மௌனம் 11
ஒரு மாதத்திற்கு முன்பு,
அன்று காலை மதுரை வந்து இறங்கிய மலரை அழைத்து செல்ல அவளின் சிறு வயது தோழி லதா வந்திருந்தாள்.
“ஹே மச்சி எப்படி இருக்க?” என்றவாறு மலர் லதாவை அணைத்துக் கொள்ள,
“போடி உன்மேல கோவமா இருக்கேன்.” என லதா முகத்தை திருப்பிக் கொண்டாள்.
“ஹே சாரி டி உன் பிறந்த நாள் அன்னைக்கு தான் வரணும்னு நினைச்சேன். ஆனால் முடியாம போச்சு டி. அதான் இப்போ வந்துட்டேன்ல.” என அவள் சமாதானம் கூற,
“சரி சரி பொழச்சு போ. வா வீட்டுக்கு போலாம்.” என வீட்டிற்கு அழைத்து சென்றாள் லதா. வீட்டில் அனைவரும் நலம் விசாரிக்க இவளும் விசாரிக்க பிறகு சிறிது நேரம் கழித்து இருவரும் லதாவின் அறைக்கு வந்தனர்.
“ஹே லதா நான் பிரெஷ் ஆயிட்டு வரேன் கடைக்கு போகலாம்.” என்றவள் குளிக்க செல்ல, பின் இருவரும் கிளம்பி வெளியே சென்றனர். அங்கே ஒருவன் ஒரு பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்துக்கொண்டு காரினுள் தள்ள முயற்சி செய்துக் கொண்டிருந்தான். அப்பெண்ணோ யாராவது தன்னைக் காப்பாற்ற மாட்டார்களா என கதறிக் கொண்டு அவனிடம் இருந்து தப்பிக்க போராடிக் கொண்டிருந்தாள். அதனைக் கண்ட மலருக்கோ கோபம் வர,
“ஹே என்ன டி இப்படி பண்றான் அவன். யாரும் ஏதும் கேட்காம இருக்கீங்க. அவனை..” என அருகில் செல்லப்போனவளை இழுத்து வந்து மறைவாக நிற்க வைத்தவள்,
“சும்மா இரு டி நீ வேற. அவன் மினிஸ்டர் பையன்.” என லதா கூற அதனைக் கேட்டு ஆத்திரமடைந்த மலரோ,
“ஹே என்ன டி பேசுற நீ? அவளும் நம்மள மாதிரி ஒரு பொண்ணு தான. இப்படி மனசாட்சி இல்லாம பேசுற. மினிஸ்டர் பையன்னா பெரிய இவனா.” என மலர் கோபத்தில் கொதிக்க,
“இந்த மதுரை ஜில்லாவே அந்த நாசமாப்போன மினிஸ்டரோட கண்ட்ரோல்ல இருக்கு. அவனை மீறி நம்ம ஏதாவது பண்ணா நாளைக்கு எனக்கும் இந்த நிலைமை தான் பரவாயில்லையா” என அவள் லதா கூற மலரால் எதுவும் பேச முடியவில்லை.
“அப்போ இதுக்கு வேற சொல்யூஷனே இல்லையா.” என மலர் கேட்க,
“எல்லாம் விதி. விடு டி. பக்கத்துல தான் போலீஸ் ஸ்டேஷன் இருக்கு. அங்க இருந்து போலீஸ் வரதுக்குள்ள நம்ம கிளம்பிருவோம். அப்புறம் எவிடென்ஸ்க்கு கூப்பிடுவாங்க.” என லதா கூற,
“அட்லீஸ்ட் போலீசுக்கு கால் பண்ணியாவது சொல்லிட்டு போலாம் டி. பாவம் அந்த பொண்ணு.” என மலர் கூற லதாவும் சரி என்றாள். மலர் அருகில் இருந்த பிசிஓ வில் இருந்து கால் செய்ய ரௌத்திரன் அழைப்பை ஏற்று, “எஸ் ரௌத்திரன் ஸ்பீக்கிங்” என கூற வருகையில் அவனை பேச விடாமல் மலரோ,
“சார் இங்க ஒருத்தன் ஒரு பொண்ணை நடுரோட்டுல கையப் பிடிச்சு இழுத்து வம்பு பண்ணிட்டு இருக்கான். சீக்கிரம் வாங்க” என விலாசத்தை கடகடவென கூறித் துண்டித்துவிட, பின் லதாவும் மலரும் வீட்டிற்கு கிளம்பிவிட்டனர். இரண்டு நிமிடத்தில் புயலென ரௌத்திரன் சம்பவ இடத்திற்கு வந்தான். நடந்து கொண்டிருக்கும் சம்பவத்தைப் பார்த்தவனுக்கோ கண்கள் சிவந்தன கோபத்தில். கீழே கிடந்த அந்த பெண்ணின் துப்பட்டாவை எடுத்து அவளின் மேல் போர்த்தியவன், அவளை பிடித்திருந்த அவனின் கையை இறுக்கி பிடிக்க வலியில் அப்பெண்ணின் கையை விட்டான்.
