Loading

அத்தியாயம் 57

பிறை நிலவின் ஒளி மெல்ல பூமியை நனைக்கும் அந்தி சாயும் வேளை.

பயிற்சிக்குப் பின் அமைந்திருந்த ஓய்வுநேரத்தில் கூட, தேர்வுக்குரிய வீரர்களை தனியே அழைத்து, மேகோன் அளித்த உத்தரவின் பேரில் பயிற்சி குரு பொழியர் தங்களது புதிய பயிற்சிக்கட்டமைப்பை வடிவமைத்தார்.

அவர்களிடம் சிறப்பு படை குறித்து இன்னும் கலந்தாலோசிக்கவில்லை. மேகோனின் எண்ணத்தை நயனன் மட்டுமே அறிவான்.

அரண்மனைக்கு பின்புறமாக விரிந்த, இளஞ்சாம்பு மரங்களால் சூழப்பட்ட ஓர் இரகசிய மைதானம். இதன் விவரங்களை அறிந்த பொதுவானோர் யாருமில்லை. சிறப்பு படைக்காக ரகசியமாக உருவாக்கப்பட்ட தனிப்பயிற்சி களம். இங்கு நடக்கும் ஒவ்வொரு பயிற்சியும் ஒரு போர்க்களத்தைப் போலவே அமைந்திருந்தது. மேகோனின் எண்ணங்களும், எதிர்காலத்தின் படைத்தொடர்களும் அதிலேயே எழுந்து மூடியவையாக இருந்தன.

அந்த இரவில்…

வீரர்கள் குழுவாக நின்றனர். ஒவ்வொருவருடைய முகத்திலும் உறுதியும், இன்னும் புரியாத புதிரும் கலந்து காட்சியளித்தன.

“இனி தாங்கள் அனைவரும் ஒரு புதிய பயணத்தில் பங்கு பெற உள்ளீர்கள். இது ஒரு பயிற்சியே ஆனால், அதனை ஒரு நடவடிக்கையாக எண்ணுங்கள், இக்களத்தில் தங்களின் ஒவ்வொரு பயிற்சியும் ஓர் யுத்தத்திற்கு சமம். நாள்தோறும் போர் தான்” என்றான் மேகோன், ஒவ்வொருவரையும் நேராகப் பார்த்தபடி.

வானவாமதி இளவரசியாக இருப்பினும், வீரர்களுக்கு சமமாக இணைந்து நின்றாள்.

மேகநதி நேராக மேகோனின் பார்வையை எதிர்கொண்டாள்.

“இந்தப் பயிற்சி எதற்காக?” ஒருவன் கேட்க, மேகோன் அவனிடம் நெருங்கி வந்தான்.

“அதனை நேரில் அனுபவித்து தான் புரிந்துகொள்ள முடியும். பயிற்சியில் உங்களது அறிவும், ஆற்றலும் மட்டுமல்ல… உணர்வுகளும் கட்டுப்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும்” என்றான்.

“பெரும் ஆபத்து சூழவுள்ளதா அரசே?” மற்றொரு வீரன் கேட்க,

“சூழாமல் இருக்க வேண்டிய முன்னெச்சரிக்கை” என்று நேர்மறையான விதையை தனது ஒவ்வொரு சொல்லிலும் வீரர்களிடம் பதித்தான்.

பொழியர் ஒரு கிழங்கடி கொடுத்து, மண்ணை உருட்டியபடி சில முனைவர்களை பின்வாங்கச் செய்தார். பின்னர், குழுவை இரண்டாகப் பிரித்தனர்.

முதல் குழுவுக்கான பயிற்சி இருளிலும் களம் காணும் வித்தை.

மண்ணில் கரைந்திருக்கும் சாயலில், ஒரு பகுதி இருளாகக் காட்சி அளிக்கிறதென்கின்ற உணர்வு மட்டுமே வீரர்களுக்கு இருந்தது.

“இங்கு தங்களைத் தாக்க எதுவும் இல்லாது போகலாம்… விழிகளின் நிஜம் மாயையாக இருந்திடும். ஆனால், உங்கள் விழிகளுக்குப் புரியாத ஒன்று உங்களை நோக்கி வரும் போது, உங்கள் உள்ளம் எப்படித் தயார் ஆகிறது என்பதை யான் காண விரும்புகிறேன்,” என்றான் மேகோன்.

முதலில் பயிற்சி செயல்முறைக்கு வானவாமதி, மேகநதி, இருவரும் முன் வந்தனர்.

