Loading

மௌனம் 10

“எனக்கு தெரியாம ஒரு விஷயம் நடந்துருமா என்ன?” என இல்லாத காலரைத் தூக்கிவிட்டு கெத்தாக அவள் கூற,

“ஏய் எப்படி தெரியும்னு கேட்டேன்?” என்றான் ரௌத்திரன் பொறுமையிழந்து.

“ஹலோ நீங்க ஏய் ஓய்னு கூப்பிட நான் ஒன்னும் உங்க பொண்டாட்டி இல்ல.” என கோபமாய் கூறுவது போல் அவள் கூற,

“நீ ரொம்ப ஓவரா பேசுற சொல்லிட்டேன். உன்னை மாதிரி ஒரு குட்டி பிசாசு ஒன்னும் எனக்கு பொண்டாட்டியா வர தேவையில்ல. நீ சொல்லவே வேணாம். எனக்கு வேலை இருக்கு நான் கிளம்புறேன்.” என சிடுசிடுவென கூறிவிட்டு கிளம்ப போக,

“சரி சரி கோபப்படாதீங்க. நான் சொல்றேன். பட் அதுக்கு பதிலா எனக்கு என்ன செய்விங்க?” என அவள் கேட்க,

“நீ எனக்கு எதுவும் சொல்ல வேணாம். உனக்கு தெரிஞ்சா எனக்கென்ன? தெரியலைன்னா எனக்கென்ன?” என அவன் கூற,

‘ஐயோ என்ன இப்படி சொல்றாரு’ என நினைத்துவிட்டு,

“நான் சொல்லப் போறது மே பீ உங்க கேஸுக்கு கூட யூஸ் ஆகலாம். அப்புறம் உங்க இஷ்டம்.” என இவள் அசால்டாக குண்டைத் தூக்கி போட,

“என்ன சொல்ற நீ? உனக்கு அந்த கேஸ் பத்தி என்ன தெரியும்?” என கேட்க,

“அதெல்லாம் சொல்ல மாட்டேன். நம்பலைன்னா என்கிட்ட அந்த கேஸ் பத்தி ஏதாவது கேள்விக் கேட்டு செக் பண்ணுங்க. நான் கரெக்டா சொல்றேன்.” என வெளியே கெத்தாக கூறினாலும் உள்ளே, ‘ஐயோ கடவுளே ஏடாகூடமா ஏதும் கேட்டுற கூடாது.’ என வேண்டினாள். அவனோ இவளை சந்தேகமாக பார்த்துவிட்டு,

“சரி அந்த சம்பவம் எப்போ நடந்துச்சு? எங்க நடந்துச்சு?” என அவன் கேட்க அவளோ,

‘நம்ம எப்போ மதுரைக்கு போனோம். அவ பிறந்த நாளுக்கு ரெண்டு நாளைக்கு அப்புறம் போனோம் அப்போ தேதி…. ஹான் ஞாபகம் வந்துட்டு’ என மனதில் கணக்கு போட்டுவிட்டு,

“ஏப்ரல் ரெண்டு” என அவள் கூற அவனோ அதிர்ச்சி ஆகி பின்,

“எந்த இடம்னு சொல்லலையே” என தன் புருவத்தை சுருக்கி கேட்க,

“உங்க ஸ்டேஷனுக்கு கொஞ்சம் தூரம் தள்ளி தான் நடந்துச்சு.” என சாதாரணமாக அவள் கூற அவனோ,

“ஹே எப்படி கரெக்ட்டா சொல்ற? உனக்கு எப்படி தெரியும்?” என்றான் ஆச்சரியமாய்.

“ஆஹான் எனக்கு எப்படி தெரியும்னு உங்களுக்கு தெரியணும்னா நான் சொல்ற கண்டிஷனுக்கு நீங்க ஓகே சொல்லணும்.” என அவனை வம்பிழுக்க அவனோ,

“ஐயோ சரி முதல்ல என்ன கண்டிஷன்னு சொல்லு. முடிஞ்சா பண்றேன்.” என அவன் சலிப்புடன் கூற,

“பெருசா எதுவும் இல்ல. என்னைப் பார்க்கும் போதெல்லாம் நீங்க ‘சயா சிந்தா அவா’ன்னு சொல்லணும்.” என அவள் கூற,

“அப்படினா என்ன?” என அவன் புரியாமல் கேட்க,

“அப்படினா என்ன அர்த்தம் னா ‘நீ பெரியபொண்ணு தான்’னு அர்த்தம். அதை தான் மலாய்ல சொன்னேன்.” என அவள் சிரிப்பை அடக்கியவாறு கூற,

“ப்ச் எதுக்கு நான் அப்படி சொல்லணும்?” என எரிச்சலாக கேட்டான்.

