Loading

அத்தியாயம் 56

பயிற்சி தீவிரமானது.

அனைவரும் தனிப் பயிற்சிகளை முடித்துக் கொண்டு அமர்ந்திட, இரண்டு இரண்டு பேராக பயிற்சி சோதனையில் ஈடுபட்டனர்.

மேகநதி, நயனன் இருவரும் இணைந்து ஒன்று சேர்ந்து இரட்டை எதிர்காலத் தாக்குதல் எனும் புதிய பயிற்சி முறையை விளக்கிக் காண்பித்தனர். இது இருவரும் ஒருவருக்கொருவர் மீது தாக்குதல் செய்யும் வகை அல்ல. ஒன்றிணைந்து எதிரிக்கு மேல் தாக்கும் பயிற்சி.

எதிரி தவிர்க்க இயலாத தாக்குதல் இது.

மேகநதி வாளை எடுத்து வளைத்தாள். நயனன் மெதுவாக வாளின் முனையைச் சுற்றி விட்டான். அவர்களது அணுகுமுறைகள் போர்க்களத்துக்கானவைதான்… ஆனாலும் உள்ளத்தின் பின்வட்டங்களில் அவரவர் தவிப்புகள் துளைத்துக் கொண்டே இருந்தன.

செயல்முறையில் இருந்தாலும் இருவரும், தங்களது இணைகளின் பார்வையை உணர்ந்தே இருந்ததால்.

“வாழ்க்கை ஒரு பயிற்சிக்களம் அல்லவா?” வாள் வீச்சோடு வெறும் உதடசைத்து மேகநதியிடம் நயனன் கேட்டிட,

“நிச்சயம் வாழ்க்கை யுத்த களம் தான். தினம் தினம் மனதோடு மல்லுக்கட்ட வேண்டிய சூழலை உருவாக்கிவிடுகிறது” மேகநதியின் உள்ளம் அனுபவிக்கும் நிலையை அவனுக்கு பதிலாக வழங்கினாள்.

வீரர்கள் அனைவரும் தங்கள் கண்களை அவர்கள் மீது வைத்திருந்தனர். ஆனால் அவர்களின் உள்ளங்கள்… வேறு இடத்தில் வீணாகிக் கொண்டிருந்தன.

“தாக்கு!” என பயிற்சியின் குரு சொன்னபோது, மேகநதி முன்னேற, நயனனின் காலடி பின்னோக்கி நகர்ந்தது. வாள்கள் காற்றை வெட்டி ஒரு இசையை அளித்தன… ஆனால் உள்ளங்களை வெட்டும் இசை அவையல்ல.

அந்தச் சுற்றம் முடிந்ததும், வீரர்கள் கைதட்டினர். ஆனால் மேகநதியும், நயனனும் உற்சாகம் கொள்ளவில்லை. புதிய செயல்முறை ஒன்றை சரியாக பயிற்றுவித்துக் காண்பித்த நிறைவு. அவ்வளவே!

“அண்ணனும், தங்கச்சியும் மூடி மறைப்பதில் அத்தனை தெளிவு.”

மேடையில் மேகோன் உடன் அமர்ந்திருந்த வானவாமதி ஆயாசமாகக் கூறிட, மேகோன் அவள் அறிய மட்டும் புன்னகைத்தான்.

சிறிய, வெடிக்காத சத்தமில்லா சிரிப்பு.

அதே கணம், மேகோனை நொடிக்கும் குறைவாக பார்த்து பிரிந்த மேகநதி,

“மறுப்புக்கும் மரியாதை செலுத்த முடியுமென்பதை அறிகிறேன்” என்றாள்.

நயனனிடம் மௌனம்.

வலி என்பது ஒருபோதும் முழுவதுமாகப் பேச முடியாத உணர்வு.

முற்றிலும், பாதியாய் இருந்து முற்றும் தொலைந்த காதல்களின் நிழல்களோடு நிறைந்திருக்கும் அந்த மைதானம்…

கடந்துப் போன காதலின் வேதனையை, நெஞ்சில் ஒவ்வொரு முறையும் பருகிக்கொண்டிருந்தது.

“தங்களின் ஆராய்ச்சி எந்நிலையில் உள்ளது அண்ணா?” பயிற்சி முடிந்து சிறு ஓய்வில் அனைவரும் அமர்ந்திருக்க, வானவாமதி மேகோனிடம் வினவினாள்.