இரண்டு ஆண்கள், இரண்டு பெண்கள் எனக் குழுவினர் இப்பயிற்சியில் பங்குபெற்றனர்.

இருளுக்குள் வாளின் ஒளிக்கீற்று ஒரு நொடியில் பாய்ந்தது.

வானவாமதி வாளை உயர்த்திப் பிடித்தாள். மேகநதி பக்கச்சாய்வு கொண்டாள். மற்றவர்கள் தவறாக எதிர்பார்த்த இடத்துக்கு தாக்குதலிட்டனர்.

“இந்த ஒரு கணம் தான் போர் எனும் வணிகத்தில் விலை உயர்த்தும் சொத்து,” என்ற மேகோன். “அந்த ஒரு கணம்… வாழ்வை தீர்மானிக்கக்கூடியது” என்றான்.

இரண்டாவது குழுவிற்கு இரட்டைப் பாய்ச்சல் – மறுபரிசோதனை.

“நயனன் மற்றும் மேகநதி இன்று கற்றுக்கொடுத்த அதே முறையில், உங்கள் குழுவிலும் ஒருவருடன் இணைந்து ஒரு துரதிருஷ்டவச எதிரியை நோக்கி பாய வேண்டும்,” என்றார் பொழியர்.

வானவாமதி, மேகநதி இணையாக நின்றனர். மூவரும் அவ்விழியால் முன்னெடுத்திருந்த கூட்டமைப்பு போலவே ஒத்துச் சென்றது.

வாளும், மனமும் ஒரே நேரத்தில் எதிரியை நோக்கிச் செல்வதைக் காணும் அந்த ஓராயிரம் கண்கள்… அந்த மைதானத்தில் ஒரு அசையா நிம்மதியை விதைத்தது.

“இவர்கள் இருவரும் உணர்வுகளால் கட்டப்பட்டவர்கள் அல்ல… ஆனால் உணர்வுகளுக்கு எதிராக செயல்படக்கூடிய வீரர்கள்,” என்றான் மேகோன், அழுத்தமாகப் பார்வையிட்டபடி.

ஒவ்வொரு அசைவுக்கும் ஒரு எதிர்வினை யுக்தியை தீட்டி, தனது கைப்பட காட்சிகளாக வரைந்திருந்த தோல் தாள்களை பொழியரிடம் அளித்து, அதனை பயிற்றுவிக்கக் கூறினான் மேகோன்.

அவற்றை பார்வையிட்ட பொழியர்,

“உம்மை விஞ்ச நீரே மீண்டும் பிறப்பெடுக்க வேண்டும் அரசே” என்றார். அவரிடம் அவனைக் குறித்து அத்தனை வியப்பு. சுந்தரனார் படையில் பயிற்சி மேற்கொள்ளத் துவங்கிய காலம் முதல் மகிழப் பேரரசின் படையில் பயிற்சி ஆசானாக இருக்கின்றார் பொழியர். அவரின் ஆற்றலையும் தோற்கடிக்கும் போர் நுணுக்கங்கள் மேகோனிடம்.

அவரின் வியப்பிற்கும் பாராட்டுதலுக்கும் மேகோனிடம் வழமையான மென்புன்னகை.

“இனி தாங்கள் இங்கு பயிற்சி மேற்கொண்டால் போதுமானது. பொது பயிற்சி களத்திற்கு செயல்முறை பயிற்சிக்கு மட்டும் சென்றால் போதும்” என்ற மேகோன், நயனனிடம் கண்களால் புறப்படுவதாகக் கூறிச் சென்றான்.

பின் இரவு நேரத்தில்,

மேகோன் தனியாக தனது ஆய்வுக்கூடத்திற்குள் நுழைந்தான். சுவர் முழுவதும் வட்டங்களும் கோடுகளும் நிறைந்திருந்தன. அந்த பரிதி சுற்றம் குறித்த விளக்கங்களும், வாரியாக இணைந்த ஒளி நெடுவரிசைகள், ஒவ்வொரு நாடு மீது வீசப்போகும் அணுகுமுறைகள்…

அவனது கண்கள் சுருங்கியவண்ணம் சில நொடிகள் அந்த வட்டங்களை நோக்கி உறைந்தன.

