பேசும் மீன் விழிகள், குட்டி அதரங்கள், துருதுரு பேச்சு என மான் போல் துள்ளிக்கொண்டு விழியுடன் அரட்டையடித்து கொஞ்சி பேசி என அத்தனையும் செய்பவள். அவள் நிலா. வைவிழியின் உயிர்தோழி. தன் தாய், தந்தை, தம்பி என்ற அவளுக்கு அதிமுக்கியமான உறவுகளில் நிலாவுக்கும் முக்கிய பங்கு உண்டு. விழி அவளையும் தன் குடும்பத்தில் ஒருத்தியாய் தான் அவளை நடத்தினாள்.
தனக்கு ஒரு பொருள், உடை என எது வாங்கினாலும் நிலாவுக்கும் அதே போல் வாங்கிவிடுவாள். இதில் விழியின் தம்பி நவிலனுக்கு தான் பொறாமை வரும். பொருட்கள் வாங்கும் போதும் தன்னை நினைவில் கொள்ளவில்லை என்று. நிலாவும் அப்படி தான் தனக்கு வாங்கும் செய்யும் அனைத்தும் விழிக்கும் சேர்த்து தான். அவர்களுக்குள் சண்டைகளும் உண்டு சமாதானங்களும் உண்டு. சண்டை போட்டாலும் ஒரு நாள் கூட தாக்கு பிடிக்காது இவர்களுக்கு. அத்தனையும் மனதிற்கு இப்போதும் இனிமை தரக்கூடியவை.
அப்போது இருவரும் ஏழாம் வகுப்பு இறுதி பரீட்சை முடித்து விடுமுறையில் இருந்தனர். வைவிழி வீட்டில் புதியதாய் ஒரு நாய் குட்டி வங்கியிருந்தனர். அதுவோ கொழுகொழுவென்று உடலெங்கும் புசுபுசுவென்று முடி முளைத்து அழகாய் இருந்தது. வைவிழிக்கு அந்த நாய்க்குட்டி மிகவும் பிடித்துப்போனது.
நிலாவோ விடுமுறைக்கு அவள் அன்னையின் பிறந்த ஊருக்கு சென்றிருந்தாள். அதனால் அவளும் விழியை காண ஒரு வாரமாய் இங்கு இல்லை. அவள் இல்லா ஒரு வார பொழுதும் இந்த நாய்க்குட்டியுடனும் அவள் தம்பியுடனும் தான் கழிந்தது.
ஒரு வாரம் கழித்து தன்னை தோழியின் வீட்டில் விடுமாறு வேலைக்கு புறப்பட்டுக் கொண்டிருந்த அன்னையிடம் அடம் பிடித்துக் கொண்டிருந்தாள் நிலா. அவரும் அவளின் நச்சரிப்பு தாங்காமல், “சரி சரி கிளம்பு. போறப்ப ட்ராப் பண்றேன்”, என்றதும் துள்ளி குதித்தவள் அன்னைக்கு கன்னத்தில் முத்தமிட்டு, “என் செல்லம் என்று ஆரம்பித்தவள்” கொஞ்சிவிட்டு பின் தயாராகி வந்தாள்.
அவளை விழியின் வீட்டு வாசலில் இறக்கிவிட்டு அவள் உள்ளே சென்றதும் கிளம்பிவிட்டார் நிலாவின் அன்னை.
அவள் உள்ளே சென்றதும், வாயிலில் கட்டப்பட்டிருந்த கட்டி வைக்கப்பட்டிருந்த குட்டி நாய் குறைக்க ஆரம்பித்திருந்தது.
அதில் சற்று பயந்த நிலாவிற்கு கண்கள் கலங்கி விட, “அத்தை அத்தை” என்றாள், பதிலில்லை. அவள் விழியின் அன்னையை அத்தை என்று தான் அழைப்பாள். அவள் விழியன் குடும்பத்துக்கு ரத்தபந்தம் இல்லா உறவு. விழியும் நிலாவின் வீட்டில் அப்படி தான் பார்க்கப்பட்டாள். இவர்களின் நட்பில் ஆரம்பித்த பிணைப்பு குடும்பங்களையும் பிணைத்து.