“எதுக்கு சொல்லனுமா? என்னை முதல் தடவை பார்த்த அன்னைக்கு சின்னப்பொண்ணு சின்ன பொண்ணு மாதிரி பேசணும்னு மிரட்டுனிங்கல்ல. என்ன தைரியம் இருந்தா என்னை சின்ன பொண்ணுன்னு சொல்லிருப்பீங்க. அதை நான் இன்னும் மன்னிக்கல. அதுக்கு தான் இந்த பனிஷ்மென்ட்.” என அவள் கூற பெருமூச்சோன்றினை வெளியிட்டவன்,

“அதுக்கு எதுக்கு மலாய்ல சொல்லணும்.” என மீண்டும் புரியாமல் எரிச்சலுடன் கேட்டான்.

“ஐயோ கடவுளே. ஆளு மட்டும் தான் நீங்க வளர்ந்துருக்கீங்க ஈபிள் டவர். மத்தபடி அறிவு உங்களுக்கு என்னை விட கம்மி தான்.” என அவள் தன் தலையில் அடித்தவாறு கூற,

“இங்க பாரு கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு. தேவையில்லாம பேசாத.” என அவன் முறைத்தபடி கூற,

“ஐயோ மிஸ்டர் ரௌத்திரன். என்னை எப்போ எல்லாம் பார்க்குறீங்களோ அப்போ எல்லாம் சொல்லணும். ஒருவேளை நீங்க என்னைப் பார்க்குற நேரம் என்கூட ஹர்ஷு, பாட்டி இல்ல எங்க அம்மா யாராவது இருந்தா நீங்க அப்போ எப்படி என்கிட்டே சொல்ல முடியும். அப்புறம் பாட்டியும் ஹர்ஷுவும் உங்களை கொடஞ்சி கொடஞ்சி கேள்வி கேப்பாங்க பரவாயில்லையா. அதுக்கு தான் இந்த ஐடியா.” என அவள் பெருந்தன்மையாய் கூற,

‘ஐயோ படுத்துறாளே. இவளை பெத்தாங்களா இல்ல செஞ்சாங்களா. இவகிட்ட போய் இப்படி மாட்டிகிட்டேனே. சரி இப்போதைக்கு ஓகே சொல்லுவோம். நமக்கு கேஸ் முக்கியம். அவ கேஸைப் பத்தி சொல்லி முடிச்சதும் நாம நம்ம வேலைய காமிப்போம். மவளே அதுக்கு அப்புறம் சொன்னா தானே.’ என மனதில் நினைத்துவிட்டு,

“சரி சரி சொல்லி தொலையுறேன். நீ முதல அந்த கேஸ் பத்தி உனக்கு எப்படி தெரியும்னு சொல்லு.” என அவன் கடுப்புடன் கேட்க,

“சொல்றேன் சொல்றேன் இருங்க. அப்புறம் இன்னொரு விஷயம். என்கிட்ட இருந்து நீங்க கேட்குறதுக்கு பதில் வந்த அப்புறம் சொல்லாம விட்டுரலாம்னு மட்டும் நினைக்காதிங்க. அப்படி மட்டும் பண்ணீங்கன்னு வச்சுக்கோங்க.” என மிரட்டும் தோனியில் கூற,

“என்ன பண்ணுவ?” என்றான் திமிராய் பார்த்தபடி.