இருவருக்கும் இப்படி அமர்ந்து ஒன்றாக பேசிடும் தருணங்கள் அரிதானது. கிடைக்கும் நேரத்தில் வேண்டியவற்றை பரிமாறி, அறிய வேண்டியவற்றை அறிந்துக்கொள்வர்.

“அத்தனை எளிதானது அல்ல” என்ற மேகோன், “உம் சிறிய அண்ணனின் எண்ணம் என்ன? இருவருக்குமிடையே ஒட்டுதல் அதிகமாயிற்றே?” என்று கேட்டான்.

“உம் இளையவரின் மனம் தாம் அறியாததா?” என்றவள், “சிறிய தந்தையின் எண்ணங்கள் நல்லவை அன்று” என்றாள்.

“அறிவோம்! அதற்காகவே பயிற்சியின் துவக்கத்தை அவரிடம் தெரியப்படுத்தவில்லை. இதற்கான பேச்சுக்களை தந்தை தான் சமாளித்திட வேண்டும்” என்ற மேகோன் முகம் வாட்டத்தைக் காண்பித்தது.

அவனது பார்வை மேகநதியின் மீது இருந்தது. பயிற்சி குரு வரைபடம் வைத்து ஒரு வகை தாக்குதலை விளக்கிக் கொண்டிருக்க, சிரத்தையாக தலை அசைத்துக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

“அனுதினமும் இவ்வுணர்வை கட்டுப்படுத்திடத்தான் வேண்டும்” என்றாள் வானவாமதி. அண்ணனின் மனம் புரிந்தவளாக.

“யாம் நேசத்தின் கட்டுண்டு போகவில்லை மதி. முன்பு காட்டிய மறுப்பு தற்போது அவளிடமில்லை. எமது விலகல் அவளை நெருங்க வைக்கின்றது” என்றான்.

“தங்கள் பாதை விரைவில் ஒன்றிணைந்துவிடுமென்று கூறுங்கள்…” என்று மகிழ்வாய் மொழிந்த வான்வாமதி, “நன் நிலை தான் என்னவாகுமென்று தெரியவில்லை. தளபதியார் விறைப்புத்தன்மை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது” என்றாள். சற்றே வருந்தும் குரலில்.

“யாவும் விரைந்து நலம்பெறுமென்று நம்புவோம்” என்ற மேகோன், “முக்கிய பணியொன்றுள்ளது மதி. அரண்மனை செல்ல வேண்டுமென்றால் புறப்படு” என்றான்.

“எமக்குத் தெரியாமல் திட்டமா?”

மதி அவ்வாறு கேட்டதும் மேகோன் சிரித்திட…

“புன்னகைத்து ஏமாற்ற வேண்டாம்” என்றாள்.

“புதிய படைக்குழு அமைத்திட வேண்டும்” என்றான்.

“அதில் நானில்லையா?”

“நமது அன்னையர் விரும்பமாட்டார். உம்முடன் சேர்ந்து யானும் பேச்சுக்கள் வாங்கிட வேண்டும்” எனக்கூறினான்.

“ஆமாம்… தாங்கள் அன்னைக்கு மிகவும் அனுபவர் தான்” என்றவள், “தளபதி இல்லாது படையில் குழு இல்லையே! யானும் இருப்போம்” என்று அடமாக மொழிந்தாள்.

“உமக்கு வில் பயிற்சி அளித்ததற்கே அன்னையார் எம்மை வசபாடிக் கொண்டிருக்கின்றார். இதில் அன்னையை சமாளிப்பது உம் பொறுப்பு” என்ற மேகோன் பயிற்சி குருவிடம் சென்றான்.

பயிற்சியில் ஈடுபட்டிருந்தவர்களை கண்காணித்த வரையில் அதீத சிறப்புடன் விளங்கும் சிலரை தேர்வு செய்து, அவர்களைக் குறிப்பிட்ட மேகோன், “அவர்களுக்கென்று கூடுதல் பயிற்சி அளித்திட வேண்டும்” என்றான்.

“ஆகட்டும் அரசே” என்ற குரு பொழியர், மேகோன் குறிப்பிட்ட வீரர்களை மட்டும் தனித்து நிற்கச் செய்தார். அதில் மேகநதியும், வானவமதியும் அடக்கம்.