அங்கு அனைவரும் கோவிலுக்கு சென்றிருந்தனர். ஆனால் விழியம் அவள் தம்பியும் மட்டும் வீட்டில் தான் இருந்தனர். அந்த நாய்குட்டியுடன் இருந்துகொள்கிறேன் என்று அடம்பிடித்து வீட்டில் தங்கிவிட்டாள் விழி உடன் அவள் தம்பியும் இணைந்து கொண்டான்.
பதில் குரல் வராததால் விழிக்கு குரல் கொடுத்தால் அவளோ அவளது அறைக்குள் தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டிருந்தாள். அவளுக்கு அந்த சத்தமும் கேட்டிருக்கவில்லை. நாயை கண்டு பயந்த நிலாவோ அழத் தொடங்கினாள்.
தண்ணீர் குடிக்க சமையலறை வந்த விழிக்கு யாரோ அழுகும் தேம்பல் சத்தம் கேட்கவும் உடனடியாக கதவை திறந்தவள் எதிரில் அழுது கொண்டிருந்த நிலாவை பார்த்ததும் “ஏன்டி அழுகிற?” என்றதும், அவள் நாய் குட்டியை கண்களால் காட்ட,
விழி,”அது நம்ம வீட்டுக்கு புதுசா வாங்கிட்டு வந்த நாய் குட்டி, ஒன்னும் பண்ணாது நீ வா” என்க இன்னும் அந்த நாய் குட்டி குரைப்பதை நிறுத்தவில்லை. மீண்டும் நாய்க்குட்டியையும் விழியையும் மாற்றி மாற்றி பார்க்க விழி,”வாடி” என்று உள்ளே இழுத்துச் சென்றுவிட்டாள்.
அவளுக்கு தண்ணீர் கொடுத்து சமாதானப்படுத்தியவள், வெளியே சென்ற அந்த நாய்க்குட்டியை கையோடு தூக்கி வந்தாள். மீண்டும் குரைத்தது தான் ஆனால் அவள் கையில் நாய்க்குட்டியை திணித்தவள் . அந்த குட்டி நாய்க்கு தீவனம் எடுத்து வர சென்றாள். அவள் திரும்பி வரும் பொழுது, நிலா அந்த நாய் குட்டியை கைகளில் ஏந்தி விளையாட ஆரம்பித்து இருந்தாள். அந்த நாய்க்குட்டியும் அவளுடன் நன்றாக ஒன்றி இருந்தது . இப்போது நிலாவிற்கு அந்த நாய் குட்டியின் குறைப்பு சிரிப்பை தந்தது. அந்த குட்டி குரல் குறைப்பு அவளுக்கு அழகாக தெரிந்தது.
பின் ஓடிப்பிடித்து விளையாடி கொண்டிருந்தனர் இவர்கள் மூவரும். வெகுநேரம் ஓடி மூச்சுவாங்க நின்றிருந்த நிலாவிடம் குதித்து விளையாடியது அந்த நாய்குட்டி. பார்த்ததும் மீண்டும் தூக்கி முகத்தில் உரசி கொஞ்சிகொண்டிருந்தவள் மற்ற இருவரும் மீண்டும் ஓடி வரவும் மீண்டும் ஓட்டம்பிடித்தாள் அந்த நாய்குட்டியுடன்.
சற்றுநேரம் இப்படியே விளையாடிக்கொண்டிருந்தவர்கள் விளையாட்டை நிறுத்த எண்ணி நின்றுவிட்டனர். மூவரும் மூச்சுவாங்க நின்றிருந்தனர் ஆனால் நிலாவுக்கு கொஞ்சம் அசௌகரியம் உண்டானதை உணர்ந்தாள் அவள் அவள் அதிகமாக ஓடியதால் என்று நினைத்தவளுக்கு மூச்சு வாங்குவது அதிகரித்ததே தவிர குறையவில்லை. இன்னும் கட்டுப்படுத்த முடியாமல் மூச்சிற்கு ஏங்கி அழுக ஆரம்பித்தாள் நிலா.