“ஹாஹா வெரி சிம்பிள். நீங்களும் நானும் எடுத்த சுயப்படத்தை அனைவரிடமும் காண்பித்து விடுவேன்.” என அவள் நக்கலாய் சிரித்தபடி கூற,

“ஐயோ ச்ச. இவகிட்ட மட்டும் நம்ம போட்ட பிளான் எதுவுமே நடக்க மாட்டேங்குது. நான் நினைக்குறதை வேற கரெக்ட்டா சொல்றா.” என மனதினுள் நொந்துகொள்ள,

“மறுபடியும் சொல்றேன். உங்க பார்வையை வச்சே நீங்க என்ன நினைக்குறீங்கன்னு நான் சொல்லுவேன். இப்போ என்ன நினைச்சிங்கன்னு சொல்லவா.” என அவள் கேட்க,

“எம்மா தாயே நீ சொல்ல வேண்டியதைத் தவற மத்த எல்லாம் சொல்ற. நான் கேட்டதுக்கு எப்போ பதில் வரும்?”

“அதுவா இப்போ உங்களுக்கு டியூட்டிக்கு நேரம் ஆச்சுல. இப்போ கிளம்புங்க. நான் ஈவினிங் சொல்றேன் கண்டிப்பா.” என அவள் கூற,

‘மவளே சாயங்காலம் மட்டும் நீ சொல்லல. அப்புறம் இருக்கு உனக்கு.’ என்ற ரீதியில் ஒரு பார்வை பார்த்துவிட்டு அவன் கிளம்ப போக,

“ஹலோ என்ன சொல்லாம போறீங்க?” என அவள் கேட்க,

“ஐயோ உனக்கு இப்போ என்ன வேணும்? அதன் ஈவினிங் சொல்றேன்னு தான சொல்லிருக்க. அதுக்கு நான் என்ன சொல்ல.” என எரிச்சலாக கேட்க,

“பார்த்திங்களா அதுக்குள்ள மறந்துடீங்க. ‘சயா சிந்தா அவா’ன்னு சொல்லணும்னு சொன்னேன்ல. சொல்லிட்டு போங்க” என மிரட்டி கேட்க,

‘சரியான இம்சை டா. எல்லாம் என் விதி.’ என மனதினுள் அவளை அர்ச்சித்துவிட்டு வேண்டா வெறுப்பாக,

“சயா சிந்தா அவா… போதுமா” என கோபமாய் கூறிவிட்டு பைக்கை எடுத்து கொண்டுக் கிளம்பிவிட்டான்.

அவன் கூறிய விதத்தில் மலருக்கோ அடக்கமுடியாமல் சிரிப்பு வர வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தாள்.

‘ஐயோ கடவுளே. இதுக்கே இப்படி சலிச்சுக்கிட்டா எப்படி? இன்னும் நீங்க என்கிட்ட அனுபவிக்க வேண்டியது நிறைய இருக்கு. தீரா’ என மனதில் நினைத்துக் கொண்டு சிரிக்க அவளின் மனசாட்சியோ,

‘ரொம்ப ஆடாத டி அவன் மட்டும் “சயா சிந்தா அவா’க்கு என்ன அர்த்தம்னு கண்டுபுடிச்சான்னு வச்சிக்கோ. மவளே நீ காலி.’ என எச்சரிக்கை விட, ‘நம்மாளு அந்த அளவுக்கு எல்லாம் யோசிக்காது. அவருக்கு இருக்குற வேலைக்கு இதை கண்டுபிடிக்க எல்லாம் நேரம் இருக்காது. பார்த்துக்கலாம். ஆனால் இந்த உலகத்துலயே முறைச்சுகிட்டே காதலை சொன்னது நம்மாளு தான் யா.’ என நினைத்துவிட்டு மீண்டும் சிரித்துவிட்டு,

உன் துணை தேடி நான் வந்தேன்
துரத்தாதே டா
உன் கோவம் கூட நியாயம் என்று
ரசிதேனே
நீ தீயாய் இரு எனை திரியாய் தொடு
நான் உயிர் பெற்றே வாழ்வேனடா

என பாடியவாறே தன வீட்டிற்குள் சென்றாள்.

