்குறேன்.” என அழுத்தமாய் கூற,

“ஏய் ஒருதடவை சொன்னா உனக்கு புரியாதா. வீணா என்னோட கோபத்துக்கு ஆளாகாத. என் மூஞ்சிலேயே முழிக்காம போ” என கூறிவிட்டு அவன் படியில் ஏற போக,

“எனக்கு உங்க கிட்ட புடிச்சதே அந்த கோபம் தான்.” என மலர் கூற அவனோ தன் ஒட்டுமொத்த கோபத்தையும் சுவற்றில் காட்ட அவன் குத்திய குத்தில் சுவற்றில் இருந்து சிறுபாகம் உடைந்து கீழே விழுந்தது. பிறகு மீண்டும் அவளிடம் திரும்பியவன்,

“இங்க பாரு. இனிமே நீ இங்க வர கூடாது.
என் கண்ணுலயே படக் கூடாது சொல்லிட்டேன்.” என கோபமாய் கூற அவளோ,

“ஏன் என்னை பார்த்தா உங்களை அறியாமலே காதல் வந்துரும்னு பயமா?” என தென்னாவெட்டாக கேட்க அவள் மேலும் மேலும் பேசுவதை பார்த்து பாட்டி, ஹர்ஷினி மற்றும் ராஜாவுக்கு தான் பதட்டமாக இருந்தது.

“வேணாம். நான் எல்லா நேரமும் ஒரே மாதிரி இருக்க மாட்டேன். என் கோபத்தைக் கிளராத.” என ரௌத்திரன் பல்லை கடித்துக்கொண்டு கூற,

“சும்மா கோபம் கோபம்னு கத்தாதீங்க. மனுஷன்னா எல்லார்க்கும் கோபங்குறது வர விஷயம் தான். உங்க கோபம் அப்படி என்னை என்ன பண்ணிரும். இப்படி எல்லார்கிட்டையும் விலகி இருந்து என்னத்த சாதிச்சுங்க. அப்படியே கோபத்துல கொலையா பண்ணிற போறீங்க.” என மலர் ஆதங்கத்தில் கேட்க அவனோ அவள் கூறிய கடைசி வார்த்தையில் ருத்ரமூர்த்தியாய் மாறி இருந்தான்.

“என்ன சொன்ன… என்ன சொன்ன கொலை பண்ணிருவனான்னு கேட்டல… ஆமா கொலை தான் கோபத்துல கொலை தான் பண்ணிட்டேன். ஏற்கனவே என் கோபத்தால ஒரு உயிரை கொன்னுட்டேன் போதுமா. அதுவும் எங்கம்மாவை நானே கொன்னுட்டேன் போதுமா.” என அவன் கத்திய கத்தலில் மலரும் ராஜாவும் ஸ்தம்பித்து போய் நின்றனர். ஹாஷுவுக்கும் பாட்டிக்கும் ஏற்கனவே அந்த விஷயம் தெரியும் என்பதால் இருவராலும் கண்ணீர் வடிக்க மட்டுமே முடிந்தது.

“எங்க அம்மாவை நானே கொன்னுட்டேன். என்னோட கோபத்துனால நானே எங்கம்மாவை கொன்னுட்டேன். எந்த மகனும் செய்ய கூடாத பாவத்தை நான் செஞ்சுட்டேன்.” என கூறியதையே திரும்ப திரும்ப கூறியவாறே தரையில் அமர்ந்து கதறியவன் சட்டென எழுந்து,

“இங்க பாரு. உயிர் மேல பயம் இருந்துச்சுனா இனிமே என் முன்னாடி நிக்காத. போய்டு போய்டுடுடு…..” என கத்திவிட்டு அழுதுக்கொண்டே மாடிக்கு சென்றுவிட்டான்.

அவன் கூறியதை எல்லாம் புரிந்துகொள்ளவே மலருக்கு நேரம் எடுத்தது. அவளின் செவிகளில் மாறிமாறி அவன் கூறிய வார்த்தைகளே ஒலித்துக் கொண்டிருந்தது. தன்னவன் தன்னை அடித்த வலியை விட தன்னவன் அழுவது தான் மலருக்கு அதிகம் வலித்தது. அவளின் எண்ணங்களில் பல கேள்விகள் வரிசையாக ஓட துவங்கின.

‘என் தீராக்கு என்னாச்சு? என் தீரா எப்படி அவரோட அம்மாவை கொல்லுவாரு? அதுவும் கோபத்துனால. என் தீரா அவ்ளோ மோசமனவரா. இல்ல இல்ல. என்னால அப்படி நினைக்க முடியல.’ என தனக்குள்ளேயே கேள்வி கேட்டு அவ்வாறே கீழே அமர்ந்தாள். எவ்வளவு நேரம் கடந்ததோ தெரியவில்லை. பின்பு எழுந்து ரௌத்திரனின் அறைக்கு செல்ல போனவளை,

“வேணாம் மா. போகாத. இப்போ வேணாம்” என பாட்டி அழுதவாறே கூற அவளோ விரக்தியாய் பார்த்துவிட்டு மீண்டும் செல்ல போக பின் பயந்து பாட்டி, ஹர்ஷு, ராஜா மூவரும் அவள் பின்னே சென்றனர்.

அறையில் ரௌத்திரனோ கைகளில் கிடைத்ததை எல்லாம் தூக்கி போட்டு உடைத்திருந்தான். அறையே கந்தல் கோலமாய் காட்சி அளித்தது. அறையில் நுழைந்த மலரோ சுற்றிமுற்றி அவனை தேட அவனோ ஓர் மூலையில் தன் கையில் தன் அன்னையின் படம் ஒன்றை வைத்து அதனையே வெறித்தபடி அமர்ந்திருந்தான். ஓரளவு கோபங்கள் மட்டுப்பட்டு நிதானமாகியிருந்தான். ஆனால் மனம் முழுதும் வலியுடன் கண்கள் அழுது அழுது சிவந்து காணப்பட்டது.

அவனின் அருகே வந்த மலர் அவனின் அருகில் தரையில் அமர்ந்தாள். மலர் தான் வந்திருக்கிறாள் என ரௌத்திரனும் அறிவான். அவளோ,

“தீரா” என அழைக்க அந்த அழைப்பில் என்ன உணர்ந்தானோ தெரியவில்லை. ஆனால் மனதிற்கு இதமாக உணர்ந்தான். அவள் மீண்டும் அழைக்க அவளை சோர்வுடன் பார்த்தான்.

“எனக்கு உங்க கடந்த காலத்துல என்ன நடந்துச்சுன்னு தெரியனும். ப்ளீஸ் தீரா” என மலர் கெஞ்சலாக கேட்க ஏனோ இதுவரை யாரிடமும் சொல்லாத தன் கடந்த காலத்தை இவளிடம் கூறு என மனம் சொல்ல உடைந்து தனது குரலால் மெல்ல கூற ஆரம்பித்தான் அவளின் தீரன்.

மௌனம் எரியும்…

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
8
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்