சிறப்பு படையை வைத்து மேகோனின் உள்ளத்தில் பல திட்டங்கள் அணிவகுத்தன.

வருங்காலத்தில் அண்டை நாடுகளின் படையெடுப்பில் மகிழ தேசத்தினை மீட்டெடுக்கப்போவது இச்சிறப்பு படை தான்.

_____________________________

வடகிழக்கு எல்லையின் அதி இரகசியமான ஒரு மலையுச்சி நுழைவுவழி.

இரவு, சந்திரன் மேகத்தில் மறைந்துவிடும் நொடிகள்.

சிறியதாயினும் மதிப்பீடு செய்ய முடியாத விலையுள்ள அந்தக் குகையின் உள்ளே, பல திசைகளிலிருந்தும் வந்திருந்த ஆடவர்கள் அமர்ந்திருந்தனர். அவர்களது உடைநிலையும், உருவமும், மொழி மாறுபட்டதாய் இருந்தாலும், அவர்கள் அனைவர் வாயிலும் ஒரே நிலைக்குரிய மௌனம்.

அந்த மௌனத்தின் மையத்தில் தங் தேச மன்னர் ஷென்லாங்.

இரண்டாம் சதுரக் காலையில் தான் இக்கூட்டம் நடைபெறுகிறது. ஆனால் இன்றைய கலந்தாய்வு மட்டும் மிகவும் முக்கியமானது. காரணம் இன்று அவர்கள் இடையே பகிரப்படப்போகும் ஒரு தந்திரச் சூழ்ச்சி… ஒரு பேரரசின் எதிர்காலத்தை மாற்றப்போகிறதாய் அமைந்தது.

“மகிழ தேசம்…”

ஷென்லாங்கின் மென்மையான குரல் அந்த குகையில் எதிரொலியாய்ப் பிறந்தது.

“மேமகிழ தேசம் பச்சைப் பசுமையும், நதிகளும், ஆற்றுநீரும், காடுகளும் நம்மில் பலருக்குமான உயிர்க்கொடையாய் இருக்கின்றது.”

அவரது பார்வை வலக்கூறாக இருந்த ஒரு மனிதர்மீது சென்றது. மந்திரதீப நாட்டு மன்னன் ஞாலபிரதன்.

“தங்கள் நாட்டுக்கு ஒவ்வொரு மாதமும் நீர் அணைகளுக்கு வரவேண்டிய சிற்றாறுகள் எங்கிருந்து வந்தவை என்று உங்களுக்குத் தெரியுமா?” என்றார் ஷென்லாங்.

ஞாலபிரதன் மௌனமாக சிந்தித்தான்.

“மகிழ தேசத்தின் பொதியம் மலை குகைகளிலிருந்து,” என்று விடையளித்தான்.

“அதே போன்று உங்களது நீர்ச்சேமிப்பு கால்வாய்கள், கருங்காடு மற்றும் வண்டல்மலை பகுதிகளிலிருந்து வரும் உவர்நீர் யாவும் அவனி நதி நீரால் மட்டுமே நிரம்புகின்றன. அவற்றின் வரவு நின்றாள் நமது வாழ்வு அத்தனை எளிதல்ல என்பதை உங்களுக்கு உணர்த்த வேண்டியதில்லை” என்ற ஷென்லாங்… “நமது ஒவ்வொரு அடிக்கும் மேகோனிடமிருந்து நிச்சயம் எதிர்வினை இருக்கும். அனைத்திற்கும் நம்மைத் தயார் செய்துகொள்ள வேண்டும்” என்றார்.

வட காளிங்க மன்னன் சத்ரகேதுவும், தெற்கு சோலிதீப மன்னர் பராக்ரமனும், மேற்கு கம்பரநாடு அரசி மெய்யழகியும் இந்த விவாதத்தில் பங்கேற்றிருந்தனர்.

“நீரின்றி உயிரில்லை. மகிழ தேசம் இப்போதைக்கு உயிர்புத்திப் பெருக்கிய நாடாக இருக்கிறது. ஆனால்… அந்த நாட்டின் உள் அரசியல் சமநிலை தளர்ந்திருக்கும் இந்தவேளையில், நாம் அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,” என்றார் ஷென்லாங்.

