Loading

மோதும் மேகங்கள்-7💝
         
            ஆதி கோபமாக செல்ல இசை அவன் பின்னாலேயே “ஆதி ஆதி” என கத்திக் கொண்டே சென்றாள். ஆனால் அவன் அவள் கத்துவதை எல்லாம் செவிகளிலே வாங்காமல் தன் காரை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டான்.

           இசை ஓடி வந்து தன் கால் முட்டியில் இரண்டு கையையும் வைத்து குனிந்து மூச்சு வாங்கிக் கொண்டிருந்தாள். இசை ஓடி சென்றதைக் கண்ட அபினாஷ் அவனும்  இசையின் பின்னாலேயே  வந்தான். “என்ன இசை? என்ன ஆச்சு? ஏன் ஆதி சார் உன்கிட்ட கூட சொல்லாம போயிட்டாரு?” என வினவினான்.

      “அது தெரிஞ்சா நான் ஏன் ஓடி வர போறேன்?” என கடுப்புடன் இசை அபியை திருப்பி கேட்டாள்.

        அபி  “சரி சரி இசை கூல் . நான் விசாரிக்கிறேன்” என கூறிவிட்டு அசிஸ்டன்ட் டைரக்டரை அழைத்து படப்பிடிப்பில் என்ன நடந்தது என விசாரித்தான். இசையிடம் வந்த அபி “ஆதி சார் இப்ப நடிச்ச சீன ரெண்டு மூணு முறை ஷூட் பண்ணிட்டு இருந்தாங்களாம். ஆனா டைரக்டருக்கு அது திருப்திய இல்லன்னு பேக்கப்னு சொல்லிட்டு இருக்காரு. அதான் ஆதி சார் கோபமா போறார்னு நினைக்கிறேன்”  என அவன் விசாரித்து அறிந்ததை அவளிடம் கூறினான்.
    
             இசை  “சரி அபி. நாளைக்கி பார்க்கலாம் .பாய்”  எனக் கூறிவிட்டு அவளது ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு சென்று விட்டாள். பாதி வழியிலேயே வண்டியை நிறுத்திவிட்டு இசை யாருக்கோ அலைபேசியில் அழைத்தாள்.

         மறுபுறம் அவளது அழைப்பை ஏற்றவளோ நிம்மதியாக ஜூசை அருந்தி கொண்டே  “என்னடி இசை இன்னிக்கி வேலையெல்லாம் எப்படி போச்சு? ஆதி சார் கிட்ட நீ வம்பு எதுவும் பண்ணலல்ல?” என  அழைப்பை ஏற்றதும் அவளைப் பற்றி விசாரிக்காமல் அவளது முதலாளியை பற்றி விசாரித்ததில் கடுப்பான இசை “எனக்கு அவனோட அட்ரஸ் வேணும்” எனக் கூறினாள்.

        ஸ்வேதா  “யாரோட அட்ரஸ்?”  என புரியாமல் கேட்டாள்.
 
         “ஆதியோட அட்ரஸ் தான்” என இசை பொறுமையை இழுத்துப் பிடித்துக் கொண்டு கேட்டாள்.

           வசதியாக சாய்ந்து அமர்ந்த இருந்தவள் எழுந்து அமர்ந்து கொண்டு “இசை நீ ஆதி சாரயா அவன் இவனு பேசிட்டு இருக்க? என்னடி பிரச்சினை பண்ணி வச்ச இப்போ? நாங்க உனக்கு எவ்வளவு முறை சொன்னோம் ஒழுங்கா வேலைய மட்டும் பாருனு. போய் சண்டை போடாதனு. ஆதி சார் என்ன பண்ணாரு?” என அவள் இம்முறையும் விசாரிக்காமல் இசையின் மீது பழி போட்டு அடுக்கடுக்காக கேள்வி கேட்டுக்கொண்டிருந்தாள்.

             “ஹேய் நிறுத்துடி. நான் அவன் கூட எல்லாம் எந்த சண்டையும் போடல” என வாய் கூசாமல் பொய் உரைத்தாள் இசை.