“இருளுக்குள் மறைந்திருக்கும் ஒளியை அழைத்து வரவேண்டும்… எதிர்காலத்தை கணிக்கும் ஆற்றல் அறிந்து, இயற்கையை கட்டுப்படுத்தி ஒளி வழி எதிர்காலம் நோக்கி பயணித்திட வேண்டும்.” தனக்குத்தானே ஆராய்ச்சியின் ஒவ்வொரு படிநிலையையும் வரிசைப்படுத்திக்கொண்டான்.

காலத்தைக் கடக்கும் ஆராய்ச்சி, அதன் உணர்வுப்பூர்வ வெளிப்பாடுகள், அறிவியலின் மெருகான கூறுகள், மரபியலும் எதிர்காலத்தையும் இணைக்கும் வரிசைகள் என தன் கரத்தினால் அமைக்கப்பட்ட ஆராய்ச்சியின் ஒவ்வொரு பகுதியையும் மெல்ல பார்வையிட்டான்.

இருளில் எழும் ஒளிச் சூழல் போன்று இயற்கையின் இயல்நிலைகளை தன்னகத்தேக்கொண்டு இப்பிரபஞ்சத்தை ஆட்சி செய்திடும் விண்மீன்களை ஊடுருவித் தோன்றும் ஒளி வழி எதிர்காலம் செல்ல வேண்டும். அவனது சுயநல ஆசைக்காக அன்று. பல போர்களைத் தடுத்து அவனது குடிகளை காப்பதற்கு. பெரும் ராஜ்ஜியத்தை அடக்கி ஆட்சி செய்யும் மன்னவனின் இயல்பான ஆசை.

பின் இரவின் பச்சை நிழல்கள் அக்கூடத்தின் ஒவ்வொரு கோணத்தையும் மெதுவாக விழுங்கிக் கொண்டிருந்தன. நிழலின் பிசுபிசுப்பான சாயல்களுக்கிடையே, ஒளிரும் தீபச் சுழற்சி ஒன்றின் வெளிச்சத்தில் மட்டும் உயிர் படைத்தது போல் ஜீவமாய் தெரிந்தது அந்த ஆய்வு அறை.

மெல்ல கண்கள் மூடிய மேகோனின் விழித்திரையில் காட்சிகளாய் படர்ந்தது இருநூறு ஆண்டுகளுக்கு முன்பான தேவ மகிழோனின் பிம்பம். அவனது உயிர்த் தோற்றம் நிழலாய் அவனுள். அவனது கருவிழி வழி நெஞ்சத்திற்குள் ஊடுருவியது.

ஓலைச்சுவடிகளை கையில் வைத்து ஆராய்ந்து கொண்டிருந்த தேவ மகிழோன் தனது முதுகுக்குப் பின்னால் ஒலித்த மென் சலங்கை ஒலியில் மெல்லத் திரும்பிட, அவனது மேகவிதா.

“இன்னும் துயில் கொள்ளவில்லையா?” என்றவள், அவனது ஆராய்ச்சியின் அமைப்பைக் கூர்ந்து நோக்கினாள்.

“நானில்லை என்றால் நன் ஆராய்ச்சி உம் மூலமாக நமது சந்ததிகளுக்குத் தெரிய வேண்டும் மேகா” என்றான்.

“ஆராய்ச்சிக்காக எங்கேனும் தூர தேசம் பயணம் மேற்கொள்ள இருக்கிறீர்களா?” எனக் கேட்டவள் அவனின் புஜத்தை இரு கரங்களால் கோர்த்துப் பிடித்து அவனது தோளில் தலை சாய்த்தாள்.

முக்காலமும் கணிக்கும் வித்தகன் தனது மரணத்தையும் முன்கூட்டியே அறிந்திருந்தானோ? மனைவியின் கேள்வியில் பதிலின்றி மென் புன்னகை சிந்தினான்.

“அப்படியும் வைத்துக்கொள்ளலாம்” என்றவன், “எமது ஆசைகள், ஆராய்ச்சிகள் குறித்து யான் எழுதிய குறிப்புகள் இவை” என்று ஓலைச்சுவடிகளை அவளிடம் காண்பித்து, அதனை பட்டுத் துணியில் வைத்து சுற்றினான்.

“எதிர்காலத்தில் இத்தேசம் எம்மை இறைவனாக வணங்குவர். நன் சார்ந்த பொருட்கள் யாவும் அவர்களுக்கு பொக்கிடமாக இருந்திடும். அதற்கு மூலமாக இருக்கப்போவது நீயே” என்றவன், மனைவியின் நெற்றி முட்டினான்.