உண்மையில் மகிழ நேசத்தின் உள் அரசியல் நிலை சற்று கவலைக்கிடம் தான். காரணம் தேரல்வேல். அரியணையின் அவர் கொண்ட மோகம்.

மெய்யழகி மெதுவாக, தன் விரலால் மேசையின் மீதிருந்த மகிழ வரைபடத்தில் ஒரு வட்டம் போட்டாள்.

“அந்த நிலம் புணரப்பட முடியாத நதி சார்ந்த சமவெளி. போரால் அது அழிந்துவிட்டால், நீர் மட்டுமல்ல… நமக்கே உண்டி கெட்டுப் போகும்” என்றாள்.

“அதனால்தான்…” என்ற ஷென்லாங், “நாம் சுமூகமான முறையில் ஆட்சி மாற்றம் செய்யவேண்டும். மகிழ மன்னனை கீழிறக்கி, எமது விருப்பத்திற்கு இணையான ஆளுகையை அமைக்க வேண்டும். அப்போது நதியும், அத்தேச வளமும் நம்மிடம் இருக்கும்” என்றார்.

“அப்போது நமது திட்டத்திற்கு மகிழ தேசத்து வேதகுரு தேரல்வேல் ஒத்து வருவார்” என்றார் சோலிதீப மன்னன் பராக்கிரமன்.

அங்கு கூடியிருந்தவர்களில் சத்ரகேது கொஞ்சம் முரண்பட்டது போல தோன்றினான்.

“மகிழனின் படைகள் இயற்கையை தற்காத்துக் காக்கும் விதத்தில் பயிற்சியடைந்தவை. அவனது தளபதி நயனன், உளவுத்துறை வீரர்கள், கள வீரர்கள் மற்றும் இளவரசியான வானவாமதி என, எல்லோருமே எளிதில் ஓரங்கட்டப்படக் கூடியவர்கள் அல்ல” என்றான் சத்ரகேது.

ஷென்லாங் சிரித்தான்.

“அனைத்தும் யாமறிவோம்” என்ற ஷென்லாங், “மேகோனின் மனம் காதலில் விருட்சம் கொண்டுள்ளது. மேகநதியின் உணர்வுகளால் சிந்தையில் பிளவுபட்டுள்ளான். நிச்சயம் மேகோனின் நேச விடயம் தேசத்தில் பெரும் பிளவை உண்டாக்கும். மேகோன் உணர்வுகளில் சிக்கிக்கொண்டிருக்கும் நேரம் நமது தாக்குதலுக்கேற்பான தருணம். விரைவில் அச்சூழல் அரங்கேறும். நாம் அனைவரும் காலம் கனிய காத்திருக்க வேண்டும்” என்றார்.

“நமக்கு மலைமங்கை தேசத்து மன்னரின் உதவி கிட்டினாலும் நம் திட்டம் அரங்கேற கூடுதல் வலிமை கிட்டும்” என்றாள் மெய்யழகி.

“அவர் இதற்கு ஒத்துழைக்கமாட்டார். மகிழ தேசத்தின் நெருங்கிய நட்பு வட்டத்தில் முதலிடம் அவர்” என்றான் ஓஜோ.

அந்தக் கணத்தில் பல விஷயங்களை முன் வைத்து பேசினார் ஷென்லாங்.

மகிழ தேசத்தில் தற்போதைய விறைப்பான பயிற்சிக் கட்டமைப்புகள், ஆளுநர் குழுவில் இடையே உருவாகியுள்ள சிறிய முரண்பாடுகளை, சில குறுநில அரசர்களின் நம்பிக்கையிழப்புகளைப் பற்று முழுவதும் எடுத்துக் கூறினார்.

“தங்கள் பார்வை முழுவதும் மேமகிழ தேசத்தின் மீதுதான் போலும். அனைத்தும் உடனுக்குடன் அறிந்து வைத்திருக்கிறீர்கள்” என்றான் பராக்கிரமன்.

“பொக்கிட பூமி அது. நன் கரம் சேர்ந்தால் நாளைய வரலாற்றில் தங் தேசம் சரித்திர இடம் பிடிக்கும்” என்ற ஷென்லாங்கை மற்றவர்கள் ஆழ்ந்து பார்த்தனர்.

“விரைவில் நடவடிக்கை எடுக்கவேண்டும்,” என்றார் அவர்.