          “அப்பாடா”  என பெருமூச்சு இழுத்துவிட்டு  “அப்புறம் எதுக்கு அவரோட அட்ரஸ் கேக்குற?”  என பொறுமையாக வினவினாள் ஸ்வேதா.

          “ஒரு அசிஸ்டன்ட்டா  அவரோட அட்ரஸ் தெரிஞ்சு வச்சுக்கணும்ல்லடி அதுக்கு தான் கேட்டேன்” எனக் கூறினாள் இசை.

         ஸ்வேதா இசைக்கு ஆதியின் வீட்டு முகவரியை குறுஞ்செய்தியாக அனுப்பி விட்டு  “நான் கூட நீ ஆதி சார்கிட்ட துடுக்குத்தனமா ஏதாச்சு பேசி இருப்பியோனு  நினைச்சி  பயந்துட்டே இருந்தேன் இசை.உண்மைய சொல்லனும்னா முகிலன் சொன்னப்ப கூட எனக்கு அவ்வளவ நம்பிக்கை இல்லை. நானே இன்னிக்கு உனக்கு கால் பண்ணி கேக்கலாம்னு  நெனச்சிட்டு இருந்தேன். ஆனா ஒரே நாள்ல நீ இவ்ளோ பொறுப்பான அசிஸ்டன்ட்டா மாறுவனு நான் எதிர்பார்க்கல. ஐம் வெரி ஹாப்பி” என திரும்பியும் சாய்ந்து அமர்ந்து கொண்டு பழச்சாறை அருந்தி கொண்டே கூறினாள்.

         “சரி சரி நீ ஜூஸ் குடிச்சிட்டு ரெஸ்ட் எடு. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. நான் அப்புறமா பேசறேன்” எனக் கூறிவிட்டு ஒரு பாய் கூட சொல்லாமல் அழைப்பை துண்டித்தாள் இசை.

         இசைக்கு ஆதி கோபமாக போனது ஏதோ தவறாக தோன்றியது. அபினாஷ் விசாரித்து கூறிய செய்தியை கேட்ட பின்பும் கூட அவளால் அதற்கு தான் ஆதி கோபப்பட்டு உள்ளான் என நம்ப முடியவில்லை. அவன் வீட்டிற்கே சென்று கேட்டு விடலாம் என நினைத்துக் கொண்டு தான் ஸ்வேதாவிடம் இருந்து ஆதியின் வீட்டு முகவரியை வாங்கினாள்.

            நேராக ஆதியின் வீட்டிற்கு சென்ற இசை, அவ்வீட்டின் பிரம்மாண்டத்தை கண்டு அசந்து அங்கே நின்று விட்டாள். அவ்வீடு ஏதோ கோட்டை போல் காணப்பட்டது. பெரிய மதில் சுவர்கள், காவலாளி என வெளியில் இருந்து பார்க்கும் போதே அவளுக்கு அரண்மனை போல் தோன்றியது.

           ஆதியின் வீட்டிற்குள் செல்ல போனவளை தடுத்த காவலாளி “யாருமா நீ?” என வினவினார்.

        “நான் ஆதிய பாக்கணும்”  என இசை கூற அவருக்கு தான் ஒரு சாதாரண பெண் வந்து ஆதி என ஒருமையில் அழைக்கிறாளே இவள் உண்மையாகவே ஆதி சாரை பார்க்க தான் வந்திருப்பாரா என  சந்தேகம் எழுந்து அவளை உற்றுநோக்கி கொண்டிருக்க  “ஹலோ” என அவர் முகத்திற்கு நேராக கையை அசைத்து  “நான் ஆதிய பாக்கணும்னு சொன்னேன்”  என அவருக்கு மறுபடியும் நினைவூட்டினாள் இசை.

        “ஆதி சார் ரொம்ப கோபமா உள்ள போனாருமா. அப்புறம் வந்து பாரு” எனக் கூறி அந்த காவலாளி இசையை ஆதியை பார்க்க மறுத்து விட்டார்.