[சயா சிந்தா அவா (saya cinta awak) – நான் உன்னை காதலிக்குறேன்]

ஸ்டேஷனில் ரௌத்திரனோ நிலுவையில் இருக்கும் அனைத்து வழக்கையும் முடிக்கும்படி அனைவரையும் அதிரடியாக வேலை வாங்கிக் கொண்டிருந்தான். அவனின் ரௌத்திரத்திற்கு பயந்தே அனைவரும் தங்கள் பணியை மும்முரமாக செய்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது ராஜா ரௌத்திரனுக்கு அழைப்பு விடுத்தான்.

“என்ன டா சொல்லு?” என ரௌத்திரன் கேட்க,

“டேய் தயவு செஞ்சு என்ன பிளான்னு சொல்லி தொலையேன் டா. எனக்கு மண்டைக் காயுது.” என ராஜா புலம்ப,

“டேய் நீ நேர்ல வா டா நான் சொல்றேன். போன்ல சொல்றது சேஃப் இல்ல டா.” என ரௌத்திரன் கூற,

“அட போடா.” என ராஜா சலித்துக் கொண்டான்.

“டேய் ராஜா. அந்த மினிஸ்டர் பையன் அர்ரெஸ்ட் பண்ண கேஸ் நியூஸ்ல கூட வரல தானே. யாருக்கும் தெரிய வாய்ப்பு இல்ல தான” என ரௌத்திரம் கேட்க,

“ஆமா டா ஏன்.” என்றான்.

“இல்ல டா என் எதிர்த்த வீட்டுல ஒரு குட்டி பிசாசு இருக்குல்ல. அதுக்கு இந்த கேஸைப் பத்தி தெரிஞ்சுருக்கு டா. அதான் எப்படின்னு யோசிக்கேன்” என அவன் கேட்க,

‘அட நம்ம தங்கச்சியை தான் சொல்றானா. நம்ம கிட்ட ஏதோ ஃபிரண்ட் சொன்னதா தானே சொன்னா’ என யோசித்து அதனை ரௌத்திரனிடம் கூறாமல்,

“மச்சான் நீயா டா இது. ஒரு பொண்ணை செல்ல பேர் வச்சு எல்லாம் கூப்பிடுற.” என ராஜா அவனை வம்பிழுக்க,

“டேய் ஏதாவது அசிங்கமா திட்டிருவேன் பார்த்துக்கோ. கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம நீயும் அவளை மாதிரியே பண்ணாத.” என ரௌத்திரன் எரிச்சலாக கூற,

“அட மச்சான் நான் பேசும் போது கூட உனக்கு அவ ஞாபகம் தான் வருது போல.” என ராஜா மீண்டும் கலாய்க்க,

“என் கோவத்தைக் கிளறாத டா” என பல்லைக் கடித்து கொண்டு ரௌத்திரன் கூறினாள்.

“சரி சரி கூல் மச்சான். அதை அவகிட்டயே கேட்க வேண்டியது தான” என கேட்க,

“கேட்டா சாயங்காலம் சொல்றேன்னு சொல்லி யோசிக்க வச்சுட்டா டா.” என கடுப்புடன் கூற,

‘என்னை எத்தனை தடவை யோசிக்க வச்சுருப்ப இப்போ மாட்டுனியா’ என மனதினுள் நினைத்து குதூகளித்தவன்,

“ஹாஹா அப்போ பொறுத்திருந்து தெரிஞ்சுக்கோ ராசா.” என நக்கலாய் கூறினான்.

“உன்கிட்ட போய் கேட்டேன் பாரு என்ன சொல்லணும்.” என திட்டிவிட்டு அழைப்பைத் துண்டித்துவிட்டான். பிறகு தான் ரஞ்சித்தின் ஞாபகம் வர,

‘ஓ ஷிட். ஐயோ ரஞ்சித் எல்லாத்தையும் கேட்ருப்பானே.’ என பதறிவிட்டு வெளியே சென்று பார்க்க அங்கு ரஞ்சித் இல்லை என தெரிந்து பிறகு நிம்மதியடைந்தான். ஆனால் ரஞ்சித்தோ அனைத்தையும் கேட்டுவிட்டு ரௌத்திரன் வருவவதற்குள் வெளியே சென்றிருந்தான்.