“யோவ் போலீசு நான் யாருன்னு தெரியாம இதெல்லாம் பண்ணிட்டு இருக்க.” என அவன் அலறியவாறு கூற,
“பேரு அசோக். மினிஸ்டர் மருதநாயகத்தோட சீமைப்புத்திரன். வேறென்ன டா தெரியணும். உன்னை தான் சிக்குவியான்னு எதிர்பாத்து காத்துட்டு இருந்தேன். சிக்கிட்ட” என அவனின் கையை இன்னும் இறுக்க,
“டேய் நான் ஒரு வார்த்தை சொன்னா உன்னை தண்ணி இல்லாத காட்டுக்கு மாத்திருவங்க பார்க்குறியா” என அவன் கூற ரௌத்திரனோ அவனை அடுத்த வார்த்தை பேச விடாதபடி தன் கை விரல்களை இறுக்கி மடக்கி அவன் வாயிலே ஓர் குத்து குத்தி,
“சொல்ல வாய் இருந்தா தான டா.” என கூறிக்கொண்டே அவனை வெளுத்துக் கொண்டிருந்தான்.
“டேய் உன்னால மிஞ்சி மிஞ்சி போனா என்னை ஒரு நாள் தூக்கி உள்ள வைக்க முடியும் அவ்ளோ தான். நீ யாரு கிட்ட சாட்சி கேட்டாலும் சொல்ல ஒரு பையன் வர மாட்டான்.” என அவன் கூற,
“அடிச்சாலும் உன் வாய் மூடாதா.” என கேட்டு இன்னும் இரண்டடி கொடுத்தவன் அவனை முட்டி போடா வைத்து கைகளை மடக்கி பிடித்தவன் சுற்றி நின்று வேடிக்கைப் பார்த்த மக்களிடம்,
“நீங்க எல்லாரும் இப்படி வேடிக்கை மட்டும் பார்க்குறதுனால தான் இப்படி கண்ட கண்ட நாயெல்லாம் கண்டபடி ஆடிட்டு இருக்கு. உங்கள்ள யாராவது முன்னாடி வந்து சாட்சி சொன்னா தான் இந்த மாதிரி முள்ளமாரிகளை முளையிலேயே கிள்ளி எறிய முடியும். கண்டிப்பா இங்க இருக்குறதுல நிறைய பேர் பார்த்துருப்பீங்க. ஆனால் யாருக்கும் முன்னாடி வந்து சொல்ல தைரியம் இல்ல. நாளைக்கு உங்க வீட்டு பொண்ணுக்கு இப்படி நடந்தாலும் இப்படி தான் வேடிக்கை பார்ப்பீங்களா” என இவன் அனல் கக்க கேட்க மக்கள் தலைக் குனிந்து நின்றனரே தவிர்த்து யாரும் சாட்சி கூற முன்வரவில்லை. உடனிருந்த ராஜாவோ,
