மௌனம் 1
திரு நெல்லையப்பரும் காந்திமதி அம்மனும் வீற்றிருக்கும் நெல்லை மாநகரின் முக்கிய பகுதியில் அமைந்திருந்த அந்த வீட்டில் மணக்க மணக்க சமையலறையில் குளம்பி தயரித்துக் கொண்டிருந்தார் மத வீட்டின் தலைவி சுப்புலெட்சுமி. தன் பணியை முடித்தவர் தூங்கிக்கொண்டிருந்த தன் மகளை, ‘எவ்வளவு நேரம் தான் தூங்குவாளோ. சரியான கும்பகர்ணியா இருக்கா.’ என மனதில் அர்ச்சித்துவிட்டு அவளை எழுப்பும் பொருட்டு சத்தமாக அழைக்க ஆரம்பித்தார்.
“மலரு… அடியே மலரு… எந்திரி டி எவ்வளவு நேரம் தூங்குவ” என அவளை தட்டி எழுப்ப அதில் லேசாக விழித்தவளோ,
“சுப்பு கொஞ்சம் நேரம் தூங்கிக்கிறேனே ப்ளீஸ்” என எழும்ப மனமில்லாமல் கெஞ்ச,
“ஏய் மணி அஞ்சாகுது டி” என அங்கிருந்த துணிகளை மடித்தவாறு சுப்பு கூற,
“அஞ்சு தான ஆகுது. எதுக்கு இப்படி காலங்காத்தாலயே எழுப்புற? நான் என்ன வேலைக்கா போகப் போறேன்.”என மீண்டும் திரும்பிப்படுத்தாள்
“அடியே இது சாயந்தரம் அஞ்சு மணி டி. தூங்குனா உலகத்தை மறந்துருவியா கருமம் கருமம்” என அவரின் வாய் அவளை வசைபாட அப்பொழுது தான் ஜன்னல் வழியே வெளியே எட்டிப்பார்த்தாள் அந்த திட்டுகளுக்கு சொந்தக்காரி. சூரியன் தன் கதிர்களை உள்ளிழுத்து கொண்டு இருந்தது. அதனைப் பார்த்துவிட்டு தன் அம்மாவிடம் திரும்ப, அவரோ இவளை கேவலமாக பார்க்க, அசடு வழிந்தாள் நம் கதையின் நாயகி மலர்நிதி.
“அது வந்து சுப்பு…. ” என இவள் சமாளிக்க வாயெடுக்க அதற்குள் அவரோ,
“நீ எதுவும் சொல்ல வேண்டாம். எதையாவது காரணம் சொல்லி கேவலமா சமாளிப்ப. எந்திச்சு போய் மூஞ்ச கழுவிட்டு வந்து காப்பியைக் குடி” என கூறிவிட்டு அறையை விட்டு வெளியே சென்றார்.
‘இந்த அம்மா கிட்ட இப்படி டெய்லி அசிங்கப்படுறதே நம்ம பொழப்பா போச்சு. சரி எந்திப்போம். இல்லனா சுப்பு காண்டாகிரும்.’ என மனதில் நினைத்தவள், முகத்தைக் கழுவிவிட்டு சமையலறை சென்றாள்.
“சுப்பு காபி கொடு”
“அதான் கிட்சன் வரைக்கும் வந்துட்டல்ல. காபி சட்டி இங்க தான் இருக்கு ஊத்தி குடிக்க வேண்டியது தானே.” என அவளின் அவளின் சுப்பு கூற,
“அதெப்படி என்ன தான் நானா ஊத்தி குடிச்சாலும் உன் கையால வாங்கி குடிச்ச மாதிரி வருமா?” என ஒரு பெரிய ஐஸ் மலையை அவரின் தலையில் வைத்தாள் அவள்.
“சோம்பேறி தனத்துக்கு இப்படி ஒரு சமாளிப்பு வேற. இந்தா குடி” என திட்டியவர் அவளுக்கு காபியைக் கொடுப்பதில் தவறவில்லை.