வெளியே சென்ற ரஞ்சித்தோ உடனே மினிஸ்டருக்கு அழைக்க அழைப்பை ஏற்றதும்,

“ஐயா இன்னைக்கு அந்த ரௌத்திரன் யாருக்கோ கால் பண்ணி பேசிட்டு இருந்தான் யா. நம்ம தம்பி கேஸ் விஷயமா தான் பேசிட்டு இருந்தான். அந்த விஷயம் பத்தி அவன் எதிர்த்த வீட்டுல இருக்குற யாருக்கோ தெரிஞ்சுருக்குங்குற மாதிரி பேசுனான். அவன் பேசுனதை வச்சு பார்த்தா அது ஒரு பொண்ணுன்னு நினைக்குறேன்.” என ரஞ்சித் தான் கேட்டவற்றை அப்படியே ஒப்பித்தான்.

“யோவ் என்னையா சொல்ற? இந்த விஷயம் வெளிய தெரியக்கூடாதுன்னு தான் நான் மீடியால கூட வராதபடி பண்ணி வச்சுருக்குறேன். அப்புறம் எப்படியா திருநெல்வேலில இருக்குற பொண்ணுக்கு தெரிஞ்சுது.” என மினிஸ்டர் கேட்க,

“அதான் யா எனக்கும் தெரில. இன்னைக்கு சாயங்காலம் தான் அந்த பொண்ணு இவன்கிட்ட அதைப் பத்தி சொல்றேன்னு சொல்லிருக்கா போல.” என ரஞ்சித் கூற,

“நீ என்ன பண்ற… அவனை ஃபாலொவ் பண்ணிட்டே போ. எப்படியாவது அவங்க என்ன பேசுறாங்கன்னு கண்டுபிடி.” என கூற,

“சரிங்கயா நான் முயற்சி பண்றேன்.” என்றான்.

அங்கே மலரோ தன்னவனிடம் தான் பேசியதை நினைத்து நினைத்து சிரித்துக் கொண்டிருந்தாள். அப்பொழுது அங்கு ஹர்ஷினி வர இவள் தனியாக சிரிப்பதைப் பார்த்து,

“என்ன மலர் தனியா சிரிச்சுட்டு இருக்குற. என்ன விஷயம்?” என கேட்க,

“அதெல்லாம் ஒண்ணுமில்லடி சும்மா தான். வா வந்து உக்காரு.” என மலர் அழைக்க அவளும் வந்தமர்ந்தாள்.

“ஹே மலர் வீட்டுல இருக்க போர் அடிக்குது. எங்கயாச்சு வெளில போலாமா.” என ஹர்ஷு கேட்க,

“நானும் கேட்கணும் நினைச்சேன் டி. எங்க போலாம்?” என மலர் கேட்க,

“எனக்கு கொஞ்சம் பர்ச்சஸ் பண்ண வேண்டி இருக்கு. ஷாப்பிங் போலாம்.” என ஹர்ஷு கூற,

“சூப்பர். அப்போ வெயிட் பண்ணு நான் குளிச்சுட்டு வரேன்.” என மலர் குளிக்க சென்று விட்டாள். அப்பொழுது அங்கு மேசையில் ஒரு நாட்குறிப்பு இருக்க அதனை எடுத்துப் பார்த்தாள். அதில் மலர் எழுதிய கவிதைகள் நிறைய இருந்தன. படிக்கவா வேணாமா என சிந்தித்தவள் ‘படிப்போம். கவிதை தான.’ என நினைத்துவிட்டு ஒவ்வொன்றாக படித்தாள்.

‘செமயா எழுதிருக்கா எல்லாமே.’ என ஒவ்வொன்றயும் சிரிப்புடன் ரசித்து படிக்க ஒரு கவிதையில் அவளின் சிரிப்பு காணாமல் போனது.

தனிமை காட்டில் தனியே
தனித்திருந்தேன் இருளில்.
ஒளியாய் வந்தாய் என் வாழ்வில்.
வளியாய் (சுவாசம்) நினைத்தேன்
உன்னை. ஆனால் நீயோ
வலிகள் மட்டுமே தந்து சென்று
விழியில் நீருடன் மீண்டும்
இருளில் தள்ளிவிட்டாய்.
ஒரே ஒரு மாற்றம் தான்.
நீ வரும் முன் எந்த
நினைவுமில்லாமல் இருந்தேன்.
இப்பொழுது உன் நினைவுகளோடு
மட்டுமே இருக்கின்றேன்.