“என்ன சொன்னாலும் அவங்க முன்னாடி வர மாட்டாங்க. நம்ம பேசுறது வேஸ்ட்டு. நம்ம சிசிடிவி கேமரால ஏதாவது எவிடென்ஸ் கிடைக்குதா பார்ப்போம்.” என கூறவும், அவனும் அதனைப் பார்க்க அசோக் நின்ற இடம் கேமராவில் பதிவாகவில்லை. அதனைப் பார்த்த அசோக்கோ வெற்றி களிப்பில் சிரிக்க ஏற்கனவே கடுப்பில் இருந்த ரௌத்திரன் அவனின் வயிற்றிலேயே ஓங்கி மிதித்தான். பின் மீண்டும் சிசிடிவியில் நன்கு அலசி பார்க்க அவனின் கண்களில் தென்பட்டது ஒரு பெண் அசோக்கை தடுக்க செல்ல போவதும் அவளைத் தடுத்து இன்னொரு பெண் வேறு இடத்திற்கு அவளை இழுத்து செல்வதும் தான். ஆனால் முகம் தெளிவாக தெரியவில்லை. அதனை ராஜாவைக் கூப்பிட்டு காண்பித்தவனோ,
“ராஜா. இதை பாரு. இந்த பொண்ணு யாருனு கண்டுபிடிக்க முடியுமா னு பாரு. இந்த பொண்ணு கிட்ட பேசுனா கண்டிப்பா நமக்கு சாட்சி சொல்ல வருவாங்க. ஐ திங்க் எனக்கு கால் பண்ணது கூட இந்த பொண்ணா தான் இருக்கணும். அவ கூட வந்த பொண்ணு தான் இவளைத் தடுத்து கூட்டிட்டு போயிருக்கா.” என ரௌத்திரன் கூற ராஜாவும்,
“சரி நான் பாதிக்கபட்ட பொண்ணுகிட்ட ஒரு கம்பளைண்ட் வாங்கிட்டு அவளை பத்திரமா வீட்டுல விட்டுட்டு அந்த பொண்ணைப் பத்தி விசாரிச்சுட்டு வரேன்.” என கூறி சென்றான். எங்கு விசாரித்தும் அவளைக் கண்டுபிடிக்க முடியவில்லை ராஜாவால்.
அங்கே வீட்டிற்கு வந்த லதாவும் மலரும் அறையில் பேசிக்கொண்டிருக்க மலருக்கு அந்த நிகழ்வே மனதில் ஓடியது. பின் அலைபேசியை நோண்டிக் கொண்டிருந்த லதாவோ முகப்புத்தகத்தில் யாரோ ஒருவர் ரௌத்திரன் பேசிய வீர வசனங்களையெல்லாம் படம் பிடித்து வீடியோவாக வெளியிட்டிருந்தார். ஆனால் அது அவனின் முதுகுப்புறமாக எடுக்க பட்ட வீடியோ ஆதலால் அவனின் குரல் மட்டுமே கேட்டது. அதனை லதா மலரிடம் காட்ட,
“இந்த காலத்துலயும் இப்படி ஒரு போலீசா. ஹே லதா பேசாம நானே போய் சாட்சி சொல்லவா” என கேட்க எங்கே இங்கே இருந்தால் தனக்கு தெரியாமல் போய் சாட்சி கூறுகிறேன் என்ற பேர்வழி போய் மாட்டிக்கொள்வாளோ என பயந்த லதா இரவோடு இரவாக அவளை திருநெல்வேலி அனுப்பி வைத்துவிட்டாள்.
நடந்தது இது தான். இவ்வாறாக மலர் தன் பக்கம் நடந்ததை ரௌத்திரனிடம் கூற இடையிடையே ரௌத்திரன் தன்பக்க நிகழ்வுகளைக் கூற கடந்த காலம் கூறி முடிந்தாயிற்று.