“ஈஈஈ கண்டுபிடிச்சிட்டியா சுப்பு. நீ ரொம்ப புத்திசாலி மா.” என மீண்டும் கூற வர, அவரோ தன் கையில் இருந்த கத்தியையும் மலரையும் மாற்றி மாற்றி பார்த்தார்
‘ஆஹா இதுக்கு மேல இங்க இருந்தா நமக்கு தான் ஆபத்து. எஸ்கேப்’ என மனதில் நினைத்து கொண்டு,
“அப்பா கூப்பிட்டீங்களாப்பா இதோ வந்துட்டேன் பா” என அழைக்காத தன் தந்தைக்கு பதில் கூறிக்கொண்டு தப்பி வெளியில் சென்றாள்.
“என்ன மா? ஆச்சர்யமா இருக்கு. நான் கூப்பிட்டாலே ஏதாவது வேலை செய்ய சொல்லிருவனோன்னு பயந்து என்னன்னு கேட்க மாட்ட. இப்போ நான் கூப்பிடவே இல்ல. நீ கூப்பிட்ட மாதிரி வர.” என அவளின் தந்தை வெங்கடேசன் கேட்க,
“ஐயோ அப்பா. மெதுவா பேசுங்க. சுப்பு கிட்ட தப்பிக்குறதுக்கு நான் இப்படி சொல்லிட்டு வந்தா நீங்களே மாட்டி விட்டுருவீங்க போலயே. போங்க அப்பா.” என செல்லமாக கோபித்துக் கொள்ள அவரோ,
“அதான் நான் இருக்கேன்ல தங்கம். உன்மேல அவளைக் கையை வைக்க விட்டுருவேனா. கையை வெட்டி காக்காக்கு போட்டுற மாட்டேன்.” என தன் மகளுக்கு பரிந்து பேச சமையலறையில் இருந்து ஒரு கரண்டி வெளியே வந்து விழுந்தது.
“குட்டிமா அப்பாக்கு வெளியே கொஞ்சம் வேலை இருக்கு போய்ட்டு வரேன்” என தன் மனைவிக்கு பயந்து நாசுக்காக தப்பித்து சென்றுவிட்டார் அந்த பெரிய மனிதர். அதனைக் கண்டு சிரித்த மலரோ தன் அன்னையிடம்,
“சுப்பு உனக்கு வர வர கோவம் அதிகமா வருது. இது நல்லதுக்கு இல்ல சொல்லிபுட்டேன்.” என மீண்டும் தன் அன்னையை வம்பிழுக்க அடுத்த கரண்டி வெளியே பறந்து வந்து விழுந்தது.
‘ஆத்தி கொஞ்சம் மிஸ்ஸா ஆகிருந்தா என்ன ஆகிருக்கும். மலரு எந்திச்சு ஓடிரு’ என தனக்கு தானே சொல்லி கொண்டவள் காபியுடன் வாசலுக்கு சென்றாள்.
இப்படி தினமும் சுப்புவிடம் அசிங்கப்பட்டு சில பல அர்ச்சனைகளை வாங்குவது தான் நம்ம மலருடைய வேலை. படித்தது இளங்கலை உளவியல். விரும்பி படித்தது தான். சுட்டித்தனம் அதிகம். வெளியே தெருவில் இருக்கும் சிறுவர்களுடன் சேர்ந்து விளையாடுவது, கவிதை எழுதுவது, படம் வரைவது இதெல்லாம் தான் நம்ம மலரின் பொழுதுபோக்கு. ஆனால் செய்யும் வேலை எல்லாம் அவ்வளவு நேர்த்தியாக செய்வாள்.