அதில் பதறிய விழி “நிலா என்ன ஆச்சு நிலா” என்றவளுக்கு நிலவிற்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை அந்த வயதில். தேம்பி அழுவதால் இப்படி முழு வாங்குகிறது போல என நினைத்தவளுக்கு ஏன் அழுகிறாள் என்று புரியவில்லை. உடனே தம்பியிடம் திரும்பியவள்,
“தண்ணி எடுத்துட்டு வாடா” சீக்கிரம் என்க அவனும் வேகமாய் எடுத்து வந்து நீட்டினான். தண்ணீரை அவளுக்கு புகட்ட முயற்சித்தனர் முடியவில்லை. விழிக்கு எண்ணம் முழுக்க பயம் பீடித்துக் கொண்டது. உடனே பக்கத்துக்கு வீட்டிற்கு செல்ல அங்கு வீடு பூட்டியிருந்தது. மீண்டும் வீடு திரும்பியவள். வீட்டு தொலைபேசி எண்ணிலிருந்து தந்தையின் எண்ணிற்கு அழைப்பு விடுத்தாள். கோவிலில் இருப்பதால் தொலைபேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது.
நிலாவின் அன்னையின் எண்ணிற்கு அழைத்தாள் ஏற்கப்படவில்லை. மீண்டும் தந்தைக்கு அழைக்க இம்முறை அழைப்பு சென்றது.
” கோவில் விட்டு கிளம்பிட்டோம் டா வந்துட்டு இருக்கோம்”, என்று பேசிவருக்கு விழியின்,”அப்பா ,அப்பா” என்ற விசும்பல் கேட்க பதறியவர்.
“விழி என்னடா ஆச்சு. விழி”, என்க ஒருவாரு அழுதுகொண்டே அவள் சொல்லிமுடிக்க,
“தோ அப்பாவும் அம்மாவும் வந்துட்டே இருக்கோம் டா, பக்கத்து வீடு ஆண்டி கிட்ட சொல்லி ஹாஸ்பிடல் போங்க”, என்க அவர்கள் இல்லாததை உரைக்கவும். “சரி நான் நிலா அம்மாக்கு பேசுறேன் டா நீ பயப்படாத ஒண்ணுமில்ல அத்தையை வர சொல்றேன்”, என்றவர் அடுத்து அழைத்து நிலாவின் அன்னைக்கு தான் . அவரும் விடயம் தெரிந்ததும் அலுவலகத்திலிருந்து பயந்து அழுதவாறு புறப்பட்டு சென்றிந்தார்.
இங்கு தோழியை கண்டு பயத்தில் விழி அழுக அவளை கண்டு அவள் தம்பி என மூவரும் அழுதுகொண்டிருந்தனர். நிலாவின் அன்னை வருவும் அவளும் மயங்கி சரிந்திருந்தாள். பதறி அழுத்தவர் நிலாவை தூக்கி கொண்டு மற்ற இருவரையும் ஆட்டோவில் உடன் ஏற்றிக்கொண்டு மருத்துவமனை புறப்பட்டார்.
அங்கே நிலாவை அவசர சிகிச்சையில் அனுமதித்து இருந்தனர். அதற்குள் விடயம் அறிந்து மருத்துவமனைக்கே வந்து சேர்ந்தனர் விழியன் பெற்றோர். விழியிடம் என்ன நடந்ததென்று விபரங்கள் கேட்டுக்கொண்டு மருத்துவரிடமும் உரைத்தனர்.
நிலாவின் அன்னையிடம் மருத்துவர் இதுவரை மூச்சுத்திணறல் வந்திருக்கிறதா என்று கேட்டவருக்கு, இல்லை என்ற பதில் கிடைக்க , “எது பூனா அலர்ஜி அப்டி ஏதும் இருந்திருக்கா?”
“இல்லை டாக்டர்”
“அவங்களுக்கு வீசிங் வந்திருக்கு அதுவும் ரொம்ப நேரம் ஆகிட்டதால கிரிட்டிக்கலா இருக்காங்க” என்றவர் நேரம் கடந்து வந்தவர் நிலா மூச்சுத்திணறலால் இறந்துவிட்டதாக கூற, அங்கேயே உடைந்து அழுத்துவிட்டார் அவள் அன்னை.