“அப்போ நீ தானா அது. சரி நீ தான் என்னை பார்க்கலையே அப்போ எப்படி நான் தான் அதுன்னு இப்போ கண்டுபிடிச்ச.” என ரௌத்திரன் கேட்க,
“அது அன்னைக்கு ராஜா அண்ணா கிட்ட பேசுனேன்.” என ராஜாவிடம் கூறியதைக் கூற,
“ராஜா கிட்ட எதுக்கு இது பிரண்ட் சொல்லி கேள்விப்பட்டதா பொய் சொன்ன.” என கேட்க,
“அது லதாவுக்கு பயந்து தான். அவ இதைப்பத்தி யார்கிட்டயும் சொல்லாதன்னு சொல்லி வச்சிருந்தா. அதான் ராஜா அண்ணா கிட்ட சொல்லல.” என அவள் கூற,
“அதான் இப்போ என்கிட்டே சொல்லிட்டியே. இனிமே அப்போ பிரச்சனை வராதா உனக்கு” என அவன் மறுபடியும் கேட்க,
“என்னை பிரச்சனை வந்தாலும் பரவாயில்லன்னு நினைச்சு தான் சொன்னேன். அதான் என்னை காப்பாத்த நீங்க இருக்கீங்களே. உங்க மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. அந்த தைரியம் தான்.” என அவன் கண்களைக் காதலாக பார்த்து கூற அவளின் பார்வையில் ஏதோ இருப்பதை உணர்ந்தவன் தன்னை அறியாமல் அவளை பார்த்துக் கொண்டிருந்தான். பிறகு சுதாரித்தவனோ,
“நீ என்ன சொன்ன?” என புரியாமல் கேட்க அவளோ,
“அட ஆமா மிஸ்டர் ஈபிள் டவர். நான் தான் இப்போ உங்களோட…..” என மலர் இழுக்க அவனும் அவள் என்ன கூற வருகிறாள் என புருவம் சுருக்க,
“உங்களோட… தங்கச்சி ஃபிரண்ட் ஆயிட்டேனே. அப்போ எனக்கு ஒன்னுனா நீங்க பார்த்துக்க மாட்டிங்களா என்ன” என சிரிப்பை அடக்கியவாறு இவள் கூற அவனோ குழம்பி தான் போனான்.
“நீ பேசுறதே சரி இல்ல. நீ முதல கிளம்பு. எதுனாலும் அப்புறம் பேசிக்கலாம்.” என அவளை அவன் விரட்ட அவளோ,
“சரி சொல்ல வேண்டியதை சொல்லுங்க நான் கிளம்புறேன்” என்க,
“அதெல்லாம் சொல்ல முடியாது நீ கிளம்பு.” என முறைத்துக்கொண்டு கூற, மலரோ தன் மொபைலில் அவர்கள் எடுத்த செல்ஃபீயை எடுத்து மணி அடிப்பது போல் மொபைலை ஆட்டி அவனிடம் காட்டினாள். அவனோ,
‘ஐயோ கடவுளே இதை ஒண்ண வச்சே மிரட்டுறாளே. இப்படியா நான் இவ கிட்ட மாட்டனும்” என தனக்குள்ளயே நொந்துவிட்டு முறைத்துக்கொண்டே, “சயா சிந்தா அவா” என பல்லிடுக்கில் கூற அதையும் ரசித்தவாறு கீழே சென்றாள் அவனின் குட்டி பிசாசு.
‘பரவாயில்ல இந்த குட்டி பிசாசுக்கு அப்போவே அவ்ளோ தைரியம். அவனை எதிர்த்து கேட்கணும்னு நினைச்சுருக்கா. ஆனால் என்னை ஏன் இவ்ளோ நம்புறா. அப்படி நான் அவளுக்கு என்ன செஞ்சுட்டேன்.’ என மனதினுள் யோசித்தவாறு அவள் போகும் திசையை பார்த்துக் கொண்டிருந்தான்.
கீழே வந்த மலரிடம் மங்களம் பாட்டியோ,
“வா டி மா இந்த வீட்டு மருமகளே.” என பாட்டி கூற மலரோ வெட்கப்பட்டு,
“ஐயோ பாட்டி. உங்களுக்கு எப்படி.. ஹே ஹர்ஷு நீ தான் சொன்னியா?” என அவளின் காதை திருக,
“ஐயோ அண்ணி விடுங்க வலிக்குது. இப்போவே நாத்தனாரை கொடுமைப் படுத்துறீங்க.” என ஹர்ஷு சிரித்து கொண்டே கூற,
“அடியே மெதுவா பேசு டி. உங்க அண்ணன் காதுல விழுந்துச்சு எல்லாம் சொதப்பிரும்.” என கூறிவிட்டு பாட்டியின் காலின் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினாள்.
“நல்லா இரு மா கண்ணு. சரி என் பேரன் கிட்ட எப்போ ப்ரொபோஸ் பண்ண போற?” என பாட்டி கேட்க,
“பாட்டி நீங்க வேற லெவல் தான் போங்க. ஹே ஹர்ஷு நீ கேட்டியா டி இந்த கேள்வியை. பாட்டியை பாரு எவ்ளோ ஷார்ப்பும்னு. லவ் யூ டார்லிங்.” என கூறிவிட்டு பாட்டிக்கு முத்தம் கொடுத்தாள்.