வெளியில் வந்தவளோ தன் வீட்டு வாசற்படியில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டே குளம்பியை ருசித்துக் குடித்துக் கொண்டிருந்தாள். அப்பொழுது வெளியே சென்ற சிறுவனிடம்,
“டேய் சோனு… என்ன டா? அக்காவ கண்டுக்காம போற” என இவள் கேட்க,
“அட போ கா. உன்மேல செம காண்டுல இருக்கேன். பேசமாட்டேன்.” என அவன் முகத்தைத் திருப்பிக் கொண்டு சொல்ல,
“ஏன் டா? நான் தான் கோபப்படணும். இன்னைக்கு விளையாட கூப்படவே இல்லல.” என இவள் குறைக்கூற,
“வேணாம் கா. அக்காவாச்சேன்னு பார்க்குறேன். ஏதாவது திட்டிற போறேன். மதியம் எவ்வளவு நேரம் கத்திட்டு இருந்தேன் உன்ன. நீ நல்ல இழுத்து போர்த்திட்டு தூங்கிட்டு பேசுற பேச்ச பாரு. உன்னால நாங்க யாருமே இன்னைக்கு விளையாடல தெரியுமா.” என அவன் பாவமாகக் கூற,
“ஈஈஈ அப்படியா டா. சரி கோச்சுக்காத. நாளைக்கு கண்டிப்பா வரேன். சரியா.” என இவள் கேட்க அவனோ முறைப்பை மட்டுமே பதிலாக கொடுத்து சென்று விட்டான்.
‘வர வர சின்ன பிள்ளைங்க கூட நம்மள மதிக்க மாட்டேங்குதுங்க. இப்படியே போனா நம்ம பொழப்பு நாறிடும் போல.’ என மனதில் நினைத்தவாறு அமர்ந்திருக்க அப்பொழுது அங்கு ஒருவர் வந்தார்.
“என்ன மா மலர்? எப்படி இருக்க?” என அவர் கேட்க,
“மணி தாத்தா எப்படி இருக்கிங்க? நான் நல்லா இருக்கேன். புது வீட்டுக்கு போனதுல இருந்து என்னைப் பார்க்க வரவே இல்லைல நீங்க. போங்க தாத்தா.” என இவள் செல்லமாக கோபித்து கொள்ள,
“என்ன டா பண்ண சொல்ற என்னை? என் மகன் அங்க வீடு கட்டுனதுல இருந்து இங்க வர முடில. எனக்கு இந்த வீடு தான் பிடிச்சுருக்கு. நாங்க இங்க இருக்கோம்னு சொன்னாலும் கேட்க மாட்டேங்குறான். என்கூட தான் இருக்கணும்னு கூட்டிட்டு போய்ட்டான். தூரமா இருக்குறதுனால தான்டா வர முடியல. கோச்சுக்காத தங்கம்.” என அவர்கூற,
“சரிங்க தாத்தா. உள்ள வாங்க” என அவள் கூப்பிட,
“இல்ல மா அவசரமா போகணும். ஒரு விஷயம் சொல்லணும் அதான் வந்தேன். அம்மா எங்க டா?” என அவர் கேட்க இவளும் சுப்புவை அழைத்தாள்.
“அடடே வாங்க பா. உள்ள வாங்க.” என சுப்பு அவரை அழைக்க,
“என்னமா லட்சுமி எப்படி இருக்க? இந்தா டா. எதிர்த்த வீடு சாவி. நாளைக்கு இங்க புதுசா ஒருத்தங்க குடி வர போறாங்க. அதான் சாவி உங்ககிட்ட குடுத்துட்டு போலாமேன்னு வந்தேன். நான் ஆசையா கட்டுன வீடு. பூட்டியே இருந்தா நல்லா இருக்காதுல. அதான் வாடகைக்கு விடலாம்னு யோசிச்சேன். நாளைக்கு ஒரு தம்பி வந்து சாவி வாங்கும். கொடுத்துரு அவன்கிட்ட” என இவர் கூற,
“சரிங்க பா கொடுத்துருறேன். குடும்பம் எப்படி பா? சின்ன குடும்பமா? பெரிய குடும்பமா? வர போறது.”