       “அவன் கோபமா வந்ததுனால தான், நான் இப்ப பார்க்க வந்திருக்கேன்”  என இசை அவரிடத்தில் உண்மையை கூற  ‘இந்த பொண்ணு ஆதி சாரோட ஃபேன் போல இருக்கு. எப்படியாச்சும் பார்த்தனும் நினைச்சுகிட்டு நாம சொல்றதை வெச்சே நம்மள மடக்கி உள்ள போக நினைக்குது’ என நினைத்துக் கொண்டே  “உன்கிட்ட அப்பாயிண்ட்மெண்ட் இருக்காமா?” எனக் கேட்டார்.

        “ஆதியை பார்க்க எல்லாருக்கும் அப்பாயிண்ட்மெண்ட் கொடுக்க வேண்டியதை நான் தான். நான் அவனோட அசிஸ்டன்ட்” என இசை கூறினாள்.

         அந்த காவலாளி  “ஏம்மா கதை விடுறதுக்கும் ஒரு அளவில்ல? நீ ஆதி சாரோட  ஃபேனனு  சொல்லி இருந்தா கூட, நானே இரக்கப்பட்டு உன்ன சார பார்க்க வச்சிருப்பேன். ஆனா நீ அநியாயத்துக்கு சாரோட அசிஸ்டன்ட்னு பொய்  சொல்றீயே” என அவர் ஆதியிடம் வேலை செய்வதை இசையிடம் பந்தா காட்டிக் கொண்டிருந்தார்.

           இசையை நம்பாமல் அவளை அவமானப் படுத்துவதை போல் அவர் கூறியதும்  “நான் ஏன் பொய் சொல்லப்போறேன்? உண்மையாவே நேத்து அவன் தான் என்ன அசிஸ்டன்ட் நியமிச்சான். வேணும்னா அவன கூப்பிட்டு கேளுங்க”  என அவரிடம் கத்திக் கொண்டு இருந்தாள்.

        “மா சார் ஏற்கனே டென்ஷன்ல இருக்காரு. நீ பேசறது எல்லாம் கேட்டா எனக்கே கோவம் வருது. அவ்வளவு பொய் பேசுற. சார் பார்த்தாருன  அவருக்கு இன்னும் டென்ஷன் அதிகமா தான் ஆகும். நீ கிளம்பு”  என அவளை விரட்டிக் கொண்டிருந்தார்.

          வெளியில் ஏதோ சத்தம் கேட்பதை கேட்டு ஆதி அவனது பால்கனியில் இருந்து எட்டி பார்க்க அங்கே இசை நின்று கொண்டு காவலாளியிடம் கத்திக் கொண்டு இருந்தாள். ‘இவளுக்கு இதே வேலையா போச்சு. யார் கிட்டயாவது கத்திக்கிட்டு சண்டை போட்டுக்கிட்டு இருக்கனும்’ என நினைத்துக் கொண்டு நின்று கொண்டிருந்தான்.

        ஆதியை கண்டுவிட்ட இசை  “ஆதி ஆதி” என வீட்டு வாசலில் இருந்து கையை ஆட்டினாள். ஆனால் ஆதியோ எதுவும் சொல்லாமல் உள்ளே சென்று விட்டான்.

          “அதான் சார பாத்துட்டல்ல. அவரே உன்ன  கண்டுக்கலல. இப்ப கிளம்பு. வெளியில போய் இப்படி பொய் சொல்லிகிட்டு இருக்காத” என அந்த காவலாளி கூறிவிட இசைக்கு தான் அவமானமாக போய் விட்டது. ‘நான் என்ன பண்ணனு அவன் இப்படி பண்றான்? அவன் கோவமா இருக்கானு தானே நான்  பார்க்க வந்தேன். ஆனா இப்போ நம்மல தெரியாத மாதிரி அப்படியே அசிங்க படுத்திட்டு போயிட்டானே’  என  வருத்தப்பட்டுக் கொண்டே தனது ஸ்கூட்டியை நோக்கி நடந்தாள்.

        
           

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்