“நீ தான் டி மா அவனை எப்படியாவது மாத்தணும். இவன் அப்படியே இருந்துருவானோன்னு ரொம்பவே பயந்துட்டேன். உன்னைப் பார்த்த அப்புறம் தான் எனக்கு நிம்மதியா இருக்கு. கண்டிப்பா நீ அவனை மாத்திருவ” என பாட்டி கண்கலங்க கூற,
“ஐயோ என்ன பாட்டி நீங்க இதுக்கெல்லாம் கண் கலங்கிட்டு. அப்படி என்ன தான் ஆச்சு அவருக்கு? எதனால இப்படி இருக்காரு?” என மலர் கேட்க பாட்டியும் ஹர்ஷுவும் ஒருவரையொருவர் பார்த்தனர். பின்,
“இல்ல டி மா. எங்களால அதை சொல்ல முடியாது. சொல்லக் கூடாதுன்னு அவன் மேல சத்தியம் வாங்கிட்டான். அவன் ஃபிரண்ட் ராஜாக்கு கூட அது இன்னும் தெரியாது. மன்னிச்சுரு மா.” என பாட்டி கூற,
“ஐயோ பாட்டி. என்ன நீங்க என்கிட்டே போய் மன்னிப்பு எல்லாம் கேட்டுகிட்டு. பரவாயில்ல நான் அவர் வாயால சொல்ல வைக்குறேன்.” என மலர் கூற பிறகு சிறிது நேரம் மூவரும் பேசிக்கொண்டிருந்தனர். அப்பொழுது வீட்டிற்குள் நுழைந்தான் ராஜா.
“ஹாய் டார்லிங்.” என பாட்டியைப் பார்த்து கூறிக்கொண்டே வந்தான்.
“அட ராஜா பையா. எப்படி டா இருக்க? வா வா வந்து உக்காரு.” என பாட்டி வரவேற்க ஹர்ஷுவோ எதிர்பாராத அவனின் வருகையால் அவனையே பார்த்தபடி அவள் அமர்ந்திருக்க பிறகு தான் அன்று ஹர்ஷு அவனிடம் இனிமே உங்க முகத்தைக் கூட பார்க்க மாட்டேன்’ என கூறியது நினைவு வர சட்டென தன் பார்வையை விலக்கினாள். அதனை மலரும் கவனித்தாள்.
“ஹாய் அண்ணா. எப்படி இருக்கீங்க?” என மலர் கேட்க,
“நல்லா இருக்கேன் மா. நீ எப்படி இருக்க?” என பதிலுக்கு ராஜா விசாரித்தான். பாட்டியோ,
“அட நீங்க எப்படி பேசிக்குறீங்க? ஏற்கனவே உங்க ரெண்டு பேருக்கும் ஒருத்தர் ஒருத்தர் தெரியுமா?” என பாட்டி கேட்க ராஜாவோ,
“ஆமா பாட்டி. அன்னைக்கு பால்காய்ச்சுற அன்னைக்கு வந்தேன்ல. அப்போவே தங்கச்சி என்கிட்ட வந்து பேசுனா. அதுல இருந்து தான் பழக்கம்.” என ராஜா கூற பாட்டியோ,
“ஓ அப்படியா. சரி சரி.” என கூறிவிட்டு ஹர்ஷுவிடம்,
“அடியே ராஜாக்கு குடிக்க ஏதாவது கொண்டு வா. நீ பாட்டுக்கு உட்காந்திருக்க.” என அவளை கொண்டுவர சொல்ல அவளும் உள்ளே சென்று காபி கலந்து வந்து கொடுத்தாள். வாங்கும் பொழுது ஏக்கமாய் ராஜா ஹர்ஷுவின் முகம் நோக்க அவளோ அவனைப் பார்க்காமல் கொடுத்துவிட்டு சென்றுவிட்டாள்.