“சின்ன குடும்பம் தான் மா. பாட்டி பேரன் பேத்தி மூணு பேர் தான். அந்த பையனும் நல்ல பையன் தான். சரி மா நான் வரேன். மலர் பாய் மா” என கூறி அவர் சென்று விட்டார். இங்கே மலரோ,
‘அவர் சொல்றத பார்த்தா வயசு பையன்னு தான் தோணுது. ஐ சூப்பர். இனிமே நமக்கு எண்டெர்டெய்ன்மெண்ட் தான். கடவுளே வரவன் அழகா இருக்கணும். வயசு பொண்ணா இருந்துட்டு சைட் கூட அடிக்கலைன்னா எப்படி. பார்க்கலாம் யாருன்னு’ என மனதில் நினைத்துக்கொண்டவள் எழுந்து உள்ளே சென்றாள்.
________________________
மீனாட்சி அம்மன் வீற்றிருக்கும், மல்லிகைப் பூவிற்கு பெயர் போன நம் மதுரை மாநகரின் மாநகர காவல் நிலையத்தில் தன் நண்பனும் சக காவலருமான ராஜாவிடம் பேசிக்கொண்டிருந்தான் அவன்.
“என்ன மச்சான் இப்படி ஆகிட்டு? நான் ஊருக்கு போயிட்டு வரதுக்குள்ள உன்னை ட்ரான்ஸ்பர் பண்ணுவாங்கன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை. இப்போ எதுக்கு உன்னை ட்ரான்ஸ்பர் பண்றாங்க?” என தன் நண்பனை பணிமாற்றம் செய்த ஆதங்கத்தில் ராஜா தன் நண்பனிடம் கேட்டுக்கொண்டிருந்தான்.
“விடு டா. இது கண்டிப்பா அந்த மினிஸ்டரோட வேலையா தான் இருக்கும். என்ன ட்ரான்ஸ்பர் பண்ணிட்டா மட்டும் அவனை நான் விட்டுருவேனா. அவனுக்கு ஒரு முடிவு கட்டுறேன். இப்போ அதுக்கான நேரம் இல்ல. அவனைக் கொஞ்சம் விட்டு தான் பிடிக்கணும்.” என தன் கண்களில் அனல் கக்க கோபத்துடன் கூறினான் அவன்.
“சரி மச்சான். உன் பெயருக்கு ஏத்த மாதிரி நீ சும்மாவே கோபமா தான் இருப்ப. இதுல அந்த மினிஸ்டர் வேற உன்னை சீண்டுறான். அவன் கதி அதோ கதி தான். சரி டா திருநெல்வேலிக்கு தானே ட்ரான்ஸ்பர் பண்ணிருக்காங்க பார்த்துக்கலாம். வீடு எல்லாம் பார்த்துட்டியா டா.” என ராஜா கேட்க,
“ஆமா டா தெரிஞ்சவங்க கிட்ட சொன்னேன். அவங்களும் ஓனர்கிட்ட பேசிட்டாங்க. ஊருக்கு நடுவுல தான். நாளைக்கு போய் ஒரு தடவ வீடு எப்படி இருக்குன்னு பார்த்துட்டு வரலாம்னு இருக்கேன்.” என அவன் கூற,
“ஓகே டா பார்த்துட்டு வா. வீட்டுல சொல்லிட்டியா? இதைப்பத்தி.” என ராஜா கேட்க,
“ஆமா டா சொல்லிட்டேன். பாட்டி சரின்னு சொல்லிட்டாங்க. ஹர்ஷு தான் சோகமா இருக்கா. இந்த ஊரு நல்ல செட் ஆகிட்டு அவளுக்கு. இப்போ வேற ஊரு போகணுமேன்னு ஃபீல் பண்ணுறா.” என தன் தங்கையின் கவலையைப் பற்றி அவன் கூற அவளின் பெயர் கேட்ட உடனே ராஜாவின் முகம் ஒரு நிமிடம் மாற பின் மீண்டும் இயல்பு நிலைக்கு வந்தது.
“சரி டா மச்சான். போக போக பழகிடுவா. பாட்டியைக் கேட்டதா சொல்லு.”