மருத்துவரும் அவளுக்கு மூச்சு திணறலுக்கு நாயின் முடி தான் காரணம் என்றுவிட, விழி இன்னும் அழுதாள். அப்போது தன்னுடன் இத்தனை நாட்கள் உடன் இருந்த தோழி இனி கிடையாதா. நாய்க்குட்டியை அவள் கையில் கொடுத்தது தான் தானே. அவளுடன் அந்நேரம் ஓடிவிளையாடியது தான் தானே. அப்போது அவள் இறப்பிற்கும் காரணம் தானே என்று அப்போது ஆரம்பித்த அவளது குற்றவுணர்வு இன்னும் நீண்டு கொண்டிருக்கிறது.
இவற்றை கூறி முடித்த விழியின் கண்களில் உயிர் இல்லை. இன்னும் இன்னும் குற்ற உணர்வு அல்லவா அதிகரித்து கொண்டிருந்தது. தனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது. இப்போதும் நிறையின் நிலையை தான் எண்ணி கொண்டிருந்தாள். அவனை எப்படி காப்பது என்ன இடம், எப்படி இங்கு வந்து சேர்ந்தோம் என்று புரியாது திக்கில்லாத காட்டில் தானே நிற்கிறார்கள். இப்போது தாங்கள் இருக்கும் இடமும் தெரியாமல் எப்படி திரும்புவது , மதியனை எப்படி காப்பது இப்படி ஒரு இதற்கு கூட பதில் இல்லாமல் பித்து பிடித்ததை போன்று இருந்தது விழிக்கு.
அவள் உணர்வுகள் அனைத்தும் முகத்தில் தாண்டவமிட்டு காட்டிக்கொண்டிருந்தது. அதனை அவதானித்த நிறைமதியன் அவன் கைகளை நீட்டி அவளின் தலைமுடியை கோதினான். அவன் அரவத்தில் நினைவுக்கு வந்த விழியோ அவனை அதிர்ச்சியாய் நோக்க ஒரு புன்சிரிப்பை உதிர்க்க , அந்த தலை கோதலில் ஆறுதல் அளித்தான் விழிக்கு. பார்த்துக்கொண்டே தான் இருந்தனர் பேசவில்லை. அங்கிருந்து சற்று தள்ளி வந்து நின்றுகொண்டனர் எழிலும் மொழியும்.எழில் தான் இழுத்து வந்திருந்தான். அவர்களை பார்த்த மொழியோ என்னடா நடக்குது இங்க? என்க.
எழிலன், “ஏன் உனக்கு தெரியாதா நீ தான் கிளோஸ் பிரெண்டு ஆச்சே?”
மொழி,“எது எனக்கு தெரியாதவா ? அப்ப அந்த குண்டு அங்கிள் வாழ்க்கை?”
எழிலன், “என்ன உளறுற ?”
மொழி,“பிலைட்டுல ஒரு அங்கிள் வந்தான். அவனைத்தானே அவ ஏர்போர்ட்ல வாவ்னு வாய பொலந்து பார்த்தா?”
எழிலன்,“எனக்கு தெரிஞ்சு பிலைட்டுல இருந்தே என் நண்பனை தான் வளைச்சு வளைச்சு சைட் அடிச்சா”.
மொழி,“அப்படியா சொல்லுற ?”
எழிலன்,“ஆமா அங்க பாரு நம்ம எழுந்து வந்து எவ்ளோ நேரம் ஆச்சு தெரிஞ்சுதா அந்த ரெண்டுத்துக்கும்”.
எழிலன்,“ம்ம் ஆமா நான் தான் தப்பா கெஸ் பண்ணிட்டேன் போல” .
இங்கு இவர்கள் பேச்சு வளர்த்துக்கொண்டிருக்க. அங்கு அமைதியாய் இருந்த இவர்களும் மௌனத்தை வளர்த்தார்கள்.
நிறைமதியனுக்கோ விழியை இனி பார்க்கமுடியாமல் போய்விடுமோ தான் இறந்துவிடுவோமோ என்கிற எண்ணம் சிறிதாய் முளைத்திருந்தது. விழியை பற்றிய சிந்தனை மட்டுமே அவனுள் வேராய் உள்நுழைந்து கொண்டிருந்தது. அவன் விமான நிலையத்திலேயே பார்த்திருந்தான் விழியை.