“என்ன டா? திடீர் விஜயமா இருக்கு.” என பாட்டி கேட்க,
“ஆமா டார்லிங் உங்களைப் பார்க்க தான் வந்தேன்.” என ராஜா கூற,
“டேய் படவா யார்கிட்ட பொய் சொல்ற. கூப்பிட்டாலே நீ வர மாட்ட. இதுல கூப்பிடாம என்னை பார்க்க வாந்தியாக்கும். ஒழுங்கா உண்மைய சொல்றா.” என பாட்டி கேட்க,
“ஹிஹிஹி கரெக்ட்டா கண்டுபிடிச்சுடீங்களே. வேற என்ன பாட்டி பண்ண. எல்லாம் உங்க பேரன் படுத்துற பாடு. எதையாவது என்கிட்டே தெளிவா சொல்றானா. எப்போ பார்த்தாலும் யோசிக்க வைக்குறான். ஒரு கேஸ் விஷயமா அவன் கிட்ட என்ன பிளான்னு கேட்க வந்தேன் பாட்டி.” என ராஜா கூற,
“அதான பார்த்தேன். சரி நீங்க பேசிட்டு இருங்க. நான் ராத்திரிக்கு சமையல் பண்றேன்.” என கூறிவிட்டு பாட்டி சமயலறைக்கு சென்றுவிட்டார்.
“என்ன கேஸ் அண்ணா? அந்த மினிஸ்டர் கேஸ் தானா.” என மலர் கேட்க,
“ஆமா அதே தான். ஆமா ரௌத்திரன் சொன்னான். உனக்கு அந்த கேஸ் பத்தி தெரிஞ்சுருக்குன்னு. உனக்கெப்படி மா தெரியும்?” என ராஜா கேட்க,
“திரும்பியும் முதல்ல இருந்தா. ஐயோ அண்ணா இப்போ தான் உங்க ஃபிரண்ட் கிட்ட சொல்லிட்டு வந்தேன். அவர் கிட்ட கேட்டுக்கோங்க.” என மலர் கூற,
“ஹாஹா சரி மா. நான் அவன்கிட்ட கேட்குறேன். ஆமா அன்னைக்கு அவனை எப்படி கோவில் வர வச்ச செல்ஃபீ எடுக்க வச்ச? அதெல்லாம் என்கிட்டே சொல்லமையே கட் பண்ணிட்டல.” என ராஜா கேட்க,
“ஆமாண்ணா. அது அன்னைக்கு ஹர்ஷு வந்துட்டா திடிர்னு. அதான் சொல்லாம கட் பண்ணிட்டேன்.” என ஹர்ஷுவின் காதில் விழுந்து விடக் கூடாது என மெதுவாக கூறினாள்.
“சரி இப்போ சொல்லு.” என ராஜா கேட்க அன்று அவன் மலரை மிரட்டுவதற்காக செய்தது பின் அவள் கண்டுபிடித்தது அதை வைத்து அவனை கோவில் வர வைத்தது செல்ஃபீ எடுத்தது என அனைத்தையும் கூறினாள்.
“அடப்பாவி. அவனா பன்றான் இதெல்லாம். நம்பவே முடியல.” என ராஜா ஆச்சர்யமாய் கேட்க,
“ஹலோ பிரதர். அவரா பண்ணல. நான் பண்ண வச்சிருக்கேன்.” என இல்லாதா காலரைதப்பி தூக்கிவிட்டபடி கெத்தாக மலர் கூற,
“பெரிய ஆளு தான் மா நீயு. இதுவரை அவன் எந்த பொண்ணுக்கிட்டயும் இப்படி எல்லாம் பேசுனது கூட இல்ல. உன்கிட்ட மட்டும் தான் இப்படி பண்றான். அதுவும் நீ அவனை மிரட்டி வேற வச்சுருக்க. இதெல்லாம் வச்சு பார்க்கும் போது எனக்கொரு சந்தேகம் வருது.” என ராஜா கூற,
“என்ன சந்தேகம் ணா?” என மலர் கேட்டாள்.