என்று அதில் எழுதியிருக்க ஹர்ஷுவுக்கு தன்னவனின் நினைவு தான் வந்தது. தனக்காக எழுதப்பட்ட வரிகளாக தோன்றியது. ஏனோ அதனை வாசித்தவுடன் தன்னவனின் குரலைக் கேட்கும் ஆவல் எழ என்ன செய்வது என சிந்தித்தாள்.

‘கால் பண்ணி பேசுவோமா.’ என மனம் சொல்ல, ‘உன்ன எவ்ளோ அசிங்கமா சொன்னான். அப்படிப்பட்டவன் கிட்ட வெட்கமே இல்லமா பேச போறியா” என மூளை கூற இவ்வாறு மனதிற்கும் மூளைக்கும் யுத்தம் நடக்க கடைசியில் வெற்றி பெற்றது அவனின் நினைவுகளால் நிரம்பியிருக்கும் மனமே. தன் அலைபேசியை எடுத்து அவளின் ராஜ்க்கு அழைக்க இரண்டு ரிங் போனது. பின் மீண்டும் பேச மனமில்லாமல் துண்டித்துவிட்டாள். தவறிய அழைப்பில் ஹனி என்ற பெயரைக் கண்டவனோ,

‘என்ன இது ஹனி கால் பண்ணியிருக்கா. என்னாச்சு தெரியலையே’ என பதறி போய் மீண்டும் அவன் அழைக்க, அதனை ஏற்கவா வேண்டாமா என மீண்டும் மனதுக்கும் மூளைக்கும் விவாதம் தொடங்கியது. பிறகு வேறு வழியின்றி அழைப்பை ஏற்றாள்.

“ஹலோ ஹர்ஷு” என ராஜா பதறி போய் அழைக்க அவளோ மெளனமாக இருந்தாள்.

“ஹர்ஷு லைன்ல இருக்கியா. ஏதாவது பேசு எனக்கு பயமா இருக்கு” என அவன் இன்னும் பதறி போய் கேட்க,

“சாரி வேற யாருக்கோ கால் செய்யும் போது தெரியாம உங்களுக்கு போட்டுட்டேன். மன்னிச்சுருங்க.” என ஹர்ஷு இறுகிய குரலில் கூற நிம்மதி பெருமூச்சு விட்டவனோ,

“ஓ அப்படியா சரிசரி. நான் பயந்தே போயிட்டேன். சரி எப்படி இருக்க ஹர்ஷு?” என அவன் அக்கறையாய் விசாரிக்க,

“பரவாயில்லையே உங்களை மயக்க நினைக்குறவளை எல்லாம் அக்கறையா விசாரிக்கிங்களே. பெரிய மனசு தான்” என அவள் விரக்தியாய் கூற அவன் கூறிய வார்த்தை அவன் மனதையே குத்தி கிழித்தது. அதற்கு மேல் பேச முடியாமல் அழைப்பைத் துண்டித்து மௌனமாய் அழுதாள் அவனின் ஹனி.

காதல் என்னை பிழிகிறதே கண்ணீர் நதியாய் வழிகிறதே
நினைப்பதும் தொல்லை மறப்பதும் தொல்லை
வாழ்வே வலிக்கிறதே

இருவர் மனத்திலும் வலிகள் இருந்தன. தான் கூறிய வார்த்தை தன்னையே இவ்வளவு பாதிக்கிறது என்றால் அவளுக்கு எந்த அளவு வலித்திருக்கும் என நினைக்க ராஜாவின் கண்கள் கலங்கின. தன்னவனைக் காயப்படுத்த வேண்டும் என அவளும் நினைக்கவில்லை ஆனால் ஏனோ மனதில் இருந்த வார்த்தைகள் அவள் அறியாமல் வெளியே வந்துவிட்டது. ஆனால் இத்தனை நாள் அவனின் குரல் கேட்காமல் தவித்தவளுக்கு இன்று அவன் குரல் கேட்டதே மனதிற்கு ஆறுதலாக இருந்தது.