பார்த்த நொடியில் சட்டென கண்களில் ஒட்டிக்கொண்ட அவள் விம்பமும், கலவையாய் உணர்வுகளை வெளிப்படுத்திக்கொண்டிருந்த அவள் கண்களும் என நொடியில் ஆழமாய் அகத்தில் பந்திந்தவைகளை அத்தனை பிடித்தது. சொல்பேச்சு கேட்காமல் அவளை நோட்டமிட தூண்டிய விழிகளுக்கு கடிவாளமிட படாதபாடு பட்டிருந்தான்.
அவளிடம் நிற்காமல் செல்லும் கண்களை ஏன் தன்னால் தடுக்க முடியவில்லை. ஏன் என்ற அவனின் கேள்விக்கு அவனிடம் விடையேதும் இல்லை. ஆனால் வேண்டாம், இது வேண்டாம் பார்த்த மாத்திரத்தில் ஒருவர் மீது பிடித்தம் அது எப்படி சாத்தியம் . ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வேண்டுமென்றே அவளை பார்ப்பதை, கவனிப்பதை தவிர்த்தான்.
விமானத்தில் ஏறியவன் இவளை கண்டும் காணாது ஜன்னல் இருக்கையில் அமர்ந்து கொண்டான். மீண்டும் அதே தவறை தான் அவன் கண்கள் செய்தன. இப்படி தன் உணர்வுகளே தனக்கு சதிசெய்கிறதே என்று நொந்துகொண்டான். அதெப்படி ஒருவரை கண்டவுடன் அவருடன் தான் வாழ்க்கை வேண்டும் என முடிவு செய்யும் இந்த மனம் சுத்த மடத்தனமாக அல்லவா இருக்கிறது. தன் மனதோடு சண்டையிட்டான்.
அதற்குள் காரெழிலன் விழியை தோழியாக்கிவிட்டிருந்தான். நிறைமதியனுக்கு அவளை கவனிக்கவே வேண்டாம். ஆனால் அவன் செவிகளும் அவன் கட்டளையை மீறி அவள் பேச்சை அவள் குரலை கவனித்து கொண்டிருந்தது. காரெழிலன் பேசும்போது சுணங்கிய அவன் மனம் விழி பேசுகையில் தென்றல் வீசியதை போன்று இருந்தது. மீண்டும் கண்களில் அவளை காண வேண்டும் என்று சிறிது நேரம் அந்த கண்களை மறைத்த உறையை எடுத்து ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு ஜன்னல்புறம் திரும்பிக்கொண்டான். சற்று மேகக்கூடங்களை பார்த்து ரசித்து சிரித்தவனுக்கு யாரோ தன்னை பார்க்கும் உணர்வு. ஓரப்பார்வையில் கள்ளத்தனமாய் தெரிந்து கொண்டான் விழியின் பார்வையை. அசையவில்லை. உள்ளுக்குள் ஒரு குறுகுறுப்பு . என்ன பார்வை பார்க்கிறாள் இவள் தன்னை. அவனுக்கு கொஞ்சம் வெட்கமாகவும் இருந்தது. இதழ் கடித்தான் வெட்கத்தை காட்டாமல் இருக்க. ஐயோ எத்தனை கடினம். அப்போது தான் அவனுக்கு புரிந்தது ரசனையை மறைப்பதை காட்டிலும் வெட்கத்தை மறைப்பது எத்தனை கடினம் என்று.
மீண்டும் சிந்தித்தான் அவளை பார்க்காமல் கண்களை தடுக்கும் பொருட்டு அணிந்த அந்த கண் உறையை எங்கனம் கழற்றினான்?. கடவுளே தன்னை கூட தன்னால் கட்டுப்படுத்த முடியவில்லையே. இன்னும் பேசி கொண்டிருந்தான் காரெழிலன் தன்புறம் வரவேண்டிய அவளின் பார்வை வீச்சை பேசிப்பேசியே வரவிடாமல் தடுக்கிறானே என்று கோபம் வந்தது. அவள் பார்வை அவனுக்குத் தேவைபட்டது.