“தங்கச்சி நீ ரௌத்திரனை லவ் பண்றியா?” என ராஜா கேட்க மலரோ வெட்கப்பட்டு கொண்டே சிரிக்க,
“அட இது எப்போல இருந்து. அவனுக்கு ஏத்த பொண்ணு நீ தான் மா. அண்ணா சப்போர்ட் இருக்கு உனக்கு. காலைப்படாத.” என ராஜா மகிழ்ச்சியாய் கூற,
“சரிங்கண்ணா. இன்னும் அவர்கிட்ட சொல்லல. அதுக்கு வேற என்ன பண்ண போறாரோ? ருத்ரதாண்டவம் ஆடிருவாரு.” என அவள் கூற,
“ஆனால் அவனைக் காதலிக்க வைக்கிறது உனக்கு ஒரு பெரிய டாஸ்க் மா.” என ராஜா மலரிடம் கூறி கொண்டிருந்த நேரம் சமையல் அறையில் இருந்து வெளியே வந்த பாட்டியோ,
“என்ன டா. எங்க வீட்டு மருமககிட்ட என்ன சொல்லிட்டு இருக்குற?” என பாட்டி கேட்க ராஜாவோ மலரை ஆச்சர்யமாக பார்த்து,
“அப்போ எல்லார்க்கும் தெரியுமா?” என கேட்டான்.
“ஆமாண்ணா. எங்க வீட்டுல கூட சொல்லிட்டேன். அவர்கிட்ட மட்டும் தான் சொல்லல. சொன்னா எங்க என்னை மொத்தமா ஒதுக்கிடுவாரோன்னு பயமா இருக்கு.” என மலர் கூற,
“ஆமா செஞ்சாலும் செய்வான். நீ அவன்கிட்ட சொல்லி அவன் அதை ஏத்துக்கிட்டு அப்புறம் அவன் சொல்லி ஷ்ஷபா நினைக்கவே கண்ண கட்டுதே.” என ராஜா கூற,
“அடேய் மலர் கெட்டிக்காரி டா. அவன் வாயாலேயே ஐ லவ் யூ சொல்ல வச்சுட்டா” என பாட்டி பெருமையாக கூற,
“எது. அவன் சொன்னானா. என்ன மா இது. அது எப்படி நடக்கும்?” என குழப்பமாய் ராஜா கேட்க,
“ஹாஹா அதுவா. அதுல ஒரு தில்லாலங்கடி வேலைப் பார்த்து வச்சுருக்கேன்.” என மலர் சிரித்தபடி கூற,
“என்ன மா அது? ஒரே ஷாக் மேல ஷாக் கொடுக்குற.” என ராஜா கேட்க,
“வெயிட் உங்களுக்கு டெமோ காட்டுறேன். உங்க ஃபிரண்டை கீழ கூப்பிடுங்க.” என மலர் கூற ராஜாவும் ரௌத்திரனை அழைக்க அவனோ “ஹே நீ எப்போ டா வந்த” என கேட்டபடி கீழே வந்தான். வந்தவனையே மலர் பார்த்துக் கொண்டிருக்க அவனோ அவளை பார்த்து “இவ என்ன இப்படி பார்க்குறா?” என யோசிக்க பின் தான் ஞாபகம் வந்தது அவனுக்கு அவள் எதற்கு பார்க்கிறாள் என. ‘சீக்கிரம் சொல்லு டா ரௌத்திரா. அப்புறம் ராஜா கிட்ட போட்டோவை காமிச்சுருவா. அவன் நம்மள சும்மாவே ஓட்டுவான். இதுல செல்ஃபீ எடுத்தேன்னு தெரிஞ்சுது மானம் போயிரும்.’ என மனதில் நினைத்துவிட்டு சட்டென மலரிடம்,
“சயா சிந்தா அவா” என கூற ராஜாவோ,
“என்ன மச்சான் சொல்ற? ஒண்ணும் புரியல.” என கூற,
“ஒண்ணுமில்ல டா நீ மேல வா. கேஸ் பத்தி பேசணும்.” என இழுத்துக்கொண்டு சென்றான். ராஜாவோ புரியாமல் மலரை திரும்பி பார்க்க அவளோ “கூகிள் பண்ணி பாருங்க.” என செய்கையில் செய்ய அவனும் சரி என்றுவிட்டு ரௌத்திரனுக்கு தெரியாதவாறு தன் அலைபேசியில் அதற்கான அர்த்தத்தைப் பார்க்க அதிர்ந்து விட்டான்.
‘அட நம்ம தங்கச்சிக்கு எவ்ளோ அறிவு. அதுவும் ஒரு கிரேட் போலீஸ்காரனையே ஏமாத்திருக்கா’ என்று நினைத்தபடி அவனோடு சென்றான்.