“சொல்ல மறந்துட்டேன் டா. பாட்டி உன்னைப் பத்திக் கேட்டாங்க. வர வர நீ பாட்டியைப் பார்க்க வரதே இல்லன்னு. வா டா வீட்டுக்கு.” என அவன் கூற,
“இல்ல டா வீடு ஷிப்ட் பண்ண உனக்கு உதவி பண்ண எப்படியும் வருவேன்ல அப்போ பாட்டிகிட்ட பேசிக்கிறேன். இப்போ அவசரமா வெளிய போக வேண்டியிருக்கு.”
“சரி டா.”
“ஆமா மச்சான் எனக்கு ஒரு சந்தேகம்” என ராஜா கேட்க என்ன என்ற ரீதியில் அவன் பார்த்தான்.
“இல்ல மச்சான். நீ ரொம்ப கோவப்படுறதுனால உனக்கு இந்த பெயரை வச்சாங்களா? இல்ல இந்த பெயரை வச்சதுனால தான் ரொம்ப கோபப்படுறியா?” என அதிமுக்கியமான சந்தேகத்தைத் தன் நண்பனிடம் கேட்க அவனோ, ‘இந்த சந்தேகம் ரொம்ப அவசியமா’ என்ற கேள்வியை விழியில் தேக்கி ஒரு பார்வைப் பார்க்க ராஜாவோ,
‘எதுக்காவது வாயைத் திறந்து பேசுறானா பாரு. கண்ணாலேயே கட்டி போடுறான் யா’ என மனதில் நினைத்து கொண்டு வெளியே,
“சரி சரி முறைக்காத. சும்மா கேட்டேன். நான் கிளம்புறேன் மச்சான். பாய் டா” என கூறிக்கொண்டு கிளம்பிவிட்டான் ராஜா. இவனும் ராஜாவிடம் விடைபெற்றுக்கொண்டு கிளம்பினான். செல்லும் வழியில் பஞ்சு மிட்டாய் அவன் கண்ணில் பட அதில் இரண்டை வாங்கி கொண்டு வீட்டிற்கு சென்றான். வீட்டினுள் நுழைந்தவனிடம் அவனின் பாட்டி,
“என்ன ராசா? இன்னைக்கு ரொம்ப நேரம் ஆயிட்டு.” என கேட்க அப்பொழுது தான் மணியைப் பார்க்க அது எட்டு என காட்டியது.
“இல்ல பாட்டி ராஜா கூட பேசிட்டு வந்தேன். அதான் நேரம் ஆயிட்டு.”
“அந்த பைய இன்னைக்கும் என்னைப் பார்க்க வரலைல. கவனிச்சுக்குறேன் அவனை.” என பாட்டி ராஜாவை வசைப்பாட,
“வீடு ஷிப்ட் பண்ணும் போது வரேன்னு சொல்லிருக்கான். ஹர்ஷு எங்க பாட்டி?” என அவன் தன் தங்கையைத் தேட,
“காலைல இருந்து ரூம் உள்ளேயே இருக்கா பா. சாப்பாடு கூட உள்ள போய் தான் கொடுத்துட்டு வந்தேன். நீ போய் என்னன்னு கேளு அவகிட்ட” என பாட்டி கூற அவளின் அறைக்கு சென்றான். கதவு திறந்திருக்க லேசாக தட்டினான்.