பிறகு தன்னை சமன் செய்தவள் மீண்டும் அடுத்தடுத்த கவிதைகளை வாசிக்கலானாள். அப்பொழுது நம் மலர் அவளின் தீரனுக்காக காதலை உணர்ந்த அன்று கிறுக்கிய கிறுக்கல்கள் ஹர்ஷுவின் கண்களில் பட அதனை படித்தவளின் புருவங்கள் யோசனையில் சுருங்கி பிறகு மகிழ்ச்சியாய் விரிந்தது.

‘இந்த வரிகள் எல்லாம் நம்ம அண்ணாக்கு மேட்ச் ஆகுதே. அப்போ மலர் நம்ம அண்ணனை லவ் பண்றாளா.” என்று அகமகிழ்ந்தவள்,

‘ஆனால் இன்னும் நம்ம கிட்ட ஒன்னும் சொல்லலையே. வரட்டும் அவளுக்கு இருக்கு.’ என மனதில் நினைத்துக் கொண்டு டைரியை மூடி எடுத்த இடத்தில் வைத்தாள். குளித்து முடித்த வெளியே வந்தவளிடம் ஹர்ஷுவோ,

“நீ யாரையாச்சும் லவ் பண்ணுறியா மலர்?” சட்டென கேட்க அவளின் கேள்விக்கு என்ன சொல்வது என முழித்துக் கொண்டிருந்தாள் மலர். பிறகு,

“ச்ச ச்ச அப்படி எல்லாம் இல்லயே. நானாவது லவ் பண்றதாவது.” என மலர் கூற,

“ஓ அப்போ லவ் பண்ணாம தான் எங்க அண்ணனைப் பத்தி கவிதை எழுதியிருக்கியா.” என தான் படித்ததை எடுத்து காண்பிக்க,

‘போச்சு வசமா மாட்டிகிட்டோம். வேற வலி இல்ல உண்மையை சொல்லுவோம்.’ என நினைத்துவிட்டு,

“அது வந்து ஹர்ஷு… ஆமா டி உங்க அண்ணனை நான் லவ் பண்றேன்.” என தயக்கமாய் கூற ஹர்ஷுவோ,

“இனிமே நீ எனக்கு ஃபிரண்டே கிடையாது” என கூற மலரோ பயந்து,

“ஹர்ஷு ஏன் கோபப்படுற. சாரி” என மலர் மன்னிப்பு கேட்க,

“நீ என்ன மன்னிப்பு கேட்டாலும் எனக்கு இனிமே நீ ஃபிரண்ட் கிடையாது.” என ஹர்ஷு கூற மலர் முகம் சுருங்கினாள்.

“ஏன்னா இனிமே நீ என் அண்ணி” என சிரித்தபடி கூற அதில் முகமலர்ந்த மலரே மகிச்சியுடன் அவளை அணைத்துக்கொண்டாள். பின் நடந்த அனைத்தையும் மலர் ஹர்ஷுவிடம் கூற,

“அடிப்பாவி எங்க அண்ணா பாவம் டி. எவ்ளோ கொடுமை பண்ற. ஆனால் பரவாயில்ல. எப்படியாவது அண்ணனை லவ் பண்ண வச்சிருங்க அண்ணியாரே” என ஹர்ஷு கூற,

“அப்படியே ஆகட்டும் நாத்தனாரே.” என மலர் கூற இருவரும் சிரித்தனர். பின் கடைக்கு சென்று வீட்டிற்கு வர மாலை ஆறு மணி ஆகியது. ரௌத்திரன் வீடு வந்த நேரம் மலரும் அவன் வீட்டில் தான் இருந்தாள். அவனைப் பின்தொடர்ந்து வந்த ரஞ்சித்தோ ‘ச்ச இவன் என்ன வீட்டுக்கு வந்துட்டான். இப்போ எப்படி அவங்க பேசுறத கேட்குறது. சரி அந்த பொண்ணு அவன் வீட்டுக்கு போய் தான சொல்லும் அவளை யாருன்னு பார்த்து வச்சுப்போம்’ என நினைத்து காத்திருக்க மலர் ஏற்கனவே ரௌத்திரன் வீட்டில் இருப்பதால் அவளை ரஞ்சித் பார்க்கவில்லை. பிறகு ரஞ்சித் கிளம்பிவிட்டான்.