“என்ன ராஜா திடிர்னு வந்துருக்க? என்ன விஷயம்?” என ரௌத்திரன் கேட்க,
“டேய் எல்லாம் உன்னாலதான் தான் டா. என்ன தான் டா பிளான் வச்சுருக்க அந்த மினிஸ்டருக்கு. எனக்கு யோசிச்சு மண்டை வெடிச்சுரும் போல. அதான் உடனே கிளம்பி வந்துட்டேன். ஒழுங்கா சொல்ல போறியா இல்லையா.” என ராஜா அழுகாத குறையாய் கேட்க,
“சொல்றேன் டா. வா.” என தன் லேப்டோப்பை எடுத்தவாறு அவன் அருகில் அமர்ந்தான்.
“நாம நெனைக்குற மாதிரி அந்த மினிஸ்டர் சாதாரண ஆள் இல்ல டா. கஞ்சா பிசினஸ், பொண்ணுங்கள கடத்தி வெளி நாட்டுக்கு அனுப்பி அவங்கள விக்கிறது இந்த மாதிரி நாதாரி தனமெல்லாம் பன்றான்.” என ரௌத்திரன் கூற அதனைக் கேட்ட ராஜாவோ,
“என்ன டா சொல்ற? இவ்ளோ கீழ்தரமானவனா அவன். இதுல அவனுக்கு என்ன கிடைக்குது?” என ராஜா கொதித்து போய் கேட்க,
“வேறென்ன டா பணம் தான். கேவலம் பணத்துக்காக இதெல்லாம் பண்ணிக்கிட்டு இருக்கான்.” என ரௌத்திரன் கூற,
“அப்போ இதெல்லாம் தெரியாம தான பண்ணனும். எதுக்கு பப்லிக்கா அன்னைக்கு ஒரு பொண்ண அவன் பையன் கடத்துறான்.” என ராஜா புரியாமல் கேட்க,
“அவன் பையனுக்கு இதெல்லாம் தெரியாது. அவன் சும்மா அவனோட சுகத்துக்காக இதெல்லாம் பண்ணிட்டு இருக்கான். அதுமட்டுமில்லாம அந்த மினிஸ்டரை பொறுத்தவரை இப்படி பப்லிக்கா பண்ணும் போது போலீஸ் எல்லாம் இதை மட்டும் தான் கவனிப்பாங்க அப்படி ஏதாவது கேஸ் போட்டா பண பலம், பதவி பலம் வச்சு அதை வெளிய தெரியாத மாதிரி பண்ணிருறான். அப்படி பண்ணும் போது அவன் பண்ற மத்த விஷயத்தைக் கவனிக்காம விட்ருவாங்கன்னு நினைச்சு இப்படி பண்ணிட்டு இருக்கான். நானே இதெல்லாம் எதிர்பார்க்கல. அவன் மேல ஏதோ சின்னதா சந்தேகம் வந்ததுனால தான் அவனைப் பத்தி தேட ஆரம்பிச்சேன். அதுக்கெல்லாம் எவிடென்சும் கொஞ்சம் இருக்கு. ஆனால் மெயின் அவன் பொண்ணுங்கள கடத்தி விக்குறதைப் பத்தி இன்னும் எவிடென்ஸ் கிடைக்கல. அதுக்கு தான் வெய்ட் பண்ணிட்டு இருக்கேன்.” என ரௌத்திரன் அனைத்து எவிடென்ஸையும் ராஜாவிடம் காண்பிக்க அதில் ஒரு வீடியோவில் அந்த மினிஸ்டரே தன் வாயால் கஞ்சா பிசினெஸ் பற்றி கூறுவது போன்று இருந்தது. அதனைக் கண்ட ராஜாவோ,
“மச்சான். இது எப்படி எடுத்த? அவன் வீடு மாதிரி இருக்கு. நீ எப்போ அங்க போன? இதெல்லாம் எப்போ ரெக்கார்ட் பண்ண?” என புரியாமல் கேட்க,
“நான் எங்க போனேன். இங்க இருந்து தான் இத்தனையும் கிடைச்சுது.” என வில்லத்தனமாக சிரித்துக்கொண்டு கூற,
“இங்க இருந்து எப்படி டா.” என குழம்பியபடி கேட்டான்.
மௌனம் எரியும்…