“உள்ள வாண்ணா. திறந்து தான் இருக்கு.” என உள்ளிருந்து குரல் கொடுத்தாள் ஹர்ஷினி. உள்ளே சென்றவன்,
“ஹர்ஷு. இப்போ எதுக்கு இப்படி இருக்க? என் வேலை அப்படி. அடிக்கடி ட்ரான்ஸ்பர் பண்ண தான் செய்வாங்க. இதுக்கெல்லாம் இப்படி இருப்பியா?” என கேட்க அவளோ பதில் கூறாமல் சோகமாகவே இருந்தாள். இவனோ தான் வாங்கி வந்த பஞ்சு மிட்டாயை அவள் அருகே வைத்து விட்டு எதுவும் பேசாமல் அவனின் அறைக்கு சென்றுவிட்டான். அதனைக் கண்டவளோ,
‘பாசத்தைக் கூட வெளிப்படையா காட்டாம மறைமுகமா காட்டிட்டு போறான் பாரு. பாவம் அண்ணனும் என்ன பண்ணும். நம்ம கவலைப்பட்டா அப்புறம் அதுவும் கவலைப்படும். வெளியைக் கூட காட்டிக்காது.’ என மனதில் நினைத்து வருத்தப்பட்டவள் அவனின் அறைக்கு சென்று,
“அண்ணா சாப்பிட வா.” என தன்னை சகஜமாக ஆக்கிக்கொண்டு அவனை அழைக்க அவனும் சிறு சிரிப்போடு சாப்பிட வந்தான். மூவரும் சாப்பிட அமர்ந்தனர்.
“எப்போண்ணா கிளம்புறோம்?” என சாப்பிட்டு கொண்டே ஹர்ஷினி கேட்க,
“நாளைக்கு நான் போய் வீடை ஒருதடவை பார்த்துட்டு வரேன். பிடிச்சிருந்தா நாளைக்களிச்சு கிளம்பிடலாம்.” என கூற,
“சரிண்ணா முதல்ல கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு. இப்போ ஒன்னும் இல்ல. போக போக பழகிரும்.” என தன் அண்ணண் தன்னால் கவலைப்படக் கூடாது என ஆறுதலாக கூறினாள். அவனும் சிறு சிரிப்போடு சாப்பிட்டுவிட்டு உள்ளே சென்றான்.
“டேய் ஒரு நிமிஷம் நில்லு.” என பாட்டி அவனை செல்லவிடாமல் தடுக்க, அவனோ என்ன என்ற ரீதியில் பார்த்தான்.
“ஏன் டா நீ இப்படி இருக்க? உனக்கு எங்க ரெண்டு பேர் மேலேயும் பாசம் அதிகமா இருக்குன்னு எனக்கு நல்லாவே தெரியும். அதை ஏன் டா வெளிப்படையா காமிக்க மாட்டேங்குற? என்னைக்காச்சு சந்தோசமா சிரிச்சுருக்கியா. இவ யாருடா? உன் தங்கச்சி தான. அவகிட்ட உரிமையா பாசமா பேசுறதுக்கு உனக்கு என்ன? எத்தனை நாளைக்கு டா நீ இப்படியே இருக்க போற?” என பாட்டி ஆதங்கமாய் அவனிடம் கேட்க அவனோ,
“பாட்டி ப்ளீஸ் உங்களுக்கு தெரியாதது ஒன்னும் இல்ல. நான் இப்படி இருக்குறது தான் உங்க எல்லார்க்கும் நல்லது. என்னை இப்படியே விடுங்க.” என அவன் கோபமாக கூற ஹர்ஷினி அவனிடம்,
“அண்ணா நீ போய் தூங்குண்ணா. நான் பாட்டிகிட்ட பேசிக்கிறேன்.” என அவனை அனுப்பி வைத்தாள். அவன் சென்ற பின்பு ஹர்ஷினி,
“பாட்டி அண்ணனை ஏதும் கேட்காதீங்க. அவன் பாவம். நீங்க இதைக் கேட்டாலும் அவன் மாற மாட்டான். அவன் பழசை நினைச்சு இன்னும் கவலையா தான் ஆகுவான் பாட்டி.” என தன் அண்ணனுக்கு பரிந்து பேச,
“அது இல்ல டி மா. அவனுக்கு இப்போ வயசு இருபத்தி அஞ்சு ஆகுது. கிட்டத்தட்ட கல்யாண வயசு வந்துட்டு. இவன் இப்படியே உர்ருன்னு ஒழுங்கா பேசாம இருந்தா அவனுக்கு வர பொண்ணு என்ன நினைப்பா சொல்லு?” என அவனின் எதிர்காலத்தை நினைத்து பாட்டி கவலைப்பட,
“அட மங்கலம் இதுக்கு தான் கவலைப்படுறியா. அதெல்லாம் வர பொண்ணு இவன மாத்திடும். அதைப்பத்தி நீ கவலைப்படாத மங்கலம். சரியா.” என வேண்டுமென்றே தன் பாட்டியை வம்பிழுக்க அவரின் பெயர் சொல்லி அழைக்க அதில் கடுப்பான பாட்டியோ,
“அடியே என்ன தைரியம் இருந்த என்னை பேர் சொல்லி கூப்பிடுவ.” என அடிக்க துரத்த அவர் கைகளில் பிடிபடாமல் “குட் நைட் மங்கலம்” என கூறிக்கொண்டே தன் அறைக்கு ஓடிவிட்டாள். சிறிது நேரத்தில் அனைவரையும் நித்ராதேவி ஆட்கொள்ள அனைவரும் உறங்கினர்.