“யானா?”

“ஆம்” என்றவன், “நானில்லா நிலையில் இத்தேசம் உம் பொறுப்பு” என்றவன், ஆட்சி செய்யும் முறை அனைத்தும் தன்னுடைய மேகவிதாவுக்கு பயிற்றுவித்தான்.

ஆண்கள் அடக்குமுறை ஓங்கி உயர்ந்த காலத்தில் தனி ஒரு பெண்ணாக எவ்வாறு அவர்களை எதிர்த்து நிற்க வேண்டுமென்ற துணிவையும், ஆற்றலையும் ஆசானாக நின்று கற்றுக் கொடுத்தான்.

தன்னுடைய பதியின் ஒவ்வொரு அடியும் தேசத்தின் பாதுகாப்பிற்காக மட்டுமே என்று அறிந்திருந்தவளும் அவன் சொல்லிக் கொடுத்த அனைத்தும் கர்ம சிரத்தையாக கற்றுக் கொண்டாள்.

எதிர்காலத்தில் நிகழும் செயல்களை முன்பே அறியும் ஆற்றல் கொண்டிருந்தவனால், ஏனோ அதனை முறியடிக்கும் முறை மட்டும் சாத்தியமாகவில்லை.

தன்னுடைய இறப்பை அறிந்தவனால் அதனை தடுக்கும் மார்க்கமின்றி, நடைபெற்ற போரில், யுத்த விதிமுறைகளை மீறிய எதிரியின் எதிர்பாராத தாக்குதலால் உயிர் பிரிந்த காட்சி, இக்கணமும் அவனுள் பெரும் அதிர்வலையை உண்டாக்கியது.

அன்று யுத்த களத்தில் தன்னுடன் போருக்கு வந்திருந்த மனைவியின் மடியில் சரிந்து உயிர் பிரிய இருந்த சில கணங்களுக்கு முன்னான மணித்துளிகள்…

“நேசத்தோடு உம்மோடு வாழ, நன் ஆசையை ஈடேற்றிட மீண்டும் நம் பிறப்பு சாத்தியமாகும்” என்று மேகவிதாவின் கையை இறுகப் பற்றிய தேவ மகிழோன், “நன் குறிப்புகள் பத்திரம் மேகா. மீண்டும் நன் கரம் சேர்ந்திடும்” எனக்கூறி கண்கள் மூடியிருந்தான்.

மகிழ் மேகோன் நினைவின் தாக்கத்தால் பட்டென்று இமை திறந்திருந்தான்.

அவனது ஆசையின் ஆழம் அதீதமென்பதால், அன்று நெஞ்சம் சுமந்த எண்ணத்தை நிறைவேற்றிக்கொள்ள இன்று முயற்சித்துக் கொண்டிருக்கின்றான்.

அன்று அவனால் கட்டமைக்க முடியாத ஆராய்ச்சியின் நுட்ப வடிவங்கள்… அவன் எழுதிய குறிப்புகள் கொண்டு இன்று சாத்தியப்படுத்திய பின்பும், ஏனோ செயல்முறை படுத்த இயலவில்லை.

ஒளியியல் விதிமுறைப்படி அமைக்கப்பட்ட கோட்பாடுகளுக்கு தேவ மகிழோன் ஆதாரமாக பிணைத்து வைத்தது மனதின் மென் உணர்வுகள்.

அன்று தனது கோட்பாடுகளுக்கு காவலாக மேகவிதாவை நியமித்ததற்கு காரணம், அவனது மனைவி என்பதால் மட்டுமல்ல, அவனது உணர்வுகளை ஒருவழிபடுத்தும் அன்பின் நேசக்கூடு அவள் என்பதால்.

அவனது உள்ளத்து உணர்வுகள் அவளின் இதயத்தோடு பிணைந்திருக்க, அவனில்லை என்றான பின்பும் அவ்வுணர்களால் மட்டுமே அவனது கனவு உயிர்பெற முடியும். அதற்காகவே இன்று மேகவிதாவின் மறுபிறப்பான மேகநதியின் பின்னால் மேகோனின் மனம் ஈர்க்கப்படுகிறது.

இருவருக்குமிடையேயான முன்ஜென்மத் தொடர்பினை இன்று தான் மேகோனும் கண்டுகொண்டான்.