அவனோ அவளை பார்த்தும் அவள் கூற சொல்லிய வார்த்தைகளை சொல்லாமல் செல்ல போக மலரோ,

“ஹே ஹர்ஷு உனக்கு ஒரு போட்டோ காமிக்கணும்னு நினைச்சேன்.” என சத்தமாக கூற அப்பொழுது தான் ரௌத்திரனுக்கு அவள் கூறியது நினைவு வர வேகமாக திரும்பி மலரிடம் “சயா சிந்தா அவா” என கூற மலருக்கு சிரிப்பு வந்தது. ஏற்கனவே தெரிந்தாலும் ஹர்ஷு ரௌத்திரனிடம்,

“அண்ணா இப்போ என்ன சொன்ன எனக்கு ஒண்ணுமே புரியல?” என கேட்க மலரோ,

“அதுவா ஹர்ஷு ஒரு கேஸ் விஷயமா சைக்காலஜி சம்மந்தமா உன்கிட்ட டவுட் கேட்கணும் கொஞ்சம் என் ரூமுக்கு வான்னு அர்த்தம். அப்படித்தானே மிஸ்டர் ரௌத்திரன்.” என மலர் கேட்க அவனும் வேறு வழியின்றி ஆமாம் என்று கூறி சென்று விட மலரும் அவனின் பின்னே சென்றாள். அப்பொழுது பாட்டி ஹர்ஷுவிடம்,

“என்ன டி இங்க நடக்குது?” என புரியாமல் கேட்க ஹர்ஷு பாட்டியிடம் அனைத்தையும் கூறினாள். பாட்டியோ உட்சபட்ச மகிழ்ச்சியில் இருந்தார்.

அவனின் அறைக்கு சென்றவளிடம் ரௌத்திரனோ,

“சரி சீக்கிரம் சொல்லு உனக்கு எப்படி அந்த கேஸ் பத்தி தெரியும்.” என கேட்க அவளோ வேறு ஒரு இடத்தைப் பார்த்வவாறு ஏதோ யோசனையில் மூழ்கி இருக்க அவள் பார்வை சென்ற திசையை இவனும் நோக்க புரிந்துவிட்டது இவனுக்கு. அன்று முதல்நாள் நிகழ்ந்த நிகழ்வை நினைக்கிறாள் என. அவனோ,

‘ச்ச மிரட்டுறோம்னு நினைச்சு ஒன்னு பண்ணா கடைசில இந்த குட்டி பிசாசு நம்மள மிரள வச்சுருச்சு. இரு டி என்னைக்காவது ஒரு நாள் என்கிட்ட வசமா மாட்டுவ” என மனதில் நினைத்துவிட்டு,

“ஹலோ உன்ன தான். கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு.” என தன் கையை அவள் முன் ஆட்டி கேட்க அவளோ,

“சரி இப்போ உங்களுக்கு என்ன தெரியணும் எனக்கு எப்படி அந்த கேஸ் பத்தி தெரியும்னு கேட்குறீங்க அதான. சொல்றேன். அந்த சம்பவம் நடக்கும் போது நானும் அங்க தான் இருந்தேன்.” என்றாள்.

“என்ன சொல்ற நீ? அது நடந்த அன்னைக்கு நீ மதுரைல இருந்தியா.” என அவன் புரியாமல் கேட்க,

“ஹ்ம்ம் ஆமா. அப்படியே மேல பாருங்க” என அவள் கூற இவனும் மேலே பார்த்துவிட்டு புரியாமல் அவளிடம் என்ன என்று கேட்க,

“அட கடவுளே. பிளாஷ்பேக் சொல்ல போறேன். அதான் மேல பார்க்க சொல்றேன். இது கூட தெரில. சரியான ட்யூப்லைட்” என அவள் தன் தலையில் அடிக்க ரௌத்திரனோ அவளை தீயாய் முறைத்தான்.

“சரி சரி கூல் சொல்றேன்.” என மலர் ஒரு மாதத்திற்கு முன் நடந்த நிகழ்வைக் கூற ஆரம்பித்தாள்.

மௌனம் எரியும்…

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
10
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்