அங்கே மலரோ தன் தோழி விதுஷாவுடன் அலைப்பேசியில் பேசிக்கொண்டிருந்தாள்.
“என்ன டி? இந்த நேரத்துல கால் பண்ணிருக்க என்ன விஷயம்?” என மலர் கேட்க,
“அது வந்து மச்சி. நான்….” என விதுஷா இழுக்க,
“இழுவையே சரி இல்லையே. சட்டு புட்டுன்னு விஷயத்துக்கு வா டி பன்னி” என கடுப்பாகி மலர் கேட்க,
“நான் என் மாமா பையன் ரகுவை லவ் பண்றேன்னு நினைக்கிறேன் டி” என விதுஷா வெட்கப்பட்டு கொண்டே கூற,
“அடிப்பாவி இது எப்போ. அந்த வேலையை நீயும் ஆரம்பிச்சுட்டியா.” என மலர் கேட்க,
“ஆமா டி. திடீர்ன்னு தான். மனசு முழுக்க அவன் தான் இருக்கான்” என மீண்டும் வெட்கப்பட்டுக்கொண்டே கூற,
“நல்லா தானேடி இருந்த.. புசுக்குன்னு எங்க இருந்துடி வருது இந்த லவ்வு” என சலித்துக்கொண்டு மலர் கேட்க,
“போடி ரொம்ப தான் சலிச்சுக்குற. நீ இதெல்லாம் பண்ணாமையா இருக்க போற?” என விதுசா கோபப்பட்டு கேட்க,
“ச்ச ச்ச நான் ஒன்லி சைட் மட்டும் தான். இந்த காதல் கத்திரிக்காய் எல்லாம் எனக்கு செட் ஆகாது.” என பிற்காலத்தில் ஒருவன் பின் காதல் கொண்டு அலையப்போவது தெரியாமல் சவாலாக கூறினாள்.
“பார்க்க தான போறேன். என் சாபம் டி. நீ ஒருத்தன் பின்னாடி காதலிச்சு லோ லோன்னு அலையைப் போற. உன்னை அவன் ரொம்ப அலைய வைப்பான் பாரு.” என தான் விளையாட்டாய் கூறுவது நிஜமாக நிகழப்போவது அறியாமல் விதுஷாவும் சாபம் விடுகிறாள்.
“ஆஹான் அதையும் பார்த்துரலாம். என்னையே அலைய வைப்பானா பார்க்கலாம். சரி டி எப்படியோ காதல்ல விழுந்துட்ட நல்லா இருந்துட்டு போ. எனக்கு தூக்கம் வருது நாளைக்கு பேசுறேன் பாய் டி.” என கூறிவிட்டு நிம்மதியாக தூங்க செல்ல விதியோ ‘இந்த நிம்மதியான தூக்கம் எல்லாம் உனக்கு கொஞ்சம் நாள் தான்’ என அவளைப் பார்த்து சிரித்தது.
மௌனம் எரியும்…