அதன் விளைவாகவே அவனது பழைய பக்கங்கள் அவன் நிழல் காட்சிகளாக தற்போது அறிய நேர்ந்தது. அதனூடே அவனது ஆராய்ச்சி வெற்றி அடையும் மார்க்கமும்.

அனைத்தும் சரியாக இருப்பினும் இதுவரை ஆராய்ச்சியின் முடிவை எட்ட முடியாததற்கு காரணம், அவனது நேசத்தின் உணர்வுகள் அவனிடமில்லையே என்பதே.

இப்பிரபஞ்சத்தை ஒரே நேர்கோட்டில் பிணைத்து கட்டுப்படுத்தும் ஆற்றல் ஆழ நேசத்திற்கு மட்டுமே உள்ளது. அந்நேசத்தின் உணர்வுகள் விண்மீன்களின் ஒளியோடு ஊடுருவும் சமயம் மேகோனின் ஆசை நிஜம் கொள்ளும்.

அவனது நேசம் தான் மறுப்பில் ஊசலாடிக் கொண்டிருக்கிறதே. அவன் எழுதி வைத்த உணர்வின் கோட்பாடுகள் அவனது கரத்தில் இருந்தாலும் அதனின் பொருள் இன்றே அவனால் விளங்கிக்கொள்ள முடிந்தது.

மேகநதியிடம் நேருக்கு நேர் நின்று காதலை மொழிந்திருந்த போதிலும், அவள் பக்கமிருந்து விழிகளில் அவனுள்ளம் உணர்ந்தவை தவிப்புகள், மறுப்புகள் மட்டுமே. ஆனால் இன்று மேகநதி நேர்கொண்டு பார்த்த பார்வையில் அவன் உணர்ந்தது அப்பட்டமான நேசத்தின் உணர்வுகள். அவள் அவனிடம் காட்ட மறுத்த அன்பின் வெளிப்பாடு.

சில நாழிகைகளுக்கு முன்பு வீரர்கள் முன் நின்று எதற்காக இத்தனிப்பயிற்சி என்று மேகோன் சொல்லிடும் போது, மேகநதி அவன் மீது வீசிய பார்வையில் அவனுள்ளம் அவளது நேச உணர்வுகளால் தைக்கப்பட, அவனது கடந்த கால நேச விதை விருட்சம் கொண்டு, அவன் மறந்திருந்த பக்கங்களை நினைவூட்டியிருந்தன.

“நட்சத்திரங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து ஓர் நேர்கோட்டில் சுழலும் சமயம், நன் மற்றும் எமது நேசத்திற்குரியவளின் ஆழ் நேச உணர்வுகள் ஒன்றுக்கொன்று சங்கமித்து ஒளியில் ஊடுருவினால் மட்டுமே கிரகங்களை கட்டுப்படுத்தி காலம் கடந்து பயணிக்க இயலும்.” உண்மைநிலையை அவன் வாய் மொழிந்திட, அவனது விரல்கள் பிடித்து அச்சாணி ஓலையில் எழுத்துருவம் கொண்டிருந்தது.

“ஒளியை மீட்டெடுப்பது அறிவியலின் செயலாக இருக்கக்கூடாது.
அது ஒரு நெஞ்சின் உரக்கமாக இருக்க வேண்டும்.”

ஆயிரம் இரவுகளைத் தாண்டி, இன்று ஒரு புதிய அறிகுறி அவன் கண்களில் ஒளிர்ந்தது — ஒளியும் உணர்வும் இணையும் சக்தி. அதனைத் தேடி வரும் காலங்களுக்குள், அவன் உருவாக்கிய இந்த ஒளி ஆராய்ச்சி, ஒரு புதிய சரித்திரத்தை தோற்றுவிக்கும்.

“எதிரிகளுக்கு முன்பாக யான் சிந்திக்க வேண்டும்.
நடக்கப்போகும் தாக்கங்களை அனுபவிக்க வேண்டும்.
முன்கணிக்கும் சக்தி எனது ஆய்வின் முடிவாக இருக்கக்கூடாது.
அது ஒரு புதிய தாய்மையாய், அண்டத்தின் ஒவ்வொரு உயிரையும் பாதுகாக்கும் ஒளியாயிருப்பதே நன் நோக்கம்.”

“நீயாக நன் பக்கம் வருவதால் மட்டுமே எமது தீரா கனவு உருவம் பெறும் நதி” என்றான். தனக்கு முன்னால் சுழலும் கிரகங்களின் அமைப்பை வெறித்தவாறு.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
21
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்