“இப்போது அவர்கள் மீது கடும் தாக்குதல் தேவை இல்லை. ஆனால்… அவர்கள் வாழ்வின் மூளையாக இருக்கும் நீரின் அடிப்படைகளை நாம் கட்டுப்படுத்த வேண்டும்.”

“அதற்கான முதல் திட்டம்…”

“துளசி நதியில் நுழையவேண்டும். ஆக்கிரமிப்பை அங்கிருந்து துவங்க வேண்டும்” என்றார்.

அந்த வார்த்தைக்கு ஒரேகணத்தில் அந்த மண்டபத்தில் இருந்தவர்கள் அனைவரும் பதறினர்.

“துளசி நதி, மகிழ தேசத்தின் மூன்று முக்கிய பசுமை ஆறுகளுக்கு நீர் ஓட்டம் தரும் ஒரு புனிதமான வட்டப்பகுதி. அதனை தொட்டாலே, மக்கள் எழுச்சி ஏற்படும்.” மூவரும் ஒருங்கே முன் மொழிந்தனர்.

“ஆனால் அதையே இரகசியமாக கைப்பற்றி விட்டால், மகிழனின் அரசாங்கமும், மக்கள் நம்பிக்கையும் முடங்கிவிடும்” என்று கொக்கரித்தார் ஷென்லாங்.

“அத்தனை சுலபமல்ல.” கூறிய ஓஜோவை ஆழ்ந்து பார்த்த ஷென்லாங், “யானும் அறிவோம். ஆண்டுகள் பல கழிந்தாலும் சாத்தியப்படுத்த வேண்டும்” என்றார்.

“அங்கு செல்வது எப்படி?” என்றார் பராக்கிரமன்.

“அதற்கான வழி நம்மிடம் இருக்கிறது. மகிழ தேசத்துக்குள் நுழையக்கூடிய இரட்டைமுகக் கடவுச்சீட்டுகள்… வணிகர்களின் ரகசியப் பாதைகள்… நாம் உணவுப் பொருட்களை வழங்கும் பெயரில் தங்கள் நிலத்தை நம்மிடம் நம்பி ஒப்படைத்துள்ளனர். இப்போது அதே வழியில்தான் அவர்களது வீழ்ச்சியும் வரும்” என்றார் ஷென்லாங்.

மகிழ தேசம் பற்றி அனைத்தும் அறிந்திருப்பவர்களுக்கு, தங்களுக்கெல்லாம் வித்தகன் மேகோன் என்பது அறிந்திருக்கவில்லை.

எதிரிகளின் முதல் அடி வணிக பாதை வழி தான் துவங்குமென்று முன்பே கணித்து மாற்று மார்க்கத்தை எப்போதோ ஆரம்பித்துவிட்டானே மகிழ் மேகோன்.

கூட்டத்தின் முடிவில், ஷென்லாங் விழி சிறிது ஒளிர்ந்தது.

“நீர் என்பது ஓர் ஒளியல்ல… ஒரு கட்டுப்பாடு. அந்த கட்டுப்பாட்டைப் பயன்படுத்தி, மகிழனை கீழிறக்குவோம். ஆனால முன்னதாக… அவன் தளபதியை நம்மிடம் கவரவேண்டும்.”

அந்த வார்த்தையுடன், மேசையில் வீற்றிருந்த பூக்கள் அடங்கிய கூடையிலிருந்து ஒரு புனித வெள்ளைப் பூவை எடுத்துச் சிரித்தார் ஷென்லாங்.

“பொதுவாகப் புஷ்பங்கள் ஒரு பொழுதில் சுருங்கிவிடும். ஆனால் காதல் மலர்கள் சூழும் மனம் சிறிது சிறிதாக தம்மையே தொலைத்திடுவர்.”

“முதலில் மேகோனின் உள்ளம் நேசத்தில் எத்தனை தூரம் ஆழம் கொண்டுள்ளது என்பதை அறிந்திட வேண்டும்” என்று ஓஜோவை பார்த்தார் ஷென்.

“ஒற்றன் மூலம் அறிய முற்படுகிறோம்” என்றான் ஓஜோ.

“நமது பறக்கும் பாம்பு படையினை மீட்டெடுக்க வேண்டும்” என்ற ஷென்னின் வார்த்தைகள் அங்கிருப்போரை மட்டுமல்ல, ஓஜோவையும் அதிரச் செய்தது.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
16
+1
0
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்