அவள் கவனம் தன்மீது இருக்கவேண்டும் அதற்கு நடுவில் அமர்ந்திருந்த எழிலனை ஜன்னல் பக்கம் அமர வைத்தான். இப்போது இருவருக்கும் நடுவில் அமர்ந்தவனுக்கு அவள் குரலும் அருகில், அவளும் அருகில் இருக்கும் வாய்ப்பு கிடைத்திருந்தது. இதற்கு நடுவில், அவன் காதில் புகைச்சல் வேறு அவனுக்கு இவள் புட் ஐஸ் ஆம் இவளுக்கு அவன் எலியாம் என்று. சாதாரணமாக இந்த பெயர்களை கேட்டிருந்தால் இவர்களை விசித்திர ஜந்துவாக பார்த்திருப்பான். இன்று தனக்கு ஏதும் அவள் செல்ல பெயர் வைக்கவில்லை என்று பொறாமையில் வெந்து கொண்டிருந்தான்.
அவள் அழும் நேரங்களில் ஆறுதல் கூறி தலைகோத நினைக்கும் மனதையும் கைகளையும் அடக்க பெரும்பாடுபட்டான் . என்னவென்று சொல்வது இந்த மனதிற்கு பார்த்த உடன் தோன்றியது காதல் என்றால் தன்னை பைத்தியக்காரன் என்பார்கள் என்று. அவளை மட்டுமே சுற்றித்திரிந்தது அவன் மனம் . இங்கு இவள் திரும்ப கிடைத்த போது அவன் பட்ட மகிழ்வை பகிர வார்த்தைகள் இல்லை . தனக்கான ஒட்டுமொத்த அதிர்ஷ்டமும் உபயோகித்து விட்டது போல் இருந்தது அவனுக்கு. கடவுள் நம்பிக்கை இல்லாதவன் கடவுளுக்கு நன்றி சொன்ன அதிசயம் நிகழ்ந்தது அங்கே.
அதைவிட அவள் இவனை கண்டதும் ஓடிவந்து அணைத்து ஆறுதல் தேடியது அவனை வானில் அல்லவா பறக்க செய்தது. என்ன செய்வது அவள் தோழியை நினைத்து அழுகிறாள் அழட்டும் அவளின் அத்தனை கண்ணீரும் தீர்ந்துவிடட்டும். என்று தோன்றியது. உடன் நின்றான் துணையாய். வாழ்க்கைக்கும் துணையாய் நிற்க பேராவல் கொண்டான். ஆனால் இப்போது அது நடக்குமா அவளை பிரிந்திடும் நேரம் நெருங்கிவிட்டதா, இல்லை.இல்லை. அவளுடன் இன்னும் கொஞ்ச நேரம் கழியாதா?, கூக்குரலிட்டு கதறியது மனம்.
அவள் வேண்டுமே, அவளுடன் நீண்டு வாழ வேண்டுமே, அவளுடன் காதல் கதைக்க வேண்டுமே , அவள் கொஞ்சல் மொழிகள் கேட்க வேண்டுமே, அவளை பற்றி இன்னும் இன்னும் அறிய வேண்டுமே, அவள் தனக்கு செல்ல பெயர் சூட்டிட வேண்டுமே, தன்னின் அவளுக்கான வேறு பரிணாமத்தை அவளுக்கே அவளுக்காய் காட்டிட வேண்டுமே, தோள் மீது சாய்த்து ஆறுதல் கூற வேண்டுமே, தோல் சுருங்கும் காலத்திலும் கை கோர்க்க வேண்டுமே, இத்தனை கனவுகளும் இல்லாமல் போய்விடும் நிலையில் இன்று அவன்.
இதையே யோசித்து கொண்டிருந்தவனின் தலைசுற்றுவது போல் தூக்கம் வருவதுபோல் இருந்தது.
நிலா இறந்தது அவளுக்கு ஏற்பட்ட மூச்சு திணறலால் நடந்தது அதற்கு ஏன் விழி நீ காரணம் சொல்லி குற்ற உணர்வில் இருக்க??